Thursday, December 3, 2009

பொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை - அத்தியாயம் 3

அத்தியாயம் - 1 படிக்க
அத்தியாயம் - 2 படிக்க


அத்தியாயம் - 3

இடம் : நண்பன் வீடு நேரம் : காலை 11 மணி

இருபது நாட்கள் கழித்து, சொந்த ஊருக்கு வந்தேன். ஆவலாய் நண்பனைச் சந்தித்தேன். அவன் என் அவஸ்தையை புரிந்து கொண்டு, ஆய்வு கதையை கொஞ்சம் நூலகரிடம் நினைவுப்படுத்தி கொஞ்சம் அலைந்து.. பொறுப்பாய் எடுத்து வைத்திருந்தான்.

பொன்னியின் செல்வனின் இறுதி பாக கனத்த புத்தகத்தை தடவிப் பார்த்தேன். (பீலீங்!)

"ஊருக்கு எடுத்துட்டு போறேன். இரண்டு வாரத்திற்குள் முடித்துவிடுவேன். கொடுத்துவிடலாம்" என்றேன்.

"இல்லைடா! நீ ஊருக்கு போன 6வது நாளே எடுத்துட்டேன். வழக்கம் போல 14 நாட்கள் கெடு கொடுத்திருந்தார்கள். இப்பொழுது முடிந்துவிட்டது. போய் ரெனிவல் (புதுப்பித்துவிட்டு) பண்ணிட்டு தருகிறேன்" என்றான் மிக பொறுப்பாய்!

இதென்ன புது பிரச்சனை. எனக்கென்னவோ அவன் வார்த்தைகளில், புத்தகம் கை நழுவி போகிற மாதிரி இருந்தது. புத்தகத்தை இறுக்க அணைத்து கொண்டேன்.

"வேண்டாம்டா! போய் ரெனிவல் பண்ணி கேட்டு... தந்துவிட்டால் பிரச்சனையில்லை. தராவிட்டால் ரெம்ப டென்சனாயிடும்!" என்றேன்.

"இல்லையில்லை! நீ வா! ரெனிவல் பண்ணி தர வேண்டிய பொறுப்பு என்னுடையது! கவலைப்படாதே! நீ 4 மணிக்கு நேரா நூலகத்துக்கு வந்துரு! நானும் வந்துவிடுகிறேன்!" என சொன்னான். இறுதி பாகமான "தியாக சிகரத்தை" ஏக்கமாய் ஒருமுறை தடவி பார்த்துகொண்டேன். புத்தகத்தைப் பார்த்து... "நீ எனக்கு கிடைச்சுருவேயில்ல!" என்றேன் மனதுக்குள்!

இடம் : நூலகம் நேரம் : மாலை 5 மணி

நம்ம கெட்ட நேரத்திற்கு நூலகர் சீட்டில் இல்லை. உதவி நூலகர் தான் சீட்டில் இருந்தார். பகீரென ஆகிவிட்டது. திரும்பவும் நண்பனிடம் சொன்னேன். "வேண்டாம்டா! உள்ளுக்குள்ள ஒரு பட்சி சொல்லுது! இந்த ஆள் தரமாட்டான் என" என்றேன். "நானாச்சு! வா" என இழுத்துப்போனான்.

நேரே போய், ரெனிவல் பண்ணி தர சொல்லி கேட்டான். அவரும், புத்தகம் திரும்பி வந்ததற்கான பதிவை எல்லாம் எழுதினார். நிமிர்ந்து.... நண்பனை பார்த்து...

":தம்பி! நீங்க வாங்கிட்டு போனதுக்கு பிறகு, நூலகர் லெட்ஜரைப் பார்த்துட்டு, எதுக்கு கொடுத்தீங்க? என எனக்கு டோஸ்விட்டார். அதனால், இப்ப கொடுக்க முடியாது!" என்றார்.

நண்பனின் முகம் வெளிறிப் போனது. அவனின் தர்ம சங்கட நிலைமையை பார்த்து, அந்த டென்சனிலும் எனக்கு சிரிப்பு வந்தது.

பிறகு, இருவரும் ஆய்வுக்கதை, வேலைக் கதை, நேர்மை கதை - என பல அஸ்திரங்களை தொடுத்தோம். நூலகர் பூதத்தைக் காட்டி, எல்லாவற்றையும் சளைக்காமல் முறித்து போட்டார்.

இனி, பேசுவது வீண் என பட்டது. தலை தொங்கி, இருவரும் வெளியேறினோம்.

என்னைப் பார்த்து..."ஸாரிடா!" என்றான். புத்தகம் கிடைக்கவில்லை என்றாலும்... நண்பனின் நேர்மை எனக்கு பிடிச்சிருந்தது.

பொன்னியின் செல்வனின் இறுதி பாகம் உலகத்திலேயே ஒரு புத்தகம் தான் இருக்கா என்ன! வேறு வகைகளில் தேடலாம் என முயற்சியில் தளரா விக்கிரமாதித்தனை போல, வெளியே வந்தோம்.

தொடரும்...

இணைப்பு

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்களும்

5 comments:

Anonymous said...

வேணும்னா நான் அனுப்பிவைக்கவா

Anonymous said...

:)

:(

குமரன் said...

கார்த்தி,

இது இன்றைக்கு நடப்பது அல்ல! சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த அனுபவம்.

இறுதி (ஐந்தாம்) பாகத்தை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு படித்தேன்.

இவன் இதையே இழுத்து இழுத்து மெகா சீரியல் மாதிரி எழுதி நம்மை கொன்னுபுடுவான்யா என கேட்டீர்களா! என தெரியவில்லை.

இருந்தாலும் உங்கள் அன்புக்கு நன்றி.

வலையிலேயே இப்பொழுது பொன்னியின் செல்வன் நாவல் கிடைக்கிறது. கீழே இணைத்திருக்கிறேன்.

Anonymous said...

ஐயோ!!!

உண்மையாவே கேட்டேன்.. நானும் உங்கள மாதிரிதான் உணவு நித்திரை எல்லாம் மறந்து கல்கியோட சிவகாமியின் சபதம் பார்த்திபன் கனவு பொன்னியின் செல்வன் எல்லாம் படிச்சுட்டு கிறுக்கு பிடிச்சு அலைந்து இருக்கேன்... கல்கி மாதிரி வேற யாராவது அப்படி எழுதி இருக்காங்களா

குமரன் said...

கார்த்தி,

நான் விளையாட்டுக்கு தான் அப்படி கேட்டேன். சீரியசா கேட்ட உங்கள் அன்புக்கு நன்றி.

தமிழ்நாட்டில் பொன்னியின் செல்வனின் ரசிகர்கள் அதிகம்.

அதற்கு பிறகு என்றால்... சாண்டியல்யனின் நாவல்கள் புகழ்பெற்றவை என்கிறார்கள். நான் படித்ததில்லை.

நாளை நான் எழுதப்போகும் பதிவில் கூட சாண்டில்யனின் ரசிகர் ஒருவர் வருகிறார்.