Tuesday, December 29, 2009

இரண்டு உலகம் - புத்தாண்டு குதூகலமும்! புதிய நெருக்கடிகளும்!


மும்பையில் ஒரு நட்சத்திர விடுதி தனது வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த ஆட்டம் ஆட பிபாசா பாசுவை (என்கிற அழகிய பிசாசுவை - இப்படித்தான் ஆனந்தவிகடனில் எழுதுகிறார்கள்) ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம். இரண்டு கோடி சன்மானம். கடந்த ஆண்டில் தீவிரவாதிகள் நட்சத்திர விடுதிகளை தாக்கியதில், கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். இந்த முறை பழைய உற்சாகம் துவங்கிவிட்டது.

சென்னையில் கூட நம்பர் ஒன்னாக (!) முன்னேறி கொண்டிருக்கும் நம்ம தமன்னாவை ஒரு நட்சத்திர விடுதி ஒரு ஆட்டம் போட கோடியில் கூப்பிட்டார்களாம். என்ன நடந்ததோ தெரியவில்லை. சொந்த ஊருக்கு போகிறேன் என சொல்லிவிட்டாராம்.

புதிய தாராளவாத கொள்கைகளால் செழிப்படைந்த ஒரு கும்பல் புத்தாண்டை வரவேற்க குதூகலத்துடன் தயாராகி விட்டனர். புதிய வகை கார்கள், புதிய வகை செல்கள் என சந்தையில் புதிய ஆண்டில் விற்க தயாராக நிற்கின்றன. பெருநகரங்களிலும், நகரங்களிலும் இருபத்தி நாலு மணி நேரமும் வாயாடுகிற பண்பலைகள் புதிய ஆண்டை வரவேற்க எல்லோரையும் உற்சாகப்படுத்தி கொண்டிருக்கின்றன. பணபலை வாயாடன்கள்/வாயாடிகள் குரலில் என்ன ஒரு உற்சாகம், குதூகலம். இதெல்லாம் ஒரு புறம்.

மற்றொரு புறம், கடந்த மாதத்தில் ரூ. 36 க்கு விற்ற பொன்னி அரிசி இந்த மாதம் ரூ. 40 ஆகிவிட்டது. எண்ணெய், பருப்பு என அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் எங்கோயோ எகிறி நிற்கிறது.


ஆனால், தொழிலாளர்களுக்கு மட்டும் சம்பளம் உயர மறுக்கிறது. பொருளாதார மந்தத்தை காரணம் காட்டி போனஸ் இல்லையென்றார்கள். சம்பள உயர்வு வெட்டு என்றார்கள். உற்பத்தி சுருங்கிவிட்டதாம்.

ஏண்டா! உற்பத்தி நன்றாக இருந்து லாபம் கொழித்த பொழுது, அள்ளியாடா கொடுத்தீங்க! என கேள்வி தொண்டை வரைக்கும் வருகிறது. வெளியே வர தயக்கம் வருகிறது. சிக்கல்கள் பெருகிவிடும் என்ற பயம்.

இப்படி மக்கள் அடிப்படை பிரச்சனைகளில் அல்லாடும் பொழுது, நமது மானமிகு பிரதமர் இந்த நாட்டுக்கு பெரிய ஆபத்து தீவிரவாதம், மதவாதம், நக்சலிசம், தேசியவாதம் என்கிறார். ஆமாம். அவர்களது கவலை அவர்களுக்கு. நமது கவலை நமக்கு.

உலகம் இரண்டாக பிளவுபட்டிருப்பது இப்பொழுதெல்லாம் பளிச்சென தெரிகிறது.

இப்பொழுதெல்லாம், வீட்டிற்குள் உள்ளே புகுந்து 500 சவரன் திருட்டு! என படிக்கும் பொழுது, உள்ளுக்குள் சின்னதாய் சிரிப்பு எழுகிறது.

பையில் உள்ள பத்து டாலருக்காக அமெரிக்காவில் கொலை நடக்கும் என்கிறார்கள். இந்தியாவிலும் விரைவில் இந்த நிலை வந்துவிடும். உள்ளுக்குள் பட்சி சொல்கிறது.

Friday, December 18, 2009

பொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை - அத்தியாயம் 5



அத்தியாயம் - 1 படிக்க
அத்தியாயம் - 2 படிக்க
அத்தியாயம் - 3 படிக்க

அத்தியாயம் – 4 படிக்க
****
அந்த தனியார் நூலகம் பிரதான சாலையில் அமைந்திருந்தது. வெளியே அப்படி ஒரு இரைச்சல். உள்ளே நுழைந்ததும் சத்தம் காணாமல் போயிருந்தது. உள்ளே நுழைந்ததும் ஒரு பெண் அமர்ந்திருந்தார். கையில் ஒரு ஆங்கில நாவல். (ரேஞ்ச் தான்!)

நூலகம் சிறியதாய் இருந்தாலும், அடக்கமாய் இருந்தது. ஷெல்புகளில் புத்தகங்கள் நேர்த்தியாய் அடுக்கியிருந்தார்கள். ராஜேஷ்குமார், பி.கே.பி., அனுராதா ரமணன், பாலகுமாரன், எண்டமூரி வீரேந்திரநாத், சுஜாதா, அசோகமித்தரன் என எழுத்தாளர்களின் படைப்புகள் வரிசையாய் இருந்தன.

சரி பாதி ஆங்கில நாவல்கள். ஆங்கில நாவலெல்லாம் எப்ப படிக்க போறோம்? இப்படி நூலகத்துல வேலை கிடைச்சா எப்படி இருக்கும்? ஒரு வருடம் வேலை பார்த்தாலும், எல்லா நாவலையும் படிச்சிராலாமே! மனம் கணக்கிட்டது.

டோக்கனை கொடுத்து, பொன்னியின் செல்வனின் இறுதி பாகம் வேண்டும் என்றேன். அவர் கை காட்டிய ஷெல்பில் வேகமாய் போய் தேடினேன். இரண்டு செட்கள் இருந்தன. சில பாகங்கள் வெளியே போயிருந்தன. அவ்வளவு பிசி!

இறுதி பாகத்தை கையில் எடுத்தேன். பழைய பதிப்பாக இருந்தது. அதலானென்ன! நாவலே 50
களில் வெளிவந்தது தானே!
நான் எடுத்து வருவதற்குள், டோக்கனுக்கான லெட்ஜர் பக்கத்தை புரட்டி வைத்திருந்தார்.

'எவ்வளவு" என்றேன்.

"ரூ.95" என்றார்.

" வாடகை புத்தக விலையில் 10% தானே!" என்றேன் பதட்டமாய். பையில் 25 ரூக்கு மேல் தேறாது.

"ஏற்கனவே இந்த டோக்கன் மூலம் எடுத்து போன கடைசி புத்தகத்தை பல மாதங்கள் கழித்து தான் கொடுத்திருக்கார். அதனால் அபராதம் போட்டிருக்கிறோம்!" என்றார் கூலாய்.

எனக்கு தலை கிர் என சுற்றியது. இந்த இறுதி பாகத்தை படிக்கவே முடியாது போலிருக்கே! என புலம்பினேன்.

"அவ்வளவு பணம் கொண்டு வரவில்லை. புத்தகத்தை கொடுக்கும் போது, தரலாமா?!" என்றேன்.

'அதற்கு எங்களுடைய நூலக விதி ஒத்துக்காதே!" என்றார்.

பாழாய் போன விதிகள். டோக்கனை கொடுக்கும் பொழுது, அந்தாள் ஒன்னும் சொல்லவில்லையே! அவனை கெட்ட வார்த்தைகளில் மனதுக்குள் திட்டித்தீர்தேன். வேறு ஏதும் பேச தோன்றவில்லை. புத்தகத்தை ஏக்கமாய் பார்த்துவிட்டு, டோக்கனை வாங்கி கொண்டு, வெளியே வந்தேன்.

எல்லோரும் விர், விர் என சாலையில் வேகமாக போய்கொண்டிருந்தார்கள். நான் சைக்கிளை ரெம்ப சோகமாய் வீட்டுக்கு மிதித்தேன்.

வீடு வந்து சேர்வதற்குள்... புத்தகத்தை அடைய அடுத்த திட்டம் தயாராகியிருந்தது.

.... முயற்சிகள் தொடரும்.

இணைப்பு :

பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களும்!

Thursday, December 17, 2009

பொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை - அத்தியாயம் 4

அத்தியாயம் - 1 படிக்க
அத்தியாயம் - 2 படிக்க
அத்தியாயம் - 3 படிக்க


நூலகத்தை விட்டு வெளியே வந்ததும்... "நூலகரைப் பார்த்து நானே வாங்கித் தர்றேன்டா" என்றான் குற்ற உணர்வுடன்!

"வேண்டாண்டா! புத்தகம் அடிக்கடி வெளியில போயிருது. நூலகரும் அடிக்கடி விடுப்புல போயிறாரு! இந்த புத்தகத்தை நம்புனா ரெம்ப காலம் இழுக்கும் போல தெரியுது! வேற வழியில முயற்சிக்கிறேன்" என்றேன்.

நான் சொன்னதை ஏற்றுக்கொள்வது போல, நண்பன் அமைதியாய் இருந்தான்.

என் வீட்டு எதிரில் இருக்கும் ஒரு குடும்பஸ்தர் சாண்டில்யனின் பரம ரசிகர். அவருடைய படைப்புகளை எல்லாம் ஒன்றுவிடாமல் விரட்டி விரட்டி படித்தவர். என்னிடம் ஒரு முறை சாண்டியல்யனைப் பற்றி புகழ்ந்து பேசினார்.
"கதையில் வரும் பெண் கதாபாத்திரங்களை அவ்வளவு அழகா.. அவரை மாதிரி யாரும் வர்ணிக்க முடியாது" என நினைவுகளில் ஆழ்ந்தார்.
புத்தகம் எல்லாம் எங்கு வாங்குகிறீர்கள் என கேட்டதற்கு, ஒரு தனியார் நூலக பெயரை சொல்லியிருந்தார். பொன்னியின் செல்வனின் இறுதி பாகத்தை அவர் மூலமாக படித்துவிடலாம் என முடிவெடுத்தேன்.

அவரை பார்த்து, நாலுபாகங்களை படித்தது. இறுதி பாகத்தை மட்டும் படிக்க முடியாமல் போனது என எல்லாவற்றையும் விளக்கமாக சொன்னேன். கவனமாக கேட்டவர் "உங்க நிலைமை எனக்கு புரியுது தம்பி. கல்யாணம் நடந்ததுக்கு பின்பு இந்த இரண்டு வருசமா நான் எதுவும் படிக்கிறதே இல்லை. குடும்பத்துல சின்ன சின்ன பிரச்சனைகள். வேலையிலும் சில பிரச்சனைகள். (என்னது கல்யாண்ம் ஆன இலக்கியமெல்லாம் படிக்க முடியாதா?!) உங்களைப் போலத்தான் டோக்கனை கொடு நான் வைச்சுகிறேன்னு சொல்லி வாங்கிட்டு போனான். நானும் அதுக்கு பிறகு கேட்கவே இல்லை" என்றார்.

"நாசமா போச்சு! இந்த நாவல் நமக்கு கைக்கு கிடைக்கவே கிடைக்காதா!" மனதுக்குள் புலம்பினேன்.

அவரே தொடர்ந்து சொன்னார். "மேகலா தியேட்டருக்கு எதிரே தான் அவன் கடை வைச்சிருக்கான். அவன்கிட்ட என் பெயரை சொல்லி கேட்டீங்கன்னா... தந்திருவான்" என்றார். சரி என சொல்லி விடைபெற்றேன்.

சில அவசிய வேலைகளுக்காக விடுப்பு எடுத்திருந்ததால்... இறுதி பாகத்தை அதற்குள் கைப்பற்றிவிடவேண்டும் என மனதிற்குள் சபதம் எடுத்தேன்.

நான் போகும் சமயத்திலெல்லாம்... டோக்கன்காரர் கடையை விட்டு வெளியே போயிருந்தார் அல்லது கடை மூடியிருந்தது. ஒருவழியாக ஒரே நாளில் பலமுறை படையெடுத்து, டோக்கனை கைப்பற்றினேன். பாதி புத்தகம் கைக்கு வந்த மாதிரி இருந்தது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் புத்தகம் நம் கையில் இருக்கும் என நினைத்தாலே சந்தோசமாய் இருந்தது. சந்தோசமாய் நூலகத்தை நோக்கி சைக்கிளை விரட்டினேன்.

தொடரும்..

***
இணைப்பு :

பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களும்!

Tuesday, December 15, 2009

பெருந(ர)கரம்!

சாலையில் விரைகையில்
கொஞ்சம் கவனம் சிதறினாலும்
விபத்தாகிவிடுகிறது

ஏறும் விலைவாசியால்
எண்ணி.. எண்ணி
பார்த்து.. பார்த்து செலவழித்தாலும்
இருபது தேதிக்கு மேல்
யாரிடம் கடன் வாங்கலாம் என
மனம் கணக்கிடுகிறது

கோபத்தை அடக்கி
முகத்தில் சிரிப்பை தவழவிட்டு
எவ்வளவு திட்டமிட்டு நகர்ந்தாலும்
பார்க்கிற 'வேலை'(Job) யில்
பிரச்சனைகள் அலைஅலையாய்
வந்து கொண்டேயிருக்கின்றன.

எத்தனை பயிற்சிகள்
மெனக்கெட்டாலும்
உடலிலும் மனதிலும்
பதட்டம் நிலவுகிறது.

ஒவ்வொரு அடியையும்
பார்த்து பார்த்து நகர்த்தி
விழிப்பாய் (alert) இருந்து இருந்து
வெறுப்பாய் இருக்கிறது.

எல்லாவற்றையும்
விட்டுவிட்டு ஓட
மனம் எத்தனிக்கிறது.

Thursday, December 3, 2009

பொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை - அத்தியாயம் 3

அத்தியாயம் - 1 படிக்க
அத்தியாயம் - 2 படிக்க


அத்தியாயம் - 3

இடம் : நண்பன் வீடு நேரம் : காலை 11 மணி

இருபது நாட்கள் கழித்து, சொந்த ஊருக்கு வந்தேன். ஆவலாய் நண்பனைச் சந்தித்தேன். அவன் என் அவஸ்தையை புரிந்து கொண்டு, ஆய்வு கதையை கொஞ்சம் நூலகரிடம் நினைவுப்படுத்தி கொஞ்சம் அலைந்து.. பொறுப்பாய் எடுத்து வைத்திருந்தான்.

பொன்னியின் செல்வனின் இறுதி பாக கனத்த புத்தகத்தை தடவிப் பார்த்தேன். (பீலீங்!)

"ஊருக்கு எடுத்துட்டு போறேன். இரண்டு வாரத்திற்குள் முடித்துவிடுவேன். கொடுத்துவிடலாம்" என்றேன்.

"இல்லைடா! நீ ஊருக்கு போன 6வது நாளே எடுத்துட்டேன். வழக்கம் போல 14 நாட்கள் கெடு கொடுத்திருந்தார்கள். இப்பொழுது முடிந்துவிட்டது. போய் ரெனிவல் (புதுப்பித்துவிட்டு) பண்ணிட்டு தருகிறேன்" என்றான் மிக பொறுப்பாய்!

இதென்ன புது பிரச்சனை. எனக்கென்னவோ அவன் வார்த்தைகளில், புத்தகம் கை நழுவி போகிற மாதிரி இருந்தது. புத்தகத்தை இறுக்க அணைத்து கொண்டேன்.

"வேண்டாம்டா! போய் ரெனிவல் பண்ணி கேட்டு... தந்துவிட்டால் பிரச்சனையில்லை. தராவிட்டால் ரெம்ப டென்சனாயிடும்!" என்றேன்.

"இல்லையில்லை! நீ வா! ரெனிவல் பண்ணி தர வேண்டிய பொறுப்பு என்னுடையது! கவலைப்படாதே! நீ 4 மணிக்கு நேரா நூலகத்துக்கு வந்துரு! நானும் வந்துவிடுகிறேன்!" என சொன்னான். இறுதி பாகமான "தியாக சிகரத்தை" ஏக்கமாய் ஒருமுறை தடவி பார்த்துகொண்டேன். புத்தகத்தைப் பார்த்து... "நீ எனக்கு கிடைச்சுருவேயில்ல!" என்றேன் மனதுக்குள்!

இடம் : நூலகம் நேரம் : மாலை 5 மணி

நம்ம கெட்ட நேரத்திற்கு நூலகர் சீட்டில் இல்லை. உதவி நூலகர் தான் சீட்டில் இருந்தார். பகீரென ஆகிவிட்டது. திரும்பவும் நண்பனிடம் சொன்னேன். "வேண்டாம்டா! உள்ளுக்குள்ள ஒரு பட்சி சொல்லுது! இந்த ஆள் தரமாட்டான் என" என்றேன். "நானாச்சு! வா" என இழுத்துப்போனான்.

நேரே போய், ரெனிவல் பண்ணி தர சொல்லி கேட்டான். அவரும், புத்தகம் திரும்பி வந்ததற்கான பதிவை எல்லாம் எழுதினார். நிமிர்ந்து.... நண்பனை பார்த்து...

":தம்பி! நீங்க வாங்கிட்டு போனதுக்கு பிறகு, நூலகர் லெட்ஜரைப் பார்த்துட்டு, எதுக்கு கொடுத்தீங்க? என எனக்கு டோஸ்விட்டார். அதனால், இப்ப கொடுக்க முடியாது!" என்றார்.

நண்பனின் முகம் வெளிறிப் போனது. அவனின் தர்ம சங்கட நிலைமையை பார்த்து, அந்த டென்சனிலும் எனக்கு சிரிப்பு வந்தது.

பிறகு, இருவரும் ஆய்வுக்கதை, வேலைக் கதை, நேர்மை கதை - என பல அஸ்திரங்களை தொடுத்தோம். நூலகர் பூதத்தைக் காட்டி, எல்லாவற்றையும் சளைக்காமல் முறித்து போட்டார்.

இனி, பேசுவது வீண் என பட்டது. தலை தொங்கி, இருவரும் வெளியேறினோம்.

என்னைப் பார்த்து..."ஸாரிடா!" என்றான். புத்தகம் கிடைக்கவில்லை என்றாலும்... நண்பனின் நேர்மை எனக்கு பிடிச்சிருந்தது.

பொன்னியின் செல்வனின் இறுதி பாகம் உலகத்திலேயே ஒரு புத்தகம் தான் இருக்கா என்ன! வேறு வகைகளில் தேடலாம் என முயற்சியில் தளரா விக்கிரமாதித்தனை போல, வெளியே வந்தோம்.

தொடரும்...

இணைப்பு

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும்

Wednesday, December 2, 2009

பொன்னியின் செல்வன் - இறுதி பாக (கிளைக்) கதை - அத்தியாயம் 2


அத்தியாயம் - 1 - படிக்க...

அத்தியாயம் - 2

இரண்டு நாட்களை கடத்துவதற்கு, நிறைய சிரமப்பட்டேன். பல நாட்கள் ஆனது போல இருந்தது. இதனால் சாப்பாடு கூட சரியாக உள்ளே இறங்க வில்லை. (இலக்கியத்தின் மீது இப்படி ஒரு காதலா! என என நீங்கள் என்னை பாராட்டுவது எனக்கு கேட்கிறது!) இன்றைக்கு எப்பாடு பட்டாவது பொன்னியின் செல்வன் -ன் இறுதி பாகத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

இடம் : பொது நூலகம் நேரம் : காலை 10 மணி

நூலகர் சீட்டில் இருந்தார். அப்பாடா! இன்றைக்கு கிடைத்துவிடும் நம்பிக்கை வந்தது.

நூலகரிடம் 30 வயது மதிப்பு கொண்ட ஒருவர் ராஜேஷ்குமார் நாவலைப் பற்றி சிலாகித்து " என்னா ட்விஸ்ட்! என்னா சஸ்பென்ஸ்! சான்ஸே இல்லை சார்! ராஜேஷ்குமார்னா ராஜேஷ்குமார் தான் சார்"

டே! நாலு கழுதை வயசாச்சு! இன்னும் ராஜேஷ்குமார் நாவலிலேயே நங்கூரம் போட்டு உட்கார்ந்திருக்கான் என மனதில் திட்டினேன். நாம பரவாயில்லை. நாலாம் வகுப்பில் சிந்துபாத்தில் தொடங்கி, 7ம் வகுப்பில் அம்புலிமாமா படித்து, 16 வயதில் ராஜேஷ்குமார்-ன் விவேக் துப்பறியும் அறிவை கண்டு வியந்து, பிறகு பட்டுகோட்டை பிரபாகர்-ன் நொந்தகுமாரனில் விழுந்து விழுந்து சிரித்து, பிறகு பாலகுமாரனிடத்தில் தொபுக்கடீர்னு விழுந்து எழ முடியாமல் எழுந்து, சுஜாதாவிடம் 22 வயதில் சிக்கிகொண்டேன். இப்ப கல்கி. எனக்கு நானே முதுகில் தட்டிக்கொடுத்து கொண்டேன்.

ராஜேஷ்குமார் ரசிகரிடம் பேசி அனுப்பி விட்டு, என்னிடம் "என்ன தம்பி?" என்றார்.

பவ்யமாய் "சார்! என் நண்பன் காமராஜர் பல்கலைகழகத்தில் பி.எச்.டி பண்றார். தமிழ் இலக்கியங்களை பற்றி ஆய்வு செய்வதால், சில தமிழ் நாவல்களிலிருந்து சில குறிப்புகள் தேவைப்படுது. அதனால்...!"

"இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றீங்க!" என நக்கலாய் இடைமறித்தார்.

"அந்த ஆய்வுக்காக(!) பொன்னியின் செல்வனின் இறுதி பாகம் தேவைப்படுது. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து கேட்டேன். (பாழாய் போன அரசு விதியை எல்லாம் ஞாபகப்படுத்தாமல்... கவனமாய் தவிர்த்து) உங்க கிட்டே கேட்டு வாங்கிட்டு போகலாம்-னு உதவி நூலகர் சொன்னார்" என்றேன்.

'சரி தம்பி! எடுத்துங்க! லேட் பண்ணாம கொண்டு வந்திருங்க!" என்றார்.

அவருக்கு நன்றி சொல்லி, ஆர்வமாய்.. கனமான புத்தகங்கள் இருக்கும் வரிசையில்... வேகமாக போய் தேடினேன். அருகில் ஒரு பெண் புத்தகம் தேடிக்கொண்டிருந்தார். எதைச்சையாய் என்னை பார்த்தார். எனக்கு தூக்கிவாரி போட்டது. அப்படியே! பொன்னியின் செல்வனில் வருகிற நந்தினி! கொஞ்சம் தலையை சிலிப்பி கொண்டு பார்த்தால்.. நந்தினின் சாயலோடு இருந்தார். நான் அதிர்ச்சியாய் பார்த்ததில் அந்த பெண் ஒரு மாதிரியாய் பார்த்து, அவசரமாய் அடுத்த செல்புக்கு புத்தகம் தேட நகர்ந்தாள்.

கனமான புத்தகங்கள் உள்ள எல்லா இடங்களிலும் தேடினேன். புத்தகத்தை காணவில்லை. முகம் வாடிபோனது. நூலகர் புத்தகம் வெளியே போன விசயம் தெரிந்து தான், அனுமதிச்சுட்டாரோ! என சந்தேகம் வந்தது.

மீண்டும் நூலகரிடம் இல்லாததை வந்து சோகமாய் சொன்னேன். லெட்ஜரில் தேடி..

"ஆமா! வெளியே போயிருக்கு. ஒரு வாரம் கழிச்சு வாங்களேன்! என்றார் கூலாய். (என் அவஸ்தை புரியாமல்)

இதற்கிடையில் வெளியூரில் வேலை கிடைத்தது. இனி அடிக்கடி புத்தகம் வந்துவிட்டதா என பார்க்க முடியாதே என வருந்தினேன். இலக்கியத்தில் ஆர்வமாய் இருக்கும் நண்பன் ஒருவனிடம் என் அவஸ்தையை விளக்கி... எடுத்து வைக்க சொல்லி... டாட்டா காட்டி ஊருக்கு புறப்பட்டேன்.

அடுத்த வந்த இரவுகளில்... ஆழ்வார்க்கடியான் தன்னந்தனியனாக காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்தான். வானதி, குந்தவை பிராட்டியார் கனவில் வந்து போனார்கள்.

தொடரும்...

இணைப்பு :

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும்!

பொன்னியின் செல்வன் - இறுதி பாக (கிளைக்) கதை!


அத்தியாயம் - 1

இடம்: பகுதியில் இயங்கும் பொது நூலகம்

"இத்தனை பாகம் படிச்சுட்டேன். இறுதி பாகத்துக்கு மட்டும் இப்படி ஒரு விதியை சொன்னீங்கன்னா! எப்படி சார்? புரியல!" என்றேன்

"நூறு ரூபாய்க்கு மேல உள்ள புத்தகத்தை இங்கேயே தான் படிக்கனும்னு இப்ப தான் விதி கொண்டு வந்திருக்காங்க! நாங்க என்ன செய்ய முடியும்?" என்றார் நூலகர்.

வந்தியத்தேவன், குந்தவை, அருண்மொழிவர்மன், வானதி-க்கெல்லாம் என்ன ஆயிற்றோ! என பதைபதைப்பாய் இருந்தது. எப்படி வாங்குவது? இப்படியே திடு திடுன்னு ஓடிப்போயிடாலாமா? என்று கூட யோசனை வந்தது.

"சார்! இந்த காலத்துல புத்தகம் படிக்கிற பழக்கமே மக்கள்கிட்டே குறைஞ்சுகிட்டே வருது! மக்களை படிக்க விடாம பண்ணுறதுக்கு தான் அரசு இப்படி ஒரு விதி போட்டிருக்கு!" என்றேன் குரல் உயர்த்தி கோபமாய்!

படித்துக் கொண்டிருந்த வாசகர்கள் எல்லோரும் ஒருமுறை திரும்பி பார்த்தார்கள்.

"அதெல்லாம் ஒன்னும் கிடையாது தம்பி. படிக்க எடுத்துட்டு போனா... பொறுப்பா கொண்டு வருவது கிடையாது. 10ரூ சந்தா கட்டிட்டு, 200 ரூபாய்க்கு புத்தகத்தை எடுத்து போயிடுறான். நாங்க வேறு நூலகம் மாறி போகும் பொழுது, கணக்கு காட்டிட்டு போக சொல்லுது அரசு! அந்த சமயத்துல நாங்க வீடு வீடா தேடிப்போய் வாங்கி வர வேண்டியிருக்கு. அப்படியும் கிடைக்கலையா! புத்தகத்துக்குரிய பணத்தை எங்க தலையில கட்டிடுறாங்க!" என்றார் புலம்பியபடி.

"அது சரி சார்! இங்க உட்கார்ந்து புக் படிச்சிட்டிருந்தா... பொழப்பை எப்படி சார் பார்க்கிறது?" என்றேன்.

"உங்க நிலைமை புரியுது! நான் உதவி நூலகர். நூலகர் இரண்டு நாள் விடுப்பில் இருக்கிறார். அவர் வந்ததும் பேசி, வாங்கிகங்க! என்றார்.

எப்பொழுதும் பிசியாய் இருக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. புத்தகத்தை ஏக்கமாய் பார்த்தபடி, டேபிளில் வைத்துவிட்டு வெளியே வந்தேன். சூரியன் தலை சாய்த்து இருள் கவ்வியிருந்தது. (எல்லாம் நாவலோட பாதிப்பு தான்!)

- தொடரும்

இணைப்பு :

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும்!

Tuesday, December 1, 2009

முகம் பார்த்து பேசுதல்!


பெண்களிடம்
முகம் பார்த்து பேசுதல்
சாத்தியமில்லாததாக இருக்கிறது
கண்கள் அலைபாய்கின்றன
முகத்துக்கு கீழே நகர்கின்றன

இந்த பிரச்சனை
எனக்கு மட்டும் தானா என்ன?
மற்றவர்களின் அனுவம் கேட்டேன்.

"முகமும் பார்க்க மாட்டேன்.
நெஞ்சும் பார்க்க மாட்டேன்.
வேறு திசை பார்த்து பேசுவேன்"
.
இவன் தேறாத கேசு.

"நெஞ்சு பார்த்தால் வில்லன்
முகம் பார்த்து பேசினால் நாயகன்
நாயகனுக்கு தான்
நாயகிகள் எளிதாக சிக்குவார்கள்
எத்தனை படம் பார்க்கிறாய்?"

இவன் வில்லன்.

நாட்கள் கடந்தன.
பெண்களை புரிந்து கொள்ள
முயன்றேன்.

பிறகு வந்த நாட்களில்
சக மனுசியாய்
சிநேகமாய் பார்த்த பொழுது
முகம் பார்த்து பேசுதல்
எளிதாயிற்று!

Friday, July 31, 2009

425 கோடியில் புதிய சட்டமன்றம்! - சில குறிப்புகள்!


* சட்டமன்றத்தால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் முக்கால்வாசி முடங்கி கிடக்கின்றன. மீதி ஆமை வேகத்தில் நகருகின்றன. சட்டமன்ற கட்டிட வேலைகள் மட்டும் ஏன் புயல் வேகத்தில்?

* தமிழ்நாட்டு பாடசாலைகள், அரசு அலுவலங்கள் எல்லாம் அரசின் பொதுப்பணித்துறைக் கட்ட... 425 கோடியில் சட்டமன்றம் கட்டுவது ஜெர்மன் நாட்டின் ஜி.எம்.பி. நிறுவனம். உள்ளே நடமாடுவது தாங்களே என்பதலா! இதுவும் பன்னாட்டு சேவையா?

* பெஞ்சுக்கு பதிலாக வசதியான குஷன் இருக்கைகளாம். இனி, சட்டமன்ற கூட்டத்தொடரின் பொழுது குறட்டைவிட்டு எம்.எல்.ஏ.க்கள் வசதியாக தூங்கலாம்.

* அதிமுக ஆட்சியில் வேட்டியை அடிக்கடி உருவிவிடுகிறார்கள். ஆகையால் புதிய சட்ட மன்றத்தில் வேட்டி சட்டைக்கு பதிலாக கோட்-சூட் போடலாம் என பரிதி இளம் வழுதி பரிந்துரைப்பார்.

* பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் நாம் சேவை செய்கிறோம். ஆகையால், புதிய
சட்டமன்றத்தத ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல பராமரிக்கலாம். எம்.எல்.ஏக்கள் கோட்-சூட் போடலாம் என தயாநிதி மாறன் தாத்தா கருணாநிதியிடம் சொல்லலாம்.

* மக்களுக்காக திட்டம் போடுவது போல பன்னாட்டு நிறுவனங்களுக்கு விசுவாசமாய் வேலை செய்யவேண்டும். மக்களைப் போல உடை அணிந்தால் தான் நம்மை சந்தேகப்பட மாட்டார்கள் என கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசித்தது போல கருணாநிதி தன் பேரனுக்கு உபதேசிப்பார்.

* மக்கள் பிச்சைக்காரர்களாக வாழ்கிறார்கள். 425 கோடியில் எழுந்து நிற்கிறது புதிய சட்ட மன்ற வளாகம். பாவம் மக்கள்!

Friday, July 17, 2009

வினவு - க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நாட்டில் மொள்ளமாரி, முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ரவுடி, மக்கள்ப் பணத்தை தின்று தீர்ப்பவன் என எல்லோரும் பிறந்தநாள் கொண்டாடும்பொழுது, மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் ஒளியில் உலக விசயங்களை சமரசமில்லாமல் எழுதும் வினவு-க்கு பிறந்த நாள் தாராளமாய் கொண்டாடலாம்.

பதிவுலகம் பற்றி ஒன்றுமறியாத காலத்தில், ஏதோ ஒன்றைப் பற்றி தேடும் பொழுது, பதிவுலகம் அறிமுகமானது. அதற்கு பிறகு பல பதிவர்கள் எழுதியதை படித்த பொழுது, பெரும்பாலும் மொக்கையாக இருந்தது. பொறுத்து, பொறுத்து ஒரு சமயத்தில் வெறுத்துப்போய் தான் "வலையுலகமும் நொந்தகுமாரனும்" என்ற பெயரில் வலைத்தளமே தொடங்கினேன். பல மொக்கைப் பதிவர்களை, பதிவுகளை கலாய்த்தும் பின்னூட்டங்கள் இட்டுக்கொண்டிருந்தேன். எழுதிப் பழக்கமில்லையென்றாலும், நானே சொந்தமாய் சமூக விசயங்கள் குறித்து எழுத துவங்கினேன்.

இந்த நாட்களில் தான் 'வினவு' அறிமுகமானது. துவக்க கட்டுரைகளைப் படித்த பொழுது, வலைத்தளம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். வேலை நிலைமைகள் என்னதான் வாட்டியெடுத்தாலும், வினவு தளத்தை தவறாமல் வாசித்து வருகிறேன். பின்னூட்டங்களும் இடுகிறேன். என்ன ஒரு வருத்தம்! நேரமின்மையால் விவாதங்களில் பங்கு கொள்ள முடியவில்லை.

என்வாழ்வில் சிந்தனையோட்டத்தையும், நடைமுறை வாழ்வையும் மாற்றியமைத்ததில் வினவின் பங்கு அதிகம். சமூக தளத்தில் வினவின் பங்கு, நீங்கள் நினைப்பதைக்காட்டிலும் அதிகம். தன் பாதையில் சற்றும் தளராமல் பயணிக்க வாழ்த்துக்கள்.

சில ஆலோசனைகள் :

வினவு-ல் துவக்க காலங்களில் பண்பாட்டுத் தளத்தில் நிறைய கட்டுரைகள் வெளிவந்து, நிறைய வரவேற்பு பெற்றது. தொடர வேண்டும்

மருத்துவர் ருத்ரன் துவங்கிய தொடரை வெற்றிகரமாக தொடர வேண்டும். மருத்துவர் ருத்ரன் போன்ற பல துறை சார்ந்த சமூக அக்கறை கொண்ட பதிவர்கள் தனித்தனியாக எழுதுகிறார்கள். அவர்களையும் எழுத வைக்க வினவு முயற்சிக்க வேண்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம். சமூக மாற்றம் நிச்சயம் வரும்.

வளர்ச்சிப் பணிகளுக்காக, நண்பர்களிடம் நன்கொடை கேட்டு வாங்கித்தர முயல்கிறேன்.

மீண்டும் வாழ்த்துக்களுடன்,

சந்தோச குமாரன். (இந்த பதிவுக்கு மட்டும்)

Tuesday, July 7, 2009

பாதாள உலக பயணம்! (The Journey to center of earth) சினிமா!

The Journery to center of earth
ஒரு நாள் ஹாசினியின் 'பேசும் படம்' திரைப்பட விமர்சனத்தில் இந்த 3D படத்தை குழந்தைகளை அழைத்துக்கொண்டு திரையரங்கில் பாருங்கள். நல்லபடம் என பரிந்துரைத்தார்.

ஒரு உற்சாகத்தில் என் அக்கா பையனிடம் இந்த படத்துக்கு அழைத்துப்போகிறேன் என வாக்கு கொடுத்தேன். அன்றிலிருந்து 'கப்' என பிடித்துக்கொண்டான். 'எப்ப கூட்டிட்டு போற?' என ஆரம்பித்துவிட்டான்.

வாக்கு கொடுத்த நாளிலிருந்து அலுவலகத்தில் வேலை அதிகமாகி, வீடு திரும்ப நிறைய தாமதமானது. நாளாக நாளாக, சத்யத்தில் நான்கு காட்சிகள், பிறகு இரண்டு, ஒன்று என குறைத்துக்கொண்டே வந்தார்கள். 'ஆஹா! எடுக்கப் போறாங்களே! பையன் சொல்லி சொல்லி அசிங்கப்படுத்துவானே!" என சுதாரித்து... ஒரு நாள் சத்யத்துக்காக சிறப்பு காஸ்ட்டூம், சிறப்பு மேக்கப் டச் எல்லாம் கொடுத்து... இருவரும் பந்தாவாக போய் நின்றால்... படத்தை முதல் நாளே தூக்கிவிட்டார்கள். பையன் முகத்தை நேர் கொண்டு பார்க்க முடியவில்லை. செஞ்ச பாவத்துக்கு... பிராயசித்தமா.. இப்படத்தின் டிவிடியை தேடிப்பிடித்து வாங்கி கொடுத்தேன்.

வாங்கி தந்த நாளிலிருந்து... அக்கா வீட்டுக்கு நான் போகும் பொழுதெல்லாம், வேறு நிகழ்ச்சிகளை பார்க்கவிடாமல்... அக்கா பையன் இந்த படத்தை பார்க்க தொடங்கிவிடுவான். என்னை வெறுப்பேற்றுகிறானாம். இப்படி பலமுறை பார்த்து எனக்கே வசனமே மனப்பாடாமாகிவிட்டது. நெஞ்சில் உள்ள பாரத்தை இந்த படத்தை விமர்சனம் எழுதி, கொஞ்சம் இறக்கி வைச்சுக்கிறேன்!

கதைன்னு பார்த்தால்... 1864 வாக்கில் வார்னே என்பவர் "பூமிக்கு கீழே ஒரு உலகம் இருக்கிறது. அங்கே விசித்திர தாவரங்கள்; டைனோசர் எல்லாம் இன்னும் வாழ்கின்றன. அங்கு போவதற்கு எரிமலை குழம்பு (Valcano tubes) வெளியேறும் பாதை வழியாக செல்ல முடியும்" என சில குறிப்புகளை கொண்டு நாவல் எழுதியுள்ளார். வார்னே யின் கருத்தை நம்புகிறவர்கள் (Vernians) இதைப் பற்றி தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்கிறார்கள்.

இப்படி ஆய்வு செய்ய போய்... 'மேக்ஸ்' என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு (1997ல்) காணாமல் போகிறார். மேக்ஸ்-ன் சகோதரர் நாயகன் (Brendan Fraser - மம்மி பட நாயகன்) தன் அண்ணனை தேடும் முயற்சியில் இருக்கிறார். அவரும் ஒரு வால்கனோ ஆராய்ச்சியாளர். பேராசிரியர். ஒரு "க்ளூ" கிடைத்ததும், விடுமுறைக்கு வந்த அண்ணன் பையனுடன் ஐஸ்லேந்து (Iceland) பயணிக்கிறார்.

அங்கு ஒரு மலையேற ஒரு அழகான பெண் (நாயகி - Anita Breiam) கைடுடன் போய், குகைக்குள் மாட்டிக்கொண்டு, வெளியேறும் முயற்சியில்... பல சாசகங்கள் செய்து... எதிர்பாராதவிதமாக வால்கனோ பாதை வழியாக பல நூறு மைல்கள் உள்ளே விழுந்து... பூமியின் மைய உலகத்திற்கே போய்விடுகிறார்கள்.

அங்கே 'மேக்ஸ்' இறந்ததை கண்டுபிடிக்கிறார்கள். 50 அடி காளான் செடி (!), மனிதர்களை கொல்லும் தாவரம், கடல், பெரிய டைனோசர், காந்த பாறைகள் என பல தடைகளை கடந்து... சின்ன கீறல் கூட விழாமல்... பூமிக்கு வந்து சேர்கிறார்கள்.
***
ஹாலிவுட்காரர்களுக்கு பூமியில் எடுக்கிற கதைகளால் கல்லா கட்ட முடியாமல் போகும் பொழுது... மேலுலகம், கீழுலகம் என பிலிம் எடுப்பார்கள்.

வார்னே எழுதிய பிரெஞ்சு நாவலை மையமாக வைத்து, வெவ்வேறு கால கட்டத்தில் இதே மாதிரி பல படங்களை ஏற்கனவே எடுத்திருக்கிறார்கள். சீரியலாய் கூட எடுத்திருக்கிறார்கள். மற்ற படங்களை விட இந்த படத்திற்கு சிறப்பு சமகால கிராபிக்ஸ் ஜிம்மிக்ஸ் வேலைகள் தான். மேலும் திரைக்கதையும் போராடிக்காமல், விறுவிறுப்பாக படத்தின் இறுதிவரை இழுத்து செல்கின்றன. குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும். குழந்தை மனசு கொண்ட (!) பெரியவர்களுக்கும் பிடிக்கும். பாருங்கள்! அல்லது பசங்களுக்கு வாங்கி கொடுங்கள்.

சில முக்கிய குறிப்புகள் : 1. வார்னேயின் கருத்து ஒரு டுபாக்கூர். நீருபிக்க படாதது. 2. பசங்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது, கவனமாய் இருங்கள்.

Wednesday, July 1, 2009

அழியும் ஈழத்தமினமும், அரட்டை சட்டமன்றமும்!


ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து... சட்டமன்றத்தில் நேற்று பேச்சுவார்த்தை தொடங்கியதும்... அதிமுககாரர்கள் "காப்பாற்று! காப்பாற்று! ஈழத்தமிழர்களை காப்பாற்று!" என முழக்கமிட்டுள்ளனர். அமைதியாக இருக்க வலியுறுத்தி... கேட்காமல் போனதால்... வெளியேற்றிவிட்டார்கள். உடன் மதிமுககாரர்களும்.

"காப்பாற்று! காப்பாற்று!" என்றால் யாரை காப்பாற்றுவது என காங்கிரசு எம்.எல்.ஏ. சுதர்சனம் கிண்டலடித்திருக்கிறார்.

சிபிஎம் காரர்கள் பேச எழுந்ததும்... கம்யூனிஸ்டுகள் பேசி பேசித்தான் வீணாக போய்விட்டனர் என திமுகவில் யாரோ கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

சிறிது நேரத்தில்... பாமகவும் வெளியேறிவிட்டதாம். பீட்டர் அல்போன்ஸ் அதிமுக ஆட்சிக் காலத்தில் நான் வேட்டியை கட்ட முடியவில்லை. பேன்ட் போட்டுத்தான் வந்தேன் என நீண்ட லெக்சர் அடித்திருக்கிறார்.

ஈழ விவகாரத்தில்.. ஏதாவது உருப்படியாக விவாதிப்பார்கள் என்று தினமலர் செய்தியை படித்துப் பார்த்தால்... ஒரு விசயமும் விவாதிக்கப்படவில்லை. ஈழத்தமிழர்களை காப்பாற்ற எந்த தீர்மானமுமில்லை. இந்த சட்டமன்றம் மீண்டும் அரட்டை மடம் என நிருபணமாகியிருக்கிறது.

பின்குறிப்பு : ஈழத்திலிருந்து கிளம்பிய ஒரு ஆவி.. தமிழக தலைவர்கள் மிஞ்சியிருக்கும் தனது ஈழ சொந்தங்களை காப்பாற்றுவார்கள் என நம்பி... நேற்று பார்வையாளர்கள் பகுதியில் ஆர்வத்துடன் கவனித்தது. நடந்த கூத்தைப் பார்த்து... மீண்டும் ஒருமுறை தற்கொலை செய்துகொண்டது.

Wednesday, June 24, 2009

அமெரிக்கன் பியூட்டி (American Beauty) - சினிமா


வழக்கம் போல சில திருட்டு டிவிடி படங்கள் வாங்கலாம் என கடைக்கு சென்றேன். இரண்டு படங்கள் வாங்கிய பிறகு... "XXX, XXL படங்கள் வேண்டுமா சார்?" கடைக்காரர். "XXX - படம் தெரியும். நேரடியாக மேட்டர். அதென்ன XXL?" என்றால்... கதையுடன் மேட்டராம்!

கொடுங்க பார்க்கலாம்... என வாங்கிப் பார்த்ததில்... அதில் ஒரு படம் "அமெரிக்கன் பியூட்டி" (American Beauty).

அடப்பாவிகளா! ஐந்து ஆஸ்கார்களை எளிதாக தட்டிச் சென்று... வசூலிலும் அள்ளி.. கதைக்காக பரவலாக பேசப்பட்ட படம் இது. இதைப் போய் இந்த லிஸ்டில் வைத்திருக்கிறார்களே!

அவரிடமே அதைச் சொல்லி... கடையை விட்டு வந்த பிறகு... படம் மனதில் ஓட ஆரம்பித்துவிட்டது. சத்யத்தில் பார்த்து பல ஆண்டுகள் ஆனாலும்... மறக்கமுடியாத படம். நீங்கள் பார்க்க வேண்டிய படம். உங்களுக்காக... ஒரு குட்டி டிரையிலர் என்னால் முடிந்த அளவுக்கு!

முதல் காட்சியே... நாயகன் சுடப்பட்டு... சரிகிறார். ரத்தம் கொட்டுகிறது. முகத்தில் ஒரு புன்னகை. அவரின் நினைவுகளிலிருந்து படம் விரிகிறது.

நாயகன் ( Kevin spacey) நிறைய பிரஷர் வேலையில்.. போங்கடா என வேலையை விட்டுவிட்டு... குறைந்த சம்பளத்தில் ஒரு வேலையில் சேருகிறார். ஜாலியான மனுஷன். மகளின் தோழியை ஜிம்மிக்ஸ் வேலை பார்த்து, கரெக்ட் பண்ணும் அளவுக்கு... ஜாலியான மனுஷன். நாயகனின் மனைவிக்கு... ரியல் எஸ்டேட் பிசனஸில் அள்ளித் தட்டி.. பெரியாளாக வேண்டும் என்பது ஆசை. முடியவில்லை. கணவனுக்கு மனைவிக்கும் அடிக்கடி பிரச்சனைகள் வெடிக்கின்றன. பள்ளியில் படிக்கும் மகள் இவர்களை பார்த்து நொந்துகொள்கிறாள். அவளுக்கு ஒரு மாபெரும் பிரச்சனை. தன் மார்பகம் சிறிசா இருக்கேன்னு! பெரிதாக்க ஆபரேசனுக்கு காசு சேர்க்கிறாள்.

இவர்கள் வீட்டிற்கு அருகே இன்னொரு குடும்பம்.

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். ஒழுக்கம், ஒழுக்கம் என கறாராக வாழ்கிறவர்.
இவருடைய மனைவி - எப்பொழுதும் சுவரையே வெறித்து பார்த்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு பள்ளிச் செல்கிற ஒரு பையன். கையில் எப்பொழுதும் ஒரு கேண்டி கேமிரா. படம் எடுத்து கொண்டே திரிகிறான். கைச்செலவுக்கு... அபின் போல ஒரு போதை பொருள் விற்கிறான்.

இந்த இரு குடும்ப கதாபாத்திரங்களை வைத்து.... படம் நகருகிறது.

டிரையிலர் அவ்வளவு தான்.

அமெரிக்க குடும்பங்கள் எப்படி வாழ்கிறார்கள்? என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்? எப்படி அதைத் தீர்த்தும் கொள்கிறார்கள்? என படம் பேசுகிறது. அமெரிக்க வாழ்க்கையின் அவலத்தை சொன்ன படம் இது. ஆனால்.. படத்தின் பெயர் "அமெரிக்கன் பியூட்டி".

நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம், சிறந்த படம் என 5 ஆஸ்கார்களை வென்றது. பார்க்க வேண்டிய படம். பாருங்கள்.

சிறு குறிப்பு : சென்னையில் பல குடும்பங்களை... அவர்களின் வாழ்க்கை முறையை பார்க்கிற பொழுது... தவிர்க்க முடியாமல் இந்த படம் அடிக்கடி நினைவுக்கு வருகிறது. கவலையும் வருகிறது.

Thursday, June 18, 2009

பூங்கா மனிதர்கள்


தேர்வுக்காக அறையில் படிக்க முயன்று தோற்றுப்போனேன். பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு கடந்த ஒரு வாரம் படிக்க போனேன்.

பூங்காவிற்கு போகும் வழியில்... அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் கடந்து போவதைப் பார்க்கையில்.. பலர் ஒல்லியாக, நோஞ்சனாக, கண்ணாடி போட்டு... பரிதாபமாக இருந்தார்கள்.

பூங்காவில் படிக்கும் பொழுது.... என்னை கடந்து சென்ற பலர் தின்று கொழுத்து, தொடைப்பெருத்தவர்கள், குண்டிப் பெருத்தவர்கள்... புஷ்.. புஷ்..வென மூச்சு வாங்க ஓடுவது போல நடந்தார்கள். நடப்பது போல ஊர்ந்து சென்றார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்கள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்து போனார்கள். எரிச்சல் மேலோங்கியது. இப்பொழுதெல்லாம் பூங்கா பக்கம் படிக்க போவதில்லை. கொஞ்சம் சிரமப்பட்டாலும் அறையிலேயே படிக்கிறேன்.

Monday, May 11, 2009

படித்த “அறிவாளிகளும்”! தேர்தல் பிரச்சாரமும்!

சில நாட்களாக பல பதிவர்களை பார்த்து வருகிறேன். “இவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள்!
அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள்!”
என தொடர்ச்சியாய் பதிவிட்டு வருகிறார்கள்.

கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களினாலும், அதற்கு பிறகு அமைந்த அனைத்து அரசுகளாலும் பெரும்பான்மை மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் வந்துவிடவும் இல்லை. இனி வரப் போவதில்லை என நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

அரசு மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய அதிகார மற்றும் வளமான நிலையை தக்க வைப்பதற்காக, மக்களுக்கு எந்த உரிமைகளும் கொடுத்துவிடாமல் இருப்பதை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்கிறவர்கள்... தேர்தல் நேரத்தில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற சொல்லி மக்களை நோக்கி வருகிறார்கள். அவர்களுக்காகவது சொந்த நலன் அடங்கியிருக்கிறது?

ஆனால் பலன்கள் ஏதும் நேரிடையாக கிடைத்துவிடாத பதிவர்களும், நடுத்தர வர்க்கமும் ஏன் வாக்களிக்க வற்புறுத்துகிறார்கள்? இதில் விவாதிக்க நிறைய நுண்ணிய விசயங்கள் இருந்தாலும், சட்டென்று கண்ணில்படுவது அரைவேக்காட்டுத்தனமும், சமூக பொறுப்பற்றத்தனம் தான் வெளிப்படுகிறது.

அரசு, அரசியல், அதிகாரம், ராணுவம், காவல்துறை, நீதித்துறை – இதுபற்றியெல்லாம் அரசு தன் பாடத்திட்டத்தில் என்ன சொல்லிக்கொடுத்ததோ, அதை அப்படியே மண்டையில் ஏற்றி, மனப்பாடம் செய்து, வாந்தியெடுத்த கூட்டம் தான், பின்னாளில் ஏதோ நல்ல சம்பளத்தில் நல்ல பொசிசனில் இருந்தால் கூட அரசு போட்டுக்கொடுத்த பாதையிலேயே சிந்திக்கவும், அதன் பிரச்சார பீரங்கியாகவும் செயல்படுகிறார்கள். இப்படிப்பட்ட பலரிடம் விவாதித்திருக்கிறேன். நாம் என்ன தான் அறிவியல் பூர்வமாகவும், ஆதாரங்களோடும் பேசினாலும், தலையை சிலுப்பிக்கொண்டு தான் சொன்னதையே, திரும்ப திரும்ப சொல்வார்கள். சரிய்யா! நீ விவாதத்துக்கு முன் வைக்கிற விசங்களையே நன்றாக தேடி, இன்னும் கொஞ்சம் தேடிப்படி என்றாலும், மேற்கொண்டு ஒரு படி மேலே ஏற மாட்டார்கள்.
இவர்களிடம் விவாதிக்கும் பொழுது, நம்பிக்கை நம்மிடம் குறைய ஆரம்பிக்கும்.

ஆனால், இந்த சூழ்நிலையிலும், ஒரு சிறுபான்மை கூட்டம் இந்த மோசமான சமூக சூழ்நிலை மாற வேண்டும் என்ற அக்கறை கொண்டவர்கள் பள்ளியில், கல்லூரியில் படித்ததையெல்லாம் மண்டையில் ஏற்றியதை கழற்றிவிட்டு, வரலாறுகளில் உண்மையை தேடி, ஏழை, எளிய மக்களிடத்தில் பணியாற்றி, போராட்டங்களில் கலந்து பாடம் கற்று சமூக மாற்றத்திற்காக அனுதினமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் கண்டால், நம்பிக்கையின் மட்டம் உயருகிறது.

Thursday, April 30, 2009

மே தினம் - ‍சில கேள்விகள்!


"அப்படியானால், இப்பொழுது வேலை செய்கிற நேரம் 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைந்திருக்க வேண்டுமல்லவா!

மாறாக, 8 மணி நேரத்திலிருந்து... 12 மணி நேரம், 14 மணி நேரமாக கூடியிருக்கிறதே! இது ஏன்?"
****

இன்று மே தினம். எங்கள் அலுவலகத்தில் 'விடுமுறை' என நோட்டிஸ் போர்டில் ஒட்டியிருந்தார்கள்.

பிளாக்கில், பலரை போல மொக்கையாய் ஏதும் போடாமல், உருப்படியாய் எதாவது எழுதலாம் என யோசித்ததில்....

மே தினம் பற்றி என அலுவலக நண்பர்களிடம் கேட்டால், ஒருத்தருக்கும் உருப்படியாக ஒன்றும் தெரியவில்லை.

பிறகு, கொஞ்சம் தமிழ் விக்கிபீடியாவில் தேடியதில், சில தகவல்கள் சேகரித்தேன். சில கேள்விகளும் எழுந்தது.

18ம் நூற்றாண்டுகளில் வளர்ந்த நாடுகளில், தொழிற்சாலைகளில் குழந்தைகள், பெண்கள் உட்பட எல்லா தொழிலாளர்களும் 12 மணி நேரம், 18 மணி நேரம் வேலை செய்ய மிரட்டப்பட்டு இருக்கிறார்கள்.

இங்கிலாந்தில், சாசன இயக்கம் என்ற தொழிலாளர் இயக்கம் 10 மணி நேரம் வேலை என்ற கோரிக்கை உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வைத்து போராட துவங்கி இருக்கிறது.

அதற்குப் பிறகு, உலகம் முழுவதிலும் தொழிலாளர் இயக்கங்கள் குறிப்பாக கம்யூனிச இயக்கங்கள் 8 மணி நேரம் வேலைக்காக தொடர் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள்.

பல இலட்சகணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். போராட்டங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல தொழிற்சங்க தலைவர்கள் தூக்கில் போடப்பட்டிருக்கிறார்கள்.

தொடர் போரட்டத்தின் வழியே, 1889 ஆண்டில் "சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக கடைப்பிடிக்க வழிவகுத்தது.

................. இதெல்லாம் வரலாறு.

என் கேள்வி என்னவென்றால்...

8 மணி நேரம் வேலைக்காக 150 ஆண்டுகளுக்கு முன்பு போராடியிருக்கிறார்கள்.

அதற்கு பிறகு எல்லா நாடுகளும் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திர நாடுகளாக மாறியிருக்கின்றன.

பொருளுற்பத்தியில் மற்றும் விவசாயத்தில் பயன்படுத்த பல நவீன அறிவியல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தி வருகின்றன.

மக்கள் தொகை பத்து மடங்காக பெருகியிருக்கிறது.

அப்படியானால், இப்பொழுது வேலை செய்கிற நேரம் 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைந்திருக்க வேண்டுமல்லவா!

மாறாக, 8 மணி நேரத்திலிருந்து... 12 மணி நேரம், 14 மணி நேரமாக கூடியிருக்கிறதே! இது ஏன்?

இது பற்றி, ஒரு நண்பரிடம் கேட்டதற்கு,

"எப்பொழுதுமே, ஒரு மக்கள் கூட்டம் வேலை இல்லாமல் இருந்தால் தான், முதலாளிகளுக்கு குறைவான கூலிக்கு ஆள் கிடைக்கும். எல்லா அரசுகளும் முதலாளிகளுக்கு ஆதரவாக இதை கவனமாக பார்த்து கொள்கிறது" என்றார்.

நம் நாட்டில் 5 டிஜிட், 6 டிஜிட் சம்பளம் வாங்கும், கணிப்பொறி வல்லுநர்கள் பாவம். மற்ற தொழிலாளர்களை விட நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்கிறார்கள். சம்பளம் அதிகம். உரிமைகள் குறைவு. சின்ன சின்ன விசயங்களுக்காகவே, அல்லது காரணம் என்னவென்று அறியாமலேயே வேலையை விட்டு தூக்கி விடுகிறார்களாம்.
வருங்காலத்தில், கணிப்பொறி வல்லுநர்கள் தான், மே தினப் போராட்டங்களில் முன்நின்று போராடுவார்கள் என நினைக்கிறேன்.
எங்க மானேஜிங் டைரக்டர் கூலாக சொல்வார். "நீ போயிட்டா, எனக்கு லட்சம் பேர் க்யூவில நிற்கிறார்கள்" என்பார்.

ஆதலால், என் நண்பர் சொன்ன கருத்து எனக்கு சரியெனப்படுகிறது. உங்களுக்கு!

Thursday, April 23, 2009

தேர்தல் - 2009


தினந்தோறும்
ப‌ல‌ குறுஞ்செய்திகள்
"காங்கிர‌ஸ் கூட்ட‌ணியை
தோற்க‌டிப்போம்" என‌.

தோற்க‌டித்துவிட்டு..
'புர‌ட்சித்த‌லைவியை
ஜெயிக்க‌வைப்ப‌தா!
ஜெ.ஜெ.
ஹிட்ல‌ரின் ஒண்ணுவிட்ட‌ ச‌கோத‌ரி!

'க‌ருப்பு எம்.ஜி.ஆர்‍‍‍ _ ஐ
ஜெயிக்க‌வைப்பதா!
"பேர‌ம் ப‌டியாத‌தால்
ஆண்ட‌வ‌னோடும்
ம‌க்க‌ளோடும் கூட்ட‌ணி!"

அட போங்கய்யா!

இப்படித்தான்
பல தேர்தல்கள்
கடந்துவிட்டன!
யாருக்கும் விடிவில்லை!

தேர்த‌லை புற‌க்க‌ணிக்க‌லாம்.
அதுதான்
எல்லோருக்கும் ந‌ல்ல‌து!

Wednesday, April 15, 2009

தேர்தல்


அடைத்து வைத்து
மூச்சு திணறி
வெளியே வந்த
காந்தி தாத்தாவின் முகத்தில்
மலர்ச்சி புன்னகை.

கரைவேட்டிகள்
விரைப்பாய்
சந்தோசமாய்
தெருக்களில் வலம் வருகின்றன

மண்டபங்களில்
மணக்க மணக்க
ஆடுகளும்
கோழிகளும்
உள்ளே தள்ளப்படுகின்றன.

தளர்ந்து கிடக்கிற
மக்களைப் பார்த்து
வெகுசீக்கிரத்தில் சிரிப்பாள்
லட்சுமி

யாருக்கும் கொள்கையுமில்லை!
வெங்காயமும் இல்லை!
வளரட்டும் ஜனநாயகம்!
வானம் தொடட்டும்
புதிய ஊழல்கள்!
பாவம் நாடு!

Monday, March 23, 2009

பகத்சிங்!


எல்லாவற்றையும்
சகித்துக்கொண்டு...
சராசரி மனிதனாய்
வாழமுடிகிறது!

உனது சுட்டெரிக்கும்
பார்வையையும்
உன் வாழ்க்கை
எனக்குள் எழுப்புகிற
குடைச்சல்களை தான்
என்னால்
என்றும்
எதிர்கொள்ள முடியவில்லை!

***

பகத்சிங்

பிறந்தது :

27.09.1907

தூக்கிலிடப்பட்ட நாள் :

23.03.1931 (வயது - 23)

Sunday, March 15, 2009

அசை போடுதல்!


கோவில் விழாவில்
சிறு வயதில்
கரகாட்டகாரியுடன்
குத்தாட்டம் போட்டது.

வேகவேகமாய்
முன்னேறி
இதயம் படபடக்க
அவள்
பெயர் கேட்டது.

நடுநிசிகளில்
நண்பர்களோடு
அளவுளாவியது.

அறையில்
யாருமற்ற பொழுதுகளில்
பின் நகர்ந்து - மனம்
அசை போடுகிறது.

வயதாகிறதோ?

Wednesday, January 28, 2009

‘பித்தன்’ – கவிஞர் அப்துல்ரகுமான்


படித்ததில் பிடித்தது.

கவிஞர் அப்துல் ரகுமான் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது ‘பித்தன்’.

ஏன் பிடித்தது என்றால்.... அப்துல் ரகுமானே பித்தனின் அறிமுகத்தில் சொல்வது மாதிரி

‘பித்தன்
‘எதிர்’களின் உபாஸகன்

….

உலகம் பார்க்காத
இருண்ட பக்கங்களின்
அழகை அறிந்தவன்.

....

முரண்கள்
கள்ளக்காதலர்கள்
என்பதைக்
கண்டுபிடித்தவன்.
….

உள் அத்தியாயங்களில் பல தலைப்புகளில் அசைபோட வைக்கிற, அதிர வைப்பவை பல.

உதாரணத்திற்கு...
மனிதன் ஆடையாய் இலை, தலை கட்ட தொடங்கி... இன்றைக்கு ஜீன்ஸ், டீசர்ட் என மாறி நிற்கிறோம்.

ஆடை தலைப்பில்
பித்தன் சொல்கிறான்.

“பூக்களும் பறவைகளும்
ஆடை அணிவதில்லையே?

நீங்கள்
ஆபாசமானீர்கள்;

அதனால் உங்களை
ஆடையால் மறைத்தீர்கள்”

- கேட்டதும் நாம் ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போகிறோம்.

பெண் தலைப்பில்
பித்தன்

பெண் நட்பில் பலருக்கு மகிழ்ச்சியான நினைவுகள் இருந்தாலும், சிலருக்கு நிறைய கசப்பும் இருக்கிறது.
இந்த வரிகள் எனக்கு பிடித்திருந்தன.

“பெண்களின் கூட்டத்தைக் கண்டு
பித்தன்
விலகி ஓடினான்.

‘நீ பெண்களை வெறுப்பவனா?’
என்று கேட்டேன்.

‘இல்லை; அவர்களை
வெறுக்காமல் இருக்கவே
விலகிச் செல்கிறேன்.
பெண் தூரத்தில்தான்
அழகாயிருக்கிறாள்”.
...

வினா தலைப்பில்
பித்தன்

“வினாக்களே
நம்மை எழுப்புகின்றன.
விடைகளோ
உறக்கமாய் இருக்கின்றன.
வினாக்கள்
நம்மைத் திறக்கின்றன.
விடைகளோ
நம்மை மூடுகின்றன”

- நம் பள்ளிகள் நம் பிள்ளைகளுக்கு செய்யும் அதிகபட்ச வன்முறை “வினாக்கள் எழுப்பாதே!” என மீண்டும் மீண்டும் சொல்கின்றன.

இப்படி புத்தகங்களில் நிறைய இருக்கின்றன. படியுங்கள்.

நவீன கவிதைகள் என நிறைய வருகின்றன. நம் சிறு மூளைக்கு அவைகள் புரிவதில்லை.
அப்துல் ரகுமானின் எழுத்து புரிந்து கொள்வதற்கு மூளையை குடைவதில்லை. எல்லா பாடுபொருளும், உருவகமும், உள்ளடக்கமும் நமக்கு புரிகிறது. அது அவருடைய எழுத்தின் பலம்.

அப்துல் ரகுமான் “பித்தன்”க்கான கருவை 1980 களில் சிந்தித்து, பிறகு எழுதி, 1998 ல் புத்தகமாய் முதல் பதிப்பாய் வந்திருக்கிறது.

இந்த புத்தகங்களில் எனக்கு உடன்படாத விசயங்களும் இருக்கின்றன. 1990களுக்கு பிறகு, அப்துல் ரகுமானிடம் இருந்த சில முற்போக்கு கருத்துக்களும் விலகி, முழுக்க முழுக்க ஆன்மீகம் என்பதாக அவருடைய எழுத்துக்கள் மாறிவிட்டன. சம காலங்களில் அவர் எழுதுவதை படிக்க பிடிக்கவில்லை.

அப்துல் ரகுமான் இறந்துவிட்டார் என ஒரு மாதத்திற்கு முன்பு சன் செய்தியில் பிளாஷ் செய்தியாக வந்தது. அவருடைய கவிதைகள் ஒவ்வொன்றாக வ்ரிசையாக நினைவுக்கு வந்து, அவருடைய இறப்பில் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். பிறகு, கவிஞர் தானா! என உறுதிப்படுத்த தேடும் பொழுது, மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ உள்ள அப்துல் ரகுமான் என்ற பிரபலம் இறந்ததாய் அறிந்தேன். கவிஞர் பிழைத்தார்.

புத்தக வடிவமைப்பு பொறுத்தவரை, அத்தியாயங்களுக்கான இன்டெக்ஸ்-ல் இருக்கிற பக்க வரிசைப் படி இல்லை. மூன்று பக்கங்கள் வித்தியாசம் என புத்தகத்தின் இறுதிபக்கம் வரை தொடர்கிறது. கொஞ்சம் கவனித்திருந்தால் சரி செய்திருக்கலாம்.
***
விலை ரூ. 40

கிடைக்குமிடம் :

நேசனல் பப்ளிஷர்ஸ்,
2, வடக்கு உஸ்மான் சாலை,
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்),
தியாகராக நகர், சென்னை – 600 017 பேசி : 2834 3385

Friday, January 23, 2009

சக பதிவர்களே!

வாக்களிக்க தகுதி இருந்தும் தமிழ்மணத்திலிருந்து எனக்கு மின்மடல் வரவில்லை.


“கடந்த இரண்டு வருடங்களில்

49 பதிவுகள்.

2008ல் மட்டும்

27 பதிவுகள்.


கட் அன்ட் பேஸ்ட்

பதிவர்கள் பலர்.


நான்

சுயமாய் சிந்தித்து

எழுதியவை அனைத்தும்.


நேரம் இல்லை.

அதனால் இடுகைகளை

பரிந்துரைக்கவில்லை.


பரிந்துரைத்திருந்தால்

பாதி அவார்டுகளை

அள்ளிட்டு போயிருப்பேன்.


இப்படிசுயபுராணம் பாடவைத்த

உங்களை கண்டிக்கிறேன்.

விருது தான் கிடைக்காது.

நல்ல பதிவர்களுக்கு,

பதிவுகளுக்கு

வாக்களிக்கவாவது

விடுங்கப்பா!

எனக்கு வாக்களிக்க எதுவும் மின்மடல் வரவில்லை.”


பின்குறிப்பு : வேலை அதிகம் காரணமாக பரிந்துரைக்க நேரமில்லை. வாக்காவது அளிக்கலாம் என தமிழ்மணத்திற்கு, மேற்கண்ட பின்னூட்டத்தை அனுப்பி வைத்தால், இன்னும் “awaiting for moderation” என்ற நிலையிலேயே இருக்கிறது. இன்னும் மின்மடலும் வரவில்லை. என்ன செய்வது பதிவர்களே? ஆலோசனை சொல்லுங்கள்!

Friday, January 16, 2009

பேச்சிலர் சமையல்

சொந்த ஊரைவிட்டு, சொந்தங்களை விட்டு, வேலை தேடி, கிடைத்தாலும் பெரும் போராட்டங்களுடன் பெருநகரங்களில் ஒரு பேச்சிலராய் வாழும் இளைஞனின் வாழ்க்கை நிறைய சிரமங்களுடையது.

இராம் சுரேஷ் எழுதிய இந்த பதிவு சிரமங்களை விளக்குகிறது. “பேச்சிலர் சமையல்” தொடர்ச்சிக்காக இங்கே பதிவிடுகிறேன்.

***
நன்றி : இராம் சுரேஷ்

காலையில் எழுந்து பெட்காஃபியும் தூங்குவதற்கு முன் இளஞ்சூடான பாலும் சாப்பிட எல்லாருக்கும் ஆசை இருக்கும். இதெல்லாம் சொந்த/வாடகை வீட்டில் அம்மா அப்பாவுடனோ இல்லை மனைவியுடன் இருக்கும்போதோ மட்டும் தான் அமையும். ஆனால் சமீபத்தில் படித்து முடித்து விட்டு வேலை பார்க்கும், கல்யாணத்திற்கு இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் வரை இருக்கும் பேச்சிலர்ஸ்க்கு எல்லாம் அந்த வாழ்க்கை வாய்க்காது.காலையில் எழுந்து டீ சாப்பிடுவதற்கே மூன்றாவது ஃப்ளோரில் இருந்து இறங்கி பிஸியான ரோட்டை க்ராஸ் பண்ணி சாப்பிட்டு திரும்ப ரூம்க்கு வந்து ஆஃபிஸ் கிளம்புவதற்குள் அந்த ஆசையே விட்டுவிடும்.

வீக் எண்டில் முற்பகல் 11 மணி வரை தூங்கி எழுந்திருக்கும் நாட்களில், ஏதாவது சாப்பிடலாம் என்று ஹோட்டலுக்கு போனால், கடைக்காரர்கள் கார்கில் போரில் பாகிஸ்தான் தீவிரவாதியை பார்ப்பது போல் பார்ப்பான். காலை டிபனும் இருக்காது, மதியம் லஞ்ச் அப்போது தான் தயாராகிக் கொண்டிருக்கும். அடிவயிறு பசியால் பற்றி எரியும்போது மட்டும் வெளியே போய் டீயும் வடையும் சாப்பிட ஆசை வரும். அது அடுத்த ஒரு மணி நேரத்திற்கு தாங்கும். சரியாக மணி 12.45 ஆகும்போது வெளியே கெளம்பி தலப்பாக்கட்டு பிரியாணியில் லெக் பீஸுடன் பிரியாணி வாங்கிட்டு வந்து வீட்டில் சாப்பிடுவேன். சென்னையில் ஒவ்வொரு ஏரியாவிலும் அட்லீஸ்ட் ஒரு தலப்பாக்கட்டு பிரியாணி கடையாவது இருக்கும்.
.....
இரண்டு வாரம் முன்பு 11.45 ஷோ சில‌ம்பாட்டம் சத்யம் தியேட்டரில் பார்த்தேன். முடித்து விட்டு பக்கத்திலேயே இருக்கும் சரவண பவனில் ஒரு ஸ்பெஷல் மீல்ஸ் சாப்பிடலாம் என்று போனோம். அது சரவண பவனின் ஸ்பெஷல் கேட்டகிரி ஹோட்டல் என்று தெரியாது. அங்கு பரிமாறப்படும் ப்ளேட், டம்ளர் என்று சகலமும் வெள்ளியில் மின்னியது. இதெல்லாம் உங்ககிட்ட யார்றா கேட்டா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ரெண்டு ஸ்பெஷல் மீல்ஸ் கொண்டு வாங்க என்றேன்.

அதற்கு சர்வர், "அதெல்லாம் இங்கே கிடைக்காது சார். பிசினஸ் எக்ஸிகியூட்டிவ் மீல்ஸ், ஸ்பெஷல் பஞ்சாபி தாலி மட்டும் தான் கிடைக்கும்" என்றார். "அடப்பாவிங்களா?!!, நானே படம் பாத்துட்டு தலைவலியோடு வந்துருக்கேன். இதுல இவிங்க வேற‌" என்று நானே என்னை நொந்து கொண்டு ரெண்டு எக்ஸிகியூட்டிவ் மீல்ஸ் கொண்டு வாங்க என்றேன். ஒரு மீல்ஸ் 140 ரூபாய். பாத்திரங்களை வெள்ளியில் போட்டு, பில்லில் கொள்ளை அடிக்கிறார்கள். ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என்று மட்டும் தான் சரவண பவனில் சாப்பிடுவேன். அவர்கள் போடும் பில்லைப் பார்த்தால் அவ்வளவு நேரம் இருந்த பசியும் பறந்து விடும்.
இருந்தாலும் இரவில் சரவணபவனில் கிடைக்கும் மசாலா பாலுக்கு என் நாக்கு அடிமை.இது தவிர நான் ரெகுலராக செல்லும் இடம் திருவான்மியூர் R.T.O அருகில் இருக்கும் காரைக்குடி செட்டிநாடு ரெஸ்டாரெண்ட். நான் வெஜ் உணவுகள் சாப்பிடுவதற்கு சிறந்த இடம். இரண்டு பேர் சாப்பிட போனால் 500 ரூபாய்க்கு குறையாமல் செலவாகும். லோக்கல் காரைக்குடி கிராமத்து எஃபெக்ட் கொடுக்கிறேன் பேர்வழிகள் என்று சொல்லிக் கொண்டு மேலிருந்து தொங்கும் விளக்குகள், அங்கங்கே சுவற்றில் தொங்கும் முறம், கும்பலாக உட்கார்ந்து காய்க்றி நறுக்கும் கிராமத்து ஆட்களின் ஃபுல் ஸ்க்ரீன் போட்டோ, டிபிக்கல் காரைக்குடி ஸ்டைல் வேட்டிக் கட்டு என்று கெட்ட காமெடி பண்ணுவார்கள். அந்த ஹோட்டலில் எப்போதும் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை மட்டும் ப்ளேயரில் ஓடவிடுவார்கள். வாரத்துக்கு ஒரு முறை போனால் மட்டுமே பட்ஜெட்டைக் காப்பாற்ற முடியும்.நான் வேலை செய்யும் ஆஃபிஸில் இதுவரை மதியம் லஞ்ச் ஒரு பெரிய மெஸ்ஸில் அரேஞ்ச் பண்ணினார்கள். கடந்த மூன்று மாதமாக எல்லாருக்கும் SudexHo கூப்பன் கொடுத்து வெளியே சாப்பிட சொல்லிவிட்டார்கள். Height of Cost cutting!!! சொந்தங்களுடன் இருப்பவன் லஞ்ச் பாக்ஸ் கட்டிக் கொண்டு வந்து எங்கள் வயிற்றெரிச்சலையும் சேர்த்து மதிய உணவைக் கொட்டிக் கொள்வான். பாவப்பட்ட பேச்சிலர்ஸ்க்கெல்லாம் வாழ்வு கொடுக்க‌ சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட ஹோட்டல் தான் "ஆந்திரா மெஸ்". அள்ள அள்ள சாதத்தை இலையில் கொட்டுவார்கள். தினமும் நான் வருவதற்கு முன் ஆரம்பிக்கும் ஒரு கொல்ட்டி ஆள், நான் சாப்பிட்டு முடித்து எழுந்திருக்கும் போது தான் சாம்பார் முடித்து ரசம் வருவான். வாழ்க கொல்ட்டிஸ்.

பப்பு (பருப்பாம்), சாம்பார், ரசம், மோர்க்குழம்பு, பெருகு (தயிர் என்று தெலுங்கில் அர்த்தம்) எல்லாம் ஒரு ரவுண்ட் முடித்து வரும்போது வயிறு நான்கு மாத கர்ப்பிணி பெண் போல இருக்கும். எல்லாம் சேர்த்து 30 ரூபாய் தான். So cheap. ஆனால் அவர்கள் போடும் காரம் அவ்வளவு சீக்கிரம் தமிழர்களுக்கு ஒத்துக்காது. என்னுடன் சாப்பிட்ட ஒருவனுக்கு காரத்தால் அப்பெண்டிஸ் வந்து ஆபரேஷனுக்காக ஊருக்கு போய் இருக்கிறான். இது தவிர நம்மூரில் சாதிக்கட்சிகள் மாதிரி நான் தங்கியிருக்கும் ஏரியா முழுவதும் எக்கச்சக்கமான‌ ஹோட்டல்கள். நாலு சேர், டேபிள், முன்னாலே புரோட்டோ போடும் கல் இருந்தால் அதுவும் ஒரு ஹோட்டல் என்று கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். சொல்லி வைத்தது போல எல்லா கடைகளும் ஒரே விலை, ஒரே பரிமாறும் ஸ்டைல். குட்டி ப்ளேட் அதன் மேல் பாலிதீன் கவர் போட்டு நம் முன்னே ஒரு 7 வயது பையன் வைத்து விடுவான்.

அந்த ப்ளேட்டை ஒருவர் சாப்பிட்டு முடித்தவுடன் கழுவி முடித்தவுடன் அதன் மேல் அந்த பேப்பரை போடுவார்களா என்றெல்லாம் நீங்கள் யோசிக்க கூடாது. அதுவே உங்கள் மனசை உறுத்தி கடைக்காரரை பார்த்து கேள்வி கேட்டால், உடனே நீங்கள் சென்னை பாஷையில் திட்டப்பட்டு, "அப்படி நீ ஆசைப்பட்டால் சரவணபவன் போய் சாப்பிடு" என்று விரட்டிப்படுவீர்கள். அப்புறம் நீங்கள் நம்ம கோவத்தால ஒரு வடை போச்சே என்று வடிவேலு மாதிரி ஃபீல் பண்ண வேண்டி இருக்கும்.நானும் கொஞ்ச நாளா என்னோட ரூம் மேட்ஸ்கிட்ட குக் வச்சிக்கலாம்டா இல்லை ஒரு கேஸ் ஸ்டவ், குக்கர் வாங்கிக்கலாம்டா என்று எவனைக் கேட்டாலும் "அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம்டா... அவன் அவனுக்கு எப்போ வேலை போகும்னே தெரியாது. இதுல நீ வேற அத வாங்கலாம் இத வாங்கலாம்னுட்டு??" என்று திட்டுகிறான்.

இப்போதைக்கு எங்க ரூம்ல சுடு தண்ணீர் வைக்க ஒரு எலக்ட்ரிக் ஸ்டவ் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு பால் காய்ச்சி அதில் கெல்லாக்ஸ்(Kellogs)மிக்ஸ் பண்ணி காலையில் ப்ரேக் ஃபாஸ்டாகவும், மதியம் ஆந்திரா மெஸ்ஸிலும், நைட் ஃபாஸ்ட் ஃபுட் கடையிலும் சாப்பிட்டு பேச்சிலர் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்.

from
http://urfriendchennai.blogspot.com/2009/01/blog-post_05.html

Tuesday, January 6, 2009

“எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை!"




“எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை; கடனால் தற்கொலை செய்து கொள்கிறோம்”

கடிதம் எழுதி வைத்துவிட்டு நெல்லையில் நகைத் தொழிலாளி குடும்பம் தங்கள் தொழிலில் பயன்படுத்தும் சயனைடு குடித்து 6 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். – 04.01.2009 - நாளிதழ்களிலிருந்து

****

“எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என்பதற்கு தற்கொலை செய்து கொண்ட அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கலாம். இறந்து போனவர்களைப் பற்றி உச்சு மட்டும் கொட்டாமல், இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்து பார்க்கலாமே!

***
இந்த நிகழ்வு பற்றி எழுத ஆரம்பித்து, 4 பக்கம், 5 பக்கம் என கட்டுரை நீள்கிறது. அதனால், சேர்ந்து யோசிக்கலாம்.

* இங்கு கடன் வாங்காதவர்கள் யார்? இவர்கள் மட்டும் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?

* மிரட்டி விட்டு போன அல்லது தகாத வார்த்தைகளை சொல்லி திட்டிய நபர்களை தங்கள் கடிதத்தில் எழுதி வைத்திருக்கலாம். ஏன் அவ்வாறு எழுதவில்லை?

* தற்கொலை செய்து கொண்ட குடும்பம் நகை தொழிலாளர் குடும்பம்.
“செய்கூலி இல்லை: சேதாரம் இல்லை” என விளம்பரம் பார்க்கும் பொழுது நமக்கு என்ன உணர்வு வருகிறது?

* இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இயந்திரங்களால் செய்யப்பட்ட நவநாகரிக நகைகளை இறக்குமதி செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. இது சரியா?


* கந்துவட்டி – தனிநபர் பிரச்சனையா? அல்லது சமூக பிரச்சனையா?