Friday, July 31, 2009

425 கோடியில் புதிய சட்டமன்றம்! - சில குறிப்புகள்!


* சட்டமன்றத்தால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் முக்கால்வாசி முடங்கி கிடக்கின்றன. மீதி ஆமை வேகத்தில் நகருகின்றன. சட்டமன்ற கட்டிட வேலைகள் மட்டும் ஏன் புயல் வேகத்தில்?

* தமிழ்நாட்டு பாடசாலைகள், அரசு அலுவலங்கள் எல்லாம் அரசின் பொதுப்பணித்துறைக் கட்ட... 425 கோடியில் சட்டமன்றம் கட்டுவது ஜெர்மன் நாட்டின் ஜி.எம்.பி. நிறுவனம். உள்ளே நடமாடுவது தாங்களே என்பதலா! இதுவும் பன்னாட்டு சேவையா?

* பெஞ்சுக்கு பதிலாக வசதியான குஷன் இருக்கைகளாம். இனி, சட்டமன்ற கூட்டத்தொடரின் பொழுது குறட்டைவிட்டு எம்.எல்.ஏ.க்கள் வசதியாக தூங்கலாம்.

* அதிமுக ஆட்சியில் வேட்டியை அடிக்கடி உருவிவிடுகிறார்கள். ஆகையால் புதிய சட்ட மன்றத்தில் வேட்டி சட்டைக்கு பதிலாக கோட்-சூட் போடலாம் என பரிதி இளம் வழுதி பரிந்துரைப்பார்.

* பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் நாம் சேவை செய்கிறோம். ஆகையால், புதிய
சட்டமன்றத்தத ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல பராமரிக்கலாம். எம்.எல்.ஏக்கள் கோட்-சூட் போடலாம் என தயாநிதி மாறன் தாத்தா கருணாநிதியிடம் சொல்லலாம்.

* மக்களுக்காக திட்டம் போடுவது போல பன்னாட்டு நிறுவனங்களுக்கு விசுவாசமாய் வேலை செய்யவேண்டும். மக்களைப் போல உடை அணிந்தால் தான் நம்மை சந்தேகப்பட மாட்டார்கள் என கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசித்தது போல கருணாநிதி தன் பேரனுக்கு உபதேசிப்பார்.

* மக்கள் பிச்சைக்காரர்களாக வாழ்கிறார்கள். 425 கோடியில் எழுந்து நிற்கிறது புதிய சட்ட மன்ற வளாகம். பாவம் மக்கள்!

Friday, July 17, 2009

வினவு - க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நாட்டில் மொள்ளமாரி, முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ரவுடி, மக்கள்ப் பணத்தை தின்று தீர்ப்பவன் என எல்லோரும் பிறந்தநாள் கொண்டாடும்பொழுது, மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் ஒளியில் உலக விசயங்களை சமரசமில்லாமல் எழுதும் வினவு-க்கு பிறந்த நாள் தாராளமாய் கொண்டாடலாம்.

பதிவுலகம் பற்றி ஒன்றுமறியாத காலத்தில், ஏதோ ஒன்றைப் பற்றி தேடும் பொழுது, பதிவுலகம் அறிமுகமானது. அதற்கு பிறகு பல பதிவர்கள் எழுதியதை படித்த பொழுது, பெரும்பாலும் மொக்கையாக இருந்தது. பொறுத்து, பொறுத்து ஒரு சமயத்தில் வெறுத்துப்போய் தான் "வலையுலகமும் நொந்தகுமாரனும்" என்ற பெயரில் வலைத்தளமே தொடங்கினேன். பல மொக்கைப் பதிவர்களை, பதிவுகளை கலாய்த்தும் பின்னூட்டங்கள் இட்டுக்கொண்டிருந்தேன். எழுதிப் பழக்கமில்லையென்றாலும், நானே சொந்தமாய் சமூக விசயங்கள் குறித்து எழுத துவங்கினேன்.

இந்த நாட்களில் தான் 'வினவு' அறிமுகமானது. துவக்க கட்டுரைகளைப் படித்த பொழுது, வலைத்தளம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். வேலை நிலைமைகள் என்னதான் வாட்டியெடுத்தாலும், வினவு தளத்தை தவறாமல் வாசித்து வருகிறேன். பின்னூட்டங்களும் இடுகிறேன். என்ன ஒரு வருத்தம்! நேரமின்மையால் விவாதங்களில் பங்கு கொள்ள முடியவில்லை.

என்வாழ்வில் சிந்தனையோட்டத்தையும், நடைமுறை வாழ்வையும் மாற்றியமைத்ததில் வினவின் பங்கு அதிகம். சமூக தளத்தில் வினவின் பங்கு, நீங்கள் நினைப்பதைக்காட்டிலும் அதிகம். தன் பாதையில் சற்றும் தளராமல் பயணிக்க வாழ்த்துக்கள்.

சில ஆலோசனைகள் :

வினவு-ல் துவக்க காலங்களில் பண்பாட்டுத் தளத்தில் நிறைய கட்டுரைகள் வெளிவந்து, நிறைய வரவேற்பு பெற்றது. தொடர வேண்டும்

மருத்துவர் ருத்ரன் துவங்கிய தொடரை வெற்றிகரமாக தொடர வேண்டும். மருத்துவர் ருத்ரன் போன்ற பல துறை சார்ந்த சமூக அக்கறை கொண்ட பதிவர்கள் தனித்தனியாக எழுதுகிறார்கள். அவர்களையும் எழுத வைக்க வினவு முயற்சிக்க வேண்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம். சமூக மாற்றம் நிச்சயம் வரும்.

வளர்ச்சிப் பணிகளுக்காக, நண்பர்களிடம் நன்கொடை கேட்டு வாங்கித்தர முயல்கிறேன்.

மீண்டும் வாழ்த்துக்களுடன்,

சந்தோச குமாரன். (இந்த பதிவுக்கு மட்டும்)