Wednesday, August 29, 2007

கவித! கவித!

கண்கள் பார்த்து
வழிவது தெரியாமல் பேசி
கவனமாய் இடைவெளி நிர்வகித்து
மனதில் நெருங்கி
அதெல்லாம் - முன்பு
ஒரே ஒரு நோக்கோடு

காமம் காதலோடு வரவேண்டும்
தெளிவடைந்து...
நகர்ந்தால்
பழைய வினைகளின் விளைவுகள்
புதிய உறவுக்கு
உருவமில்லா தடையாய்
முன்வந்து நிற்கின்றன.

நீதி : முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்

Tuesday, August 28, 2007

கனவுகள் - கவிதை!


பயணம் முழுதும் கனவுகள் சேகரித்தேன்
சுமந்து திரிந்தேன் பல காலம்
சுமைகள் அழுத்த கலைக்க ஆரம்பித்தேன்
கனவுகள் முற்றும் கலைந்த நிலையில்
இப்பொழுது

உன் கண்களைச் சந்தித்த நாள் முதலாய்
ஒவ்வொரு சந்திப்பிலும்
கனவுகளை அள்ளித் தருகிறாய் - நானும்
மகிழ்வுடன் சேகரித்து கொள்கிறேன்

தொடங்கிய புள்ளிலேயே - மீண்டும்
தள்ளிவிட்டுவிட்டாய்
நீயில்லை என்னோடு இப்பொழுது
கலைக்க மனதில்லாமல்
சுற்றித்திரிகிறேன்
நீ தந்த கனவுகளோடு.

Thursday, August 23, 2007

'F' Channel -க்கு தடை - சில குறிப்புகள்!


ஒரு 'ஷோ'வில் வலம் வரும்
மாடல்கள் எல்லோரும்
ஒரே உயரத்தில் இருக்கிறார்கள்

மாடல்களின் வரிசையில்
ஒரு கறுப்பினப் பெண் - நிச்சயமாய்
இடம் பெறுகிறாள்

எல்லா மாடல்களுடைய வயதும்
22 வயதுக்குள்
அடங்கிவிடுகிறது - அல்லது
அடக்கிவிடுகிறார்கள்

எல்லா நாடுகளிலும்
'ஷோ'வின் இறுதியில்
பேசன் டிசைனர் குட்டையாக
மாடல்களுடன் கைகோர்த்து
எக்கி எக்கித்தான் உடன்வருகிறார்

'ஆண்களுக்கான புதிய சானல்'
விரைவில்' - அடிக்கடி
அறிவிப்பு செய்கிறார்கள்

மற்றும் சில குறிப்புகள்

மாடல்களின் முகத்தில் - எப்பொழுதும்
இறுக்கம் பரவிக்கிடக்கிறது
அவ்வப்பொழுது
செயற்கையாய் புன்னகைக்கிறார்கள்

விதவிதமாய் குடிப்பது
உரசி உரசி நடனமாடுவது - என
ஹிப்பி கலாச்சாரத்தைத் தான்
பரப்புகிறார்கள்

'ஷோ'க்களுக்கான
விளம்பர பாடல்களில்
முக்கல், முனகல் தான்
விரவிக்கிடக்கிறது

பல 'ஷோ'க்களில் - ஆண்களை
தமிழ்பட கதாநாயகியாய்
ஊறுகாய் போல
தொட்டுக்கொள்கிறார்கள்

எல்லாவற்றையும் விட
என்னைப் போன்ற
வளரும் பிஞ்சுகளின் நெஞ்சில்
'நீலம்' கலக்குகிறார்கள்

'F' சானலை
இடைக்காலத்தில் - இந்தியாவில்
தடை செய்திருந்தார்கள்

என்னைக் கேட்டால்
நிரந்தமாகவே
தடை செய்யலாம்.

Wednesday, August 22, 2007

மெரினா! - கவிதைகண்ணுக்கெட்டிய தூரம் வரை
கரையில்,
கடல் - சாரலாய்
நீரைத் தெளித்துக் கொண்டிருந்தது

மனிதர்கள் கடக்காத பொழுது
நண்டுகள் சந்தோசமாய் - அலைகளோடு
விளையாடிக் கொண்டிருந்தன

பையன்கள் - வழக்கம்போல
தாவிக்குதித்து உற்சாகமாய்
குளித்துக்கொண்டிருந்தார்கள்
பெண்கள்
கால் நனைத்துக் கொண்டிருந்தார்கள்

சுண்டல் விற்கும் பையன்கள்
காதலர்களை - வழக்கம்போல
தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள்
காதலன்கள் - தத்தம் காதலிகளை
தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள்

கடலெனில் குளித்துவிடும்
வழக்கமெனக்கு.
மெரினா மட்டும் விதிவிலக்கு
கால் நனைப்பதோடு சரி

ஈவிரக்கமற்ற சுனாமி
கொலைகளுக்கு பிறகு - மனசில்லாமல்
இப்பொழுதெல்லாம்
கால் நனைப்பதையும்
நிறுத்திவிட்டேன்.

Monday, August 20, 2007

நீயும் (சிலந்தி) வலையும் - கவிதை (மீள் பதிவு)

உன் பிம்பம் விழுந்தே
கணிப்பொறி
திணறும்

ஏதோ கிறுக்குவாய்
புரியாமல் போனாலும்
'ஆகா!கவிஞர் ஜனித்துவிட்டார்'
புகழ்வார்கள்

பலர் கிறுக்குவார்கள்
'புரியவில்லை' என்பாய்
உனக்கு
அறிவு பற்றாது என்பார்கள்

பூமியை புரட்டிவிடுவதாய்
எழுத்தில் மிரட்டுவார்கள்
வழியில் கிடக்கும்
கல்லைக்கூட
நகர்த்தமாட்டார்கள்

நாளடைவில் - நீயும்
பழகிப்போவாய்

காக்கைக்கூட
கவனிக்காது - உலகமே
உன்னை கவனிப்பதாய்
பிரமை கொள்வாய்

மாறி மாறி
சொறிந்து கொள்வதில்
நகங்களில்
ரத்தம் வடியும்

காலங்கள் கரையும்
பறக்க மறந்து போவாய்
உன் சிறகுகள்
துருப்பிடித்திருக்கும்

இறுதியில்
கைத்தட்டல்கள்
உன் மனதில்
எதிரொலித்துக்கொண்டேயிருக்கும்

தனியறையில்
நீ மட்டும்
சிரித்துக்கொண்டே
இருப்பாய்

Wednesday, August 8, 2007

மெல்ல உடைபடும் மெளனம்! - கவிதை

முன்குறிப்பு : காதலை, அதன் பிரிவின் வலியை உருகி, உருகி எழுதும் காயத்ரி அக்கா தான், இந்த 'கவிதை' எழுத ஊக்கம் தந்தவர். ஏன்னா! அவங்க சொல்கிற மாதிரி, எனக்கும் கவிதை எழுத தெரியாது. காயத்ரி அக்கா தன்னடக்கமாக அப்படி சொல்கிறார். அதை, நாம் எல்லொரும் அறிவோம். நான் தன்னடக்கமில்லாமல் (!) உள்ளது உள்ளவாறு, பச்சையாய் உண்மையை சொல்கிறேன்.

ஒரு 'கவிதை' எழுதுவதற்கே, வற்றாத மணற்கேணி மாதிரி, சோகம் பொங்கி என்னை வாட்டி வதைத்து விட்டது. காயத்ரி அக்கா தினம் ஒரு கவிதை எழுதுகிறாரென்றால், அவரின் வலியை என்னால் உணரமுடிகிறது. இனி அவர் எழுதுகிற ஒவ்வொரு கவிதையும் எனக்கும் வலிக்கும். அழுகை வரும்.

கவிதை தொடர்கிறது.

புதிதாய் பூத்த மழலையிடம்
மெளனம் யாரும் விரும்புவதில்லை
கீச்சுஅழுகுரல்தான் சந்தோசம்

புல்லாங்குழலிடம்
மெளனம் யாரும் விரும்புவதில்லை
மனதை மயக்கும் இசை தான் சந்தோசம்

பருத்தி செடியிடம்
மெளனம் யாரும் எதிர்பார்ப்பதில்லை
உடைபடும் சத்தத்தில்தான் - இங்கு
சகலருக்கும் ஆடை

மெல்ல உடைபடுகின்ற - உன்
மெளனத்தில் தான்
நம் வசந்த வாழ்க்கை.

பேச்சு - கவிதை

எளியவனாய் இருந்தால் - பேச்சில்
நெஞ்சில் ஏறி நின்றுவிடுகிறேன்
வலியவனாய் இருந்தால்
சேர்த்து, சேர்த்து விஷமாக்கி
விழிப்பாய் வாய்ப்பு கண்டு
மொத்தமாய் உமிழ்ந்துவிடுகிறேன்

சொல்லுக்கும் செயலுக்கும்
இடைவெளி அழிக்கப்பார்க்கிறேன்
அதென்னவோ
வரவுக்குள் செலவு செய்யும்
மந்திர வித்தையாய்
கைவர மறுக்கிறது

சொற்களற்ற செயலுக்கு
வலிமை அதிகம்

பொய்யும் புகழுமாய்
புறத்தில் பேசி பேசி
சில சமயங்களில்
எனக்குள் நானும் அதேமாதிரி

இப்பொழுதெல்லாம்
புறத்தில்
முடிந்தமட்டிலும்
பேச்சைத் தவிர்க்கிறேன்.

எனக்குள்
முற்றிலுமாய்!

Tuesday, August 7, 2007

நான் போட்டநொந்த ஏழு!முன்குறிப்பு : கவுண்டமணி சொல்கிறமாதிரி, 11 போட சொல்லாமல், என்னால் முடிந்த எட்டு போடச் சொன்னதற்கு, முதலில் லட்சுமி அவர்களுக்கு நன்றி! லிஸ்டில் கடைசி நான். ம்!

எட்டும் எழுதினாலும், போஸ்ட் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. ஜீலை 20 தொடங்கி, இப்பொழுது, ஆகஸ்ட் 7 வரைக்கும் ஆகிவிட்டது. அதனால் எழுதுன வரைக்கும் போதும் என ஏழு மட்டும் போட்டாச்சு! மன்னிச்சுங்க!

7-ல் நாலு சொந்தமானவை. 3 பொதுவானவை. தமிழக அரசியலில் ஒரு தேக்கநிலை இருப்பதால், விரைவில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் உள்ளதால் இப்படி!

நொந்த ஞாபகசக்தி : செய்ய வேண்டிய பல காரியங்களை, மறதியால் வாழ்வில் தொலைத்தது நிறைய. பிறகு, சுதாரித்து, இப்பொழுது தேதிவாரியாக டைரியில் எழுதி வைத்து, செல்லில் நினைவுப்படுத்த கட்டளைகள் கொடுத்து, நினைவுப்படுத்தி எல்லாம் செய்கிறேன்.

அன்றைக்கு ஒருவர் என்காதுபட சொல்றாரு! "நொந்தகுமாரனுக்கு ஞாபகசக்தி அதிகம். எல்லா வேலைகளையும் மறக்காம செய்றாரு!" என்ன கொடுமை சார் இது!

நொந்த கவிஞர் : என் நண்பர்கள் நன்றாக கவிதை எழுதக்கூடியவர்கள். ஆனால், எழுதமாட்டார்கள். அவர்களை வெறுப்பேற்றத்தான், 'கவிதை' எழுத ஆரம்பித்தேன். அதேபோல் தான், வலையுலகத்திலும் கவிதை எழுத ஆரம்பித்தேன்.

அன்றைக்கு, நான் எழுதிய 'கவிதை'யை படித்திவிட்டு, 'நாமக்கல் சிபி' சொல்றாரு! 'கவிதை நல்லாயிருக்கே"ன்னு! இது எப்படியிருக்கு!

நொந்த தாமதம் : குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓர் நிகழ்ச்சிக்கு, ஓரிடத்திற்கு செல்வது என்பது, பட்ஜெட்டுக்குள் குடும்பம் நடத்துவது மாதிரி, மாயாஜால வித்தைதான்! முன்பெல்லாம், எனக்கு 15, 20 நிமிடங்கள் தாமதமாகும். இதற்காக, என்னுடன் கட்டிபுரண்டு சண்டையிட்டு கொண்டியிருக்கிறேன். இந்த தொடர்முயற்சியில், சிறிது வெற்றியும் பெற்று இருக்கிறேன். இப்பொழுது, 5, 10 நிமிடங்கள் தாமதமாகின்றன. நான் பார்த்த பல படங்களில், முதல் பத்து நிமிசம் என்ன நடந்தது என்பது தெரியாது.

