Thursday, June 16, 2011

மனிதர்கள் 4 - இராகவ்


இராகவ் பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவருடைய ஒவ்வொரு செயலும், பகிர்ந்துகொள்ளப்பட வேண்டியவை. நீளமாய் போய்விடும் என்பதால், சிலவற்றை மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

****

எட்டு மணிக்கு ஒரு இடத்திற்கு வரச் சொன்னால், சரியாக 8.05 க்கு போன் செய்து, அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாக பொறுப்பாக தெரிவிப்பார். 1 மணி நேரம் கழித்து வந்துசேர்வார். ஏன்? காரணம்."பஸ்ஸால் லேட்". ச‌ளைக்காம‌ல் புதுசு, புசுசாய் ப‌ஸ்ஸை கார‌ண‌ம் காட்டுவார்.

****

ஒருமுறை ஏவிஎம் ராஜேஸ்வ‌ரிக்கு ப‌ட‌ம் பார்க்க‌ போயிருந்தோம். அவருக்கு ஒரு ந‌ண்ப‌ர் குடும்ப‌த்தை அழைத்து வ‌ர‌ வேண்டிய‌ பொறுப்பு. ச‌ரியாக‌ உத‌ய‌ம் தியேட்ட‌ருக்கு அழைத்துபோய்விட்டார். டிராபிக்கில் சிக்கி, வ‌ந்து சேர்வ‌த‌ற்குள் பாதி ப‌ட‌ம் போச்சு!

****

தாமதமாய் வருவது, பெரிய தலைவலியாய் போனது. ஒருவழியாய் ஒரு வண்டி வாங்க வைத்தோம். தெனாலி குதிரைக்கு புல்லே காட்டாதது போல, வண்டிக்கு சர்வீஸே செய்யவில்லை. அவசரத்துக்கு எடுத்து போனவர்கள் எல்லாம், கொஞ்சம் கூட பிரேக் இல்ல! எப்படிடா சென்னையில வண்டி ஓட்டுற!ஆளை யாரையும் காலி செய்து விடாதே! என திட்டுவார்கள்.

ஒரு நாள் தவறி போய், வண்டியை சர்வீஸ் செய்து, கொஞ்சம் ஸ்பேர் பார்ட்ஸ்க்கு எல்லாம் செலவும் செய்து, கடற்கரைக்கு எடுத்து வந்த பொழுது, சரியாக அவருடைய வண்டியை மட்டும் சுட்டுவிட்டார்கள். சர்வீஸ் செய்ததினால் தான் வண்டியை தூக்கிவிட்டார்கள் என பல நாள்கள் புலம்பி திரிந்தார்.

****
நம்மாளுக்கு திருமணம் நடைபெற்றது. 750 பேருக்கு சாப்பாடு சொல்லி, கணக்கு வழக்கு இல்லாமல் பத்திரிக்கை வைத்து, 1500 பேர் வந்து, கடைசி வரிசையில் சாப்பிட உட்கார்ந்த எங்களுக்கு அப்பளம் மட்டும் தான் மீதி இருந்தது.

****
ஒருமுறை அவர் வீட்டிற்கு போகும் பொழுது, "கோடை விடுமுறைக்கு யாரும் வீட்டுக்கு வரவில்லையா!" எனக் கேட்டேன். "என் மச்சினி வந்திருங்காங்க!" என்றார் இராகவ். "உங்க துணைவியார் மாதிரியே கூச்சசுபாமா? நல்ல பேசுவாங்களா?" என்றேன். "நல்லா ப்ரீயா பேசுவாங்க!" என்றார்.

போனதும், நலம் விசாரிப்போமே! என "என்னங்க எந்த கல்லூரியில படிக்கிறீங்க! என்ன மேஜர்?" என்றேன். இராகவின் துணைவியார் பின்பு, நின்று கொண்டிருந்தார். கேட்டு, தொடர்ச்சியாக ஒரு நிமிடத்திற்கு எந்த பதிலும் இல்லை. பார்த்தால், என்னிடம் பேச வெட்கப்பட்டு, அக்கா பின்னாடி ஒளிந்து கொண்டிருக்கிறார். அப்படி ஒரு வெட்கம். இந்த அளவுக்கு வெட்கப்பட்ட பெண்ணை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.

அப்படியே திரும்பி, இராகவை முறைத்து பார்த்தேன். இவங்க தான் ப்ரீ டைப்பா?!

****

அறை நண்பர்கள் மூவர் ஒரு பட ஜோக்கை காட்டி சிரித்து கொண்டிருந்தனர். "தொடர்ந்து வீட்டுச் சாவியை தொலைக்கிற ஒருவன், இறுதியாக ஒரு முடிவு எடுக்கிறான். பூட்டிவிட்டு, பூட்டுக்கு அருகேயே ஒரு ஆணி அடித்து, மாட்டிவிட்டு போகிறான்".

அப்பொழுது உள்ளே வந்த இராகவ் விசயத்தை கேட்டு, சீரியசாய் "அவன் முடிவு எடுத்தது சரிதானே!" என்றாரே பார்க்கலாம். பல காலம் இதை வைத்தே கலாய்த்தார்கள்.

****

ஒரு தீபாவளிக்கு நண்பர்கள் அனைவருக்கும் மூன்று மாதத்திற்கு முன்பே ஒருவரே டிக்கெட் போட, 4 டிக்கெட்டில் ஒரே கும்பலாய் இருந்தோம்.

நாள் நெருங்க, நெருங்க, சிலர் திட்டமிட்ட நாளுக்கு முன்பே கிளம்ப, சிலர் வேலை விசயமாய் வெளிநாடு செல்ல, கடைசி நாள்களில் டிக்கெட்டில் சிலரை ரத்து செய்ய, ஒரு டிக்கெட்டில் நானும், இராகவ் மட்டுமே இருந்தோம்.

டிக்கெட்டையும் இராகவ் கையிலேயே கொடுத்துவிட்டார்கள். சதிகாரர்கள். பகீரென ஆகிவிட்டது எனக்கு. அவர் வழக்கம் போல‌ தாமதமாக வந்துவிட்டால், ரயில், பஸ் எல்லாம் நிரம்பி வழியும் பொழுது, அதிக பணம் கொடுத்தாலும், ஊர் போய் போய் சேர முடியாதே என கவலை வந்துவிட்டது.

அந்த நாளும் வந்தது. திக் திக்கென இருந்தது. 7.30 க்கு வண்டி கிளம்பும். 7.25 க்கு கோச்சில் ஏறி, உள்ளே நுழைந்தால், ஆச்சர்யம்! இராகவ் உட்கார்ந்திருந்தார்.

மழை விழத்துவங்கியது. அடைமழை விடிய விடிய மழைபெய்தது. ஊர் வந்த பிறகும், விடவில்லை. அந்த முறை தமிழகம் முழுவதும் வெள்ளக்காடாகி போனது. தீபாவளியை யாரையும் கொண்டாட முடியாதபடி செய்துவிட்டார் இராகவ் (!),

****

இன்னும் அவருடைய விளையாட்டுகள் தீர்ந்தபாடில்லை. வரும் காலங்களில் பகிர்கிறேன். இராகவ்-யிடம் எதிர்மறையான அம்சங்கள் மட்டும் இல்லை. நேர்மறையான அம்சங்களும் நிறைய உண்டு என்பதையும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

****