
"பொழுது போகலைன்னா பார்" என நண்பன் ஒரு டிவிடி தந்தான். படம் "the ghost and the darkness". 1996ல் வெளிவந்தபடம். கால்மணி நேரம் படம் பார்த்த பிறகு தான் தெரிந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு, "சிங்கம்" என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு பார்த்தப்படம்.
கதை எனப் பார்த்தால்...
தான் ஆக்ரமித்த காலனிய நாடுகளின் வளங்களை கொள்ளையிட்டு அள்ளிவர, உலகம் முழுவதும் தண்டவாளங்களை தாரளமாய் போட்ட இங்கிலாந்து அரசு ஆப்பிரிக்காவிலும் போடுகிறது. தண்டவாள தொடர்பணியில் ஒரு ஆறு குறுக்கிட, பாலம் கட்ட ஒரு வெள்ளை மிலிட்டரி பொறியாளர் (நாயகன்) அனுப்பப்படுகிறார்.
வேலை நடைபெறும் வேளையில், சிங்கம் ஒன்று தொழிலாளர்கள் சிலரை இரவு நேரத்தில் கொல்கிறது. உயிருக்கு பயந்து, தொழிலாளர்கள் வேலை செய்ய பயப்படுகின்றனர்.
சிங்கத்தை கொல்ல, ஒரு வேட்டைக்காரர் வரவழைக்கப்படுகிறார். சிங்கத்தை தேடும் பொழுது தான் தெரிகிறது. அது ஒன்று அல்ல! இரண்டு சிங்கங்கள் என்று! அதன் பின், இரண்டு சிங்கங்களும் சேர்ந்து, நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை கொன்றுவிடுகின்றன. உயிருக்கு பயந்து எல்லா தொழிலாளர்களும் ஓடிவிடுகிறார்கள். பாலம் கட்டும் பணி தடைபடுகிறது. பொறியாளர் நாயகனும், வேட்டைகாரரும் இணைந்து சிங்கங்களை கொன்று, மீதி வேலையை தொடர்வது தான் சொச்சகதை.
படம் பார்த்து முடித்த பின்பு, எனக்கென்னவோ, வெள்ளை ஏகாதிபத்தியத்தை தன் நாட்டிற்குள்ளே விடக்கூடாது என வீரமாய் போராடி, உயிர் துறந்த இரண்டு விடுதலை போராளிகளின் கதையாக தான் நான் உணர்ந்தேன்.
***
துவக்கம் முதல், இறுதி வரை தொய்வு இல்லாமல் பயணிக்கும் படம். willow கதாநாயகன் வால் கில்மர் (Val kilmer), Basic instinct கதாநாயகன் மைக்கேல் டக்ளஸ், நம்ம இந்தி ஓம்பூரி என படத்தில் நடித்த அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். அந்த இரண்டு சிங்கங்கள் கூட அட்டகாசமாக நடித்திருக்கின்றன. தரமான ஒளிப்பதிவு. சவுண்ட் எடிட்டிங்-காக படம் ஆஸ்காரை வென்றிருக்கிறது.
வேறு ஏதும் படம் பார்க்க இல்லையென்றால், இந்த படத்தை தாராளமாய் பார்க்கலாம். இரண்டு மணி நேரம் நன்றாக பொழுது போகும்.
1 comment:
இத்தனை நாட்களாக தங்கள் பதிவுகள் பக்கம் வராததை எண்ணி வருந்துகிறேன்.அதற்கு முதல் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..
தங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது.சிறப்பான திரைப்பார்வை..
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..
Post a Comment