Sunday, July 20, 2014

The karate kid (2010) – ஒரு பார்வை



நேற்று தூக்கம் வராமல் தவித்த பொழுது, மீண்டும் இந்தப் படத்தைப் பார்த்தேன்.  ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் விஜய் தொலைக்காட்சியில் போடுகிறார்கள்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக கேபிளை கட் பண்ணிவிட்டதால், பார்க்க முடியவில்லை.

பார்க்காதவர்களுக்காக சுருக்கமாய் கதை சொல்லிவிடலாம்.   

அமெரிக்காவின் தொழில்நகரமான டெட்ராய்டின் வீழ்ச்சிக்கு பிறகு, பிழைப்புக்காக அம்மாவும், 12 வயது பையனான டிரேயும் சீனாவிற்கு இடம் பெயர்கிறார்கள். அப்பா அவனின் சிறுவயதிலேயே இறந்துவிடுகிறார்.

சீனாவின் பெய்ஜிங் வந்த முதல் நாளே, மைதானத்தில் இருந்த பெண்ணிடம் அந்த பையன் பேச, உள்ளூர் பசங்களோடு மோதல் வருகிறது. செங்க் என்கிற பையன் செமத்தியாக டிரேயை அடித்துவிடுகிறான்.  எல்லோரும் ஒரே பள்ளியில் படிப்பதால், டிரேயை மீண்டும் மீண்டும் தொல்லை செய்கிறார்கள். ஒருநாள் கடுப்பில் அழுக்கு வாளித்தண்ணீரை எடுத்து டிரே அவர்கள் மீது ஊற்றிவிடுகிறான். கொலைவெறியோடு தாக்குகிறார்கள்.  டிரே அபார்ட்மெண்டின்  பராமரிப்பு செய்யும் (நம்ம) ஜாக்கி அவனை காப்பாற்றுகிறார்.

செங் ஒரு குங்குபூ பள்ளியில் மாணவனாக இருக்கிறான். சமாதானம் பேச ஜாக்கியுடன் போகும் பொழுது, அந்த பள்ளியின் மாஸ்டர் யாராவது ஒருவர் அவருடைய மாணவர்களுடன் சண்டையிடவேண்டும் என வம்புக்கு இழுக்கிறார். நெருக்கடியில் அடுத்து நடக்க இருக்கும் விளையாட்டு போட்டியில் டிரே கலந்துகொள்வான் என வாக்குறுதி தருகிறார். அவனுக்கு குங்குபூ கற்றுத்தருகிறார். இறுதியில் பல சோதனைகளுக்கு பிறகு செங்யை டிரே வீழ்த்தி வெற்றி பெறுகிறான்.
*****
ஜாக்கியின் இறுக்கத்திற்கு உள்ள பின்கதையும், டிரேயின் அந்த பெண்ணுடான நட்பும், படத்தை சண்டைப் படமாக கொண்டு செல்லாமல் ஒரு மெலோ டிராமாவாகத்தான் நகர்கிறது.

டிரே - தனது பழக்க வழக்கத்தில் உள்ள அராஜகத் தன்மை இருக்கும் வரையில் ஜாக்கி அவனிடம் கடுமையாக நடந்துகொள்கிறார். அவன் மாறிய பிறகு அவனிடம் கனிவாக நடந்துகொள்கிறார்.  ஒரு அருமையான ஆசிரியராய் நடந்துகொள்கிறார். படத்தில் பிடித்த விசயம் இது!

நம் 50 வயது, 60 வயது நாயகர்கள் எல்லாம் சில சமயங்களில் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடிப்பது பாந்தமாக இருப்பது போல, ஜாக்கி இந்த பாத்திரத்தில் அருமையாக பொருந்தியிருக்கிறார்.

டிரேயின் அம்மா, டிரேயின் தோழியான சீனப்பெண், வம்பு சண்டையிடும் செங், கருணை கூடாது என பேசும் அந்த குங்பூ ஆசிரியர் எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

நம்மூர் வாரிசு நடிகர்கள் போலவே ஹாலிவுட்டிலும் தொடர்கிறது என்பதை Jaden smith ஐப் பார்க்கமுடிகிறது. 1990களில் இதே கதையை வைத்து ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். அதே கதையை தூசு தட்டி மீண்டும் எடுத்திருக்கிறார்கள்.  இதன் வெற்றியில் இப்பொழுது நான்கு வருடங்களுக்கு பிறகு இரண்டாம் பாகம் எடுக்க பேசிவருகிறார்கள்.

முன்பெல்லாம் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அமெரிக்காவிற்கு, பிரிட்டனுக்கு பிடிக்காத நாடுகளை எல்லாம் குறிப்பாக கம்யூனிச சார்பான நாடுகளை வில்லனாக காட்டுகிறார்கள். இந்தப் படத்தில் அமெரிக்க சிறுவன், வில்லனாக சீன சிறுவன், சீன ஆசிரியர் என காட்டுகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் அவர்களின் கப்பித்தனமான அரசியலில் கவனமாக தான் இருக்கிறார்கள்.

எல்லோரும் ஒருமுறைப் பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.
*****

No comments: