Saturday, August 23, 2014

கூபி இசையும், நாலு வரங்களும் – அருமையான படம்!நேற்று மாலை சென்னையில் நடத்திய அனிமேஷன்  திரைப்பட விழாவிற்கு போயிருந்தேன். அதில் goopi gawaiya bagha bajaiya என்றொரு இந்திபடம். குழந்தைகள் உட்பட அனைவரும் பார்க்கவேண்டிய படமிது!

கதை. கூபி பாட்டு பாடும் ஒரு பாடகன். மிக மோசமாக பாடுகிறான். கேட்ட கிராமத்து மக்கள் தெறித்து ஓடுகிறார்கள்.  மன்னர் ஊருக்கு வெளியே இருக்கும் காட்டினுள் துரத்த உத்தரவிடுகிறார்.  இவனைப் போல மோசமாக மேளம் வாசிக்கும் இன்னொருவனும் பக்கத்து ஊர் மன்னனால் காட்டிற்குள் துரத்தப்படுகிறான்.  அன்றிரவு ஒருவர் வாசிக்க, இன்னொருவர் வாசிக்கிறார்கள். பேய்களின் ராஜாவிற்கு இவர்கள் பாடுவது மிகவும் பிடித்துவிடுகிறது! மனம் மகிழ்ந்து நான்கு வரங்களை தருகிறார்.

ஒன்று. அவர்கள் இருவரும் இன்னும் (!) அருமையாக பாடவேண்டும். சாப்பிட எது கேட்டாலும் கிடைக்கவேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் எங்கு வேண்டுமென்றாலும் போவதற்கு மாய செருப்புகள் வேண்டும். நாலாவது வரத்தை பிறகு கேட்பதாக சொல்கிறார்கள்.

அன்றிலிருந்து பட்டய கிளப்புகிறார்கள்.  உண்மையிலேயே அருமையாக பாடுகிறார்கள். அவர்களுடைய பாடல்களை கேட்பவர்கள் மனம் லயித்து கேட்கிறார்கள். வகைவகையாய் சாப்பிடுகிறார்கள். செருப்பு அவர்கள் விரும்பிய இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள்.

அந்த ஊர் மன்னனுக்கு ஒரு பிரச்சனை. பக்கத்து ஊர் ராஜாவாக இருக்கும் அவருடைய சகோதரன் நாடு பிடிக்கும் ஆசையில் சகோதர நாட்டின் மீதே படையெடுத்து வருகிறான்.  இவர் வைத்திருப்பதோ இம்சை அரசன் 23ம் புலிகேசியை விட பலவீனமான படை.  ஆகையால், பயந்து சாகிறார். தங்கள் இசையால் அந்த மன்னனின் படையெடுப்பை தடுப்பதாக சொல்லுகிறார்கள். இதை அவர்கள் செய்துவிட்டால், தன் மகளையே கல்யாணம் முடித்துதருவதாக வாக்கு தருகிறார்.

இருவரும் போய், சொன்னமாதிரியே தங்கள் மனதை மயக்கும் இசையால், அந்த மன்னனின் போர் வெறியை மாற்றுகிறார்கள். ஆனால், அங்குள்ள தீய நோக்கம் கொண்ட தளபதி மந்திரவாதியின் உதவியால், மீண்டும் போர்வெறி ஏற்றுகிறான். படைகள் தயாராகி, கிளம்புகின்றன.  மீண்டும் தங்கள் இசையால், அவன் மனதை மாற்றுகிறார்கள். 

இறுதியில், சமாதானமடையும் இரு மன்னர்களும். தங்களுடைய இரு பெண்களையும் இருவருக்கும் மணம் முடித்து வைக்கிறார்கள்.  இவர்கள் துவக்கத்தில் மோசமாக பாடியதால், வாய் பேசமுடியாத, காது கேட்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க பேய்களின் அரசனிடம் நாலாவது வரத்தை கேட்டு குணப்படுத்துகிறார்கள். இறுதியில் சுபம்.
*****
இந்திய திரைப்படங்களில் இத்தனை வண்ணமயமான அனிமேசன் படத்தை நான் முதன்முறையாக பார்க்கிறேன். பிரமாண்ட செலவில் எடுக்கப்பட்ட குங்பூ பாண்டாவின் இரண்டாவது பாகத்தின் நேர்த்தியை இந்த படத்தில் பார்த்தேன். அருமை.

இந்த கதையை எழுதியவர் சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திரா கிஷோர். 1968ல் ரே இதே கதையை கூபி கானே பாகே பாய்னே (Goopy Gyne Bagha Byne) என்ற பெயரில் எடுத்திருக்கிறார். ரேயின் தாத்தா குழந்தைகளுக்காக சந்தேஷ் என்ற இதழை நடத்தி வந்தார்அந்த இதழின் ஆசிரியராக பொறுப்பு ஏற்ற சத்யஜித்ரே குழந்தைகளுக்காக நிறைய கதைகள் எழுதியிருக்கிறார், அதில் பெலுடா சீரியஸ் எனப்படும் துப்பறியும் கதைகள் முக்கியமானவை.

சத்யஜித் ரே  எடுத்த கூபி கானே படம்  தேர்ந்த இசை மற்றும் துள்ளல் நடனம், வேடிக்கையான உரையாடல்கள், நாட்டுபுற கதையின் மரபில் அமைந்த இக்கதையை ரே அழகாக படமாக்கியிருக்கி இருப்பதாக சொல்கிறார்கள். அதையும் பார்க்கவேண்டும்.

மேலே சொன்ன கதையை தான் மீண்டும் 2013ல் மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள். அருமையான  துள்ளல் இசை. பாடல்கள்.  நகைச்சுவை ததும்பும் வசனங்கள். 

போர் உண்டாக்கும் அழிவையும், இசையும் மகத்துவத்தையும் விளக்கும் படமிது!  அண்ணன் பையனை அழைத்து சென்றிந்தேன். 8 வயது.

இந்த படத்தில் என்ன புரிந்தது? என கேட்டதற்கு..

1. நண்பர்களுக்குள் சண்டை போடக்கூடாது.
2. அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை போடக்கூடாது.
3. சண்டை (போர்) தப்பு

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்!
****
படத்தின் டிரைலர்

https://www.youtube.com/watch?v=o_mhF1i61Mc

No comments: