Monday, April 25, 2011

மனிதர்கள் 3 - சுப்பிரமணி!


முதல் மாடி வீட்டிற்கு குடிபெயர்ந்த பொழுது, எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். தெருக்களில் புழுதிப்பறக்க விளையாடி, களைத்து வீடு வந்து சேர இரவு 8.30 மணிக்கு மேல் ஆகிவிடும். எங்களுடைய பெரிய குடும்பத்திற்கு சமைத்து, சாப்பிடும் பொழுது இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிடும்.

அந்த சமயத்தில், ஒரு இரஞ்சும் குரல்

"அம்மா! தாயே! சோறு போடுங்க தாயே!"
"அம்மா! தாயே! சோறு போடுங்க தாயே!"

என சரியாக இரண்டு முறை காற்றில் கலந்து, ஒரு வித இராகத்தோடு கேட்கும். ஒருமாதிரி மனதை பிசையும். பிறகு, குரல் சன்னமாய் குறைந்து கொண்டே பிறகு காணாமல் போகும்.

அவர் சுப்பிரமணி. இராப்பிச்சைக்காரர்.

அம்மாவிடம் 'யாரம்மா அது? அவருக்கு வீடெல்லாம் கிடையாதா? அம்மா, அப்பா எல்லாம் கிடையாதா? யாரும் சாப்பாடு கொடுக்கலைன்னா அவர் பட்டினியா கிடப்பாரா? என கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டு துளைத்துவிடுவேன்.

சுப்பிரமணி எப்படி இருப்பார்? பல நாள்களுக்கு தெரியவில்லை. அந்த வயதில், இரவில் தனியாக படியிறங்கி பார்க்கும் தைரியம் கிடையாது. பேய் பயம் தான். அதனால், கற்பனையில் நானாக ஒரு உருவத்தை உருவாக்கி கொண்டேன்.ஒரு நாள் பகலில் பார்த்துவிட்டேன். அழுக்கான, கந்தலான உடை. சுருட்டை முடி. வயது 35 ஐ தாண்டாது. என் வயதையொத்த பிள்ளைகள் 'சுப்பிரமணி, சுப்பிரமணி என கேலி செய்து கொண்டிருந்தார்கள். பார்க்க பரிதாபமாய் இருந்தார். இது அவருடைய பெயரா? அல்லது மக்களே வைத்தப்பெயரா? என சந்தேகம் வந்தது.

அதன்பின், ஒவ்வொரு நாளும் "அம்மா! தாயே!" என துவங்கும் பொழுது, சுப்பிரமணியின் பரிதாப தோற்றம் மனதில் வந்து போகும். இரண்டு ஆண்டுகள் கழித்து, வீடு காலி செய்த பிறகும், சில இரவுகளில் இரவு 10 மணி அளவில், சரியாக சாப்பிடும் பொழுது அந்த இரஞ்சும் குரல் மனதில் ஒலிக்கும். சுப்பிரமணிக்கு இன்றைக்கு சாப்பாடு கிடைக்க வேண்டும் என மனதில் வேண்டிக்கொள்வேன்.

இன்றைக்கும் சிக்னலில், தேநீர் கடைகளில், யாராவது குரலெடுத்து பிச்சைக் கேட்டால், கேட்பவரின் முகம் மறைந்து சுப்பிரமணியின் முகமாய் தெரியும். பழைய தெருபக்கம் போனால், அக்கம் பக்கம் வீடுகளில் பழகியவர்களின் முகம் தேடுவதை விட, சுப்பிரமணியைத் தான் கண்கள் தேடுகின்றன.

சக மனிதன் தன் வயிற்றுப் பசிக்கு கையேந்தி நிற்கும் பொழுது, மனித இனத்தின் சுயமரியாதைக்கே இழுக்கு என எப்படி தோன்றாமல் போனது? பசி, தூக்கம் போல பிச்சைகாரர்களும் இயற்கையின் அங்கமாக ஏற்றுக்கொண்டு விட்டோம். யாராவது பிச்சைக்கேட்டால், ஒரு மனிதன் என்ற அளவில், அவமானத்திலும், வெட்கத்திலும் குன்றி போய்விடுகிறேன்.

மனித சமூகம் நாகரிகமடைந்து பல படிகளை கடந்துவிட்டது. இந்தியா இன்னும் பத்தாண்டுகளில் வல்லராக போகிறது என யாராவது பேசினால்; செய்திகளைப் பார்த்தால், சுப்பிரமணி நக்கலாய் சிரிப்பது போல மனதில் தோன்றி மறையும்.

Saturday, April 16, 2011

கோஸ்ட் அன்ட் டார்க்னஸ் - திரைப்பார்வை!


"பொழுது போகலைன்னா பார்" என நண்பன் ஒரு டிவிடி தந்தான். படம் "the ghost and the darkness". 1996ல் வெளிவந்தபடம். கால்மணி நேரம் படம் பார்த்த பிறகு தான் தெரிந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு, "சிங்கம்" என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு பார்த்தப்படம்.

கதை எனப் பார்த்தால்...

தான் ஆக்ரமித்த காலனிய நாடுகளின் வளங்களை கொள்ளையிட்டு அள்ளிவர, உலகம் முழுவதும் தண்டவாளங்களை தாரளமாய் போட்ட இங்கிலாந்து அரசு ஆப்பிரிக்காவிலும் போடுகிறது. தண்டவாள தொடர்பணியில் ஒரு ஆறு குறுக்கிட, பாலம் கட்ட ஒரு வெள்ளை மிலிட்டரி பொறியாளர் (நாயகன்) அனுப்பப்படுகிறார்.

வேலை நடைபெறும் வேளையில், சிங்கம் ஒன்று தொழிலாளர்கள் சிலரை இரவு நேரத்தில் கொல்கிறது. உயிருக்கு பயந்து, தொழிலாளர்கள் வேலை செய்ய பயப்படுகின்றனர். சிங்கத்தை கொல்ல, ஒரு வேட்டைக்காரர் வரவழைக்கப்படுகிறார். சிங்கத்தை தேடும் பொழுது தான் தெரிகிறது. அது ஒன்று அல்ல! இரண்டு சிங்கங்கள் என்று! அதன் பின், இரண்டு சிங்கங்களும் சேர்ந்து, நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை கொன்றுவிடுகின்றன. உயிருக்கு பயந்து எல்லா தொழிலாளர்களும் ஓடிவிடுகிறார்கள். பாலம் கட்டும் பணி தடைபடுகிறது.

பொறியாளர் நாயகனும், வேட்டைகாரரும் இணைந்து சிங்கங்களை கொன்று, மீதி வேலையை தொடர்வது தான் சொச்சகதை.

படம் பார்த்து முடித்த பின்பு, எனக்கென்னவோ, வெள்ளை ஏகாதிபத்தியத்தை தன் நாட்டிற்குள்ளே விடக்கூடாது என வீரமாய் போராடி, உயிர் துறந்த இரண்டு விடுதலை போராளிகளின் கதையாக தான் நான் உணர்ந்தேன்.

***

துவக்கம் முதல், இறுதி வரை தொய்வு இல்லாமல் பயணிக்கும் படம். willow கதாநாயகன் வால் கில்மர் (Val kilmer), Basic instinct கதாநாயகன் மைக்கேல் டக்ளஸ், நம்ம இந்தி ஓம்பூரி என படத்தில் நடித்த அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். அந்த இரண்டு சிங்கங்கள் கூட அட்டகாசமாக நடித்திருக்கின்றன. தரமான ஒளிப்பதிவு. சவுண்ட் எடிட்டிங்-காக படம் ஆஸ்காரை வென்றிருக்கிறது.

வேறு ஏதும் படம் பார்க்க இல்லையென்றால், இந்த படத்தை தாராளமாய் பார்க்கலாம். இரண்டு மணி நேரம் நன்றாக பொழுது போகும்.

Saturday, April 2, 2011

மனிதர்கள் 2 - சந்தானம்


செல்லமாய் 'கருவாயா' என்று தான் அழைப்போம். நல்ல கருப்பு. கற்பனை குதிரையை தட்டிவிட்டு, புதிய புதிய ஜோக் சொல்வான். சத்தமாய், கல கல வென சிரிப்பான். அவன் இருக்குமிடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். சுறுசுறுப்பானவன். எங்கு கிளம்பினாலும், முதல் ஆளாக ரெடியாகி நிற்பான். எவ்வளவு கூட்டமென்றாலும், சாமர்த்தியமாய் டிக்கெட் வாங்கி வந்துவிடுவான். பால்ய சினேகிதன்.

வறுமையால், ஆறாவது படிக்கும் பொழுதே, பாதியில் நிறுத்தி விட்டு, அவனுடைய மாமா ஒருவர் நடத்தும் சிறிய பட்டறையில், எடுபிடி ஆளாக வேலைக்கு போனான். முப்பது வயதை ஒட்டிய அவனுடைய அக்கா ஒருவர் திருமணமாகாமல் இருந்தார்.

கல்வியை தான் அவனிடம் பறிக்க முடிந்தது. எப்பொழுதும் போல், வேலை முடிந்து மாலையில் எங்களுடன் வந்து ஒட்டிக்கொள்வான். வார விடுமுறை நாளில் எங்களோடு சுற்றுவான்.

***

தெருமுனையில் அவனுடைய மாமா ஒருவர் குடியிருந்தார். அவருக்கு பத்தாவது படிக்கிற பெண் இருந்தாள். அந்த பெண்ணையே சுத்தி சுத்தி வருவான். அந்த பெண் கொஞ்சம் குண்டு. அதை சொல்லியே அவனை கலாய்ப்போம். வெட்கப்பட்டு சிரிப்பான்.

ஒருமுறை வீட்டில் எதுவும் எழுதப்படாத கல்யாண பத்திரிக்கை கண்ணில்பட்டது. அவனை மாப்பிள்ளையாக்கி, அத்தைப் பெண்ணை மணப்பெண்ணாக்கி, சுபயோக சுப தினத்தில் திருமணம் நடைபெறும் என, விளையாட்டாக பத்திரிக்கை போல எழுதிக்கொடுத்தேன். அந்த பத்திரிக்கையை கந்தலாகும் வரைக்கும் பல மாதங்கள் பார்த்து, பார்த்து சந்தோசப்பட்டான்.

***

அன்று, வழக்கமாக கூடும் இடத்தில் கூடி பேசிக்கொண்டிருந்தோம். வந்தான். பேசினான். அன்று இரவு "நைட் வேலை" என சொல்லி கிளம்பினான்.

விடிகாலையில் என் அண்ணன் எழுப்பி, சந்தானம் செத்துப்போய்விட்டதாக சொன்னான். அதிர்ச்சியாக இருந்தது.

அந்த மார்ச்சுவரியை சுற்றி, மனிதர்களின் அழும் ஓலம் கேட்டுக்கொண்டிருந்தது. வாழ்வில் முதன்முறையாக, மார்ச்சுவரிக்குள் போய் பார்த்தேன். உள்ளே அறையின் மூலையில், ஆடையே இல்லாமல், தரையில் பரவி, இன்னும் கருத்த உடம்பாய் கிடந்தான். பார்க்க, பார்க்க அழுகை பொங்கி வந்தது. விருட்டென வெளியே வந்துவிட்டேன்.

ஓராண்டிற்கு முன்பு தன் மாமாவிடம் சண்டை போட்டதால், அங்கிருந்து விலகி, இந்த வெல்டிங் பட்டறையில் வந்து சேர்ந்தான். முதல் நாள் இரவு 11 மணி அளவில் ஷாக் அடித்து, ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டானாம். ஒரு டிரைசைக்கிளில் கொண்டு வந்து, மார்ச்சுவரியில் போட்டிருக்கிறார்கள்.

பெரிய பெரிய பட்டறைகளிலேயே வேலை செய்பவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு சாதனமும் தருவதில்லை. சிறு பட்டறைகளில் சுத்தம். தருவதே இல்லை. சொல்லும் பொழுது, 'விபத்து' என்றார்கள். அப்பட்டமான 'கொலை'. இறக்கும் பொழுது அவன் வயது 17.

சக நண்பனின் மரணம் பல காலம் தொல்லை செய்தது. அதன் பிறகு, வந்த யாராலும், அவனின் கலகலப்பான் இடத்தை இட்டு நிரப்பவே முடியவில்லை.

***

ஒருமுறை அவனும், நானும் பேசிக்கொண்டிருந்த பொழுது, விளையாட்டாய், இருவரும் திரும்பி நின்று, அவனை பின்புறமாக முதுகில் தூக்கும் பொழுது, அவனுடைய மொத்த எடையும் தாக்கி, நச்சென்று தரையில் இருந்த கல் மீது மோதி, முகத்தில் நல்ல காயமாகிவிட்டது. ஆறியதும், மாறாத தழும்பாகிவிட்டது. இப்பொழுது நிதானமாய் என் முகம் பார்த்தால், தழும்பாய் 'சந்தானம்' தெரிவான்.

***

இன்றைக்கும் எங்காவது சிறுவயது பையன் எங்கேயாவது வேலை செய்வதை பார்த்தால், 'சந்தானம்' தான் நினைவுக்கு வருகிறான்.

'குழந்தை' தொழிலாளர்கள் இல்லாத நிலை இந்த நாட்டில் உருவாக்கப்படவேண்டும்.

****