Tuesday, August 19, 2014

500 ரூ கள்ளப் பணம்! ஜாக்கிரதை!


காலையில் கரூர் வைஸ்யா வங்கி போயிருந்தேன். 10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கேஷியர் கண்டுபிடித்தார். பார்த்ததும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, பக்காவாக இருந்தது! திருடர்கள் தெளிவாகிவிட்டார்கள்.  வங்கிகாரர்களும் உஷாராக இருக்கிறார்கள். இடையில் சிக்குவது பொதுஜனம் தான். கள்ள நோட்டை வாங்கியவர் காலையிலேயே மொய்யா என நொந்துகொண்டார்.

முன்பெல்லாம் இப்படி கிடைக்கும் கள்ளப் பணத்தை நம் கண்முன்னே கிழித்துப்போட்டுவிடுவார்கள். அதற்கு முன்பெல்லாம், நம்மிடம் தரமாட்டார்கள். அவர்களே வைத்துக்கொள்வார்கள்.  இப்பொழுது, கொட்டெழுத்தில் ‘Forge Note’ என சீல் குத்தி நம் கையிலேயே தந்துவிடுகிறார்கள். எங்கேயும் இனி மாற்றமுடியாது! வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இப்படி கையில் தருகிறார்கள்.  சரியாக செயல்படவேண்டுமென்றால், ஒவ்வொருவராக செயின் போல துப்பறிந்தால் தான், யார் இதை புழக்கத்தில் விட்டது என கண்டுபிடிக்கமுடியும்!


100 ரூ. கள்ள நோட்டு இப்பொழுது புழக்கத்தில் இல்லை என நினைக்கிறேன். இந்திய திருநாட்டில் 100ரூ மதிப்பிழந்துவிட்டதை காட்டுகிறது! கள்ள நோட்டு கும்பலை பிடிக்கும் பொழுது கூட ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளோடு தான் மாட்டுகிறார்கள். சென்னை என்றில்லை திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம் என தமிழ்நாடு முழுவதுமே கள்ள நோட்டு கும்பலை கைது செய்திருகிறார்கள். பெரும்பாலும் கலர் ஜெராக்ஸ் மிஷினை வைத்து பிரிண்ட் செய்திருக்கிறார்கள். ஒருமுறை இப்படி கள்ள நோட்டு கும்பலை பிடிக்கும் பொழுது, நமது பத்திரிக்கைகள் இந்த நோட்டுக்களை புழக்கத்தில் விடுவது, பாகிஸ்தானில் இருக்கிற தீவிரவாதிகள் என்றார்கள். அதற்கு பிறகு அதை நிரூபிக்கவும் இல்லை. 

ஆகையால், மக்களே! 500ஐ நிறைய பயன்படுத்துகிறவர்கள் கவனமாக இருங்கள். என்னை போன்ற ஏழைகளுக்கு பிரச்சனையில்லை. எப்பொழுதாவது தான் 500ரூ இரக்கப்பட்டு நம்மை கடந்து போகிறது! J

No comments: