Friday, September 21, 2007

எங்கள் வீட்டு முருங்கைமரமும், நானும் - என் சொந்த நொந்த அனுபவம்

அன்றைக்கு மாலை, வெளியே போய்விட்டு, எங்கள் தெருவிற்குள் நுழைந்தேன். எங்கள் வீட்டு வாசலில் சிலர் கூட்டமாய் நின்றுகொண்டு இருந்தார்கள். வேகவேகமாய் நெருங்கினால், அம்மா பக்கத்துவீட்டு அம்மணியுடன் காரசாரமாய் சண்டை போட்டு கொண்டிருந்தார்கள்.

ஒருவழியாய் சமாதானப்படுத்தி, எல்லாம் அமைதியாக, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகிவிட்டது. சண்டைக்கான காரணம் - எங்கள் வீட்டு முருங்கை மரத்தில் நன்றாக காய்த்திருந்த 3 முருங்கைக்காய்களை காணோமாம். சந்தேக வட்டத்திற்குள் பக்கத்துவீட்டு அம்மணி சிக்க, அதற்காக தான் இந்த காரமான சண்டை.

வாசலில் நிற்கும் முருங்கைமரம், எங்களுக்கு முன்பு என் அக்கா குடியிருந்த பொழுது, ஆசை ஆசையாய் ஊரிலிருந்து எடுத்து வந்து, வளர்த்த மரம். அக்கா வேறுபகுதி மாற்றலாகி போன பிறகு, நாங்கள் குடிவந்தோம்.

மரத்தில் இலைகள் தள, தள-வென இலைகள் வளர ஆரம்பித்ததும், பூப்பூத்து, காய்கள் இரண்டரை அடி நீளத்திற்கு, ஆரோக்கியமாய் வளர ஆரம்பித்ததும் தான் பிரச்சனைகள் எழத் தொடங்கின.

வீட்டில் எல்லோரும் வேலைக்கு போன பிறகு, அம்மாவுக்கு வீட்டு வேலைகள் தவிர்த்து, மிஞ்சி ஆறுதல் அளிப்பவை அழுது வடிகிற தொலைக்காட்சி தொடர்களும், இந்த முருங்கை மரமும் தான்.

மரத்தில் ஒரு காய் குறைந்தாலும் அம்மா கண்டுபிடித்துவிடுவார். எண்ணி வைத்திருப்பார் போல! குறைந்தால் முணுமுணுப்பு, சில சமயங்களில் சண்டையாய் பரிணாம வளர்ச்சி பெற்றுவிடும்

அம்மா, கீரையோ, காய்களோ மற்றவர்களுக்கு தராதவர் அல்ல! நன்றாக வளர்ந்தால், எதிர்வீடு, பக்கத்து வீட்டார்களுக்கெல்லாம் தருகிறவர்தான். ஆனால், அவரைக் கேட்காமல், யாரும் பறித்துவிடக்கூடாது. அம்மாவுக்கு, அது உரிமை மீறல் பிரச்சனை.

அண்டை வீட்டுகாரர்களுடன் சண்டை தப்பு. அதுவும், ரூ. 3, 4 பெறுமானமுள்ள காய்களுக்காக சண்டையிடுவது பெரிய தப்பு - என எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன். அம்மாவிடம் எடுபடவில்லை. சச்சரவுகள் தொடர்கின்றன.

அம்மா சண்டை தவிர, என் சண்டையும் கூட உண்டு. எதிர்வீட்டில் இருப்பவர் கஞ்சர் (பக்கத்து வீட்டுகாரருக்கு மரியாதை). வாரம் இரண்டுமுறையாவது அம்மா வெளியில் போன சமயமாய் வந்து, கடமைக்கு என்னிடம் சொல்லிவிட்டு, நிறைய கீரை புடுங்கி போவார்.

இது அம்மா அறிய வந்தால், பிரச்சனையாகிவிடுமே என, நானே ஒருமுறை நேரிடையாக அந்த கஞ்சரிடம் "அம்மாவிடம் கேட்டு கீரை புடுங்கி கொள்ளுங்கள்" என சொல்லிவிட்டேன். சொன்னதிலிருந்து, பிறகு வருவதேயில்லை. அதற்கு பிறகு, அந்த கஞ்சர் இயல்பாய் பார்த்தால் கூட, முறைப்பது போல தெரிகிறது எனக்கு.

இதுபோக, வேறு சில பிரச்சனைகளும் நிகழ்கின்றன.

முருங்கைகாய்களுக்கு பஞ்சமில்லாததால் தினமும் சாப்பாட்டில் இடம்பெற்று விடும். முருங்கைகாய்க்கு எத்தனை அவதாரங்கள் உண்டோ, அத்தனை அவதாரங்களும் எங்கள் வீட்டில் எழுந்தருளிவிட்டன. இனியும், புதிய அவதாரங்கள் விரைவில் வர இருக்கின்றன.

பார்க்கின்ற பெண்கள் எல்லாம் இப்பொழுதெல்லாம் அழகாக தெரிகிறார்கள். வயசுக்கோளாறா? அல்லது இந்த முருங்கைக்காய் தான், ஹார்மோனை தூண்டி அதிக வேலை வாங்குகிறதோ? என சந்தேகம் வருகிறது.

வாசலில் இருப்பதினால் தவறாமல் கண்ணில்படுகிற முருங்கை மரம்; தினமும் சாப்பிடுகிற முருங்கைமரம்; அம்மாவின் பேச்சில் அடிக்கடி அடிபடுகிற முருங்கைமரம்; அதனால் உண்டாகும் சச்சரவுகள், அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் என இப்பொழுதெல்லாம், கனவில் வந்து கூட, முருங்கைமரம் வந்து பயமுறுத்துகிறது. காதலியோடு, முருங்கைமரத்தைச் சுற்றி, சுற்றி டூயட் பாடுகிறேன்.

நீதி : இந்த பதிவின் மூலம், உங்களுக்கு சொல்கிற செய்தி

"வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள்; நல்ல விசயம்:

ஆனால், என்ன மரம் என்பதை நிதானமாய் சிந்தித்து, ஆய்ந்து, தூரப்பார்வையுடன் அலசி, ஒரு நல்ல மரமாய், காய் காய்க்காத மரமாய் நடுங்கள்.