Saturday, May 18, 2013

இனியெல்லாம் சுகமே!

நேற்று ஒரு டிவிடி கடையில் பாடல் டிவிடி வாங்கலாம் என தேடியபொழுது, கமல், ரஜினி பாடல்கள் என 75 படங்களுக்கு மேலான படங்களின் பாடல்கள் அடங்கிய டிவிடி பார்த்தேன். அந்த கால கேசட் நினைவு வந்தது. பகுதிக்கு 6 பாட்ல்கள் என இரண்டு பக்கமும் 12 பாடல்கள் தான் பதியமுடியும். இந்த ஒரு டிவிடி 25 கேசட்டுகளுக்கு சமம் என மனம் கணக்கிட்டது. இன்றைய தலைமுறைக்கு பல பொருட்கள் மலிவாகவும், தாராளமாகவும் கிடைக்கின்றன.

அண்ணனின் நண்பன் ஒருவன் இளையராஜாவின் ரசிகன் அவன். அவனுடைய வேலை நேரம் தவிர மீதி நேரத்தை இளையராஜாவுடன் தான் கழித்தான். 70களில், 80களில் இளையராஜாவின் பாடல்களை கடை கடையாய் ஏறி சேகரித்து, கேசட்டில் பதிந்து, இரவில் மொட்டைமாடியில் இரவு 2 மணிவரை கேட்டுக்கொண்டிருப்பான். கல்யாண பரிசாக கூட இளையராஜா பாடல்களை தான் பரிசாக அளிப்பான். 

அண்ணனோடு சேர்ந்து தூங்கிய காலங்களில் இளையராஜாவின் பாடல்கள் தான் தாலாட்டு. அண்ணனின் நண்பன் திரும்ப திரும்ப கேட்டு, சில பாடல்கள் இன்றைக்கு வரைக்கும் கூட மனப்பாடம் தான்.

உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...
இனியெல்லாம் சுகமே...

பக்கத்து வீட்டு அக்கா ஒரு கேசட்டிலே தனக்கு பிடித்த ஒரே பாடலை மட்டும் முழுவதும் பதிந்து கேட்டுக்கொண்டே இருப்பார். இது என்ன லூசா என அன்றைக்கு தோன்றியது. காதல் பித்தில் இருந்திருக்கிறாள் என இப்பொழுது புரிகிறது.

அப்பொழுது தான் வீட்டில் அதிக கேசட் வைத்திருப்பவர்களுக்கு இருக்கிற கெத் தனி தான். அதை கடனாக கேட்டால், அவர்கள் பண்ணுகிற பிகு இருக்கிறதே! தாங்காது. கடனாக வாங்கி, அந்த கேசட்டுக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதே பாடல் தான் வேண்டும். அதே வரிசையில் வேண்டும் என அடம்பிடிப்பார்கள். :)

கேசட்டுகளை பதிந்து நிறைய பணத்தை வீணாக்கிறான் என அண்ணனை திட்டிக்கொண்டே இருப்பார் அம்மா. இப்பொழுது டேப்ரிக்கார்டடை தேடினாலும் பார்க்கமுடியாது. ஆனால், அண்ணன் வீட்டில் சில கேசட்டுகளை தன் நினைவுகளுக்காக பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.

எதிர்நீச்சல்

படம் எனக்கு பிடித்திருந்தது.  தன் பெயரால் தன் மனிதன் எவ்வளவு இழப்புகளுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகிறான் என்பதை சுவைபட சொல்லியிருக்கிறார்கள்.  அதிலிருந்து மீள அவன் செய்யும் போராட்டம் என்ன?  இறுதியில் என்ன படிப்பினை பெறுகிறான் என்பதும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமான செய்தி.

தமிழ்நாட்டில் நாட்டார் வழக்கு தெய்வங்களின் பெயர், தாத்தா, பாட்டி பெயர்கள் என பல வகைகளில் குழந்தைகளுக்கு முன்பெல்லாம் பெயர் வைத்தார்கள்.  'நாகரிக' சமுதாயத்தில் அந்த பெயர்கள் எல்லாம், எப்படி 'காலாவதி' ஆகிப்போயின என்பது ஒரு நீண்ட விவாதத்திற்கு உரியது.

'அண்ணாமலை' என பெயர் கொண்ட அண்ணணின் நண்பன், அண்ணாமலை படம் வந்த பிறகு, அவன் அந்த பெயருக்கு 'பெருமை' கொண்டான். ரஜினிகாந்த் காப்பாற்றிவிட்டார். :)

இப்பொழுதும் 90%க்கும் மேலாக யாரும் தமிழ் பெயர் வைப்பதில்லை.  இந்த படத்தில் நாயகன் பெயரை (ஹரிஸ்) போலவே பலரும் வைக்கிறார்கள்.  ஜாதகத்தை கொண்டு முன்னெழுத்தை ஜாதககாரர்கள் சொல்கிறார்கள். அந்த எழுத்துக்களில் பெயர்கள் பெரும்பாலும் தமிழில் இருப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும், தமிழர்கள் தனிக்கவனம் எடுத்து தவிர்க்கிறார்கள்.

நேற்று கும்பகோணம் அருகே ஒரு கிராமத்தில் அகமுடையார் குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு 'பிரணவ ஜெயின்' என்று வைத்திருப்பதாக சொன்னார்கள். பெற்றோர்கள் சிங்கப்பூரில் சில ஆண்டுகளாக வசிக்கிறார்கள். இதைவிட 'நாகரிக' ச்முதாயத்தில் வாழ்கிறார்கள் அல்லவா! :)

என் நண்பர்கள் சிலர் தங்கள் பெயரினால் விவரம் தெரியாத வரை சிரமப்பட்டு இருக்கிறார்கள்.  பெயர் என்பது பெயர் மட்டுமில்லை.  அதில் நமது அடையாளம், மண்ணின் மணம், குல வரலாறு இருப்பதை புரிந்துகொண்ட பிறகு, தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவந்துவிட்டார்கள்.

பெயர் சம்பந்தமாகவே படம் முழுவதும் சுவாரசியமாக நகர்ந்து இருக்கலாம்.  இயக்குநருக்கு நம்பிக்கை இல்லாததால், மாரத்தான் என நகர்ந்துவிட்டார்.  மாரத்தானில் ஜெயித்து, வெற்றிப் பேட்டியில், 'சிவகாமியின் மைந்தன் குஞ்சிதபாதமாக தான் உலகத்திற்கு அறியபப்படவேண்டும். அது தான் தந்தையில்லாமல் பல சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்த தன் தாய்க்கு பெருமை' என சொல்வது அருமை. படம் முழுவதும் விவாதித்த ஒரு விசயத்தை அந்த ஒரு நிமிடத்தில் சடாரென கடந்து போயிருந்ததை தவித்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கவேண்டும்.

மற்றபடி, நடிகர்களின் தேர்வு, நடிப்பு, ஒளிப்பதிவு, பாடல், நடனம் என படத்தின் வேகத்திற்கு உதவியிருக்கிறது.

படம் ஒரு விவாதப்புள்ளியை துவங்கி வைத்திருக்கிறது. நாம் தாம் அதை விரிவாக்கி நம்மை சுற்றியுள்ளவர்களிடம் எடுத்துச்செல்லவேண்டும்.

வீட்டுச் சாப்பாடே சாலச்சிறந்தது!

நேற்று நண்பனுடன் அவனுடைய மாமாவை சந்திக்க போயிருந்தேன். அவர் தனது நண்பர்களுடன் தனது மாசாலா நிறுவனத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அதிலிருந்து சில தகவல்களை பகிர்கிறேன்.

****

குழந்தைகளுக்கு கூட தன்னுடைய மசாலா பொருட்களை பயன்படுத்தவேண்டும் என தரமான பொடியை தரவேண்டும் என்ற கனவுடன் இந்த மசாலா துறைக்கு வந்தேன். இந்த இரண்டு வருடங்களில் அந்த கனவை மொத்தமாக தகர்த்துவிட்டார்கள்.

காரமே இல்லாத சொத்தை மிளகாய்த்தூளை அரைத்து, நிறைய உடல் தொந்தரவுகளை தரும் சிவப்பு ரசாயன பொடியை கலந்து சிவிரென சிகப்புதூளாக விற்கிறார்கள்.  அதை கிலோ ரூ. 40 என‌ மிக மலிவான விலைக்கு விற்கிறார்கள். அவர்களோடு நாம் போட்டி போடவே முடியாது.

பல கல்லூரி கேன்டின்களுக்கு மசாலா விற்றுக்கொண்டிருக்கிறேன். கேன்டின் கான்டாராக்டர்கள் பொடியை மலிவா கொடு! என்று தான் பேசுகிறார்களே தவிர, தரமான பொருளை கொடு என கேட்பதே இல்லை. இதைத்தான் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இரண்டு வருடங்களாக தரமான பொருளை விற்கவேண்டும் என்ற நோக்கத்தில் முயற்சி செய்து, சில லட்சங்கள் நட்டம் அடைந்தது தான் மிச்சம்.

