Tuesday, December 30, 2008

ஆரம்பமே கோளாறாய் இருக்கிறது – பகுஜன் சமாஜ் கட்சி!உத்திரபிரதேசத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து ஆண்டு கொண்டிருக்கும் குமாரி மாயாவதி அம்மையாருக்கு, சின்ன சின்ன ஆசையில் ஒரு ஆசை நாட்டின் பிரதமராவது. தமிழகத்தில் ஏற்கனவே ஒரு செல்வி அம்மையார் இருப்பதால், இவரை குமாரி என அழைக்கிறார்கள் என நினைக்கிறேன்

ஒரு மாநிலத்திலேயே இருந்தால், பிரதமராக முடியாது என்று நினைத்தவர் பல மாநிலங்களுக்கும் தன் கட்சியை பரவ செய்வதற்கான முயற்சிகளை இப்பொழுது செய்து கொண்டிருக்கிறார்.

பிரதம வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் உத்திரபிரதேசத்தின் பங்கு அதிகம். ஏனென்றால்...இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்திரபிரதேசம். மக்கள் தொகை அடிப்படையில் அங்கு தான் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம். மக்களைவையில் 85 எம்பிக்கள். ராஜ்யசபாவில் 31 எம்பிக்கள். (தமிழ்நாடு சார்பாக - மக்களவையில் 39. ராஜ்யசபாவில் 18 எம்பிக்கள்).

பிரதமர்களின் வரலாறும் அப்படித்தான் இருக்கிறது. இந்தியாவை ஆண்ட பல பிரதமர்கள் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

இதன் அடிப்படையில் தான்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒரு சகோதரத்துவ மாநாட்டை சென்னையில் நடத்தி முடித்தார். சிதறிக்கிடக்கும் தலித் அமைப்புகளை ஒன்று சேர்த்து வலுவான கட்சியாக மாற்ற போகிறார்களாம்.

இந்த மாநாட்டுக்கு பிறகு, இரண்டு நிகழ்வுகள் பகுஜன் சமாஜ் கட்சியைப் பற்றி அறிமுகத்தை அறிய முடிகிறது..

ஒரு நிகழ்வு – ஒரு பொறியாளர் கொலை. மாயாவதி அவர்களுடைய பிறந்த நாள் ஜனவரி 15யாம். இதற்காக அவருடைய கட்சி 1000 கோடி என இலக்கு வைத்து வசூலை தொடங்கியிருக்கிறார்களாம்.

ப.ஜ. கட்சியின் எம்.எல்.ஏ. சேகர் திவாரியினுடைய ஆட்கள் வசூல் வேட்டையில்... அவுலியா மாவட்டத்தை சேர்ந்த பொறியாளர் குப்தாவின் வீடு புகுந்து, அவருடைய மனைவியை குளியறையில் தள்ளி அடைத்து, கேட்ட பணத்தை கொடுக்கதாததால் அவரை அடித்தே கொன்றுவிட்டார்கள்.

உத்திர பிரதேச அரசும் இந்த கொலையில் சேகர் திவாரிக்கு சம்பந்தம் உண்டு என ஒப்புக்கொண்டிருக்கிறது. இப்பொழுது அந்த எம்.எல்.ஏ. சிறையில் இருக்கிறார்.

கடந்த ஒரு வாரமாக இந்த நிகழ்வு உ.பியை கலக்கி கொண்டிருக்கிறது. மாயாவதியை ராஜினாமா செய்ய சொல்லி, எதிர்கட்சிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு செய்தி. இவர் தனது கட்சியை இந்தியா முழுவதும் எடுத்து செல்ல ஆசைப்பட்டது எல்லாம் சரி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, உத்திரபிரதேசத்தில் அதன் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 800 கோடிக்கு திட்டம் போட்டிருக்கிறார்களாம். அந்த செய்தியை தமிழ்நாட்டில் எல்லா தினசரிகளிலும் முழுப்பக்க விளம்பரம் செய்துள்ளனர். விளம்பரத்தின் கீழே பகுஜன் கட்சி பெயர் இருக்கும் எனப் பார்த்தால்... உத்திரபிரதேசத்தின் அரசு விளம்பரமாக இருக்கிறது.

அடப்பாவிகளா! தமிழ்நாட்டிலும் பார்க்கிறோம். அடிக்கல் நாட்டப்பட்டதோடு பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுவிடும். 800 கோடி திட்டம் 80 கோடி அளவிற்காவது நிறைவேற்றப்படும் என்பது ஒரு கேள்விக்குறி. இவர்கள் போடும் திட்டத்தின் நிலை இப்படியிருக்க... தன் கட்சியை வளர்க்க மக்கள் வரிப்பணத்தை இலட்சகணக்கில் வாரி இறைப்பது எந்த விதத்தில் சரி?

ஏற்கனவே இங்குள்ள கட்சிகள் எல்லாம் மோசமாக இருக்க, உத்திரபிரதேசத்தில் இறக்குமதியாகும் கட்சியும் இன்னும்
மோசமாக இருந்தால்? சிரமம். நாட்டையும், நாட்டு மக்களையும் நினைத்தால் பாவமாக இருக்கிறது.

Wednesday, December 17, 2008

பேச்சிலர் சமையல் – அத்தியாயம் 3


பேச்சிலர் சமையல் பற்றி நாம் ஏற்கனவே இரண்டு அத்தியாயங்களில் பேசியிருக்கிறோம்.

“சமையல்” – அதன் தன்மை, முறை, அதில் உள்ள சிக்கல்கள் பற்றி பேசுவது இடையிடையே வைத்துக்கொள்வோம்.

இப்பொழுது சமையல் – வகைகளை ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.

இந்த பதிவில் – ‘ரெடிமேடு சாம்பார்’

மெட்ரோ சிட்டி பர பர வாழ்வில் பல நாள்கள் எங்களுக்கு உதவியது இந்த சாம்பார் தான்.

இந்த சாம்பார் இட்லி அல்லது தோசைக்கு தான். சாப்பாட்டுக்கு உதவாது. (சாப்பாட்டுக்கு ருசி குறைவாக இருக்கும்).

நம் வசிக்கிற எல்லா பகுதிகளிலும் அரைத்த மாவு எளிதாக கிடைக்கும். நல்ல பிராண்டாய் தேடிப்பிடித்து வாங்குவது நம் திறன் சார்ந்தது. எங்கள் பகுதியில் 5 இடங்களில் மாவு கிடைக்கும். ஒவ்வொரு இடமாய் வாங்கி பயன்படுத்தி, சோதித்து, ஐந்தாவது இடத்தில் கிடைத்த மாவு நன்றாக இருந்து இப்பொழுது தொடர்ச்சியாக வாங்குகிறோம்.

தேவையான பொருட்கள் : பச்சை பருப்பு அல்லது துவரம் பருப்பு அரை டம்ளர். (டம்ளரின் கொள்ளளவு - 125 மிலி). 1 தக்காளி,சாம்பார் (சின்ன) வெங்காயம் 10 துண்டுகள். இரண்டு காய்ஞ்ச மிளகாய், சிறிதளவு - மஞ்சள் பொடி, கடுகு உளுந்து, கறிவேப்பிலை, 5 மிலி எண்ணெய். (மூன்று பேருக்கு தேவையானதை குறிப்பிட்டிருக்கிறேன்)

செய்முறை :

செய்முறையில் எல்லா வகைகளுக்கும் சில சமையல் பாத்திரங்கள் அடிக்கடி வரும். அதையெல்லாம் வாங்கி நிரந்தரமாய் வாங்கி வைத்து கொள்வது நல்லது.

5 லி, 10 லி. குக்கர் ஒன்று. தோசைக்கல்

முதலில் (5லி.) குக்கரில் பருப்பை போட்டு இரண்டு முறை தண்ணீரில் கழுவி.. பிறகு, பருப்பின் அளவை விட நான்கு மடங்கு நல்ல தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். அதில் 5 வெங்காய துண்டுகளை (உறித்து) சின்னதாய் வெட்டியும் போடலாம், முழுதாகவும் போடலாம். 1 தக்காளியை 4 துண்டுகளாக வெட்டி போட்டு கொள்ளவும். சிறிதளவு மஞ்சள் பொடி, தேவையான உப்பு பொட்டு, கொஞ்சம் எண்ணெய் விட்டு மூடி கொதிக்க வைக்க வேண்டும். பச்சை பருப்பு என்றால் 8 நிமிடம். துவரம் பருப்பு என்றால் 11 நிமிடம் வேகவிட வேண்டும்.

பிறகு, ஒரு தாளிப்பதற்கு ஒரு பாத்திரம் எடுத்து, அடுப்பில் வைத்து, கொஞ்சம் எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் சுட்டதும், சிறிதளவு கடுகு உளுந்து, கருவேப்பிலை போட வேண்டும். சட சட வெடிக்கும். அப்பொழுது காய்ஞ்ச மிளகாயை போட்டு, வெட்டி வைத்துள்ள மீதி 5 வெங்காய துண்டுகளை போட்டு, 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு, குக்கரில் உள்ளதை இந்த பாத்திரத்தில் ஊற்றினால்... ரெடிமேடு சாம்பார் ரெடி.

பின்குறிப்பு : இதில் எங்கேனும் தவறு நடக்கும் பட்சத்தில், அது சாம்பாரில் பிரதிபலிக்கும்.

எங்களுடைய அனுபவத்தில்... இந்த சாம்பாரில்..

ஒருமுறை, குக்கரில் எல்லாம் போட்டுவிட்டு அடுப்பில் வைத்து விட்டு வந்த பின்பு 10 நிமிடம், 15 நிமிடம் ஆகிவிட்டது. விசில் வந்த பாடில்லை. போய் பார்த்தால்... அடுப்பை பற்ற வைக்கவேயில்லை.

Tuesday, December 9, 2008

போய் சேரும் இடம் – பாகம் 2 ( final Destination – part 2)


கனமழை வெள்ளத்தில் வீட்டில் மாட்டிக்கொண்டு, எங்கும் வெளியில் செல்லமுடியாத நிலை. நண்பர்களிடம் வாங்கி வைத்து நேரம் இல்லாமல் பார்க்காத சில படங்களை மின்சாரம் அபூர்வமாய் வந்த பொழுது, பார்த்தோம்.

***
அதில் ஒரு படம் “போய் சேரும் இடம்” (கதைப்படி இப்படித்தான் மொழி பெயர்க்க முடிகிறது என்னால்)

கதையை சுருக்கமாய் சொல்வதென்றால்...

நண்பர்களுடன் பிக்னிக் கிளம்புகிறாள் ஒரு இளம்பெண். செல்கிற வழியில் முக்கிய சாலையில், ஒரு சிக்னலில் காத்திருக்கும் பொழுது....இன்னும் சில நிமிடங்களில் கோர விபத்து நடக்க போவதாய் காட்சி படிமங்களாய் தெரிகிறது.

சுயநினைவுக்கு வந்தால் காட்சி படிமங்களாய் தெரிந்தது உண்மையில் ஒவ்வொன்றாய் நிகழ்கிறது. பதட்டமாகி அழுது வண்டியை மேற்கொண்டு நகர்த்தாமல்... வழி மறித்து நிற்க ஒரு போக்குவரத்து போலீஸ் விசாரிக்கிறார். விவரம் சொல்கிறாள். இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, அவள் சொன்ன மாதிரியே அங்கு கோர விபத்து நடக்கிறது. (நானும் 10 ஆண்டுகளாக மேலை நாட்டு படங்கள் பார்த்திருக்கிறேன். இப்படி மனம் பத பதைக்க வைக்கிற விபத்தை எந்த படத்திலும் பார்த்ததில்லை)

இதுவரை.. இ.எஸ்.பி. சக்தி என நாம் ஏற்கனவே நாம் தெரிந்த கதை தான். இனிமேல் தான் கதையில் நாம் அறியாத திருப்பம் இருக்கிறது.

ஏற்கனவே இதே முறையில், விமான விபத்து முன்கூட்டியே அறியப்பட்டு, தப்பித்த சில பேர் அடுத்தடுத்து கோரமான முறையில் ஒவ்வொருவராக சாகிறார்கள். (முதல் பாகம் என நினைக்கிறேன்)

அதே மாதிரி இப்பொழுதும் நடந்துவிடுமோ என பயப்படுகிறார்கள். பயந்த படியே, நாயகிக்கு காட்சி படிமமாய் தெரிந்த விபத்தில் எந்த வரிசையில் இறந்தார்களோ அதே வரிசையில் ஒவ்வொருவராக நமக்கு குலை நடுங்கிறபடி மரணத்தால் அடுத்தடுத்து துரத்தப்பட்டு கோரமாய் சாகிறார்கள்.

இறுதியில்... நாயகியும், போலீஸாக வருகிற நாயகனும் ஒரு ஜிம்மிக்ஸ் வேலை பார்த்து, மரணத்திலிருந்து தப்பிக்கிறார்கள் (!).

***

கதை – பூ சுத்தல் கதை. விதிவசக் கோட்பாடு. நம்மூர் மொழியில் சொல்வதானால் எமன் பாசக்கயிறை வீசிவிட்டால், உயிரை எடுக்காமல் விடமாட்டான்.
இந்த படத்தைப் பார்த்த பிறகு, வருங்காலங்களில் ஏதேனும் விபத்தில் தப்பினால், இந்த படம் நிச்சயமாய் நம் மனக்கண்ணில் வரும்.

திரைக்கதையும், காட்சி நகர்த்துகிற விதம் தான் இந்த படத்திற்கு மிகப் பெரிய பலம். அடிதடி, திகில் படம் பார்க்கிறவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.
****

Friday, December 5, 2008

பெட்ரோல் விலை குறைப்பும் இறக்க முடியாத விலைவாசியும்!


டிசம்பர் இறுதியில் தான் விலை குறைப்போம் என திமிர்தனமாக அறிவித்த அரசு, பெட்ரோல் விலை குறைப்பிற்காக நாடு முழுவதும் எழுந்துள்ள பல போராட்டங்களுக்கு பிறகு விலை குறைத்துள்ளார்கள். அதிலும், கண்டிசன் அப்ளை என்கிற சில நிபந்தனைகளுடன்.

உலகச் சந்தையில் கச்சா பேரல் உயரும் பொழுதெல்லாம், இங்கு விலை ஏற்றியவர்கள் 47 டாலருக்கும் கீழாக குறைந்த பிறகும், குறைக்க மனது வர மறுக்கிறது. இது ஒரு பிரச்சனை. இதற்கு பின்னணியில் வேறு ஒரு பிரச்சனையும் எழுகிறது. இந்த நிலையற்ற தன்மையில் பாதிக்கப்படுவது பெரும்பான்மை மக்களே!

ஒரு உணவகத்தில் வழக்கமாக சாப்பிடுவேன். மூன்று மாதங்களுக்கு முன்பு வரை டீ-யின் விலை ரூ. 3. இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ. 4. இரண்டு நாள்களுக்கு முன்பு, ரூ. 5 என மாற்றிவிட்டார்கள். இதே நிலை தான், அந்த உணவகத்தில் உள்ள எல்லா வகைகளுக்கும்.

இந்த கடுமையான விலைவாசி உயர்வுக்கு பல காரணங்களில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வும் ஒரு காரணம்.

இப்பொழுது, விலை குறைந்திருக்கிறது. அதன் எதிரொலிப்பு விலைவாசி குறைய வேண்டுமல்லவா! குறையாது. மொத்தத்தில் அவஸ்தைபடுவது மக்கள் தான்.

இந்த வருட துவக்கத்தில் நான் வாங்கிய சம்பளத்தின் மதிப்பு இன்றைக்கு 30% குறைந்திருக்கிறது. பல்வேறு செலவுகளை குறைத்து தான் சென்னையில் வாழமுடிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு ஜனவரியில் தான் இருக்கும். நிலவுகிற பொருளாதார மந்த நிலையில் எல்லா முதலாளிகளும் நெருக்கடியில் இருக்கிறார்களாம். இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடையாது என இப்பொழுதே அறிவித்து விட்டார்கள்.

