Thursday, February 23, 2012

மனிதர்கள் 14 - எழிலன்


நேற்று பழைய அலுவலக நண்பரைச் சந்தித்தேன். எழிலன் இப்பொழுது "விசுவாசத்தை" விட்டுவிட்டார் என்ற சொன்ன செய்தி நிறைய ஆச்சரியமாயிருந்தது. விசுவாசம் என்றால் எழிலன் என என் மனதில் பதிந்திருந்தது என்பதை விட எழிலன் அதை பதித்திருந்தார் எனலாம்.

****
காலையில் அலுவலகத்தில் நுழையும் பொழுதே, கோபமாக யாரையாவது திட்டிக்கொண்டே வருவார். விசாரிக்க வேண்டாம். அவரே சொல்வார். அவர் ஒரு அந்நியனின் 'அம்பி'!

அந்நியன் படம் வந்த பொழுது, 'அம்பி' கதாபாத்திரத்துடன் சிலர் ஒப்பிட்டு சொன்னதை பெருமையாக அவரே சொன்னார்.

அமைதியாய் இருக்கும் பொழுது, 'உங்களிடம் ஒருவித பதட்டம் இருக்கிறது. மருத்துவரைப் பாருங்கள்' என்றேன். 'ஆமாம். அதற்கான தினம் ஒரு மாத்திரை எடுத்து வருகிறேன்' என்றார்.

****

பிடித்த வேலை; படித்தப் படிப்பிற்கு வேலை என சமீபத்திய படங்கள் பேசுகின்றன. எழிலன் படித்தது பி.இ. சம்பந்தமே இல்லாமல் சில ஆண்டுகளாக அந்த கட்டுமான நிறுவனத்தில், கணக்கு வழக்குகள், வங்கி வேலைகள்; கடிதப் போக்குவரத்து என நிர்வாகப்பணிகள் செய்து கொண்டிருந்தார்.

வருடங்கள் கடந்ததால், எங்கும் வேலைக்கு நகர முடியவில்லை. அவருக்கு வேறு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே சுத்தமாக இல்லை. அதனால், நிர்வாகத்திற்கு மிகுந்த விசுவாசமாக, நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொண்டார். மற்ற்வர்களையும் தன்னைப் போலவே விசுவாசமாக இருக்க சொல்லி சிரமப்படுத்துவார்.

வேலையில் சின்சியராக இருக்கலாம். இருக்கவேண்டும். வேலை செய்வதற்கு சம்பளம் தருகிறார்கள். விசுவாசத்திற்கென்று தனியாக சம்பளம் தருகிறார்களா எனக் கேட்டால், பதில் சொல்லமாட்டார். மீண்டும் "விசுவாசம் மிக அவசியம்" என ஸ்லோகம் போல சொல்வார்.

****

தொழிலாளர்களுடன்; சக ஊழியர்களிடம்; மேஸ்திரிகளுடன் எப்பொழுது சிவாஜி படத்தில் சொல்வது போல, "ஸ்ட்ரிக்ட்; ஸ்ட்ரிக்ட்" என நடந்துகொள்வார். என்றன்றைக்குமான நிரந்தர விதிகளை உருவாக்கி, அதைப் பிடித்துக்கொண்டு தொங்குவார். எல்லொரும் எழிலனை முதுகுக்கு பின்னால் கரித்துக்கொட்டுவார்கள். மதிக்கவே மாட்டார்கள். எழிலன் கவலையே கொள்ளாமல், விசுவாசத்தின் மீது நம்பிக்கை கொண்டு, எப்பொழுதும் போல தனது இம்சைகளை தொடர்வார்.

****

சம்பள உயர்வு கேட்கும் பொழுது, தனது திறமை, அனுபவம் என பல விசயங்கள் கணக்கில் எடுத்துகொள்வதை கேள்விபட்டிருக்கிறோம். ஒருமுறை முதலாளி அறைக்குள் எதைச்சையாக நுழைந்தேன். எழிலன் தன் பல் டாக்டர் மனைவி தன்னை விட அதிகம் சம்பாதிப்பதாக; அது தனக்கு அவமானம் என சொல்லி, தன் சம்பளத்தை உயர்த்த சொல்லி, அநேகமாய் கெஞ்சி கொண்டிருந்தார்.

****
அவர் ஒரு வீடு வாங்க திட்டமிட்டு, பணத்தை பல வழிகளிலும் சேகரித்தார். 1 லட்சம் குறைந்தது. தன் முதலாளியிடம் கேட்டார். தருகிறேன் என்றவர், மூன்று மாத காலமாகியும் கண்டு கொள்ளவே இல்லை. நொந்துபோய், விசுவாசத்தை விட்டுவிட்டாராம் எழிலன். இது தான் எழிலன் விசுவாசம் தொலைத்த கதை.

****

No comments: