Monday, June 23, 2014

கணவனை இழந்தப் பெண் – சில குறிப்புகள்



என் உறவுக்கார பெண்ணை அவளின் அத்தைப் பையனுக்கே திருமணம் முடித்தார்கள்.  திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளில் டி.பியும் மஞ்சள் காமாலையும் இணைந்து தாக்க பையன் இறந்துவிட்டார்.  டி.பி. ஏற்கனவே தாக்கியிருந்ததை மறைத்து பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கிவிட்டீர்களே என கடுமையாக சண்டையெல்லாம் போட்டார்கள். அப்பொழுது அந்த பெண்ணுக்கு வயது 23. குழந்தைக்கு வயது 6 மாதம்.

நான்கு, ஐந்து ஆண்டுகள் கடந்தது.  அந்த பையனின் வீட்டில் இருந்த அந்த பெண்ணிடம் இறந்துபோன கணவனின் அண்ணனே தவறாக நடந்துகொள்ள, பெண்ணை அவருடைய பெற்றோர் தங்களுடன் அழைத்து வந்துவிட்டனர்.

பிறகு, நாம் எவ்வளவு காலம் பாதுகாக்க முடியும் என பெற்றோர் நினைத்து, மறுதிருமணத்திற்கு முயலும் பொழுது, சொந்த சாதியில் யாரும் அந்த பெண்ணை திருமணம் செய்ய முன்வரவில்லை.  எனக்கு சில முற்போக்கான நண்பர்கள் இருப்பதால், அந்த பெண்ணின் அண்ணன் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைத்தால் சொல்லுங்கள் என்றார்.

“உங்க சொந்தம்,  ஜாதிக்காரங்களுடன் எப்பொழுதும் கொஞ்சி, குலாவி வாழ்கிறீர்கள். அவர்களுக்கெல்லாம் ‘கற்புள்ள’ பெண் தான் வேண்டுமோ? இதற்கு மட்டும் முற்போக்காளர்கள் வேண்டுமா? என கோபமாய் கேட்டேன்.  அவரால் பதில் சொல்லமுடியவில்லை. அமைதியாய் இருந்தார்.

பிறகு, இரண்டு வருடங்கள் கழித்து, வேறு ஒரு சாதியைச் சேர்ந்த, இரண்டு குழந்தைகள் கொண்ட, மனைவியை இழந்தவருக்கு மணம் முடித்துக்கொடுத்தனர்.
***
சொந்த உறவுகள், ஜாதிக்காரர்கள் கணவனை இழந்த அந்த பெண்ணை திருமணம் முடிக்க முன்வர மறுக்கிறார்கள்.  ஆனால், கள்ளத்தனமாக உறவு வைத்துக்கொள்ள பலரும் முயல்கிறார்கள்.  இந்த சமூகம் பிற்போக்குத்தனமாகவும், இழிவாக நடந்துகொள்வதற்கும் இது ஒரு நல்ல உதாரணம்.
****

குடிசை வாழ் பகுதிகளில் கணவன்மார்கள் எப்படி இறக்கிறார்கள் என ஆய்வு செய்ததில், 90% இறப்பதற்கு காரணம் குடி தான் காரணம் என தெரிய வந்திருக்கிறது!

குடிமக்களின் மீது அக்கறை கொள்ளாமல்,  கல்லா கட்டுவதில் குறியாக உள்ள ஜெ. அரசு, தெருவுக்கு நாலு டாஸ்மார்க் கடைகள் திறந்து, பல குடும்பங்களின் தாலியை அறுக்கிறது!  அதனால், ஜெ.விற்கு “தாலி அறுத்த அம்மா” என பட்டம் வழங்கலாம்!

-    *** கணவனை இழந்த பெண்களின் சர்வதேச தினம் இன்று!

4 comments:

நெல்லைத் தமிழன் said...

ஜெயலலிதாவுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? பெண்களெல்லாம் தெருவில் செல்கிறார்கள். அதனால் கற்பழிப்பு நடக்கிறது. ஆகவே பெண்கள்தான் கற்பழிப்புக்குக் காரணம் என்பீர்கள் போலிருக்கிறது. குடிக்கிற நாய்களைக் கண்டிக்க வேண்டும். குடி party வைப்பவர்களை நாடு கடத்தவேண்டும். அதைச் செய்யாமல் அரசாங்கத்தைக் குறை கூறுவதில் என்ன லாபம்?

வலிப்போக்கன் said...

இந்தப் பட்டத்தை கொடுக்கலாம் இதை நான் வழிமொழிகிறேன்.

பால்வெளி... said...

இவர்கள் தேவைக்கு மட்டும் சாதி ம"ற"ப்பிற்கு ஓ.கே.

"தாலி அறுத்த அய்யா", "தாலி அறுக்கிற அம்மா" இன்னும் சிறப்பு...

குமரன் said...

நெல்லைத் தமிழன் அவர்களுக்கு,

ஜெ.வுக்கும் இதுக்கும் என்ன சம்ப்ந்தம்?

அரசு தான் டாஸ்மார்க் கடைகளை தெருவுக்கு நாலு திற்ந்து வைத்திருக்கிறது! அரசு குடிமக்களின் நலம் நாடும் அரசாய் இருந்தால், இப்படி செய்யுமா? எவன் குடும்பம் தாலி அறுந்தால் என்ன நினைத்தால் தான் இப்படி ஒரு அரசு நடந்து கொள்ளமுடியும்!

பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டிய அரசு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறது! அதன்மேல் வராத கோபம், பார்ட்டி நடத்தும் தனி நபர்களை நாடு கடத்த சொல்கிறீர்கள். இது அநியாயம் இல்லையா?