Tuesday, January 24, 2012

புகைப்படக்காரனின் நொந்த குறிப்புகள்!


இரண்டு நண்பர்கள் புகைப்படக்காரர்கள். ஒருவர் சொந்த ஊர்காரர். மற்றொருவர் சென்னைவாசி. அவ்வப்பொழுது, தொழிலில் உள்ள சிரமங்களை, அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள். நானும் சில சமயங்களில் வாயைக் கிளறுவதுண்டு. ஏனெனில் நமது திருமணங்களும், சடங்கு, சம்பிரதாயங்களும் சிக்கலானவை. நமது மனிதர்கள் சுவாரசியமானவர்கள். விசேஷ வீடுகளிலோ இன்னும் சுவாரசியமானவர்கள்.

****

உசிலம்பட்டி பகுதியில் ஒருமுறை மொய்விருந்து நடத்தினார்கள். கூட்டம் ஜே.ஜே. என களைகட்டியது. வசூல் மழைதான். வாழ்நாளில் நான் அதிகப்பணத்தை பார்த்தது அன்றுதான். வசூல் ஒரு கோடியைத் தாண்டியது!

****

ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு விசயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சிலர் செய்முறைகளுக்கு; சிலர் உண்வுக்கு; சிலர் உபசரிப்பதற்கு; சிலர் பணத்திற்கு; பகட்டிற்கு! ஆனால், எல்லா வசதியான வீடுகளிலும் ஒன்றை மட்டும் வலியுறுத்துவார்கள். வரிசையாக வைத்திருக்கிற சீர் வரிசையை ஒன்றுவிடாமல் எடுத்துவிடுங்கள் என ஒன்றுக்கு நான்குமுறை வலியுறுத்துவார்கள்.

****

ஆந்திராவை ஒட்டி, தமிழ்நாட்டு எல்லை சிறுநகரம். அந்த குறிப்பிட்ட சாதியில், மணப்பெண்ணை தாய்மாமன் கூடையில் வைத்து சுமந்து வரவேண்டும் என்பது சம்பிரதாயம். அந்த மணப்பெண்ணோ சரியான குண்டு. தாய்மாமன் சம்பிராதயத்துக்கு தூக்கி இறக்குவதற்குள், வேர்த்து, விறுவிறுத்து போய்விட்டார்.

****

மூன்று நாள் திருமணம் நடத்துகிறவர்களும் உண்டு. வரிசையாக பல சடங்குகள் செய்து, நம்மை கிறுகிறுக்க வைத்துவிடுவார்கள். கொஞ்சம் சோர்ந்து, எதையாவது ஒரு சடங்கை எடுக்காமல் விட்டுவிட்டால் "இருப்பதிலேயே அதுதான் முக்கியமான சடங்கு! அதை எடுக்காமல் விட்டுவிட்டீர்களே!" என கோபித்துக்கொள்வார்கள். கடுப்பாயிரும் நமக்கு. இப்பொழுதெல்லாம் அழைத்தாலும் தவிர்த்துவிடுவதுண்டு.

****

சென்னையிலிருந்து அருகிலுள்ள பிற மாவட்டங்களிலுள்ள சிறு நகரங்களுக்கு போனால், நன்றாக மதிப்பார்கள். கவனிப்பார்கள். தலைநகரம் என்பது முக்கிய காரணம். இன்னுமொரு காரணம். அவர்களிடம் ஒரு லட்சம் வரை ஏஜென்ஸி பில் போட்டிருப்பார்கள். அதில் சோகம் என்னவென்றால் நிகழ்ச்சியை எடுக்கிற எங்களுக்கு கொடுப்பது சொற்பபணம் தான் தருவார்கள்.

****

பெரும்பாலும் திருமணம்; கிரகப்பிரவேசம் என விசேஷ வீடுகளுக்கு தான் போகிறோம். கறிவடை மூக்கை துளைக்கும். சாப்பாடு வாசம் பசியை தூண்டும். பல சமயங்களில் ஒப்புக்கு கூட சாப்பிட சொல்லமாட்டார்கள். வேலை நிலைமையில் நாமாக நகரவும் முடியாது எரிச்சல் பொங்கிவரும். பொண்ணு மாப்பிள்ளையோடு நாமும் சாப்பிட அமர்ந்தால், நமக்கும் சில நல்ல ஐயிட்டங்கள் கிடைக்கும். பல சமயங்களில் ரசம் மட்டுமே மிஞ்சும்.

****

7.30க்கு திருமணம் இருக்கும். நம்மிடம் 6 மணிக்கு கல்யாணம். சில சடங்குகள் செய்வோம். 4 மணிக்கே வந்துவிடுங்கள் என்பார்கள். போய்பார்த்தால், நாங்கள் தான் அவர்களை தூக்கதிலிருந்து எழுப்புவோம்.

கமுதி என்பார்கள். பார்த்தால், அங்கிருந்து லொட லொட பேருந்தில் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேர பயணம் இருக்கும். இப்பொழுதெல்லாம் சரியாக எந்த ஊர் என கேட்டுவிட்டு தான் கிளம்புகிறோம்.

*****

ஒருமுறை திருமணம் முடிந்த கொஞ்ச நேரத்தில், சண்டை வந்து இருவீட்டாருக்கும் கைகலப்பாகிவிட்டது. இரண்டுநாள் கழித்து, எங்களை ஏற்பாடு செய்திருந்த மாப்பிள்ளை வீட்டார் அவசரமாய் அழைத்து, பணத்தை செட்டில் செய்து, எல்லா பிலிமையும் வாங்கி, பொட்ரோல் ஊத்தி கொளுத்தினர். விசாரித்தால், விவாகத்து வாங்க முடிவெடுத்திருக்கிறார்களாம்.

****

இருவருமே நல்ல திறமைக்காரர்கள். ஆல்பமோ, டிவிடியோ நல்ல தொழில் நுட்பத்துடன், நேர்த்தியாக மிளிர வைப்பவர்கள். பலவற்றை நானே பார்த்திருக்கிறேன். அவர்களுடைய திருமண ஆல்பத்தை, டிவிடியை வாங்கிப்பார்த்தால், கற்றுக்குட்டித்தனமாய் இருந்தது. நம்ம கல்யாணம் காதல் கல்யாணம். கலட்டா கல்யாணம். அந்த களேபரத்தில் போட்டோ மேலே எங்க கவனம் வைக்கமுடிந்தது? நம்ம கத்துக்குட்டி உதவியாளர் எடுத்தது என்கிறார்கள்.

****

பேசிய பணம் எப்பொழுதும் 75% எந்தவித பிரச்சனையில்லாமல் வசூலாகிவிடுதுண்டு. 25% கொஞ்சம் இழுத்து தருவார்கள். சினிமாக்காரர்கள் யாராவது ஏற்பாடு செய்தால் தான், பணத்தை வாங்குவது என்பது காளை மாட்டில் பால் கறப்பது போல! தாவு தீர்ந்துவிடும்.

****

திருமணம் முடிந்து சில நாட்கள் கண்டுகொள்ளவேமாட்டார்கள். திடீரென ஒருநாள் அடுத்தடுத்து போன் செய்து, உடனே வேண்டும் என அடம்பிடிப்பார்கள். கோபித்துக்கொள்வார்கள். வேலைக்கு லீவு போட்டு வந்து, உட்கார்ந்திருந்து வாங்கிவிட்டு தான் விடுவார்கள்.

****

Thursday, January 19, 2012

குங்பூ பாண்டா 2 - திரைப்பார்வை


இந்த படம் இப்பொழுது பல பிரிவுகளில் ஆஸ்கருக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக அசத்தலான படம். அண்ணன் மகனின் புண்ணியத்தால் 6 மாதத்திற்கொரு 3D படம் பார்த்துவிடுகிறேன். அந்த வரிசையில் இதுவும் ஒரு படம்.

***
கதை எனப் பார்த்தால்...

பழங்கால சீனாவின் ஒரு பகுதியை மயில் மன்னன் ஆண்டு வருகிறான். இளவரசன் மயில் பிறக்கும் பொழுது, 'ஜாதக பலன்' சரியில்லாமல் போக, நாட்டுக்கு பிரச்சனை என்பதால், நாட்டைவிட்டு அனுப்பிவிடுகிறார்கள். புறக்கணிப்பால், வெறுத்துப்போன மயில் இளவரசன் பல ஆண்டுகளுக்கு பிறகு, புதிய வகை ஆயுதமாக பீரங்கியை உருவாக்கி கொண்டு வந்து, தற்போதைய மன்னனை வீழ்த்தி, ஆட்சியை பிடிக்கிறது.

இந்த மயிலுக்கும் ஜாதக நம்பிக்கை இருக்கிறது. மை போட்டு பார்த்ததில் "கருப்பு-வெள்ளை நிறத்திலான ஒரு கரடியால் உயிருக்கு ஆபத்து" என சொல்லப்படுகிறது. ஆகையால், தன் வாழ்நாளில் பல கருப்பு வெள்ளை கரடிகளை தேடித்தேடி அழித்து வருகிறது. மேலும் குங்பூவை வளரவிடாமல் செய்வதற்கும் பல வேலைகளை செய்கிறது. இது தீயவனான வில்லன் கதை.

மறுபுறம், குங்பூ கலையின் தலைமையிடத்தில் டிராகன் வீரரான பாண்டா கரடி, சக நண்பர்களான பெண்புலி, குரங்கு, பாம்பு, வெட்டுக்கிளி, பறவை, பூனை குரு எல்லோரும் மயிலின் கொடுமையான ஆட்சி கண்டு கவலைகொள்கிறார்கள். மக்களைக் காப்பதும், குங்பூவை காப்பதும் டிராகன் வீரரான பாண்டா கரடியின் கடமை என்பதால், மயிலை அழிப்பதற்காக குழுவாக கிளம்புகிறார்கள்.

மயிலுடன் நடக்கும் போராட்டத்தில், தங்களுடைய பெற்றோர்கள் இந்த மயிலால் தான் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மை பாண்டா கரடிக்கு தெரியவருகிறது. பல போராட்டங்களுக்கு பிறகு, அனைவரின் ஒத்துழைப்புடனும் தனது மன அமைதி பயிற்சியின் முறையினாலும், பலம் வாய்ந்த பீரங்கியை எதிர்கொண்டு, மயிலை வீழ்த்துகிறார்கள். இறுதியில் சுபம்.

****
முதல் படத்தைப் பொறுத்தவரையில் ஜாக்கிசான் வகை பாணியிலான நகைச்சுவை + குங்பூ படமாக ஜாலியாக அமைந்தது. இந்த படம் கொஞ்சூண்டு நகைச்சுவை, மற்றபடி ஒரு சீரியஸ் படமாக பெரியவர்களுக்கானதாக இருக்கிறது. சிறியவர்களுக்காக என படம் காண்பித்து, பெரியவர்களுக்கு எடுக்கிறார்கள்.

****
படத்தின் இறுதியில், பாண்டா கரடி தன் மன அமைதி பயிற்சியின் மூலம் பீரங்கியிலிருந்து வரும் குண்டை, அப்படியே பூப்பந்தைப் போல கையில் வாங்கி, மயிலின் படைகளை சிதறடித்து, துவம்சம் செய்வதாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

அது ஒரு உருவகம். இது சீனாவின் ஜென்வகை சார்ந்தது. நம் ஊரில் "கோ..தா!கொ..மா!" என கெட்ட வார்த்தையால், கைகலப்பாகி பல சமயங்களில் கொலைவரைக்கும் போய்விடுவதுண்டு. ஜென் சொல்வது என்னவென்றால், ஒருவன் ஒரு வார்த்தை சொல்வதை, ஏன் உள்வாங்கி கொண்டு கோபப்படுகிறாய்? அந்த வார்த்தை. அவன் வார்த்தை. நீ உள் வாங்காதே! உனக்கு மனக்காயமும் ஆகாது என்பதாக படித்திருக்கிறேன்.

