Sunday, February 24, 2013

ஆதி பகவன் - ‍‍கஷ்டம்! கஷ்டம்!

இப்பொழுதெல்லாம் யாரை நம்பியும் முதல்நாள் படம் பார்க்க போகமுடியவில்லை.  6 வருடத்திற்கு பிறகு அமீரின் படம் என எதிர்ப்பார்ப்புடன் போனால் பெருத்த ஏமாற்றம்.

****

கதை எனப்பார்த்தால்...

பாங்காக்கில் நாயகன் மாபியா கும்பலில் முக்கியமான ஆள்.  நாயகனின் அம்மாவும், தங்கையும் மோசமான வழியில் சம்பாதித்த பணம் வேண்டாம் என தனியாக வாழுகிறார்கள். அங்கு ஒரு பாரில் வேலை செய்யும் ஒரு தமிழ் பெண்ணிடம் காதல்வயப்படுகிறார்.

அப்பாவை பார்க்க நாயகனை அழைத்துக்கொண்டு நாயகி மும்பை வருகிறார்.  அங்கு நடக்கும் ஆள் மாறாட்ட குழப்பத்தால் பல திருப்பங்களுடன் படம் முடிவடைகிறது.

****

கதையில் நாயகனின் அம்மா, தங்கையை தவிர அத்தனை பேரும் மாங்காத்தா அஜித் கதாபாத்திரங்கள் தான்.  கிரிமினல், மெகா கிரிமினல் என பிரிக்கலாம். அது தான் வித்தியாசம்.

மாபியா கதை என்பதால் படம் முழுவதும் டுஸ்யூம் டுஸ்யூம் என துப்பாக்கி சண்டை, பாங்காக் என்பதால் பறந்து பறந்து சண்டை, பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொலை, அடித்தே கொலை என விதவிதமான‌ கொலைக‌ள் என பார்த்து பார்த்து தலைவலி வராவிட்டால் ஆச்சர்யம். இரண்டே முக்கால் மணி நேர படம். அது இன்னுமொரு கொடுமை.

படத்தின் துவக்கத்திலிருந்து இறுதி வரை மது, சிகரெட் குடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என கீழே வந்துகொண்டேயிருக்கிறது. சமீபத்தில் டேவிட் படத்திலும் இதே மாதிரி தான் நண்பர்கள் சொன்னார்கள். தமிழ் படங்களில் பார் இல்லாத படங்களை பார்ப்பது அரிது தான் போல!

அதென்ன மாபியா கும்பலில் உள்ள பெண் என்றால், எப்பொழுதும் சிகரெட்டோடு இருக்கவேண்டுமா என்ன?  வில்லனிடம் கவனம் கொடுத்து, நாயகனை வலு இழக்க வைத்திருக்கிறார்கள்.

கதை ஆந்திரா, பாங்காக், மும்பை என ஊர் சுற்றுகிறது. இப்பொழுதெல்லாம் தமிழுக்கென்று பிரத்யேகமாக‌ எடுக்கப்படுகின்ற படங்கள் மிக குறைவு.  எல்லா மொழி வியாபாரத்தையும் மனதில் வைத்துக்கொண்டு எடுப்பாதாலேயே எல்லா கோளாறுகளும் படத்திற்குள் வந்துவிடுகின்றன.  'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' போன்ற கதையம்சம் கொண்ட சிறிய பட்ஜெட் படங்கள் தான் வருங்காலத்தில் தேறும் போல!

1 comment:

indrayavanam.blogspot.com said...

நல்ல அலசல்... உங்கள் விமர்சனம் சரிதான்