Thursday, December 17, 2009

பொன்னியின் செல்வன் - இறுதி பாக (நொந்த கிளைக்) கதை - அத்தியாயம் 4

அத்தியாயம் - 1 படிக்க
அத்தியாயம் - 2 படிக்க
அத்தியாயம் - 3 படிக்க


நூலகத்தை விட்டு வெளியே வந்ததும்... "நூலகரைப் பார்த்து நானே வாங்கித் தர்றேன்டா" என்றான் குற்ற உணர்வுடன்!

"வேண்டாண்டா! புத்தகம் அடிக்கடி வெளியில போயிருது. நூலகரும் அடிக்கடி விடுப்புல போயிறாரு! இந்த புத்தகத்தை நம்புனா ரெம்ப காலம் இழுக்கும் போல தெரியுது! வேற வழியில முயற்சிக்கிறேன்" என்றேன்.

நான் சொன்னதை ஏற்றுக்கொள்வது போல, நண்பன் அமைதியாய் இருந்தான்.

என் வீட்டு எதிரில் இருக்கும் ஒரு குடும்பஸ்தர் சாண்டில்யனின் பரம ரசிகர். அவருடைய படைப்புகளை எல்லாம் ஒன்றுவிடாமல் விரட்டி விரட்டி படித்தவர். என்னிடம் ஒரு முறை சாண்டியல்யனைப் பற்றி புகழ்ந்து பேசினார்.
"கதையில் வரும் பெண் கதாபாத்திரங்களை அவ்வளவு அழகா.. அவரை மாதிரி யாரும் வர்ணிக்க முடியாது" என நினைவுகளில் ஆழ்ந்தார்.
புத்தகம் எல்லாம் எங்கு வாங்குகிறீர்கள் என கேட்டதற்கு, ஒரு தனியார் நூலக பெயரை சொல்லியிருந்தார். பொன்னியின் செல்வனின் இறுதி பாகத்தை அவர் மூலமாக படித்துவிடலாம் என முடிவெடுத்தேன்.

அவரை பார்த்து, நாலுபாகங்களை படித்தது. இறுதி பாகத்தை மட்டும் படிக்க முடியாமல் போனது என எல்லாவற்றையும் விளக்கமாக சொன்னேன். கவனமாக கேட்டவர் "உங்க நிலைமை எனக்கு புரியுது தம்பி. கல்யாணம் நடந்ததுக்கு பின்பு இந்த இரண்டு வருசமா நான் எதுவும் படிக்கிறதே இல்லை. குடும்பத்துல சின்ன சின்ன பிரச்சனைகள். வேலையிலும் சில பிரச்சனைகள். (என்னது கல்யாண்ம் ஆன இலக்கியமெல்லாம் படிக்க முடியாதா?!) உங்களைப் போலத்தான் டோக்கனை கொடு நான் வைச்சுகிறேன்னு சொல்லி வாங்கிட்டு போனான். நானும் அதுக்கு பிறகு கேட்கவே இல்லை" என்றார்.

"நாசமா போச்சு! இந்த நாவல் நமக்கு கைக்கு கிடைக்கவே கிடைக்காதா!" மனதுக்குள் புலம்பினேன்.

அவரே தொடர்ந்து சொன்னார். "மேகலா தியேட்டருக்கு எதிரே தான் அவன் கடை வைச்சிருக்கான். அவன்கிட்ட என் பெயரை சொல்லி கேட்டீங்கன்னா... தந்திருவான்" என்றார். சரி என சொல்லி விடைபெற்றேன்.

சில அவசிய வேலைகளுக்காக விடுப்பு எடுத்திருந்ததால்... இறுதி பாகத்தை அதற்குள் கைப்பற்றிவிடவேண்டும் என மனதிற்குள் சபதம் எடுத்தேன்.

நான் போகும் சமயத்திலெல்லாம்... டோக்கன்காரர் கடையை விட்டு வெளியே போயிருந்தார் அல்லது கடை மூடியிருந்தது. ஒருவழியாக ஒரே நாளில் பலமுறை படையெடுத்து, டோக்கனை கைப்பற்றினேன். பாதி புத்தகம் கைக்கு வந்த மாதிரி இருந்தது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் புத்தகம் நம் கையில் இருக்கும் என நினைத்தாலே சந்தோசமாய் இருந்தது. சந்தோசமாய் நூலகத்தை நோக்கி சைக்கிளை விரட்டினேன்.

தொடரும்..

***
இணைப்பு :

பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களும்!

No comments: