Thursday, September 1, 2011

மனிதர்கள் 9 - இராதா



அந்த கல்யாண மண்டபத்தில் அந்த அதிகாலை வேளையில் கூட்டம் அதிகமில்லை. இருந்த சிலபேரும் ஏதாவது வேலையில் மும்முரமாய் இருந்தார்கள். நம்முடைய திருமணங்கள் நிறைய வேலை வாங்குபவை. திருமணங்கள் எளிமையாகவும், கலகலப்பாகவும் இருக்கவேண்டும். அதற்கு இன்னும் சில தலைமுறைகள் கடக்கவேண்டும். நண்பனின் அண்ணன் திருமணம் இது. அவர்களுடைய சாதி வழக்கப்படி பெண் வீட்டாரின் ஊரில் தான் திருமணம், அவர்களே தான் செலவு செய்யவேண்டும் என்ற விதியில் அந்த சிறிய ஊரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனி பஸ் பிடித்து சென்னையிலிருந்து நேற்றே ஒரு கும்பலாய் வந்து இறங்கினோம்.

முகூர்த்த நேரம் நெருங்கும்பொழுது, மண்டபம் நிறைந்துவிட்டது. பட்டுப்புடவையில் பெண் வந்து அமர்ந்தார். சடங்குகள் செய்ய ஆரம்பித்தார்கள். பெண்ணை அப்பொழுது தான் முதன் முறை பார்த்தேன். களையான முகம். ஆனால், முகத்தில் சந்தோசம் இல்லை. கோபம், எரிச்சல் லேசாக இருந்தது போல தெரிந்தது. ஏகப்பட்ட சடங்குகள் முடித்து, ஒருவழியாக திருமணம் முடிந்தது.

****
ஏன் டல்லாக இருந்தார் என மதிய வேளையில் நண்பனை கேட்டால், என்னை போலவே பலரும் கேட்டிருக்கிறார்கள். "இருபது பவுன் நகை போட்டிருக்கிறார்கள். 30 பவுன் நகை கேட்டதால், சண்டை நடந்திருக்கிறது. என்னை ஏண்டா முறைக்கிற! ஏம்பா! நாங்க கேட்கல! பெண்ணே அப்பாவிடம் கேட்டு சண்டை போட்டிருக்கிறார்" என்றான். அதிர்ச்சியாய் இருந்தது.

ஏற்கனவே திருமணம் சம்பந்தமான துவக்க பேச்சில், நண்பனின் பெற்றோர் மணமகள் பெற்றோரிடம் "உங்கள் பெண்ணுக்கு போடுவதை போடுங்கள்!' என சொல்லிவிட்டார்களாம். நல்லவர்களாக தெரிகிறார்களா? அதுதான் இல்லை. அவர்களுக்கு இருப்பது ஒரே பெண். நாமாக 20பவுன் கேட்டு, அவர்கள் 30 பவுன் போடுவதில் இருந்து குறைத்துவிட்டர்கள் என்றால், நஷ்டமாயிடுமே! என்ற நல்லெண்ணந்தான். அப்பொழுதே சொன்னேன். இது தப்புடா! வரதட்சணையே தப்பு. ஆனால், இப்படி ஒரு எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டு, பேசுவது நல்லதல்ல! பின்னாடி சிக்கலாயிடும்! என்று வாதாடியெல்லாம் நினைவுக்கு வந்தது.

பெண்ணின் குடும்பம் வசதியான குடும்பெல்லாம் கிடையாது. அப்பா சிங்கப்பூரில் பழக்கடையில் வேலை செய்யும் தொழிலாளி தான். மாதம் 10000 ரூ.க்கு மேல் சம்பளம் வாங்கியிருந்தால், அதிகம் தான். அதை சிறுக சிறுக சேமித்து, ஊரில் கொஞ்சம் நிலங்கள் வாங்கியிருக்கிறார். மகளை டிகிரி வரை படிக்க வைத்து, கூடுதலாக நகைகளும் சேர்த்திருக்கிறார். இரண்டு பசங்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பொறுப்புகள் இருப்பவர் 20 பவுன் நகை போட்டதே பெரிய ஆச்சர்யம்! சொந்த அப்பாவிடமே கொள்ளை அடிக்க நினைக்கும் ஒரு பெண்ணை பார்த்த பொழுது, பயம் தான் வந்தது. நண்பனின் வீட்டுக்கு வருகிறாரே என உடனே கவலையும் வந்தது!

****

அடுத்தடுத்த மாதங்களில் நண்பன் தன் அண்ணியைப் பற்றி அவ்வப்பொழுது புலம்ப ஆரம்பித்தான். யாரையும் மதிப்பதில்லை; தற்பெருமையோடும், திமிராகவும் பேசுகிறார். வீட்டில் உள்ள யாருக்கும் அண்ணியை பிடிக்கவில்லை. அவருடன் பேசுவதை எல்லோரும் தவிர்க்க ஆரம்பிக்கிறார்கள் என்றான்.

அப்பா தொழிலாளி; அம்மா வீட்டை கவனித்துக்கொள்பவர்; வாழ்ந்தது கிராமத்தில்! பிறகு எப்படி இந்த குணம்? என தேடினால், அவர் பெரும்பாலும் வளர்ந்தது அவருடைய பெரியம்மா வீட்டில்! அவருக்கு குழந்தை இல்லை. இவர் அவருக்கு செல்லப்பிள்ளை. பெரியம்ம்மா வேலைக்கு செல்பவர். செல்வமும் இருந்திருக்கிறது. ஆகையால், வசதியானவர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரியில் படித்திருக்கிறார். மேலும், கல்லூரி காலங்கள் முழுவதும் கல்லூரி விடுதியில் தங்கியிருக்கிறார்.

****

பெண்ணின் சொந்த சித்தப்பா சிங்கப்பூரில் இருக்கிறார். நண்பன் குடும்பத்துக்கு நல்ல நெருக்கமும் கூட! நிதானமான ஆள். திருமணத்திற்கு வராத முடியாததால், மணமக்களை வந்து பார்த்தவர், பிரச்சனைகளை அறிந்து 'பெண் எடுப்பதற்கு முன்னால் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்! உங்க குடும்பத்துக்கு செட்டாகாது என சொல்லியிருப்பேன்' என்று சொன்னதும், அதிர்ந்துவிட்டார்கள்.

'பெண், உங்க அம்மாவின் ஊர் தானே? விசாரிக்கவில்லையா?' என்றேன் நண்பனிடம்! 'அம்மா ஒரு விசேசத்துக்கு சென்றவர், பேசி முடித்துவிட்டு வந்துவிட்டார். தோற்றம் பார்த்து, அண்ணனும் பிடித்துவிட்டது!' என்றான். 'சொந்தத்தில் இருக்கும் ஒரு வசதியே, பெண்ணின் குணத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடிவது தான். அதிலும் கோட்டை விட்டுவிட்டீர்களே!'என்றேன்.

****

வீட்டில் உள்ளவர்களிடம் சண்டைகள், சச்சரவுகள் நாளும் வளர ஆரம்பித்தன. வீட்டில் உள்ளவர்களும் நிதானம் இன்றி பேசுகிறார்கள் என்றான். உதிரிப்பூக்கள் படத்தின் இறுதி காட்சியில், விஜயனின் இறுதி வசனம் நினைவுக்கு வந்தது. 'உங்க எல்லோரையும் கெட்டவர்களாக மாற்றிவிட்டேன்ல!'

'சரிப்பா! உங்க குடும்பத்துக்கா வாக்கப்பட்டுச்சு! உங்க அண்ணனுக்கு தானே! அவர்களுக்குள் ஏதும் பிரச்சனையில்லையே?' என்றேன். அண்ணன் நிறைய அமைதியாகிவிட்டான். முன்பெல்லாம் எப்பொழுதாவது குடிக்கிறவன், இப்பொழுது அதிகமாகி இருக்கிறது என்றான்.

'தனிக்குடித்தனம் வைத்துவிட வேண்டியது தானே!' என்றால், 'அது நாமே சொன்னால் நல்லா இருக்காது!' என்றான். இதென்னடா கொடுமை! சண்டையெல்லாம் முற்றி, முகம் கொடுத்து பேச முடியாமல் போனபிறகு, பிரிவதை விட, முன்பே பிரிவது நல்லது என்பது கூட ஏன் தெரியாமல் போனது?

****
ஒருநாள் நண்பன் சோகமாய் வந்தான். என்னடா என்றால், நேற்றிரவு என் அண்ணி தற்கொலை செய்ய முயற்சித்தார்கள். ஏதோ சத்தம் கேட்டு, அண்ணன் எழுந்த பொழுது, கயிற்றில் தொங்கி கொண்டிருந்திருக்கிறார். அண்ணன் பதறிப்போய் கீழே இறக்கிப் பார்த்தால், கழுத்தில் கயிற்றின் தழும்பு ஆழ பதிந்திருக்கிறது. இன்னும் இரண்டு நொடி தாமதத்திருந்தால் கூட உயிர்போயிருக்கும் என்றான்.

****
என்ன பெண் இவள்! சொந்த அம்மா தொடங்கி, நேற்று திருமணம் முடித்த கணவன் வரைக்கும் எல்லா மனிதர்களிடமும் முரண்பட்டு, மோசமான சூழ்நிலையை உருவாக்கி விட்டு, அதிலிருந்து தப்பிக்க நினைத்து, இன்றைக்கு செத்து, பிழைத்திருக்கிறாள். அந்தப் புகைப்படத்தில் உள்ள மரம், ராதாவிற்கு நல்ல உருவகமாக எனக்குப்படுகிறது.

****

2 comments:

Truth said...

நானும் சில பெண்களைப் பார்த்திருக்கிறேன்...கேள்வியும் கேட்டுருக்கிறேன்...ஆனால் பிரயோசனமில்லை...அதனால் தான் ஒரு வகையில் இன்னும் வரதட்சணை ஒழிய மறுக்கிறது...

குமரன் said...

உண்மை அவர்களுக்கு,

தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

வரதட்சணையின் உயிர் இதில் இல்லை. அது சமத்துவ சமுதாயத்தில் இருக்கிறது என கருதுகிறேன்.