Thursday, May 29, 2014

X Men – கடந்த காலத்தின் எதிர்காலம்





X Men days of future past - எக்ஸ்மேன் படங்களில் ஏழாவது படம் என்கிறார்கள்.  எல்லா படங்களையும் பார்க்காவிட்டாலும், சில படங்களைப் பார்த்திருக்கிறேன்.  மியூட்டண்ட்கள் சுவாரசியமான ஆட்கள்.  ஒவ்வொருவரும் வித்தியாசமான திறமை கொண்டவர்கள்.

இந்த படத்தின் கதை 2013ல் நடக்கிறது.  ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த செண்டினல்கள்  என்கிற இயந்திர ஆட்கள், மியூட்டண்ட்களை தேடித்தேடி அழிக்கின்றனர்.

மியூட்டண்ட்களில் எதிரும் புதிருமாய் இரண்டு குழுக்களாக அடித்துக்கொள்ளும் சார்லஸ் சேவியரும், மேக்னீடோவும்  மீதியுள்ளவர்களையாவது காக்க ஒன்றிணைகிறார்கள்  1973ல் ஒரு விஞ்ஞானியை மிஸ்ட்டீக் என்ற மியூட்டண்ட் கொன்று, மாட்டிக்கொள்ள, அவளை வைத்து, ஆராய்ச்சி செய்து தான் செண்டினல்களை மேலும் வலுப்படுத்தியிருக்கிறார்கள். அதனால், 1973ம் ஆண்டு காலத்திற்கு போய், அந்த விஞ்ஞானியின் கொலையை தடுத்துவிட்டால், செண்டினல்களின் உருவாக்கத்தையே தடுத்துவிடலாம் என திட்டம் போடுகிறார்கள்.

இதற்காக, தனித்திறமை கொண்ட ஒரு மியூட்டண்டால், ஒருவரைத்தான் அனுப்பமுடியும். அதுவும் நினைவுகளை தான் அனுப்பமுடியும் என்ற நிபந்தனையில், அதற்கு உடல், மனம் தகுதியாயுள்ள வால்வுரீனை (Volverine) அனுப்புகிறார்கள். செண்டினல்கள் அவர்கள் தற்பொழுது இருக்கும் இடத்தை தாக்குதல் செய்வதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கின்றன. அதற்குள் செய்துமுடிக்கவேண்டும்.

1973ம் ஆண்டிற்குள் போனால், சேவியரும், மக்னீடோவும் சில, பல காரணங்களால் எதிரும் புதிருமாய் இருக்கிறார்கள்.  சேவியர் ஒரு தாக்குதலினால் தனது திறமையை இழந்து நிற்கிறார்.  மேக்னீடோவோ அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப்.கென்னடியை கொன்ற சதி வழக்கில் மிக பாதுகாப்பாக அடைத்து வைத்திருக்கிறார்கள்.   மிஸ்டீக்கோ யார் சொன்னாலும் கேட்காமல், விஞ்ஞானியை போட்டுத்தள்ளுவதிலேயே குறியாய் இருக்கிறார். எல்லா சிக்கல்களையும் எதிர்கொண்டு, விஞ்ஞானியின் கொலையை தடுத்து நிறுத்தினார்களா? எஞ்சியிருக்கும் சில மியூட்டண்ட்களையாவது காப்பாற்றினார்களா என்பது மிச்ச கதை!
***

எக்ஸ் மேன் படங்களை விட்டுவிட்டு பார்த்தால் கூட படம் புரிகிறது.  எதுவும் புரியாமல் போய், கல்லா கட்டுவதில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதில் எப்பொழுதும் கவனமாக இருக்கிறார்கள்.

படத்தில் வரும் ’காலப்பயணம்’ எப்பொழுதும் சுவாரசியம் தான். எல்லோருக்கும் வாழ்வில், தன் கடந்தகால வாழ்வில் சில விசயங்களை மாற்ற வாய்ப்பு இருந்தால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்டால், பல சுவாரசியமான பதில்கள் நிச்சயம் கிடைக்கும்.

மியூட்டண்ட்கள் எப்பொழுதும் சுவாரசியமானவர்கள்.  இந்த படத்தில் கூட ‘மாயி’ படத்தில் வரும் ‘மின்னல்’ பாத்திரம் போல ஒரு பாத்திரம் உண்டு. மேக்னீடோவை காப்பாற்றுவது அசத்தல்.

படத்தில் வரும் மிஸ்டீக்காக வரும் ஜெனிபர் லாரன்ஸ் நன்றாக செய்திருக்கிறார். பொதுவாக ‘அழகாக’ இருப்பவர்கள் நடிப்பதில்லை என்ற கருத்தை உடைத்திருக்கிறார்.

மற்றபடி, சென்டிமெண்ட், ஆக்சன் எல்லாம் அளவோடு நகர்கின்றன. படம் முழுவதும் ஆக்சன் எதிர்பார்த்து போனால் கொஞ்சம் ஏமாற்றம் தான் மிஞ்சம்!

Sunday, May 25, 2014

ஒரு திருமணம் – சில குறிப்புகள்




தாலி, சடங்கு சம்பிரதாயம், வரதட்சணை, மொய் இன்னும் பல விசயங்களும் இல்லை என சொல்லி, ஒரு திருமணத்திற்கு நண்பர் அழைத்து போயிருந்தார்.

’புரட்சிகர மணவிழா’ என பேனர் வரவேற்றது.  மாப்பிள்ளை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்தவர் என கேட்டறிந்தேன்.

பல திருமணங்களில் குத்தாட்ட பாடல்களை கேட்டும், ஆடியும் பார்த்திருந்த எனக்கு, மண்டபத்தில் தாலி செண்டிமென்ட், ஆணாதிக்கம் குறித்த பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர்.  புதிதாக இருந்தன.

மேக்கப் இல்லை; நகை இல்லை; சாதாரண உடைகளில் இருந்தனர். இவ்வளவு எளிமையான மணமக்களை எங்கும் பார்த்ததில்லை.  மணமக்கள் அருகேயே பெற்றோர்களும் அமர்ந்திருந்தனர்.

வேறு வேறு சாதி பிரிவைச் சேர்ந்த, காதல் கொண்ட இருவர் தங்கள் குடும்பத்துடன் போராடி, ஏற்பாடு செய்த திருமணம் என பேச்சில் புரிந்தது!

வாழ்த்திப் பேசியவர்கள் எல்லாம் கடந்த காலங்களில் இதே மாதிரி திருமணம் முடித்தவர்கள் என அறிய முடிந்தது!

அருகில் இருந்த அறுபது வயது பெரியவர் “தாலியைப் பத்தி இவ்வளவு பேசுறாங்க!  நல்ல நேரத்தில் தாலி கட்டனும்னு தோணலையே” என்றார். சிரித்துக்கொண்டேன்.

”தங்களுக்குள் எழும் பிரச்சனைகளை ஜனநாயக முறையில் தீர்த்துக்கொள்வோம், பிற்போக்குத்தனங்களை கடைப்பிடிக்கமாட்டோம், சமூக மாற்றத்திற்காக இறுதிவரை போராடுவோம்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  கையெழுத்திட்டனர்.  பெற்றோர்கள் மாலை எடுத்துதர மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டனர்.  மணமக்கள் வாழ்க! என குரல் கொடுத்தனர். உற்சாகமாய் கைகளை தட்டினர் அவ்வளவுதான். திருமணம் முடிந்தது. மணமக்கள் வந்த அனைவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

நுழைவாசல் அருகே புத்தக கடை ஒன்று போட்டிருந்தார்கள்.  நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் என அனைத்தும் முற்போக்கான நூல்கள். திருமணங்களில் புத்தகங்களை பரிசாக தரவேண்டும் என்பது எனது ஆசை.  வந்தவர்கள் புத்தகங்களை வாங்குவதும், மணமக்களுக்கு தருவதுமாய் இருந்தார்கள்.

ரெம்ப நாளைக்குப் பிறகு மனத்திருப்தியுடன் ஒரு சுவையான சாப்பாடு சாப்பிட்டேன்.

’உலகின் அழகிய மணமக்கள்’ என்று எங்கோ படித்த வாசகம் நினைவுக்கு வந்தது. இவர்கள் தான் அவர்கள் என நினைத்துக்கொண்டேன். 

மணமக்கள் வாழ்க!

Wednesday, May 7, 2014

The Mummy 1999 – ஒரு பார்வை




நேற்று எதைச்சையாய் ஒரு தமிழ் சானலில் தமிழில் ‘தி மம்மி’ ஓடிக்கொண்டிருந்தது. ’மம்மியின்’ நினைவலைகள் எழுந்து, டிவிடி வாங்கிப் பார்த்தேன்.

படம் சம்பந்தமாக யாராவது எழுதியிருக்கிறீர்களா என தேடினால், யாருமே எழுதவில்லை.  மந்திரம், மாயாஜாலம், பரபர ஆக்சன் என துவக்கம் முதல் இறுதிவரை அட்டசாகமாக செல்லும் ஒரு படத்தைப் பற்றிய யாரும் எழுதவில்லை என்பதே ஆச்சரியமாய் இருந்தது!
*****

1290 கி.மு காலத்தில் பாரோ மன்னனின் ஆசைநாயகிக்கும் (பதம் சரியா)  அரசவை குருவான Imhotepக்கும் காதல்.  மன்னனுக்கு தெரிந்துவிடுகிறது.  அவள் தற்கொலை செய்துசெய்கிறாள். துரோகத்திற்காக, கொடூர தண்டனையாக குருவை உயிரோடு பெட்டியில் வைத்து பூட்டி, புதைத்துவிடுகிறார்கள்.

மீண்டும் 3000 ஆண்டுகளுக்கு பிறகு, 1930களில் கதை துவங்குகிறது.  Imhotep புதைத்த இடத்தில் பாரோ மன்னனின் புதையலும், இன்னும் சில ஆச்சரியமான விசயங்களும் இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. நாயகன், நாயகி என ஒரு குழுவும், அமெரிக்கர்கள் ஒரு குழுவும் என  இரண்டு குழுக்கள் பல்வேறு சிரமங்களை கடந்து அந்த இடத்தை வந்து சேர்கிறார்கள்.

புதையலை தேடும் முயற்சியில், உயிர்த்தெழும் புத்தகத்தை வாசித்து, யாராவது தன்னை எழுப்பமாட்டார்களா என வெறியுடன் இருக்கும் Imhotepயை எழுப்பிவிடுகிறார்கள்.  இறந்தவர்களை எழுப்பியும், உயிரோடு இருப்பவர்களை வசியப்படுத்திவிடுகிறான்.  Imhotep எழுந்துவிடாமல் இருக்க பாதுகாக்கும் குழுவோடு, நாயகன் குழுவும் இணைந்து பல்வேறு பரபர காட்சிகளுக்கு பிறகு, கொல்வதற்கான புத்தகத்தை வாசித்து இறுதியில் வில்லனை கதம் கதம் செய்கிறார்கள். ’மீண்டும் வருவேன்’ என இரண்டாம் பாகத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு பாதாள உலகத்திற்கு போய்விடுகிறான்.
*****

Brendan Fraser, Rachel Weisz இருவரும் சுறுசுறுப்பான, களையான நல்ல ஜோடிகள். வில்லனும் நல்ல தேர்வு. 

எழுப்புவதற்கு கருப்பு புத்தகமும், கொல்வதற்கு தங்க புத்தகமும் நல்ல கற்பனை.  வில்லனின் அடியாட்படைகளாக வரும் மம்மிகளும், அதிலும் குறிப்பாக தேர்ச்சி பெற்ற மம்மி வீரர்களும் அருமை. (நம் காலத்தில் வாழும் ’மம்மி’ கூட ராஜீவ்காந்தியின் ரத்தம் பட்டு தான் உயிர்த்தெழுந்தது என்பது தானே உண்மை!)

துவக்கம் முதல் இறுதிவரை தொய்வேயில்லாமல் செல்லும் அருமையான திரைக்கதை. Vanhelsing-யை எடுத்த இயக்குநர் தான் இதன் இயக்குநரும்! எப்பொழுதும் இரண்டாவது பாகம் வெற்றிபெறுவதில்லை. ஆனால், இதன் இரண்டாம் பாகம், முதல்பாகத்தை விட விறுவிறுப்பான படம்! படம் வெளிவந்த சமயத்தில் இரண்டு, மூன்று முறை பார்த்தப்படம் இது!

தேடிப்பார்க்கும் பொழுது, ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கும் மம்மி என பல படங்கள் வெளியாகியிருக்கின்றன. தொழில்நுட்பம் நன்றாக வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் இந்த படம் அசத்தலானது.

கோடைகாலத்தில் குழந்தைகளோடு பார்க்ககூடிய ஜாலியான படம். பாருங்கள்.