Wednesday, December 15, 2010

மழைக்கால சிதறல்கள்! - டிவிட்டரில்!


ஒரு மணி நேரம் சூரியன் காய வைத்த ஆடைகளை, மழை ஒரு நிமிடத்தில் நனைத்துவிடுகிறது.

*****

தெரிந்தே செய்யும் தவறுகளுக்கெல்லாம் மனிதர்கள், மழையை பலிகடா ஆக்குகிறார்கள்.

*****

மழைக்காலத்தில் மட்டும் சில நாள்கள் பவுடர் அடிப்பதுண்டு. சிலர் கூடுதலாக சென்ட் அடிப்பது போல!

*****
எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்குகிற ஏழைகள் ஒருநாள் மழையை தாங்க முடிவதில்லை. புலம்பி தீர்க்கிறார்கள்.

****
ரெயின்கோட்டை தூக்கி திரியும் பொழுதெல்லாம், மழை டபாய்க்கிறது.

****

குண்டும் குழியுமான சாலைகள், பைக்கில் போனால், குதிரையில் பயணிப்பது போலவே இருக்கிறது.

****

வெள்ளத்தினால் சாகின்ற மக்களில் 99% ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

****

Saturday, December 11, 2010

சமீபத்தில் ட்விட்டியவை!


முன்குறிப்பு : ட்விட்டர் ... வலையுலகில் பழையது. எனக்கோ புதியது. கீழே உள்ளவை இன்றைக்கு ட்டிவிட்டியது. ஓகே வான்னு நீங்க தான் சொல்லனும்! யாரும் ஏதும் கருத்து சொல்லலைன்னா, சம்மதம்-னு எனக்கு வசதியா எடுத்துக்குவேன். ஜாக்கிரதை!

****
ஸ்பெக்ட்ரம் : "20,000 மாதம். 35 வருசத்துக்கு 85 லட்சம் தேவைப்படுது. பிறகு, ஏன் இவ்வளவு கொள்ளையடிக்கிறாங்க!" அலுவலக பெண்மணி அப்பாவியாய்!

****
பல மாதங்களுக்கு பிறகு வங்கியில்... தாவணியில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். வேலைகளை விட்டுவிட்டு, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

****

ஒரு பதிவை போட்டுட்டு...அதை மார்க்கெட்டிங் பண்ற வேலை இருக்கே! அய்யய்ய்ய்யோ!

****

விருதகிரி : சில படங்களை பார்த்தால் அலர்ஜி. சில படங்களின் பெயரைக் கேட்டாலே அலர்ஜி.

****

"என் கடைசி பிள்ளை தான் காப்பாத்துவான்னு, ஜோசியர் சொன்னது நடக்குதுன்னு" மணியார்டரை பெற்று சொல்கிறார் அம்மா. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.

****

உற்று கவனித்தேன். தனியாக தான் பேசிக்கொண்டிருந்தார். செல் வந்த பிறகு, எளிதாய் கண்டுபிடிக்க முடிவதில்லை.

****

Saturday, November 27, 2010

நொந்தகுமாரனின் பக்கங்கள் - எலி வேட்டை!


கடந்த வாரத்தில் ஒரு நாள் அனைவரும் தூங்கி கொண்டிருந்த பொழுது, நான் படித்துக்கொண்டிருந்தேன். சமையலறையிலிருந்து ஏதோ சத்தம் விட்டு விட்டு வந்தது. சத்தமில்லாமல் போய் பார்த்தால், பின்னால் இருந்த வீட்டிலிருந்து வந்தது அந்த சத்தம். அமைதியானேன்.

அன்றிலிருந்து நாலாம் நாளில் வீட்டின் பொருட்களின் அசைவுகளை உன்னிப்பாக கவனித்ததில்... ஒரு எலியின் நடமாட்டம் லேசாக தெரிந்தது. அந்த வீட்டில் என்னையும் சேர்த்து ஐந்து பேர் வாழ்கிறோம். காலையில் எழுந்தால், அரக்க பரக்க வேலை. இரவானதும் வீட்டில் அடைகிறோம். நாங்கள் ஏதோ ஒரு பொந்துக்குள் வாழும் பெருச்சாளிகள் போலவே மனதில் அவ்வப்பொழுது தோன்றும். வீட்டு நிலையும் அப்படித்தான். ஆங்காங்கே துவைக்காத ஆடைகள், துவைத்த ஆடைகள், இரண்டு மூன்று கீ போர்டுகள் என எல்லாம் கலந்து காக்டெயிலாக வீடு இருக்கும். இப்போதைய உடனடி கவலை நடமாடுவது சுண்டெலியா, எலியா, பெருச்சாளியா என தெரியவில்லை.

வழக்கமாய் அறிவிப்பது போலவே அறிவித்தேன். "எலி நடமாட்டம் தெரியுது. என்ன சைஸ்னு தெரியல! கடந்த முறை மாதிரி ஏதும் நடந்துடக்கூடாது. ஆதலால், உஷாரா இருங்க". மண்டையில் அலாரம் அடித்திருக்கும் போல! துவைக்காத துணிகளை லாண்டரியில் போட்டார்கள். மீதி துணிகளை தேய்க்க கொடுத்தார்கள். தேவையில்லாத குப்பைகள் சேர வேண்டிய இடத்திற்கு போயின. இரண்டு நாளில் அறை சுத்தமாக மாறியது. நானும் கரடியா கத்திகிட்டு இருந்தேன். அப்ப எல்லாம் மதிக்காதவங்க...இப்ப ஒரு எலிக்கு பயப்படுகிறார்கள் பாவிகள்.

சனி, ஞாயிறு இரண்டு நாள்களில் ஊருக்கு கிளம்பிவிட்டோம். மீண்டும் திரும்பினால், சமையலறையில் ஒரே களேபரம். எலி சுதந்திரமாக விளையாடிருந்தது. டீத்தூள், ஜாம், சமையலறை சாமான்கள் என சேதப்படுத்தியிருந்தது. சேத விவரத்தை கணக்கிட்டால் ஐநூறை தாண்டியது. ஆளாளுக்கு ஆத்திரமாகி, அந்த எலிக்கு எங்கள் அறைக்கோர்ட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டது. எப்படி நிறைவேற்றுவது? மருந்து, பொறி என பலவாகவும் பேசி இறுதியில் நேரடியாக தாக்குவது என முடிவெடுத்தோம்.

அன்று மாலை முதலில் வந்தவன் எலியின் நடமாட்டத்தை உணர்ந்து, பின்னாலே போய், மோப்பம் பிடித்து...அட்டை பெட்டிக்குள் இருக்கிறது என கண்டுபிடித்து வைத்திருந்தான். நாங்கள் எல்லோரும் வந்ததும் ஆளாளுக்கு ஒரு வலுவான ஆயுதத்தை எடுத்துக்கொண்டார்கள். நால்வரையும் பார்த்தேன். கண்களில் கொலை வெறி. போட்டு தள்ள நெருங்கும் பொழுது, என் மண்டைக்குள் ஒரு அசரிரீ 'டாம் & ஜெர்ரி யில் அந்த குட்டி எலி.. என்னவெல்லாம் செய்து பெருநகர மன அழுத்தத்தலிருந்து உன்னை விடுவித்திருக்கிறது. அதை கொல்லப் பார்க்கிறாயே!" கேட்டது. என்னையறியாமல்..."அப்படியே விட்டுவிடலாம். போகட்டும்" என்றேன் கையில் உள்ளதை கீழே போட்டு. எல்லோரும் என்னையே திரும்பி பார்த்தார்கள். "என்னடா இவன் எலி ஜூரம் வந்தவன் போல பினாத்துறான்" என்றான் ஒருவன். இப்படி பேசிக்கொண்டிருந்த பொழுதே, எலி ஓடிவிட்டது. " தப்பிக்க விட்ட எலியோ, அதனுடைய தோஸ்த்தோ திரும்ப வந்து எங்க பேன்ட், சட்டையெல்லாம் கடிச்சு துப்பிச்சுன்னா, மவனே நீதான் பொறுப்பு" என எச்சரித்து கலைந்தார்கள். எலி போன திசை பார்த்து சிரிப்பு வந்தது ஜெர்ரி நினைவில்.

Friday, November 19, 2010

நொந்தகுமாரனின் பக்கங்கள் - ஜெயிலும், செல்போன்களும்!


சிறுவயதிலிருந்தே...சிறை பற்றிய கற்பனைகள் நிறைய உண்டு. சிறையைப் பற்றி திரைப்படங்களில் பிலிம் காட்டுவது, சண்டையைப் போல, டான்ஸை போல டுபாக்கர் தான் என நினைத்திருக்கிறேன். எப்படியாவது உள்ளே போய் பார்க்கவேண்டும் என பலநாள் ஆசைப்பட்டிருக்கிறேன்.

என் சிறுவயதில்... அப்பா, சொந்தங்கள் கலந்து கொண்ட ஒரு விசஷேத்தில்.. சொந்தங்களுக்குள் உற்சாகப் பானத்தில் (!) பேச்சில் தொடங்கி, கைகலப்பாகிவிட்டது. அப்பா விலக்கிவிடும் முயற்சியில் இருந்தபொழுது, காவல்துறை அப்பாவையும் அள்ளிக்கொண்டு போய், வழக்கில் ஒரு அக்கியுஸ்டாகிவிட்டது. இரண்டு நாள் சிறையில் இருந்தார். சிறுவயது என்பதால்அப்பாவை பார்க்க என்னை அழைத்துப்போகவில்லை. இரண்டு நாளில் ஜாமீனில் வந்துவிட்டார். பிறகு, மூன்று, நாலு ஆண்டுகள் மாதந்தோறும் வாய்தா, வாய்தா என அலைந்து திரிந்தார். இது ஒரு சோகம்.

அப்பாவுக்கு இன்னொரு சோகம் . ஒவ்வொரு வாய்தாவின் பொழுதும், "குடிகாரங்க குடிச்சுப்புட்டு, சண்டை போட்டா...எல்லோரும் தான் இருந்தாங்க! நீங்க மட்டும் ஏன் விலக்கிவிட்டீங்க?" என அம்மா ஒரு ரவுண்டு திட்டி முடிப்பார். பிறகு, வேறு எந்த நிகழ்வும் நடக்காததால், சிறை பார்க்கும் அனுபவம் நிகழவே இல்லை.

****

கடந்த வாரம் அறை நண்பர் "ஒரு அரசியல் போராட்டத்தில் கலந்து கொண்டு, என் நண்பர் புழல் சிறையில் இருக்கிறார். நீங்கள் உடன் வருகிறீர்களா?" என்றார். வாய்ப்பு கிடைக்கும் பொழுது, நிச்சயம் பார்த்துவிட வேண்டும் என்ற நினைப்பில் இருந்தவன் உடனே கிளம்பினேன்.

நண்பருக்காக, ஒரு பிரெட் பாக்கெட், கொஞ்சம் வாழைப்பழங்கள், பிஸ்கெட், ஒரு பாக்கெட் சிகரெட் என வாங்கிக்கொண்டோம். புழல் சிறையின் வாசலை அடைந்ததும், அங்கு இரு போலீசார் பொதுமக்கள் வாங்கி வருகிற எல்லாவற்றையும் வாங்கி பரிசோதித்து கொண்டு இருந்தனர். அதில் ஒருவர், "செல்போன் ஏதும் கொண்டுவரக்கூடாது. கொண்டு வந்திருப்பவர்கள் எதிரே பெட்டிக்கடையில் வாங்கி கொள்வார்கள். போய் கொடுத்துவிட்டு வாருங்கள்" என்றார்கள்.

போய் கொடுத்தால், ஒரு போனுக்கு வாடகையாக ரூ. 10- என வசூலித்தனர். இதில் எவ்வளவு காவல்துறைக்கு என்று தெரியவில்லை என நண்பர் கமெண்ட் அடித்தார். பிறகு, மீண்டும் போய் வரிசையில் நின்றோம். எங்களிடம் வாங்கி...பிரிட்டனியா பிஸ்கெட்டை கீறி, உள்ளே பார்த்தனர். சிகரெட் பாக்கெட்டை உடைத்து பார்த்தனர். அந்த பிரைட் பாக்கெட்டை பிதுக்கி, பிதுக்கி... சாப்பிடமுடியாத அளவுக்கு, என்ன பாடுபடுத்த முடியுமோ, அவ்வளவும் செய்தனர். உடல் முழுக்க தடவிப்பார்த்தனர். திருப்தி அடைந்ததும், அனுப்பி வைத்தனர். "ஏன் சார் இவ்வளவு செக்கப்?" என்றதற்கு, "செல்போன், சிம் கொண்டு போய்விடக்கூடாது" என்றார்கள்.

வரிசையில் நின்று, விண்ணப்பம் பூர்த்தி செய்தோம். 10 விண்ணப்பங்கள் சேர்ந்தவுடன், ஒரு சிவப்பு டவுசர் போட்ட நபர் வந்து வாங்கி, சிறைக்குள்ளே கொண்டு போனார்.15 நிமிடம் கழித்து வந்து, ஏற்கனவே ஒரு மணி நேரத்திற்கு முன்பு கொடுத்த விண்ணப்பங்களை கொண்டு வந்து, பெயர்களை சத்தம் போட்டு தப்பு, தப்பாக படித்தார். (படிப்பறிவு கம்மி. எழுதியவரும் சரியாக எழுதவில்லை). சம்பந்தபட்டவர்கள் வாங்கி கொண்டு போனார்கள். ஒரு வயதான் அம்மா " நான் கொடுத்து ஒன்றரை மணி நேரம் ஆச்சு! இன்னும் வரவில்லை" என்றார்! பகீரென்றது.

ஒரு மணி நேரம் கழித்து, எங்கள் விண்ணப்பம் வந்தது.( டவுசர் போட்ட நபர் கொண்டு போய், கொண்டு வந்து கொடுப்பது அதர பழசான முறை) வாங்கி கொண்டு போய் பார்த்தோம். அங்கு வாசலில் ஒரு அம்மா, மீண்டும் ஒரு முறை பரிசோதித்தார். ஒரு நோட்டில் கையெழுத்திட சொன்னார். போட்டோம்.

அந்த அறைக்குள்ளே நுழைந்தோம். அது நீண்ட பெரிய அறை. இரும்பு வேலியால் தடுத்திருந்தார்கள். அந்த பக்கம் 50 பேர். இந்த பக்கம் 75 பேர் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். சிலருக்கு கண்ணீர் பெருகியது. அந்த சத்தத்திலும் சிலர் நிறைய நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். இரு வேலிக்கும் இடையில் 3 அடி தூரம் நிச்சயம் இருக்கும். பிறகு நண்பரை பார்த்து, சத்தமாக நலம் விசாரித்தோம். பிறகு, வாங்கி வந்ததை, அந்த வேலியின் கடைசியில், மூன்று இடைவெளியில் சேர் போட்டு அமர்ந்திருந்த, ஒரு அதிகாரியிடம் தந்தோம். நாம் எவ்வளவு தருகிறோமோ, அதில் பாதியை மட்டும், சிறைவாசியிடம் தந்தார். மீதி, அவரே வைத்துக்கொண்டார். நம்மிடம் பாதி பிடுங்கியதை, இரண்டு மடங்கு, மூன்று மடங்கு விலை வைத்து, சிறைவாசிகளிடமே விற்பார்களாம். எப்பேர்ப்பட்ட கொள்ளை.

...நிற்க. இதிலிருந்து, என்ன நொந்த கருத்து சொல்ல வருகிறாய் என்கிறீர்களா?

கடந்த நவம், 12 தேதியில், ஞானசேகரன், காங்கிரஸ் எம்.எல்.ஏ, "தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் செல்போன்கள், சிம்கார்டுகள், பேட்டரிகள், கஞ்சா போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைகளில் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவை எப்படி நுழைந்தன? இதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?'' என்றார்.

இதற்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பதில்:

சிறைகளுக்குள் கஞ்சா போன்ற பொருள்கள் கடத்தப்படுவது வெள்ளையர் ஆட்சிக் காலத்திலிருந்து நடந்து வருகிறது. சிறைக்குள் பார்வையாளர்கள் வரும் போது அவர்கள் கொண்டு வரும் பொருள்களுக்குள் மறைத்து வைத்து கொடுக்கப்படுகிறது. கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் இப்போது வரையிலான காலத்தில் மொத்தம் தமிழகத்திலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து 261 செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக 93 நபர்கள் பிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உதவியாக இருந்த காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. செல்போன்கள் இருப்பதைக் கண்டறியும் கருவிகள் சிறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

போன்கள், கஞ்சா வைத்திருப்போருக்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகள் மறுக்கப்படுகிறது. இன்னும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு ஆராய்ந்து வருகிறது என்றார் அமைச்சர் துரைமுருகன்.

****

சிறை பார்த்த அனுபவத்தில்... பொதுமக்கள் எல்லாம் செல்போனை எல்லாம், கிரிமினல் போலீசை தாண்டி... உள்ளே கொண்டு செல்ல வாய்ப்பே இல்லை.

இதுவரை சிறையை பலமுறை அதிகாரிகள் பரிசோதித்ததில்...பல ஆபாச டிவிடிகள், பென் டிரைவர்கள், டிவிடி பிளெயர்கள், கஞ்சா, அபின், குட்கா என பல பொருட்கள் சிக்கியிருக்கின்றன. கடந்த ஆண்டு, நிறைய புகார்கள் வருகிறதே என லஞ்ச ஒழிப்பு துறை சோதிக்க சென்றால், அரை மணி நேரம் வெளியே காக்க வைத்து, பிறகு, உள்ளே அனுப்பியிருக்கிறார்கள். பலே திருடன்கள்!

இப்படி எல்லா திருட்டு வேலைகளும் காவல்துறை செய்துகொண்டு, பொதுமக்கள் மீது பழிபோடுவது இருக்கிறதே! இது அநியாயம்.

Tuesday, November 16, 2010

நொந்தகுமாரனின் பக்கங்கள் - அழகு!


வழக்கமாய் செல்லும் சலூன் கடைக்கு நேற்று போயிருந்தேன். அந்த கடையில் நால்வர் பணிபுரிகின்றனர். நால்வரிடமும் என் தலையை கொடுத்ததில்... ஒருவர் அழகாய் வெட்ட...அவரிடமே பல மாதங்களாக தொடர்கிறேன்.

உள்ளே நுழைந்த பொழுது, நம்மாள் நடுத்தர வயதுகாரர் ஒருவருக்கு முடிவெட்ட துவங்கியிருந்தார். அடுத்து நான். ஒரு ஆளுக்கு அதிகபட்சமாக 10 நிமிடம் தானே ஆகும் என காத்திருக்க ஆரம்பித்தேன். அங்கு கிடந்த தினமலரை மேய ஆரம்பித்தேன். முக்கிய செய்திகளையெல்லாம்...படித்துவிட்டு நிமிர்ந்தால்...முடி வெட்டி, இப்பொழுது ஷேவிங்கில் இருந்தார். அடுத்து ஜூ.வி.யை நோட்டம் விட்டுவிட்டு..மீண்டும் நிமிர்ந்தால்...அவருக்கே "டை" அடிக்கத் துவங்கியிருந்தார். அடுத்து...நக்கீரனையும் படிக்க ஆரம்பித்தேன். இப்பொழுதாவது முடிந்துவிடுமா எனப் பார்த்தால்... அவருக்கு முகம் முழுவதும் ஏதோ கிரீமை ஒருவித கலைநயத்துடன்(!) பூசி..உலர்த்த ஆரம்பித்தார். எல்லாம் முடிய ஒரு மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது. வெறுத்துப்போனேன்.

எல்லாவற்றிக்கும் ரூ. 900- என சொல்ல...அவரும் தந்து நகர்ந்ததும்...அதிர்ந்துவிட்டேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கு முடிவெட்ட ஆரம்பித்த பொழுது ரூ. 40- பிறகு, ஏ.சி. போட்டதும் ரூ. 50 என்றார்கள். கடந்த ஆறு மாத காலமாக ரூ. 60 என உயர்த்திவிட்டார்கள். மாதம் ரூ. 60 கொடுக்கவே நம்பாடு திண்டாட்டமாக இருக்கும் பொழுது, ஒருமுறை வருகைக்கே ரூ. 900/- தந்தால்...அதிராமல்!

ஆண்களே ரூ. 900- செலவழித்தால்...பெண்கள் எவ்வளவு செலவழிப்பார்கள்? சென்னையில் அழகுக்காக கொடுக்கும் கவனம் இருக்கிறதே! விவரம் தெரிந்த காலத்திற்கு பிறகு, பான்ஸ் பவுடர் மட்டும் எப்பொழுதாவது அடிப்பதுண்டு. வினவு தளத்தை படிக்க ஆரம்பித்த பிறகு...பவுடரும் அடிப்பதில்லை. சென்னையில், கொஞ்சம் அசந்தால்...நமக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடுவார்கள். எவ்வளவு விதவிதமான ஆடைகள், அழகு நிலையங்கள்!

என் தோழிக்கு தெரிந்த ஒரு பெண் இப்படி பொருள்கள் மற்றும் ஆடம்பரத்திற்காகவே...ஒரு நிறுவனத்தின் மேலாளருக்கு மூன்றாவது மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மூன்றாவது மனைவி என டீஸண்டாக சொல்கிறேன்.

நிறுவனங்கள் உற்பத்தியை பெருக்கி பொருட்களை, பெருநகரத்தில் வந்து கோடிக்கணக்கில் கொட்டுகிறார்கள். பிறகு, சந்தை மக்களை, சொன்னதை எல்லாம் கேட்டு ஆடும் குரங்காக்கிவிடுகிறது. அதற்கு உதவி செய்கின்றன விளம்பரங்கள்...இன்னபிற! ஒரு சமூகம் புற அழகிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது! ஆனால், அக அழகிற்கு? அப்படின்னா என்ன? என்கிறீர்களா?!

Saturday, November 13, 2010

நொந்தகுமாரனின் பக்கங்கள்! - மெல்ல...மென்று...!


மருத்துவர் சன்னமான குரலில் கேட்டார். "நீங்க மென்று, மெதுவா சாப்பிடுவீங்களா! வேகமாகவா?" "வேகமாக" என்றேன். "நீங்க மென்று..மெல்ல சாப்பிட்டாலே உங்க ஜீரணப் பிரச்சனை 75% சரியாகிவிடும். அதனாலே... சாப்பிடும் பொழுது...உங்க புத்திக்கு சொல்லுங்க! எனக்கு வயிறு பிரச்சனை இருக்கு. அதனால் வேகமா சாப்பிட்டால் பிரச்சனை வரும் என்று..." ஏதோ போதிப்பது போல மெல்ல பேசினார்.

மாத்திரைகள் இல்லாமலே சுகமாகிறது என்றால் சந்தோசம் தானே! "மென்று தின்றால் நூறு வயது! " என சொல்லி இருக்கிறார்களே! சரியென மருத்துவரிடம் சொல்லி வந்துவிட்டேன் அதன் விபரீதம் புரியாமல்.

மறுநாள் வழக்கமாய் சாப்பிடுகிற ஹோட்டலில் என் அளவு இரண்டு இட்லி, ஒரு தோசையை..மென்று..மெல்ல சாப்பிட்டால் தோசையில் பாதியை சாப்பிடமுடியவில்லை. சரி என கைகழுவி வந்துவிட்டேன். 11.30க்கே பசித்தது. 12.30க்கு தீயாய் பசித்தது. மதிய சாப்பாட்டில் பார்த்துக்கொள்ளலாம் என பொறுத்துக்கொண்டேன். மதியம் வழக்கமாய் சாப்பிடுகிற அளவைச் சாப்பாட்டை மென்று..மெல்ல சாப்பிட பாதிக்கு மேல் தொண்டைக்குள் இறங்க மறுத்தது. சுவை அப்படி!

ஏற்கனவே எங்கள் பகுதியிலும், அலுவலக பகுதியிலும் பலரிடம் நன்றாக விசாரித்து...5 கடையில் சாப்பிட்டு பரிசோதித்து... ஆறாவது கடையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். இப்பொழுது அதன் சுவையே பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை என்றால்...என் செய்வேன்!

வீட்டில் சமைத்து சாப்பிடலாம் என நினைத்தால்...உடனிருக்கும் 3 குண்டன்கள் மகா சோம்பேறிபயல்கள். சமைக்கலாம் என்றால் ஓடுகிறார்கள். சமைத்து போட்டால்...நன்றாக சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டுவிட்டு... நக்கல் பேச்சு வேறு. சமைக்கிற அம்மாக்கள் யாராவது கிடைப்பார்களா என விசாரித்தால்...யாரும் கிடைப்பாரில்லை.

கொஞ்சம் ஆற அமர யோசித்தால்...ஊரில் இருந்த பொழுது..கொஞ்சம் வேகமாக சாப்பிடுவன் தான். சென்னை வந்த பிறகு, பெருநகர வேகத்தில் சிக்கி...சுவை போன்ற பல காரணங்களினால் தான் நிறைய வேகமாய் சாப்பிடத்துவங்கியுள்ளேன் என புரிந்தது.

நாள் ஆக ஆக... பசியின் சாபம் வாங்கியது போல... எப்பொழுதும் பசி, பசி என சுற்ற ஆரம்பித்தேன். ஐந்தாம் நாளில் நடுநிசியில் விழிப்பு வந்து, பசியால் தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்து தூங்கினேன். ஏழாம் நாளில் பசியால் விழிப்பு வந்து பிறகு தூக்கம் வராமல், தொலைக்காட்சியில் மிட்நைட் மசலா பாடல்கள் மனசை தாக்கி, மனசை கொஞ்சம் கெடுத்தார்கள். பதினைந்தாம் நாளில்... கனவில் விதம் விதமான சாப்பாடு வகைகள் வரிசையாய், வந்தன. ஆவலுடன் மென்று, மெல்ல அல்ல! அரக்க பரக்க சாப்பிடுகிறேன்.

பதினெட்டாம் நாளில் நாலு கிலோ குறைந்துவிட்டேன். கண்களுக்கு கீழே கொஞ்சமாய் கருவளையம் தெரிய ஆரம்பித்தது. பார்க்கிறவர்கள் உடம்பு சரியில்லையா என அன்பாய், அக்கறையாய் விசாரிக்க...இன்னும் கொஞ்சம் சோர்ந்தேன். இனியும் தாங்க முடியாது. நாளை மருத்துவரை சந்தித்து..."மாத்திரை கூட சாப்பிடுகிறேன். என்னை மென்று..மெல்ல மட்டும் சாப்பிட சொல்லாதீர்கள்" என கெஞ்சப் போகிறேன்.

Tuesday, November 2, 2010

நொந்தகுமாரனின் பக்கங்கள் - சந்தோச விரும்பிகள்!

தோழியின் தோழிக்கு நிச்சயதார்த்தம். பெண்ணுக்கு பல வருடங்களாக மாப்பிள்ளை தேடி, அலைந்து, திரிந்து ஒருவழியாக கண்டுபிடித்து விட்டார்கள். வெள்ளை தோல், 6 அடி உயரம், தமிழ்ப் படங்களில்... லண்டன் ரிட்டனாக வரும் மாப்பிள்ளை போல இருந்தார். வெப் டிசைனராம். சம்பளம் 25000 என்றார்கள். வாழ்த்து சொல்லி வந்துவிட்டேன்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு திருமணம். 50 பவுன் வரதட்சணை. மாப்பிள்ளைக்கு தனியாக 10 பவுன். கார் கேட்டிருக்கிறாராம். பிறகு, வாங்கித் தருவதாக பெண்ணின் அப்பா வாக்கு தந்திருக்கிறார். தடபுடலாக திருமணம் நடந்தேறியது. மீண்டும், சாப்பிட்டு, வாழ்த்து தெரிவித்து, கை குலுக்கி வந்துவிட்டேன்.

நிற்க.

மேலே நடந்தது எல்லாம் ஆறு மாதங்களாகிவிட்டன. இரண்டு நாட்களுக்கு முன்பு, வேறு பேச்சிற்கிடையில்.. தோழியிடம் திருமண பெண்ணை நலம் விசாரித்தேன்.

