Monday, August 25, 2008

போட்டாவில் சிக்கிய போலீஸ்




நன்றி : தினமலர்




தமிழக போலீசார்
உலகப்புகழ் பெற்றவர்கள்.
அவர்களின்
திறமைகளைப் பாராட்டி
தமிழக அரசு
தங்கப்பதக்கம் தருகிறது.
வீடுகள் கட்டித்தருகிறது.
மற்றத் துறைகளைவிடவும்
பல சலுகைகளை
அள்ளித்தருகிறது.

இருப்பினும்...
லஞ்சம் வாங்கி
வயிறு வளர்க்கும்
சுகம் இருக்கிறதே!
அடடா!

அந்த சுகத்தை
எந்த தங்கப்பதக்கமும்
தருவதில்லை


Thursday, August 14, 2008

'ஜ‌ன‌ க‌ன‌ ம‌ன' - கவிதை


நூல் நூற்கிறாள்
என்னுடன் போட்டி போட்டு
படித்த தனம்

டீ க‌டையில்
கிளாஸ் க‌ழுவுகிறான்
முத்து முத்தாய் எழுதும்
முத்துராசு

கணக்கு பாடத்தில்
100க்கு 100 வாங்கும்
க‌ருப்பு ச‌ந்தான‌ம்
வெல்டிங் பட்டறையில்
கொஞ்சம் கண் அயர்ந்ததில்
செத்துப் போனான்

இருப்பினும்...
நெஞ்சு நிமிர்த்தி பாட‌லாம்
'ஜ‌ன‌ க‌ன‌ ம‌ன'

பின்குறிப்பு : அக்கா பெண் 9ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளியில் ஆண்டுவிழாவிற்காக கவிதை கேட்கிறார்கள். எழுதி தாருங்கள் என்றாள்.

'நீயே எழுதுவது தான் சரி.எழுதி கொண்டு வா! திருத்துகிறேன்' என்றேன்
ஒன்றும் எடுபடவில்லை. அடம்பிடித்து எழுதி வாங்கிப் போனாள். கவிதை நன்றாக இருந்ததாக பாராட்டி, பள்ளி இதழில் வெளியானது.

கவிதையில் வரும் பாத்திரங்கள் நிஜமானவர்கள். இரவில் என்னுடன் பேசி போன ஒரு மணி நேரத்தில் செத்துப்போனான். அடுத்த நாள் அதிகாலையில் மார்ச்சுவரியில் பார்த்த சந்தானத்தின் உடலை நினைத்தால், இன்றைக்கும் என்உடல் புல்லரிக்கும். நெஞ்சு கணத்துவிடும். இறக்கும் பொழுது அவனுக்கு வயது 15.

Saturday, August 9, 2008

இனி அடிக்கடி எழுதுவேன் - நொந்தகுமாரன்






முன்குறிப்பு : அதிக வேலை காரணமாக சில காலம் வலையுலகில் இருந்து விலகியிருந்தேன். வலையுலகில் இன்னமும் கும்மியும், ஜல்லியும் குறைந்தபாடில்லை. இனி அடிக்கடி வலம் வருவேன்.
"எழுத சொல்லி பல பதிவர்கள் நிறைய பின்னூட்டமிடுகிறார்கள். பதிவுலக நண்பர்கள் அன்பு தொல்லை செய்கிறார்கள்" இப்படியெல்லாம் புருடா விடமாட்டேன்.
இடைக்காலத்தில் நிறைய நொந்த அனுபவங்கள். எனக்கே ஆறுதலாய் இருக்கட்டுமே என்று தான் எழுதுகிறேன்.

இன்று சாலை கடக்கையில் ஒரு வாசகம் பார்த்தேன்.

சாலையில் செல்கையில்
செல்போன் பேசாதீர்.
அழைப்பது
எமனாக கூட இருக்கலாம்.

எப்பொழுதும் கட்டளைகளாக, அறிவுரைகளாக எழுதிருப்பார்கள். படித்ததும் பிடித்திருந்தது.

Wednesday, August 6, 2008

ஹெல்மெட் - சில குறிப்புகள்!



கவனிக்கவும் - திருவாளர் டிராபிக் ராமசாமி அவர்கள்
பல வண்டிகளில்
வண்டியின் உறுப்பாய்
லாக்கரில் துருப்பிடித்து
பரிதாபமாய் தொங்குகிறது.

வழுக்கைத்தலைகாரர்கள்
பெரும்பாலும் அணிவதில்லை
அவர்கள் விதிவிலக்கு
பெற்றிருக்கிறார்களா என்ன?

ஹெல்மெட் அணிவதால்
முடி கொட்டுவதாய்
நண்பன் புலம்புகிறான்
விசேஷ ஷாம்பூ
தயாரிக்கிறார்களா?

தெரிவியுங்கள்
நாலு செல்
ஆறு ஹெல்மெட்
மறந்து தொலைத்ததாய்
பட்டியல் தருகிறான்
ஹெல்மெட் அணிவதால்
மறதி அதிகமாகுமா?

ஹெல்மெட் சட்டம்
டிராபிக் போலீஸ்க்கு
அரசு மறைமுகமாய்
அறிவித்த போனஸ் அறிவிப்பா?
ரூ. 100 கொடுத்தால்
விட்டுவிடுகிறார்கள்.

தென்மாவட்டங்களில் - யாரும்
அணிவதேயில்லை
நண்பர்கள் சொன்னார்கள்.
டிராபிக் ராமசாமி
சென்னையில் மட்டும் இருப்பதலா?!