சில நாட்களாக பல பதிவர்களை பார்த்து வருகிறேன். “இவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள்!
அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள்!”
என தொடர்ச்சியாய் பதிவிட்டு வருகிறார்கள்.
கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களினாலும், அதற்கு பிறகு அமைந்த அனைத்து அரசுகளாலும் பெரும்பான்மை மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் வந்துவிடவும் இல்லை. இனி வரப் போவதில்லை என நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.
அரசு மற்றும் அமைச்சர்கள் தங்களுடைய அதிகார மற்றும் வளமான நிலையை தக்க வைப்பதற்காக, மக்களுக்கு எந்த உரிமைகளும் கொடுத்துவிடாமல் இருப்பதை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்கிறவர்கள்... தேர்தல் நேரத்தில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற சொல்லி மக்களை நோக்கி வருகிறார்கள். அவர்களுக்காகவது சொந்த நலன் அடங்கியிருக்கிறது?
ஆனால் பலன்கள் ஏதும் நேரிடையாக கிடைத்துவிடாத பதிவர்களும், நடுத்தர வர்க்கமும் ஏன் வாக்களிக்க வற்புறுத்துகிறார்கள்? இதில் விவாதிக்க நிறைய நுண்ணிய விசயங்கள் இருந்தாலும், சட்டென்று கண்ணில்படுவது அரைவேக்காட்டுத்தனமும், சமூக பொறுப்பற்றத்தனம் தான் வெளிப்படுகிறது.
அரசு, அரசியல், அதிகாரம், ராணுவம், காவல்துறை, நீதித்துறை – இதுபற்றியெல்லாம் அரசு தன் பாடத்திட்டத்தில் என்ன சொல்லிக்கொடுத்ததோ, அதை அப்படியே மண்டையில் ஏற்றி, மனப்பாடம் செய்து, வாந்தியெடுத்த கூட்டம் தான், பின்னாளில் ஏதோ நல்ல சம்பளத்தில் நல்ல பொசிசனில் இருந்தால் கூட அரசு போட்டுக்கொடுத்த பாதையிலேயே சிந்திக்கவும், அதன் பிரச்சார பீரங்கியாகவும் செயல்படுகிறார்கள். இப்படிப்பட்ட பலரிடம் விவாதித்திருக்கிறேன். நாம் என்ன தான் அறிவியல் பூர்வமாகவும், ஆதாரங்களோடும் பேசினாலும், தலையை சிலுப்பிக்கொண்டு தான் சொன்னதையே, திரும்ப திரும்ப சொல்வார்கள். சரிய்யா! நீ விவாதத்துக்கு முன் வைக்கிற விசங்களையே நன்றாக தேடி, இன்னும் கொஞ்சம் தேடிப்படி என்றாலும், மேற்கொண்டு ஒரு படி மேலே ஏற மாட்டார்கள்.
இவர்களிடம் விவாதிக்கும் பொழுது, நம்பிக்கை நம்மிடம் குறைய ஆரம்பிக்கும்.
ஆனால், இந்த சூழ்நிலையிலும், ஒரு சிறுபான்மை கூட்டம் இந்த மோசமான சமூக சூழ்நிலை மாற வேண்டும் என்ற அக்கறை கொண்டவர்கள் பள்ளியில், கல்லூரியில் படித்ததையெல்லாம் மண்டையில் ஏற்றியதை கழற்றிவிட்டு, வரலாறுகளில் உண்மையை தேடி, ஏழை, எளிய மக்களிடத்தில் பணியாற்றி, போராட்டங்களில் கலந்து பாடம் கற்று சமூக மாற்றத்திற்காக அனுதினமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் கண்டால், நம்பிக்கையின் மட்டம் உயருகிறது.
1 comment:
i am not able to understand what you are trying to say :(
Post a Comment