Wednesday, September 21, 2011

நொந்தகுமாரனின் பக்கங்கள் - பயணம்!


'எங்கேயும் எப்பொழுதும்' படம் குறித்த சில பதிவுகள் படித்த பொழுது, என்வாழ்விலும் நடந்த பேருந்து சம்பவங்கள் வரிசையாக மேலெழுந்து வந்தன. அதில் கலங்கடிக்கிற சில கோர விபத்துகளும் உண்டு. அதைப்பற்றியெல்லாம் சொல்லி, உங்களை பதற வைக்கிற எண்ணம் இல்லை. நம்மவர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. கல்யாணத்தைப் பற்றி பேசினால், வரிசையாக எல்லோரும் தங்கள் அனுபவங்களையும் சொல்வார்கள். நன்றாகத்தான் இருக்கும். ஆனால், விபத்து மாதிரி விசயங்களையும் வரிசையாக சொல்லும் பொழுது, ஏண்டா ஆரம்பித்தோம் என ஆகிவிடும். அப்படியெல்லாம் இல்லாமல், என் வாழ்வில் நடந்த ஒரு எளிய (!) நொந்த சம்பவம் இது.

****

ஒரு மூன்று நட்சத்திர விடுதியில் கொஞ்ச காலம் காசாளராக வேலை பார்த்த காலம் அது! முதல்நாள் இரவு 9 மணிக்கு துவங்கிய வேலை, காலை 7 மணிக்கு முடிந்து வெளியே வரவேண்டும். படுபாவி! எனக்கு பிறகு வரவேண்டிய சக ஊழியர் வரவில்லை. அப்படியே தொடர சொன்னார்கள். வேறுவழியில்லை. தொடர்ந்தேன்.

மதியம் 3 மணிக்கு வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. கரூரில் வசித்த மாமா திடீரென இதய நோயினால் இறந்துவிட்டதாகவும், மற்றவர்கள் எல்லோரும் உடனே கிளம்புவதாகவும், எப்படியோ வந்து சேர் எனவும் அண்ணன் தெரிவித்தார்.

அப்பாவின் அக்காவின் கணவர் என்பதால், சென்றே ஆகவேண்டும். வேலை முடிந்து, மாலை 6 மணிக்கு வெளியே வந்தேன். இரவு முழுவதும் தூங்காதது கண் எரிந்தது. தூங்க சொல்லி உடல் கெஞ்சியது. பஸ் தானே! தூங்கிகொண்டே போய்விடலாம் என உடலுக்கு சமாதானம் சொன்னேன். பஸ்ஸ்டாண்டிற்கு கிளம்பினேன்.

****

கரூர் வழியாக ஈரோடு செல்லும் பேருந்து தயாராக நின்றிருந்தது. பேருந்தில் சரிபாதி நிரம்பியிருந்தார்கள். எப்பொழுதும் பஸ்ஸின் இடப்பக்கத்தில் நடுவில் அமர்வேன். பயம் தான் காரணம். முன்னாடி மோதினாலோ, பின்னாடி மோதினாலோ தப்பித்து கொள்ளலாம். உயிர் பிழைக்க கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது. அப்படியே பஸ்ஸே ஒரு பாழடைந்த கிணற்றில் குதித்தால் என்ன செய்வாய் என நீங்கள் குறுக்கி கேள்வி கேட்ககூடாது.

10 நிமிடம். எல்லோருக்கும் நடத்துநர் டிக்கெட் தந்தார். நடத்துநர் சரியான சிடுமூஞ்சி. சில்லறைக்காகவும், மற்றும் எது கேட்டாலும் எரிந்து, எரிந்து விழுந்தார். சுத்தமாக பிடிக்கவில்லை. எப்படியும் தூங்கிவிடுவோம், பக்கத்தில் இருப்பவரை அலாராமாக பயன்படுத்தலாம் என நினைத்து, 'எங்கு போகிறீர்கள்?" என்றேன். சந்தேகமாய் பார்த்து, "திண்டுக்கல்" என்றார். இவரிடம் சொல்வது உதவாது என தூங்க ஆரம்பித்துவிட்டேன்.

ஒன்றரை மணி நேரம். சல சலவென எழுந்த சத்தத்தால் தூக்கம் கலைந்தேன். திண்டுக்கல். பக்கதில் இருந்த ஆள் மாறியிருந்தார். புதியவரிடம் "எங்கு போகிறீர்கள்?" என்றேன். கரூர் தாண்டி உள்ள ஊர் ஒன்றை சொன்னார். 'என்னை கரூரில் எழுப்பி விடுங்கள்' என்றேன். பொறுப்பாய் தலையாட்டினார். மீண்டும் தூங்கி போனேன்.

திடீரேன விழிப்பு வந்தது. கடிகாரத்தில் நேரம் பார்த்தேன். இரவு 10.15 மணி. அதிகபட்சம் 9.30 க்குள்ளாகவே கரூரை அடைந்திருக்க வேண்டும். என்ன ஆச்சு? ஒரே குழப்பமாயிருந்தது. அருகில் இருந்தவர் ஆள் மாறியிருந்தார். வரபோகும் ஊர் என்ன? என்றேன். கொடுமுடி என்றார். கரூருக்கும், ஈரோட்டிற்கும் நடுவில் இருக்கிறேன்.

எழுப்பி விடுகிறேன் என சொல்லிவிட்டு எழுப்பாமல் போய்விட்டாரே! என மனதுக்குள் திட்டினேன். இந்த நடத்துநருக்கு டிக்கெட் குறைந்திருக்குமே! அந்த ஆள் எப்படி கேட்காமல் விட்டார் என நடத்துநரை தேடினேன். நிம்மதியில்லாமல் முன்னும், பின்னும் நடமாடிக்கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்தவரிடம் நான் கரூரிலேயே இறங்கியிருக்க வேண்டும். அருகில் இருப்பவரிடம் சொல்லிவைத்திருந்தேன். எழுப்பாமல் விட்டுவிட்டார் என்றேன். அதற்கு அவர் "கண்டக்டர் ஒரு டிக்கெட் குறைகிறதே என எல்லோரையும் கேட்டு வந்தவர், என்னையையும் எழுப்ப வந்தாராம்! அவர் ஈரோடு வரைக்கும் போகிறார். என்னிடம் சொல்லிவிட்டு தான் தூங்கினார் என அடித்து சொன்னதும், எழுப்பாமல் போய்விட்டாராம். அடப்பாவி! கவித்துட்டானே! தூங்கி, தூங்கி அந்த ஆள் மேல் விழுந்து எழுந்ததால் அந்த கடுப்பில் பழிவாங்கிவிட்டானோ?! தூக்க கலக்கத்தில் கரூர் என்று சொல்வதற்கு பதிலாக, ஈரோடு என சொல்லிவிட்டோமோ என்றெல்லாம் யோசித்தேன்.

சரி! இனி என்ன செய்வது? நடத்துநரிடம் போய் என் நியாயத்தை சொன்னால், அந்த ஆள் காது கொடுத்து கேட்க வாய்ப்பேயில்லை. நிச்சயம் கடித்து துப்பிவிடுவார். என்ன செய்யலாம் என யோசித்த பொழுது, ஒரு இரயில்வே கேட்டில் வண்டி நின்றது. அருகில் ஊர் இருப்பது தெரிந்தது. இங்கேயே நைசாக இறங்கிவிடலாம் என இறங்கினேன். ரயில் போனதும், பஸ்சும் போய்விட்டது.