வேறு அலுவலகத்திற்கு நகரலாம் என்றால், பல அலுவலங்களிலிருந்து பல்வேறு தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதாக பழக்கத்தில் H.R. கள் தெரிவிக்கிறார்கள். இப்பொழுது உள்ள சூழ்நிலையில், இருக்கிற வேலையை காப்பாற்றிகொள்வது தான் புத்திசாலித்தனம் எனவும் ஆலோசனை சொல்கிறார்கள்.

முதலாளிகளின் நெருக்கடி தொழிலாளிகளுக்கு நேரடியாக இறங்குகிறது. ஆனால், என்றைக்கும் தொழிலாளர்களின் நெருக்கடி முதலாளிகளை பாதிப்பதேயில்லை.

Monday, December 1, 2008

மழையால் நகரம் நரகமானது


மழை சென்னையை தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது. ஒருவழியாக மழை நின்றாலும், ஏரி உடைப்பெடுத்து பல பகுதிகளில் வீடை விட்டு சென்ற மக்களை இப்பொழுதும் குடியேற விடமால் தடுக்கிறது.

வீட்டிற்குள் தண்ணிர் வராத, மாதத்திற்கு தேவையான மொத்த பொருட்களையும் வாங்கி வைத்திருக்கிற குடும்பங்கள் தப்பித்துவிட்டன. எல்லா மழையிலும் ஏழைகள் தான் நிறைய பாதிக்கப்படுகிறார்கள். அன்றாடம் வேலை செய்து, அதில் அரிசி, பருப்பு வாங்கி சமைத்து சாப்பிடுகிற குடும்பங்களின் நிலை கையறுநிலை தான்.

மின்சாரம் இல்லை. அத்தியாவசிய பொருட்கள் கூட நிறைய தட்டுப்பாடாகிவிட்டது. பால் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் சில பகுதிகளில் அரை லிட்டர் பால் 20 ரூபாயாம். எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரைக்கும் லாபம்.

ஏற்கனவே அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தால் வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, வாடகை உயர்வு என சிக்கித் தவித்த மக்கள் தான் சிறுக சிறுக சேமித்த கொஞ்ச பொருட்களையும் இந்த மழை கொண்டு போய்விட்டது.

எல்லாவற்றையும் இழந்து தலைவிரி கோலமாய் நிற்கிற மக்களை பார்க்கும் பொழுது, காண சகிக்கவில்லை. துயரம் தான் பீறிட்டு எழுகிறது.

பிரச்சனைகள் வருவதற்கு முன் காப்பாற்றுகிற அரசு மக்கள் நலன் நாடு அரசு எனலாம். செத்தப் பிறகு போஸ்ட்மார்ட்டம் செய்ய வருகிற அரசை என்ன சொல்வது?

எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களுக்கு, அரசு 10 கிலோ அரிசியும், ரூ. 2000 பணம் என அறிவித்து இருக்கிறது. மழையில் அல்லாடுகிற மக்களை காப்பாற்ற வக்கற்ற அரசு, இந்த இழப்பீட்டு பணத்தை அமுக்க எத்தனை பிரயத்தனப்படுகிறார்கள் என இனி பார்க்கத்தான் போகிறோம்.

நகரம் வளர்ச்சியடைவதாக சொல்கிறார்கள். வேதனை கலந்த சிரிப்பு தான் வருகிறது. உடலில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் சரியாக ஊட்டம் போய் சேர்ந்தால் அது ஆரோக்கியம். ஒரு இடத்தில் குவிந்தால் அது வளர்ச்சி இல்லை. வீக்கம் . உடனடியாக மருந்து கொடுத்து குணப்படுத்த வேண்டிய நோய். இந்த நோயை குணப்படுத்தாமல், பெரும்பான்மை மக்களுடைய துயர மழை நிற்க போவதேயில்லை.