காமிக்ஸ்
வழியாக கற்பனை உலகத்தில் மிதந்து வந்தவர்களுக்கு ஹாரிபார்ட்டரின் படங்கள் மிகவும் பிடிக்கும்! எல்லா காமிக்ஸ் கதைகளில் வரும் மந்திரம், தந்திரம்,
சாகசம், பிரமிப்பு, சுவாரசியமான கதாபாத்திரங்கள் என எல்லாமும் கலந்து கலவை தான் ஹாரிபார்ட்டர் படங்கள்! ( Harry Potter Films )
கொஞ்சம்
விட்டுவிட்டு ஹாரிபார்ட்டர் படங்களை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்து வந்திருக்கிறேன்.
சில படங்களை தமிழிலும், சில படங்களை ஆங்கிலத்திலும்!
நானூறு, ஐநூறு பக்க நாவலை இரண்டரை மணி நேர படங்களாக சுருக்கி எடுத்திருப்பாதாலேயே படத்தை
நான் – லீனியர் வகை சார்ந்த படங்கள் போல ஆக்கிவிடுகின்றன! இந்த படத்தை கிறிஸ்டோபர்
நோலன் வகையான ஆட்கள் எடுத்திருந்தால் என்னைப் போல கொஞ்சம் டல் மாணவர்களை நினைத்துப்பார்க்கிறேன்!
தலையை பிய்த்துக்கொண்டு திரிந்திருப்போம்!
அண்ணன்
பையன் ஹாரிபார்ட்டரின் ரசிகன். மீண்டும் மீண்டும்
டிவிடியில் படங்களை போட்டுப் பார்க்கும் பொழுது, அவன் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு
பதில் சொல்லவே நான் படத்தை கவனமாக பார்க்கவேண்டியிருக்கிறது! நாவல்களைப் படிக்கலாம் என தேடிப்படித்து படித்தால்,
ஜே.கே. ரவுலிங்கின் எழுத்து படிக்க சிரமமாயிருக்கிறது! என்ன செய்வது?
சாமான்ய
உலகத்தோடு ஒட்டாத ஒரு தனி உலகம் அது! மந்திர தந்திரங்களை கற்றுத்தரும் பள்ளி. விளக்குமாறு
கொண்டு பறப்பது, அசையும் புகைப்படங்கள், செய்தித் தாள்கள்; வானில் பந்து விளையாட்டு;
பறக்கும் குதிரை, அவர்களுக்கென்று ஒரு அமைச்சரவை என நீள்கிறது அவர்களின் உலகம்!
தீயசக்திகளின்
தலைவனான வால்ட்மோர்ட். தான் தனிப்பெரும் சக்தியாக உலகை ஆள நினைக்கிறான். உலகை காக்க நல்லவர்களின் கூட்டணி! அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவனாக ஹாரிபார்ட்டர்!
கன்னித்தீவு
கதையில் வரும் மூசா. தன் உயிரை ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு கிளியிடம் தன் உயிரை ஒளித்து
வைத்திருப்பான். அதே போல, இதிலும்! தீய சக்திகளின் தலைவன், தன் உயிரை ஏழாகப் பிரித்து,
ஏழு பேரைக் கொன்று, (மோதிரம், டாலர், டைரி, கோப்பை, பாம்பு, இன்னும்…) என ஏழு வகைகளில் ஒளித்து
வைத்திருக்கிறான். இதில் சுவாரசியமான ஒன்று. அவனின் ஒரு பாகம் ஹாரிப்பார்ட்டரின் உடலோடு
இருக்கிறது! நல்லவர்களின் துணையோடு, ஹாரிப்பார்ட்டரும், அவனுடைய நண்பர்களும் ஒவ்வொன்றாக
கண்டுப்பிடித்து அழிப்பது தான் எல்லா பாகங்களும்!
துவக்க
பாகங்களை பார்க்காமல், மற்ற பாகங்களை பார்த்தால், கொஞ்சம் தலைச்சுற்றும்! எல்லா பாகங்களையும்
பார்த்துவிட்டேன். இன்னமும் பல கேள்விகள் என்னைச் சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கின்றன!
1997ல்
துவங்கி 2007 வரைக்கும் ஏழு பாகங்களை நாவலாக வெளியிட்டார்கள். ஆனால், படங்கள் ஏழாவது பாகத்தை மட்டும் இரண்டு படங்களாக
எடுத்து 2011ல் கடைசி படத்தை வெளியிட்டார்கள்.
நாவல்கள் கோடிக்கணக்கில் விற்றுத்தீர்ந்துவிட்டன. படங்களும் வசூலை அள்ளிவிட்டன. ஆனால், தேடும் பொழுது
தமிழில் ஹாரிபார்ட்டர் படங்கள் பற்றி எழுதிய பதிவுகள் அரிதாக இருக்கின்றன. ஒருவேளை ஆங்கில நாவல், ஆங்கில படம் என்பதால், ஆங்கிலத்தில்
நிறைய பேர் எழுதியிருக்கலாம்!
கருந்தேள்
ஹாரிபார்ட்டரின் இரண்டு பாகங்களைப் பற்றி இரண்டு பதிவுகள் எழுதியிருக்கிறார். நாவல்களைப்
படித்தும், எளிமையாகவும் எழுதுவதால் அந்த பதிவுகள் நல்ல புரிதலை தருகின்றன! கீழே இணைத்துள்ளேன்.
படியுங்கள்.
மற்றப்படி,
ஒவ்வொரு பாகத்தைப் பற்றி எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது! வருங்காலத்தில் பார்க்கலாம்! :)
No comments:
Post a Comment