Thursday, March 31, 2011

மனிதர்கள் 1 - பாண்டியம்மாள்!


அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்த பொழுது, அவள் பாவடை தாவணியில் பத்தாவது படித்துக்கொண்டிருந்தாள். தங்கை ஆறாவது படித்தாள். அப்பாவுக்கு பெயிண்டர் வேலை. தொடர்ச்சியாய் வேலையும் இருக்காது. அப்படியே வேலை இருந்தாலும், பொறுப்பாய் இருக்க தெரியாத மனுசன்.

குடும்பத்தை தன் தோளில் தாங்க வேண்டிய நெருக்கடி நிலை. படிப்பை விட்டுவிட்டு, வீட்டு வேலைக்கு போனாள். போன இடத்தில், அவளின் நிலை அறிந்து, படிப்பதற்கு உற்சாகம் தந்ததில், தபால் வழியில் இரண்டு ஆண்டுகளில் 12ம் வகுப்பு தேறினாள்.

இடையிடையே கற்றுத் தேர்ந்த டைப்பிங், டைப்பிஸ்டாக புரமோஷன் ஆனாள். தபால் வழியில் பி.ஏ. எழுத துவங்கினாள். சமையல், வீட்டு நிர்வாகம், டைப்பிஸ்ட் வேலை என்பதற்கு மத்தியில் அப்பா, தங்கை என இரு 'பிள்ளைகளையும்' கவனித்துக்கொண்டாள். இதற்கிடையில், 10 வரை படித்த தங்கைக்கு, படிப்பில் ஆர்வம் இல்லாது போக, அவளும் வேலைக்கு போக ஆரம்பித்தாள்.

வாழ்க்கை ஓட்டத்தில் தன் திருமணத்தை மறந்திருந்தாள். இப்படி சொல்லலாம். சாத்தியமில்லை என்பதால் மறந்திருந்தாள். பழகியவர்கள் தான் திருமணத்தைப் பற்றி பேசி, சங்கடப்படுத்தினார்கள். பேச வேண்டிய அப்பா திருமணத்தைப் பற்றி பேசவேயில்லை. தன் திருமண வாழ்க்கையாவது மாற்றத்தை தந்து விடாதா என்ற எண்ணத்தில், தன் திருமணத்திற்கு சிறுக சிறுக சேமித்தாள்.

மாப்பிள்ளை தேடி, வரதட்சணை பேரத்தில் சிக்கி, சுழன்று ஒருவழியாய் திருமணம் முடிந்த பொழுது, வயது 28 ஐ கடந்திருந்தது. வந்த மாப்பிள்ளையாவது சுமைகளை பகிர்ந்து, ஆறுதல் தருவான் என எதிர்பார்த்தால், கவனித்து பராமரிக்க வேண்டிய ஒரு இன்னொரு 'பிள்ளையாக' தான் வந்து சேர்ந்தான். பக்குவப்படுத்தி, ஒழுங்குப்படுத்தி, ஒரு நிதானத்துக்கு கொண்டு வருவதற்குள், புதிதாய் இரண்டு குழந்தைகள் வந்திருந்தார்கள்.

இதற்கிடையில், தன் நகையை தங்கைக்கு போட்டு, பொறுப்பாய் திருமணம் முடித்து வைத்தால், தங்கை அம்மாவிடம் கூடுதல் வரதட்சணைக்கு சண்டையிடும் பெண் போல சண்டையிட்டாள். எதார்த்த நிலை புரியாமல், தங்கை இப்படி நடந்து கொள்கிறாளே என சொல்லி, சொல்லி புலம்ப மட்டும் தான் அவளால் முடிந்தது.

இப்பொழுது ஒரு சிறிய ஜெராக்ஸ் மற்றும் டைப்பிங் கடையை உருவாக்கி, பராமரித்து வருகிறாள். நாற்பதின் துவக்கத்தில் இருப்பதால், முதுகு வலியும், கால் வலியும் பாடாய் படுத்துவாய் புலம்புகிறாள். அவளுடைய அப்பா கடந்த ஆறு மாதங்களாக காசநோயினால் அவதிப்பட்டு, அவளுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு, ஒருவழியாக கண்மூடினார்.

அவளுடைய போராட்ட வாழ்வில், கடவுள் நம்பிக்கையை 80% தொலைத்திருந்தாள். நட்பாய் பழகியதில் மீதி 20%த்தை என் அக்கா வாங்கிவிட்டாள். எப்பொழுதாவது நினைப்பதுண்டு 'வாங்கி இருக்க கூடாதோ' என!

கடந்த மாதம், அப்பா இறந்த துக்கம் விசாரித்து விட்டு, "பசங்களை (இரண்டு பெண் குழந்தைகள்) அழைத்து கொண்டு, கோடை விடுமுறையில் நாலு நாள் சென்னை வாருங்கள்" என அக்கா சொன்னதை சொன்னேன். "குழந்தைகள் வளர்ந்துவிட்டால், சிரமம் இருக்காது. எளிதாய் வந்துவிடலாம்" என்றார். சொல்லும் பொழுது, அவள் கண்களில் சில நம்பிக்கை தரும் ஏணிகளும், அதைவிட பெரிய பாம்புகளும் தெரிந்தன.

தன் வாழ்வில் தன்னை தாங்குகிற ஒரு தோள் தேடி அலைந்தாள். ஆனால், 'பிள்ளைகளாக' தான் வந்து கொண்டே இருந்தார்கள். புதிய பிள்ளைகளும் இனியும் வந்து கொண்டே இருப்பார்கள்.

சோர்வாய், தளர்வாய் இருக்கும் பொழுது இவரைத் தான் நினைத்து கொள்கிறேன். பெரிதாய் தோன்றிய பிரச்சனை எல்லாம் மிகச் சிறியதாய் தெரியும்.

****

Friday, March 25, 2011

மனிதர்கள்!


வாழ்க்கை ஓட்டத்தில் பல மனிதர்களை கடந்து வருகிறோம். ஒவ்வொருவரும் மேலோட்டமாகமோ, அழுத்தமாகவோ சில தடங்களை நம்மிடம் விட்டுவிட்டு செல்கின்றனர்.

மனிதர்களின் நம்பிக்கை, செயல்கள் எல்லாம் சுவாரசியமானவை. மனிதர்களை கவனித்தால், நாம் நிறைய பெறலாம். சென்னை மாதிரி பெருநகரத்தில் மனிதர்களை உற்று நோக்குவதற்கு பொறுமையோ, அசை போடுவதற்கு நேரமோ வாய்ப்பதில்லை அல்லது அதற்கெல்லாம் நாம் மெனக்கெடுவதில்லை.

ஆகையால், என்னைப் பாதித்த, கவர்ந்த, சிந்திக்க வைத்த சில மனிதர்களை மெல்ல அசைபோட்டு வருகிற பதிவுகளில் உங்களுடன் பகிர்கிறேன். பகிர்வதற்கு முன்பு வரை அது என்னுடைய அனுபவம். பகிர்ந்த பின்பு, அது நம்முடைய அனுபவமாகிவிடுகிறது.

இப்படி பகிர்வதன் மூலம் என் வாழ்க்கையை ஒருமுறை திரும்பி பார்க்க வைக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

ஒரு பதிவர் பொறுப்புடன் எழுதுவதற்கு சக பதிவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும் முக்கிய பங்குண்டு என கருதுகிறவன் நான். மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன் பேர்வழி என மொக்கை போட்டேன் என்றால், இரக்கமே இல்லாமல், கறாராக கண்டியுங்கள். மாற்றிக்கொள்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல. மற்றவர்களுக்கும் நீங்கள் செய்யலாம்.

உங்களுடைய கருத்துக்களை வரவேற்கிறேன்.

- நொந்தகுமாரன்.

Saturday, March 19, 2011

நொந்தகுமாரனின் பக்கங்கள் - தானியங்கி!


சில மாதங்களுக்கு பிறகு வண்டியை சர்வீஸ்க்கு விட்டுவிட்டதால், இன்று பேருந்திற்காக காத்திருந்தேன். தானியங்கி கதவு திறந்து, ஏறியதும் மூடிக்கொண்டன. பயணிக்கையில், மக்கள் ஏறிய பிறகு ஒவ்வொரு முறை மூடும்பொழுதும், சில நினைவுகள் திறந்துகொண்டன.

***

சில ஆண்டுகளுக்கு முன்பு....

8.30 காலை. புள்ளதாய்ச்சி பெண் போல, சிரமப்பட்டு அந்த பேருந்து கொஞ்சம் சாய்ந்து, சாலையில் மிதந்து வந்தது. வேலைக்கு செல்லும் அவசரம். மக்கள் மொய்த்தார்கள். கிளம்பி வேகமெடுத்து ஓடிய பேருந்தில், தொங்கி கொண்டிருந்தவர்களில் ஒருவர் தடுமாறி விழுந்தார். கருணையே பார்க்காமல் பேருந்து ஏறி இறங்கியது. அடுத்த நாள் செய்தித்தாளில் விழுந்தவருக்கு இரண்டு குழந்தைகள் என படித்த பொழுது, பேருந்தைப் பார்த்து முதன் முதலில் பயம் வந்தது.

****

பக்கத்து வீட்டு கனத்த அம்மா. ஒவ்வொரு அமாவாசை அன்றும் வீட்டை விட்டு வெளியே வராமல், நாள் முழுவதும் சத்தம் போட்டு அழுது, தவிக்கும். பேருந்து விபத்தில் அவருடைய பையன் இறந்துபோய் இரண்டு வருடங்களாகின்றன. அவன் இறந்த நாள் அமாவாசை.

****

கடந்த காலங்களில் எவ்வளவு மனித உயிர்களை இப்படி கோரமாய் பலிவாங்கியிருக்கின்றன. எத்தனை குடும்பங்கள் தங்கள் சொந்தங்களை இழந்து தவித்திருக்கின்றன. சில ஹாலிவுட் படங்களில், பல பத்தாண்டுகளுக்கு முன்பே, தானியங்கி கதவு கொண்டு இயங்கும் பேருந்துகளை பார்க்கமுடிகிறது. அப்படியானால், இந்தியாவில் ஏன் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, அரசு தானியங்கி கதவுகள் கொண்ட பேருந்துகளை இயக்க ஆரம்பித்தது? அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் பயன்படுத்துவதால் தான் இத்தனை அலட்சியமா?

இன்றைக்கும் மெட்ரோ ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிவதும், விழுந்து சாவதும் தொடர்கின்றன. தானியங்கி கதவுகள் எப்பொழுது வரப்போகிறதோ? அடுத்த நூற்றாண்டிலா?

Saturday, March 12, 2011

5 ஸ்டார் - ஒரு திரைப் பார்வை!


அதென்ன பார்வை? விமர்சனம் எழுதுகிற அளவுக்கு இன்னும் வளர்ந்துடலை! பார்வையும் கூர்மையடையலை! அப்புறம் எதுக்கு பில்டப்? அது தான் திரைப்பார்வை.

கடந்த வாரத்தில் ராஜ் டிவியில் ஒளிபரப்பினார்கள். மணிரத்னம் தயாரிப்பில் சுசிகணேசனின் இரண்டாம் படம். முதல் படம் விரும்புகிறேன்.

கதை எனப் பார்த்தால், இரு பெண்கள், மூவர் ஆண்கள். ஐவரும் நண்பர்கள். தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கிறார்கள். அதில் ஒருவனின் அப்பா மிகவும் கண்டிப்பானவர். விருப்பமில்லாமலேயே தன் தங்கையின் மகளை தன் மகனுக்கு மணமுடித்துவிடுகிறார். படிப்பு முடிந்ததும் ஊருக்கு திரும்பாமல், காணாமல் போய்விடுகிறார்.

சில ஆண்டுகள் நகர்கிறது. மீதி உள்ள இருவரில், ஒருவர் ரயில் பயணத்தில் சக பயணியாய் ஒரு பெண்ணைச் சந்திக்க, காதல் வயப்படுகிறார். தொடர்ச்சியான சந்திப்பில், தன் காதலை சொல்லி, திருமணம் குறித்து பேச, போகும் பொழுது தான் காணாமல் போன தன் நண்பரின் மனைவி என உண்மை தெரிகிறது.

தேடத் துவங்குகிறார்கள். இதற்கிடையில், மன உளைச்சலில் அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். தொடர்ச்சியான தேடலில் கண்டுபிடிக்கிறார்கள். ஜெர்மனியில் மனைவி, குழந்தை என நண்பன் செட்டிலாகி இருக்கிறான். அழுது வடிவதை நிறுத்திவிட்டு, அவன் கட்டிய தாலியை தூக்கி போட்டுவிட்டு, புதிய வாழ்க்கை நோக்கி நகர்வதாக படம் முடியும்.

****
ஒரு வழியாக கதையை சொல்லிவிட்டேன். படத்தில் தந்தையாக வரும் (உதிரி பூக்கள்) விஜயனைத் தவிர, மற்ற அனைவரும் புதியவர்கள். இயக்குநர் சுசி கணேசனுக்கு இரண்டாம்படம் தான். இந்த இரண்டுமே நமக்கு தெரியாமல், படம் நகரும். பெண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. தன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் அறிவு உண்டு என பதிவு செய்யும் படம். வழக்கமான காதல், அடிதடி என இல்லாமல், நட்பு, கொஞ்சம் காதல், அப்பா, மகன் உறவு சிக்கல் என மனித உணர்வுகளை சொல்லும் படம்.

பிடித்த இடங்களில் ஒரு இடம்.

தன் மகனின் மேல் நிறைய அன்பு கொண்ட அப்பா, செல்லம் கொடுத்தால், பிள்ளை கெட்டுப்போவான் என அன்பை காட்டாமல், அதிகாரத்துடன், கண்டிப்புடன் வளர்க்கிறார். விருப்பமில்லாமல் திருமணத்தை முடித்து, ஊருக்கு வழியனுப்பும் பொழுது, "போய் வா! நீ புது அப்பாவை பார்ப்ப!" என்பார். அதற்கு பிறகு வாழ்வில் இருவரும் சந்திக்கவே மாட்டார்கள்.

என் வாழ்வில் கூட அப்படி நிகழ்ந்தது. அப்பாவிடம் குடிப்பழக்கம் இருந்தது. அப்பாவிடம் இருந்த ஒரே கெட்டபழக்கம் அதுதான். மற்றபடி பரமசாது. அவரிடம் பல நாள்கள் குடிப்பழக்கதை நிறுத்த சொல்லி, சண்டையிட்டிருக்கிறேன். பல நாள்கள் பேசாமல் இருந்திருக்கிறேன். ஒருநாள், திடீரென கடுமையான தலைவலி என்றார். கோமாவில் விழுந்தவர், மூளையில் ரத்தம் கசிந்து, நினைவு திரும்பாமலேயே இறந்துபோனார். நிறைய நாட்கள் உயிருடன் வாழ்வார் என்ற நம்பிக்கையில் சண்டையிட்டே வாழ்ந்துவிட்டோமே என எண்ணி நிறைய வருத்தப்பட்டிருக்கிறேன்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஒரு இடத்தில் சொல்வார். "அன்பு இருந்தால் நீ காட்ட வேண்டும். திறமை இருந்தால் நீ நிரூபித்தாக வேண்டும். உள்ளுக்குள்ளேயே வைத்திருந்தால், யார் அறிவார் அதை?" இந்த படம் இந்த வரிகளை அழுத்தந்திருத்தமாக மனதில் பதிந்த படம். பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

****

பின்குறிப்பு : விரும்புகிறேன் மற்றும் 5 ஸ்டார் படம் பாருங்கள். கந்தசாமியையும் பாருங்கள். எப்படி இருந்த மனுசன் இப்படி வீணாப் போயிட்டாரே! என நிச்சயம் வருந்துவீர்கள்.

Tuesday, March 8, 2011

'மகளிர் தினம்' வாழ்த்துக்கள்!


மார்ச் 8 - உலக பெண்கள் தினம். வரலாற்றில் மே தினத்திற்கு உள்ள சிறப்பை போலவே, 'பெண்கள் தினம்'த்திற்கும் வரலாற்று சிறப்பு இருக்கிறது.

தொழிலாளர்கள் மே தினத்தை தங்களுடைய உரிமைகளுக்காக போராடும் தினமாக கடைப்பிடிக்க வேண்டியதை, கொண்டாட்ட தினமாக மடை மாற்றினார்களோ, அதே போல, தன் சரக்குகளை விற்றுத் தீர்ப்பதற்காக பல நாள்களை கண்டுபிடித்து வைத்திருப்பது போல 'மகளிர் தினம்' த்தையும் அந்த பட்டியலில் முதலாளித்துவம் வெற்றிகரமாக மாற்றி இருக்கிறது.

இன்று இராஜஸ்தானில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என அரசு அறிவித்திருக்கிறது. மேலும் அந்த அறிக்கையில் பெண் சிசுக்கொலை செய்யக்கூடாது என்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.

சமத்துவம், கல்வி, வேலை, சுதந்திரம், சமூக பாதுகாப்பு என பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்காக நீண்ட நெடிய போராட்டத்தை நடத்த வேண்டிய நேரமிது. இந்நாளில் போராடுகிற அனைத்து பெண்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.