Saturday, December 29, 2012

கும்கி - 'அய்யா' ராமதாசுக்கு பிடித்த படம்!



நாவலை படமாக்குவது ஒரு வகை.  ஒரு நான்கு பக்க சிறுகதையை இரண்டரை மணி நேர முழு நீளப்படமாக்கப்பட்டது போல இருந்தது கும்கி.  இயக்குநர்கள் கதை எழுதுவதை தடை செய்யப்படவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இந்த படமும் அதை நீருபிக்கிறது.

****

நிறைய பேர் கதை சொல்லிவிட்டார்கள். இருப்பினும் பார்க்கதவர்களுக்காக சுருக்கமாய்.....

ஒரு காட்டுயானை மலை கிராமங்களில் புகுந்து பயிர்களையும், மனித உயிர்களையும் நாசப்படுத்துகிறது.  அரசாங்கம் இதை சாக்காக வைத்து, வேறிடத்திற்கு நகர்ந்து செல் என நைச்சியமாய் பேசுகிறது. காட்டு யானையை துரத்தி, தங்களை பாதுகாக்க , கும்கியை வரவழைக்கிறார்கள். ஒரு நெருக்கடியில் கும்கி வர தாமதமாக, கோயில் யானையை கொண்டு நாயகன் தற்காலிக ஏற்பாடாய் கிராமத்துக்கு வருகிறார். வருகிற இடத்தில் ஊர் தலைவரின் பெண்ணிடம் காதல் பற்றிக்கொள்கிறது.  காதல் ஜெயித்ததா?  காட்டுயானையை விரட்டினார்களா என்பது சொச்ச கதை!

*****
நாயகன், நாயகி, ஒளிப்பதிவு, பாடல் என எல்லாவற்றையும் பற்றி நிறைய செய்திகளை சொல்லி, விமர்சனம் என பல பதிவர்கள் எழுதுகிறார்கள்.  கதை எதைப்பற்றி விவாதிக்கிறது? என்பதை பலரும் விவாதிப்பதில்லை.  ஏனென்றால் சுவாரசியமாக இருக்கிறதா? இல்லையா? என்று தான் பிரபல வணிகப் பத்திரிக்கைகள் இப்படித்தான் எழுதுகிறார்கள்.

****

ஊருக்குள் நாயகன் வந்ததும், நாயகியை கண்ட நொடி முதலாய் காதலில் கசிந்துருகிறார். அந்த பெண்ணும் காதலிக்கிறாள் என தெரிந்த பிறகு, இறுதியில் ஊர்த்தலைவன் தங்களது 300 ஆண்டுகால பராம்பரியம் பேசியதும் நாயகனும், நாயகியும் காதலில் இருந்து விலக முடிவெடுக்கிறார்கள்.

படம் சொல்வது போல, பராம்பரியம், குலப்பெருமை, ஆதிக்க சாதிப் பெருமை என எல்லோருக்கும் தான் உண்டு. இவற்றுக்கு மதிப்பளித்தால் என்ன நடக்கும்?

‘’உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
நீயும் நானும் ஒரே குலம்
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்
உன் தந்தையும் என் தந்தையும்
உறவினர்கள் - மைத்துனர்மார்கள்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை
நெஞ்சம் தாங்கலந் தனவே..” - கவிஞர் மீரா

- என புகழ்பெற்ற கவிதை போல ஆகும்!

இந்த படம் ராமதாசு போன்ற ஆதிக்க சாதி சங்கங்கள் வைத்திருப்பவர்களுக்கு பிடித்தமான படம்.

சாதிய சமுகம் உடைய வேண்டுமென்றால்  சாதி மறுப்பு திருமணம் செய்வது ஒரு வழி.  சமூகத்தில் இதை புரிந்துகொண்ட முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் தனது சொந்தங்களுடன் போராடி சாதிமறுப்பு திருமணம் செய்கிறார்கள்.  அந்த போராட்டத்தில் பலர் தோற்றுப் போவதும் உண்டு.   சமூகத்தில் முற்போக்கு எத்தனை சதவிகிதமோ அதைவிட குறைவாக தான் சாதிமறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன.  ஆக காதல் தான் பலரையும் சாதியை மறந்து திருமணத்தில் முடித்துவைக்கிறது. இப்பொழுதெல்லாம் சமூகத்தில் காரியவாதம் மிஞ்சி நிற்பதால், காதலிப்பது ஒரு நபரை! சுயசாதி, பெரும்வரதட்சணை பலன்களுக்காக திருமணம் செய்வது வேறு ஒருவரை என்பதாக இருக்கிறது.

என் நண்பரின் நண்பர், தலித் பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என பெற்றோர்களிடம் சொன்னதும், பெற்றொர்கள் (விவசாய குடும்பம்) அவர் காலில் விழுந்து கெஞ்சினார்கள். உடனே அவர் மனது இளகிவிட்டார்.

பெற்றோர்கள் மீதான அன்பையும், மரியாதையும், அவர்களின் சகல பிற்போக்குத்தனத்தையும் ஒன்றாக போட்டு குழப்பிக்கொள்கிறார்கள்.  நாம் பெற்றோர்களை மதிக்கவேண்டும். பிற்போக்குத்தனத்தை வெறுத்து, அதை மீறவேண்டும். அது தான் சரியானது.

****

கும்கிக்கு பதிலாக போகிறேன் என சொல்வது, இதுவரை 50, 60 பேரை காட்டுயானை கொம்பன் கொன்றிருக்கிறது என தெரிந்தும் அங்கேயே இருப்பது எல்லாம் அக்மார்க் ஹீரோத்தனம்.  மற்றபடி முடிவு இயல்பானது.  நாயகன் செய்கிற எல்லா முட்டாள்தனங்களுக்கும் முடிவு இப்படித்தான் அமையும்.

****


Friday, December 21, 2012

'மிஸ்ஸியம்மா'வின் நினைவலைகளில்!

எப்பொழுதும் பழைய படங்களை சில நிமிடங்கள் பார்த்து, அடுத்த சானலுக்கு நகர்ந்து விடுவது வழக்கம்.  அப்படி இந்த படத்தை எளிதாய் கடந்து செல்ல முடியவில்லை. 

****
கதை எனப் பார்த்தால்... ஒரு கிராமத்தில் ஜமீன்தார் திருவிழாவில் சிறுவயதில் காணாமல் போன தன் மகளின் நினைவில் ஒரு துவக்கப்பள்ளி நடத்துகிறார். அந்த பள்ளிக்கு தம்பதி சகிதமாக ஆசிரியர்கள் இருந்தால் முன்னுரிமை என விளம்பரம் தருகிறார்.

நாயகனும், நாயகியும் நகரத்தில் பொருளாதார சிக்கலில் இருக்கிறார்கள்.  ஒரு அதிகாரியின் பெண்ணுக்கு வீட்டு டியூசன் எடுக்க போன இடத்தில் இருவரும் பழக்கமாகிறார்கள். அவரும் வேறு ஊர் மாற்றலாகி போக, கடும் நெருக்கடியில் மாட்டிக்கொள்கிறார்கள். நாயகிக்கோ கடன்காரன் தொல்லை வேறு.  அதனால், நாயகன் மேற்கண்ட விளம்பரம் பார்த்து, இருவரும் தம்பதியாக சிறிது காலத்திற்கு நடிக்கலாம், பிறகு பிரிந்துவிடலாம் என ஏற்க வைக்கிறார்.  இதில் நாயகன் (ஜெமினி) இந்து.  நாயகி (சாவித்திரி) கிறிஸ்து.

இருவரும் ஜமீந்தார் பள்ளியில் பணியில் சேர்கிறார்கள்.  நாயகனுக்கும், நாயகிக்கும் ஏற்படுகிற காதலும், ஊடலும், நகைச்சுவையும் கலந்து கலகலப்பான கதை நகருகிறது. இறுதியில் ஜமீந்தாரின் காணாமல் போன பெண் தான் நாயகி என கண்டுப்பிடிக்கிறார்கள். இறுதியில் சுபம்.

****
1955ல் வந்த படம் என்றாலும் படத்தில் அந்த கால படங்களுக்கான மெதுவாய் நகரும் தன்மை இல்லை.  படம் முழுவதும் கிண்டலும், நகைச்சுவையும் நிரம்பி ததும்புகிற பாடம்.  ஜெமினி, சாவித்திரி இருவருக்கும் உள்ள காதலும், ஊடலும் சுவாரசியம். இந்த படத்தை சென்னையில் பார்த்த ஒரு கர்ப்பிணிப் பெண், சிரித்து, சிரித்தே திரையரங்கில் குழந்தையை பெற்று இருக்கிறார்.

படத்தில் ஜமீந்தாரின் இளைய மகளுக்கு நாயகன் பாட்டுச் சொல்லித்தர, நாயகி பொறாமையில் ஜமீந்தாரின் மருமகனான தங்கவேலுக்கு பாட்டுச் சொல்லித்தர, அவரும் கீச்சு குரலில் இழுத்து இழுத்துப் பாடுவது செம கலகலப்பு.  இன்றைக்கு உள்ள பெரும்பாலான படங்களில் உள்ள நகைச்சுவை சக மனிதர்களை இழிவுப்படுத்துபவை. படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

'பிருந்தாவனும் நந்தகுமாரனும்', 'வாராயோ வெண்ணிலாவே"  அனைத்து பாடல்களும் கேட்க இனிமையானவை.  மனோகரா, இருவர் உள்ளம் படத்தை இயக்கிய எல்.வி. பிரசாத் தான் இந்த படத்தையும் இயக்கினார். கதை - சக்ரபாணி.

படத்தில் நாயகியின் பாத்திரம் வலுவாக இருந்தற்கு ஒரு பின்னணி இருக்கிறது.  இந்த படத்தின் நாயகியாக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பானுமதி.   அவரை வைத்து ஒரு முதல் கட்ட படப்பிடிப்பையே முடித்துவிட்டார்களாம்.   இந்த சமயத்தில் நாயகன் இந்து, நாயகி கிறிஸ்து எப்படி தம்பதியாக நடிக்கலாம் என பானுமதி கேள்வி எழுப்ப, கதைஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் முடிவெடுத்து பானுமதியை தூக்கிவிட்டார்களாம். இரண்டாவது கதாநாயகியாய் நடித்து வந்த சாவித்திரியை நாயகியாக நடிக்க வைத்துவிட்டார்களாம். விவாதித்த விசயம் ஒரு பக்கம் இருந்தாலும், கதையில் தன் கதாபாத்திரத்திற்காக சண்டையிட அப்பொழுதே பானுமதியால் முடிந்திருக்கிறது என்பது சந்தோஷமான விசயம் தான்.

தமிழில் வெற்றி பெற்று, தெலுங்கில் என்.டி.ராமராவ், சாவித்திரி நடித்து வெற்றிப்பெற்று, இந்தியில் ஏவி.எம். தயாரித்து,  பிரசாத்தே இயக்கி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றியிருக்கிறது.

மிஸ்ஸியம்மாவின் நினைவலைகள் இந்திய சினிமாவில் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.  இந்த படத்தைப் பார்த்த பிறகு என் தோழி ஒருத்தியை 'மிஸ்ஸியம்மா' என்று தான் அழைக்கிறேன்.  2003ல் மீண்டும் இதே பெயரில் தெலுங்கில் பூமிகா நடித்து ஒரு படம் வெளிவந்தது. தமிழிலும் இதே பெயரில் படம் எடுக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. தேடிப்பார்த்தால், அவ்வப்பொழுது மிஸ்ஸியம்மா நினைவில் யாராவது பதிவு எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னும் தொடர்வார்கள்.

***

Monday, December 17, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்!

நெடுநாட்களுக்கு பிறகு சிரித்து சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது. குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம். பாருங்கள்.

****

நாயகனுக்கு அடுத்த நாள் வரவேற்பு. அதற்கு அடுத்த நாள் திருமணம்.  நாயகனும், நாயகியும் காதலித்து, போராடி, இரு குடும்பத்தாரின் சம்மதம் வாங்கியிருக்கிறார்கள்.  முதல் நாள் நண்பர்கள் மூவருடன் நாயகன் கிரிக்கெட் விளையாட போகிறார். பந்தை பிடிக்க முயலும் பொழுது, கீழே தவறி விழுகிறார். இதனால் ஒராண்டு நினைவுகள் மறந்துவிடுகின்றன.  இதில் முக்கியமான விசயம் காதலித்த விசயத்தையே மறந்துவிடுகிறார். சமீபத்தில் நடந்ததை மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

தங்களால் தான் இப்படி நடந்துவிட்டது என குற்ற உணர்ச்சியுடன்,   குடும்பத்தினர் யாரிடமும் சொல்லாமல், 48 மணி நேரத்தில் திருமண வரவேற்பையும், திருமணத்தையும் பல போராட்டங்களுக்கு பிறகு நடத்தி முடிக்கிறார்கள். இறுதியில் தொலைந்து போன நினைவுகள் திரும்பி வந்தனவா என்பது இறுதிக்காட்சி.

****

படத்தின் துவக்கத்தில் நாயகனின் புலம்பல் மனநிலையை பல நண்பர்கள் வாயிலாக உணர்ந்திருக்கிறேன்.  ஏற்பாடு திருமணம் என்றால், சடங்குகள், சீர்வரிசை என எல்லாவற்றையும் இரண்டு குடும்பங்களோ, தரகரோ பேசிக்கொள்வார்கள்.  மணமக்களுக்கு இருக்கும் ஒரே வேலை இருவரும் பல மணிநேரம் போனில் பேசிக்கொள்வது தான்! 

படத்தின் ஒளிப்பதிவாளருக்கு நேர்ந்த உண்மை கதையை எடுத்திருப்பதால் சினிமாத்தனங்கள் எதுவும் இல்லை. அனைத்துக் காட்சிகளும் இயல்பாக இருக்கிறது.  உண்மைக்கதைகளை படமாக்கினால் கிடைக்கும் பலன் இது!

****

பச்சி (பச்சியப்பன்) எம்.ஆர். ஐ ஸ்கேனில் என்ன தெரியும் என்ற கேள்விக்கு பக்ஸ் (பகவதி) விளக்கி சொல்லும் இடம், காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ், பாலைய்யாவிற்கு திகில் கதை சொல்லும் இடத்திற்கு இணையானது.

****

'காதல், காதலியின் முகம் அடி ஆழத்தில் பதியக்கூடியது. மறக்கவே மறக்காது' என லெக்சர் கொடுக்கிற பக்ஸ், நாயகன் (மேக்கப் அள்ளிப்போட்டு மணப்பெண்ணாய்) நிற்கும் நாயகியை பார்த்ததும் "யப்பா! யாராட இந்த பொண்ணு?  பேய் மாதிரி இருக்கு!" என சொல்வது நகைச்சுவை.  'லைலாவின் அழகை ரசிக்க வேண்டுமென்றால், மஜ்னுவின் கண்கள் வழியே பார்க்கவேண்டும்' என்றா வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

****
நாயகனை "நான் சொன்னா கேட்பியா மாட்டியா!" என சரஸ் கேட்பதும், அதற்கு நாயகன் "நீ சொன்னா மாடியிலிருந்து கூட குதிப்பேன்டா" என பதில் சொல்வதும், இந்த ஒரு வார்த்தையை பலமுறை சொல்லி சமாளிப்பதும், பச்சி "அதென்ன நான் சொன்னா கேட்க மாட்டேங்குறான்! நீ சொன்னா கேட்குறான். நீ அவன் உயிரை காப்பாத்திற மாதிரி ஏதோ செய்திருக்கே!  அது என்னான்னு சொல்! என சொன்னதும் "நான் 10 வகுப்பு படிக்கும் பொழுது அவனுக்கு படம் வரைஞ்சு கொடுத்தேன்!" என சொன்னதும், "என்னைய பார்த்தா கேன மாதிரி இருக்கா! அல்லது இவரைப் (பக்ஸ்) பார்த்தா கிறுக்கு மாதிரி இருக்கா" என சொல்வது செம கலகலப்பு.  இறுதியில் நினைவுகள் திரும்பிய பிறகு, சரஸ் ஒரு புன்சிரிப்புடன் "நான் சொன்னா கேட்பியா! மாட்டியா?" என கேட்கும் பொழுது, முன்பு போலவே "நீ சொன்னா மாடியிலிருந்து கூட குதிப்பேன்டா" என சொல்லும் பொழுது, கண் கலங்குவார்கள்.நாமும் கண்கலங்குகிறோம்.

****
படத்தில் நடித்த அனைவருமே இயல்பாக அருமையாக படத்தோடு பொருந்தியிருக்கிறார்கள்.இந்த ஆண்டில் பல பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம், அதல பாதாளத்திற்கு விழ, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ஓடுவது ஆரோக்கியமான விசயம். இப்பொழுதே பல திரையரங்களில் தூக்கிவிட்டார்கள்.   பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

****

Saturday, December 15, 2012

22 பெண் கோட்டயம் - மலையாளம்

சில நாட்களுக்கு முன்பு இந்த (22 Female Kottayam) படத்தைப் பற்றி பதிவர் இருவர் எழுதி இருந்தார்கள்.  அப்பொழுதே பார்க்கவேண்டும் என நினைத்தேன்.  சில வருடங்களாக வர்த்தக ரீதியான தமிழ் படங்களின் தாக்குதலால் மலையாளத்தில் தரமான படங்கள் வருவது குறைந்திருந்தது.  இந்த படம் பார்க்ககூடிய படம்.

****

கதை எனப் பார்த்தால்... (வெளிவந்து பல மாதங்கள் ஆனதால், கதையை சொல்லலாம் தப்பில்லை!)

பழிவாங்கும் கதை தான்.  26 வயது கொண்ட கேரளாவை சேர்ந்த நாயகி பெங்களூருவில் ஒரு பிரபல மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறாள்.  அம்மா, அப்பா இல்லை.  தங்கை கொச்சியில் படிக்கிறாள்.

நாயகிக்கு கனடாவில் பணி செய்ய விருப்பம்.  விசாவிற்காக ஒரு ஏஜென்ஸிடம் தொடர்பு கொள்கிறாள். அங்கு வேலை செய்யும் நாயகன் பழக்கமாகிறான்.  பிறகு காதலாக மாறுகிறது.  சேர்ந்து வாழலாம் என வாழ்கிறார்கள்.

இதற்கிடையில் பப்பில் ஒரு பெரிய மனிதனின் மகனிடம் தகராறு ஏற்படுகிறது.  பிரச்சனை எழ, முதலாளி வீட்டில் தலைமறைவாய் இருக்கிறான்.  நாயகிக்கு ஆறுதல் சொல்ல வந்த முதலாளி பாலியல் பலாத்காரம் செய்கிறார்ன்

மீண்டும் உடல் நலம் தேறி வரும் வேளையில், மீண்டும் நாயகன் இல்லாத பொழுது, மீண்டும் முதலாளி பலாத்காரன் செய்கிறான்.  'இனி கனடாவில் வேலை செய்ய போவதில்லை.  அவனை விடப்போவதில்லை!' என்கிறாள்.

மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் நாயகனும் முதலாளியும் திட்டமிட்டே செய்கிறார்கள்.  அவளை போதைப் பொருள் கடத்தியதாய், போலீசில் மாட்டிவிட்டு சிறையில் தள்ளுகிறார்கள். குமுறி குமுறி அழுகிறாள்.

சிறை புதிய சூழல். வித்தியாசமான மனிதர்கள். அவர்களின் பழக்கம், அவளை தைரியம் பெற்ற புதிய ஆளாக, ஜாமீனில் வெளிவருகிறாள்.

சிறையில் பழக்கமான உதவ முதலாளியை பாம்பை கடிக்க வைத்து கொல்கிறாள்.  நாயகனை சந்தித்து மயக்கத்தில் ஆழ்த்தி ஆணுறுப்பை நீக்கிவிடுகிறாள். அவன் செய்த தவறு வாழ்நாளுக்கும் மறக்ககூடாது என்பதற்காக, அருகில் இருந்து கவனித்து உயிரை காப்பாற்றிவிடுகிறாள்.

நாயகி வெளிநாடு செல்ல முடிவெடுப்பதோடு படம் முடிவடைகிறது.

****

அழுது, அழுது நெக்குறுகி சிறைக்கு செல்லும் நாயகி சிறை மனுசிகளின் கதையும், பழக்கமும், வாழ்க்கையும் மனதை திடப்படுத்துகிறது. முதலில் அழுகை நின்றுவிடுகிறது. நாயகனும், முதலாளியும் தன்னை மட்டுமல்ல, இன்னும் பலரையும் சீரழிக்கிறார்கள் என அறிகிறாள்.  பழிவாங்கும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெறுகிறது.   ஒரு மனிதனின் சிந்தனையில் புறநிலை எவ்வளவு தாக்கம் செலுத்தும் என்பதை இயல்பாக சொல்கிறார்கள்.  தமிழ்படங்களில் பலகாலம் படுகோழையாய் இருக்கும் ஒருவன் தன் உறவில் ஒன்று கொல்லப்படும் பொழுது உடனே வீறுகொண்டு எழும் பொழுது, அபத்தமாக இருக்கும்.

படத்தில் இறுதியில் நாயகனை பார்த்து, "உண்மையான காதலை விரும்பினால், என்னை வந்து சேர். ஏற்றுக்கொள்கிறேன்!" என்பதாக பேசுகிறாள்.அவன் பெண்களை ஏமாற்றுவதையே தொழிலாக கொண்டவன். அவனிடம்  இப்படி பேசுவது அபத்தமாக இருக்க்கிறது. 

மற்றபடி 'ஏக் ஹசீனா தி'  மற்றும் இரண்டு படங்களை எழுத்து போடும் பொழுது, நினைவுகூறுகிறார்கள். தமிழ்ப்பட இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பண்பு இது! பெருநகர கலாச்சார பின்னணியில் சொல்லப்பட்ட படம். அனைத்து நடிகர்களின் அளவான நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என படத்திற்கு அழகு சேர்க்கிறது.  நல்ல தரமான ப்ரிண்டில் ரூ. 30க்கு சந்தையில் கிடைக்கிறது. பாருங்கள்.

நாயகி ரிமா நம்மூர் பிரியாமணியை நினைவுப்படுத்துகிறார்..  நாயகன் 'காதலுக்கு மரியாதை' இயக்குநர் பாசிலின் மகனாம். எங்கும் திரையுலகை வாரிசுகள் ஆக்ரமிக்கிறார்கள். ஏப்ரல் 2012ல் வெளிவந்தபடம்.

****

Tuesday, December 11, 2012

மாபெரும் தப்பித்தல்! அத்தியாயம் 2 ( Great Escape )

 மாபெரும் தப்பித்தல்! அத்தியாயம் 1

முன்குறிப்பு:  முதல் அத்தியாயத்தை படித்துவிட்டு, மேற்கொண்டு படிக்கவும்.  பதிவு கொஞ்சம் நீளமாக இருந்ததால், இரண்டாக தந்துள்ளேன். நன்றி.

****

ஒவ்வொருவரும் ஒரு பணியை மேற்கொண்டனர்.  தையற்காரர்கள் கொல்லர்கள், திருடர்கள், போலி ஆவணங்களைத் தயாரிப்பவர்கள் என்று பலரும் கமுக்கமாக மாதக்கணக்கில் பாடுபட்டனர்.  காவற்பணியில் ஈடுபட்டிருந்த ஜெர்மானிய வீரர்களின் கண்ணில் மண்ணைத்தூவும் விதமாக அவர்களின் கவனத்தை திருப்பவதிலும் ஏமாற்று கலையிலும் தனித்திறமை படைத்த வீரர்களின் குழுக்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் பணியில் இருந்த ஜெர்மானியரைச் சமாளிப்பதுதான் பெரிய சவாலாக இருந்தது.  தப்பியோடுபவரைக் கண்டுபிடிப்பதில் தனித்திறமை பெற்ற காவலர்கள் பலரை ஜெர்மானியர்கள் அமர்த்தியிருந்தனர்.  அவர்களைச் கைதிகள் மோப்ப நாய்கள் என்றழைத்தனர்.  சுற்றுச் சுவற்றினை அணுகக்கூடிய ஒவ்வொரு காவலாளியின் ஒவ்வொரு அசைவினையும் உன்னிப்பாக கண்காணிக்கக்கூடிய பாதுகாப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக்குழுவினர் சமிக்கைகள் மூலம் தங்கள் குழுவிலுள்ள மற்ற கைதிகளுக்கும் எச்சரிக்கை விடுப்பர்.

1944ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று, ஓராண்டுக் க்டும் உழைப்பிற்குப் பின்னர், சுரங்கப்பாதை வழியாக ஊர்ந்து சென்று சிறை முகாமுக்கு வெளியே காட்டுப்பகுதிக்குள் தப்பியோட 220 கைதிகள் ஆயுத்தமாயினர்.  அனைவரும் தப்பிச் செல்லும் வரை நிமிடத்திற்கு ஒருவராக அனுப்பத் திட்டமிட்டிருந்தனர். ஜெர்மன் மொழி பேசத் திரிந்த கைதிகளெல்லாம் புகைவண்டியில் ஏறி அயல்நாட்டு வேலையாட்கள் போல நடித்துக்கொள்ள வேண்டும்.  ஏனையோரெல்லாம் ஜெர்மானிய ரோந்துப்படையினரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகப் பகலில் தலைமறைவாக இருந்து இரவில் பயணம் மேற்கொள்ளவேண்டும்.

