Wednesday, June 18, 2014

மொட்டை மாடியின் மரணம்



மாலையிலும், விடுமுறை நாட்களிலும் எங்கள் மொட்டைமாடி பரபரவென்றிருக்கும். தெருவில் உள்ள பசங்க எல்லாம் இங்கு தான் இருப்பார்கள்.

கேரம், செஸ், பல்லாங்குழி, பந்து விளையாட்டு, கிரிக்கெட் என எல்லா விளையாட்டுகளும் விளையாடுவார்கள்.  கூட்டம் அதிகமாகிவிட்டது என்றால் அவர்களே ஷிப்ட் பிரித்து விளையாடுவார்கள். அன்றைக்கு ஒரு பையன் புதிதாய் இருந்தான். விசாரித்தால், அடுத்த தெருவிற்கு அடுத்த தெரு என்றான்.

அவர்களே நிறைய பொருட்களை கொண்டு வந்து விளையாடுவார்கள். குப்பையாகிவிடும். பின்பு, அவர்களே குப்பைகளை அள்ளியும்விடுவார்கள். மீறி இருந்தால், வாரம் ஒருமுறை நான் அள்ளிவிடுவேன்.

சில குறும்புக்கார பயல்கள் விளையாட விடாமல் தொல்லை செய்வார்கள். நானே அம்பயராகி, அவர்களுக்கு ரெட் கார்டு காட்டி, மாடியிலிருந்து இறக்கிவிட்டுவிடுவேன்.

எதிர்த்த வீடு, பக்கத்துவீடு ஆட்கள் எல்லாம் நீங்கள் இல்லாத பொழுது, மாடியை பாடாய்படுத்துகிறார்கள் என போட்டுக்கொடுப்பார்கள். தெரு சின்னதா இருக்கு! பசங்க எங்க போய் விளையாடுவாங்க! பசங்கன்னா அப்படித்தான் என தட்டிவிட்டுவிடுவேன்!

சிறுவயதில் எத்தனை விளையாட்டுக்கள், எவ்வளவு சேட்டைகள் செய்தோம் என்பதை எண்ணிப் பார்த்துக்கொள்வேன்.

தெருவில் மற்ற வீடுகளில் உள்ள தங்கள் மொட்டை மாடிகளை யாரையும் விளையாட விடாமல், பாதுகாப்பாக வைத்திருப்பதாக சந்தோசப்படுகிறார்கள்.  அவர்களின் மாடிகள் செத்துப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டன என்பதை மட்டும் அவர்கள் உணர்வதேயில்லை!

1 comment:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சனத் தொகை பெருகிவருவதால் விளையாட இடம் இல்லாவிட்டால் வேறு வழியில்லை மொட்டை மாடியில் விளையாடுவதை தவிர வேறு வழியில்லை..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-