Monday, January 27, 2014

காதலித்தால் தண்டனை “பாலியல் பலாத்காரம்”

மேற்கு வங்கத்தில் ஒரு பழங்குடிப் பெண் காதலித்தாள் என்பதற்காக சம்பந்தப்பட்ட ஆண், பெண் இருவரையும் தண்டத்தொகையாக தனித்தனியாக ரூ. 25000 கட்ட சொல்லியிருக்கிறார்கள்.

பெருந்தொகை அதனால் கட்ட இயலாது என்று பெண்ணின் குடும்பம் சொன்னதற்காக ஊரில் உள்ள யாரும் பாலியல் பலாத்காரம் செய்யலாம் என கட்டப்பஞ்சாயத்து கூடி இப்படி சாதி, ஆணாதிக்க வெறியுடன் ’தீர்ப்பு’ சொல்லியிருக்கிறார்கள்.


திங்கள் இரவு ஒரு செட்டில் அடைத்து வைத்து புதன் காலை வரை 13 பேர் வரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். கடுமையான ரத்தப்போக்கினால் உயிருக்கு ஊசலாடிய நிலையில் கூட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுத்திருக்கிறார்கள்.


பெரும் போராட்டத்திற்கு பிறகு, மருத்துவமனையில் சேர்த்து, இப்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார்.


பலர் ஒன்று கூடி இப்படி ஆணாதிக்க, சாதி வெறிப்பிடித்த கொடூரமான தீர்ப்பினை அறிவித்து, நடைமுறைப்படுத்த முடிகிறது என்றால், இந்த சமுதாயம் எத்தனை பிற்போக்குடன் இருக்கிறது என்பது குறித்து தீவிரமாய் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.


பெண்கள் அரசாண்டால் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்த சம்பவம் நிரூபித்து இருக்கிறது. மம்தா அரசு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்.


தேடிப்படிக்கும் பொழுது, அங்கு கல்விக்கூடமே இல்லை என்ற செய்தி தெரியவருகிறது. 35 ஆண்டு காலம் நாங்கள் மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்தோம் என பெருமை பீத்தும் சிபிஎம் காரர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்.

நேற்று குடியரசு தினம். பலரும் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறார்கள். இந்தியா இரண்டு இந்தியாவாக தெளிவாக பிரிந்து நிற்கிறது. பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு இருண்ட உலகமாக, கொடூரமான இந்தியாவாக தான் இருக்கிறது.


அப்பாவி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி குறித்து, இந்தியன் என்பதில் வெட்கி தலை குனிகிறேன்.


செய்தி :


கும்பல் பாலியல் வன்முறை  தி இந்து

Friday, January 17, 2014

வேன் ஹெல்சிங் வீரனும் வேற்றுகிரக தேவதையும்! -கவிதை

நான் வேன் ஹெல்சிங்கில்
வேம்பையரால் கடிக்கப்பட்ட வீரனைப் போன்றவன்

நீ வேற்றுக் கிரகத்திலிருந்து எனக்காகவே தவமிருந்து
வந்திணைந்த தேவதையைப் போன்றவள்

மாறும் என் முகத்தின் உணர்ச்சி பாவங்களை கவனிக்காது
என் மீது சாய்ந்து என் வெற்று மார்புகளை வருடிக் கொண்டிருக்கிறாய்

நீ சந்தேகங்களோ அவநம்பிக்கைகளோ பயமோ இல்லாது வாழ
வரத்தைப் பெற்று வந்தவள்

நானோ கோபப்படும் பொழுதெல்லாம் இரத்தம் குடிக்கும் மிருகமாகச் சபிக்கப்பட்டவன்

என்னிலிருந்து உன்னைக் காப்பது எனக்குப் பெரும் சுமையாக மாறிக்கொண்டிருக்கிறது

என் உருவம் ஒரு நொடியில் விகாரமாவதில்லை
என் முகம் ஒரு நொடியில் அருவருப்பாவதில்லை
என் பற்கள் ஒரு நொடியில் கோரையாவதில்லை
என்னை ஒவ்வொரு நொடியும் நீ கூர்ந்து கவனிப்பதில்லை.

நான் உன்னைத் தொட்டு விலகி ஓடச் சொல்லும் பொழுது
நீ ஏதோ வேலையாய் அசட்டையாய் என் கைகளைத் தட்டிவிடுகிறாய்

என் குரல் கரகரப்பாகும் போதும்
நீ உன்னைக் குறித்து கவலைப்படுவதில்லை
என்னைக் குறித்தே கவலை கொள்கிறாய்.

தோழியே! நீ எப்பொழுதும் என் வார்த்தைகளை உற்றுக் கவனி
தோழியே! நீ எப்பொழுதும் என் நடவடிக்கைகளின் மீது கவனமாக இரு

நீ என்னை விடாது விரும்புவதாய் இருந்தால் 

சற்றே விலகி நிற்கவும் கற்றுக் கொள்

இந்த ஜென்மத்தில் இனி நான் முழு மனிதனாய் மாறுவது
சாத்தியமில்லை என புரிந்து கொள்

நானும் என் கோரைப்பற்களும் கொடும் நகங்களும்
உன்னைச் சீண்டிவிடாதவாறு
எப்பொழுதும் உன்னை எச்சரித்துக் கொண்டே இருக்கிறேன்.

நான் வேன் ஹெல்சிங் வீரனாய் இருப்பதை
விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை
என்பது மட்டும் உனக்குப் புரிந்திருந்தால் போதுமென்று விரும்புகிறேன்.

- மகேஷ்


 பின்குறிப்பு :  பொதுவாக யாருடைய பதிவுகளையும் தளத்தில் பதிவிடுவதில்லை.  இதை ஒரு தளக் கொள்கையாகவே வைத்திருக்கிறேன்.  அதையும் மீறி சில பதிவுகள் மிகுந்த அகவிருப்பத்திற்குரியனவாகி விடுகின்றன.
 

இந்த கவிதை எனக்காக எழுதப்பட்டதுபோலவே இருக்கிறது.