Thursday, December 12, 2013

நேரம் - ‍ சில குறிப்புகள்

பொறுப்புகள் அதிகமாக வேலைகள் அதிகரிக்கின்றன. வேலைகள் அதிகமாக, அதிகமாக பதட்டம் தான் அதிகரிக்கிறது. வேலைகள் நகர மறுக்கிறது. என்ன செய்ய செய்யலாம் என மோட்டு வளையம் பார்த்து யோசித்த பொழுது, ஒன்றும் தோன்றவில்லை. நேற்று வழக்கம்போல புத்தககடை பக்கம் போன பொழுது, ஒரு புத்தகம் கண்ணில்பட்டது. அதில் ஆலோசனைகள் பிடித்திருந்தன.  உங்களுக்கும் பயன்பட்டால் சந்தோசம்!

"நேரத்தை நம்மால் நிர்வகிக்க முடியாது.  நேரத்திற்கேற்ப நம்மைத்தான் நிர்வாகம் செய்யவேண்டும்" :)

"திட்டமிடுதல் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும்"  ‍ இது திட்டமிட விரும்பாதவர்களுக்கு இது ஒரு சாக்குப்போக்கு!"

பருண்மையாக திட்டமிடுவது பாதி வேலை முடிந்ததற்கு சமம் என மாவோ சொன்னதாக படித்தது நினைவுக்கு வருகிறது.

"நீங்கள் எதில் திறமைசாலியோ அதில் ஆதாயம் காணுங்கள்.  மீதி வேலையை பிறரிடம் பகிர்ந்தளித்துவிடுங்கள்"

பல சமயங்களில் எல்லா வேலைகளையும் மற்றவர்களிடம் விட்டுவிட்டு எங்கேயாவது ஓடிவிடலாம் என்று தான் தோன்றுகிறது! :)

"வாழ்வில் முக்கியமானவற்றிக்கு முன்னுரிமை தராமல், அவற்றை பின்னுக்கு தள்ளும் பொழுது, பெரும்பாலும் நல்லவையே சிறந்தவற்றிக்கு எதிரியாக அமையும்"

பேசும்பொழுது பெண்டாட்டி, பிள்ளை ரெம்ப முக்கியம் என்பார்கள்.  அவர்களிடம் நேரம் செலவழிக்காமல், அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய அலுவலகமே கதியென்று கிடப்பர்கள். இது என்ன முரண்? என பல சமயங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

"கடிகாரம் திசைகாட்டும் கருவிக்கு ஒருபடி கீழே இருக்கட்டும்!"

செயல்களில் கவனம் கொடுத்து, செல்ல வேண்டிய சரியான திசையை மறந்துவிடுவது! பலருக்கும் ஏற்படும் குழப்பம் தான்!

பல சமயங்களில், வேலை ஒரு பெரிய மலையைப் போல மலைப்பை ஏற்படுத்துகின்றன!‍

"வேலைகளை சிறுசிறு வேலைகளாக பிரித்துக்கொள்ளுங்கள்!

நாம் செய்கின்ற வேலைகளை குறித்து வைத்து பரிசீலித்தால், எவ்வளவு பயனுள்ள வேலைகளில் ஈடுபடுகிறோம்? நாம் எவ்வளவு நேரம் வீணக்கிறோம் என நன்றாக தெரியும்! பிறகு முக்கியமான வேலைகளில் நமது கவனம் குவியும்" என்கிறார்கள்.

இன்னொரு நாளில் இன்னும் எழுதுவேன்!

Monday, December 2, 2013

ஜன்னல் ஓரம் ‍ - சுவாரசியமில்லாத காட்சிகள்!

மலையாளத்தில் வந்த 'ஆர்டினரி' என்ற படத்தின் தழுவலாம்.  அங்கு பெரும் வெற்றி பெற்ற படம் என்கிறார்கள்.  ஆனால், தமிழில் ம்ஹூம்!

கதை எனப் பார்த்தால்...

பழனி முதல் மலையில் உள்ள பண்ணைக்காடு வரை ஒரு அரசு பேருந்து போய்வருகிறது.  கிராமத்து பேருந்து என்பதால் நடத்துநரும், ஓட்டுநரும் அந்த மக்களோடு இயல்பாக பழகி வருகிறார்கள். நடத்துநர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். பஞ்சாயத்து தலைவரின் பையனை ஒரு டீச்சர் காதலிக்கிறார். இதில் பஞ்சாயத்து தலைவரின் மகன் திடீரென கொலை செய்யப்படுகிறார்.  அந்த பழி நடத்துநர் மீது விழுகிறது. உண்மையான கொலையாளியையும், அதற்குரிய காரணத்தையும் இறுதியில் சொல்கிறார்கள்.

****

பேருந்தில் பயணம் செய்யும் பொழுது பல சுவாரசியமான நபர்களையும், காட்சிகளையும் பார்த்திருக்கிறேன். படத்தில் பேருந்து பயணத்தை களமாக எடுத்தும், பிரயோஜனமில்லை.  பேருந்தில் மட்டுமல்ல, படம் முழுவதுமே எங்குமே சுவாரசியமான காட்சிகள் இல்லை. மலைப்பாங்கான படம் என்பதால் காட்சிகளிலாவது குளுமை இருக்கிறதென்றால் அதுவும் இல்லை.  

ஓட்டுநராக வரும் நடுத்தர வயது பார்த்திபன் ப்ளேபாய் போல பல பெண்களை ரூட் விடுகிறார்.  அவருக்கு ஒரு மாற்றுத்திறனாளி தங்கையாம். அந்த பெண்ணுக்கு திருமணம்  செய்ய தடுமாறுகிறாராம்.  சோகத்தில் படம் முழுவதும் குடித்துக்கொண்டு திரிவது போலவும் காட்டுகிறார்கள். இதில் பார்த்திபனின் இரட்டை அர்த்த வசனங்கள் வேறு! மகா எரிச்சல் தான் வருகிறது.

பார்த்திபன், ராஜேஷ் என நிறைய நடிகர்கள் இருந்தும், வீணடித்திருக்கிறார்கள்.  படத்தில் தேறுவது பாடல்கள் மட்டுமே! வித்யாசாகர் படத்தைக் காப்பாற்றியிருக்கிறார்.  80களில் எடுத்தப்படம் போல ஒரு கதை.  அந்த காலகட்டத்தில் கூட இந்த வகைப்பட்ட நிறைய சுவாரசியமான படங்கள் வந்திருக்கின்றன.

திரைக்கதையில் கவனம் செலுத்தவில்லை. காட்சிகளிலும் சுவாரசியம் இல்லை. கரு. பழனியப்பனின் ஆக மோசமான படமாக வெளிவந்திருக்கிறது.

'கிராவிட்டி', 'விடியும்முன்' என இரண்டு படங்களில் ஒன்றை பார்க்கப் போய், ஒரு நெருக்கடியில் இந்த படம் பார்க்க நேர்ந்தது.

படம் பார்ப்பதற்கு முன்பு ஒரு பதிவர் படம் தேறாது என எழுதியிருந்தார்.  படித்து விட்டு போயிருந்ததால், படம் குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் போயும், படம் கொஞ்சம் கூட தேறவில்லை. உடன் வந்த நண்பர் சொன்னார். ஆல் இன் ஆல் அழகு ராஜாவை விட இந்த படம் தங்கம் என்றார். அப்ப ஆல் இன் ஆல் மரண மொக்கையா? 

Friday, November 8, 2013

இரயில் பயணம் - ‍சில குறிப்புகள்

பயணத்தில் கூட 4 டப்பாக்களில் விதவிதமாய் உணவு உண்பவர்களை பார்த்தால், பொறாமையாக இருக்கிறது!

இந்த 'செல்'லும், காதில் மாட்டுகிற வயரும் ரயில் சிநேகத்தை கெடுத்துவிட்டது!

'பிஸ்கட்டோ எதுவோ வாங்கி சாப்பிடாதீர்கள்' என தொடர்ந்து சொல்லும் எச்சரிக்கைகள் சக பயணிகளை திருடனாய் பார்க்க வைக்கிறது!

உறுதி செய்யப்பட்ட படுக்கை/உட்காரும் இடங்களை வாழ்நாள் முழுமைக்கும் வாங்கி இருப்பது போல நடந்துகொள்கிறார்கள்.

ஆர்.ஏ.சியில் கணவன் படுத்து உறங்கி கொண்டும், மனைவி உட்கார்ந்து தூங்கி வழிந்தும் எப்பொழுதும் பயணிக்கிறார்கள்.

பேருந்து பயணம் எனில் மூன்று இட்லிகளோடு சிக்கனமாய் முடித்துகொள்ள வேண்டியிருக்கிறது! ரயில் என்றாலோ பிரியாணியை கூட வயிறு முட்ட சாப்பிட முடிகிறது!

ரயிலில் சாப்பாட்டை சுவையாக எந்த காலத்திலும் தந்துவிட‌க்கூடாது என அம்மா மீது சத்தியம் செய்திருப்பார்கள் போல!

பகல் நேர பயணத்தில் எப்படியாவது ஒரு திருநங்கையை பார்த்துவிடமுடிகிறது!

படுக்கை உறுதி செய்யப்பட்ட பயணமும், அன்ரிசர்வ் பயணமும் உலகம் இரண்டாய் இயங்குவதை தரிசனம் செய்யலாம்!

Friday, October 25, 2013

வீடு - பேய்களும் முனிகளும்!ஊரில் அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.   ஊருக்கு போய், 4 நாட்கள் தங்கி, உடல் நலம் கொஞ்சம் தேறியதும் கிளம்பிவந்தேன்.

அதற்கு பிறகு, அண்ணன் தான் இருந்த வீட்டை காலி செய்துவிடலாம் என புதிய வீடு ஒன்றை தேடிக்கொண்டிருந்தார்.  இப்பொழுது தானே புதிய வீட்டிற்கு போனீர்கள்? இந்த வீட்டில் என்ன பிரச்சனை என்றேன்.  இந்த வீட்டில் பேய் இருக்கிறது என்றார்.

எப்படி கண்டுபிடித்தீர்கள்? என்றதற்கு ஏற்கனவே வீட்டை காலி செய்துவிட்டு போனவர்கள் பக்கத்தில் சொல்லி சென்றிருக்கிறார்கள்.  நானும் ஜாதகம் பார்த்தேன்  இந்த வீட்டில் இருக்கவேண்டாம் கிளம்பி விடுங்கள் என சொன்னார்கள் என்றார்.  அந்த பேய்தான் அம்மாவை தாக்கிவிட்டது என்றார்.

அம்மாவிற்கு 25 வருடங்களாக சர்க்கரை நோய் இருக்கிறது.  எடுத்துக்கொண்ட மருந்து, மாத்திரைகள் அம்மாவின் உடல் பாகங்களை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து தின்றுவிட்டன.  வயதும் 65ஐ தாண்டிவிட்டது.  உடல் தரும் தொல்லையிலிருந்து விடுபட அம்மா இனி வாழும் காலம் வரைக்காவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என முடிவெடுத்துவிட்டார். அதனால் உணவு கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுகிறார். அதனால் தான் இவ்வளவு சிக்கல்! இப்படி விளக்கம் கொடுத்தாலும், பேய் கண்ணுக்கு முன்னாடி பயமுறுத்தியதே தவிர, அறிவுபூர்வமான விளக்கம் ஏதும் தேவைப்படவில்லை அண்ணனுக்கு!

இருக்கும் சொந்த வீட்டை விட்டு விட்டு, இப்படி வாடகை வீடுகள் தேடி அலைவதற்கும் பின்னாலும் ஒரு அமானுஷ்ய முன்கதை ஒன்று இருக்கிறது. 

எங்க அம்மாவின் பெரியம்மா ஒருவர் 98 வயது வரை உயிரோடு இருந்தார்.  அம்மாவின் அம்மா அம்மாவின் சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், பெரியம்மா தான் அம்மாவிற்கு  திருமணமே செய்து வைத்திருக்கிறார். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக எல்லோரும் ஆசி பெறும் பொழுது, எங்க அண்ணனும் போயிருக்கிறார். கிழவி ஆசி மட்டும் வழங்காமல், அம்மா குடியிருக்கும் அந்த வீட்டை இப்பொழுது எடுத்துக்கட்டாதே! உனக்கு தொல்லைகள் வரும். அம்மா இருக்கும் வரைக்கும் அந்த வீட்டில் இருக்கட்டும். அம்மாவின் காலத்திற்கு பிறகு, அந்த வீட்டை புதுப்பித்துக்கட்டி நீ குடிபோ! என சொல்லியிருக்கிறார்.

நான் வீட்டை பழுது பார்க்கலாம், எடுத்துக்கட்டலாம் இந்த 6 மாதத்தில் இரண்டொரு முறை பேசும் பொழுதெல்லாம் அண்ணன் தட்டிக்கழித்தார். துருவி துருவி கேட்ட பொழுது, இந்த அமானுஷ்ய கதையை சொன்னார். தலையில் அடித்துக்கொண்டேன்.

இருக்கிற வீட்டை காலி செய்துவிடுகிறேன் என சொல்லி, புதிய வீடும் கிடைக்காமல் அண்ணன் ஏகமாய் மாட்டிக்கொண்டார். கடைசி நேரத்தில், ஒருவீடு பார்த்து குடியேறினார்.

கடந்த மாதம் அண்ணிக்கு திடீரென உடல்நலம் சரியில்லை.  நடு மண்டையிலிருந்து நடு முதுகு வரை அப்படி ஒரு வலி.  நான்கு நாட்களாக தூக்கமே இல்லாமல், ஒரே அழுகை.   நகரின் முக்கிய சிறப்பு மருத்துவரை பார்த்து, பீஸ் எல்லாம் நிறைய கொடுத்து, ஸ்கேனெல்லாம் எடுத்து பார்த்ததில் ஒன்றுமேயில்லை என சொல்லிவிட்டார்கள்.

அதற்கு பிறகு அண்ணி அவருடைய அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து அங்கேயே இருந்தார். சந்தேகம் வந்து,  போனமுறை ஊருக்கு சென்ற பொழுது, இந்த வீட்டில் ஏதும் பிரச்சனை இல்லையே! என்றேன்.  இந்த வீட்டில் ‘முனிஇருக்கிறது என்றார். எப்படி? என்றதற்கு,  உங்க அண்ணிக்கு உடல் நலம் சரியில்லை என்றதும், மூன்று ஜாதக்காரர்களை பார்த்துவிட்டேன். மூவருமே முனி இருக்கிறது என்கிறார்கள்.  நான் ஜாதகம் பார்த்த மறுநாள் இந்த வீட்டின் உரிமையாளர் ‘இந்த வீட்டில் ஒரு தெய்வம் இருக்கிறது! செவ்வாய், வெள்ளியில் விளக்கு போடுங்கள்!என சொல்லிவிட்டு சென்றார்.

இந்த வீட்டையும் காலி செய்ய போகிறீர்களா? என்றேன்.  மூன்று அறைகளில் பின்னாடி உள்ள அறையில் சமைக்கிறோம். அங்கு சமைக்கவேண்டாம். முன் அறையில் சமையுங்கள் என சொல்லியிருக்கிறார்கள். அதை செய்ய போகிறேன் என்றேன்.

இதையெல்லாம் அசை போட்டுக்கொண்டே தூங்கிப்போனேன்.  கனவில் முனியும், பேயும் கடுமையான சண்டை போட்டார்கள். யார் ஜெயிப்பார்கள் என வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த பொழுது, அலாரம் அடித்து பகீரென்று எழுந்தேன். கும்மிருட்டு.  விடிகாலை 6.30க்கு வைகை என்பதால், 4.30 மணிக்கு எழ நான் தான் அலாரம் வைத்திருந்தேன். 

சமையல் கட்டு அறையில் தான் குளியலறையும் இருந்தது.  குளிக்கும் பொழுது, முனி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக ஒரு பிரமை வந்தது. வெட்கம் வந்தது.

பேய்களுடனும் முனிகளின் நினைவுகளுடனும் மக்கள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

சாப்பாட்டு நேர சிந்தனைகள்!

ஒரு புதிய பகுதிக்கு சென்றால் ஒன்றுக்கு மூவரை கேட்டுவிட்டுத்தான் உணவகத்துக்கு செல்கிறேன்.  ஆனால், பல சமயங்களில் சுமாராக தான் இருக்கிறது.  இதுவே சுமார் என்றால், மற்ற உணவகங்களின் நிலை? நினைத்தாலே பயமாக இருக்கிறது.

சாப்பிடும் பொழுது சுவைத்து, நன்றாக மென்று சாப்பிட சொல்கிறார்கள். கிடைக்கிற சாப்பாடெல்லாம் ரெம்ப சுமாராக இருக்கும் பொழுது இது எப்படி சாத்தியமாகும்? நீங்களெல்லாம எப்படி சமாளிக்கிறீர்கள்?

பொரியலோ/ கூட்டோ மறுமுறை கேட்கும் பொழுது முதல்முறை வைத்ததை விட அதிகமாகவே தருகிறார்கள்.  இவனுக்கு பிடிச்சுப் போச்சு. இனி அடிக்கடி தொந்தரவு செய்வான் என்ற எண்ணமா?   அல்லது நம்ம பொரியலையும்/கூட்டையும் விரும்பி சாப்பிடறானே! இவன் ரெம்ப நல்லவன்டா! என நினைக்கிறார்களா!  :)

உணவகங்களில் அடிக்கடி விலை பட்டியலை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.  கேட்டால் விலைவாசி கூடுகிறது என பதில் சொல்கிறார்கள்.  ஆனால், சம்பளம் மட்டும் கூடவே மாட்டேன் என்கிறதே! :(

சாப்பிடும் பொழுது சாப்பாட்டை மட்டும் பார்த்து சாப்பிடவேண்டும் என ஜென் தத்துவம் சொல்கிறது!  ஆனால், சாப்பாட்டில் கைவைத்தால், ஏகப்பட்ட சிந்தனைகள் வந்து தொந்தரவு செய்கின்றன. " மருந்து குடிக்கும் பொழுது, குரங்கை நினைக்காதே!" பழமொழி நினைவுக்கு வருகிறது!

நல்ல உணவகங்கள் அரிதாக இருப்பதால், சில பதிவர்களை போல வருங்காலங்களில் நான் அறிந்த உணவகங்களை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என நினைத்து இருக்கிறேன்.

Thursday, October 24, 2013

ஊட்டி - பழக்கண்காட்சி புகைப்படங்கள்!

குற்றால புகைப்படங்களை நிறைய பேர் உற்சாகமாக பார்த்ததால், சமீபத்தில் ஊட்டி போயிருந்த பொழுது, குன்னூரில் பழக் கண்காட்சி நடத்திக்கொண்டு இருந்தார்கள். அங்கு சுட்டவை! திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்காக கூடுதல் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்! :)
Tuesday, October 22, 2013

குற்றாலம் - சில புகைப்படங்கள்!நேற்று மாலை மழை பெய்யாமலேயே இதமாக இருந்தது காற்று. இரவிலிருந்து மழை. இந்த இதமான காலநிலை எனக்கு குற்றாலத்தை நினைவுப்படுத்துகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு குற்றாலத்திற்கு சென்ற பொழுது எடுத்த புகைப்படங்கள்.


Saturday, October 12, 2013

ஒ நாயும் ஆட்டுக்குட்டியும்!

படம் பார்த்து சில நாட்களாகிவிட்டது. இன்னமும் அதன் தாக்கம் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.

தமிழ் திரையில் நாம் பழக்கப்படுத்தப்பட்டதால், ஒரு ‘பிளாஷ்பேக்’ நாம் எதிர்பார்த்து காத்திருக்கும் பொழுது, காட்சி வழி இயக்குநர் ஒரு எழுத்தாளரை போல குட்டிக்கதை மூலமாக உணர்வுகளை கடத்தியிருக்கிறார்.

இயக்குநரே கதை திரைக்கதை வசனம் எழுதுவதை பல படங்களை பார்த்து நொந்து போயிருக்கிறோம்.  மிஷ்கினைப் போன்ற ஆட்கள் ஆறுதல் தருகிறார்கள்.

அந்த குட்டிக்கதை!
 
"ஒரு ஊர்ல ஒரு ஓநாய் இருந்துச்சாம். அந்த ஓநாய் ஒரு பெரிய கரடிகிட்ட வேலை செஞ்சிச்சாம். கரடிக்கு பிடிக்காத நரியை எல்லாம் ஓநாய் காட்ல போயி வேட்டையாடுமாம். அப்போ ஒரு நாள்...., ஒரு நரியை  வேட்டையாடும் போது  ஒரு ஆட்டுக்குட்டி குறுக்க வந்திச்சி. ஓநாய் தெரியாம அந்த ஆட்டுக்குட்டியை கொன்னுடிச்சி. அந்த ஆட்டுக்குட்டிய  கொன்னதால என்ன பண்றதுனு தெரியாம அந்த ஆட்டுக்குட்டி வீட்டுக்கு அந்த ஓநாய் போச்சாம். அந்த ஆட்டுக்குட்டி வீட்ல ஒரு அப்பா ஆடும், ஒரு அம்மா ஆடும், ஒரு குட்டி தங்கச்சி ஆடும் இருந்திச்சாம். அந்த மூணு பேருக்கும் கண்ணு தெரியாதாம். அவுங்கள பாத்து ரொம்ப கஷ்டப்பட்டு தன் பழைய வேலையெல்லாம் விட்டுட்டு அந்த குடும்பத்தோடயே அந்த ஓநாய் தங்கி அவுங்கள ரொம்ப பத்திரமா பாத்துகிச்சாம் .

வேட்டைக்கு வராத ஓநாயை தேடி ஒரு நாள் கரடி அந்த ஆட்டுக்குட்டி வீட்டுக்கு வந்திச்சாம். 'வேட்டைக்கு வா.. வேட்டைக்குவா...' னு கூப்பிட, நான் வரமாட்டேன்னு அந்த ஓநாய் சொல்ல, கோபமான அந்த கரடி அந்த அப்பா, அம்மா ஆட்டுக்குட்டிங்ககிட்ட உங்க ஆட்டுக்குட்டிய இந்த  ஓநாய்தான் கொன்னிச்சுனு சொன்னுச்சாம்.அதை கேட்டு அந்த ஓநாய், ஒரு மூலையில் உட்கார்ந்து ஒடஞ்சி அழுதுச்சாம். அப்போ அந்த அம்மா ஆடும், அப்பா ஆடும் அந்த ஓநாய் பக்கத்தில வந்து ' நீ அந்த ஆட்டுக்குட்டிய வேணும்னு கொன்னுருக்க மாட்டேடா கண்ணா. அழாதடா..'னு சொல்லி கட்டிப்புடுச்சி நீதான்டா அந்த ஆட்டுக்குட்டினு சொல்லிச்சாம்.

அந்த ஓநாய் மூணு போரையும் கூட்டிட்டு வேற இடத்துக்கு போச்சாம். போற இடத்துக்கெல்லாம் அந்த கரடி ஓநாயை தேடிவந்து 'வேட்டைக்கு வா... வேட்டைக்கு வா...' னு சொல்லிச்சாம். வராட்டினா, அந்த அம்மா,அந்த அப்பா,அந்த குட்டி ஆடுகளை கொன்னுடுவேன்னு பயமுடிச்சிதாம். என்ன பண்றதுன்னு தெரியாம அந்த ஓநாய் அந்த கரடியை கடிச்சிபோட்டுடுச்சாம். அப்பறம் அந்த மூணு பேரையும் கூட்டிட்டு அந்த ஓநாய் எங்கெங்கோ போச்சாம்..

காட்டை காவல் காக்கிற புலிகள் எல்லாம் அந்த ஓநாயை தேடித்தேடி அலைஞ்சிச்சாம். எப்படியோ ஓநாய் இருக்கிற இடத்தைத் தேடிக் கண்டுபுடிச்சி அத கொல்ல வர, திரும்பவும் ஓநாய் ஓட, அதுகூட ஓட முடியாம அந்த அப்பா ஆடும்,அம்மா ஆடும், குட்டி ஆடும் ஒரு பத்திரமான இடத்தில ஒளிச்சி வச்சிட்டு அந்த ஓநாய் ஓடிச்சாம். ஆனா ஒரு புலி அந்த ஓநாயை கடிச்சி போட, அந்த ஓநாய் தப்பிச்சி நொண்டி நடத்து போயி ஒரு  மூலையில கீழ விழுந்திடுச்சாம்...

அப்போ இன்னொரு குட்டி ஆடு வந்து அந்த ஓநாயை வீட்டுக்கு கூட்டிட்டு போயி காயத்துக்கு மருந்து போட்டுச்சாம். ஆனா மறுநாள் காலையில அந்த ஓநாய், அப்பா,அம்மா,குட்டியைத் தேடி போச்சாம். அவங்கள கூட்டிட்டு ஓடறதுக்குள்ள, அந்தக் கரடி... அந்தக் காயம்பட்ட வெறிப்புடிச்ச கரடி அவுங்க எல்லோரையும் கொல்றதுக்கு தொரத்தி தொரத்தி வர, இன்னொரு பக்கம் புலிகளெல்லாம் தொரத்த, இப்போ ஒவ்வொரு இடமா ஓடிகிட்டு இருக்காம்.

எங்க ஓடுமோ....எப்படி ஓடுமோ....???? "

(குட்டிக்கதையை தந்த மணிமாறனுக்கு நன்றி)

Saturday, September 14, 2013

கனவு

படுத்ததும் எத்தனை பேருக்கு கனவு வரும்?  இந்த கேள்வி என் மனதில் பல நாட்கள் எழுந்திருக்கின்றன.  கால் மணி நேர தூக்கமோ, எட்டு மணி நேர தூக்கமோ எப்பொழுது, எங்கு படுத்தாலும்,  படுத்த பத்தாவது நிமிடத்திலிருந்து கனவு வந்துவிடுகிறது. பலரைப் போல எதையாவதை யோசித்துக்கொண்டோ, அசைப்போட்டுக் கோண்டோ இருக்கும் ஆளும் கிடையாது! ஆனால், கனவு என்னை தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கிறது.

கனவுகள் பலவிதம்.  ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் கதம்பமாக பல விசயங்கள் கனவாய் வரும்.  ஒரு முழு நீளத் திரைப்படம் போல கோர்வையாகவும் வரும்.  அதில் ஒரு தமிழ்ப்படத்துக்குரிய காதல், பாடல், சண்டை, நகைச்சுவை என எல்லாமும் இருக்கும். 

சிறுவயதில் ஸ்பைடர் மேன் போல பறந்து செல்வேன்.  ஆனால், இயல்பான உடையில் தான்.  இப்படி சந்தோசமாய் பறந்து, பறந்து போய்க்கொண்டிருந்தேன்.  மின்சார வயரில் அடிபட்டு இறந்தவர்களின் செய்திகளைப் பார்த்தப் பிறகு, பறக்கும் பொழுது மின்சார வயரில் தொட்டுவிடக்கூடாதே என்ற கவலையில் பறப்பேன். :)

அப்பொழுதெல்லாம் பணத்தட்டுப்பாடு அதிகம்.  கனவிலும் அது வெளிப்படும்.  போகிற வழிகளிலெல்லாம் நிறைய காசு, பணம் கீழே கிடக்கும்.  ஆவலாய் சேகரித்துக்கொண்டே வீடு வந்து தலைக்கடியில் வைத்துவிட்டு தூங்குவேன். காலையில் தூக்க கலக்கத்தில் பணத்தைப் பார்ப்பேன். பணம் இல்லையென்றதும், சே என்றாகிவிடும்! :)

சிறுவயதில் படித்த, கேட்ட பல பேய் கனவுகள் மனதில் இருந்தன. அதனால் பேய்க்கனவு அடிக்கடி வரும். ஒருமுறை இரண்டு தெருக்கள் தள்ளி ஒரு வீட்டில் ஒரு பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துவிட்டாள். நானும் போய் தெரியாத்தனமாக பார்த்துவந்துவிட்டேன். அதற்கு பிறகு, கனவில் அந்த வீட்டிலிருந்து ஒரு ஆவி மேலிருந்து கிளம்பும். என்னை துரத்த ஆரம்பிக்கும். நன்றாக ஓடும் நான், பேய் துரத்தும் பொழுது மட்டும் ஓடவே முடியாது. கால்கள் பின்னும். நெருங்கி, மிக நெருங்கும் பொழுது, கன்னா பின்னாவென்று வேர்த்து  விறுவிறுத்து முழிப்பு தட்டிவிடும்! அப்பாடா! நமக்கு ஒன்னும் ஆகலைன்னு நினைத்து ஆசுவாசுமாகி தூங்கிவிடுவேன். :)

சண்டைப் படங்கள் பார்த்துவிட்டு வந்தாலோ பல சமயங்களில் ஒரு தெலுங்கு ஆவேச நாயகனை போல லாஜிக்கே இல்லாமல் சண்டை போட்டிருக்கிறேன். முன்பெல்லாம், யாராவது தாக்க வந்தாலோ, மான் கராத்தே கொண்டு தப்பித்துவிடுவேன். ஆச்சர்யம் என்னவென்றால், சில மாதங்கள், முறையாக கராத்தே கற்றுக்கொண்ட பொழுது, அந்த காலங்களில் எல்லாம் லாஜிக் மீறாமல் சண்டை போட்டு அசத்தியிருக்கிறேன். :)

இப்பொழுது பொதுக்கோரிக்கைகளுக்காக போராட்டங்களில் கலந்துகொள்வதால், நேற்று ஒரு கனவு வந்தது.  எங்கோ போய்க்கொண்டு இருக்கிறேன். ஆறு போலீசார் வழிமறித்து என்னை கைது செய்கிறார்கள். இதில் காமெடி என்னவென்றால், அந்த போலீஸ் நம்மூர் போலீஸ் டிரெஸ் இல்லாமல், நீல நிறத்தில் உடை அணிந்திருந்தார்கள்.  சர்வதேச போலீசாக இருக்கும். வருங்காலத்தில் சர்வதேச போராளியாக ஆகப்போகிறேன் என்பதற்கு இந்த கனா ஒரு அசரீரீ போல சொல்கிறது என நினைக்கிறேன். :)

அன்றைக்கு சார்லி சாப்ளினின் 'The Kid"  பார்த்துவிட்டு தூங்கியதும், அந்த படத்தில் வரும் கனவு போலவே எனக்கும் ஒரு கனவு வந்தது. எல்லா சமூக கோளாறுகளும் சரியாகி, எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பது போல!  பிறகு, நான் சென்னையை விட்டுவிட்டு, என் சொந்த ஊருக்கே என் பைக்கில், நண்பனுடன் எல்லோருக்கும் பை! பை! சொல்லி கிளம்புகிறேன். :)

கனவுகள் என் வாழ்நாளில் நான் வளர வளர கனவுகளும் என் கைப்பிடித்தே வளர்ந்து வந்திருக்கின்றன. விழித்திருக்கும் வேளையில் நல்ல கனவுகளுக்கு ஆக்கம் கொடுப்பதே என் வேலையாகிறது.

சிலர் எனக்கு கனவுகளே வருவதில்லை என்கிறார்கள்.  அவர்களை அதிசயப்பிறவியாய் தான் பார்க்கிறேன். உங்களுக்கு எப்படி?

மற்றப்படி, அத்வானியின் பிரதமர் கனவை மோடி கலைக்கிறார். தூக்கத்தை கெடுக்கிறார் என்பது தனி! :)

Friday, August 23, 2013

பறக்க தெரியாத கிளியும், கலாட்டாக்களும்!

RIO 2011 பறப்பதற்கு முன்பே காட்டிலிருந்து நீலவண்ணக்கிளி பிடிக்கப்பட்டு,  சிறுமி லிண்டாவின் கண்ணில் பட்டு, லிண்டோவோடு அமெரிக்காவில் வளர்கிறது.  இது அரிய வகை இனம். என்னிடம் ஒரு பெண்கிளி இருக்கிறது. இரண்டையும் இணைத்தால் இதன் இனத்தை காப்பாற்றலாம் என ஒரு விலங்கியல் மருத்துவர் பிரேசில் ரியோ டி ஜெனிரோவிலிருந்து வந்து சொல்கிறார்.

'சரி' என கிளம்புகிறார்கள். போன நாளே இரவில், பறவைகளை கடத்தும் கடத்தல்காரர்கள் எல்லா பறவைகளோடு கிளிகளையும் கடத்துகிறார்கள்.  அதற்கு பிறகு, லிண்டாவும், மருத்துவரும் தேடு தேடு என தேடுகிறார்கள். கடத்தல்காரர்களிடமிருந்து கிளிகள் தப்பிப்பது, அவைகளுக்குள் காதல், ஊடல், நண்பர்களின் உதவி, சேஸிங், மீண்டும் வில்லன், இறுதியில் சுபம் என  முடிகிறது.

நீண்ட நாள்களுக்கு பிறகு, துவக்கம் முதல் இறுதிவரை தொய்வில்லாமல் விறுவிறுப்பாகவும், ஜாலியாகவும் பார்த்த படம்.  படம் வாங்கிய  நாளிலிருந்து அண்ணன் மகன் இந்த படத்தை இருபதாவது முறையாக சிரித்து சிரித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.  நானும் காமிக்ஸ் படித்து வளர்ந்தவன் என்பதால் இந்த மாதிரி அனிமேஷன் படங்கள் நிறைய பிடிக்கும்.

படத்தில் நாயகியை அறிமுகப்படுத்தும் பொழுது எப்படி ஒரு 'பில்டப்போடு' அறிமுகம் செய்வார்களோ, அதே போல் பெண்கிளியையும் அறிமுகப்படுத்துகிறார்கள். நாயகன், நாயகி காதல், வில்லனின் தலையீடு என வழக்கமான வணிக ரீதியான போக்கில் கதை பயணிப்பது மைனஸ். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியில் இரண்டாவது பாகத்தை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பறக்க தெரியாத ஆண்கிளியிடம், "பறத்தல் என்பது சுதந்திரம்" என பெண்கிளி உணர்ந்து சொல்லும். உண்மை தான்.

மதுரையில் ( மீனாட்சி பவன் உணவகத்தில் சுதந்திர போராட்ட நிகழ்வுகளை புகைப்படங்களாக மாட்டி வைத்திருந்தார்கள். இப்பொழுதும் இருக்கும். சாப்பிடும் பொழுது, அங்கே காதல் பறவைகளை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்ததை பார்த்தேன்.   குறிப்பு எழுதும் பதிவேட்டில், "மனிதர்களின் சுதந்திரத்தை மதிக்கும் நாம், பறவைகளின் சுதந்திரத்தையும் நாம் மதிக்கலாம்" என எழுதிவந்தேன்.  அடுத்தமுறை போயிருந்த பொழுது, அங்கு அந்த கூண்டு இல்லை.  ஆனால், அங்கே, மீன் தொட்டி இருந்தது. அதில் மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. :)

Monday, August 5, 2013

மூடிய கதவும், சில படிப்பினைகளும்!

Shutter - 2012 மலையாளம்

ஒரு நடுத்தர வயதை தாண்டிய மனிதன், முதன்முதலாக பெண் சபலம் ஏற்பட்டு, ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு, ஹோட்டலில் அறை கிடைக்காமல், தான் தொழில் செய்ய வாங்கி போட்டிருக்கும் ஒரு காலி கடையினுள் செல்கிறார்.

கடையை வெளியில் பூட்டிவிட்டு, சாப்பாடு வாங்க செல்கிறார் தெரிந்தவரான ஆட்டோகாரர்.  போகிற வழியில் வேறு ஒரு வாடிக்கையாளரை சந்திக்கும் நபர் குடிக்க சொன்னதில் பேரில் குடிக்கிறார்.  மீண்டும் வண்டியோட்டி வரும்பொழுது, போலீஸ் பிடிக்கிறது. காலையில் அனுப்புகிறது. பகலில் அடைக்கப்பட்ட கடையை சுற்றி பல கடைகள். திறக்கமுடியாத நிலை.பூட்டிய கடையினுள் மாட்டிக்கொண்ட 24 மணி நேரத்தில் அவருக்கு ஏற்படும் அனுபவங்களும், சில படிப்பினைகளூம் கிடைக்கின்றன.  கொஞ்சம் திருந்திய மனிதராய் வெளியே வருகிறார். இது தான் கதை!

****

சண்டைக்கோழியில் விஷாலிடம் உதை வாங்கி, படம் முழுவதும் கொலைவெறியோடு அலைவரே அந்த லால் தான் கதையின் நாயகன்.  ஒரு சபலத்தில் பெண்ணை அழைத்து வந்த பிறகு, வேண்டாம் போய் விட்டுவந்துவிடு! என சொல்லும் பொழுது தடுமாற்றம், பகலில் கடையை திறந்து, அசிங்கமாகி போகுமே என ஒவ்வொரு நிமிடமும் வரும் பதட்டம்! நண்பர்கள் என பழகியவர்களே கேவலமாக பேசுவது! கேவலமாக நடந்து கொள்வது கண்டு அழுவது என அருமையாக நடித்திருக்கிறார்.

சிடுசிடுப்பது, பணம் கொடுத்ததும் கெஞ்சலாய் பேசுவது, எகிறும் பொழுது எகிறுவது என பின்பு நாயகனின் சங்கடமான நிலை கண்டு புரிந்து நடந்துகொள்வது என விலைமாதுவாக வரும் பெண் அசத்துகிறார்.

கதையம்சம் கொண்ட படங்கள் எடுத்து, இடையில் பத்து ஆண்டுகளாக படம் எடுக்காமல் இப்பொழுது படம் எடுக்க அலையும் சீனிவாசன், கதவை பூட்டிவந்து இப்படி போலீசிடம் மாட்டிக்கொண்டு விட்டோமே என நிம்மதி இல்லாமல் அலையும் ஆட்டோகார பாத்திரமும் என அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.

படம் துவங்கும் பொழுது, நூறு பேருக்காவது நன்றி என போடுகிறார்கள். நாம யாருக்காவது நன்றி சொல்லவேண்டும் போலிருக்கிறது. இந்த படத்தை அறிமுகப்படுத்திய கேபிள் சங்கருக்கு நன்றிகள்.

Wednesday, July 17, 2013

ஆறாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நாட்டில் மொள்ளமாரி, முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ரவுடி, மக்கள் பணத்தை தின்று தீர்ப்பவன் என எல்லோரும் கோடிக்கணக்கில் செலவழித்து பிறந்தநாள் கொண்டாடும்பொழுது, மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் ஒளியில் உலக விசயங்களை சமரசமில்லாமல் எழுதும் வினவு-க்கு பிறந்த நாள் தாராளமாய் கொண்டாடலாம்.

பதிவுலகம் பற்றி ஒன்றுமறியாத காலத்தில், ஏதோ ஒன்றைப் பற்றி தேடும் பொழுது, பதிவுலகம் அறிமுகமானது. அதற்கு பிறகு பல பதிவர்கள் எழுதியதை படித்த பொழுது, பெரும்பாலும் மொக்கையாக இருந்தது. பொறுத்து, பொறுத்து ஒரு சமயத்தில் வெறுத்துப்போய் தான் “வலையுலகமும் நொந்தகுமாரனும்” என்ற பெயரில் வலைத்தளமே தொடங்கினேன். பல மொக்கைப் பதிவர்களை, பதிவுகளை கலாய்த்தும் பின்னூட்டங்கள் இட்டுக்கொண்டிருந்தேன். எழுதிப் பழக்கமில்லையென்றாலும், நானே சொந்தமாய் சமூக விசயங்கள் குறித்து எழுத துவங்கினேன்.

இந்த நாட்களில் தான் ‘வினவு’ அறிமுகமானது. துவக்க கட்டுரைகளைப் படித்த பொழுது, வலைத்தளம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். வேலை நிலைமைகள் என்னதான் வாட்டியெடுத்தாலும், வினவு தளத்தை தவறாமல் வாசித்து வருகிறேன். பின்னூட்டங்களும் இடுகிறேன். என்ன ஒரு வருத்தம்! நேரமின்மையால் விவாதங்களில் பங்கு கொள்ள முடியவில்லை.

என்வாழ்வில் சிந்தனையோட்டத்தையும், நடைமுறை வாழ்வையும் மாற்றியமைத்ததில் வினவின் பங்கு அதிகம். என்னோட விக்கிபீடியா வினவு தான். ஏதாவது சந்தேகம் வந்தால், வினவில் தான் தேடிப்படிக்கிறேன். ஒருவேளை இல்லையென்றால் தான் வேறு தளத்திற்கு நகர்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வினவின் குழுவில் சில புதியவர்கள் இணைந்துள்ளதை கவனிக்கிறேன். பருண்மையாகவும், ரசனையாகவும் எழுதுகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

புதியவர்களை மனதில் கொண்டு, கேள்வி பதில், மார்க்சிய லெனினிய கல்வி குறித்தும் எழுதுங்கள். முன்பெல்லாம் சனிக்கிழமைகளில் கவிதைகள் வெளியிடுவீர்கள். பிறகு நிறுத்திவிட்டீர்கள். அதை மீண்டும் துவங்கி, இளம் கவிஞர்களை எழுத உற்சாகப்படுத்தவேண்டும். முக்கிய கட்டுரைகளுக்கு கார்ட்டூன் இணைக்க வேண்டும். அதை முகப்பில் தெரியும் படி செய்யலாம்.
ம.க.இ.க வெளியீடான ஒலிப்பேழையில் நிறைய பாடல்களை கேட்டிருக்கிறேன். அதிலிருந்து பெற்ற உணர்வுகள் அதிகம். புதியவர்களுக்கு அறிமுகப்படுத்த அதில் உள்ள முக்கிய பாடல்களை மாதம் இரண்டு பாடல்கள் என இணைக்கலாம்.

தோழர் மருதையன் எழுதிய கட்டுரைகளை அவ்வப்பொழுது இணைப்பது போல அவருடைய உரைகளை அவ்வப்பொழுது இணைக்கலாம்.
பல பத்திரிக்கைகள் இளைஞர் மலர்,சிறுவர் மலர், பெண்கள் மலர், அறிவியல் மலர் என நடத்துவது போல வினவும் பல்வேறு பிரிவினருக்காக கவனம் கொண்டு கட்டுரைகள் வெளியிடவேண்டும். அதற்காக வினவு குழுவ கட்டுரைகள் எழுதவேண்டும் என்பதில்லை. இணையத்தில் பல்வேறு துறை சார்ந்த நபர்கள் நிறைய எழுதுகிறார்கள். அதிலிருந்து தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

வருங்காலத்தில் வினவு குழுவில் நானும் இணைவதற்காக தான் தப்போ, சரியோ, எத்தனை சொந்த வேலைகள் இருந்தாலும், சமூக ரீதியான விசயங்களை வாரம் ஒரு கட்டுரை என்ற அடிப்படையில் எழுதி வருகிறேன்.
இப்பொழுது கூட சின்ன சின்ன அசைன்மென்ட் ஏதாவது இருந்தால் தாருங்கள். சந்தோசமாய் செய்கிறேன்.

ச‌மூக தளத்தில் வினவின் பங்கு, நீங்கள் நினைப்பதைக்காட்டிலும் அதிகம். தன் பாதையில் சற்றும் தளராமல் பயணிக்க வாழ்த்துக்கள்.

மீண்டும் வாழ்த்துக்களுடன்,
(சந்தோஷ) குமரன்

Friday, July 12, 2013

'குடி'காரியின் கதை!

Smashed - 2012 - ஒரு காதல் படம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் டிவிடி விற்பவரிடம் கேட்டதற்கு இந்த படத்தை தந்தார்.  ஆனால், இது காதல் படமில்லை!

கணவன் மனைவி இருவரும் அமெரிக்க இளம்தம்பதியினர். இருவரும் மொடா குடிகாரர்கள்.  அவள் ஒரு ஆரம்ப பள்ளியில் ஆசிரியை. பாடம் சொல்லிக்கொடுக்கும் அழகே அழகு! அன்றைக்கு காலையிலேயே சரக்கை இறக்கிவிட்டு, பள்ளியில் பாடம் நடத்தும் பொழுது, வாந்தி எடுக்கிறாள். பிள்ளைகளும், தலைமை ஆசிரியை எல்லொரும் கர்ப்பமா என கேட்கும் பொழுது, தற்காலிகமாக தப்பிக்க ஆமாம் என்கிறாள்.  உண்மையை அறிந்து சக ஆண் ஆசிரியரோ 'நிறைய குடிக்காதே' என ஆலோசனை சொல்கிறார்.

அடுத்தடுத்து, இரண்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒன்று. பாரில் குடித்துவிட்டு வீட்டுக்கு தனியாக போகும் பொழுது, ஒருத்தி லிப்ட் கேட்க அவளையும் அழைத்து செல்கிறாள். அவள் ஹெராயின் தர, அதையும் முதல் முறை இழுக்கிறாள். காலையில் யாருமில்லாத ஒரு இடத்தில் தனியாக தூங்கி எழுகிறாள்.  சத்தமில்லாமல் காரை எடுத்து, வீடு வந்து சேர்கிறாள்.

இன்னொரு சம்பவம்.  இரவு 2.30 மணிக்கு தூக்கம் வராமல், வீட்டில் தேடினால் சரக்கும் இல்லாமல்,  அரை போதையோடு,  கடைக்கு போகிறாள். கடைக்காரனோ நேரம் கடந்துவிட்டது. தரமுடியாது. கொடுத்தால், என் வேலை போய்விடும் என்கிறான்.  அவளோ சரக்கு வேண்டும் என்பதில் அடம்பிடிக்கிறாள். திடீரென்று, ஒன் பாத்ரூம் வர, கடையின் ரெஸ்ட் ரூம் பூட்டிக்கிடக்க, கடையிலேயே போய்விடுகிறாள்.  கடைக்காரன் செம கடுப்பாகிவிடுகிறான்.  அதற்கு மேலும் ஒரு ஒயின் பாட்டிலை காசு தராமல் தூக்கிக்கொண்டும் ஓடிவிடுகிறாள்.

சக ஆசிரியர் அவளிடம் பேசி, போதையிலிருந்து மீட்கும் ஒரு குழுவிடம் அழைத்து செல்கிறார். அங்கு வாராவாரம் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அந்த கூட்டங்களில் கலந்துகொள்கிறாள். குடியிலிருந்து மெல்ல மெல்ல விடுபடுகிறாள். தான் கர்ப்பிணி இல்லை என்ற உண்மையை சொல்லிவிடுவோம் என தலைமை ஆசிரியையிடம் சொன்னால், அதிர்ச்சியில் வேலையை விட்டு நீக்கிவிடுகிறாள்.

மன உளைச்சலில் அன்று மீண்டும் தண்ணி அடிக்கிறாள். வீட்டிற்கு போய், புருஷனிடம் "நீ குடிக்கும் வரை நானும் திருந்தமாட்டேன்' என சண்டைபோடுகிறாள். ஒரு சின்ன பார்ட்டி நடக்கிறது. அவள் குடியை விட்டு, ஒரு வருடம் நிறைவு நாள்.  உற்சாகத்துடன் பேசுகிறாள். இந்த ஒரு வருடத்தில், கணவனை விட்டு பிரிகிறாள்.  இறுதியில்,  கணவன் தன்னுடன் வாழ அழைக்கிறான்.  இவளோ உறுதியாய் மறுத்துவிடுகிறாள்.

*****

மொத்தப் படமும் நாயகியை மையப்படுத்தியே நகர்கிறது.  இயல்பாக நடித்திருக்கிறார். Final Destionation - பாகம் 3ல் நாயகியாக நடித்தவர்.  கதையில் ஆழமோ, காட்சிகளில் அழுத்தமோ இல்லாமல் நகருவது பெரிய குறை.  படமும் அதனால் பெரிய வெற்றியும் பெறவில்லை. சுமாரான வசூல். படம் கொடுத்த அந்த கடைக்காரன் மட்டும் என் கையில் சிக்கினான் என்றால்.. ஒன்னும் செய்யமுடியாது. :(   இந்த மாதிரி விழிப்புணர்வு படங்களுக்கு கிடைக்கும் விருதுகள் இந்த படத்திற்கும் கிடைத்திருக்கின்றன.

மற்றபடி, இந்த படத்தைப் பற்றி எழுதுவதற்கு காரணம்.  நமக்கும், இந்த படத்திற்கும் நிறைய நெருக்கம் இருக்கிறது. தமிழ்நாட்டில் 7 கோடியில் 1 கோடி பேர் வரை நன்றாக சரக்கடிக்கிறார்கள். அரசு தெருவுக்கு நாலு கடைகளை திறந்து, வருடம் தோறும் 20 ஆயிரம் கோடிகளுக்கும் மேலாக கல்லா கட்டுகிறது.  குடிக்கிற மக்களில் பலர் குடி நோயாளிகளாக, குடி வெறியர்களாக இன்று மாறியிருக்கிறார்கள்.  கடைகள் திறக்கும் பொழுதே, போதை மீட்பு மையத்தையும் அரசு திறந்திருக்கவேண்டும்.  அப்படியெல்லாம் சிந்தித்தால், கடைகளையே அரசு திறந்திருக்காதே!

எனக்கு தெரிந்து ஒரு குடும்பத்தில், அப்பா நிறைய சரக்கடிக்கிறார் என‌ அதை நிறுத்த, தொலைக்காட்சியில் வரும் ஒரு விளம்பரத்தை பார்த்து, குடிகாரர் அறியாமலே, அவர் உணவில் கலந்து தருவது என்பதை வாங்கி தந்து கொடுத்துள்ளார்கள். விளைவு இப்பொழுது அரைப் பைத்திய நிலையில் அவர் இருக்கிறார். 

இப்பொழுதே போதையில் தள்ளாடுகிறது தமிழகம்.  வருங்காலம்?

Friday, July 5, 2013

இளவரசனின் மரணம் எழுப்பும் கேள்வி!

வயது வந்த ஒரு பையனும், ஒரு பெண்ணும் தான் விரும்பியபடி திருமணம் செய்வதில் எத்தனை சிரமங்களை ஒரு பிற்போக்கு சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது! தமிழனாகிய ஒருவரும் தலைகுனிய வேண்டிய அவமானம் இது!

அப்பாவின் இறப்பின் பொழுது சடங்குகள் செய்ய மறுத்த பொழுது, சித்தப்பா ஒருவர் எனக்கு விவரம் தெரிந்து, "கடந்த 25 ஆண்டுகளாக இப்படி யாரும் சடங்கு செய்ய மறுத்ததில்லை" என தன் எதிர்ப்பை கோபமாய் கேட்டார். ஒருபக்கம் நாம் போராடுகிறோமே என என்னளவில் சந்தோசம். மறுபக்கம் 25 ஆண்டுகளாக யாரும் போராடவில்லையே என்ற வருத்தம் வந்தது.

நிறைய பதிவுகள். வருத்தங்கள். சரிதான். இளவரசனின் மரணத்திற்கு உண்மையிலேயே வருந்தினால், சாதியற்ற சமூகம் உருவாவதற்கு இதுவரை சமூகத்திலோ, தன்னளவிலோ என்ன செய்துவிட்டோம் என நம்மை நாமே உரசிப்பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு சாதியில் திருமணம் செய்துகொண்டு, எல்லாவித சாதி, சடங்கு சம்பிரதாயங்களையும் செய்துகொண்டு,  சாதிய சமூகத்தில் நாமும் ஒரு அங்கமாய் இருந்துகொண்டு, எப்படி இளவரசனின் மரணத்திற்கு வருந்துவது! இது ஒரு முரண்பாடு!

அதேபோல, தனிநபர்களாக இருந்துகொண்டு, எது ஒன்றையும் சாதிக்கமுடியாது என்பதும் உண்மை. தான் சரியென நினைக்கும் ஏதாவது ஒரு முற்போக்கு அமைப்பில் சேர்ந்து இயங்கவேண்டும். அது தரும் பொறுப்பான வேலைகளை இழப்புகளை தாங்கிகொண்டு களத்தில் பணியாற்ற வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல், தனிநபர்களாக இருந்துகொண்டு என்ன செய்யமுடியும் என்றால், முகநூலில் வன்னிய சாதி வெறியர்களின் முகத்தில் மீது கற்பனையாக ஒரு குத்து குத்தலாம். அதிகபட்சமாக வார்த்தைகளில் கொலைவெறியோடு ராமதாஸை தூக்கில் போடலாம்! நடைமுறையில் ஒன்றையும் சாதிக்கமுடியாது!

Monday, July 1, 2013

சமூக அக்க‌றை கொண்ட மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்!

எங்கள் பகுதியில் குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் இருக்கிறார். அவருடைய சிறப்பு நோயை சரியாக கண்டறிவது! பல மருத்துவர்கள் இதில் தான் சோடை போகிறார்கள். 4 ஆண்டுகளுக்கு முன்பு, ரூ. 150 வாங்கியவர், இப்பொழுது ரூ. 200 வாங்குகிறார். இடையில் 6 மாதங்களாக போய் பார்க்கவில்லை. இப்பொழுது விலைவாசி ஏற்றத்தினால், ரூ. 250 வாங்கலாம்.

ஏன் இவ்வளவு வாங்குகிறார் என விசாரிக்கும் பொழுது, ஒரு நாளைக்கு 100 நோயாளிகளை பார்க்கிறார். கூட்டத்தை குறைப்பதற்காக என்கிறார்கள்.

இதே மருத்துவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அருகே உள்ள வேறு பகுதியில் ரூ. 2 வாங்கி பல ஆண்டுகளாக பெருங் மக்கள் கூட்டத்திற்கு ஓய்வு இல்லாமல் மருத்துவம் பார்த்திருக்கிறார்.

ஏன் இந்த தலைகீழ் மாற்றம். அவரை கொஞ்சம் பேசவைத்தால், ஒரு நல்ல செய்தி சமூகத்திற்கு கிடைக்கும். நானே நேரிடையாய் கேட்டுவிடுவேன். ஆனால், அவர் பேசுவது ரெம்பவும் சொற்பமான வார்த்தைகள் மட்டுமே! இப்பொழுது மருத்துவர்கள் பலரும் பேசுவதே இல்லை. பேசினால், இரண்டு நோயாளிகளை பார்க்கும் நேரம் பாதிக்கும் என்ற கண்ணோட்டமாய் இருக்கலாம்.

வரலாற்றில் கனடாவை சேர்ந்த நார்மன் பெத்யூன், இந்திய மருத்துவர் துவாரகநாத் போன்ற பல சமூக அக்கறை கொண்ட மருத்துவர்கள் புரட்சிகர இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டு கடுமையாக பணியாற்றி இருக்கிறார்கள். இப்பொழுது எண்ணிக்கையில் குறைந்தாலும், சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை பகிர்வோம்!

Wednesday, June 26, 2013

Raanjhanaa - ஒரு பார்வை

வெகுநாட்களுக்கு பிறகு திரையரங்கில் பார்த்த இந்திப்படம்.  யாராவது பிற மொழியில் நல்ல படம் என தெரிவித்தால், சப் டைட்டிலுடன் டிவிடியில் பார்ப்பது தான் வழக்கம்.  நேற்று ஒரு நண்பருடன் எதைச்சையாக இந்த படத்தை பார்த்தேன். நமக்கு எவ்வளவு இந்தி தெரியும்னா!

'இன்றைக்கு நான் இந்தியில பேசினேன் ஜி!' என இந்தி கற்றுத்தருகிற ஆசிரியரிடம் சொன்னேன். அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம். பிராத்மிக் படிக்கிற நம்ம மாணவன் இந்தி பேசிட்டானேன்னு!  என்ன பேசினீங்க! என்றார். இன்றைக்கு ஒருவர் என்னிடம் இந்தியில் வேகமாக பேசி, முகவரி கேட்டார்.  'முஜே இந்தி னஹி மாலும்' என்றேன். போய்விட்டார் என்றேன். அவர் காதில் புகை வந்தது. வேகமாய் நழுவிவிட்டேன்.

எனக்காவது 'ப்யார்', 'சோர்' என பல வார்த்தைகள் தெரியும். நண்பருக்கு சுத்தம். உணர்வுகள் தானே திரைமொழி! அதனால் துணிந்து பார்க்கப் போனோம்.

****

வாரணாசியில் துவங்குகிறது படம். சிறுவயதில் இருந்தே (இந்தியிலுமா!) நாயகன் நாயகியை காதலிக்கிறார். நாயகன் இந்து. நாயகி முஸ்லீம். தொடர் முயற்சியில் நாயகி நெருங்கி வர, இந்து என தெரிந்ததும் விலகுகிறார். பிறகு மீண்டும் நெருக்கம் வர, வீட்டிற்கு தெரிந்து, மேல்படிப்புக்கு தில்லிக்கு அனுப்புகிறார்கள். புதிய உலகம். புதிய சூழல். அங்கு கல்லூரியில் ஒருவரை காதலிக்கிறார். 8 வருடம் கழித்து மீண்டும் ஊருக்கு திரும்ப, நாயகனோ இன்னும் காதலுடன் காத்திருக்கிறார்.  பிறகு வேறொருவரை காதலிக்கும் விசயம் தெரிந்து, நொந்து, அவர்களின் காதலுக்கு உதவி செய்கிறார். (விக்ரமன் படம் நினைவுக்கு வருகிறது!). கல்லூரி காதலன் இந்து. முஸ்லீம் என பெண் வீட்டில் சொல்லியிருப்பது நாயகனுக்கு தெரியவர, கோபத்தில் போய் வீட்டில் உண்மையை சொல்லிவிட, ஏக களேபரமாகிவிடுகிறது. இடைவேளைக்கு பிறகு, அரசியல் அப்படி இப்படி என படம் நகருகிறது. (யப்பா! இத எழுதறதுக்கே எவ்வளவு நாக்கு தள்ளுது)

****

காதல் மட்டும் இல்லையென்றால் இந்தி சினிமாக்காரர்கள் செத்துவிடுவார்கள் போலிருக்கிறது.  இடைவேளை வரை காதல் படமாக நகருவது. இடைவேளைக்கு பிறகு அரசியல் கலந்த படமாக நகருகிறது.  அதிலும் இறுக்கமாக போகாமல், அங்கும் இங்கும் அலைபாய்கிறது.  அந்த அரசியலும் மணிரத்னம் பாணியிலான அரசியலாக இருப்பதால், ஒட்டவில்லை.

தனுஷ்க்கு ஒரு நல்ல அறிமுகத்தை இந்த படம் தந்திருக்கிறது. தனுஷின் நண்பன், தோழியாக வருபவர்கள் இயல்பாக வலம்வருகிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியில் இசை அமைத்திருக்கிறார் என்கிறார்கள்.  ஓரிரு பாடல்கள் நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு 'மிளகா' நட்ராஜ். பளிச்சென ஒளிப்பதிவு. இந்தியில் வேலை செய்து சம்பாதித்து, தமிழில் கதாநாயகனாக நடித்து காசை செலவு செய்கிற ஒரு மனுசன். :)

ஆஜானுபானுவான ஆட்கள் இந்தியில் வலம் வரும் பொழுது, அங்கு தனுஷின் நுழைவு பெரிய ஆச்சரியம் தான். தனுஷின் இந்தி உச்சரிப்பு நன்றாக இருந்தது ஆச்சரியம் எனக்கு. வேலை நாளான நேற்று எஸ்கேப்பில் அரங்கு நிறைந்த கூட்டமாக இருந்தது. படத்தில் வசனம் இயல்பாக நன்றாக இருந்ததாக சொல்கிறார்கள்.  பின்னாளில், அம்பிகாபதி டிவிடி பார்த்து புரிந்துகொள்ளவேண்டும். :)  இந்தி சினிமாகாரர்கள் மூன்று மணி நேரம் படம் எடுத்து கொல்வார்கள். அதனாலேயே பெரிய அலுப்பு ஏற்பட்டுவிடுவதுண்டு. பரவாயில்லை. இப்பொழுதெல்லாம் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார்கள். இந்த படம் இரண்டே கால்மணி நேரம் தான் படம்.

****

Monday, June 17, 2013

உள்ளதை உள்ளபடி எழுத தெரியாதோ?!

//மணிவண்ணன் இளமையில், கோவையில் இருந்த காலத்தில்... ‘தீவிரமான கம்யூனிஸ்ட் இயக்க போராளியாக’ இருந்தார். போராளிகளை, போலிஸ் ‘நக்ஸலைட்’ என அழைக்கும்.
முக்கிய நக்சல்களை ‘என்கவுண்டரில்’ போட்டுத்தள்ள திட்டமிட்டது. லிஸ்டில், முதல் பெயர் மணிவண்ணன். தகவலறிந்த நண்பர்கள் மணிவண்ணனை சென்னைக்கு கடத்தினார்கள்.//


- உலக சினிமா ரசிகன் - தன்னுடைய வலைப்பதிவில்...

//பொதுவுடமை கட்சியில் தீவிரமாக வேலை செய்தவர்.கட்சிக்காக சுவரெழுத்து எழுதி உழைத்தவர்.அவரின் தீவிர பொதுவுடமை கருத்துக்களை ஏற்க முடியாமல் கட்சியில் இருந்து தீவிரகம்யுனிஸ்ட் என்று முத்திரை குத்தி தூக்கி வீசப்பட்டவர்.//

- இயக்குநர் களஞ்சியம் - முகநூலில்!

ஒரு மனிதர் இறந்துவிட்டால் அவருக்கு ஒளிவட்டம் போடுவதற்காக ஜு.வி., நக்கீரன் ரேஞ்சை விட அதிகமாக எழுதி தள்ளுகிறார்கள். ஏகமாய் அள்ளிவிட்டு,  இருக்கிற நற்பெயரையும் கெடுக்கிறார்கள்.

கோவையில் இருந்த பொழுது பொதுவுடைமை அமைப்பில் வேலை செய்தவர். திரைப்பட ஆர்வத்தில் அமைப்பை விட்டு விலகி, சென்னைக்கு நகர்ந்தவர் என்று தான் ஒரு தோழர் மூலம் கேள்விப்பட்டுள்ளேன்.

உள்ளதை உள்ளபடி எழுத தெரியாதோ?!

மற்றபடி, மணிவண்ணன் எனக்கும் பிடித்த நடிகர் தான்!

Wednesday, June 5, 2013

மாசாணி ‍- தலித் வடித்த சிலை!

ஒரு தலித் பெண்ணும் நல்லவராய் இருக்கிற சின்ன பண்ணையும் காதலிக்கிறார்கள். விசயம் தெரிந்த வீட்டார் சின்ன பண்ணையை சோற்றில் விஷம் வைத்து கொல்கிறார்கள்.  தலித் பெண்ணை ஊரைவிட்டு தள்ளி வைக்கிறார்கள்.  வயிற்றில் பிள்ளையோடு வாழ தத்தளித்து, குழந்தையை பெற்றுவிட்டு இறக்கிறாள்.

அந்த ஊருக்கு சிலை செய்ய வந்த ஒரு இரக்கம் கொண்ட ஒரு சிற்பி இந்த பெண்ணின் நிலை அறிந்து, பாதி சிலை செய்த கையோடு, ஊர்க்காரர்களை சபித்துவிட்டு குழந்தையை கொண்டு வந்து, தன் பேரனாக வளர்க்கிறார்.

25 ஆண்டுகள் கழிகின்றன. இறந்து போன மாசாணி நிம்மதி இழந்த ஆத்மாவாக அந்த ஊரில் பலரை காவு கொள்கிறாள். பாதியோடு நிற்கும் மூலவரின் சிலையை முடிக்க பல சிற்பிகளை அழைத்து வருகிறார்கள். மாசாணி அவர்களை எல்லாம் அடித்து துவைத்து அனுப்புகிறாள்.

இறுதியில், பழைய சிற்பியிடமே போய், சிலையை முடித்து தர கெஞ்சுகிறார்கள்.  தன் பேரனை அனுப்பி சிலை வேலையை முடித்துதருகிறார்.

தலித்தை தள்ளி வைத்த குடும்பம், ஒரு தலித் பெற்றெடுத்த பையன் வடித்தெடுத்த சிலையை ஊரே வணங்குகிறது!  உண்மை தெரிந்த பண்ணையார் குடும்பம் சாதியை புறக்கணித்து, பையனை  ஏற்றுக்கொள்கிறது! தன் பெண்ணையும் கட்டித்தருகிறது. :)

*****

இந்த படம் பார்த்ததும், சிற்பி ராஜன் தான் நினைவுக்குவந்தார். அவருடைய ஆனந்தவிகடன் பேட்டி தான் சட்டென்று நினைவுக்கு வந்தது. பெரியாரிஸ்டான சிற்பி ராஜன், தனக்கு தெரிந்த சிற்பக்கலையை பல தலித் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுத்து பல அருமையான சிற்பிகளை உருவாக்கியிருக்கிறார். இன்றைக்கு அவர்கள் செய்த பல சிலைகளை தான் பல இடங்களிலும் வணங்கி வருகிறார்கள்.அவருடைய பணி சிறப்பான பணி. அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

***

கதையை பார்த்ததும் உணர்ச்சிவயப்பட்டு போய்விட்டு, என்னை திட்டவேண்டாம். நண்பர்கள் ஏதோ படம் வாங்க போக, கிடைக்காமல் இந்த படத்தை எதைச்சையாக வாங்கி வந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த வகை மாதிரியில் 25 வருடத்திற்கு முன்பு இப்படி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. தலித் வடித்த சிலை என்பது மட்டும் உருப்படியான விசயம். மற்றபடி, படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு, பாடல்கள் எல்லாம் 25 வருடத்திற்கு முந்தைய தரம் தான். பல வருடங்களுக்கு பிறகு செந்தூர பூவே ராம்கி படத்தில் வருகிறார். பேய் படம் என்கிறார்கள். கடவுள் நம்பிக்கை போய்விட்டதாலும், வயதானதாலும் பயம் தான் வரமாட்டேன் என்கிறது. :)

சிற்பி ராஜன் செய்கிற பணி பலரும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கதையை பகிர்ந்துகொண்டேன்.

***

Saturday, May 18, 2013

இனியெல்லாம் சுகமே!

நேற்று ஒரு டிவிடி கடையில் பாடல் டிவிடி வாங்கலாம் என தேடியபொழுது, கமல், ரஜினி பாடல்கள் என 75 படங்களுக்கு மேலான படங்களின் பாடல்கள் அடங்கிய டிவிடி பார்த்தேன். அந்த கால கேசட் நினைவு வந்தது. பகுதிக்கு 6 பாட்ல்கள் என இரண்டு பக்கமும் 12 பாடல்கள் தான் பதியமுடியும். இந்த ஒரு டிவிடி 25 கேசட்டுகளுக்கு சமம் என மனம் கணக்கிட்டது. இன்றைய தலைமுறைக்கு பல பொருட்கள் மலிவாகவும், தாராளமாகவும் கிடைக்கின்றன.

அண்ணனின் நண்பன் ஒருவன் இளையராஜாவின் ரசிகன் அவன். அவனுடைய வேலை நேரம் தவிர மீதி நேரத்தை இளையராஜாவுடன் தான் கழித்தான். 70களில், 80களில் இளையராஜாவின் பாடல்களை கடை கடையாய் ஏறி சேகரித்து, கேசட்டில் பதிந்து, இரவில் மொட்டைமாடியில் இரவு 2 மணிவரை கேட்டுக்கொண்டிருப்பான். கல்யாண பரிசாக கூட இளையராஜா பாடல்களை தான் பரிசாக அளிப்பான். 

அண்ணனோடு சேர்ந்து தூங்கிய காலங்களில் இளையராஜாவின் பாடல்கள் தான் தாலாட்டு. அண்ணனின் நண்பன் திரும்ப திரும்ப கேட்டு, சில பாடல்கள் இன்றைக்கு வரைக்கும் கூட மனப்பாடம் தான்.

உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...
இனியெல்லாம் சுகமே...

பக்கத்து வீட்டு அக்கா ஒரு கேசட்டிலே தனக்கு பிடித்த ஒரே பாடலை மட்டும் முழுவதும் பதிந்து கேட்டுக்கொண்டே இருப்பார். இது என்ன லூசா என அன்றைக்கு தோன்றியது. காதல் பித்தில் இருந்திருக்கிறாள் என இப்பொழுது புரிகிறது.

அப்பொழுது தான் வீட்டில் அதிக கேசட் வைத்திருப்பவர்களுக்கு இருக்கிற கெத் தனி தான். அதை கடனாக கேட்டால், அவர்கள் பண்ணுகிற பிகு இருக்கிறதே! தாங்காது. கடனாக வாங்கி, அந்த கேசட்டுக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதே பாடல் தான் வேண்டும். அதே வரிசையில் வேண்டும் என அடம்பிடிப்பார்கள். :)

கேசட்டுகளை பதிந்து நிறைய பணத்தை வீணாக்கிறான் என அண்ணனை திட்டிக்கொண்டே இருப்பார் அம்மா. இப்பொழுது டேப்ரிக்கார்டடை தேடினாலும் பார்க்கமுடியாது. ஆனால், அண்ணன் வீட்டில் சில கேசட்டுகளை தன் நினைவுகளுக்காக பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.

எதிர்நீச்சல்

படம் எனக்கு பிடித்திருந்தது.  தன் பெயரால் தன் மனிதன் எவ்வளவு இழப்புகளுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகிறான் என்பதை சுவைபட சொல்லியிருக்கிறார்கள்.  அதிலிருந்து மீள அவன் செய்யும் போராட்டம் என்ன?  இறுதியில் என்ன படிப்பினை பெறுகிறான் என்பதும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமான செய்தி.

தமிழ்நாட்டில் நாட்டார் வழக்கு தெய்வங்களின் பெயர், தாத்தா, பாட்டி பெயர்கள் என பல வகைகளில் குழந்தைகளுக்கு முன்பெல்லாம் பெயர் வைத்தார்கள்.  'நாகரிக' சமுதாயத்தில் அந்த பெயர்கள் எல்லாம், எப்படி 'காலாவதி' ஆகிப்போயின என்பது ஒரு நீண்ட விவாதத்திற்கு உரியது.

'அண்ணாமலை' என பெயர் கொண்ட அண்ணணின் நண்பன், அண்ணாமலை படம் வந்த பிறகு, அவன் அந்த பெயருக்கு 'பெருமை' கொண்டான். ரஜினிகாந்த் காப்பாற்றிவிட்டார். :)

இப்பொழுதும் 90%க்கும் மேலாக யாரும் தமிழ் பெயர் வைப்பதில்லை.  இந்த படத்தில் நாயகன் பெயரை (ஹரிஸ்) போலவே பலரும் வைக்கிறார்கள்.  ஜாதகத்தை கொண்டு முன்னெழுத்தை ஜாதககாரர்கள் சொல்கிறார்கள். அந்த எழுத்துக்களில் பெயர்கள் பெரும்பாலும் தமிழில் இருப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும், தமிழர்கள் தனிக்கவனம் எடுத்து தவிர்க்கிறார்கள்.

நேற்று கும்பகோணம் அருகே ஒரு கிராமத்தில் அகமுடையார் குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு 'பிரணவ ஜெயின்' என்று வைத்திருப்பதாக சொன்னார்கள். பெற்றோர்கள் சிங்கப்பூரில் சில ஆண்டுகளாக வசிக்கிறார்கள். இதைவிட 'நாகரிக' ச்முதாயத்தில் வாழ்கிறார்கள் அல்லவா! :)

என் நண்பர்கள் சிலர் தங்கள் பெயரினால் விவரம் தெரியாத வரை சிரமப்பட்டு இருக்கிறார்கள்.  பெயர் என்பது பெயர் மட்டுமில்லை.  அதில் நமது அடையாளம், மண்ணின் மணம், குல வரலாறு இருப்பதை புரிந்துகொண்ட பிறகு, தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவந்துவிட்டார்கள்.

பெயர் சம்பந்தமாகவே படம் முழுவதும் சுவாரசியமாக நகர்ந்து இருக்கலாம்.  இயக்குநருக்கு நம்பிக்கை இல்லாததால், மாரத்தான் என நகர்ந்துவிட்டார்.  மாரத்தானில் ஜெயித்து, வெற்றிப் பேட்டியில், 'சிவகாமியின் மைந்தன் குஞ்சிதபாதமாக தான் உலகத்திற்கு அறியபப்படவேண்டும். அது தான் தந்தையில்லாமல் பல சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்த தன் தாய்க்கு பெருமை' என சொல்வது அருமை. படம் முழுவதும் விவாதித்த ஒரு விசயத்தை அந்த ஒரு நிமிடத்தில் சடாரென கடந்து போயிருந்ததை தவித்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கவேண்டும்.

மற்றபடி, நடிகர்களின் தேர்வு, நடிப்பு, ஒளிப்பதிவு, பாடல், நடனம் என படத்தின் வேகத்திற்கு உதவியிருக்கிறது.

படம் ஒரு விவாதப்புள்ளியை துவங்கி வைத்திருக்கிறது. நாம் தாம் அதை விரிவாக்கி நம்மை சுற்றியுள்ளவர்களிடம் எடுத்துச்செல்லவேண்டும்.

வீட்டுச் சாப்பாடே சாலச்சிறந்தது!

நேற்று நண்பனுடன் அவனுடைய மாமாவை சந்திக்க போயிருந்தேன். அவர் தனது நண்பர்களுடன் தனது மாசாலா நிறுவனத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அதிலிருந்து சில தகவல்களை பகிர்கிறேன்.

****

குழந்தைகளுக்கு கூட தன்னுடைய மசாலா பொருட்களை பயன்படுத்தவேண்டும் என தரமான பொடியை தரவேண்டும் என்ற கனவுடன் இந்த மசாலா துறைக்கு வந்தேன். இந்த இரண்டு வருடங்களில் அந்த கனவை மொத்தமாக தகர்த்துவிட்டார்கள்.

காரமே இல்லாத சொத்தை மிளகாய்த்தூளை அரைத்து, நிறைய உடல் தொந்தரவுகளை தரும் சிவப்பு ரசாயன பொடியை கலந்து சிவிரென சிகப்புதூளாக விற்கிறார்கள்.  அதை கிலோ ரூ. 40 என‌ மிக மலிவான விலைக்கு விற்கிறார்கள். அவர்களோடு நாம் போட்டி போடவே முடியாது.

பல கல்லூரி கேன்டின்களுக்கு மசாலா விற்றுக்கொண்டிருக்கிறேன். கேன்டின் கான்டாராக்டர்கள் பொடியை மலிவா கொடு! என்று தான் பேசுகிறார்களே தவிர, தரமான பொருளை கொடு என கேட்பதே இல்லை. இதைத்தான் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இரண்டு வருடங்களாக தரமான பொருளை விற்கவேண்டும் என்ற நோக்கத்தில் முயற்சி செய்து, சில லட்சங்கள் நட்டம் அடைந்தது தான் மிச்சம்.

எந்த கடைக்காரரும் தரமான பொருளை தாருங்கள் என கேட்பது இல்லை.  தனக்கு கூடுதலாக கமிசன் கிடைக்கிறதா என்று தான் பார்க்கிறார்கள்.  பிரபலமான நிறுவன பொருட்கள் தவிர, குறைவாக கமிசன் கிடைக்கும் தரமான பொருட்களை கடைக்காரர்கள் வாங்கி விற்பதே இல்லை.

ஒருமுறை அப்பளம் வாங்கி விற்கலாம் என விசாரித்தால், அப்பளத்தின் மொறுமொறுப்புக்கு சோடா பவுடர் போடுவதாக சொன்னார்கள்.  அது இல்லாமல் மொறுமொறுப்பு சாத்தியமே இல்லையாம்.  அப்பளம் விற்கும் திட்டத்தையே கைவிட்டேன்.

நேற்று ஒரு கேன்டின்காரரிடம் ஊறுகாய் எங்கு வாங்குகிறீர்கள்? என கேட்டதற்கு, கிலோ ரூ. 26க்கு வாங்குகிறேன் என்றார். எங்கோ ஆந்திராவின் கிராமப்புற பகுதியில் குடிசைத் தொழில் செய்பவர்களிடமிருந்து வருகிறதாம்.  எண்ணெய், மிளகா பொடி என விற்கும் விலைக்கு ரூ. 26க்கு தயாரிக்கவே முடியாது. எதைப்போட்டு தயாரிக்கிறார்கள் என்பது ஆச்சரியம்.

இப்படி ஒருமணி நேரம் கலப்படம், வணிகம், சந்தை என இந்த சந்தை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை விலாவாரியாக சொன்னார்.  எந்தவித தரக்கட்டுப்பாடும் கிடையாது. அவ்வப்பொழுது ஏதாவது ஒரு அதிகாரி போனைப் போட்டு, லஞ்சம் வாங்கிக்கொண்டு போய்விடுகிறார்களாம். கேட்டு முடிந்ததும் கொஞ்சம் கிறுகிறுத்துத்தான் போனது.

முன்பெல்லாம் சொந்த பந்தங்களுக்கு என்னுடைய மசாலா பொடியை கொடுத்துக்கொண்டிருந்தேன். இப்பொழுது சந்தைகளின் விதிகளுக்கு தகுந்தவாறு நானும் மாறிக்கொண்டதால் (கலப்படம் செய்வதால்)இப்பொழுது சொந்த பந்தங்களுக்கு பொடியை தருவதில்லை என்றார். :(

இத்தனையையும் பார்த்து, இப்பொழுதெல்லாம் வெளியில் சாப்பிடுவதே இல்லை. வீட்டுச்சாப்பாடு தான் சாப்பிடுகிறேன்! என்றார். எனக்கும் அதுதான் ரெம்ப சரியென்றுபட்டது!

இரண்டு நாள்களுக்கு முன்பு, சொந்தக்கார பெண் கேட்டரிங் படித்துவிட்டு, ஒரு 3 ஸ்டார் ஹோட்டலில் பயிற்சிக்காக போய்க்கொண்டிருக்கிறார். கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஹோட்டலில் சமைக்கிற விதம் குறித்து சொன்னதும், தலைச்சுற்றல் வந்தது. அதை இன்னொரு நாள் பகிர்கிறேன். :)

Wednesday, May 1, 2013

Le Grand voyage - 2004 - மகத்தான பயணம்

பயணங்கள் நமக்கு நிறைய கற்றுத்தரும் ஆசானாக இருக்கின்றன. மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் ஏதாவது ஒரு ஊருக்கு பயணமாக சென்று வந்தால் என்னிடமிருந்து கொஞ்சம் மன அழுக்குகள் கறைந்து போவதை பார்த்திருக்கிறேன். பெருநகரம் உடம்பில் ஏற்றிய படபடப்பை கொஞ்சம் உதறிவிட்டு வந்திருக்கிறேன் என்பது நன்றாக உணர்ந்திருக்கிறேன்.

தொழிற்முறை பயணம், இன்பச் சுற்றுலா, ஆன்மீக பயணம் என பயணங்களில் பலவகையானவை உண்டு. இந்த பயணம் பிரான்சிலிருந்து மெக்கா நோக்கி பயணம் பற்றிய படம். அருமையான படம்.

****

கதை எனப் பார்த்தால்...

பிரான்சில் வாழும் ஒரு முஸ்லீம் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெரியவருக்கு மெக்கா பயணம் மேற்கொள்வது அவரது நீண்ட கால ஆசை.  பள்ளி இறுதியில் படிக்கும் தன் இளைய மகனை அழைத்துக்கொண்டு தரை வழி மார்க்கமாக தனது நீண்ட பயணத்தை காரில் துவங்குகிறார்.

பல மனிதர்களை வழியில் சந்திக்கிறார்கள். உடல் நல குறைபாடு, தூதரக தொல்லைகள், எல்லாவற்றையும் எதிர்கொண்டு இறுதியில் மெக்காவை அடைகிறார்கள். உடல் நலக்குறைவினால், அங்கு இறந்துவிடுகிறார்.  அப்பா குறித்த நினைவுகளுடன் பிரான்சுக்கு திரும்புகிறான்.

****

ஐந்துமுறை தொழுகும் அப்பா. பிரான்சில் பண்பாட்டில் வளர்ந்த எதிலும் பெரிய பிடிப்பு இல்லாத இளைஞன்.  மெக்கா செல்லவேண்டும் என்றால் விமானத்தில் செல்லலாமே! (ஏன் என் உயிரை எடுக்கிறீர்கள்?) என்கிறான் பையன்.  ஆன்மீக பயணம் என்பது நடை தான் சிறந்தது. அதற்கு வாய்ப்பில்லாத பொழுது காரில் பயணிக்கிறோம் என்கிறார்.

பிரான்சிலிருந்து மெக்கா வரை 3000 கி.மீட்டர்கள்.  இடையில் பல முக்கிய நகரங்களை கடக்கிறார்கள்.  அந்த இடங்களை சுற்றிப்பார்க்கலாம் என ஆசைப்படுகிறான் பையன்.  "நாம் ஒன்றும் சுற்றுலா வரவில்லை" என மறுத்துவிடுகிறார்.

காதலியோடு செல்போன் பேசுகிறான்  என கடுப்பாகி அவன் தூங்குகிற பொழுது குப்பையில் எறிந்துவிடுகிறார்.  அடுத்த நாள் அதை அறிந்து டென்சனாகிவிடுகிறான் பையன்.

ஒருமுறை அப்பாவுக்கும் மகனுக்கும் பெரிய வாக்குவாதமாகி பையனை அடித்துவிடுகிறார். நான் ஊருக்கு கிளம்புகிறேன். நீங்கள் தனியாக போய் சிரமப்படுங்கள்! என கத்துகிறான்.  சரி காரை விற்று நீ ஊருக்கு போ! நான் பயணத்தை தொடர்கிறேன் என்கிறார்.  பிறகு சமாதானம் அடைகிறார்கள்.

அப்பா மகன் என தலைமுறை இடைவெளியை பேசுகிற படம் இது! 

பிரான்சில் வளர்ந்த பையன், இவரும் பல காலம் பிரான்சில் வாழ்ந்தவர் தானே!  பிரான்ஸ் பண்பாடு அவரை கொஞ்சம் கூட மாற்றவில்லையா என்ன?  அரபு நாடுகளில் வாழும் அப்பாவை போலவே இறுக்கமாக வாழ்கிறார். கொஞ்சம் நெருடலாக இருந்தது.

இந்தியாவில் ஒரு அப்பாவும் பிள்ளையும் இப்படி பயணித்தால் கூட பயண அனுபவங்கள் கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு இப்படி தான் அனுபவம் ஏற்படும்.

பிள்ளைகள் என்பவர்கள் தன் வழியே வந்தவர்கள் அவ்வளவு தான்.  தன்னுடைய சொத்து போல பிள்ளைகளையும் பாத்தியப்பட்டவர்கள் போல நடந்துகொள்கிறார்கள்.

அப்பாக்களுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை.  அனுபவம் இருப்பதாலேயே தாங்கள் சிந்திப்பது, செயல்படுவது சரி என நினைக்கிறார்கள்.  பிள்ளைகள் படித்தவர்கள். அவர்களின் அறிவையும் நம் அனுபவத்தையும்  சேர்த்து செய்யலாம் என்பதாக யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்.

படத்தில் நடித்த பாத்திரங்கள் மிக குறைவு. அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பார்க்கவேண்டிய படம்.

இந்த படத்தைப் பார்க்க தூண்டியது எஸ். இராமகிருஷ்ணனின் கீழே உள்ள விமர்சனம் தான்.  விரிவாக எழுதியுள்ளார். அவசியம் படியுங்கள்.

மகத்தான பயணம்

Tuesday, April 30, 2013

கெளரவம் ‍- அழுத்தமில்லை!

'கெளரவக் கொலை' என்பது தவறான வார்த்தை பயன்பாடு.  'சாதி வெறிக்கொலை' என்பது தான் அர்த்தம் பொதிந்த சரியான வார்த்தை.

இந்தியா முழுவதும் நடக்கும் சாதிவெறிக்கொலைகளை பற்றிய படம் என்பது கெளரவமான விசயம் தான். ஆனால், அழுத்தமில்லாத படமாக வந்திருப்பது தான் பெரிய வருத்தம். :(

*****

கதை எனப்பார்த்தால்...

நாயகன் தன்னுடன் படித்த நண்பனை தேடி  எதைச்சையாய் கிராமத்திற்குள் வருகிறான்.  தலித்தான நண்பன், ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போனதாக சொல்கிறார்கள்.

நண்பனின் அப்பா மகனை தேடித்தர கோருகிறார்.  அதற்கான முயற்சிகளில் இறங்கும் பொழுது பல அதிர்ச்சியான தகவல்கள் வருகிறது!

****

இரட்டை குவளை தேநீர் கடை, சாதிக்கலவரம் நடந்த ஊர் என சாதி தீண்டாமையை கடைப்பிடிக்கிற ஊராக காட்டுகிறார்கள்.  படத்தில் ஓர் இடத்தில் நாய்கன் சொல்வார்.  'பாரதிராஜா கிராமம் போல இருக்கும்' என நினைச்சேன் என்பார். இந்த கிராமம் இராதாமோகனின் கிராமமாக இருக்கிறது. அவ்வளவு தான்.

ஆதிக்க சாதி வெறி ‍ தலித் அவலநிலை என்பதை காட்டும்பொழுது மனம் பதறவேண்டாம். காட்சியில் அழுத்தமே இல்லாதது தான் காரணம்.

ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ராதாமோகன் தலித்துகளின் நிலை பார்த்து 'அச்சச்சோ' என்பதாக பரிதாபப்பட்டு எடுத்த படமாக‌ இருக்கிறது.

வழக்கமான பாடல், ஆடல் என ஒரு வணிகப்படத்திற்கான எல்லா அம்சங்களும் இருக்கின்றன. ஆபாசம் இல்லை. அது ஒன்று தான் வித்தியாசம்.

பாடல்கள் சுமார். பாடல்களை எடுத்துவிட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது.  நாயகன் பாத்திரத்திற்கு பொருத்தமில்லாத நபராக இருக்கிறார். சிலர் நன்றாக செய்திருக்கிறார்கள்.

சென்னையில் சாதி பார்ப்பதில்லை என்பதாக படத்தில் ஒரு வசனம் வருகிறது. இதெல்லாம் நல்லெண்ண கருத்து. என் ஐந்து வருட சென்னை வாழ்வில் இரண்டு சம்பவங்கள் எனக்கே ஏற்பட்டிருக்கிறது.

ஒரு நேர்முக தேர்வுக்கு போனபொழுது, அந்த நிர்வாகி என் சாதியை கேட்டார்.  சாதியையும் நான் சொல்லவில்லை. வேலையும் கிடைக்கவில்லை.

என் பாஸின் நண்பர் ஒருவர் (அய்யர்) வீடு கட்டி குடிபுகுந்தார். அலுவலக ஊழியர்களை அழைக்கவில்லை.  பின்னாளில், எங்க பாஸே சொன்னார். அலுவலகத்தில் இரண்டு ஊழியர்கள் தலித்துகள். அதனால் தான் அழைக்கவில்லை என்றார்.

இப்படிப்பட்ட தீண்டாமை கடைப்பிடிக்கும் கிராமங்கள் தமிழகத்தில் 70களில் தான் இருந்ததாக தினமலர் எழுதியிருக்கிறது.  மிகப்பெரிய பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.

என் நினைவிலிருந்து...சாதி வெறியை இயல்பாய், காத்திரமாய் காட்டிய படம் பருத்திவீரன். உணர்வு தளத்தில் 'பாரதி கண்ணம்மா' பேசியிருக்கும்.

சமூகத்தில் மனிதர்களை இழிவுப்படுத்துகிற ஒரு கொடுமையான நிகழ்வை ஒரு அழுத்தமான பதிவாக தர முயலாமல், மேலோட்டமான, அழுத்தமில்லாத படமாக வெளிவந்திருக்கிறது கெளரவம்.

இப்படி படத்தை எடுத்துவிட்டு, "நல்ல படம் எடுத்தோம். மக்கள் ஆதரிக்கவில்லை" என்று வேறு சொல்வார்கள்.  அதைக் கேட்பது தான் கடுப்பாக இருக்கும்.

Friday, April 26, 2013

உதயம் NH4

இயக்குநர் வெற்றிமாறனை பிடிக்கும் என்பதால், உதயத்தை நம்பி பார்த்தேன்.  ஏற்கனவே கேடி பில்லா, கில்லாடி ரங்கா பார்த்துவிட்டு நொந்து போயிருந்தேன்.  இந்த படம் ஆறுதலாய் இருந்தது.  இப்பவெல்லாம் கேடி பில்லா, கில்லாடி ரங்கா போன்ற கதைகள் குறைந்த பட்ஜெட் நிறைய கல்லா கட்டுவதால், தயாரிப்பாளர்களால் நிறைய விரும்பப்படுகிறதாம். கஷ்டம். கஷ்டம். :(

****

கதை எனப் பார்த்தால்...

சென்னையை சேர்ந்த நாயகன் பெங்களூருவில் படிக்கிறார். காதல் வயப்படுகிறார். ஒரு இந்துத்துவா பிரமுகரின் பெண் என்பதால், காதலுக்கு தடை போடுகிறார். கல்லூரி இறுதி தேர்வின் பொழுது, நாயகியை சென்னைக்கு அழைத்துவந்துவிட்டால், பிரச்சனையில்லை! வக்கீல் மாமா காப்பாற்றுவார் என நண்பர்களின் உதவியுடன், பெண்ணுடன் பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி கிளம்புகிறார். அதற்குள் அத்தனை களேபரங்களும் நடக்கின்றன. இறுதியில் சுபம்.

****

வெற்றிமாறன் முதன்முதலில் இந்த படத்தை தனுசை வைத்து எடுக்க முயற்சித்து, பல தயாரிப்பாளர்கள் கைமாறி இரண்டு நாள்கள் ஷூட்டிங்கெல்லாம் நடத்தி நின்று போனபடம்.  இப்படி பலர் கைமாறிய கதையே மிக சுவாரசியமான கதையாய் இருக்கும் போலிருக்கிறது.  அந்த கதையை இப்பொழுது, தனது உதவி இயக்குநருக்காக தூசி தட்டியிருக்கிறார்.

படம் நான் லீனியர் முறையில் நகர்கிறது.  போலீஸ் அதிகாரி நாயகனின் நண்பர்களை விசாரிக்க அடிக்கும் பொழுது, அழுதுகொண்டே நாயகன் - நாயகியின் காதலை விவரிப்பது சுவாரஸ்யம்.  அவர்களுக்கு இடையிலான காதலை இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் சொல்லியிருக்கலாம். படம் பெரிய நீளமும் இல்லை. 2 மணி நேரம் 11 நிமிடங்கள் தான்.  ஒன்றிரண்டு பாடல்களை வெட்டி இருப்பார்கள் போலிருக்கிறது! காதலர்களை துரத்துகிற காவல்துறை அதிகாரி நன்றாக செய்துள்ளார். சித்தார்த்தை  இவ்வளவு இறுக்கமாக காட்டியிருக்க தேவையில்லை. பையா படத்திற்கு பிறகு நீண்ட நெடுஞ்சாலைகளில் தட தடவென பயணிக்கிற கதை!

இப்பொழுதெல்லாம் படம் தென்னிந்தியாவிற்கே சேர்த்து தான் பலரும் எடுப்பதால், படத்தில் எல்லா மொழிகளும் பேசுகிறார்கள்.  இப்பொழுதெல்லாம் குடி, பார் வராத படங்களே இல்லை. இந்த படமும் அப்படியே!

கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் பெண்ணுக்கு, 18 வயது முடிந்துவிட்டால் மேஜர் என படம் முழுவதும் பேசுவது பரதேசி படத்தில் 48 நாட்கள் நடத்தி கூட்டி போவது போல பெரிய ஓட்டை.

ஒருமுறை பார்க்கலாம். பாருங்கள்.

****

Thursday, April 4, 2013

கல்யாண பரிசு - சில சுவாரசிய குறிப்புகள்!

கல்யாணப் பத்திரிக்கையை கையில் வாங்கிவிட்டால், பரிசு பொருள் என்ன கொடுப்பது என்பது பலருடைய மனமும் யோசிக்கும்.  நம்முடைய திருமணங்கள் சடங்கு, சம்பிரதாயங்கள் நிறைந்தவை. பகட்டானவை.   பரிசு பொருள்கள் பெரும்பாலும் நம் திருமணங்களில் பணம் தான் பிரதானம்.  இரண்டாவது பொருள்கள். வீட்டிற்கு பயன்படக்கூடிய பொருட்கள்; அலங்கார பொருட்கள்.

பணத்தைப் பொறுத்தவரை வட்டியில்லா கடன் தான்.  நீ 100 செய்தால் நான் 125 செய்வேன். அவ்வளவு தான்.  என்னைக் கேட்டால் நம் சமூகத்திற்கு புத்தகங்களை பரிசாக தருவது ஆக சிறந்த வழிமுறை. பணமாக கொடுக்க கூடாது.  புத்தகம் தான் கொடுக்க வேண்டும் என முடிவு எடுத்து, அமுல்படுத்திய பொழுது, அதில் சில அனுபவங்கள் கிடைத்தன. பகிர்ந்துகொள்ளலாமே என நினைத்து இந்த பதிவு!

****

நண்பனின் அலுவலக நண்பனுக்கு திருமணம். ஒருமுறை ஊரெல்லாம் சுற்றி விட்டு, மதியம் 2 மணியளவில் போய், கையை மட்டும் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து கிளம்பினோம்.  மொய் அல்லது பரிசு பொருளோ கொடுக்காததால், தன்னை அவமானப்படுத்திவிட்டதாக சிலநாட்கள் பேசவே இல்லை.  பிறகு, கொள்கையை சொல்லி, புத்தகம் தந்து சமாதானபடுத்தினோம்.

****

உடன் பணிபுரியும் நண்பருக்கு திருமணம். புத்தகம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். அன்றிரவு, நான் கொடுத்த புத்தகத்தை சீரியசாக தேடியிருக்கிறார்.  வீட்டில் உள்ள சொந்தங்கள் என்ன தேடுகிறாய்? எனக் கேட்டதற்கு, புத்தகம் என்றிருக்கிறார்.  நமுட்டு சிரிப்பு சிரித்திருக்கிறார்கள்.  அந்த புத்தகம் ஆனந்த விகடன் வெளியீடான "ரொமான்ஸ் ரகசியங்கள்"

****

நண்பர்கள் சிலர் "புத்தகங்கள் மட்டுமே பரிசாக வாங்கப்படும்" என பத்திரிக்கையிலேயே போட்டார்கள்.  சோதிட புத்தகம், ஆன்மீக புத்தகம் என வந்துவிடுமே என்ற கவலையில், முற்போக்கான நூல்கள், இலக்கியங்கள் என  புத்தக கடை விற்பவரை ஒன்றை மண்டப வாசலிலேயே ஏற்பாடு செய்து செய்தோம்.

*****

நண்பனுக்கு மணமகனின் தோழனாக மேடையில் நின்றுக்கொண்டிருந்தேன். வாசலில் இருந்து புத்தகம் வாங்கி வந்த பல பெருசுகள் தன் வாழ்க்கையிலேயே முதல்முறையாக புத்தகத்தை மொய்யாக தருகிறேன் என சந்தோசமாய் சொன்னார்கள்.

*****

கொஞ்சம் ஆர்வக்கோளாறில் சிலரிடம் உங்களுக்கு பிடித்த புத்தகம் சொல்லுங்கள். வாங்கித்தருகிறேன் என கேட்டு, அந்த புத்தகத்திற்கு நாயாய், பேயாய் அலைந்த கதையும் உண்டு. அதற்கு பிறகு யாரிடமும் அப்படி கேட்பதில்லை! :)

*****

புத்தகம் வாங்க நேரமில்லாமல் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, ஒரு வாரம் கழித்து உங்களுக்கு ஒரு சிறப்பு புத்தகம் தரலாம் என தேடினேன். கிடைக்கவில்லை.  அலைந்து திரிந்து வாங்க இவ்வளவு நாளாயிருச்சு என 'பில்டப்' பண்ணி தந்ததும் உண்டு. :)

*****

நண்பரில் திருமணத்தில் "புத்தகங்கள் மட்டுமே வாங்கப்படும். மற்ற பொருட்கள் வாங்கப்படாது" என சீரியசாக விளக்கி, புத்தகங்களை பெற்று வீட்டுக்கு மாலை வீடு வந்து சேர்ந்தோம்.  மூன்று 'நைட் லேம்ப்கள்' எங்களுக்காக காத்திருந்தன. வீட்டில் வந்து நண்பனின் அம்மாவிடம் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். :)

*****

புத்தகம் தருகிறோம். படிக்கிறார்களா என சந்தேகம் வருவதுண்டு.  கல்யாணம் முடிந்து இரண்டு மாதம் கழித்து கேட்கும் பொழுது புத்தகத்திலிருந்து சில பகுதிகளை குறிப்பிட்டு நல்ல புத்தகம் என சொல்வார்கள்.  அப்பாடா! படிக்கிறார்கள் என நிம்மதி வந்தது.

*****

சமீப காலங்களில் சிறிது மாற்றம். படிப்பது என்பது குறைந்து போய் கேட்பது; பார்ப்பது அதிகமாகி வருவதால், நல்ல படங்களை; நல்ல உரைகளை புத்தகத்தோடு பரிசாக தருகிறேன். 

****

நண்பர் தன் அனுபவம் ஒன்றை பகிர்ந்தார்.  அவரின் நண்பர் ஒரு புகைப்படக்காரர்.  நல்லவர்.  அப்பாவியும் கூட!  கல்யாணப் பத்திரிக்கையில் "புத்தகங்கள் மட்டும் பரிசாக பெறப்படும்" என்பதை ஆ.விகடன், குமுதம், குங்குமம் என வாங்கி தந்தார்.

அப்பொழுதே அவரிடம் புரியவைத்திருக்கவேண்டும். புரிய வைக்காததின் விளைவு. இன்னொரு நண்பரின் திருமணத்திற்கு, "நூல்கள் மட்டுமே பரிசாக பெறப்படும்" என்பதை பார்த்துவிட்டு, சீரியசாக நூல்கண்டுகளை நிறைய வாங்கி பரிசாக தந்தார்.

விழுந்து விழுந்து சிரித்தேன்.

****
அடுத்த வாரம் இன்னும் இரண்டு திருமணங்கள். இன்னும் எழுதுவேன். :)

****