Sunday, April 1, 2012

Unfaithful - திரைப்பார்வை


கணவன் மனைவி அவர்களுக்கிடையிலான ஊடல், உரசல், மோதல், கூடல் என பேசிய படங்கள் மெளனராகம், அலைபாயுதே என மிக குறைவு. காதலை காப்பாற்ற நாக்கை அறுத்து, காதலை வெறுத்து, பிறப்புறுப்பை அறுத்து, திருநங்கையாக (!) போய்விடுவது என திரும்பிய பக்கமெல்லாம் காதல் பேசி, காதலையும் வதைக்கிறார்கள். நம்மையும் வதைக்கிறார்கள். இன்னும் சில வருடங்கள் காதலை பற்றி படம் எடுக்ககூடாது என இவர்களுக்கு யாராவது தடை விதித்தால் நல்லது.

***

இந்தப் படத்தின் கதை எனப் பார்த்தால்...

கணவன், மனைவி, ஒரு பத்து வயது பையன் என வசதியான குடும்பம். அமெரிக்காவில் பெருநகரத்தை ஒட்டியுள்ள சிறுநகரத்தில் வாழ்கிறது. அவர்களது வாழ்வு, அமைதியாக போய்கொண்டிருக்கிறது.

அந்த மனைவிக்கு ஒருநாள் ஒரு பொழுது அரிதான புத்தகம் விற்கும் ஒரு புத்தக வியாபாரியான ஒரு இளைஞன் எதைச்சையாக அறிமுகமாகிறான். இரண்டு, மூன்று சந்திப்புகளில் அந்த உறவு நெருக்கமாகிறது. அந்த குடும்பத்தின் இயல்பு போக்கில் குழப்பம் வருகிறது.

இவர்களின் உறவு தொடர, கணவனின் நண்பர் இருவரையும் ஓரிடத்தில் பார்த்துவிடுகிறார். மறக்காமல், நண்பரிடமும் சொல்லிவிடுகிறார். அவர் அதை உறுதி செய்து கொள்ள ஒரு தனியார் துப்புறியும் ஆசாமியை நியமிக்கிறார். அவரும் பின்தொடர்ந்து புகைப்படங்களை எடுத்து தள்ளி, உறவை உறுதிப்படுத்துகிறார்.

தன் காதல் மனைவி இப்படி திசைமாறுகிறாளே என கணவன் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். நேரே அந்த காதலனின் அபார்மெண்ட்டுக்கு போகிறார். பேசிக்கொண்டிருக்கும் பொழுது, உணர்ச்சிவயப்பட்டு அடித்து கொன்றுவிடுகிறார். பிறகு அந்த உடலை யாருக்கும் தெரியாமல் ஓரிடத்தில் போட்டுவிட்டு, வீட்டுக்கு நல்லபிள்ளை போல போய்விடுகிறார்.

இதற்கிடையில் அந்த புதிய உறவு வேண்டாம் என மனைவி முடிவுக்கு வருகிறார். காணாமல் போனவரை காவல்துறை விசாரிக்கிறது. மனைவியினுடைய அலைபேசி எண் அவனின் அறையில் இருந்ததால், காவல்துறை விசாரிக்கிறது.

கணவனின் உடைகளை துவைக்க போடும் பொழுது அந்த புகைப்படங்கள் கைக்கு கிடைக்கிறது. கணவன் தான் அவனை ஏதோ செய்துவிட்டார் என அறிகிறார். மீதி கிளைமேக்ஸ்.

****

படத்தில் ஒரு இடத்தில், தன் மனைவியிடம் " வந்த கோபத்தில், உன்னைத்தான் கொல்லனும்னு நினைச்சேன்" என்பார். கணவன் வேறு யாருடனுவாவது பழக்கம் வைத்திருந்தால், மனைவி அழுவதும், தவிப்பதும், மன உளைச்சலில் தற்கொலை செய்வதும், அதே வேளையில் மனைவி யாருடனுவாவது பழக்கம் வைத்திருந்தால், மனைவியை, அல்லது இருவரையும் கொலை செய்வது என்பதாக தான் ஆணாதிக்க சமூகத்தில் உள்ளது என மருத்துவர் ஷாலினி சொன்னது தான் இந்த படம் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.

அந்த புத்தக செல்லர் ஆசாமிக்கும் அந்த மனைவியின் உறவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒரு "ஏ" பட ரேஞ்சுக்கு எடுத்திருக்கிறார்கள். சரி அவனை கொன்ற பிறகாவது கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி, புரிந்து கொள்கிற மாதிரி காட்சிகள் இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. கொலை செய்யப்பட்டவன் குறித்த விசாரணை, கொலை செய்ததால், காவல்துறையிடம் சரணடைவதா! இல்லையா! என்று தான் படம் நகருகிறது.

திருமணம் செய்தபிறகு காதல் ஏன் செத்துப்போயிவிடுகிறது? திருமண வாழ்வில் காதலை காப்பாற்ற என்னென்ன செய்யவேண்டும் என கடந்த வாரம் முழுவதும் மருத்துவர் காமராஜ் ஐம்பது காரணங்கள் மற்றும் டிப்ஸ்களை வழங்கிகொண்டிருந்தார். மனைவியை சக உரிமை உள்ள மனுசியாய் பழகவேண்டும் என்ற செய்தி தான் அதில் அடிநாதமாக இருந்தது.

மற்றபடி, நடித்தவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நாயகன் நம்மூர் சரத்பாபு போல இருக்கிறார். 2002ல் வெளிவந்தபடம். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

****

4 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

ஸ்கூல் படிக்கும் காலத்தில் நண்பர்களுடன் திருட்டுத்தனமாக பார்த்தது. அப்போ யாரு கதையைப் பார்த்தது? கதையெல்லாம் Fast-forward தான். இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

விமர்சனம் நன்று நண்பரே.

Thava said...

வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பார்க்கிறேன்..சிறப்பான விமர்சனம்..மிக்க நன்றி சகோ.

குமரன் said...

ஹாலிவுட் ரசிகன் அவர்களுக்கு,

நானும் உங்களை போல தான்! 17
வயதில் எனக்கும் இந்த மாதிரி படங்களை பார்க்கும் பொழுது, எப்பொழுது "சீன்" வரும் என்பதாக தான் என்னுடைய எதிர்ப்பார்ப்பும் இருந்தது. இப்பொழுது கொஞ்சம் சமூக கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம்.

குமரன் said...

வருகைக்கு நன்றி குமரன்.