இப்பொழுதும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக, வந்துநிற்கும் மனிதர்களை, விசித்திரப் பிறவிகளாகத்தான் பார்க்க முடிகிறது என்னால்.

நொந்த மொய் : வீட்டில் நாலு பத்திரிக்கைகள் வந்தாலே, அம்மா கவலை கொள்வார்கள். ஒரு பத்திரிக்கை ரூ. 200/- என்றால், ரூ. 800/- வேண்டுமே! என புலம்புவார்கள்.

விசேசமென்றால், மகிழ்ச்சி வரவேண்டும். துக்கம் கிளம்புகிறதே! என்ற அடிப்படையில், மொய்-யை நான் விரும்புவதில்லை. செய்வதும் இல்லை.

ஆனால், என் சொந்த பந்தங்களில் விசேச வீடுகளில் என் தலை தென்பட்டதுமே, 'மொய்' எழுத உட்கார வைத்திவிடுவார்கள். சொந்தங்களில் படித்தவர்கள் குறைவு. மற்றவர்களுக்கு உதவுகிற படித்தவர்கள் மிக குறைவு. அதனால், மறுக்க முடிவதில்லை. இன்றைக்கும் மொய் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். "மொய் தப்பு" என புலம்பிக்கொண்டே!

நொந்த பண்பலைகள் : தொலைக்காட்சிகள் கூட வீட்டோடு இருந்துவிடுகின்றன. ஆனால், இந்த பண்பலைகள் காலை தொடங்கி, படுக்கை விரிக்கும் வரைக்கும் நம்மை ஆக்கிரமிக்கின்றன. கேவலமான பல தமிழ் படல்களை மீண்டும் மீண்டும் ஒலிபரப்புகிறார்கள். பள்ளிக்குழந்தைக்கூட கண்டுபிடித்துவிடும், எஸ்.எம்.எஸ். கேள்விகளைக் கேட்டு, நிறைய காசு பார்க்கிறார்கள். கொஞ்சம்கூட சமுக அக்கறையற்ற திரைபிரபலங்கள் பேட்டியளிக்கிறார்கள். பல முக்கிய சமூக செய்திகளை, நொறுக்குத்தீனியாக மாற்றித் தருகிறார்கள். பக்கத்து வீட்டு பெண்ணை, பழைய முதலாளியின் மனைவியை 'கரெக்ட்' செய்தது பற்றியும் பேச வைக்கிறார்கள். இப்படி காற்றில் கலப்பது எல்லாமே நச்சாக, பண்பலைகள் எல்லாம் பாழ்படுத்துகிற அலைகளாகத்தான் இருக்கின்றன.

நொந்த மக்கள் : பஞ்சாயத்து போர்டு, நகர்மன்ற தலைவர்களை நவீனகுண்டு வைத்து தகர்க்கிறார்கள். ஊர் அறிய, உலகம் அறிய பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு, 3 ஊழியர்கள் கொலைசெய்யப்படுகிறார்கள்.

இதற்காக, கொதிந்தெழுந்து, சம்பந்தபட்ட ஆட்களை வீதிக்கு இழுத்து வந்து, உதைக்க வேண்டாமா! கொளுத்த வேண்டாமா! மாறாக, அவர்களுடைய ரவுடி அரசியலை, அவர்களை விட சுவாரசியமாய், பேசிக்கொண்டே இருக்கிறோம். வருங்காலத்தில், இன்னும் பலரை தாராளமாய் கொலை செய்வார்கள்.

நொந்த வலையுலகம் : இப்படி சமூகம் சீரழிந்து கிடக்கும் பொழுது, மெத்தப்படித்த, நன்றாக சம்பாதிக்கிற வலையுலக மக்கள் தங்களுடைய அருமையான நேரத்தை, ஜல்லியிலும், கும்மியிலும், மொக்கைப்பொடுவதிலும் காலம் கழிக்கிறார்கள். உலகளாவிய தமிழ்மணம் போன்ற வலைத்திரட்டிகளை, "குட்டிச்சுவராக" த்தான் பயன்படுத்துகிறார்கள். இது நிறைய கவலை தரும் விசயம்.