Sunday, April 13, 2008

அன்பான வலையுலக பெருமக்களே!


'பெருமக்கள்' என்ற வார்த்தையெல்லாம் கொஞ்சம் அதிகம். 'ஓபனிங்' நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த பில்டப்.

கடந்த நான்கு மாதங்களாக சில சொந்த கவலைகள், புதிதாக வேலைக்கு சேர்ந்ததினால் சில புதிய வாழ்க்கை மாறுதல்கள் என வாழ்க்கை சுழற்றியடித்து, பின்பு சுதாரித்து திரும்பிப் பார்த்தால் நான்கு மாதங்கள் ஓடிவிட்டன.

கடந்த நான்கு மாதங்களாக பதிவர்களையும், அவர்கள் இடும் பதிவுகளையும் உன்னிப்பாய்(!) கவனித்ததில், மொக்கைப் போடுவர்கள் இன்னும் மோசமான மொக்கைப்போடுகிறவர்களாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

அனானிகள் புதிய மாற்றம் பெற்றிருக்கிறார்கள். தன் பெயரைச் சொல்ல முடியாத பயந்தாங்கொள்ளி அனானி, என் பெயரைப் பயன்படுத்தி, உண்மைத்தமிழன் அவர்களை நக்கல் செய்திருக்கிறான்.

பதிவுலகை விட்டு, நான்கு மாதம் வனவாசம் போனது, எனக்கு பயனாகத்தான் இருந்திருக்கிறது.

இனி, தொடர்ச்சியாய் எழுதலாம் என நினைத்திருக்கிறேன். காரணம் - பலரும் உருப்படியாய் ஒன்றும் எழுதாத பொழுது, நாம் ஏன் எழுதக்கூடாது என என் மனசாட்சி கேட்கிறது.

இனி அடிக்கடி வருவேன்.

Monday, December 24, 2007

நீ....மழை....நான்

உன் கன்னத்தில்
கழுத்தில்
இடுப்பில்
முத்து கோர்த்து
விளையாடிய
அந்த மழைக்கு
என் காதலை
யார் சொன்னார்கள்
என்று தெரியாது

உன்னை எங்கெல்லாம்
நனைக்க நினைத்தானோ
அப்படியெல்லாம்
நனைத்தது

உன்னை
எப்படியெல்லாம்
அணைக்க நினைத்தேனோ
அப்படியெல்லாம்
அணைத்தது

எந்த பெண்ணையும்
சட்டென்று
தொட்டு பேசிவிட
மழையின் மனசு
வேண்டும் போலிருக்கிறது

குடைபிடிப்பது
இயற்கைக்கு
எதிரானதென்று
நீ நனைந்து சிலிர்த்த
அழகுதான்
எனக்குச்
சொல்லிக் கொடுத்தது

உன்மீது வழிந்து
இளநீரான
அந்த மழை நீரை
மனசு தளும்பத் தளும்ப
நான் நிரப்பி
வைத்திருக்கிறேன்

அந்த மழையில்
நீ ஒரு தேவதையைப்
போலிருந்தாய்...

மழை -
உன்னைத் தேடித்தான்
பூமிக்கு வந்ததோ என்று
எனக்கு சந்தேகம் வந்தது

********

இப்போதும் வருகிறது
மழை...
என் கன்னத்தில்
கண்ணீரைப் போல் வழியும்
இந்த மழைக்கு
நம் காதல் தோல்வியை
யார் சொன்னார்கள் என்று
எனக்குத் தெரியாது

உன் வாசனைகளையும்
கொலுசு சப்தத்தையும் தேடி
பருவம் தப்பி வந்திருக்கிறது
இந்த மழை

நீ நனைய வேண்டாம்
எங்கிருந்தாலும்
கண்ணாடி ஜ்ன்னலுக்குப்
பின்னாலிருந்த படியாவது
இந்த மழையைப்
பார்த்து கொண்டிரு போதும்

இந்த மழைக்கு நானும்
எனக்கு மழையும்
ஆறுதல் சொல்லிக் கொள்வோம்

- பழனி பாரதி

பின்குறிப்பு : இந்த கவிதையின் முதல் பாகம், படிக்கும் காலத்தில், அத்தனை சந்தோசமாயிருந்தது. இப்பொழுது, இரண்டாம் பாகம் படிக்கும் பொழுது, அத்தனை சோகமாயிருக்கிறது.