Sunday, February 24, 2013

ஆதி பகவன் - ‍‍கஷ்டம்! கஷ்டம்!

இப்பொழுதெல்லாம் யாரை நம்பியும் முதல்நாள் படம் பார்க்க போகமுடியவில்லை.  6 வருடத்திற்கு பிறகு அமீரின் படம் என எதிர்ப்பார்ப்புடன் போனால் பெருத்த ஏமாற்றம்.

****

கதை எனப்பார்த்தால்...

பாங்காக்கில் நாயகன் மாபியா கும்பலில் முக்கியமான ஆள்.  நாயகனின் அம்மாவும், தங்கையும் மோசமான வழியில் சம்பாதித்த பணம் வேண்டாம் என தனியாக வாழுகிறார்கள். அங்கு ஒரு பாரில் வேலை செய்யும் ஒரு தமிழ் பெண்ணிடம் காதல்வயப்படுகிறார்.

அப்பாவை பார்க்க நாயகனை அழைத்துக்கொண்டு நாயகி மும்பை வருகிறார்.  அங்கு நடக்கும் ஆள் மாறாட்ட குழப்பத்தால் பல திருப்பங்களுடன் படம் முடிவடைகிறது.

****

கதையில் நாயகனின் அம்மா, தங்கையை தவிர அத்தனை பேரும் மாங்காத்தா அஜித் கதாபாத்திரங்கள் தான்.  கிரிமினல், மெகா கிரிமினல் என பிரிக்கலாம். அது தான் வித்தியாசம்.

மாபியா கதை என்பதால் படம் முழுவதும் டுஸ்யூம் டுஸ்யூம் என துப்பாக்கி சண்டை, பாங்காக் என்பதால் பறந்து பறந்து சண்டை, பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொலை, அடித்தே கொலை என விதவிதமான‌ கொலைக‌ள் என பார்த்து பார்த்து தலைவலி வராவிட்டால் ஆச்சர்யம். இரண்டே முக்கால் மணி நேர படம். அது இன்னுமொரு கொடுமை.

படத்தின் துவக்கத்திலிருந்து இறுதி வரை மது, சிகரெட் குடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என கீழே வந்துகொண்டேயிருக்கிறது. சமீபத்தில் டேவிட் படத்திலும் இதே மாதிரி தான் நண்பர்கள் சொன்னார்கள். தமிழ் படங்களில் பார் இல்லாத படங்களை பார்ப்பது அரிது தான் போல!

அதென்ன மாபியா கும்பலில் உள்ள பெண் என்றால், எப்பொழுதும் சிகரெட்டோடு இருக்கவேண்டுமா என்ன?  வில்லனிடம் கவனம் கொடுத்து, நாயகனை வலு இழக்க வைத்திருக்கிறார்கள்.

கதை ஆந்திரா, பாங்காக், மும்பை என ஊர் சுற்றுகிறது. இப்பொழுதெல்லாம் தமிழுக்கென்று பிரத்யேகமாக‌ எடுக்கப்படுகின்ற படங்கள் மிக குறைவு.  எல்லா மொழி வியாபாரத்தையும் மனதில் வைத்துக்கொண்டு எடுப்பாதாலேயே எல்லா கோளாறுகளும் படத்திற்குள் வந்துவிடுகின்றன.  'பீட்சா', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' போன்ற கதையம்சம் கொண்ட சிறிய பட்ஜெட் படங்கள் தான் வருங்காலத்தில் தேறும் போல!

Thursday, February 21, 2013

The Illusionist - 2006 - திரைப்பார்வை

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை ஒளிந்துகொண்டு தான் இருக்கிறான். மேஜிக்கை ஆர்வமுடன் பார்க்க கூடிய எல்லா மனிதர்களையும் கவனிக்கும் பொழுது அப்படித்தான் எனக்கு தோன்றும்.   மேஜிக் கதைக்களனில் நோலனின் பிரஸ்டீஜ் (The Prestige) படம் எனக்கு பிடித்தமானது. அதற்கு பிறகு இந்த படமும்!

****

கதை எனப் பார்த்தால்...

ஒரு தச்சரின் மகன். பிரபுகுல மகள்.  பதின்ம வயதில் இருவரும் காதல் வயப்படுகிறார்கள்.  அரண்மனை அவர்களைப் பிரிக்கிறது. ஒரு பெரியவர் செய்யும் மேஜிக்கால் கவரப்படும் அவன், சீனத்துக்கு போய் மேஜிக் கற்றுக்கொள்ள கிளம்புகிறான்.

மேஜிக் நிபுணராக ஊர் திரும்பும் நாயகன் மேடை நிகழ்ச்சிகள் நடத்துகிறான். மக்களின் பாராட்டை பெறுகிறான்.  பிரபலமாகிறான். பழைய காதலியை சந்திக்கிறான்.  அவளுக்கோ அந்த நாட்டின் இளவரனுடன் நிச்சயம் ஆகியிருக்கிறது.  நாயகனுக்கும் நாயகிக்கும் பழைய காதல் உறவு மீண்டும் பற்றிக்கொள்கிறது.

இளவரசன் நாயகியை மணம் செய்தால் தான், அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்கிற நிலை. அதனால், நாயகனை எப்படியாவது கைது செய்து உள்ளே தள்ள தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறான். இதற்கிடையில் இளவரசனுக்கும் நாயகிக்கும் சண்டை வருகிறது. அடுத்த நாள் நாயகி கொலை செய்யப்படுகிறாள்.

நாயகன் இளவரசன் தான் கொலை செய்துவிட்டான் என விசாரணை அதிகாரியிடம் கூறுகிறான். ஆதாரம் இல்லாததால் யார் கொலை செய்தார்கள் என கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் இளவரசன் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. அதை மேலே அனுப்பி வைத்துவிட்டு, இளவரசனை கைது செய்ய முயலும் பொழுது, இளவரசன் தற்கொலை செய்துகொள்கிறான்.

படத்தின் கடைசி 5 நிமிடத்தில் விசாரணை அதிகாரிக்கும் நமக்கும் சில உண்மைகள் தெரியும் பொழுது, அவனும் வியக்கிறான். நாமும் ஆச்சர்யப்படுகிறோம். படத்திற்கு மாய பிம்பங்களை உருவாக்குபவன் (The Illusionist)  என்ற பெயர் நச்சென பொருந்துகிறது.

****

குழந்தைகளை கவர்வதற்கு சின்ன சின்ன மேஜிக் கற்றுக்கொள்ள வேண்டும் என பலமுறை நினைத்ததுண்டு. நிறைய புத்திசாலித்தனமும், உழைப்பும் தேவை என அந்த முயற்சியில் புரிந்துகொண்டேன்.

படம் நோலனின் பிரஸ்டீஜ் படத்தைப் போல நான் லீனியர் படம் இல்லை.  எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் படி நேர்கோட்டில் தான் செல்கிறது.  படத்தில் காட்டப்படும் மேஜிக் வகைகள் எல்லாம் அட போட வைக்கின்றன.

படத்தில் மேஜிக் மையமானது என்றால், காதலும் அப்படித்தான். ஆனால், அந்த காதலில் அத்தனை கவனம் செலுத்தியிருக்க மாட்டார்கள். அது ஒரு குறையாக படுகிறது. நாயகன் ஏன் விஷால் போல ஒரு முக இறுக்கத்தோடு வலம் வருகிறார் என புரியவில்லை.  மற்றபடி படத்தில் நடித்தவர்கள் இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் ஒரு காலத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக நாடகம், இசை நிகழ்ச்சி, மேஜிக் என இருந்திருக்கின்றன. படத்தின் பலத்திற்கு திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, கலை என எல்லாமும் உதவி செய்திருக்கின்றன. இப்படிப்பட்ட  சில படங்கள் மெல்ல நகரும். அப்படி இல்லாமல், விறுவிறு என போகிறது.

சிறுவயதில் மேஜிக் என்பது ஒரு ஆசை கனவை போல இருந்து வந்திருக்கிறது. சிறுவயதில் கையை மூடி, கண் திறந்தால் ஒரு 5 ரூபாய் இருந்தால் எப்படி இருக்கும் என பலமுறை நினைத்து பார்த்திருக்கிறேன்.  எல்லா குழந்தைகளுக்குமே இப்படி ஒரு ஆசை கண்டிப்பாய் இருந்திருக்கும்.

Wednesday, February 20, 2013

பலூன் - கவிதை

அண்ணன் மகள் விட்டுச்சென்ற பலூன்
மூலையில் கிடக்கிறது!

விளையாட பாப்பா இல்லாமல்
சோகத்தில் - தன் மூச்சை
கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக்கொண்டிருக்கிறது!

Wednesday, February 13, 2013

நீ...மழை...நான்!

உன் கன்னத்தில்
கழுத்தில்
இடுப்பில்
முத்து கோர்த்து
விளையாடிய
அந்த மழைக்கு
என் காதலை
யார் சொன்னார்கள்
என்று தெரியாது

உன்னை எங்கெல்லாம்
நனைக்க நினைத்தானோ
அப்படியெல்லாம்
நனைத்தது

உன்னை
எப்படியெல்லாம்
அணைக்க நினைத்தேனோ
அப்படியெல்லாம்
அணைத்தது

எந்த பெண்ணையும்
சட்டென்று
தொட்டு பேசிவிட
மழையின் மனசு
வேண்டும் போலிருக்கிறது

குடைபிடிப்பது
இயற்கைக்கு
எதிரானதென்று
நீ நனைந்து சிலிர்த்த
அழகுதான்
எனக்குச்
சொல்லிக் கொடுத்தது

உன்மீது வழிந்து
இளநீரான
அந்த மழை நீரை
மனசு தளும்பத் தளும்ப
நான் நிரப்பி
வைத்திருக்கிறேன்

அந்த மழையில்
நீ ஒரு தேவதையைப்
போலிருந்தாய்...

மழை -
உன்னைத் தேடித்தான்
பூமிக்கு வந்ததோ என்று
எனக்கு சந்தேகம் வந்தது

********

இப்போதும் வருகிறது
மழை...
என் கன்னத்தில்
கண்ணீரைப் போல் வழியும்
இந்த மழைக்கு
நம் காதல் தோல்வியை
யார் சொன்னார்கள் என்று
எனக்குத் தெரியாது

உன் வாசனைகளையும்
கொலுசு சப்தத்தையும் தேடி
பருவம் தப்பி வந்திருக்கிறது
இந்த மழை

நீ நனைய வேண்டாம்
எங்கிருந்தாலும்
கண்ணாடி ஜ்ன்னலுக்குப்
பின்னாலிருந்த படியாவது
இந்த மழையைப்
பார்த்து கொண்டிரு போதும்

இந்த மழைக்கு நானும்
எனக்கு மழையும்
ஆறுதல் சொல்லிக் கொள்வோம்

- பழனி பாரதி

Welcome to Dongmakgol (2005) - திரைப்பார்வை

வெகுநாட்களுக்கு பிறகு போரை வெறுக்கும் ஒரு அருமையான படம் பார்த்தேன்.

****
1950 காலகட்டம்.  தென்கொரியாவும், வடகொரியாவும் எல்லையோர சண்டையில் கடுமையான போரில் ஈடுபடுகிறார்கள்.  அதில் ஒரு படைபிரிவில் வடகொரிய கம்யூனிச படை பிரிவில் 3 பேர் எஞ்சுகிறார்கள். இவர்களும், தென்கொரிய படையிலிருந்து சிதறிய இரண்டு பேரும் மலையில் இருக்கிற ஒரு கிராமத்திற்குள் வந்து சேர்கிறார்கள்.  இவர்களுக்கு முன்பு ஒரு அமெரிக்க படைவீரரும் விமானம் மலைமேல் விழுந்ததால் காலில் அடிபட்டு அதே கிராமத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உள்ளே வந்த இரண்டு குழுக்களும் அந்த மக்களை பணய கைதியாக வைத்து கொஞ்ச நேரம் அடித்துக்கொள்ளுகிறார்கள். அந்த மக்கள் போர் பற்றியோ, ஆயுதங்கள் பற்றிய அறிவோ இல்லாமல் வெள்ளந்தியாக இருக்கிறார்கள்.  அந்த கிராமமே ஒரு குழுவாக உழைப்பில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். படைவீரர்களுக்குள் நடக்கும் களேபரத்தில் ஒரு கையெறி குண்டை அந்த மக்களுடைய சேகரித்து வைத்துள்ள உணவுக்கிடங்கை சிதறடித்துவிடுகிறார்கள்.

உடனடியாக அந்த கிராமத்தை விட்டு வெளியேற முடியாத போர்ச்சூழல். அதனால் அவர்களுக்குள் தற்காலிகமாக சமாதானமாகி அங்கேயே தங்குகிறார்கள்.  குளிர்காலம் துவங்க இருப்பதால், இழந்த தானியங்களை ஈடுகட்ட அந்த மக்களுடன் உழைப்பில் ஈடுபடுகிறார்கள். அந்த மலைவாழ் மக்களின் வெள்ளந்தித்தனமும், சூழலும் போர் வீரர்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி நண்பர்களாக்குகிறது.


இறுதியில் அமெரிக்க போர்விமானியை காப்பாற்ற ஒரு குழு கிராமத்திற்குள் வருகிறது.  மக்களை எதிரிகளை போல மோசமாக நடத்துகிறார்கள்.  பொறுக்கமுடியாமல் தென், வடகொரிய வீரர்கள் அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்றுவிடுகிறார்கள். அதில் எஞ்சிய ஒருவன் அமெரிக்க வான்படை இந்த கிராமத்தை எதிரியின் முகாமாக நினைத்து, மொத்த கிராமத்தையும் வெடிகுண்டுகளால் தகர்க்க இருப்பதாக கூறுகிறான்.

நிலைமையின் விபரீதம் புரிந்து, உடனடியாக அமெரிக்க போர் விமானியையும், எஞ்சிய ஒரு வீரனையும் அமெரிக்க தளத்திற்கு உடனடியாக அனுப்பி தாக்குதலை தடுக்க அனுப்பி வைக்கிறார்கள்.  ஒருவேளை இவர்கள் சென்றடைவதற்குள் அமெரிக்க வான்படை தாக்குதல் தொடுத்தால் என்ன செய்வது?  அதனால், கிராமத்தை விட்டுத்தள்ளி, அமெரிக்க குழுவிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை கொண்டு, ஒரு செயற்கையான முகாமை உருவாக்குகிறார்கள். இவர்கள் எதிர்பார்த்தபடியே அமெரிக்க வான்படை அணிவகுத்து வர, இவர்கள் தாக்குதலை தொடுத்து தங்கள் உயிரை தியாகம் செய்து அந்த கிராமத்து மக்களை காக்குகிறார்கள்.

****

போர் எத்தனை கொடூரமானது?  எவ்வளவு கடும் இழப்புகளை தரக்கூடியது என்பதை படம் நன்றாக வெளிப்படுத்துகிறது. போர் இல்லாத, வெறுப்பு இல்லாத, உழைப்பும், அன்பும் நிறைந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை அந்த மலைவாழ் மக்களின் வாழ்வை அழகாக காட்டியிருப்பார்.

கடந்த நூற்றாண்டில் முதலாம், இரண்டாம் உலகபோர்கள் விளைவித்த கொடூரங்களை நாம் நிறைய படித்திருக்கிறோம். வருந்தியிருக்கிறோம்.  அதில் ஒரு உதாரணம் போதுமானது.  இட்லரின் கொலைகார நாஜிச படை முதலாளித்துவ நாடுகளை ஆக்ரமித்து, பிறகு ரசியாவை வெல்ல நுழைகிறான். கிட்டத்தட்ட 2 கோடி வீரர்களையும், மக்களையும் இழந்து போரில் வெற்றி பெற்று, இட்லரின் படையை துரத்தியடித்தார்கள். 

வடகொரிய கம்யூனிச படைக்கும், தென்கொரிய படைக்குமான வித்தியாசத்தை தென்கொரிய இயக்குநராய் இருந்தாலும் சரியாக வெளிப்படுத்தியிருப்பார்.

படத்தின் தொடக்கத்தில், கம்யூனிச படை பிரிவில் இருவர் போரில் தாக்கப்பட்டு நடக்கமுடியாத நிலை  மற்ற வீரர்கள் சிரமப்பட்டு அவர்களை கரடுமுரடான பாதையில் தூக்கி வருவார்கள்.  இதில் இடைநிலை அதிகாரி ஒருவன் இப்படி தூக்கி செல்வது சிரமமான காரியம். அதனால் அடிப்பட்டவர்களை விட்டுவிட்டு சென்றுவிடலாம் என சொல்வார். அதற்கு அந்த அதிகாரி உறுதியாய் மறுத்துவிடுவார்.

தென்கொரிய படைவீரனை ஒரு உண்மைக்கனவு அவனை துன்புறுத்தும்.  படைபிரிவில் இருந்த பொழுது, ஒரு பாலத்தை அகதிகள் தங்கள் குழந்தைகளுடன், குடும்பம் குடும்பமாக கடந்து சென்றுகொண்டிருப்பார்கள்.  இந்த வீரனை அந்த பாலத்தை குண்டு வைத்து தகர்க்கும்படி மேலிருந்து கட்டளையிடுவார்கள்.  மறுப்பான். மேலதிகாரி மிரட்ட குண்டுகளை வெடிக்க வைப்பான்.

படத்தில் இப்படி பேசுவதற்கு நிறைய பகுதிகள் இருக்கின்றன. நிறைய நீளும் என்பதால், இத்துடன் முடித்துகொள்கிறேன். ஒளிப்பதிவு பளிச். பளிச். அந்த மலை கிராமத்தை அவ்வளவு பொலிவுடன் ஒளிப்பதிவு அள்ளியிருக்கிறது.  படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். 2005வரை தென்கொரியாவில் வெளியான படங்களிலேயே வசூலில் 4வது இடத்தை பெற்றிருக்கிறது.  நிறைய விருதுகளையும் பெற்றிருக்கிறது.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.