இதில் என்ன சொல்லவருகிறார்கள் என்பது புரியவில்லை தான். ஜென் அறிந்தவர்கள் விளக்கம் சொல்லலாம்.

***

92 நிமிடங்கள் தான் படம். ஆனால், செலவோ 750 கோடி. ஜாக்கிசான், ஏஞ்சலினா போன்ற பிரபலங்கள் வாயசைத்திருக்கிறார்கள். இந்த தொழில்நுட்பத்தில் நம் ஊரில் படம் எடுக்க பல ஆண்டுகளாகும் என நினைக்கிறேன்.

****
எனக்கு இந்த அனிமேஷன் படங்களில் பிடித்த அம்சம். நாம் நினைக்கிற கற்பனைக் காட்சியை பல கோடிகள் செலவழித்தாலும் செல்லுலாய்டில் சாத்தியப்படுத்துவது என்பது பாதியாக தான் இருக்கிறது.அனிமேஷனில் அது அருமையாக சாத்தியப்படுகிறது.

****

இந்த 3டி வகை படங்களை கொண்டு, மிருகங்களை, இயற்கையை நேசிக்க வைக்கிற படங்களை எடுத்து நன்றாக வெற்றிப்படமாக உருவாக்கமுடியும். ஹாலிவுட்காரர்கள் இந்தவகைப் படங்களை எடுப்பது சாத்தியம் குறைவு தான். அவர்கள் மனிதர்களையே நேசிப்பதில்லை. அவர்கள் நேசிப்பது எல்லாம் கல்லாவைத்தான்.

****

இந்த படம் குறித்து யாரும் எழுதியிருக்கிறார்களா என தேடிப்பார்த்தேன். குழந்தைகளுக்கான படங்களுக்கு ஏன் பதிவர்கள் விமர்சனம் எழுதுவதில்லை?

****

Thursday, January 5, 2012

நொந்தகுமாரனின் பக்கங்கள் - பறவையைப் போல!


வாழ்வில் பிடித்தமானவைகளில் முதன்மையானது பயணம். பல ஊர்களுக்கு பயணப்பட்டிருக்கிறேன். இன்னும் பல ஊர்களுக்கு செல்ல, ஒரு பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன். எங்கேனும் செல்ல.. ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் போதும், போய்விடுவேன். குட்டையைப் போல ஓரிடத்தில் தேங்காமல் நதியைப் போல ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.

பயணம் சுகம் என்றால், பயண சுமைகள் எப்பொழுதுமே தொல்லை. பயணத்தின் சந்தோஷங்களை சுமைகள் எப்பொழுதும் அழுத்திக்கொண்டே இருக்கும். பெருநகரத்திற்கு வாழ்க்கை நகர்ந்த பிறகு, இயல்பாகவே சில ஆண்டுகளில் பொருட்சுமைகளும், மனச்சுமைகளும் அதிகரித்திருக்கின்றன. பர்ஸ், சில வங்கி அட்டைகள், செல்போன், அழுத்தம் என நிறைய! முன்பெல்லாம் பயணத்தில் அசதியாயிருந்தால் சட்டென்று கண்ணயரலாம். இப்பொழுது அப்படி வாய்ப்பே இல்லை. சுமைகள் இல்லா பயணம் நிறைவேறாத கனவை போல இருக்கிறது!

இன்று ஊருக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன். ஆச்சர்யமாக எந்த சுமையும் இல்லை. சுமைகள் இல்லாத பறவையை போல சட்டென்று உணர்ந்தேன். சந்தோஷமாய் விசிலத்தபடியே கிளம்பி கொண்டிருந்தேன்.

வெளியே கால் வைக்க போகும் பொழுது, அலைபேசியில் அழைப்பு வந்தது. ஊரிலிந்து நண்பன். ஊருக்கு தான் கிளம்புகிறேன் என்றதும், கடந்த முறை தான் தவறவிட்டு வந்த இரண்டு டிசர்ட்டுகளை மறக்காமல் எடுத்துவா! என கட்டளையிட்டான். பறவை, கனவு என்றெல்லாம் சொன்னால், மூன்று மாதத்திற்கு கிண்டலுக்கான சரக்காக்கிவிடுவான். சரியான நக்கல் பேர்வழி. வாயே திறக்கவில்லை. சோகமாக இரண்டு டிசர்ட்டுகளை தேடிப்பிடித்து, ஒரு பேக்கில் போட்டுக்கொண்டேன். கிளம்பிவிடலாம். இருந்தால், இன்னும் சுமையேற்றிவிடுவார்கள் என பயம் வந்தது.

சென்னை போக்குவரத்தில் சிக்கி, சின்னாபின்னாமாகியும் 20 நிமிடத்திற்கு முன்பாக இரயில் நிலையம் வந்துசேர்ந்தேன். கொஞ்சம் பசித்தது. இரயில் உணவு நினைவிற்கு வந்து பயமுறுத்தியது. நாலு இட்லிகள் வாங்கிகொண்டேன். பக்கத்தில் புத்தககடை பரபரப்பாக இருந்தது. ஆனந்தவிகடன் 2011 நினைவுகளை கிளறியிருந்தது. வாங்கிகொண்டேன். தீராநதியில் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் விரிவான பேட்டி வந்திருந்தது. வாங்கிகொண்டேன். இனியும் நின்றால், புத்தக சுமை கூடும் என பயந்து கிளம்பினேன்.

இரயில்வே ஏற்பாடு செய்திருந்த ரூ. 5க்கு ஒரு போத்தல் தண்ணீர் வாங்கி கொண்டேன். மனிதர்கள் பரபரப்பாக அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு டிராலி நிறைய பயண லக்கேஜ்கள். அதில் ஒரு குட்டிப்பெண் காலை ஆட்டி அமர்ந்திருந்தது.

கோச்சுக்கு வந்து சேர்ந்தேன். போய் இருக்கையை தேடிப்பிடித்து, உட்கார்ந்து நிமிர்ந்தால் மோகன் அமர்ந்திருந்தான். எனக்கு தட்கல் இருக்கை புக் பண்ணி தந்தவன்.

"ஊரிலிருந்து போன் வந்தது. அம்மாவுக்கு மருந்து கிடைக்கலையாம். அது தான் அலைந்து திரிந்து, 4 பாட்டில்கள் வாங்கிவிட்டேன். ஊரில் இந்த முறை பனி அதிகமாம். அம்மாவுக்கு குளிர் தாங்கலையாம். அதனால் இந்த் ஸ்வெட்டர்.. கம்பெனியில் டைரி தந்தார்கள். நான் எந்த காலத்துல எழுதினேன்! உனக்கு பயன்படும் வச்சுக்க!" என எல்லாவற்றையும் தந்தான்.

"வேற ஏதும் இருக்காடா! மறந்துற போற!" என்றேன். "அவ்வளவு தாம்பா!" என்றான் சீரியசாய்! விடைபெற்று போனான்.

எல்லாவற்றையும் எடுத்து பேக்கில் பத்திரப்படுத்தினேன். வழக்கத்தை விட அதிகமான பொருட்கள் சேர்ந்துவிட்டன. சிரித்துக்கொண்டேன். வானம் பார்த்தேன். அந்த இருட்டில் ஒரு குட்டி வெண்மேகம் பறவையைப்போல லேசாக மிதந்து போனது. பொறாமையாய் இருந்தது.

சுமைகள் இல்லா பயணம் பறவைக்கு வாய்க்கும்! மனிதனுக்கு சாத்தியப்படாது! அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் (!), பறவையாய் பிறக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

பெரிய சத்தத்தோடு வண்டி நகர ஆரம்பித்தது.