Sunday, October 2, 2011

மனிதர்கள் 11 - ராஜீ


பாரதி விஷயம் முடிந்து, மூன்று மாதங்கள் கடந்திருந்தது. நண்பர் மீண்டும் தொடங்கினார்.

'அங்கே ஒரு பையனின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கிறாரே! எப்படி இருக்கிறார்? என்றார் ஆசிரியர் நண்பர்.

'இதென்ன வித்தியாசமான கேள்வி? அவரைத்தான் தெரியுமே! அண்ணன் பையனுக்கு அவர் தானே ஆசிரியர்! இரண்டுமுறை பேசியிருக்கிறேன்' என்றேன்.

'அந்த ஆசிரியருக்கு மாப்பிள்ளை தேடுவதாக கேள்விப்பட்டேன். நாம் பெண் தேடிக்கொண்டிருக்கிறோம். பிடிச்சிருந்தா சொல்! பேசிப்பார்க்கலாம்' என்றார்.

பெயர் ராஜீ! டிகிரி படித்திருக்கிறார். ஆசிரியர். கருப்பு நிறம். லட்சணமாக இருந்தார். பார்த்ததும் பிடிக்கிற மாதிரி இருந்தார். பிடிக்கவும் செய்தது.

இருந்தாலும், இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் முடிக்கனுமா! இரண்டு ஆண்டுகள் போகட்டுமே!' என்றேன். அவர் என் வார்த்தைகளை மதிக்கவே இல்லை.

ராஜீயிடம் என்னைப் பற்றிய விவரங்கள் சொல்லி, கேட்டதற்கு, "வேறு ஜாதி எனில் வீட்டில் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்" என்றார்.

நண்பர் விடவில்லை. உங்களுக்கு பிடித்திருக்கிறதா? சொல்லுங்கள்! வீட்டில் வந்து நான் பேசுகிறேன்!' என்றார். 'நான் ஏதும் சொல்வதற்கில்லை. அம்மாவிடம் வந்து பேசிக்கொள்ளுங்கள்!' அவர் பிடிகொடுக்கவில்லை.

'விடுங்க! அவங்க தான் தெளிவா சொல்றாங்களே!' என்றேன். 'உன்னை அந்த பெண்ணுக்கு பிடிச்சுருக்கு! அம்மாவுக்கு பயந்து சொல்லமாட்டேங்குது!' என்றார். 'நீங்களே ஏதாவது கற்பனையா சொல்லாதீங்க!' என்றேன்.

இதற்கு மேல் தொடராது என்றே நினைத்தேன்.

****

இரண்டு வாரங்கள் கடந்தன. ராஜீயையும், அவரின் அண்ணியையும் நண்பரின் வீட்டுக்கு வரவழைத்திருந்தார். என்னையையும் வரச்சொல்லியிருந்தார்.

அண்ணியிடம் பேசியதில், 'ராஜீயின் அண்ணனும், நானும் எட்டு வருசமா காதலிச்சோம்! உறவுக்காரர்கள் தான். ஆனால், ராஜீயின் அம்மா ஏற்றுக்கொள்ளவே இல்லை. பிறகு, பையனின் உறுதி கண்டு, ஒரே ஜாதி என்பதால், கல்யாணத்திற்கு சம்மதித்தார். வீட்டில் அவங்க அப்பா சாது. அம்மா தான் எல்லாமும்! இந்த சம்பந்தத்தை ஏற்றுக்கொள்வது சிரமம்!' என்றார்.

இந்தமுறை ராஜீயிடம் நண்பர் "உங்களுக்கு பிடிச்சிருக்கா? சொல்லுங்க!' என்றார். மீண்டும், பழைய பதிலையே சொன்னார். 'அம்மாவிடம் பேசுங்கள்' .

'சரிம்மா! உங்களுக்கு பிடிச்சிருந்தா தானே மேற்கொண்டு பேசமுடியும்! உங்களுக்கு பிடிக்கலைன்னா, அம்மாவிடம் பேசி என்ன பயன்? என லாஜிக்காய் மடக்கி கேட்டார்.

'பிடிச்சிருக்கு' என்றார் ஓரக்கண்ணில் என்னைப் பார்த்து!

****

இதற்கிடையில் ஒருநாள், ராஜீயின் அண்ணன் பையனுக்கு இரண்டாவது பிறந்தநாள். ஆகையால், உடன் வேலை செய்யும் ஆசிரியர்களை வீட்டிற்கு அழைத்தார்கள். இது தான் சந்தர்ப்பம். ராஜீயின் வீட்டில் எல்லோரையும் பார்க்கலாம். எங்களுடன் வா! என அழைத்துப்போனார். பிறந்தநாள் விழாவில், ராஜீ என்னை அதிகம் கவனித்த மாதிரி உணர்ந்தேன். அவங்க அம்மாவும் விசேஷமாய் என்னை உற்றுப்பார்த்ததாக தோன்றியது!

****

ஒரு ஞாயிறு போல, நண்பரும் அவரின் துணைவியாரும் ராஜீ வீட்டிற்கு நேரே போய், விவரங்களை சொல்லி பெண் கேட்டார். ராஜீயின் அம்மாவின் முகம் மாறிவிட்டதாம். எங்க பழக்கம் சாதிவிட்டு சாதி கொடுக்குறது வழக்கமில்ல! என சொல்லி அனுப்பிவிட்டார்.

வந்து விஷயத்தை சொன்னார். 'சரி விடுங்க! அதுதான் அந்த பொண்ணு ஆரம்பித்த பொழுதே சொல்லியதே!' என்றேன்.

****

ராஜீயின் அம்மாதான் அதற்குபிறகு விடவில்லை. பேசியதற்கு ம்றுநாளிலிருந்து, ராஜீ வேலைக்கு வரவில்லை. 'உன் சம்மதம் இல்லாமல், வீடேறி பெண் கேட்பார்களா! காதலிக்கிறயா! உண்மையைச் சொல்!' என கடுமையாக பேசியிருக்கிறார். அதெல்லாம் இல்லை என்றதற்கு, நம்பவில்லையாம்.

நாளாக நாளாக வீட்டை விட்டு வெளியே போனாலே, கேவலமாக பேச ஆரம்பித்திருக்கிறார்.

என்னடா இப்படி ஆயிருச்சு! நம்மால் ஒரு பெண் இவ்வளவு சிரமப்படுகிறாரே! என நொந்தே போனேன்.

*****

ஒரு மாதம் கழித்து, உடன் வேலைப் பார்த்த பெண் ஆசிரியர்கள் இருவரை ஒரு நாள் ராஜீ வீட்டிற்கு அனுப்பினால், அவங்க அம்மா தூது வந்திருக்கிறார்களா! என சாடை மாடையாக பேசி, இனி யாரும் பள்ளியிலிருந்து வரக்கூடாது என ராஜீ மூலமே சொல்லி அனுப்பியிருக்கிறார்.

****

மூன்று மாதங்கள் கடந்தன. நண்பர் மெல்ல ஆரம்பித்தார். நடக்கிற எதுவும் திருமணத்திற்கு நகருவதாக தெரியவில்லை. நாம் அடுத்த பெண்ணைப் பார்க்கலாமா? என்றார்.

'ஹலோ! அந்த பெண் துவக்கத்திலேயே தெளிவா சொல்லிச்சு! வேண்டாம். எங்க அம்மா ஒத்துக்கிடமாட்டாங்கன்னு! நீங்க தான் இழுத்துவிட்டீர்கள். இப்ப அந்த பொண்ணு சொந்த வீட்டிலேயே காதலே நிம்மதி சூர்யா போல டார்ச்சர்ல மாட்டிக்கிடுச்சு!' என்றேன்.

நம்ம கல்யாண நிபந்தனைகள்ல ஒண்ணு. ஒரே நேரத்தில பல பெண்களை பார்க்ககூடாது! அதனால், இந்த பெண்ணின் முடிவு தெரியாம வேற பெண்ணை பார்க்க முடியாது! என்றேன் அழுத்தமாய்!

****

இதற்கிடையில் ராஜீயின் அண்ணியின் தொலைபேசி எண்ணை சிரமப்பட்டு பிடித்து, பேசினேன். ராஜீயின் அண்ணன் அம்மாவை மீறி எதுவும் செய்ய முடியாது என சொல்லிவிட்டார் என்றார்.

****

அம்மாவின் டார்ச்சர் தாங்கமுடியாமல் நொந்துபோய் ஏதாவது செய்துகொண்டால் என்ன செய்வது? அல்லது வீட்டை விட்டு வெளியேறி வந்தால், திருமணம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும் என்றெல்லாம் நானே நினைத்துக்கொண்டேன்.

இன்னும் நாலுமாதங்கள் கடந்தன. எந்த பதிலும் இல்லை. ராஜீ வெளியில் வேலைக்கு போகவும் இல்லை. ராஜீயின் தோழியை பிடித்து, 'வீட்டில் என்ன நிலைமை? நான் காத்துக்கொண்டிருக்கவா! அல்லது வீட்டை வந்தாலும், ஓகே! திருமணம் செய்து கொள்ளலாம்' எனக் கேட்டு வரச்சொன்னேன்.

'அம்மாவை மீறி எதுவும் செய்வதற்கில்லை. வேறு பெண் பார்த்து கொள்ளுங்கள்!' என சொல்லி அனுப்பியதாம்!

முடிவு சரியானது தான். வீட்டை விட்டு வெளியே வரும் அளவிற்கு என்னைப் பற்றி என்ன தெரியும்? கொஞ்ச காலம் பழகியிருந்தாலாவது அந்த நம்பிக்கை வந்திருக்கும்.

என்னால் ஏற்பட்ட சங்கடங்கள், தொல்லைகளுக்கெல்லாம் மனதளவில் மன்னிப்பு கோரினேன்.

****

வெகு சில நாட்களே பழகியிருந்தாலும், ராஜீ வாழ்நாளில் மறக்க முடியாதவராக மாறியிருந்தார்!

****

No comments: