Monday, January 28, 2013

எழுதப்படாத கடிதம்!

நேற்று வீட்டில் வெள்ளையடிக்க பொருட்களை ஒழுங்குபடுத்தும் பொழுது, ஒரு எழுதப்படாத இன்லாண்ட் கடிதமும், நண்பர்கள் எழுதிய மங்கலான சில கடிதங்களும் கண்ணில்பட்டன.  அன்று முழுவதும் கடிதம் குறித்த நினைவுகள் ஒவ்வொன்றாய் மேலெழும்பி வந்தன.

****

ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது, எங்கள் வீட்டுக்கு நாலு வீடு தாண்டி ஒரு குடும்பம் தனது பையனை வறுமையின் காரணமாக சிறுவயதிலேயே அந்தமானுக்கு பலசரக்கு கடைக்கு வேலைக்கு அனுப்பி இருந்தார்கள்.  அந்த பையனை நலம் விசாரித்து மாதம் ஒருமுறை ஒரு கடிதம் எழுத என்னை அழைப்பார்கள்.  "அன்பு மகன் வேலுக்கு" என எழுதிய கடிதம் தான் வாழ்வில் முதன்முதலில் எழுதிய கடிதமாக நினைவில் நிற்கிறது.

****

சொந்த பந்தங்கள் எல்லாம் உள்ளூரிலேயே இருந்தார்கள்.  தொலைவில் யாரும் இல்லை. அதனால் கடிதம் எழுதும் தேவையே இருந்தது இல்லை.  ஒரே ஒரு அத்தைப் பையன் மட்டும் விதிவிலக்கு.  தொடர்ச்சியாய் வீட்டிற்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்.  சில வருடங்களுக்கு பிறகு அவரும் கடிதம் எழுதுவதை நிறுத்திக்கொண்டார்.  அக்காவை திருமணம் செய்யும் ஆசையில் அத்தைக்கும், மாமாவிற்கும் கடிதம் எழுதி, அக்காவை வேறு இடத்தில் திருமணம் செய்ததும் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டார் என்பது விபரம் அறிந்த பிறகு புரிந்துகொண்டேன்.

****
வெளியூரில் வேலை செய்த சில காலம் தனிமையை தவிர்க்க, கடிதங்கள் எழுத ஆரம்பித்தேன். வேலை, படித்த கவிதை, பழகிய மனிதர்கள், சமூகம் குறித்து என 4பக்கம், 6 பக்கம் என நீளமான கடிதங்களை எழுதியிருக்கிறேன். ஒரு தோழிக்கு தினமும் அஞ்சலட்டையில் எழுதுகிற பழக்கமும் இருந்தது. அப்படி எழுதியது இரண்டு சிங்கங்கள் குறித்த இந்த விமர்சனம். அதுபோல நண்பர்களும் எழுதியிருக்கிறார்கள்.  சில கடிதங்களை இன்னும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

****
அப்பொழுதெல்லாம் ராஜேஷ்குமார், பி.கே.பிக்காக வெளிவரும் மாதாந்திர புத்தகங்களில் 'பேனா நண்பர்கள்' என்றொரு பகுதி வரும்.  காதல் கோட்டை படம் போல, இது நட்புக்கோட்டை.  தினமும் ஒருவருக்காவது ஒரு கடிதம் எழுதுவேன். அவர்களும் எழுதினார்கள்.  தினம் ஒரு கடிதமாவது தபால்காரர் தருவார். இந்த காலத்தில், இந்த தெருவில் இவனுக்கு மட்டும் தினம் கடிதம் வருகிறதே என தபால்காரர் நிறைய அலுத்துக்கொள்வார்.  இன்றைக்கும் கூட அப்படி அறிமுகமான பேனா நண்பர் நல்ல நண்பராக இருக்கிறார்.

****
கணிப்பொறி வந்ததும் தட்டச்சு இயந்திரத்திற்கு வேலை இல்லாமல் போய்விட்டது போல, போன் குறிப்பாக செல்பேசி வந்தபிறகு, கடிதம் எழுதுவது வெகுவாக குறைந்துவிட்டது. என்ன தான் பேசினாலும், கடிதங்கள் மனதிற்கு நெருக்கமானவை. 


மனிதர்கள் விரும்பியோ, விரும்பாமாலோ தன் குடும்பங்களை விட்டு தூர தேசங்களில் தூக்கி எறிந்திருக்கிறது.   இன்றைக்கும் யாரோ ஒரு நபர், "அன்புள்ள அம்மாவிற்கு'  'அன்புள்ள மனைவிற்கு' என கடிதம் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்தில் எழுதிய கடிதம் எதுவென யோசித்தால், பணிநிமித்தமாய் சிங்கப்பூரில் இருக்கும் நண்பனுக்கு எழுதிய மின்னஞ்சல் நினைவுக்கு வருகிறது.  விஞ்ஞானம் முன்னேறினாலும், புதிய வடிவங்களில் கடிதங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்.

****
திரைப்படங்களிலும் கடிதங்கள் நிறைய இடம் பெற்றிருக்கின்றன.  கடிதங்கள் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கின்றன. நிறைய பாடல்களில் வலம் வந்திருக்கின்றன.  கடிதத்தை வாசிக்கும் பொழுது, எழுதியவரே வாசிப்பதாய் காட்டுவார்கள்.சுவாரசியமாக இருக்கும்.  இன்றைக்கும் ஆபூர்வமாய் எனக்கு கடிதம் எழுதினால், எழுதியவருடைய முகம் எனக்கு தெரிவதற்கு திரைப்படம் தான் காரணம்!

****

நான் எழுதிப் பழகியது கடிதங்கள் வழி என்பதாலோ, என் பதிவுகள், பின்னூட்டங்கள் எல்லாம் அகம் சார்ந்தவையாகவே இருக்கின்றன.  அறிவை விட உணர்வுகள் மோலோங்கி நிற்கின்றன.

****
அன்பை, அறிவை, காதலைப் பேசும் உலகப்புகழ் பெற்ற பல கடிதங்கள் இருக்கின்றன. உலகம் முழுவதிலும் மனிதர்கள் மீண்டும் மீண்டும் அந்த கடிதங்களை விரும்பி வாசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். நான் அடிக்கடி வாசிக்கும் கடிதம்  'இடானியாவின் கடிதம்'   மனிதர்களை 'பேசுங்கள் பேசுங்கள்' என உற்சாகபடுத்தி, செல்பேசி நிறுவனங்கள் எல்லாம் நிறைய கல்லா கட்டுகின்றன.  பிடித்த உறவுகளுக்கு அமைதியாய் கடிதம் ஒரு கடிதம் எழுதி பாருங்கள். அதன் பின், கடிதத்தின் ருசி தெரியும் உங்களுக்கு!

****

No comments: