Thursday, October 16, 2008

பேச்சிலர் சமையல் - அத்தியாயம் 2


முன்குறிப்பு : நாம் ஏற்கனவே பேச்சிலர் சமையல் பற்றி ஒரு பதிவில் பேசியிருக்கிறோம். சமையலுக்குள் போவதற்கு முன் இது தொடர்பான வேறு சில விசயங்களைநாம் பேசிக்கொள்வோம்.


முதலில் சமையல் செய்வதற்கு நேரம் நிறைய முக்கியம்.

காலையில் அடித்துப் பிடித்து வேலைக்கு கிளம்பவே நமக்கு நேரம் இல்லாத பொழுது, சமைக்க எங்கிருக்கிறது நேரம்? என்பார்கள். இது ஒரு வகையில் உண்மை. இன்னொரு விதத்தில் பொய்.

பல உணவகங்களில் பலவற்றை சுவைக்காகவும், பல சமயங்களில் பற்றாக்குறையால், சிக்கனக்கத்திற்காவும் சுமாரான உணவகங்களில் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொண்ட பிறகு தான், சமைப்பது என்ற முடிவுக்கு வருகிறோம். ஆகையால், நெருக்கடியில் தள்ளபட்டுத்தான் நாம் சமைக்க முனைகிறோம்.


மேலும், இரவு நெடுநேரம் கண்விழித்திருந்து உருப்படியில்லாத பல வேளைகளை (தொலைக்காட்சி பார்ப்பது, மொக்கைப் பதிவு,பின்னூட்டம் போடுவது, குமுதம் படிப்பது) செய்கிறோம். அதைக் குறைத்து விரைவாக தூங்க தொடங்கிவிட்டால், காலையில் விரைவாக எழுந்துவிடலாம்.
சென்னையில் அமைதியான சூழ்நிலை, சுத்தமான காற்று எல்லாம் கிடைப்பது அதிகாலையில் தான். அதை அனுபவிக்காதவர்கள் அவர்களின் ஆயுளில் 5 ஆண்டைநிச்சயமாய் கழித்துவிடலாம்.

காலையில் விரைவாக எழ வேண்டும் என்பது எனக்கு பல நாள் ஆசை. நண்பர் ஒருவர் இதை வேறு சொல்லிவிட்டார் "இந்த உலகத்தில் நிறைய சாதனை செய்தவர்கள் அதிகாலையில் எழுந்தவர்களாம்". ஆசையை நிறைவேற்றவதற்கு பெரிய போராட்டமாக இருந்தது. மேலே உங்களுக்கு சொன்ன ஆலோசனைகளைசெய்தால் கூட விரைவாக எழ முடியாத பிரச்சனை வந்தது.

தோல்வி - 1


அலார்ம் வைத்து தூங்கினால், நாம் சோம்பல் பட்டு எழுவதற்குள் அறையில் உள்ள எவராவது அதை அணைத்துவிடுவார்கள்.

பகுதி வெற்றி - 1

"பாடி அலார்ம்" முயலலாம் என செய்துப்பார்த்தேன். நிறைய தண்ணீர் குடித்து தூங்கினால், காலையில் உடலே எழுப்பிவிடும். சில நாள்கள் பயன்பட்டது. அதற்கு மறக்காமல் நிறைய தண்ணிர் குடிக்க வேண்டும். மறந்துவிட்டால், அடுத்த நாள் எழ முடியாது.

பகுதி வெற்றி - 2

"பழங்குடியினர் சூரியன் மறைந்த பிறகு எதையும் உண்ண மாட்டார்களாம். அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவார்களாம்". இதை செய்துப் பார்க்கலாம் என முயற்சித்தேன். பசி நடுநிசியில் பலமுறை எழுப்பியது. தூக்கம் கெட்டது. காலையில் எழும்பொழுது நிறைய பசியோடு சோர்வாக எழுந்தேன். இந்த முறை பழங்குடியினருக்கு தான் சரிப்பட்டுவரும் என முடிவுக்கு வந்தேன். நாம் நகரவாசி இதில் பாதியை கடைப்பிடிக்கலாம் என முடிவெடுத்து,பாதி வயிறு சாப்பிடுவது என முடிவுக்கு வந்தேன். பலன் தந்தது.

பகுதி வெற்றி - 3

நமக்கு மருத்துவ ரீதியான புத்தகங்கள் படிப்பதில் ஒரு ஆர்வம். வயிறு பற்றி படிக்கும் பொழுது, ஜீரணம் சம்பந்தமாய், மண்டையில் ஒரு யோசனை எழுந்து, மைதா வகைகள், மசாலா அதிகமுள்ள அயிட்டங்கள், அசைவ வகையறாக்கள் இரவு உணவில் தவிர்த்துக்கொண்டு, எளிதாய் ஜீரணிக்க முடிகிற இட்லி, இடியாப்பம் வகைகள் சாப்பிட பழகினேன். காலையில் சோம்பல் இல்லாமல் விரைவாக எழ முடிந்தது.

பகுதி வெற்றி - 4

மேலே சொன்ன பகுதி வெற்றிகள் எல்லாவற்றையும் செய்து போராடினால் கூட சோம்பல் பலமுறை ஜெயித்தது. மேலும் தீவிரமாய் சிந்தித்து, 2கி.மீ அருகேஉள்ள பூங்காவில் காலையில் ஒட ஆரம்பித்தேன். அதிலும் சில நாள்கள் தோல்வியாகி, உற்சாகம் வருவதற்கு ஒரு பெண்ணை தொடர்ந்து ஓட ஆரம்பித்தேன். அது சில நாள்கள் பலன் இருந்தது. அந்த பெண் ஏதோ காரணத்தினால், வராமல் போய்விட, நானும் ஓடுவது தற்காலிகமாய் நிறுத்திவிட்டேன்.

வெற்றி

இறுதியில் வெற்றி பெற்றேன். இப்பொழுதெல்லாம், 5 மணிக்கு எழுந்து, 5.30 மணிக்கு போய் 6.15 வரையும் அருகில் உள்ள ஜிம்முக்கு உடற்பயிற்சி செய்து6.30க்கெல்லாம் வீட்டில் வேலை செய்யத் தொடங்குகிறேன்.
நான் செய்தது எல்லாம்

* செல்லில் அலார்ம் வைப்பது. யாரும் அமர்த்தாமல் பார்த்துக்கொள்வது.

* தண்ணீர் நிறைய குடிப்பது.

* பாதிவயிறு சாப்பிடுவது.

* எளிதாய் ஜீரணிக்க கூடிய உணவு வகைகளை சாப்பிடுவது.

* ஜிம்முக்கு தொடர்ச்சியாய் போவது.

இன்னமும் சொல்வேன்.

பின்குறிப்பு : சமையல் பற்றி பேச ஆரம்பித்து, எங்கெங்கோ போகிறேன் என நினைக்கிறேன். நீங்கள் இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

2 comments:

Anonymous said...

மொத்தத்தில் சமைக்கவே இல்லையா? :)

லக்ஷ்மி said...

//சமையல் பற்றி பேச ஆரம்பித்து, எங்கெங்கோ போகிறேன் என நினைக்கிறேன். நீங்கள் இது பற்றி என்ன சொல்கிறீர்கள்? //
அப்படியொன்னும் தேவையில்லாத விஷயம் இல்லை இதெல்லாம். நிச்சயமா அடுப்புல ஏத்தி இறக்கறதை விடவும் அதற்கான முன் தயாரிப்புகளும்(காய்கறி நறுக்குவதிலிருந்து ஆரம்பித்து, வரிசையாய் தாளிக்கத் தேவையானவற்றை அடுக்கிக் கொள்வது வரை), பின் விளைவுகளை(பாத்திரம் கழுவுவதிலிருந்து ஆரம்பித்து அடுப்படியைத் துடைப்பது வரை) சீர் செய்வதும்தான் அதிக பட்ச நேரம் கோருபவை. அவற்றுக்கான அலுப்பினாலேயே அதிகம் பேர் சமைக்கத் தயங்குகிறார்கள். எனவே நேரத்திட்டமிடல், சாமான்களை எடுத்த இடத்திலேயே மறுபடியும் வைத்து வரிசை மாறாது பார்த்துக்கொள்வது, வாரந்தர(அல்லது வசதியான இடைவெளியில் ஆனால் தொடர்ச்சியான) ஒழுங்கு செய்தல் போன்ற விஷயங்கள்தான் சமையலில் கற்றுத் தர வேண்டிய அடிப்படை விஷயங்கள். சரியாத்தான் சொல்ல ஆரம்பிச்சிருக்கீங்க, So, தைரியமாத் தொடருங்கள். :)