தமிழகத்தில் ரேசன் கடையில் ஏற்கனவே 2ரூபாய்க்கு அரிசி என அறிவித்த பிறகு, இன்றைக்கு வரைக்கும் தொடர்ச்சியாக அரிசி கடத்தல் என செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
இப்பொழுது, அண்ணாவின் நூற்றாண்டை ஒட்டி, கிலோ 1 ரூபாய்க்கு அரிசி என அறிவித்து இருக்கிறார்கள். அண்ணாவின் மிகப்பெரிய கனவுத்திட்டமாம். சந்தோசம்.
தென் தமிழகத்தில் மதுரையில் என் நண்பன் ஒருவன் ஒரு எடை போடும் மிசினில் வேலை பார்த்தார். ரேசன் கடை அரிசி எடை போட லாரி வரும் பொழுது, சோதனை செய்ய ஒரு அதிகாரியும் உடன் வருவாராம். அந்த பகுதியில் ஒரு அரிசி அரவை மில்லைச் சேர்ந்த ஒருவர் ஒரு கவரில் பணத்தை கொண்டு வந்து, தந்து விட்டு போவாராம். எதுக்காக? அரசு தருகிற அரிசி அவருடைய அரவை மில்லுக்கு போகும். அரவை மில்லிலிருந்து வேறு அரிசி ரேசன் கடைக்கு போகுமாம். இந்த திட்டத்தின் லட்சணம் இது தான்.
தினத்தந்தியில், அடித்தட்டு மக்களிடம் இந்த அரிசித் திட்டத்தைப் பற்றி கருத்துகள் கேட்கும் பொழுது, கடையில் முன்பு 15க்கு விற்ற அரிசி எல்லாம், இப்பொழுது 25க்கு விற்கிறது. வாங்கி சாப்பிட முடியவில்லை என்கிறார் ஒருவர்.
இன்னொருவர், ஏற்கனவே 2ரூ. அரிசியால் இரண்டு வேளை சாப்பிட்டோம். இனி மூன்று வேளை வயிறார சாப்பிடுவோம் என்கிறார் இன்னொரு பொதுஜனம்.
பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களை சீராட்டி, பாராட்டி வளர்த்து, சிறு தொழில்களை அழித்ததின் மூலம் பல கோடி மக்களை பிச்சைகாரர்களாக மாற்றிவிட்டது இந்த அரசு.
1ரூ அரிசி என்பது, கருணாநிதி என்னும் மன்னன் தன் குடிமக்களின் வறிய நிலை கருதி, போட்ட பிச்சையாக இருக்கிறது.
இன்னும் எத்தனை காலம் தான் இதையெல்லாம் பொறுப்பது?
*****
இனி வருவது, முன்பு எழுதியது.
******
தமிழகத்தில் தி.மு.க அரசு கிலோ இரண்டு ரூபாய்க்கு அரிசியும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.
இப்பொழுது, ஆந்திராவில் ஆளும் காங்கிரசு கட்சியும் கிலோ 2.50 க்கு அரிசி வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது.
கர்நாடக காங்கிரசு கட்சியும், தமிழகம் போலவே.. தேர்தல் வாக்குறுதியாக, கிலோ 2 ரூபாய்க்கு அரிசியும், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் தருவதாக அறிவித்து இருக்கிறது.
அந்த இரண்டு ரூபாய் அரிசியை கடந்த வாரம் வேலை தேடிக் கொண்டு இருக்கும், ஒரு நண்பரின் அறையில் சாப்பிட்டேன். அப்படி ஒரு கெட்ட வாடை. ' தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டியது தானே' என்றேன். நான்கு முறை கழுவியதாக கூறினான். அதிர்ச்சியாய் இருந்தது.இந்த அரிசியை தான் கேரளாவுக்கு கடத்துவதாக அடிக்கடி பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சில மூட்டைகளோடு ஆந்திராவுக்கு ரயில் ஏற தயாராக நின்றிருந்த ஒரு வயதான அம்மாவை பிடித்து, சோதனை செய்யும் பொழுது, அது நம்ம ரேசன் அரிசி.
இப்படி இந்த அரிசிக்காகத் தான் இத்தனை களேபரம் என்றால், நாடு வளர்ச்சி விகிதத்தில் செல்கிறது என சொல்கிற நம்முடைய பொருளாதார புலிகள் மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் காகிதப்புலிகள் தானா?
சென்னையில், இரவில் குடிப்போதையில் அல்லது கன்ட்ரோல் இல்லாமல் எந்த வண்டியாவது நிலை தடுமாறினால், அன்றைக்கு மூன்று முதல் 5 மக்கள் செத்துப்போகிறார்கள். செய்தி தாள்களில் பார்க்கிறோம். இருக்க வீடு இல்லை.
தமிழக கிராமங்கள் எல்லாம் வெறிச்சோடி கிடக்கின்றன. காரணம் விவசாயம் நொடித்துப் போய், சிலர் வெளிநாடு நகர்ந்து விட்டார்கள். பலர் நகர்ப்புறம் நகர்ந்துவிட்டார்கள். செய்ய வேலை இல்லை.
இப்படி, மக்களுடைய வண்ண மயமான வாழ்க்கையை சோகமயமாய் கருப்பு வெள்ளையாய் மாற்றிவிட்டு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் கொடுப்பவர்களை என்ன சொல்வது? வக்கிரப்புத்திகாரர்கள் எனலாமா?இல்லையெனில்...என்ன சொல்ல வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்!