எந்த கடைக்காரரும் தரமான பொருளை தாருங்கள் என கேட்பது இல்லை.  தனக்கு கூடுதலாக கமிசன் கிடைக்கிறதா என்று தான் பார்க்கிறார்கள்.  பிரபலமான நிறுவன பொருட்கள் தவிர, குறைவாக கமிசன் கிடைக்கும் தரமான பொருட்களை கடைக்காரர்கள் வாங்கி விற்பதே இல்லை.

ஒருமுறை அப்பளம் வாங்கி விற்கலாம் என விசாரித்தால், அப்பளத்தின் மொறுமொறுப்புக்கு சோடா பவுடர் போடுவதாக சொன்னார்கள்.  அது இல்லாமல் மொறுமொறுப்பு சாத்தியமே இல்லையாம்.  அப்பளம் விற்கும் திட்டத்தையே கைவிட்டேன்.

நேற்று ஒரு கேன்டின்காரரிடம் ஊறுகாய் எங்கு வாங்குகிறீர்கள்? என கேட்டதற்கு, கிலோ ரூ. 26க்கு வாங்குகிறேன் என்றார். எங்கோ ஆந்திராவின் கிராமப்புற பகுதியில் குடிசைத் தொழில் செய்பவர்களிடமிருந்து வருகிறதாம்.  எண்ணெய், மிளகா பொடி என விற்கும் விலைக்கு ரூ. 26க்கு தயாரிக்கவே முடியாது. எதைப்போட்டு தயாரிக்கிறார்கள் என்பது ஆச்சரியம்.

இப்படி ஒருமணி நேரம் கலப்படம், வணிகம், சந்தை என இந்த சந்தை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை விலாவாரியாக சொன்னார்.  எந்தவித தரக்கட்டுப்பாடும் கிடையாது. அவ்வப்பொழுது ஏதாவது ஒரு அதிகாரி போனைப் போட்டு, லஞ்சம் வாங்கிக்கொண்டு போய்விடுகிறார்களாம். கேட்டு முடிந்ததும் கொஞ்சம் கிறுகிறுத்துத்தான் போனது.

முன்பெல்லாம் சொந்த பந்தங்களுக்கு என்னுடைய மசாலா பொடியை கொடுத்துக்கொண்டிருந்தேன். இப்பொழுது சந்தைகளின் விதிகளுக்கு தகுந்தவாறு நானும் மாறிக்கொண்டதால் (கலப்படம் செய்வதால்)இப்பொழுது சொந்த பந்தங்களுக்கு பொடியை தருவதில்லை என்றார். :(

இத்தனையையும் பார்த்து, இப்பொழுதெல்லாம் வெளியில் சாப்பிடுவதே இல்லை. வீட்டுச்சாப்பாடு தான் சாப்பிடுகிறேன்! என்றார். எனக்கும் அதுதான் ரெம்ப சரியென்றுபட்டது!

இரண்டு நாள்களுக்கு முன்பு, சொந்தக்கார பெண் கேட்டரிங் படித்துவிட்டு, ஒரு 3 ஸ்டார் ஹோட்டலில் பயிற்சிக்காக போய்க்கொண்டிருக்கிறார். கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஹோட்டலில் சமைக்கிற விதம் குறித்து சொன்னதும், தலைச்சுற்றல் வந்தது. அதை இன்னொரு நாள் பகிர்கிறேன். :)

Wednesday, May 1, 2013

Le Grand voyage - 2004 - மகத்தான பயணம்

பயணங்கள் நமக்கு நிறைய கற்றுத்தரும் ஆசானாக இருக்கின்றன. மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் ஏதாவது ஒரு ஊருக்கு பயணமாக சென்று வந்தால் என்னிடமிருந்து கொஞ்சம் மன அழுக்குகள் கறைந்து போவதை பார்த்திருக்கிறேன். பெருநகரம் உடம்பில் ஏற்றிய படபடப்பை கொஞ்சம் உதறிவிட்டு வந்திருக்கிறேன் என்பது நன்றாக உணர்ந்திருக்கிறேன்.

தொழிற்முறை பயணம், இன்பச் சுற்றுலா, ஆன்மீக பயணம் என பயணங்களில் பலவகையானவை உண்டு. இந்த பயணம் பிரான்சிலிருந்து மெக்கா நோக்கி பயணம் பற்றிய படம். அருமையான படம்.

****

கதை எனப் பார்த்தால்...

பிரான்சில் வாழும் ஒரு முஸ்லீம் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெரியவருக்கு மெக்கா பயணம் மேற்கொள்வது அவரது நீண்ட கால ஆசை.  பள்ளி இறுதியில் படிக்கும் தன் இளைய மகனை அழைத்துக்கொண்டு தரை வழி மார்க்கமாக தனது நீண்ட பயணத்தை காரில் துவங்குகிறார்.

பல மனிதர்களை வழியில் சந்திக்கிறார்கள். உடல் நல குறைபாடு, தூதரக தொல்லைகள், எல்லாவற்றையும் எதிர்கொண்டு இறுதியில் மெக்காவை அடைகிறார்கள். உடல் நலக்குறைவினால், அங்கு இறந்துவிடுகிறார்.  அப்பா குறித்த நினைவுகளுடன் பிரான்சுக்கு திரும்புகிறான்.

****

ஐந்துமுறை தொழுகும் அப்பா. பிரான்சில் பண்பாட்டில் வளர்ந்த எதிலும் பெரிய பிடிப்பு இல்லாத இளைஞன்.  மெக்கா செல்லவேண்டும் என்றால் விமானத்தில் செல்லலாமே! (ஏன் என் உயிரை எடுக்கிறீர்கள்?) என்கிறான் பையன்.  ஆன்மீக பயணம் என்பது நடை தான் சிறந்தது. அதற்கு வாய்ப்பில்லாத பொழுது காரில் பயணிக்கிறோம் என்கிறார்.

பிரான்சிலிருந்து மெக்கா வரை 3000 கி.மீட்டர்கள்.  இடையில் பல முக்கிய நகரங்களை கடக்கிறார்கள்.  அந்த இடங்களை சுற்றிப்பார்க்கலாம் என ஆசைப்படுகிறான் பையன்.  "நாம் ஒன்றும் சுற்றுலா வரவில்லை" என மறுத்துவிடுகிறார்.

காதலியோடு செல்போன் பேசுகிறான்  என கடுப்பாகி அவன் தூங்குகிற பொழுது குப்பையில் எறிந்துவிடுகிறார்.  அடுத்த நாள் அதை அறிந்து டென்சனாகிவிடுகிறான் பையன்.

ஒருமுறை அப்பாவுக்கும் மகனுக்கும் பெரிய வாக்குவாதமாகி பையனை அடித்துவிடுகிறார். நான் ஊருக்கு கிளம்புகிறேன். நீங்கள் தனியாக போய் சிரமப்படுங்கள்! என கத்துகிறான்.  சரி காரை விற்று நீ ஊருக்கு போ! நான் பயணத்தை தொடர்கிறேன் என்கிறார்.  பிறகு சமாதானம் அடைகிறார்கள்.

அப்பா மகன் என தலைமுறை இடைவெளியை பேசுகிற படம் இது! 

பிரான்சில் வளர்ந்த பையன், இவரும் பல காலம் பிரான்சில் வாழ்ந்தவர் தானே!  பிரான்ஸ் பண்பாடு அவரை கொஞ்சம் கூட மாற்றவில்லையா என்ன?  அரபு நாடுகளில் வாழும் அப்பாவை போலவே இறுக்கமாக வாழ்கிறார். கொஞ்சம் நெருடலாக இருந்தது.

இந்தியாவில் ஒரு அப்பாவும் பிள்ளையும் இப்படி பயணித்தால் கூட பயண அனுபவங்கள் கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு இப்படி தான் அனுபவம் ஏற்படும்.

பிள்ளைகள் என்பவர்கள் தன் வழியே வந்தவர்கள் அவ்வளவு தான்.  தன்னுடைய சொத்து போல பிள்ளைகளையும் பாத்தியப்பட்டவர்கள் போல நடந்துகொள்கிறார்கள்.

அப்பாக்களுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை.  அனுபவம் இருப்பதாலேயே தாங்கள் சிந்திப்பது, செயல்படுவது சரி என நினைக்கிறார்கள்.  பிள்ளைகள் படித்தவர்கள். அவர்களின் அறிவையும் நம் அனுபவத்தையும்  சேர்த்து செய்யலாம் என்பதாக யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்.

படத்தில் நடித்த பாத்திரங்கள் மிக குறைவு. அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பார்க்கவேண்டிய படம்.

இந்த படத்தைப் பார்க்க தூண்டியது எஸ். இராமகிருஷ்ணனின் கீழே உள்ள விமர்சனம் தான்.  விரிவாக எழுதியுள்ளார். அவசியம் படியுங்கள்.

மகத்தான பயணம்