Wednesday, April 30, 2008

மே தினம் - சில கேள்விகள்


"அப்படியானால், இப்பொழுது வேலை செய்கிற நேரம் 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைந்திருக்க வேண்டுமல்லவா!


மாறாக, 8 மணி நேரத்திலிருந்து... 12 மணி நேரம், 14 மணி நேரமாக கூடியிருக்கிறதே! இது ஏன்?"


நாளை மே தினம். எங்கள் அலுவலகத்தில் 'விடுமுறை' என நோட்டிஸ் போர்டில் ஒட்டியிருந்தார்கள்.

பிளாக்கில், பலரை போல மொக்கையாய் ஏதும் போடாமல், உருப்படியாய் எதாவது எழுதலாம் என யோசித்ததில்....

மே தினம் பற்றி என அலுவலக நண்பர்களிடம் கேட்டால், ஒருத்தருக்கும் உருப்படியாக ஒன்றும் தெரியவில்லை.

பிறகு, கொஞ்சம் தமிழ் விக்கிபீடியாவில் தேடியதில், சில தகவல்கள் சேகரித்தேன். சில கேள்விகளும் எழுந்தது.

18ம் நூற்றாண்டுகளில் வளர்ந்த நாடுகளில், தொழிற்சாலைகளில் குழந்தைகள், பெண்கள் உட்பட எல்லா தொழிலாளர்களும் 12 மணி நேரம், 18 மணி நேரம் வேலை செய்ய மிரட்டப்பட்டு இருக்கிறார்கள்.

இங்கிலாந்தில், சாசன இயக்கம் என்ற தொழிலாளர் இயக்கம் 10 மணி நேரம் வேலை என்ற கோரிக்கை உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வைத்து போராட துவங்கி இருக்கிறது.

அதற்குப் பிறகு, உலகம் முழுவதிலும் தொழிலாளர் இயக்கங்கள் குறிப்பாக கம்யூனிச இயக்கங்கள் 8 மணி நேரம் வேலைக்காக தொடர் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள்.

பல இலட்சகணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். போராட்டங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல தொழிற்சங்க தலைவர்கள் தூக்கில் போடப்பட்டிருக்கிறார்கள்.

தொடர் போரட்டத்தின் வழியே, 1889 ஆண்டில் "சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக கடைப்பிடிக்க வழிவகுத்தது.

................. இதெல்லாம் வரலாறு.

என் கேள்வி என்னவென்றால்...

8 மணி நேரம் வேலைக்காக 150 ஆண்டுகளுக்கு முன்பு போராடியிருக்கிறார்கள்.

அதற்கு பிறகு எல்லா நாடுகளும் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திர நாடுகளாக மாறியிருக்கின்றன.

பொருளுற்பத்தியில் மற்றும் விவசாயத்தில் பயன்படுத்த பல நவீன அறிவியல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தி வருகின்றன.

மக்கள் தொகை பத்து மடங்காக பெருகியிருக்கிறது.

அப்படியானால், இப்பொழுது வேலை செய்கிற நேரம் 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைந்திருக்க வேண்டுமல்லவா!

மாறாக, 8 மணி நேரத்திலிருந்து... 12 மணி நேரம், 14 மணி நேரமாக கூடியிருக்கிறதே! இது ஏன்?

இது பற்றி, ஒரு நண்பரிடம் கேட்டதற்கு,

"எப்பொழுதுமே, ஒரு மக்கள் கூட்டம் வேலை இல்லாமல் இருந்தால் தான், முதலாளிகளுக்கு குறைவான கூலிக்கு ஆள் கிடைக்கும். எல்லா அரசுகளும் முதலாளிகளுக்கு ஆதரவாக இதை கவனமாக பார்த்து கொள்கிறது" என்றார்.

நம் நாட்டில் 5 டிஜிட், 6 டிஜிட் சம்பளம் வாங்கும், கணிப்பொறி வல்லுநர்கள் பாவம். மற்ற தொழிலாளர்களை விட நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்கிறார்கள். சம்பளம் அதிகம். உரிமைகள் குறைவு. சின்ன சின்ன விசயங்களுக்காகவே, அல்லது காரணம் என்னவென்று அறியாமலேயே வேலையை விட்டு தூக்கி விடுகிறார்களாம்.
வருங்காலத்தில், கணிப்பொறி வல்லுநர்கள் தான், மே தினப் போராட்டங்களில் முன்நின்று போராடுவார்கள் என நினைக்கிறேன்.
எங்க மானேஜிங் டைரக்டர் கூலாக சொல்வார். "நீ போயிட்டா, எனக்கு லட்சம் பேர் க்யூவில நிற்கிறார்கள்" என்பார்.

ஆதலால், என் நண்பர் சொன்ன கருத்து எனக்கு சரியெனப்படுகிறது. உங்களுக்கு!

Tuesday, April 29, 2008

பட்ஜெட்


ஒவ்வொரு
25 - தேதியிலும்
மனம் சபதமிடுகிறது

'இனி - சிக்கனமாய்
செலவழிக்க வேண்டும்'

Friday, April 25, 2008

அழகிய யுவதிகள்


கி.பி. 1000
அப்பொழுது - நான்
பிறந்திருக்கவில்லை

கி.பி. 2000
அப்பொழுது - நான்
துடிப்பான இளைஞன்

கண்ணில்படுகிற
இளம்பெண்களில்
பத்தில் இருவர் - அழகாய்
இருந்தார்கள்

கி.பி. 2004
பத்தில் ஏழு பெண்கள்
அழகாய் தெரிந்தார்கள்.

இப்பொழுதெல்லாம்
எல்லா இளம்பெண்களும்
மிக அழகாய் தெரிகிறார்கள்

சீக்கிரம்
கல்யாணம் பண்ணிடனும்

Sunday, April 20, 2008

"ஓ" வென அழுதுவிடுகிறேன்!
வானம் வெறித்து கிடக்கிற
ஒரு உடலாவது
வாரம் ஒருமுறை கண்ணில்படுகிறது

முதலாளிக்கு பயந்து - ஓடி
தண்டவாளம் கடக்கும் மனிதர்களை - தினம்
பயத்துடன் பார்க்கிறேன்.

இயந்திர வாழ்க்கையில்
தொடரும் பயணங்களில்
மனம் மரத்துப் போய் - பார்க்க
பழகிகொண்டது.

இருப்பினும்
மோதி தெறித்து விழும்
சிதைந்த உடலிருந்து - நகைகளை
அறுத்து ஓடுகிற மனிதர்களை
கண்டால் தான்
மனம் பொறுக்காமல்
"ஓ"வென அழுதுவிடுகிறேன்.

* சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் ரயிலில் அடிபட்டு ஏழு ரயில்வே ஊழியர்கள் உட்பட 90 பேர் பலி.

தற்கொலைகள், தண்டவாளம் கடக்கிறவர்கள், வேலை செய்கிற ரயில்வே ஊழியர்கள் என கடந்த மூன்று மாதத்தில் சென்ட்ரல் - கும்முடிபூண்டி-ஆவடி பாதையில் 60 பேர்களும், சென்ட்ரல் செங்கல்பட்டு பாதையில் 30 பேர்களுமாய் 90 பேர்கள் பலி.

இதில் வேதனை என்னவென்றால் போலீசார் சம்பவ இடம் போகும் முன்னரே சிலர் இறந்துகிடக்கும் உடல்களில் இருந்து பணத்தையும், நகைகளையும் முதலிலேயே எடுத்துவிடுவதாக கூறப்படுகிறது.


- தினத்தந்தி - 20.04.2008 பக். 19 லிருந்து.Friday, April 18, 2008

நகரவாசி - கவிதைவிடிகாலையில்
சூரிய உதயம் பார்த்து
வருடங்களாயிற்று.

கடற்கரையில்
அலைகளோடு விளையாடி
சில மாதங்களாயிற்று.

நண்பர்களோடு
அரட்டையடித்து
சில வாரங்களாயிற்று

அவசர அவசரமாய் இயங்கி
தானாய் புலம்பி
தனித்தீவாய்
மாறிக்கொண்டிருக்கிறேன்.

பாவம் நான்
எனக்காய் இரக்கப்படுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாய்
நகரவாசியாய்
மாறிக்கொண்டிருக்கிறேன்.

Thursday, April 17, 2008

கருப்பு வெள்ளை வாழ்க்கையும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும்!
தமிழகத்தில் தி.மு.க அரசு கிலோ இரண்டு ரூபாய்க்கு அரிசியும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

இப்பொழுது, ஆந்திராவில் ஆளும் காங்கிரசு கட்சியும் கிலோ 2.50 க்கு அரிசி வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது.

கர்நாடக காங்கிரசு கட்சியும், தமிழகம் போலவே.. தேர்தல் வாக்குறுதியாக, கிலோ 2 ரூபாய்க்கு அரிசியும், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் தருவதாக அறிவித்து இருக்கிறது.

அந்த இரண்டு ரூபாய் அரிசியை கடந்த வாரம் வேலை தேடிக் கொண்டு இருக்கும், ஒரு நண்பரின் அறையில் சாப்பிட்டேன். அப்படி ஒரு கெட்ட வாடை. ' தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டியது தானே' என்றேன். நான்கு முறை கழுவியதாக கூறினான். அதிர்ச்சியாய் இருந்தது.

இந்த அரிசியை தான் கேரளாவுக்கு கடத்துவதாக அடிக்கடி பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சில மூட்டைகளோடு ஆந்திராவுக்கு ரயில் ஏற தயாராக நின்றிருந்த ஒரு வயதான அம்மாவை பிடித்து, சோதனை செய்யும் பொழுது, அது நம்ம ரேசன் அரிசி.

இப்படி இந்த அரிசிக்காகத் தான் இத்தனை களேபரம் என்றால், நாடு வளர்ச்சி விகிதத்தில் செல்கிறது என சொல்கிற நம்முடைய பொருளாதார புலிகள் மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் காகிதப்புலிகள் தானா?

சென்னையில், இரவில் குடிப்போதையில் அல்லது கன்ட்ரோல் இல்லாமல் எந்த வண்டியாவது நிலை தடுமாறினால், அன்றைக்கு மூன்று முதல் 5 மக்கள் செத்துப்போகிறார்கள். செய்தி தாள்களில் பார்க்கிறோம். இருக்க வீடு இல்லை.

தமிழக கிராமங்கள் எல்லாம் வெறிச்சோடி கிடக்கின்றன. காரணம் விவசாயம் நொடித்துப் போய், சிலர் வெளிநாடு நகர்ந்து விட்டார்கள். பலர் நகர்ப்புறம் நகர்ந்துவிட்டார்கள். செய்ய வேலை இல்லை.

இப்படி, மக்களுடைய வண்ண மயமான வாழ்க்கையை சோகமயமாய் கருப்பு வெள்ளையாய் மாற்றிவிட்டு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் கொடுப்பவர்களை என்ன சொல்வது? வக்கிரப்புத்திகாரர்கள் எனலாமா?

இல்லையெனில்...

என்ன சொல்ல வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்!

Wednesday, April 16, 2008

காருக்கு ஒரு நீதி: பைக்குக்கு ஒரு நீதியா?
தமிழ்நாட்டில் பைக் ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் 'கட்டாயம் ஹெல்மெட்' அணிய வேண்டும் என சட்டம் போட்டார்கள்.

இப்பொழுதெல்லாம், வேறு ஏதும் சோதனை செய்வதில்லை. ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க எளிதாக இருப்பதால், தெருவுக்கு தெரு நின்று காவல்துறையினர் சிக்கியவரை ரூ. 50, ரூ. 100 என கல்லா கட்டுகிறார்கள்.

லஞ்சம் பெருகியுள்ள நாட்டில் மக்கள் நலன் காக்க போடுகிற சட்டங்கள், அந்த மக்களுக்கு எதிராகத்தான் வேலை செய்யும் என்பது நிதர்சனம்.

தென்மாவட்டங்களில் ஹெல்மெட்டெல்லாம் ஒருவரும் அணிவதில்லை. காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லையாம். நண்பர்கள் சொன்னார்கள்.
டிராபிக் இராமசாமி சென்னையில் மட்டும் இருப்பது தான் காரணமாக இருக்கலாம்.

இந்த செய்தியை எல்லோரும் தெரிந்திருப்பார்கள். நான் சொல்ல வந்த செய்தி வேறு.

கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு பிறகு, கார்களில் கிரிமினல் குற்றங்கள் நிறைய நடப்பதால், 'சன் கண்ட்ரோல் பிலிம்' ஒட்டக்கூடாது என்றொரு சட்டம் போட்டார்கள்.

அதற்கு பிறகு தொடர்ச்சியாய் கவனிக்கிறேன். பல கார்களில் பிலிம் ஒட்டப்பட்டு சுதந்திரமாய் ஓடிக்கொண்டிருக்கின்றன.

நான் கவனித்த வரையில், பைக்கை தெருவுக்கு தெரு நிறுத்தி, கல்லா கட்டுபவர்கள் ஏன் காரை நிறுத்தி கல்லா கட்டுவதில்லை.

இதனால், எனக்கு சில சந்தேகங்கள் வருகின்றன

1. இந்த சட்டம் வாபஸ் ஆகிவிட்டதா? அல்லது

2. திருட்டு சி.டி விற்பவர்கள், டாஸ்மார்க் பார் நடத்துபவர்கள், கஞ்சாவிற்பவர்கள் மாதந்தோறும் அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு மாதம் மாதம் மாமூல் கொடுப்பது மாதிரி, கார்களை வைத்து கிரிமினல் தொழில் செய்பவர்கள் மாமூல் கொடுக்கிறார்களா? அல்லது

3. கார் வைத்திருப்பவர்கள் சமூகத்தில் பெரிய மனிதர்கள். அவர்கள் என்னதான் தவறு செய்தாலும், மதிப்புடன் நடத்தவேண்டும் என நினைக்கிறதா?

உங்களுக்கும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்

Sunday, April 13, 2008

அன்பான வலையுலக பெருமக்களே!


'பெருமக்கள்' என்ற வார்த்தையெல்லாம் கொஞ்சம் அதிகம். 'ஓபனிங்' நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த பில்டப்.

கடந்த நான்கு மாதங்களாக சில சொந்த கவலைகள், புதிதாக வேலைக்கு சேர்ந்ததினால் சில புதிய வாழ்க்கை மாறுதல்கள் என வாழ்க்கை சுழற்றியடித்து, பின்பு சுதாரித்து திரும்பிப் பார்த்தால் நான்கு மாதங்கள் ஓடிவிட்டன.

கடந்த நான்கு மாதங்களாக பதிவர்களையும், அவர்கள் இடும் பதிவுகளையும் உன்னிப்பாய்(!) கவனித்ததில், மொக்கைப் போடுவர்கள் இன்னும் மோசமான மொக்கைப்போடுகிறவர்களாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

அனானிகள் புதிய மாற்றம் பெற்றிருக்கிறார்கள். தன் பெயரைச் சொல்ல முடியாத பயந்தாங்கொள்ளி அனானி, என் பெயரைப் பயன்படுத்தி, உண்மைத்தமிழன் அவர்களை நக்கல் செய்திருக்கிறான்.

பதிவுலகை விட்டு, நான்கு மாதம் வனவாசம் போனது, எனக்கு பயனாகத்தான் இருந்திருக்கிறது.

இனி, தொடர்ச்சியாய் எழுதலாம் என நினைத்திருக்கிறேன். காரணம் - பலரும் உருப்படியாய் ஒன்றும் எழுதாத பொழுது, நாம் ஏன் எழுதக்கூடாது என என் மனசாட்சி கேட்கிறது.

இனி அடிக்கடி வருவேன்.