Monday, September 29, 2008

மொக்கை, கும்மி என்றால்?


//நான் வலைப்பதிவுகளுக்கு சற்று புதியவன். இந்த மொக்கை கும்மி போன்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று விளக்கினால் உதவியாக இருக்கும். ஈஸ்வரன்//

முன்குறிப்பு : என்னைப் பார்த்து, வலையுலகிற்கு புதியவரான ஈஸ்வரன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கலாம். என்னால் இயன்றவரை பதில் சொல்ல முயன்றிருக்கிறேன். எனக்கு அதில் பெரிய அனுபவம் இல்லை.
மொக்கையில், கும்மியில் மன்னர்கள், மன்னிகள், இளவரசுகள், இளவரசிகள் என ஒரு ராஜ்யமே நடத்துகிறவர்கள் இந்த கேள்விக்கு விடையளிக்க முயலுங்கள்.
ஈஸ்வரன்,
மொக்கை, கும்மி என்றால்...
சும்மா மாதிரி. அதற்கு பல அர்த்தங்கள் உண்டு.
நான் அறிந்த வரை உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறேன்.
உள்ளடக்கமே இல்லாமல் பதிவிடுவது. அதில் விவாதிக்க தகுதியே இல்லாத விசயங்களை, பல பின்னூட்டங்களில் விவாதிப்பது.
பதிவர்கள் தங்களுக்குள்ளே சொறிந்து கொள்வது. பதிவர்கள் தங்களுக்குள்ளே புகழ்ந்து கொள்வது.
அனானியாக வந்து, அவர்களுக்குள்ளே உள்குத்து குத்துவது. பல நேரம் இதற்காக ஒதுக்கி, உள்குத்து குத்துவது யார் என்பதை கண்டுபிடிக்க தீவிரமாய் ஆராய்வது.
படிக்காமாலே, ஏதோ சொல்ல வேண்டுமே என்பதற்காக எதையோ உளறிக்கொட்டுவது.
மொத்தத்தில், வலையுலகத்தை ஒரு கூட்டம் குட்டிச் சுவராக பயன்படுத்துவது மட்டும் இதன் பயன்.
பின்குறிப்பு : மொக்கை, கும்மி போன்றவற்றுக்கு நெகட்டிவாக சொல்லிவிட்டேன். சிலர் பாசிட்டிவாகவும் சொல்லக்கூடும். மற்ற பதிவர்களும் இதுபற்றி கருத்துச் சொல்லலாம்

Saturday, September 27, 2008

மொக்கை, கும்மி பின்னூட்டங்கள் - ஒரு கலகலப்பான விமர்சனம் (!)


சமீபத்தில் காயத்ரி அக்கா ஜெயங்கொண்டம் படத்தைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார். அதன் கதை, கதாபாத்திரங்கள், டெக்னிக்கலான விசயத்தை எல்லாம் அலசியிருந்தார். மொத்தத்தில் மொக்கையான படம் என முடித்திருந்தார். அந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு, "படம் ஒரு மொக்கையென்றால், உங்க விமர்சனம் ஒரு மொக்கை. விமர்சனத்தில் விளையாட்டுத் தனம் இருக்கிறது" என பின்னூட்டமிட்டேன்.


அதற்கு காயத்ரி அக்கா ஏதும் பதில் சொல்லவில்லை. அதற்கு முந்தி எல்லா மொக்கை பின்னூட்டங்களுக்கும் சின்சியராக பதில் சொல்லிக் கொண்டே இருந்தவர், என்னுடைய பின்னூட்டத்திற்கு ஒன்றும் சொல்லவில்லை. இதனால் எனக்கு ஒரு பெரிய வருத்தமில்லை. என் பதிவுகளுக்கு கூட ஒன்று அல்லது இரண்டு பின்னூட்டங்கள் தான் வருகின்றன. மொக்கை பின்னூட்டங்கள் வருவதற்கு பதிலாக வராமலே இருக்கலாம். இம்மாதிரியான பின்னூட்டங்கள் பதிவிட்டருக்கு ஒரு பயனும் விளையபோவதில்லை. பின்னூட்டமிடுகிறவருக்கும் ஒன்றும் நேரப்போவதில்லை. இருவருக்கும் நேரம் தான் விரயம்.

