Tuesday, August 7, 2007

நான் போட்டநொந்த ஏழு!



முன்குறிப்பு : கவுண்டமணி சொல்கிறமாதிரி, 11 போட சொல்லாமல், என்னால் முடிந்த எட்டு போடச் சொன்னதற்கு, முதலில் லட்சுமி அவர்களுக்கு நன்றி! லிஸ்டில் கடைசி நான். ம்!

எட்டும் எழுதினாலும், போஸ்ட் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. ஜீலை 20 தொடங்கி, இப்பொழுது, ஆகஸ்ட் 7 வரைக்கும் ஆகிவிட்டது. அதனால் எழுதுன வரைக்கும் போதும் என ஏழு மட்டும் போட்டாச்சு! மன்னிச்சுங்க!

7-ல் நாலு சொந்தமானவை. 3 பொதுவானவை. தமிழக அரசியலில் ஒரு தேக்கநிலை இருப்பதால், விரைவில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் உள்ளதால் இப்படி!

நொந்த ஞாபகசக்தி : செய்ய வேண்டிய பல காரியங்களை, மறதியால் வாழ்வில் தொலைத்தது நிறைய. பிறகு, சுதாரித்து, இப்பொழுது தேதிவாரியாக டைரியில் எழுதி வைத்து, செல்லில் நினைவுப்படுத்த கட்டளைகள் கொடுத்து, நினைவுப்படுத்தி எல்லாம் செய்கிறேன்.

அன்றைக்கு ஒருவர் என்காதுபட சொல்றாரு! "நொந்தகுமாரனுக்கு ஞாபகசக்தி அதிகம். எல்லா வேலைகளையும் மறக்காம செய்றாரு!" என்ன கொடுமை சார் இது!

நொந்த கவிஞர் : என் நண்பர்கள் நன்றாக கவிதை எழுதக்கூடியவர்கள். ஆனால், எழுதமாட்டார்கள். அவர்களை வெறுப்பேற்றத்தான், 'கவிதை' எழுத ஆரம்பித்தேன். அதேபோல் தான், வலையுலகத்திலும் கவிதை எழுத ஆரம்பித்தேன்.

அன்றைக்கு, நான் எழுதிய 'கவிதை'யை படித்திவிட்டு, 'நாமக்கல் சிபி' சொல்றாரு! 'கவிதை நல்லாயிருக்கே"ன்னு! இது எப்படியிருக்கு!

நொந்த தாமதம் : குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓர் நிகழ்ச்சிக்கு, ஓரிடத்திற்கு செல்வது என்பது, பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்துவது மாதிரி, மாயாஜால வித்தைதான்! முன்பெல்லாம், எனக்கு 15, 20 நிமிடங்கள் தாமதமாகும். இதற்காக, என்னுடன் கட்டிபுரண்டு சண்டையிட்டு கொண்டியிருக்கிறேன். இந்த தொடர்முயற்சியில், சிறிது வெற்றியும் பெற்று இருக்கிறேன். இப்பொழுது, 5, 10 நிமிடங்கள் தாமதமாகின்றன. நான் பார்த்த பல படங்களில், முதல் பத்து நிமிசம் என்ன நடந்தது என்பது தெரியாது.

இப்பொழுதும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக, வந்துநிற்கும் மனிதர்களை, விசித்திரப் பிறவிகளாகத்தான் பார்க்க முடிகிறது என்னால்.

நொந்த மொய் : வீட்டில் நாலு பத்திரிக்கைகள் வந்தாலே, அம்மா கவலை கொள்வார்கள். ஒரு பத்திரிக்கை ரூ. 200/- என்றால், ரூ. 800/- வேண்டுமே! என புலம்புவார்கள்.

விசேசமென்றால், மகிழ்ச்சி வரவேண்டும். துக்கம் கிளம்புகிறதே! என்ற அடிப்படையில், மொய்-யை நான் விரும்புவதில்லை. செய்வதும் இல்லை.

ஆனால், என் சொந்த பந்தங்களில் விசேச வீடுகளில் என் தலை தென்பட்டதுமே, 'மொய்' எழுத உட்கார வைத்திவிடுவார்கள். சொந்தங்களில் படித்தவர்கள் குறைவு. மற்றவர்களுக்கு உதவுகிற படித்தவர்கள் மிக குறைவு. அதனால், மறுக்க முடிவதில்லை. இன்றைக்கும் மொய் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். "மொய் தப்பு" என புலம்பிக்கொண்டே!