கேட் கீப்பரிடம் ஒரு வணக்கத்தை போட்டு, சகல விசயத்தையும் சொன்னேன். எந்த பக்கம்? எவ்வளவு தூரம் போனால், கரூருக்கு பஸ் கிடைக்கும்? என்றேன். இங்கிருந்து 2 கிலோமீட்டர் நட்ந்தால், பஸ் நிலையம் வந்துவிடும். ஆனால், இந்நேரத்திற்கு நடந்து போனால், இரண்டு இடங்களில் போலீஸ் நிற்கும். சந்தேக கேஸில் பிடித்து உள்ளே வைத்துவிடுவார்கள். இப்பொழுது போனாலும் பஸ்சும் கிடைக்காது. ஆகையால், இங்கேயே படு. காலையில் போய்கொள்ளலாம் என்றார். வேறு வழியில்லை. அங்கேயே தூங்கினேன்.

5.30 மணிக்கு எழுப்பி, கேட் கீப்பர் அவர் செலவிலே ஒரு நல்ல தேநீரும் வாங்கி தந்தார். நன்றி சொல்லி, பஸ் பிடித்து, 7 மணி போல அத்தை வீட்டை அடைந்தேன். எல்லோரும் என்னடா இரவே வந்துவிடுவதாக சொன்னாங்க!. ஆளையே காணோம்! என்றார்கள்.

என் சின்ன அக்காவிடம் நடந்ததை மெல்ல கூறினேன். ஒருமணி நேரத்தில் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஆளாளுக்கு கலாய்த்தார்கள்.

*****

நீதி : பொது மக்கள் சேவை தொடர்பான வேலைகள் செய்பவர்கள் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும். நடந்துநர் மட்டும் நல்லவராய் இருந்திருந்தால், அவரிடமே என்னை கரூரில் எழுப்பி விடுங்கள் என உதவி கேட்டிருப்பேன்! அவருக்கும் தொல்லை இருந்திருக்காது!
****

டெயில் பீஸ் : பஸ் என கூகுளில் தேடினால், பல வெளிநாட்டு பஸ்சுகள் விதவிதமாக வரிசையில் அழகாக வந்து நின்றன. தமிழ்நாடு பஸ் என தேடினால், பஸ் எரிந்தோ, கவிழ்ந்தோ தான் வருகின்றன! நல்லா கிளப்புறங்கப்பா பீதியை!

Monday, September 19, 2011

மனிதர்கள் 10 - பாரதி


நண்பனின் அண்ணி இராதா பற்றி எழுதி பகிர்ந்த பொழுது, அடுத்து பகிர்ந்து கொள்ள வேண்டிய மனுசி பாரதி என முடிவெடுத்தேன். கசப்பு மருந்து சாப்பிட்டால், உடனே நாக்கு இனிப்பு தேடும் அல்லவா! அது போல!

****

ஆசிரியர் நண்பர் ஒருவர், எனக்கு திருமணம் செய்துவிட வேண்டும் என ஆர்வமாய் இருந்தார். அவசரத்திற்கு காரணம், மணல் கயிறு எஸ்.வி. சேகர் போல நானும் சில நிபந்தனைகளை அவரிடம் சொல்லியிருந்தேன். இந்த நிபந்தனைகளின்படி என் பெற்றோர்களால் எனக்கு பெண் பார்க்கமுடியாது என உறுதியாய் நம்பினார். இப்ப தேடினால் தான், இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளிலாவது முடியும் என்றார். கல்யாணம் செய்யுமளவிற்கு நிதானம் வந்ததாய், என்மீது எனக்கே நம்பிக்கையில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றேன்.

****

அவருடைய டிவிஎஸ் 50 யில் என்னை வலுக்காட்டாயமாக இழுத்துக்கொண்டு போனார் என்று தான் சொல்ல வேண்டும். பெண் பார்க்க போய்கொண்டிருக்கிறோம். எனக்கு விருப்பமே இல்லை. சம்பிரதாய பெண் பார்த்தல் கூடாது. பஜ்ஜி, சொஜ்ஜியெல்லாம் சாப்பிடமாட்டேன் என்ற நிபந்தனையை ஞாபகப்படுத்தினேன். அதெல்லாம் பிரச்சனையே இல்லை. அந்த வீட்டில் அந்த பெண் மட்டும் தான் இருப்பார். எதைச்சையாய் வருவதாய் தான் சொல்லியிருக்கிறேன். நான் பேச்சுக்கொடுக்கிறேன். பிடித்திருக்கிறதா! என சொல் என்றார். பார்த்துவிட்டு, பிடிக்கவில்லை என சொல்லிவிட வேண்டியது தான்! என நினைத்துக்கொண்டே போனேன். பெயர் என்ன? பாரதி என்றார். பெயர் பிடித்திருந்தது.

****

பாரதி மாநிறமாய் இருந்தார். அக்காவின் குட்டிக் குழந்தைக்கு சோறு ஊட்டிக்கொண்டிருந்தார். நண்பர் சில கேள்விகள் கேட்க, பாரதி பதிலளிக்க, இந்த உரையாடல்களில் பாரதியை பிடிக்காமல் போய்விட்டது. காரணம் : தொழிற்கல்வியில் தான் ஆர்வம். அம்மாவின் வற்புறுத்தலில் தான் பி.காம்.மை தபால் வழியில் படித்துவருகிறார். சுறுசுறுப்பில்லாமல் அசமந்தமாய் இருந்தார். திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லவேண்டும் என்பது என் நிபந்தனைகளில் ஒன்று. பாரதி வேலைக்கு செல்லமாட்டார் என உணர்ந்தேன்.

திரும்பும் பொழுது, பிடித்திருக்கிறதா? என்றார். 'பிடிக்கவில்லை' என்றேன் உடனே!

****

இரண்டு வாரக் காலத்தில் பாரதியை சுத்தமாய் மறந்துபோயிருந்தேன். இதற்கிடையில், என்னிடம் சொல்லாமலே, பாரதியையும், அவர் அம்மாவையும் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு, இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

பாரதி பளிச்சென்று இருந்தார். அன்று பார்த்த பாரதி வேறு! இன்று பார்க்கும் பாரதி வேறு! தன் நிறத்திற்கு ஏற்ற ஒரு நல்ல உடை. புன்முறுவலான முகம். பாரதி அம்மாவிடம் நண்பர் அறிமுகப்படுத்தினார். பாரதியின் அம்மா என் குடும்பம் குறித்து, வேலை குறித்து சில கேள்விகள் கேட்டார். பதில் சொன்னேன்.

தனியாக பாரதியும் நானும் 15 நிமிடம் பேசினோம். பாரதிக்கு என்னிடம் கேட்பதற்கு ஏதும் கேள்விகள் இல்லை. நான் தான் சில கேள்விகள் கேட்டு பேசினேன். பிறகு கிளம்பினார்கள்.

பாரதியின் அம்மாவும், அப்பாவும் காதல் திருமணம் முடித்தவர்கள். அப்பா ஒரு சிறிய தொழில் நடத்திவருகிறார். அம்மா ஒரு கூட்டுறவு வங்கியில் வேலை செய்கிறார். பெண் வேறு சாதி இருக்கவேண்டும். சாதி மறுத்த தம்பதிகளோ, காதல் தம்பதிகளின் பெண்ணோ இருந்தால் நல்லது என்ற நிபந்தனை பாரதி விசயத்தில் பொருந்தி வந்தது.

இந்தமுறையும், "பிடித்திருக்கிறதா?" என்றார். 'பிடித்திருக்கிறது' என்றேன்.

****

நாலு நாள் கழித்து, நண்பர் சோகமாய் சொன்னார். பாரதி பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டதாக தெரிவித்தார். மவனே நீ முதலில் பிடிக்கவில்லை என்றாய். இப்பொழுது பாரதி பிடிக்கவில்லை என்கிறார். சரியாக போயிற்று! அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் பாரதியை மறந்து போனேன்.

****

பத்து நாள்கள் கழித்து, ஒரு நாள் மதியம் போன் வந்தது. பேசியது யாரென அறிந்தால், நீங்களே ஆச்சர்யம் அடைவீர்கள் "பாரதி". 'நல்லா இருக்கிங்களா?" என்றார். நானும் நலம் விசாரித்தேன். சொல்லுங்க! என்றேன். "உங்ககிட்ட பேசணுமே!' என்றார். "பிடிக்கவில்லை என சொன்னதாக நினைவு?" என நினைவுப்படுத்தினேன். "அதுவா! எனக்கு கல்யாணம் தான் வேணாம்னு சொன்னேன். உங்களை பிடிக்கலைன்னு சொல்லலையே! (அதானே பார்த்தேன்!) இப்பத் தான் எங்க அம்மாச்சியை பார்த்து பேசினேன். உனக்கு பிடிச்சிருந்தா, கட்டிக்க என சொன்னார்" என்றார்.

'எங்க சந்திக்கலாம்? நீங்களே ஒரு இடம் சொல்லுங்க!" என்றேன் நல்ல பிள்ளையாய்! இரண்டு மூன்று இடங்களை சொன்னவர், இறுதியில் எங்க வீட்டுக்கே வந்துடுங்களேன்!" என்றார்.

வீட்டுக்கு போனேன். பாரதி புன்சிரிப்புடன் வரவேற்றார். அப்பா உம்மென உட்கார்ந்திருந்தார். அம்மா சங்கடமாய் வரவேற்றதாய் உணர்ந்தேன். பேசுவதற்கான சூழல் அங்கு நிச்சயம் இல்லை. "மாடிக்கு போகலாமா!" என்றார் பாரதி. போனோம்.

'சொல்லுங்க! என்னாச்சு இந்த பத்து நாள்களில்? ஏன் இவ்வளவு குழப்பம்?"

"உங்களைப் பார்த்து பேசிவந்த பிறகு, எனக்கு கல்யாணம் வேண்டாம் என்றேன். பிடிக்கவில்லை என்பதாய் புரிந்துகொண்டார்கள். இரண்டு நாள்களுக்கு முன்பு, சென்னைக்கு போய், ஒரு மாப்பிள்ளைப் பார்த்து, பிடித்துவிட்டதால், உறுதியளித்து வந்திருக்கிறார்கள்" என்றார்.

மாப்பிள்ளை பற்றிய விவரம் கேட்டேன். சொன்னார். "அந்த மாப்பிள்ளை பிடிச்சிருந்தா, கல்யாணம் செய்துகொள்ள வேண்டியது தானே?" என்றேன்.

"அவங்க வரதட்சணையாக 20 பவுன் வரை கேட்கிறார்கள்.எனக்கு பிடிக்கவில்லை. " என்றார்.

வரதட்சணை வாங்கமாட்டேன் என்ற என் நிபந்தனை நினைவுக்கு வந்தது.

பாரதியே தொடர்ந்தார். "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் அக்காவை கட்டிக்கொடுத்தோம். இப்பொழுது கடந்த ஒரு வருடமாக வீடு கட்டிக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது, மீண்டும் என் கல்யாணத்திற்கு கடன் என்றால், அம்மா, அப்பா நிறைய கடன்படுவார்கள். சிரமப்படுவார்கள். அதனால் தான்!" என்றார். அம்மா, அப்பாவை நேசிக்கிற பாரதியை அந்த நிமிசத்தில் நிறைய பிடித்தது.

"புரியுது! இப்ப நான் என்ன செய்யவேண்டும்?" நேசமான புன்னகையுடன்!

"அம்மா, அப்பாவுடன் நீங்கள் பேசுங்கள்" என்றார்.

"வரதட்சணை இதெல்லாம் விடுங்கள். என்னை உண்மையிலேயே பிடித்திருக்கிறதா?" என்றேன்.

"பிடித்திருக்கிறது!" என்றார் முகமலர்ச்சியுடன்!

"சரி அம்மாவை கூப்பிடுங்க!" என்றேன்.

பாரதியை முறைத்துக்கொண்டே மேலே வந்தார். "என்னாங்கம்மா?" என்றேன். பாரதி சொன்ன விவரங்களை அவர் வார்த்தைகளில் சொன்னார். சென்னைக்கு போய் பார்த்து, பேசி வந்த பிறகு, உங்களை இப்ப வரச்சொல்லியிருப்பதால், அவங்க அப்பா கீழே கோபமாய் அமர்ந்திருக்கிறார்!" என்றார்.

"சரிங்கம்மா! பாரதி வரச் சொன்னாங்கன்னு வந்தேன். எனக்கு பாரதியை பிடிச்சிருக்கு! பாரதியும் என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க! உங்க இரண்டு பேர் மீது, நிறைய அன்பும், மரியாதையும் வைச்சிருங்காங்க! பெண்ணோட விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க! இனிமேல் குடும்பத்துல பேசி நீங்க தான் முடிவெடுக்கனும். என்ன முடிவு என்றாலும், தயங்காமல் தெரியப்படுத்துங்கள்!" என கிளம்பினேன்.

****

மூன்று நாட்கள் கழித்து, மதிய வேளையில் பாரதியின் அம்மா பேசினார்.

"அவங்க அப்பா சென்னை சம்பந்தத்தில், உறுதியாய் இருக்கிறார். மன்னிச்சுங்க" என்றார்.

பாரதியின் புன்னகையான முகம் ஒருமுறை வந்து போனது. "வாழ்த்துக்கள் பாரதி" என மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்.

****

Thursday, September 1, 2011

மனிதர்கள் 9 - இராதா



அந்த கல்யாண மண்டபத்தில் அந்த அதிகாலை வேளையில் கூட்டம் அதிகமில்லை. இருந்த சிலபேரும் ஏதாவது வேலையில் மும்முரமாய் இருந்தார்கள். நம்முடைய திருமணங்கள் நிறைய வேலை வாங்குபவை. திருமணங்கள் எளிமையாகவும், கலகலப்பாகவும் இருக்கவேண்டும். அதற்கு இன்னும் சில தலைமுறைகள் கடக்கவேண்டும். நண்பனின் அண்ணன் திருமணம் இது. அவர்களுடைய சாதி வழக்கப்படி பெண் வீட்டாரின் ஊரில் தான் திருமணம், அவர்களே தான் செலவு செய்யவேண்டும் என்ற விதியில் அந்த சிறிய ஊரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனி பஸ் பிடித்து சென்னையிலிருந்து நேற்றே ஒரு கும்பலாய் வந்து இறங்கினோம்.

முகூர்த்த நேரம் நெருங்கும்பொழுது, மண்டபம் நிறைந்துவிட்டது. பட்டுப்புடவையில் பெண் வந்து அமர்ந்தார். சடங்குகள் செய்ய ஆரம்பித்தார்கள். பெண்ணை அப்பொழுது தான் முதன் முறை பார்த்தேன். களையான முகம். ஆனால், முகத்தில் சந்தோசம் இல்லை. கோபம், எரிச்சல் லேசாக இருந்தது போல தெரிந்தது. ஏகப்பட்ட சடங்குகள் முடித்து, ஒருவழியாக திருமணம் முடிந்தது.

****
ஏன் டல்லாக இருந்தார் என மதிய வேளையில் நண்பனை கேட்டால், என்னை போலவே பலரும் கேட்டிருக்கிறார்கள். "இருபது பவுன் நகை போட்டிருக்கிறார்கள். 30 பவுன் நகை கேட்டதால், சண்டை நடந்திருக்கிறது. என்னை ஏண்டா முறைக்கிற! ஏம்பா! நாங்க கேட்கல! பெண்ணே அப்பாவிடம் கேட்டு சண்டை போட்டிருக்கிறார்" என்றான். அதிர்ச்சியாய் இருந்தது.

ஏற்கனவே திருமணம் சம்பந்தமான துவக்க பேச்சில், நண்பனின் பெற்றோர் மணமகள் பெற்றோரிடம் "உங்கள் பெண்ணுக்கு போடுவதை போடுங்கள்!' என சொல்லிவிட்டார்களாம். நல்லவர்களாக தெரிகிறார்களா? அதுதான் இல்லை. அவர்களுக்கு இருப்பது ஒரே பெண். நாமாக 20பவுன் கேட்டு, அவர்கள் 30 பவுன் போடுவதில் இருந்து குறைத்துவிட்டர்கள் என்றால், நஷ்டமாயிடுமே! என்ற நல்லெண்ணந்தான். அப்பொழுதே சொன்னேன். இது தப்புடா! வரதட்சணையே தப்பு. ஆனால், இப்படி ஒரு எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு, பேசுவது நல்லதல்ல! பின்னாடி சிக்கலாயிடும்! என்று வாதாடியெல்லாம் நினைவுக்கு வந்தது.

பெண்ணின் குடும்பம் வசதியான குடும்பெல்லாம் கிடையாது. அப்பா சிங்கப்பூரில் பழக்கடையில் வேலை செய்யும் தொழிலாளி தான். மாதம் 10000 ரூ.க்கு மேல் சம்பளம் வாங்கியிருந்தால், அதிகம் தான். அதை சிறுக சிறுக சேமித்து, ஊரில் கொஞ்சம் நிலங்கள் வாங்கியிருக்கிறார். மகளை டிகிரி வரை படிக்க வைத்து, கூடுதலாக நகைகளும் சேர்த்திருக்கிறார். இரண்டு பசங்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பொறுப்புகள் இருப்பவர் 20 பவுன் நகை போட்டதே பெரிய ஆச்சர்யம்! சொந்த அப்பாவிடமே கொள்ளை அடிக்க நினைக்கும் ஒரு பெண்ணை பார்த்த பொழுது, பயம் தான் வந்தது. நண்பனின் வீட்டுக்கு வருகிறாரே என உடனே கவலையும் வந்தது!

****

அடுத்தடுத்த மாதங்களில் நண்பன் தன் அண்ணியைப் பற்றி அவ்வப்பொழுது புலம்ப ஆரம்பித்தான். யாரையும் மதிப்பதில்லை; தற்பெருமையோடும், திமிராகவும் பேசுகிறார். வீட்டில் உள்ள யாருக்கும் அண்ணியை பிடிக்கவில்லை. அவருடன் பேசுவதை எல்லோரும் தவிர்க்க ஆரம்பிக்கிறார்கள் என்றான்.

அப்பா தொழிலாளி; அம்மா வீட்டை கவனித்துக்கொள்பவர்; வாழ்ந்தது கிராமத்தில்! பிறகு எப்படி இந்த குணம்? என தேடினால், அவர் பெரும்பாலும் வளர்ந்தது அவருடைய பெரியம்மா வீட்டில்! அவருக்கு குழந்தை இல்லை. இவர் அவருக்கு செல்லப்பிள்ளை. பெரியம்ம்மா வேலைக்கு செல்பவர். செல்வமும் இருந்திருக்கிறது. ஆகையால், வசதியானவர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரியில் படித்திருக்கிறார். மேலும், கல்லூரி காலங்கள் முழுவதும் கல்லூரி விடுதியில் தங்கியிருக்கிறார்.

****

பெண்ணின் சொந்த சித்தப்பா சிங்கப்பூரில் இருக்கிறார். நண்பன் குடும்பத்துக்கு நல்ல நெருக்கமும் கூட! நிதானமான ஆள். திருமணத்திற்கு வராத முடியாததால், மணமக்களை வந்து பார்த்தவர், பிரச்சனைகளை அறிந்து 'பெண் எடுப்பதற்கு முன்னால் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்! உங்க குடும்பத்துக்கு செட்டாகாது என சொல்லியிருப்பேன்' என்று சொன்னதும், அதிர்ந்துவிட்டார்கள்.

'பெண், உங்க அம்மாவின் ஊர் தானே? விசாரிக்கவில்லையா?' என்றேன் நண்பனிடம்! 'அம்மா ஒரு விசேசத்துக்கு சென்றவர், பேசி முடித்துவிட்டு வந்துவிட்டார். தோற்றம் பார்த்து, அண்ணனும் பிடித்துவிட்டது!' என்றான். 'சொந்தத்தில் இருக்கும் ஒரு வசதியே, பெண்ணின் குணத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடிவது தான். அதிலும் கோட்டை விட்டுவிட்டீர்களே!'என்றேன்.

****

வீட்டில் உள்ளவர்களிடம் சண்டைகள், சச்சரவுகள் நாளும் வளர ஆரம்பித்தன. வீட்டில் உள்ளவர்களும் நிதானம் இன்றி பேசுகிறார்கள் என்றான். உதிரிப்பூக்கள் படத்தின் இறுதி காட்சியில், விஜயனின் இறுதி வசனம் நினைவுக்கு வந்தது. 'உங்க எல்லோரையும் கெட்டவர்களாக மாற்றிவிட்டேன்ல!'

'சரிப்பா! உங்க குடும்பத்துக்கா வாக்கப்பட்டுச்சு! உங்க அண்ணனுக்கு தானே! அவர்களுக்குள் ஏதும் பிரச்சனையில்லையே?' என்றேன். அண்ணன் நிறைய அமைதியாகிவிட்டான். முன்பெல்லாம் எப்பொழுதாவது குடிக்கிறவன், இப்பொழுது அதிகமாகி இருக்கிறது என்றான்.

'தனிக்குடித்தனம் வைத்துவிட வேண்டியது தானே!' என்றால், 'அது நாமே சொன்னால் நல்லா இருக்காது!' என்றான். இதென்னடா கொடுமை! சண்டையெல்லாம் முற்றி, முகம் கொடுத்து பேச முடியாமல் போனபிறகு, பிரிவதை விட, முன்பே பிரிவது நல்லது என்பது கூட ஏன் தெரியாமல் போனது?

****
ஒருநாள் நண்பன் சோகமாய் வந்தான். என்னடா என்றால், நேற்றிரவு என் அண்ணி தற்கொலை செய்ய முயற்சித்தார்கள். ஏதோ சத்தம் கேட்டு, அண்ணன் எழுந்த பொழுது, கயிற்றில் தொங்கி கொண்டிருந்திருக்கிறார். அண்ணன் பதறிப்போய் கீழே இறக்கிப் பார்த்தால், கழுத்தில் கயிற்றின் தழும்பு ஆழ பதிந்திருக்கிறது. இன்னும் இரண்டு நொடி தாமதத்திருந்தால் கூட உயிர்போயிருக்கும் என்றான்.

****
என்ன பெண் இவள்! சொந்த அம்மா தொடங்கி, நேற்று திருமணம் முடித்த கணவன் வரைக்கும் எல்லா மனிதர்களிடமும் முரண்பட்டு, மோசமான சூழ்நிலையை உருவாக்கி விட்டு, அதிலிருந்து தப்பிக்க நினைத்து, இன்றைக்கு செத்து, பிழைத்திருக்கிறாள். அந்தப் புகைப்படத்தில் உள்ள மரம், ராதாவிற்கு நல்ல உருவகமாக எனக்குப்படுகிறது.

****