இந்தப் போக்கு வலைப்பதிவில் பொதுவானது தான். விளையாட்டுத்தனமாய் பதிவு போடுவதும், பலரும் ஒன்று சேர்ந்து கும்மியடிப்பதும் இங்கு சகஜம் தான்.

வலைப்பதிவைப் பற்றி சில ஆச்சரியங்கள் எனக்கு எப்பொழுதும் இருக்கின்றன.

* பலருக்கு வலைப்பதிவில் செலவிட இவ்வளவு நேரம் எப்படி கிடைக்கிறது?

* இவர்கள் வாழுகிற சமூகம், பல கோடி மக்கள் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கே அல்லல்படுகிற சமூகம். வலைப்பதிவர்கள் பலரும் இதை எல்லாம் அறிந்த மக்கள் தான். ஒரு அன்றாடம் காய்ச்சிக் தன்னுடைய அன்றாட தேவைகளுக்கு அல்லல்படுவதே அவர்களின் பாடாய் இருக்கிறது.


அல்லல்படுகிற அவர்கள் சமூகத்தின் போக்கு புரிந்துகொள்வதும், அதற்காய் எதிர்வினை ஆற்றுவதும் நடைமுறையில் சிரமமானதாய் இருக்கிறது. ஆனால், இவ்வளவு பிரச்சனைகளுக்கிடையிலும் அவர்கள் போராடுகிறார்கள். ஆனால் சமூகம் பற்றி அறிந்து, இவ்வளவு நேரம் கிடைக்கிற வலையுலக மக்கள் ஏன் இதைப் பற்றி எழுத்தில் கூட எதிர்வினை ஆற்ற ஏன் மறுக்கிறார்கள்? இந்த மனநிலையை என்னவென்பது?

"ரோம் எரிந்து கொண்டிருந்த பொழுது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்" என்கிறார்கள். இவர்களை நீரோ மன்னனின் வாரிசுகள் என அழைக்கலாமா?

இவ்வளவு சொல்லியும் மொக்கையும், கும்மியும் குறையுமா என்ன? நொந்தகுமாரனால் நொந்து கொள்ளத்தான் முடியும். ஆனால், வரலாறு இவர்களை மன்னிக்காது.

பின்குறிப்பு - இனி, ஜெயங்கொண்டான் பட விமர்சனத்தைப் பார்க்கலாம். இந்த படத்தில் முக்கியமாய் விவாதிக்கப்பட வேண்டிய அம்சம் இருக்கிறது - ஒரு சராசரி தமிழ் படத்திற்கானதிரைக்கதை, அதில் சில திருப்பங்கள், தொழில்நுட்பம் என எல்லா தகுதிகளும் இருக்கின்றன. கூடுதலாய் ஆபாசம் இல்லாமல் இருக்கிறது. பெண்கள் கதாபாத்திரங்களை ஊறுகாய் மாதிரி பயன்படுத்திக்கொள்ளாமல், உருப்படியாய் கொஞ்சம் வடிவமைத்து இருக்கிறார்கள்.

இந்த படத்தில் உள்ள முக்கியமாக விமர்சனம் செய்யப்பட வேண்டியது என்னவென்றால்....
ஒரு நடுத்தர வர்க்கம் சார்ந்த ஒரு இளைஞன் தன் வாழ்வின் பாதையில் கவனமாய் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு ரவுடி குறுக்கிடுகிறான். அவனோடு மற்ற கதாநாயகன்மாதிரி நேருக்கு நேர் மோதாமல், வீர வசனம் பேசாமல் புலம்பிக்கொண்டே ஒதுங்கி போகிறார்.


கதையின் போக்கில், கதாநாயகனோடு மோதலில், தன் மனைவியை தானே கொன்று விடுகிற வில்லன், இதற்கு காரணம் கதாநாயகன் தான், அவனை ஒழித்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்கிறார். கதையின் முடிவில், கதாநாயகனும், வில்லனும் கட்டிப்புரண்டு சண்டையிடுகிறார்கள். இறுதியில்... வில்லனை தன் உடல் வலுவில் ஜெயித்து, ஒரு மெஸேஜ் சொல்கிறார்.

"நான் இவ்வளவு நாள் ஒதுங்கி போனதற்கு காரணம், எனக்கென்று கமிட்மென்ட்ஸ் இருக்கின்றன. (சுற்றி இருக்கிற பொதுமக்களையும் கைகாட்டி) எல்லோரும் ஒதுங்கி போகிறார்கள் என்றால், இது தான் காரணம். அதை நீ கோழைத்தனம் என நீ கருதக்கூடாது"
இந்த வசனத்தில் உள்ள கருத்தின் மூலம் தான், நடுத்தர வர்க்கம் தன் காரியவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் மறைத்துக் கொள்கின்றன. இவை எப்படி வெளிப்படுகிறது என்றால்...மற்ற வர்க்கங்கள் வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கும் பொழுது, தன் பிள்ளை அமெரிக்காவிலும், லண்டனிலும் செட்டிலாவதைப் பற்றி மட்டும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் கவலைப்படுகிறது. ஆனால், தனக்கு ஒரு சின்ன பிரச்சனையென்றாலும், உலகமே தட்டிக் கேட்க வேண்டும் என்று குதிக்கும்.

இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். கோபம் கன்னாபின்னாவென்று வருகிறது. பிறகு ஒரு முறை நிதானமாய் எழுத முயற்சிக்கிறேன்.

Sunday, September 14, 2008

மேலே சட்டை, துண்டு! கீழே பேண்ட்டா?

மக்கள் தொலைக்காட்சி செய்திகளை, ஆண் செய்தி வாசிப்பாளர்களை பார்த்திருப்பீர்கள். வெள்ளைச் சட்டையும், தோளில் துண்டுமாக செய்தி வாசிப்பார்கள்.

நேற்று ஒருவர் "அவர்கள் வேட்டி கட்டாமல், கீழே பேண்ட் போட்டிருப்பார்கள்" என உறுதியாய் சொன்னார்.

அதை மேலும், உறுதி செய்யத்தான் இந்த பதிவு. மக்களே இது உண்மையா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பின்குறிப்பு: அப்படியே, கீழே பேண்ட் போட்டிருந்தாலும், அது பெரிய குற்றமில்லை. ஒரு தகவலுக்காக கேட்கிறேன்

Monday, September 8, 2008

1ரூ அரிசி! அர‌சு போடும் பிச்சை!



தமிழகத்தில் ரேசன் கடையில் ஏற்கனவே 2ரூபாய்க்கு அரிசி என அறிவித்த பிற‌கு, இன்றைக்கு வ‌ரைக்கும் தொடர்ச்சியாக அரிசி கடத்தல் என செய்திகள் வந்து கொண்டே இருக்கின்ற‌ன.

இப்பொழுது, அண்ணாவின் நூற்றாண்டை ஒட்டி, கிலோ 1 ரூபாய்க்கு அரிசி என அறிவித்து இருக்கிறார்கள். அண்ணாவின் மிகப்பெரிய கனவுத்திட்டமாம். சந்தோசம்.

தென் தமிழகத்தில் மதுரையில் என் நண்பன் ஒருவன் ஒரு எடை போடும் மிசினில் வேலை பார்த்தார். ரேசன் கடை அரிசி எடை போட லாரி வரும் பொழுது, சோதனை செய்ய ஒரு அதிகாரியும் உடன் வருவாராம். அந்த பகுதியில் ஒரு அரிசி அரவை மில்லைச் சேர்ந்த ஒருவர் ஒரு கவரில் பணத்தை கொண்டு வந்து, தந்து விட்டு போவாராம். எதுக்காக? அரசு தருகிற அரிசி அவருடைய அரவை மில்லுக்கு போகும். அரவை மில்லிலிருந்து வேறு அரிசி ரேசன் கடைக்கு போகுமாம். இந்த‌ திட்ட‌த்தின் ல‌ட்ச‌ண‌ம் இது தான்.

தின‌த்த‌ந்தியில், அடித்தட்டு மக்களிடம் இந்த அரிசித் திட்ட‌த்தைப் ப‌ற்றி க‌ருத்துக‌ள் கேட்கும் பொழுது, க‌டையில் முன்பு 15க்கு விற்ற அரிசி எல்லாம், இப்பொழுது 25க்கு விற்கிற‌து. வாங்கி சாப்பிட‌ முடியவில்லை என்கிறார் ஒருவ‌ர்.

இன்னொருவ‌ர், ஏற்க‌னவே 2ரூ. அரிசியால் இர‌ண்டு வேளை சாப்பிட்டோம். இனி மூன்று வேளை வ‌யிறார‌ சாப்பிடுவோம் என்கிறார் இன்னொரு பொதுஜ‌ன‌ம்.

பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களை சீராட்டி, பாராட்டி வளர்த்து, சிறு தொழில்க‌ளை அழித்த‌தின் மூல‌ம் ப‌ல‌ கோடி ம‌க்க‌ளை பிச்சைகார‌ர்க‌ளாக‌ மாற்றிவிட்ட‌து இந்த‌ அர‌சு.

1ரூ அரிசி என்ப‌து, க‌ருணாநிதி என்னும் ம‌ன்ன‌ன் த‌ன் குடிம‌க்க‌ளின் வ‌றிய‌ நிலை க‌ருதி, போட்ட‌ பிச்சையாக‌ இருக்கிற‌து.

இன்னும் எத்த‌னை கால‌ம் தான் இதையெல்லாம் பொறுப்ப‌து?
*****
இனி வ‌ருவ‌து, முன்பு எழுதிய‌து.
******
தமிழகத்தில் தி.மு.க அரசு கிலோ இரண்டு ரூபாய்க்கு அரிசியும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

இப்பொழுது, ஆந்திராவில் ஆளும் காங்கிரசு கட்சியும் கிலோ 2.50 க்கு அரிசி வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது.

கர்நாடக காங்கிரசு கட்சியும், தமிழகம் போலவே.. தேர்தல் வாக்குறுதியாக, கிலோ 2 ரூபாய்க்கு அரிசியும், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் தருவதாக அறிவித்து இருக்கிறது.

அந்த இரண்டு ரூபாய் அரிசியை கடந்த வாரம் வேலை தேடிக் கொண்டு இருக்கும், ஒரு நண்பரின் அறையில் சாப்பிட்டேன். அப்படி ஒரு கெட்ட வாடை. ' தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டியது தானே' என்றேன். நான்கு முறை கழுவியதாக கூறினான். அதிர்ச்சியாய் இருந்தது.இந்த அரிசியை தான் கேரளாவுக்கு கடத்துவதாக அடிக்கடி பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சில மூட்டைகளோடு ஆந்திராவுக்கு ரயில் ஏற தயாராக நின்றிருந்த ஒரு வயதான அம்மாவை பிடித்து, சோதனை செய்யும் பொழுது, அது நம்ம ரேசன் அரிசி.

இப்படி இந்த அரிசிக்காகத் தான் இத்தனை களேபரம் என்றால், நாடு வளர்ச்சி விகிதத்தில் செல்கிறது என சொல்கிற நம்முடைய பொருளாதார புலிகள் மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் காகிதப்புலிகள் தானா?

சென்னையில், இரவில் குடிப்போதையில் அல்லது கன்ட்ரோல் இல்லாமல் எந்த வண்டியாவது நிலை தடுமாறினால், அன்றைக்கு மூன்று முதல் 5 மக்கள் செத்துப்போகிறார்கள். செய்தி தாள்களில் பார்க்கிறோம். இருக்க வீடு இல்லை.

தமிழக கிராமங்கள் எல்லாம் வெறிச்சோடி கிடக்கின்றன. காரணம் விவசாயம் நொடித்துப் போய், சிலர் வெளிநாடு நகர்ந்து விட்டார்கள். பலர் நகர்ப்புறம் நகர்ந்துவிட்டார்கள். செய்ய வேலை இல்லை.

இப்படி, மக்களுடைய வண்ண மயமான வாழ்க்கையை சோகமயமாய் கருப்பு வெள்ளையாய் மாற்றிவிட்டு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் கொடுப்பவர்களை என்ன சொல்வது? வக்கிரப்புத்திகாரர்கள் எனலாமா?இல்லையெனில்...என்ன சொல்ல வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்!