கடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.
Thursday, April 30, 2009
மே தினம் - சில கேள்விகள்!
"அப்படியானால், இப்பொழுது வேலை செய்கிற நேரம் 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைந்திருக்க வேண்டுமல்லவா!
மாறாக, 8 மணி நேரத்திலிருந்து... 12 மணி நேரம், 14 மணி நேரமாக கூடியிருக்கிறதே! இது ஏன்?"
****
இன்று மே தினம். எங்கள் அலுவலகத்தில் 'விடுமுறை' என நோட்டிஸ் போர்டில் ஒட்டியிருந்தார்கள்.
பிளாக்கில், பலரை போல மொக்கையாய் ஏதும் போடாமல், உருப்படியாய் எதாவது எழுதலாம் என யோசித்ததில்....
மே தினம் பற்றி என அலுவலக நண்பர்களிடம் கேட்டால், ஒருத்தருக்கும் உருப்படியாக ஒன்றும் தெரியவில்லை.
பிறகு, கொஞ்சம் தமிழ் விக்கிபீடியாவில் தேடியதில், சில தகவல்கள் சேகரித்தேன். சில கேள்விகளும் எழுந்தது.
18ம் நூற்றாண்டுகளில் வளர்ந்த நாடுகளில், தொழிற்சாலைகளில் குழந்தைகள், பெண்கள் உட்பட எல்லா தொழிலாளர்களும் 12 மணி நேரம், 18 மணி நேரம் வேலை செய்ய மிரட்டப்பட்டு இருக்கிறார்கள்.
இங்கிலாந்தில், சாசன இயக்கம் என்ற தொழிலாளர் இயக்கம் 10 மணி நேரம் வேலை என்ற கோரிக்கை உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வைத்து போராட துவங்கி இருக்கிறது.
அதற்குப் பிறகு, உலகம் முழுவதிலும் தொழிலாளர் இயக்கங்கள் குறிப்பாக கம்யூனிச இயக்கங்கள் 8 மணி நேரம் வேலைக்காக தொடர் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள்.
பல இலட்சகணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். போராட்டங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல தொழிற்சங்க தலைவர்கள் தூக்கில் போடப்பட்டிருக்கிறார்கள்.
தொடர் போரட்டத்தின் வழியே, 1889 ஆண்டில் "சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக கடைப்பிடிக்க வழிவகுத்தது.
................. இதெல்லாம் வரலாறு.
என் கேள்வி என்னவென்றால்...
8 மணி நேரம் வேலைக்காக 150 ஆண்டுகளுக்கு முன்பு போராடியிருக்கிறார்கள்.
அதற்கு பிறகு எல்லா நாடுகளும் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திர நாடுகளாக மாறியிருக்கின்றன.
பொருளுற்பத்தியில் மற்றும் விவசாயத்தில் பயன்படுத்த பல நவீன அறிவியல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தி வருகின்றன.
மக்கள் தொகை பத்து மடங்காக பெருகியிருக்கிறது.
அப்படியானால், இப்பொழுது வேலை செய்கிற நேரம் 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைந்திருக்க வேண்டுமல்லவா!
மாறாக, 8 மணி நேரத்திலிருந்து... 12 மணி நேரம், 14 மணி நேரமாக கூடியிருக்கிறதே! இது ஏன்?
இது பற்றி, ஒரு நண்பரிடம் கேட்டதற்கு,
"எப்பொழுதுமே, ஒரு மக்கள் கூட்டம் வேலை இல்லாமல் இருந்தால் தான், முதலாளிகளுக்கு குறைவான கூலிக்கு ஆள் கிடைக்கும். எல்லா அரசுகளும் முதலாளிகளுக்கு ஆதரவாக இதை கவனமாக பார்த்து கொள்கிறது" என்றார்.
நம் நாட்டில் 5 டிஜிட், 6 டிஜிட் சம்பளம் வாங்கும், கணிப்பொறி வல்லுநர்கள் பாவம். மற்ற தொழிலாளர்களை விட நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்கிறார்கள். சம்பளம் அதிகம். உரிமைகள் குறைவு. சின்ன சின்ன விசயங்களுக்காகவே, அல்லது காரணம் என்னவென்று அறியாமலேயே வேலையை விட்டு தூக்கி விடுகிறார்களாம்.
வருங்காலத்தில், கணிப்பொறி வல்லுநர்கள் தான், மே தினப் போராட்டங்களில் முன்நின்று போராடுவார்கள் என நினைக்கிறேன்.
எங்க மானேஜிங் டைரக்டர் கூலாக சொல்வார். "நீ போயிட்டா, எனக்கு லட்சம் பேர் க்யூவில நிற்கிறார்கள்" என்பார்.
ஆதலால், என் நண்பர் சொன்ன கருத்து எனக்கு சரியெனப்படுகிறது. உங்களுக்கு!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
>>எங்க மானேஜிங் டைரக்டர் கூலாக சொல்வார். "நீ போயிட்டா, எனக்கு லட்சம் பேர் க்யூவில நிற்கிறார்கள்" என்பார்.
இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் தொழிலாளர் சங்கங்களையே அனுமதிப்பதில்லை. அதனால் தான் இந்த இழி நிலை.
Post a Comment