Tuesday, July 7, 2009

பாதாள உலக பயணம்! (The Journey to center of earth) சினிமா!

The Journery to center of earth
ஒரு நாள் ஹாசினியின் 'பேசும் படம்' திரைப்பட விமர்சனத்தில் இந்த 3D படத்தை குழந்தைகளை அழைத்துக்கொண்டு திரையரங்கில் பாருங்கள். நல்லபடம் என பரிந்துரைத்தார்.

ஒரு உற்சாகத்தில் என் அக்கா பையனிடம் இந்த படத்துக்கு அழைத்துப்போகிறேன் என வாக்கு கொடுத்தேன். அன்றிலிருந்து 'கப்' என பிடித்துக்கொண்டான். 'எப்ப கூட்டிட்டு போற?' என ஆரம்பித்துவிட்டான்.

வாக்கு கொடுத்த நாளிலிருந்து அலுவலகத்தில் வேலை அதிகமாகி, வீடு திரும்ப நிறைய தாமதமானது. நாளாக நாளாக, சத்யத்தில் நான்கு காட்சிகள், பிறகு இரண்டு, ஒன்று என குறைத்துக்கொண்டே வந்தார்கள். 'ஆஹா! எடுக்கப் போறாங்களே! பையன் சொல்லி சொல்லி அசிங்கப்படுத்துவானே!" என சுதாரித்து... ஒரு நாள் சத்யத்துக்காக சிறப்பு காஸ்ட்டூம், சிறப்பு மேக்கப் டச் எல்லாம் கொடுத்து... இருவரும் பந்தாவாக போய் நின்றால்... படத்தை முதல் நாளே தூக்கிவிட்டார்கள். பையன் முகத்தை நேர் கொண்டு பார்க்க முடியவில்லை. செஞ்ச பாவத்துக்கு... பிராயசித்தமா.. இப்படத்தின் டிவிடியை தேடிப்பிடித்து வாங்கி கொடுத்தேன்.

வாங்கி தந்த நாளிலிருந்து... அக்கா வீட்டுக்கு நான் போகும் பொழுதெல்லாம், வேறு நிகழ்ச்சிகளை பார்க்கவிடாமல்... அக்கா பையன் இந்த படத்தை பார்க்க தொடங்கிவிடுவான். என்னை வெறுப்பேற்றுகிறானாம். இப்படி பலமுறை பார்த்து எனக்கே வசனமே மனப்பாடாமாகிவிட்டது. நெஞ்சில் உள்ள பாரத்தை இந்த படத்தை விமர்சனம் எழுதி, கொஞ்சம் இறக்கி வைச்சுக்கிறேன்!

கதைன்னு பார்த்தால்... 1864 வாக்கில் வார்னே என்பவர் "பூமிக்கு கீழே ஒரு உலகம் இருக்கிறது. அங்கே விசித்திர தாவரங்கள்; டைனோசர் எல்லாம் இன்னும் வாழ்கின்றன. அங்கு போவதற்கு எரிமலை குழம்பு (Valcano tubes) வெளியேறும் பாதை வழியாக செல்ல முடியும்" என சில குறிப்புகளை கொண்டு நாவல் எழுதியுள்ளார். வார்னே யின் கருத்தை நம்புகிறவர்கள் (Vernians) இதைப் பற்றி தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்கிறார்கள்.

இப்படி ஆய்வு செய்ய போய்... 'மேக்ஸ்' என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு (1997ல்) காணாமல் போகிறார். மேக்ஸ்-ன் சகோதரர் நாயகன் (Brendan Fraser - மம்மி பட நாயகன்) தன் அண்ணனை தேடும் முயற்சியில் இருக்கிறார். அவரும் ஒரு வால்கனோ ஆராய்ச்சியாளர். பேராசிரியர். ஒரு "க்ளூ" கிடைத்ததும், விடுமுறைக்கு வந்த அண்ணன் பையனுடன் ஐஸ்லேந்து (Iceland) பயணிக்கிறார்.

அங்கு ஒரு மலையேற ஒரு அழகான பெண் (நாயகி - Anita Breiam) கைடுடன் போய், குகைக்குள் மாட்டிக்கொண்டு, வெளியேறும் முயற்சியில்... பல சாசகங்கள் செய்து... எதிர்பாராதவிதமாக வால்கனோ பாதை வழியாக பல நூறு மைல்கள் உள்ளே விழுந்து... பூமியின் மைய உலகத்திற்கே போய்விடுகிறார்கள்.

அங்கே 'மேக்ஸ்' இறந்ததை கண்டுபிடிக்கிறார்கள். 50 அடி காளான் செடி (!), மனிதர்களை கொல்லும் தாவரம், கடல், பெரிய டைனோசர், காந்த பாறைகள் என பல தடைகளை கடந்து... சின்ன கீறல் கூட விழாமல்... பூமிக்கு வந்து சேர்கிறார்கள்.
***
ஹாலிவுட்காரர்களுக்கு பூமியில் எடுக்கிற கதைகளால் கல்லா கட்ட முடியாமல் போகும் பொழுது... மேலுலகம், கீழுலகம் என பிலிம் எடுப்பார்கள்.

வார்னே எழுதிய பிரெஞ்சு நாவலை மையமாக வைத்து, வெவ்வேறு கால கட்டத்தில் இதே மாதிரி பல படங்களை ஏற்கனவே எடுத்திருக்கிறார்கள். சீரியலாய் கூட எடுத்திருக்கிறார்கள். மற்ற படங்களை விட இந்த படத்திற்கு சிறப்பு சமகால கிராபிக்ஸ் ஜிம்மிக்ஸ் வேலைகள் தான். மேலும் திரைக்கதையும் போராடிக்காமல், விறுவிறுப்பாக படத்தின் இறுதிவரை இழுத்து செல்கின்றன. குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும். குழந்தை மனசு கொண்ட (!) பெரியவர்களுக்கும் பிடிக்கும். பாருங்கள்! அல்லது பசங்களுக்கு வாங்கி கொடுங்கள்.

சில முக்கிய குறிப்புகள் : 1. வார்னேயின் கருத்து ஒரு டுபாக்கூர். நீருபிக்க படாதது. 2. பசங்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது, கவனமாய் இருங்கள்.

1 comment:

Anonymous said...

பார்க்க வேண்டிய படமா?