கவலையோடு ஆரம்பித்தார். அந்த (லண்டன் ரிட்டர்ன்(!)) மாப்பிள்ளை வெப் டிசைனர் என்பது பொய்யாம். இந்த 6 மாதத்தில் ஒரு நாள் கூட வேலைக்கு போகவில்லையாம். தினசரி அலுவலகம் செல்வது டிப் டாப்பாக வெளியே கிளம்புகிறாராம். மாலையில் வருகிறாராம். தினம் ஒரு கந்து வட்டிக்காரன் வீடு தேடி வருகிறானாம். கந்து வட்டிக்காரன் வராத பொழுது... கிரடிட் கார்டு அல்லது பர்சனல் லோன் தந்த ஏதாவது ஒரு வங்கியிலிருந்து...பணம் கேட்டு ஆள் வருகிறார்களாம்.

ஆறு மாதங்களில் மாப்பிள்ளைக்கு போட்ட 10 பவுனை கொஞ்சமாக கொஞ்சமாக அடகோ அல்லது விற்றுவிட்டாராம். சில வீடுகள் வாடகைக்கு விட்டிருப்பதன் மூலம் வருகிற வருவாயை கொண்டு... வாழ்க்கையை நகர்த்துகிறார்களாம். அந்த வாடகையில் கூட பெரும்பகுதியை வட்டித்தான் கட்டுகிறார்களாம்.

வேலைக்கு போக சொன்னால்...என்னால் எங்கும் போய் வேலையெல்லாம் செய்யமுடியாது. நான் சொகுசா வாழ விரும்புகிறேன் என வாய்விட்டே சொல்கிறாராம். இப்பொழுது, தோழியிடம் "அப்பாவிடம் போய் 4 லட்சத்தை வாங்கி வா! நான் லண்டனில் போய் வாழப்போகிறேன்" என சொல்கிறாராம்.

நிற்க. தோழி சொன்ன மாப்பிள்ளையின் திருவிளையாடல்களை இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

தோழி சொல்வதை கேட்க, கேட்க சமூகத்தை நினைத்து அதிர்ச்சியாகவும், ஆயாசமாகவும் இருக்கிறது.

இந்த மனிதர்களை எப்படி வகைப்படுத்தலாம்? உழைக்கத் தயங்குவது, சிரமப்பட தயங்குவது, ஆனால் சந்தோசம் மட்டும் நிறைய வேண்டும். பலரிடம் அசிங்கப்பட கூட தயாராக இருக்கிறார். ஆனால், உழைக்க தயங்குகிறார் என்றால்.. இவர்கள் எல்லாம் பெருநகர சூழலில் விளைந்த ஒரு வகை மாதிரி (Pleasure loving people).

உழைப்பே இல்லாமல் சம்பாதிப்பது, எளிதாக பணம் சம்பாதிப்பது (EASY Money), கொஞ்சம் உழைப்பு - நிறைய சம்பாதிப்பது எல்லாம் கடந்த 10 ஆண்டுகளில் உலகமய சூழலில் ஒரு சிறிய கூட்டத்திற்கு வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறது. ஆனால், இந்த மனநிலை பெருநகரத்தில் பலருக்கும் பரவியிருப்பதை பரவலாக பார்க்கமுடிகிறது.

சமூக கட்டமைப்பு மாறாமல்...இக்கும்பலை ஒழித்துக்கட்ட முடியாது. அதுவரை கொஞ்சம் கொஞ்சமாக பெருகி கொண்டு தான் இருப்பார்கள்.
****
அந்த பெண்ணின் நிலை - தோழியிடம் சொல்லி...அந்த மாப்பிள்ளையை விவாகரத்து செய்ய சொல்லி ஆலோசனை சொல்லியிருக்கிறேன்.
****

Saturday, October 30, 2010

நொந்தகுமாரனின் பக்கங்கள்! - சுகப்பிரசவம்!

குழந்தை பிறந்த செய்தி சொல்லி நேற்று நண்பர் இனிப்புடன் பகிர்ந்து கொண்டார். அதோடு அவர் சொன்ன தகவல்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியவை.

வலி லேசாக துவங்கியதும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். மதியம் வலி கடுமையாக வந்து.. பிரசவ வார்டுக்குள் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவருக்கு பிறகு வலி வந்து.. 15 பேர் பிரசவ வார்டுக்குள் போய்... ஒவ்வொருவராக 15 பேரும் இரவுக்குள் குழந்தை பிறந்து வெளியே வந்திருக்கிறார்கள். நண்பருடைய மனைவியை மட்டும் காணவில்லையாம். ஒரு வழியாக விடிகாலை 5 மணிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் சொன்னார்களாம்.

கிட்டத்தட்ட 15 மணி நேரம் வலியில் துடித்தும்...அறுவை சிகிச்சைக்கு நகர்ந்து விடாமல்..அதிகப்பட்சம் முயற்சி செய்து சுகப்பிரசவத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். இது சமகாலத்தில் அருமையான ஒன்று.

இப்பொழுதெல்லாம் தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் அறுவை சிகிச்சையில் தான் குழந்தைகள் பிறக்கின்றன. அறுவை சிகிச்சையில் தான் நன்றாக கல்லா கட்ட முடியும் என்பதும் இதற்கு முக்கிய காரணமாகிறது. ஏதாவது அபாயகரமான காரணம் சொல்லி, அறுவை சிகிச்சைக்கு எளிதாக நகர்ந்துவிடுகிறார்கள்.

இதில் மூட நம்பிக்கையும் நன்றாகவே வேலை செய்கிறது. சுபயோக சுப தினத்தில் பெற்றெடுக்க அறுவை சிகிச்சை செய்கிறார்கள். முதல் குழந்தை அறுவை சிகிச்சை என்றால்... இரண்டாவது குழந்தையும் 80% அறுவை சிகிச்சை தான் என்கிறார்கள். இது இன்னுமொரு அவஸ்தை.

முதுகு தண்டில் மயக்க மருந்து கொடுப்பதால், வயிற்றை கிழிப்பதாலும், அறுவை சிகிச்சைக்கு பிறகு, பெரும்பாலும் பெண்கள் தங்களது பழைய உடல் வலுவை இழந்துவிடுகிறார்கள். முதுகுவலி போன்ற தொடர் பிரச்சனைகளிலும் சிக்கிவிடுகிறார்கள். ஆகையால், சுகப்பிரசவத்திற்கு அதிகப்பட்சம் முயற்சி செய்கின்ற அரசு மருத்துவமனைகள் வாழ்க!

இன்னொரு தகவலும் உண்டு - பிரசவ வார்டு மருத்துவ உதவியாளர்கள் ஆண் குழந்தை பிறந்ததும்...ரூ. 500 கேட்டார்களாம். பெண் குழந்தை என்றால் ரூ. 300 ஆம். நண்பர் லஞ்ச எதிர்ப்பாளர் என்பதால்.. நீங்க லஞ்சமா தான் கேட்கிறீங்க! என சத்தம் போட்டு, நானா விரும்பி தருவதை வாங்கிங்க என்று சொல்லி...ரூ. 100/- தந்திருக்கிறார். இதில் குறிப்பாக நான் சொல்ல வருவது...தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் ஆண், பெண் பாகுபாடு இருந்தால் பரவாயில்லை. சென்னையின் பெருநகரத்தில் இப்படி பெண் என்றால் குறைவு என்கிற மனநிலை இழிவானது.

Thursday, July 29, 2010

லிப்ட் - சில குறிப்புகள்!

மெல்லிய பனிபடலம். அதிகாலை வேளை. ஒரு இளம்பெண் கைகாட்டி லிப்ட் கேட்டாள். சந்தேகமாய் திரும்பி பார்த்தேன். வேறு யாருமில்லை. ஏறிக்கொண்டாள். அந்த நீளத்தெருவின் முனையில்மெல்லிய புன்னகையுடன் விடைபெற்றாள். இன்ஜினியரிங் கல்லூரி மாணவி அவள்.

மதிய வேளை. அறுபது வயது கிழவி வழிமறித்தாள். பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடும் பொழுது என் வம்சத்தையே வாழ்த்தி விடைபெற்றாள்.

இரவு 9.30 மணி. ஒரு திருநங்கை (ஆண் உடையில் இருந்தாள். ஆனால் கூந்தலோடு) கைகாட்டி வழிமறித்தார். அவரும் நம்மைப் போலத்தானே.... நிறுத்தி ஏற்றிக்கொண்டேன். "எங்கு போகணும்?" என்றேன். இடம் சொன்னார். "நீங்க எங்கு போகிறீர்கள்?" என்றார். சொன்னேன். "அப்ப அங்க போங்க!" என்றார். அவர் வழிமறித்த நோக்கம் வேறு. தாமதமாக புரிந்தது. மன்னிப்பு கேட்டு, அவர் சொன்ன இடத்திலேயே இறங்க சொன்னேன். "நீ வேஸ்ட்" என சைகை காட்டி போனார். இனி, இரவு நேரத்தில் லிப்ட் கொடுக்ககூடாது என முடிவெடுத்தேன்.

நால்வர் வழிமறித்து, காரில் ஏறிக்கொண்டார்கள். இறங்கும் பொழுது, பர்ஸ், வாட்ச், செல் என எல்லாவற்றையும் மிரட்டி வாங்கிச் சென்றார்கள். இதுதான் இந்த ஆண்டு சென்னையின் புத்தாண்டு செய்தி. பகீரென்று இருந்தது.

அதனால், என்னைவிட வலுவானவர்களுக்கு லிப்ட் தருவதில்லை. பணம் பறித்து விடுவார்களோ என்ற பயமெல்லாம் இல்லை. அதெல்லாம் பணம் இருப்பவர்களுக்கு இருக்கும் பயம். இறங்கும் பொழுது, பர்ஸை கேட்டால்... ஒரு செல்லாத ஐம்பது ரூபாய் நோட்டும், சில பத்து ரூபாய்கள் மட்டுமே தேறும். செல்லைக் கேட்டால்.... அதன் மதிப்போ ரூ. 300 ஐ தாண்டாது. உனக்கு எதுக்குடா பைக்கு? என கோபப்பட்டு அடித்துவிட்டால் என்ன செய்வது?

லிப்ட் கேட்டு ஏறுகிற மனிதர்களில் பலவகை. சிலர் அவர்களாகவே பேசுவார்கள். சிலரிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்வார்கள். பல சமயங்களில் குட்டி கதைகளை என்னிடம் விட்டு செல்கிறார்கள். சில கதைகள் சுவாரசியமானவை.

நான் எவ்வளவு நல்லவன்? லிப்ட் கேட்டால் மட்டுமல்ல! கேட்காமலே தருபவன். அந்த ரூட்டில் பஸ் ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே வந்து செல்லும். ஒரு நாள் ஐம்பது வயது பெண்மணி கனமான சுமைகளோடு, உச்சி வெயிலில் நடந்து போய்க்கொண்டிருந்தார். ரெம்பவும் இரக்கப்பட்டு..பக்கத்தில் போய், ஏறிக்கங்க! என்றேன். மறுத்துவிட்டார்.

இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, வண்டியை சர்வீஸ்க்கு விடுகிறேன். அந்தநாளில் என் அலுவலகம் செல்ல...யாரிடம் லிப்ட் கேட்டாலும், தருவதில்லை. நான் அவ்வளவு மோசமாகவா இருக்கிறேன் என நொந்து கொள்கிறேன்.

Friday, May 7, 2010

பொன்னியின் செல்வனின் இறுதி பாக (நொந்த) கிளைக்கதை - இறுதி அத்தியாயம் 8


அத்தியாயம் - 1 படிக்க
அத்தியாயம் - 2 படிக்க
அத்தியாயம் - 3 படிக்க
அத்தியாயம் - 4 படிக்க
அத்தியாயம் - 5 படிக்க
அத்தியாயம் - 6 படிக்க
அத்தியாயம் - 7 படிக்க
****
எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டது. 'இறுதிபாகம் இனி கிடைக்காது" என புரிந்தது. என்ன செய்யலாம் இனி?

சில நாள்கள் அமைதியாய் இருக்கலாம் என்ற முடிவுக்கு சிரமப்பட்டு வந்து சேர்ந்தேன். கனவில் அவ்வப்பொழுது பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்கள் வருவது... குறைந்து கொண்டே போனது.

சில நாள்கள் கடந்தன. ஒரு திரையரங்கில் வரிசையில் நிற்கும் பொழுது எனக்கு முன்னே ஒருவர் சின்சியராக கையடக்க புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். துப்பறியும்... பாக்கெட் நாவலோ என நினைத்தேன். இல்லை. என்னடா! இது நம்மை போலவே இலக்கிய தாகம் உள்ளவராக இருக்கிறார் என ஆர்வமானேன். இரண்டு வரிகள் படித்த பொழுது... பொன்னியின் செல்வன் என தெரிந்தது.

சின்ன சைஸில் எப்படி? எல்லாம் மெகா பைண்டிங் புத்தகமாயிற்றே! என யோசித்து கொண்டே... அவரிடமே கேட்டேன். மலிவு விலையில் பதிப்பித்திருக்கிறார்கள். வாங்கியதாக சொன்னார். அவரிடமே முகவரி வாங்கி... அடுத்த நாளே போய் அந்த கடையில் ஆஜரானேன்.

மாநிலம் முழுவதும், புத்தக கண்காட்சிகாக, குறிப்பிட்ட பதிப்பகத்தார் மலிவு விலையில் பிரசுரித்ததாகவும், வாங்கிய புத்தகங்கள் எல்லாம் கடந்த வாரம் நடந்த புத்தக திருவிழாவில் விற்று தீர்ந்து விட்டதாகவும், மேலும் நிறைய புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் கடைக்காரர் உற்சாகமாக தெரிவித்தார்.

"ஒரு பிரதி இருக்கா?" என்றேன் பாவமாய்.

"புத்தக திருவிழாவிலேயே... ஸ்டாக் இல்லை.. ஸ்டாக் இல்லை சொல்லி சொல்லியே என் வாய் வலித்து விட்டது" என்றார்.

"போயா! நீங்களும் புத்தகமும்?"

திரும்பி பார்க்காமல் வீடு போய் சேர்ந்தேன்.


இனி....

முயற்சிகள் தொடராது! முடிவுரை மட்டும் இனி எழுதுவேன்!

இணைப்பு :

பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களும்!

Friday, March 26, 2010

சாம்பார் - சில குறிப்புகள்!


சகஜமாய் பழகுகிற யாரிடமும்
இயல்பாய் கேட்கும் கேள்வி
'சாம்பார்' எப்படி வைப்பீங்க?'

வெடி சாம்பார்,
திடீர் சாம்பார்,
மிளகு சாம்பார் - என
சாம்பாரில் பலவகை உண்டு.

பால்ய வயதில்
சாம்பார் என்றால் அவ்வளவு இஷ்டம்
கூடுதலாய் நாலுவாய் சோறு
உள்ளே இறங்கும் - அதனாலேயே
வாரத்திற்கு இரண்டு முறை சாம்பார்.

அக்கா, அத்தை, அம்மா
சமைக்கிற சாம்பார்களில்
அம்மா வைக்கும் 'சாம்பார்'
அலாதியானது.
கொஞ்சூண்டு காய்கறி போட்டாலும்
அம்மாவின் கைப்பக்குவத்தில்
மணக்க மணக்க சாம்பார் தயார்.

மூன்று ஷிப்டுகளிலும்
மாறி, மாறி
கேண்டினில் சாம்பார்.
அப்பாவுக்கு அதனாலேயே
'சாம்பார்' என்றாலே அலார்ஜி.

ஜெமினிகணேசனை
'சாம்பார்' என்பார்களே!
பிடித்ததினாலா!
பிடிக்காமல் போனதினாலா!

எத்தனை முறை நான்
சாம்பார் வைத்தாலும் - ஒவ்வொரு முறை
ஒவ்வொரு சுவை வருகிறது.

'சாம்பாரில் நீ எக்ஸ்பர்ட் ஆயிட்டடா?'
புகழ்கிறார்கள் நண்பர்கள்.

இப்பொழுதெல்லாம்
எங்கள் ஏரியாவில் கையேந்திபவன்களில்
'சாம்பார்' என்ற பெயரில்
ரசம் போல தரும் சாம்பார் கூட
தருவதில்லை.
இரண்டு வகை சட்னி மட்டும்தான்!
அல்லது சேர்வை மட்டும் தான்!
'சாம்பார்' பணக்காரர்களின்
உண்வாகிவிட்டது.

'பாழாய் போன
கருணாநிதியால் தான் இப்படி?
எம்ஜிஆர் இருந்தால்
இப்படி நடக்க விட்டிருப்பாரா?'
புலம்புகிறார் பக்கத்துவீட்டு
வயதான தாய்க்குலம்.

சாம்பாருக்காவது
விலைவாசியை எதிர்த்து...
தெருவில் இறங்கி போராடலாம்
என தயாராய் இருக்கிறேன்.

உங்களுக்கும் சாம்பார்
பிடிக்கும் தானே!

Friday, January 22, 2010

பொன்னியின் செல்வனின் இறுதி பாக (நொந்த) கிளைக்கதை - அத்தியாயம் 7


அத்தியாயம் - 1 படிக்க
அத்தியாயம் - 2 படிக்க
அத்தியாயம் - 3 படிக்க
அத்தியாயம் - 4 படிக்க
அத்தியாயம் - 5 படிக்க
அத்தியாயம் - 6 படிக்க
****
நூலகங்கள் என்னை கைவிட்டுவிட்டன. புதிதாய் சேர்ந்த வெளியூர் வேலையில் இனி விடுப்பு எடுப்பதும் சிரமம். ஆகையால், அலைவதை விட்டுவிட்டு, சொந்தமாகவே இறுதி பாகத்தை வாங்கிவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன். அண்ணணிடம் பணம் கேட்டேன். (அப்பா இல்லாத பிள்ளை நான்)

'எதுக்குடா?' என்றார்.

'நாவலுக்கு என்றால்!' வாய்ப்பே இல்லை. 1ரூ கூட வாங்கமுடியாது. நான் மற்றவர்களை போல இயல்பாக (!) இல்லாததற்கு, இந்த இலக்கிய சகவாசம் தான் காரணம் என முடிவு கட்டியிருந்தார். (ஆமா எப்ப பார்த்தாலும், எதாவது ஒரு புத்தகத்தை கையில வச்சிகிட்டு சுத்திகிட்டே இருந்தா!) ஏதோ சப்பையான காரணம் சொல்லி, இரண்டு நாள் கழித்து வாங்கிவிட்டேன்.

உள்ளங்கையில் உள்ள பணத்தை பார்த்தேன். ஒருநொடி பொன்னியின் செல்வனின் இறுதிபாகமாய் மாறி தெரிந்தது. இன்றைக்கு வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை வந்தது.

எங்கள் ஊரில் புத்தக கடைகள் சொற்பம் தான். ஆனால், பொன்னியின் செல்வனுக்கு வாசகர்கள் பரந்துபட்டு இருப்பதால், எல்லா கடைகளிலும் எளிதாக கிடைக்கும். உற்சாகமாய் கிளம்பினேன்.

பரபரவென இருந்த காலை வேளையில்... அந்த புத்தக கடை மட்டும் மூடியிருந்தது. 'சீக்கிரமே வந்துவிட்டோமோ!' காலை 9.30 மணி. கடை திறக்கும் நேரம் என ஏதாவது போர்டு
மாட்டியிருக்கிறார்களா! என தேடிப்பார்த்தேன். காணவில்லை. சகுனமே(!) சரியில்லையே! இல்லாத மூட நம்பிக்கையெல்லாம், இந்த புத்தகத்தால் வந்துவிடும் போலிருக்கிறதே! என யோசித்தேன்.

நாலு தெருக்கள் தள்ளி... இரண்டாவது கடைக்கு போனேன். அப்பொழுது தான் கடையை கூட்டிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு முதல் வாடிக்கையாளர் நான் தான். இறுதி பாகத்தை விற்பனையாளனியிடம் கேட்டேன். 'கடந்த வாரம் தீர்ந்துவிட்டது. ஆர்டர் கொடுத்திருக்கிறோம். ஒரு வாரத்தில் வந்துவிடும்" என்றார். அடடா! இரண்டாவது வாய்ப்பும் போச்சே! உற்சாகம் 20% குறைந்தது. 'மனம் தளராதேடா!' என எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

வேறு பகுதியில் இருந்த அடுத்த கடைக்கு போனேன். உள்ளே நுழைந்ததுமே பொன்னியின் செல்வன் புத்தகங்கள் வரவேற்றன. ஆகா! இதுவல்லவோ கடை. இறுதிபாகத்தை கையில் எடுத்து ஒருமுறை முகர்ந்து பார்த்தேன். நல்ல வாசனை. எனக்கு பிடித்த வாசனைகளில் முதன்மையானது புத்தகவாசனை. (சே! என்ன ஒரு அறிவு தாகம்; இலக்கிய தாகம்! என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது)

பணத்தையும் புத்தகத்தையும் பில் போட கேசியரிடம் நீட்டினேன். அவர் வாங்கி முகத்தைப் பார்த்தவர்...

'ஐந்தாம் பாகம் மட்டும் எடுத்திருக்கிறீர்கள்?! மற்ற பாகமெல்லாம்!" என்றார் கேள்விக்குறியுடன்.

'அதெல்லாம் இருக்கு சார்!' என்றேன்.

"நாங்க தனியாக ஒரு பாகம் மட்டும் தர மாட்டோமே!' என்றார். மண்டையில் இடி விழுந்தது போல இருந்தது.

'ஏன் சார் தனியா தர மாட்டீங்க!' என்றேன் சோகமாய்.

'நாங்க செட்டு செட்டா தான் வாங்கறோம்! உங்களுக்கு ஒரு பாகம் மட்டும் கொடுத்துட்டா... மற்ற பாகமெல்லாம் அப்படியே தனியா நின்னு போயிரும்! என்றார்.

அவர் சொன்ன காரணத்தை அறிவு ஏத்துகிடுச்சு. மனசு கேட்கலையே!
வேறு ஏதும் பேச தோணவில்லை. மெதுவாய் வாசலுக்கு நடையே கட்டினேன்.

இனி....

முயற்சிகள் தொடரும்!

இணைப்பு :

பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களும்!

Monday, January 4, 2010

பொன்னியின் செல்வனின் இறுதி பாக (நொந்த) கிளைக்கதை - அத்தியாயம் 6அத்தியாயம் - 1 படிக்க
அத்தியாயம் - 2 படிக்க
அத்தியாயம் - 3 படிக்க

அத்தியாயம் – 4 படிக்க
அத்தியாயம் - 5 படிக்க
****

முன்பெல்லாம் விடிகாலை கனவில் வானதியும், நந்தினியும் வந்தார்கள் என்றால்... இப்பொழுதெல்லாம் ஆழ்வார்கடியனையும், வந்தியத்தேவனையும் கொலைவெறியோடு துரத்திக்கொண்டிருந்த பாண்டிய மன்னனின் ஆபத்துதவிகள் "இன்னுமா இறுதிபாகத்தை படிக்கலை?!" என என்னை காட்டுக்குள் துரத்திகொண்டிருந்தார்கள்.

நிற்க. சற்றும் சளைக்காத விக்ரமாதித்தன் போல அடுத்த முயற்சியை துவங்கினேன்.

நூலகங்களை அரசு ஏ, பி, சி என தரம் பிரித்து வைத்திருக்கிறது. வருடாவருடம் நூலகங்களின் தரத்திற்கேற்ப புத்தகங்களின் கொள்முதல் எண்ணிக்கையும் வேறுபடும் என பழைய நூலகர் சொல்லியிருந்தார். அதனால், முன்பு வேலை செய்த இடத்திற்கு அருகே உள்ள 'பி' தர நூலகத்தில் உறுப்பினராய் சேர்ந்திருந்தேன்.

முன்பொருமுறை வேறு புத்தகம் தேடும் பொழுது, பொன்னியின் செல்வனின் ஐந்தாம் பாகம் கையில் தட்டுப்பட்டதாய் ஆழ்மன நினைவு மேலெழும்பி சொன்னது. அந்த புத்தகத்தை கைப்பற்ற முயற்சிக்காலாமே என தோன்றியது.

நூலக டோக்கனை தேடினேன். நல்ல வேளை! வைத்த இடத்தில் பத்திரமாய் இருந்தது. நேரம் பார்த்தேன். நூலகம் திறந்திருக்கும். சைக்கிளை உற்சாகமாய் மிதித்து போய் சேர்ந்தேன்.

நூலகர் மாறியிருந்தார். உதவி நூலகர் எனக்கு பரிச்சயம். பார்த்ததும் புன்முறுவல் செய்தார். அவருடைய அறிமுகமும் வித்தியாசமானது தான். நான் புத்தகம் தேட ஆரம்பித்தால்... அரை மணி நேரமாவது ஆகும். அப்படியே நான் எடுத்து வருகிற புத்தகம் இதுவரை யாருமே கையில் தொட்டிராத புத்தகமாக இருக்கும். இதனாலேயே ஆச்சரியப்பட்டு என்னிடம் பேசினார்.

நேரே புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரி பகுதிக்குள் சென்றேன். மங்கிய வெளிச்சம். முன்பு புத்தகம் தேடுகிற பொழுது, படிக்க கூடிய புத்தகங்கள் என சிலவற்றை... ஒரு இடத்தில் சேர்த்து வைப்பேன். அந்த இடத்திற்கு போய் முதலில் தேடினேன். சில புத்தகங்கள் இருந்தன். சில புத்தகங்களை காணவில்லை. அதில் ஒன்று பொன்னியின் செல்வனின் பாகமும் ஒன்று. என்னை மாதிரியே இலக்கிய தாகம் (!) கொண்ட ஒருவன் இடம் மாற்றி வைத்திருக்கிறான்.

வேறு வழியில்லை. பொன்னியின் செல்வனின் அளவு (தடிமன்) கொண்ட எல்லா புத்தகங்களையும் வரிசையாக தேட வேண்டியது தான். நூலக நேரம் வேறு குறைவாக இருந்தது. விரைவாக தேட ஆரம்பித்தேன்.

அலமாரி முழுக்க ஒரே தூசி. நூலம்படை. தமிழகம் ஏன் இலக்கிய அறிவில் பின் தங்கி இருக்கிறது என புரிந்தது. இது பற்றி, பழைய நூலகரிடம் கோபமாய் முறையிட்டிருக்கிறென்.

"பக்கத்தில் நூலகத்திற்கென்று பெரிய இடம் ஒன்று வாங்கி கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. நானும் இப்ப முடியும். பிறகு முடியும் என நினைக்கிறேன். முடிந்த பாடு இல்லை. இந்த தூசியில் உட்கார்ந்தால் எனக்கு தான் உடல்நல பிரச்சனையாகிறது. அநேகமா திறப்பு விழா அன்றைக்கு நான் ரிடையர்டு ஆகியிருப்பேன்" என புலம்பினார்.

நேரம் நெருங்கி கொண்டிருந்தது. உடலில் பதட்டம் ஏறியது. இன்னும் ஒரு அலமாரி தான் பாக்கி. முன்னிலும் வேகப்படுத்தி தேடினேன். கைக்கு சிக்கியது. வேகமாய் பாகம் என்ன? என கண்கள் தேடியது. பாகம் 4. சோர்ந்து போனேன். ஆழ்மனது தப்பாக சொல்லியிருக்கிறது. தூ!

நூலகரிடம் வந்தேன். அழுக்கும் தூசியுமாய் வந்த என்னை விநோத ஜந்து போல பார்த்தார்.

போங்கய்யா! நீங்களும் உங்க நூலகமும்! இனிமேல் நூலகத்தை நம்பி பிரயோஜனமில்லை என முடிவுக்கு வந்தேன்.

பணத்தை திரட்டி... புத்தகத்தை புதிதாய் வாங்கி விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தேன்.

இனி....

.... முயற்சிகள் தொடரும்.

இணைப்பு :

பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களும்!