நொந்த பண்பலைகள் : தொலைக்காட்சிகள் கூட வீட்டோடு இருந்துவிடுகின்றன. ஆனால், இந்த பண்பலைகள் காலை தொடங்கி, படுக்கை விரிக்கும் வரைக்கும் நம்மை ஆக்கிரமிக்கின்றன. கேவலமான பல தமிழ் படல்களை மீண்டும் மீண்டும் ஒலிபரப்புகிறார்கள். பள்ளிக்குழந்தைக்கூட கண்டுபிடித்துவிடும், எஸ்.எம்.எஸ். கேள்விகளைக் கேட்டு, நிறைய காசு பார்க்கிறார்கள். கொஞ்சம்கூட சமுக அக்கறையற்ற திரைபிரபலங்கள் பேட்டியளிக்கிறார்கள். பல முக்கிய சமூக செய்திகளை, நொறுக்குத்தீனியாக மாற்றித் தருகிறார்கள். பக்கத்து வீட்டு பெண்ணை, பழைய முதலாளியின் மனைவியை 'கரெக்ட்' செய்தது பற்றியும் பேச வைக்கிறார்கள். இப்படி காற்றில் கலப்பது எல்லாமே நச்சாக, பண்பலைகள் எல்லாம் பாழ்படுத்துகிற அலைகளாகத்தான் இருக்கின்றன.

நொந்த மக்கள் : பஞ்சாயத்து போர்டு, நகர்மன்ற தலைவர்களை நவீனகுண்டு வைத்து தகர்க்கிறார்கள். ஊர் அறிய, உலகம் அறிய பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு, 3 ஊழியர்கள் கொலைசெய்யப்படுகிறார்கள்.

இதற்காக, கொதிந்தெழுந்து, சம்பந்தபட்ட ஆட்களை வீதிக்கு இழுத்து வந்து, உதைக்க வேண்டாமா! கொளுத்த வேண்டாமா! மாறாக, அவர்களுடைய ரவுடி அரசியலை, அவர்களை விட சுவாரசியமாய், பேசிக்கொண்டே இருக்கிறோம். வருங்காலத்தில், இன்னும் பலரை தாராளமாய் கொலை செய்வார்கள்.

நொந்த வலையுலகம் : இப்படி சமூகம் சீரழிந்து கிடக்கும் பொழுது, மெத்தப்படித்த, நன்றாக சம்பாதிக்கிற வலையுலக மக்கள் தங்களுடைய அருமையான நேரத்தை, ஜல்லியிலும், கும்மியிலும், மொக்கைப்பொடுவதிலும் காலம் கழிக்கிறார்கள். உலகளாவிய தமிழ்மணம் போன்ற வலைத்திரட்டிகளை, "குட்டிச்சுவராக" த்தான் பயன்படுத்துகிறார்கள். இது நிறைய கவலை தரும் விசயம்.

6 comments:

குமரன் said...

எல்லாரும் எட்டு போட்டு ஓஞ்ச பிறகு, ஏழு போடுகிறாய். சரியான ஆளப்பா நீ! இருந்தாலும், நல்லாத்தான் எழுதியிருக்கே!

குமரன் said...

யாரும் ஆறுதல் சொல்ல மாட்டேங்கீறீங்க! பிறகு, எனக்கு நானே பின்னூட்டம் போட்டுக்க வேண்டியது தான்.

கோபப்படாதீங்க!

லக்ஷ்மி said...

நல்லாவே இருக்கு உங்க ஏழு. உங்க சொந்த நொந்த அனுபவங்கள் நல்லா இருக்கு. உங்களோட பொது விஷயங்கள் பத்தின சிந்தனை நிறைய பேருக்கு இருக்கு. ஆனா என்ன செய்யமுடியும்னுதான் தெரியலை.

Anonymous said...

நொந்ததில் பிடித்த‌து இதுதான்

Anonymous said...

நொந்ததில் பிடித்த‌து இதுதான்

Anonymous said...

நொந்ததில் பிடித்த‌து இதுதான்