Thursday, October 27, 2011

தீபாவளி - சில குறிப்புகள்!


'இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்' - கடந்த ஒரு மாத காலத்திற்கும், மேலாக கல்லா கட்டிய எல்லா வர்த்தக நிறுவனங்களும், தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் வாயிலாகவும் மக்களுக்கு நேற்று வாழ்த்து தெரிவித்து கொண்டே இருந்தார்கள். பதிவிலும், பஸ்ஸரிலும், டிவிட்டரிலும் தீபாவளி வாழ்த்துக்கள் பகிர்ந்துகொண்டார்கள்.

பொதுவாக பண்டிகைகள் மக்கள் புதிய ஆடைகள், அணிகலன்கள், புதிய பொருட்கள் வாங்குவதும், சொந்த பந்தங்களோடு கூடி களிப்பதும் என்கிறார்கள்.

ஆனால், இங்கு பெரும்பான்மையான மக்களின் வாழிவில் பண்டிகைகளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என கொஞ்சம் கவனித்திருக்கிறீர்களா? அல்லது யாரிடாமாவது விசாரித்திருக்கிறீர்களா/

என் சிறுவயது முதல் எங்கள் வீட்டிலும், பல உறவினர்கள் வீடுகளை கவனித்தவரையிலும், பண்டிகள் எப்பொழுதுமே மனப்பதட்டங்களை ஏற்படுத்திவிடும்

வாரக்கூலியோ, மாதந்திர சம்பளமோ அடிப்படை தேவைகளுக்கு கூட பற்றாகுறையாகவே இருக்கும். பல வீடுகளில் ரேசன் அரிசி, பருப்பு வாங்கித்தான் பயன்படுத்துவார்கள். ஏதேனும், வீட்டில் விசேசமோ அல்லது திடீர் மருத்துவ செலவோ வந்துவிட்டால் வட்டிக்கு கடன் வாங்கி தான் செலவுகளை எதிர்கொள்வார்கள். அதன்பிறகு, வரும் மாதங்களில் பற்றாக்குறையாக எப்பொழுதும் போடப்படும் பட்ஜெட்டில் வட்டியும் ஏறிக்கொள்ளும்.

போனஸ் என்று வருடத்திற்கு ஒருமுறை வரும் பொழுது, அதற்கு பல மனக்கணக்குகள் போட்டு வைத்திருப்பார்கள். கடனை அடைக்கவேண்டும். அடகு வைத்திருக்கும் தோடு மூக்கத்தியை மீட்க வேண்டும்.

ஆனால், போனஸ் கைக்கு வருவதற்குள் தாவு தீர்ந்துவிடும். மூன்றாண்டுக்கு ஒருமுறை போனஸ் எத்தனை சதவிகிதம் என்ற பேச்சுவார்த்தையில், இழுபறி ஏற்பட்டு, ஸ்டிரைக் என ஒருவாரம், பத்துநாள் என உற்பத்தியை நிறுத்தினால் தான் முதலாளிகள் பேசுவதற்கு முன்வருவார்கள். அப்பைட் வரும் போனசும், யானை பசிக்கு சோளப்பொரி என்பதாக இருக்கும்.

அப்படி போராடி வருகின்ற போனசும் செலவுகளின் பாதிக்கு கூட போதாமல், சம்பளத்தில் கொஞ்சம் முன்பணம் வாங்கித்தான் பண்டிகைகளை எதிர்கொள்வார்கள்.

முன்கூட்டியே போனஸ் வராததால், தீபாவளிக்கு முதல் நாள் போய், குறைவான விலைக்கு துணி எடுத்துவருவார்கள். பட்டாசு வாங்கிய கணக்கு காட்டுவதற்காக கொஞ்சம் விலைகுறைவான பட்டாசுகளும் வாங்கிவருவார்கள்.

இப்படி ஒவ்வொன்றும் கொண்டாட்டமோ, சந்தோசமோ இல்லாமல், வெறுமனே கொண்டாட வேண்டுமே என்று தான் ஒவ்வொரு பண்டிகையும் நகர்த்துவார்கள். வசதியானவர்களுக்கு தான் பண்டிகைகள் கொண்டாட்டமும், கும்மாளமும்!

இப்படி பார்த்து பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ, கல்லூரி படிக்கும் காலத்திலேயே, தொடர்ச்சியான தேடலில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. அதன்பிறகான தேடலில், சமூக மாற்றத்திற்கான செயல்களில் ஈடுபடவும் தூண்டியது.

மற்றபடி, கருத்தியல் ரீதியாகவும், தீபாவளி தமிழர்களுக்கான பண்டிகை இல்லை என்பதை, பல பதிவுகள் இங்கே பகிர்ந்துகொள்ளப்பட்டுத்தான் வருகின்றன. கீழே சுட்டிகளாகவும் இணைத்திருக்கிறேன்.

ஆக, அனைத்து மக்களும் கொண்டாடும் வகையில் பண்டிகைகள் இருக்கவேண்டும் என நினைத்தால், இங்கே சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்ற நாம் செயலில் இறங்கவேண்டும்.

இல்லையென்றால், ஒரு சாரர் அதிக கொண்டாட்டத்திலும், பெரும்பான்மையினோர் தட்டு தடுமாறித்தான் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும்.

*****

இங்கே பட்டாசு கடை நடத்திவரும் உமா என்பவர் தனது அனுபவங்களை பகிர்கிறார்.

"தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வியாபாரம் தொடங்கிவிடும்.என் கணவிற்கு உதவியாக கடை நிர்வாகத்தை நானும் கவனிப்பதுண்டு. முதல் 5 நாள்கள் வசதியானவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் வந்து ஆற அமர பெரிய பெரிய பட்டாசு வகைகளைப் பேரம்பேசி வாங்கிப்போவார்கள்.

ஆனால் கூலித்தொழிலாளர்கள், தீபாவளி ஊக்கத்தொகையை எதிர்ப்பார்த்திருப்பவர்கள் எல்லாம் தீபாவளிக்கு முந்தைய இரவில் தான் பட்டாசு வாங்க வருவார்கள். அப்போது ஆசைக்கும் பணத்துக்கும் அங்கே ஒரு போராட்டமே நடக்கும். இரண்டு மூன்று பிள்ளைகளோடு, சட்டைப் பையின் மீதும் (இதயத் துடிப்பின் மீதும்) கையை வைத்துக்கொண்டு தயங்கித் தயங்கி கடைக்கு வருவார் தந்தை. பிள்ளைகளின் கண்களோ அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பளபள அட்டைப் பெட்டிகளில் இருக்கும் பட்டாசுகளின் மீது ஆவலோடு படௌம். ஏழைப் பெற்றோர்களோ தங்களின் இல்லாமையை நினைத்து ஏங்கி நிற்பார்கள். ஆனால், இறுதியில் குருவி வெடியும், சீனிப்பட்டாசும் ஏதோ கொஞ்சம் பூச்சட்டியும், சங்குச் சக்கரமும் தான் வாங்கப்படும்.

அந்த நேரத்தில் என்னால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளுக்கு கொஞ்சம் கூடுதலாக கொடுத்தனுப்புவேன். தீபாவளி தான் எங்களுக்கு வாழ்வாதாரம் என்றாலும், அந்த நொடி மனம் முழுவதும் வேதனையில் துடிக்கும். கண்களின் கண்ணீர் கல்லாவில் இருக்கும் காசை மறைக்கும்"

****
தொடர்புடைய சுட்டிகள் :

தீபாவளி பண்டிகையும், சில கேள்விகளும்!

தீபாவளி கொண்டாடாத பிரபலங்கள்! ஏன்?

வெடிக்காத பட்டாசு!

12 comments:

Anonymous said...

:(

Avargal Unmaigal said...

நல்ல பதிவு. அதிலும் பட்டாசு கடை உரிமையாளர் உமா கூறியதை படித்ததும் நெஞ்சம் நெகிழ்ந்தது. உங்கள் பதிவில் வந்த உமா உண்மையானல் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்தை எனது சார்பாக அவர்களிடம் நேரில் சொல்லுங்கள்.
//தீபாவளி தான் எங்களுக்கு வாழ்வாதாரம் என்றாலும், அந்த நொடி மனம் முழுவதும் வேதனையில் துடிக்கும். கண்களின் கண்ணீர் கல்லாவில் இருக்கும் காசை மறைக்கும்///

மிக அருமையான வரிகள்

Anonymous said...

தீபாவளி வாழ்த்துக்கள். நமது தீபாவளி இரண்டு நாள். அமாவாசைக்கு முதல் நாள் கிடா வெட்டு. இரண்டாம் நாள் நோன்பு. ஆனால் இப்போது எல்லாம் ஒரு நாள் அகிவிட்டது அதுவும் அமாவாசைக்கு புலால் உண்கின்றாற்கள்.

இது பழம்தமிழர் விழா இல்லை என்பவற்கள் பழம்தமிழர் விழாவான பொங்கலுக்கும் முந்திய ஒணம் கொண்டடுவாற்களா? இல்லையே ஏன் என்றால் அவற்களுக்கு கதை மட்டும்த்தான் தெரியும் கருத்து முக்கியம் இல்லை. உண்மையில் இங்கு அணைத்து மத குழத்தைகளும் கொண்டடும் விழா இது மட்டுமே (பட்டாசுக்காகத்தான்).
என்றும் அன்புடன்
இனியன்

வல்லிசிம்ஹன் said...

உண்மையே.அது ஆசைக்கும் யதார்த்தத்துக்கும் நடக்கும் போட்டி.. கடன் வாங்கியும் பிரமாதமாகக் கொண்டாடுபவர்களையும் பார்த்திருக்கிறேன்.

துளசி கோபால் said...

புள்ளைங்க மனசொடிஞ்சு போயிருதேன்னுதான் கடனைவுடனை வாங்கிப் பண்டிகைகள் கொண்டாடுறாங்க பெற்றோர்கள்.

இந்தியா மாதிரி நாட்டில் அக்கம்பக்கத்துக்காகவும் வாழ வேண்டி இருக்கே:(

மாதேவி said...

"வெறுமனே கொண்டாட வேண்டுமே" இந்தநிலைதான். :(

குமரன் said...

உண்மைகள் அவர்களுக்கு,

சென்னையில் தான் உமா வசிக்கிறார். இதில் என்ன சந்தேகம்?

அவருடைய வார்த்தைகளிலிருந்து தான் பகிர்ந்திருக்கிறேன். உங்கள் வாழ்த்துக்களை அவர்களிடம் தெரிவித்துவிடுகிறேன்!

குமரன் said...

இன்பன் அவர்களுக்கு,

உண்மையை தேடுவோம். எது சரியோ அதை கடைப்பிடிப்போம். அவ்வளவு தான்.

அனைவரும் கொண்டாடுவது பட்டாசுக்காக என்கிறீர்கள். அனைவரும் பட்டாசு கிடைப்பதில்லை என்பதை தான் பகிர்ந்திருக்கிறேன்.

குமரன் said...

வல்லி அம்மா அவர்களுக்கு,

பெற்றோர்களை பொறுத்தவரையில், நெருக்கடிக்கும், யதார்த்ததிற்குமான போட்டி எனலாம்!

தங்கள் கருத்திற்கு நன்றி.

குமரன் said...

துளசி கோபால் அவர்களுக்கு,

பிள்ளைகள் பக்கத்துவீடுகளை பார்த்து ஏங்கி விடக்கூடாதே என்பதற்காகவே, சிரமங்களை எதிர்கொண்டாவது, புதிய உடைகள், பட்டாசுகள் வாங்குவது என இருக்கிறார்கள்.

தங்கள் கருத்திற்கு நன்றி.

குமரன் said...

துளசி கோபால் அவர்களுக்கு,

பிள்ளைகள் பக்கத்துவீடுகளை பார்த்து ஏங்கி விடக்கூடாதே என்பதற்காகவே, சிரமங்களை எதிர்கொண்டாவது, புதிய உடைகள், பட்டாசுகள் வாங்குவது என இருக்கிறார்கள்.

தங்கள் கருத்திற்கு நன்றி.

குமரன் said...

மாதேவி அவர்களுக்கு,

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.