சுரங்கப்பாதை வழியாக ஊர்ந்து சென்ற முதல் கைதி, தான் வெளியேறிய இடம் காட்டுப்பகுதிக்குச் சற்று முன்பாகவே இருப்பதைக் கண்டான்.  ஒரு நிமிடத்திற்கு ஒருவரை வெளியேற்றுவதற்குப் பதிலாக ஒரு மணி நேரத்தில் பன்னிரெண்டு பேரை மட்டுமே வெளியேற்ற முடிந்தது.  சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்படுவதற்குள் மொத்தத்தில் 86 பேர் தப்பித்துச் சென்றுவிட்டனர்.  நாஜிகள் கலவரமடைந்தனர்.  நாடு முழுவதும் கண்காணிப்புப் பணி முடுக்கிவிடப்பட்டது.  83 பேர் பிடிப்பட்டனர்.  அவர்களில் 41 பேர் ஹிட்லரின் ஆணைப்படி கொல்லப்பட்டனர்.  மூவர் மட்டுமே பிடிபடாமல் தப்பினர்.

இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 1963ல் வெளியான 'தி கிரேட் எஸ்கேப்' என்ற திரைப்படத்தினை இயக்கிய ஜான் ஸடர்ஜெஸ்,  கைதிகளுடைய பெரும் முயற்சியைப் பற்றி இப்படி குறிப்பிட்டுள்ளார்.  "இதற்கு 600க்கும் மேற்பட்ட கைதிகளுடைய ஒன்றுகுவிக்கப்பட்ட ஈடுபாட்டுணர்வும் விழிப்புணர்வும் தேவைப்பட்டது.  அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடம் உம், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும், ஓராண்டுக்கும் மேற்பட்ட காலம் அயராது உழைத்தனர்.  ஒருபோதும் மனித உழைப்புத்திறன் நம்பவியலாத வகையில் இந்த அளவிற்கு நீடிக்கப்பட்டதும் இல்லை.  இத்தகைய உறுதிப்பாட்டுணர்வும் நெஞ்சுரமும் வெளிப்படுத்தப்பட்டதும் இல்லை".

*****

ஜான். சி. மேக்ஸ்வெல் எழுதிய "குழுவில் சிறப்பாக செயல்பட 17 முக்கிய பண்புகள் - புத்தகத்திலிருந்து...."

படத்திற்கான சுட்டி :

The Great Escape Film

Friday, November 30, 2012

மாபெரும் தப்பித்தல்! (The great Escape)

அதனை "மாபெரும் தப்பித்தல்' என அழைத்தார்கள்.  அதற்கு முன்னர் எப்பொழுதும் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததில்லை என்பதால் அது ஒரு மாபெரும் செயல் ஆகிவிடவில்லை.  அதற்கு முன்னரும் போர்க்கைதிகள் தப்பியோடியிருக்கிறார்கள்.  ஏற்பட்ட விளைவுகள் காரணமாகவும் அதை மாபெரும் நிகழ்வு என்று அது அழைக்கப்பட்டதற்கு காரணம், அதன் பிரமாண்ட கூட்டுழைப்பு தான்.

பெர்லினுக்குத் தென்கிழக்கே நூறு மைல் தொலைவில் ஸ்டாலக் லுப்ட் என்ற நாஜி போர்க்கைதிகள் முகாம் இருந்தது.  மிகவும் பெரியதாக இருந்த அந்த முகாமில் ஒரு சமயம் நேச நாடுகளிலிருந்து பிடிக்கப்பட்டப் பத்தாயிரம் போர்க்கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர்.  1944ம் ஆண்டு தப்பியோடிவிடுவதென்று உறுதிபூண்ட, திட மனது கொண்ட கைதிகளின் குழு ஒன்று அம்முகாமில் இருந்தது.  உண்மையாகவே ஒரே இரவில் 250க்கும் குறையாத கைதிகள் தப்பிச் செல்ல வழி வகுப்பதென்பதே அவர்களுடைய நோக்கம்.  அப்படிப்பட்டதொரு முயற்சிக்கு, கைதிகளிடையே உச்சபட்ச கூட்டுறவு தேவை. மெய்சிலிர்க்க செய்யும் அத்தகைய தப்பியோட்டம் அதற்கு முன்னர் ஒருபோதும் முயற்சிக்கப்பட்டதில்லை.

ஜெர்மானியச் சிறை முகாமிலிருந்து கைதிகளைத் தப்பியோட செய்வதென்பது பெரிதும் சிக்கலான முயற்சி.  தப்பியோட வழி வகுப்பதற்கான சுரங்கப் பாதையைத் தோண்டி மறைத்து வைக்க வேண்டிய மாபெரும் சவால் எதிர்நின்றது.  கைதிகள் ஒன்றிணைந்து சுரங்கப் பாதையின் போக்கினை வகுத்தனர்.  அதனைத் தோண்ட துவங்கினர்.  கைதிகளுடைய படுக்கைகளிலிருந்த மரப்பலகைகளைக் கரைகள் அமைக்க பயன்படுத்தினர்.  வியக்கத்தக்க விதத்தில், தோண்டப்பட்ட மண்ணை அவர்கள் வெளியேற்றினர். தாமே தயாரித்த ஊது உலைகளைக் கொண்டு குறுகலான பாதைகளில் மின் கம்பிகளைக் கொண்டு மின்விளக்குகள் அமைத்தனர். 

பணியினைச் செய்து முடிக்க அவர்களுக்கு தேவைப்பட்ட பொருட்களின் பட்டியல் நம்ப முடியாததாக இருந்தது.  4000 படுக்கைப் பலகைகள், 1370 மரக்கட்டைகள், 1699 போர்வைகள், 52 நீண்ட மேஜைகள், 1219 கத்திகள், 30 மண்வெட்டிகள், 600 அடி நீள இரும்பு கயிறு, 1000 அடி நீள மின்கம்பி என இன்னும் பலப்பல சுரங்கப் பாதையை உருவாக்குவதற்கான பொருட்களைத் தேடித் திருடிக்கொண்டு வருவதற்கென்றே ஒரு கைதிகள் படை வேண்டியிருந்தது.

சுரங்கப் பாதையை உருவாக்குவதென்பது எவ்வளவு கடினமானதாக இருந்தபோதிலும் தப்பியோட வழிவகுப்பது ஒட்டு மொத்த திட்டத்தில் ஒரு பகுதி மட்டுமே.  தப்பியோடும் ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட பொருட்களும் உபகரணங்களும் தேவைப்பட்டன.   சாதாரண குடிமக்கள் அணியும் ஆடைகள், ஜெர்மானிய குடிமக்களுக்கான ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டைகள், புவி வரைபடங்கள், திசைகாட்டும் கருவிகள், அவசரத் தேவைக்கான பண்டங்கள் மற்றும் இதரப் பொருட்கள், குழுவிற்குத் தேவையான எந்தவொரு பொருளையும் தேடித் திருடி கொண்டு வரும் பணியில் பல கைதிகள் இடையறாது ஈடுப்பட்டனர்.  வேறு சிலர் காவலர்களுக்குக் கையூட்டுக் கொடுத்தும் அச்சுறுத்தியும் காரியங்களை சாதிக்க மிக நேர்த்தியாகவும் அயர்வின்றியும் பாடுபட்டனர்.

... தொடரும்!

படத்திற்கான சுட்டி :

The Great Escape Film
 

Sunday, November 4, 2012

உப்புமா!

சமையல் குறிப்புகள் எழுதி வெகுநாட்களாயிற்று.  21ம் நூற்றாண்டிலும் பெண்கள் சமையல் குறிப்புகள் எழுதினால், அது ரெம்ப பழைய விசயம். சுவாரசியமில்லாத ஒன்று.( : (  ஆண்கள் சமையல் குறிப்புகள் எழுதுவது தான் இதில் புதுசு! :) இந்த வரலாற்று பின்புலத்தில் இந்த பதிவு மிக முக்கியமானது.

எழுதும் பொழுது பக்தர்கள் பிள்ளையார் சுழி போடுவார்களே! அது போல நாம் உப்புமாலிருந்து ஆரம்பிக்கலாம்.  சமையலில் எளிதாகவும், விரைவாகவும் செய்ய முடிவது உப்புமா என்கிறார்கள் சமையல் வல்லுநர்கள்.  ஆனால், புதிதாக செய்பவர்களுக்கு உப்புமா கூட கொஞ்சம் சிரமம் தான். :)

****

தேவையான பொருட்கள் : பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, ரவை மற்றும் கொஞ்சம் ரசனை, கொஞ்சம் பொறுமை.


ஒரு ஆளுக்கான அளவை குறிப்பிடுகிறேன். அதை நபர்களுக்கு தகுந்தவாறு நீங்கள் அதிகப்படுத்தி கொள்ளலாம்.

ஒரு பெரிய வெங்காயத்தில் பாதியை வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பச்சை மிளகாய் அல்லது ஒரு காய்ஞ்ச மிளகாய்.  ப.மி. என்றால் இரண்டாக கீறி வைத்துக்கொள்ளுங்கள்.

3/4 டம்ளர் ரவையை எடுத்து ஒரு சட்டியில் அதன் நிறம் கொஞ்சம் பொன்னிறமாகி மாறும் வரை வறுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்பொழுது ஆக்சன்.  ஒரு வடை சட்டியை ஈரம் இல்லாமல் துடைத்துகொண்டு, அடுப்பில் வையுங்கள். சட்டி சூடானதும், தேவையான எண்ணெயை ஊற்றி, சூடானதும், கடுகை போடவேண்டும்.  கோபமாய் இருப்பவர்கள் வெடிப்பார்கள் அல்லவா! அது போல கடுகு வெடிக்கும். அதனோடு கருவேப்பிலையை போடுங்கள்.

பிறகு தயாராய் வெட்டி வைத்திருக்கிற வெங்காயம், மிளகாயை போட்டு வெங்காயத்தின் நிறம் கொஞ்சம் மாறும் வரை (பச்சை வாடை போகும் வரை) வதக்குங்கள்.

1 1/2 டம்ளர் தண்ணீரை ஊற்றவேண்டும்.  தேவையான அளவு உப்பு போட்டுகொள்ளுங்கள்.  தண்ணீர் கொதிக்கும் பொழுது, வறுத்து வைத்திருக்கிற ரவையை அதில் போட்டு, கிண்டுங்கள்.

தண்ணீர் வற்றியதும், அடுப்பை அணையுங்கள்.  சூடான, சுவையான ரவை உப்புமா தயார்.

தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி அல்லது சர்க்கரை நன்றாக இருக்கும்.

****
உப்புமா செய்முறையில் ஒரு சந்தேகம்.  இறுதியில் ரவையை போட்டு கிண்டும் பொழுது, கொஞ்சம் ரவை வேகும் அளவுக்கு அதில் கொஞ்சம் தண்ணீர் இருக்கவேண்டுமா? அப்பொழுது சுவையாக இருக்குமா?  அறிந்தவர்கள் பகிருங்கள்.


****
எனக்கு சுடுதண்ணீர் வைக்ககூட தெரியாது. சமைக்க தெரியாது. ஆனால், ருசியாக தான் சாப்பிடுவேன், பல குறைகளை பட்டியலிடுவேன் என்பது ஒரு நகை முரண்.  சமையல் அறையில் யாரையோ வதக்கி தான், ஒவ்வொரு வேளையும் ருசியாக சாப்பிடுகிறோம் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

****

Saturday, October 27, 2012

வலிப்பும், விபத்தும்!

அந்த தெருமுனையை கடக்கும் பொழுது, அந்த நிகழ்வை பார்த்தேன். 45 வயதுக்காரர் ஒருவர் வண்டியில் இருந்து கீழே சரிந்து, வலிப்பால் கடுமையாக துடிதுடித்துக்கொண்டிருந்தார்.

உடனே அருகிலுள்ள இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர்.  சரிந்தததில் தலையில் முடி குறைவாக இருந்ததினால், கல்லில் அடிப்பட்டு பின்மண்டையில் காயமாகி, ரத்தம் வந்துகொண்டிருந்தது.

108க்கு போன் செய்ய சொன்னார்கள்.  அடித்தேன்.  இடம் கேட்டார்கள். சொன்னேன். வந்துகொண்டிருப்பதாக சொன்னார்கள். இதற்கிடையில் வலிப்பு முடிந்து, சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.  அவருக்கு தெரிந்த நபர்களை வரச்சொல்லலாம் என போன் நம்பர் சொல்ல சொன்னால், அவரால் நினைவுப்படுத்தி சொல்லமுடியவில்லை. அவருடைய செல்பேசியை எடுத்து தெரிந்தவர்களிடம் சொல்லலாம் என்றால், போனை பாஸ்வேர்ட் கொடுத்து லாக் செய்திருக்கிறார்.  :(

கொஞ்சம் நினைவு தெரிந்ததும், மலங்க மலங்க விழித்தார். இந்தாங்க உங்க வண்டி சாவி என்றால், இது என் வண்டியில்லை என்கிறார். 15நிமிடத்தில் 108 வந்துவிட்டது. இனி அவர்கள் பார்த்துகொள்வார்கள் என கிளம்பிவிட்டேன்.

வலிப்பு நோய் இருப்பவர்கள் வண்டி ஓட்டக்கூடாது. என் நண்பனின் நண்பன் வடிவேலன் என்பவருக்கு இதே மாதிரி வலிப்பு வரும். அவருடைய ஆலைக்கு பேருந்து வசதி இல்லாததால், வண்டியில் தான் மெதுவாக போய்வருகிறார். நண்பர்கள் எவ்வள்வு சொன்னாலும், கேட்க மறுக்கிறார். ரிஸ்க் தெரிந்தே ஓட்டுகிறார்கள்.  சிரமம் தான்

Saturday, October 20, 2012

திருமண வரவேற்பு - சில குறிப்புகள்!

கேமராமேன் நண்பர்.
எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு.
அழைத்தார். போயிருந்தேன்.

வேடிக்கைப் பார்த்ததில்...!

வசதியான குடும்பம்!
கோட்டு சூட்டுடனும்
பளபளப்பான நகைகளுடனும்
பட்டுச் சேலைகளுடனும்
பலர் வலம் வந்தார்கள்.

மாப்பிள்ளை சகோதரியோ
மணமகள் சகோதரியோ - யாரும்
மணமக்களோடு மேடையில் இல்லை.
நியூக்ளியர் குடும்பமாய் இருக்கலாம்!

பன்னீர் தெளித்து வரவேற்க
ஜூஸ் கொடுக்க, பரிமாற
எங்கும் பணியாட்கள்.
யார் முகத்திலும்
செயற்கையாக கூட புன்னகையில்லை!
எல்லா காரியங்களையும் - ஊரில்
சொந்தங்கள் செய்வது தான் வழக்கம்.
ஊர்க்காரனான எனக்கு - எல்லாம்
புதிதாய் இருந்தது!

வருகிறார்கள். அமர்கிறார்கள்.
கலகலப்பான பேச்சு இல்லை.
கிசுகிசுவோ, பொரணியோ இல்லை.
வரிசையில் நிற்கிறார்கள்.
கவரை, பரிசை கையில் திணிக்கிறார்கள்.
சாப்பிட்டு விட்டு போய்விடுகிறார்கள்.
மனிதர்கள் சிரிப்பை
மறந்துவிட்டார்களா?!
எல்லாம் இயந்திரத்தனமாய் இருந்தது!

இனிப்பு இரண்டுவகை.
பிரியாணி, சாம்பார் சாதம்,
குட்டித்தோசை என
வகைவகையாய் நிறைய வைத்தார்கள்.
ரசம் நன்றாக இருந்தது.

18 முதல் 25 வயது வரை
பெண்களின் எண்ணிக்கையை
விரல்விட்டு எண்ணிவிடலாம்!
எண்ணினேன். :))
அழைத்து வருவது இல்லையா! (அ)
வர மறுக்கிறார்களா?!

இன்னிசை கச்சேரி பாடல்களுக்கு
குடும்பம் சூழ
40 வயதுக்காரர் கூச்சப்படாமல்
பாவனைகளோடு - உற்சாகமாய்
ஆடிக்கொண்டிருந்தார்.
பிடித்திருந்தது.

கேமராமேன்
பாடும் பெண்ணை
அடிக்கடி க்ளோசப்-ல்
காட்டிக்கொண்டிருந்தே இருந்தார்!

வந்த 600 பேரில்
மாப்பிள்ளை தான் நல்ல உயரம்.
குனிந்து, குனிந்து
கை கொடுத்து கொண்டிருந்தார்.

அம்மா, அப்பாவே
அருகில் வந்து நின்றாலும்
பெண்ணை வலது கையில் அணைத்தபடி
சளைக்காமல் கடைசிவரை
போஸ் கொடுப்பதை விடவேயில்லை!
மணமக்கள் வாழ்க!

Sunday, October 14, 2012

கடற்கரையும் கவிதையும்!

மேகங்களால்
சூழ்ந்திருந்தது சென்னை!

ஆங்காங்கே
மழை தூறிக்கொண்டிருந்தது!
நனைந்துகொண்டே
மெரினா வந்தடைந்தேன்!

காதலர்கள் அதிகம்
கண்ணில்படுகிறார்கள்!
சனிக்கிழமை என்பதால்
இருக்கலாம்!

கடற்கரை காற்றில்
கவிதை வாசிக்க
புத்தகம் எடுத்து வந்திருந்தேன்!

நாலு இளம்பெண்கள்
அலைகளோடு
விளையாட துவங்கினார்கள்!

ஒரு கவிதை கூட
கடைசிவரை வாசிக்கவே இல்லை! :)

Saturday, September 22, 2012

வாசகர்களுக்கு நன்றி!

'வலையுலகம் நொந்தகுமாரனும்' தளம் இன்றைக்கு 100 வாசகர்களை தொட்டிருக்கிறது. இன்றைக்கு மோகன்குமார் "நான் 100வது வாசகர்" என பின்னூட்டமிட்டிருந்தார். அவருக்கும், அனைத்து வாசகர்களுக்கும் நன்றி பகிர்வதற்கான பதிவு இது.

ஏற்கனவே இரண்டுமுறை நன்றி சொல்லியிருக்கிறேன். முதல்முறை கடந்த ஆண்டு தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்து, அந்த வாரத்தின் இறுதியில் தேர்ந்தெடுத்தற்காக தமிழ்மணத்திற்கும், உற்சாகப்படுத்திய நம் மக்களுக்கும் நன்றி சொன்னேன்.  இரண்டாவது முறை, சமீபத்தில் தளம் 50000 ஹிட்ஸ்களை தொட்டப்பொழுது நன்றி பகிர்ந்தேன்.

பொதுவாக பதிவுகளுக்கு வாசகர்களின் கருத்துக்கள் மிக குறைவாக‌ தான் வருகின்றன.  ஆகையால், வருகைகளும், பின் தொடர்பவர்களாகிய வாசகர்களும் தான் எழுதுவதற்கு உற்சாகப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லாமல் கடந்தால் நன்றாக இருக்காது.

எப்பொழுதெல்லாம் ஆரோக்கியமாய், அழுத்தமாய் பதிவுகள் எழுதுகிறேனோ அப்பொழுதெல்லாம் வாசகர்கள் அதிகரிப்பதை கவனித்திருக்கிறேன்.

தொடர்ச்சியாய் மாதத்திற்கு நான்கு பதிவுகள் எழுதுவது கூட அதிகம் தான். அதை அதிகப்படுத்தலாம் என பலமுறை நினைத்திருக்கிறேன்.  ஆனால் சாத்தியமில்லாமல் நாட்கள் நகருகின்றன. அதற்கு முதற்காரணம் பெருநகர  வாழ்க்கை தான்.  நாள்முழுவதும் அலைந்து திரிந்து அசதியாய் இரவு அறையை அடையும் பொழுது கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு, தூங்கத்தான் தோன்றுகிறது.

பல விசயங்களை எழுத நினைத்து, முடியாமல் போனதும் இருக்கிறது.  'மனிதர்கள்' வரிசையில் என் அம்மாவைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்து பலமுறை தோற்றுப்போயிருக்கிறேன்.

மனநிலையும் பிரதான பங்கு வகிக்கிறது. சில நாள்கள் நேரம் அமைந்தாலும், ஒரு வாக்கியம் கூட கோர்வையாய் எழுத முடியாமல் போன அனுபவமும் உண்டு.

இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.  நிறைய படித்தால் தான் எழுத்து இன்னும் கொஞ்சம் அடத்தியாய், ஆரோக்கியமாய் வரும். நிறைய படிக்கவேண்டும். வாசகர்களுடன் அதை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருக்கிறது. அதற்கு நிறைய உழைக்கவேண்டும். நினைப்புக்கு ஏற்ற உழைப்பு இல்லை. வருங்காலங்களில் இன்னும் உழைக்க முயல்கிறேன்.

மற்றபடி, எழுதுவதற்காக எதையாவது எழுதி தளத்தை நிரப்பி, என் நேரத்தையும், முக்கியமாக வாசகர்களின் நேரத்தை வீணடிக்ககூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

மீண்டும் நன்றிகளுடன்,

குமரன் ஜனா.

Friday, September 21, 2012

பயணமும் உணவும் - சில குறிப்புகள்!

சிறுபிராயத்து பயணங்களில்
அம்மாவின் புளியோதரையும்
மணக்கும் துவையலும் சுவையானவை!

பள்ளி பருவத்து நாட்களில்
பயணங்களில்
வாந்தி வந்த கொஞ்ச காலம்
பட்டினியும், தூக்கமும் தான்
காப்பாற்றியவை!

கொண்டை ஊசி வளைவுகளுக்கு பயந்து
இன்றைக்கும்
ஊட்டி, கொடைக்கானலுக்கு
பட்டினியாய் தான் பயணிக்கிறேன்.

பேருந்து பயணத்தில்
கோழிக்குழம்பு வயிற்றை ஒருமுறை
ஏகமாய் கலக்கிய பிறகு
எப்பொழுதும் சைவம் தான்!
ரயிலெனில்
அசைவம் தைரியமாய் சாப்பிடலாம்!

கானா பாடல்கள் ஒலிக்கும்
பேருந்து இளைப்பாறும்
நெடுஞ்சாலை மோட்டல்கள்
பணம் பறிப்பவை!
'கடனுக்காக' பரிமாறப்படுபவை!
இலவசமாய் கிடைக்குதென்றாலும்
ஓட்டுநரும், நடத்துனரும்
பாவப்பட்டவர்கள் தான்!

பீகாருக்கும், தில்லிக்கும்
சென்ற நீண்ட பயணத்தில்
சோத்துக்கு திண்டாடிய அனுபவம்
மறக்கமுடியாதவை!

ரயிலில் தரும்
ஐஆர்சிடிசி உணவுகள்
போன ஜன்மத்து பாவங்களை (!)
நினைவுப்படுத்துபவை!

அதெப்படி சொல்லிவைத்தாற்போல
எல்லா பேருந்து நிலையங்களிலும்
தேநீர் கேவலமாகவே இருக்கிறது!
திண்டுக்கல் கொஞ்சம் தேவலாம்!

நல்ல உணவு
பயணத்தை சுகமாக்கும்!
நல்ல உணவு
எப்பொழுதாவது தான் வாய்க்கிறது!

முகமறியா சகபயணியிடம்
சாப்பிடுங்கள் என்றேல்லாம் - இப்பொழுது
யாரும் கேட்பதில்லை.
கேட்கவும் முடிவதில்லை!

குற்றாலம்! அருவியின் நடனம்!

தமிழ்நாட்டில் பார்த்திராத பல இடங்கள் பல இருக்கின்றன. திரும்ப திரும்ப சென்ற இடங்கள் நிறைய இருக்கின்றன.  ஆனால், ஆண்டு தோறும் போய்வரும் ஒரு இடம் குற்றாலம். மதுரையை சுற்றிக்கொண்டிருந்த காலம் வரைக்கும் எப்பொழுது சீசன் களை கட்டுகிறதோ அப்பொழுது நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பஸ் ஏறிவிடுவதுண்டு!

குற்றாலத்திற்கு முன்பே 5 கிமீ தொலைவில் இருக்கும் தென்காசியை அடையும் பொழுதே, குற்றாலத்தின் மணம் காற்றில் மிதக்கும்.  இதமான காற்று உடலை வருடும்.

குற்றாலத்தை நெருங்க நெருங்க உள்ளுக்குள் மனம் பாட ஆரம்பித்துவிடும். மேக கூட்டம் அலைந்து கொண்டே இருக்கும். எப்பொழுது கருமேகமாய் அடத்தியாய் வருகிறதோ,  அப்பொழுது விழும் சாரல். லேசாக அடிக்கும் வெயில். சாரல், இதமான வெயில் என மாறி மாறி செல்லும். இந்த விசேஷ குற்றாலத்திற்கென்றே சிறப்பான துண்டுகள் விற்கப்படுகின்றன.

எங்கு திரும்பினாலும் மக்கள். ஒன்று குளிக்க போய்கொண்டு இருப்பார்கள்.  அல்லது குளித்துவிட்டு வந்துகொண்டிருப்பார்கள்.  மக்களின் சந்தடி எல்லாம் விலக்கிவிட்டு, கொஞ்சம் காதுகொடுத்து கேட்டால், அருவியின் சத்தம் மெல்ல கேட்கும்.  நம்மை செல்லமாய் அழைக்கும்.

போய் சேர்ந்ததும் ஒரு விடுதியில் அறையை பிடித்து, சுமைகளை போட்டுவிட்டு, உடனே குளிக்க கிளம்பிவிடுவோம். அருகில் இருப்பது மெயின் அருவி. குளிப்பது சுகம். அருவியில் குளிப்பது சுகமோ சுகம். குளிப்பது என்பது சாதாரண வார்த்தை.  குதூகலிப்பது. விளையாடுவது தான் சரி.

எவ்வளவு நேரம் குளித்தாலும், எத்தனைமுறை குளித்தாலும் அருவியின் குளியல் அலுக்காது. காடுகளின் வழியே, பல மூலிகைகளின் வழியே பயணப்படுவதால், குற்றால அருவியின் நீர் உடலை தொந்தரவு செய்வதில்லை.

பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி என ஒவ்வொரு அருவியும் ஒவ்வொரு வகை. மக்கள் அடுத்தடுத்த அருவிகளில் குளிக்க பயணப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

அருவியைப் பற்றி ஒரு பதிவு எழுதினால், மனசு ஆறாது.  இன்னும் நிறைய எழுதுவேன்..

Sunday, September 9, 2012

மழை!

நனைந்து வரும் பொழுது

சகோதரன் கேட்டான்

"ஏன் குடையை எடுத்து போகல்ல!"

சகோதரி ஆலோசனை சொன்னாள்.

"மழை நின்ற பிறகு வந்திருக்காலாமில்ல?"

அப்பா கோபமாக

"உனக்கு முடியாம போன தான், புரியும்!"
அம்மா, என் தலையை துவட்டிக்கொண்டே

"முட்டாள் மழை! என் குழந்தை வீடு வந்து சேரும் வரைக்கும் பொறுக்கமுடியலையா!"


(ஆங்கிலத்தில் படித்தது!)

Friday, August 24, 2012

ஆதரவு இல்லம்! - திரைப்பார்வை

தமிழில் வந்த பேய்படங்கள் குறைவு.  விட்டாலாச்சார்யா தந்த படங்கள் எல்லாம் பயமுறுத்துவதற்கு பதிலாக கிச்சு கிச்சு மூட்டுபவை.  இன்னும் சில படங்கள் எரிச்சல் மூட்டுபவை.  சில படங்கள் மனதை தைக்காமலே கடந்து போய்விட்டன!

சின்னஞ்சிறு வயதில் 'மைடியர் லிசா' நிறைய பயமுறுத்திய படம்.  டீனேஜில் பார்த்த மறுவெளியிடுகளில் பார்த்த ஓமன், எக்ஸார்சிஸ்ட் போன்ற ஆங்கிலப்படங்கள் தான் நன்றாகவே பயமுறுத்தின.

நல்ல அமானுஷ்ய படத்திற்காக பல ஆண்டுகள் ஏங்கிகொண்டிருந்தேன். இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு நல்ல படம் ஒன்றை பார்த்தேன்.  பதிவர் கருந்தேள் அறிமுகப்படுத்தியிருந்தார்.  அவருக்கு எனது நன்றிகள்.

****

கதை எனப் பார்த்தால்...

லாரா ஒரு ஆதரவு இல்லத்தில் வளர்கிறாள்.  பத்து வயதில் தத்தெடுக்கப்படுகிறாள். 

மீண்டும் 37 வயதில் அதே ஆதரவு இலலத்திற்கு தன் (மருத்துவர்) கணவன்,  ஏழு வயது பையனுடன் வருகிராள்.  இப்பொழுது ஆதரவு இல்லம் இயங்கவில்லை.  சில குழந்தைகளை (disabled children) தத்தெடுத்து முன்பு போலவே ஆதரவு இல்லமாக இயக்குவதாக திட்டம். 

இதற்கிடையில் அவளின் ஏழு வயது பையன் சிமோன் தனது நண்பர்கள் சிலரைப் பற்றி சொல்கிறான்.  அது நகரத்தை விட்டு விலகி, கடற்கரையோரமாக இருக்கும் தனிவீடு. அங்கு அப்படி யாரும் உண்மையில் இல்லை.  அவன் கற்பனையாக சொல்கிறான் என அசட்டையாக இருந்துவிடுகிறார்கள்.

ஒருநாள் அந்த பையன் லாராவிடம் "நீ எங்க அம்மா இல்லை!  நான் சீக்கிரமே சாகப்போகிறேன்! என் நண்பர்கள் என்னிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்கள்!' என்கிறான். சிமோன் ஹெ.எச்.ஐ. வியால் பாதிக்கப்பட்டவன்.  தத்தெடுக்கப்பட்டவன் தான்.  இந்த உண்மை அவனுக்கு எப்படி தெரிய வந்தது என லாரா அதிர்ச்சியடைகிறார்.

இதற்கிடையில், குழந்தைகளை தத்தெடுப்பதற்காக ஒரு 'கெட் & கெதர்' (A casual social gathering) சந்திப்பு நிகழ்கிறது.  அந்த சமயத்தில் அம்மாவுடன் சண்டையிட்ட சிமோன் காணாமல் போகிறான்.  கடத்திவிட்டார்களா?  அருகில் உள்ள கடலில் விழுந்துவிட்டானா என எல்லாவிதத்திலும் தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருபக்கம் காவல்துறை, விளம்பரம் மூலமாக தேடுகிறார்கள்.  இன்னொரு பக்கம் ஆவிகளுடன் பேசுபவர்களின் மூலமும் கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.  9 மாதங்கள் கடந்துவிடுகின்றன.

இறுதியில் சிமோன் கிடைத்தானா? அந்த வீட்டில் சிமோன் சொன்ன நண்பர்கள் யார்?  என எல்லாவற்றிக்கும் பதில் கிடைக்கிறது.  அதற்கு பிறகு லாரா எடுக்கும் ஒரு முடிவு மிக அதிர்ச்சியானது.

****

படத்தில் கதாபாத்திரங்கள் குறைவு.  அதில் லாராவை தவிர மற்றவர்கள் வருகிற நேரம் மிக குறைவு.   வசனங்கள் கூட குறைவு தான்.  ஆனால் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துவது லாராவின் நடிப்பும், திரைக்கதையும் தான்!  ஒளிப்பதிவும், இசையும் படத்தின் வேகத்திற்கு உதவியிருக்கிறது.

2007ல் வெளிவந்த ஸ்பானிஷ் படம்.  ஆங்கில சப்-டைட்டிலுடன் யூ டியூப்பில் கிடைக்கிறது.  இரண்டு நாள்களுக்கு முன்பு இந்த படம் பார்த்தேன்.   அந்த நிமிடம் முதல் எழுது! எழுது! என லாரா விரட்டிக்கொண்டே இருந்தார்.  இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொண்டதும் கொஞ்சம் ஆசுவாசுமாய் இருக்கிறது!  இனி, லாரா உங்களை துரத்துவார்! :-)

****

படத்தின் பெயர். El Orfanato ஸ்பானிஷில்!  The Orphanage  ஆங்கிலத்தில்  தமிழில் அநாதை இல்லம் என்று தான் மொழிபெயர்த்திருக்கவேண்டும்.  படத்தின் இறுதியில் தன் குழந்தை சிமோன் மீதான ஆழமான அன்பில் எடுக்கும் இறுதி முடிவு 'அநாதை இல்லம்' என எழுதவிடாமல் தடுத்து,  'ஆதரவு இல்லம்' என எழுதவைத்தது.

****

மலையாளத்தில் இயக்குநர் பாசிலால் எடுக்கப்பட்ட மணிசித்திரதாழ் படத்தில் அமானுஷ்யம் உண்டு. அதை ரசிக்கமுடியும்.  அதை தமிழில் பி.வாசு சந்திரமுகியாக எடுத்தபொழுது,  அமானுஷ்யத்தை கழுத்தை நெறித்து கொன்றிருப்பார்.

****

இந்த படத்தை பாராட்டி எழுதுவதால், எனக்கு சொர்க்கத்தின் மீதோ, நரகத்தின் மீதோ சுத்தமாக நம்பிக்கை இல்லை.  மண்ணிலேயே ஒரு சொர்க்கத்தை உருவாக்குவது தான் எனது கனவு.

****

Wednesday, August 22, 2012

நன்றி சொல்லும் தருணமிது!

இப்பொழுது தான் எழுத துவங்கியது போல இருக்கிறது.  அதற்குள் ஐந்து முழு ஆண்டுகள் ஓடிவிட்டன. நேற்றிரவு  50000 வருகைகளை (ஹிட்ஸ்)   'வலையுலகமும் நொந்தகுமாரனும்'  தொட்டிருக்கிறது. 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, எதையோ ஒன்றை தேடும் பொழுது எதைச்சையாய் தமிழ் பிளாக் ஒன்றை வந்தடைந்தேன்.    பல பதிவர்கள் அந்த சமயத்தில் எழுதி குவித்துக்கொண்டு இருந்தார்கள். அதில் பல மொக்கை, ஜல்லி, கும்மிகள்.  நொந்து போய் தான் பின்னூட்டங்களில் கலாய்த்தேன். உலகளாவிய இணையத்தை கூட குட்டிச்சுவராய்  பயன்படுத்துகிறார்களே என வருத்தமாய் இருந்தது.

விமர்சனம் செய்வது மட்டும் சரியில்லை!  எது சரி என்பதை நாமும் எழுதவேண்டும் என நினைத்தேன். ஏற்கனவே டீனேஜ் நாட்களில் கவிதைகள் மாதிரி ஒரு வஸ்துவை எழுதி, பல நண்பர்களை கொடுமை செய்த அனுபவம் இருந்தது.

எதைச்சையாய் ஒரு கடிதம் எழுதியதை பார்த்துவிட்டு, கவிதையை விட, உரையாடல் உணர்வுபூர்வமாக இருக்கிறது.  அதனால், கவிதையை விட்டுவிடு! பாவம் பிழைத்துப்போகட்டும்! கதை, கட்டுரை எழுது என கெஞ்சினார்கள்.

அதனால், தைரியம் வந்து, தத்தி தத்தி நடப்பது போல, எழுத ஆரம்பித்தேன்.  இரண்டு நிபந்தனைகள் எனக்குள் நானே உருவாக்கிகொண்டேன். ஒன்று. உருப்படியாய் எழுத வேண்டும். எந்த சமயத்திலும் மொக்கையாய் எழுதக்கூடாது.

இரண்டாவது, மற்றவர்கள் எழுதிய பதிவுகள் எவ்வளவு அருமை என்றாலும் தளத்தில் பகிரக்கூடாது! காரணம் நான் கொஞ்சம் சேம்பேறியும் கூட! எழுதாமல், படிப்பதில் ஒன்றை பகிர்ந்து விட்டுவிடக்கூடாது அல்லவா!

துவக்கத்தில் ஒரு பதிவுக்கு 15 லிருந்து 20 வருகைகள் இருந்தாலே அதிகம்.  ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு நாளைக்கு 40லிருந்து 50 என வருகைகள் இருந்தது.  எங்கிருந்து நம் தளத்திற்கு வருகை தருகிறார்கள் என்பது இன்றைக்கு வரைக்கும் எனக்கு ஆச்சர்யம் தரும் விசயம் தான்!

****

கடந்த தீபாவளி வாரத்தில், தமிழ்மணம் 'நட்சத்திர பதிவராக' அழைப்பு விடுத்திருந்தது.  அழைத்த பொழுது, சந்தோசத்தைவிட பதட்டம் தான் அதிகம் வந்தது.  மாதம் இரண்டோ அல்லது மூன்றோ எழுதுபவனை ஒரு வாரம், ஏழு இடுகைகள் எழுத சொன்னால்! இருப்பினும் எழுதினேன்.

பழைய, புதிய வாசகர்கள், பதிவர்கள் என எலோரும் உற்சாகப்படுத்தினார்கள்.  அந்த வாரம் மட்டும் கிட்டத்தட்ட 3000 வருகைகள் கூடியிருந்தது.

****
வழக்கமாக வாசகர்கள் வருகை தந்தாலும் எழுதுவதை பற்றி, வாசகர்கள் கருத்தை அறிந்துகொள்ள முடியாததாக இருந்தது.  பின்னூட்டங்கள் அபூர்வம் தான்.  இருப்பினும் தொடர்ச்சியாக வருகை தருவதால் உருப்படியாக எழுதுகிறோம் என மன ஆறுதல் பட்டுக்கொண்டேன்.

****

கடந்த வாரம் முகநூலில் ஒரு ஸ்டேட்ஸ் ஒன்றை போட்டேன். "நம்முடைய பக்கத்திற்கு எத்தனை பேர் வருகிறார்கள் என தெரிந்து கொள்ளமுடியுமா? யாருமே வராத கடையில் ஏன் சின்சியராக டீ ஆற்றவேண்டும்? மூடிடலாம் என நினைக்கிறேன்!" முன்பு எழுதிக்கொண்டிருந்த பல பதிவர்களை காணவில்லை.  நிறைய புதிய பதிவர்கள் எழுத வந்திருக்கிறார்கள்.

அதனால் வருகை தந்த, வாசித்த, விமர்சனம் செய்த, என்னை தொடர்கிற (Followers) அனைவருக்கும் நன்றி இந்த நாளில் நன்றி தெரிவித்துகொள்கிறேன். வருங்காலத்திலும் இப்பொழுது எழுதுவதை விட உருப்படியாய் எழுத முயற்சிக்கிறேன் என உறுதிகூறுகிறேன்.

மீண்டும் நன்றிகளுடன்,

குமரன்.

****

Tuesday, August 21, 2012

மனிதர்கள் 16 - சித்ரா

பெண் தேடும் படலத்தில் பாரதி, இராஜீ அவர்களுக்கு பிறகு, நண்பர் சுறுசுறுப்பானார்.  இன்னும் சில நாள்கள் போகட்டுமே என்றேன். வழக்கம் போல என் பேச்சை காதில் வாங்கிகொள்ளவே இல்லை.

மதுரையில் அச்சகம் வைத்து இயக்கும் ஒரு நண்பர் சாதி மறுப்பு திருமணங்களுக்கு ஒரு தகவல் மையம் நடத்தி வந்தார். அவரை அணுகியதில், சித்ரா என்ற திருச்சி பெண் விவரங்கள் இருக்கிறது. பார்க்கிறீர்களா எனக் கேட்டார்.  புகைப்படத்தையும், பயோ டேட்டாவையும் வாங்கிகொண்டோம்.

டிகிரி படித்திருந்தார். அப்பா இறந்துவிட்டார். போட்டோவில் முகம் தெளிவாய் இருந்தது. அந்த பாஸ்போர்ட் புகைப்படத்தில் சித்ரா மெலிதாய் என்னைப் பார்த்து சிரித்தார். முதல் அளவில் தேறியதும், தொடர்பு கொண்டு பேசினோம்.

அந்த பெண்ணுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை சமீபத்தில் செய்திருப்பதாகவும், பேச்சு இப்போதைக்கு இல்லை. சில நாள்கள் கழித்து பேச்சு வந்துவிடும் என மருத்துவர் சொல்லியிருக்கிறார்.  வந்து பாருங்கள் என பெண்ணின் அம்மா பேசினார். என்ன பிரச்சனை? என்றதற்கு 'தைராய்டு' என்றார்கள். 

அண்ணி ஒருவர் ஹோமியோபதி மருத்துவர். அவரிடம் கருத்து கேட்டதற்கு கொஞ்சம் யோசித்து செய்யுங்கள் என்றார்.

'எனக்கு தெரிந்து மூவருக்கு திருமண்த்திற்கு முன்பு வந்த தைராய்டு பிரச்சனையால், குழந்தை இல்லை' என்று ஒரு மருத்துவ குண்டை தூக்கிப்போட்டார் அண்ணன்.

அறுவை சிகிச்சை செய்த விவரத்தை கொஞ்சம் அனுப்பிவையுங்கள். மருத்துவரிடம் கருத்துக்கேட்டுவிட்டு பெண் பார்க்க வருகிறோம் என்றோம். பெண்ணின் அம்மாவோ நீங்கள் பார்க்க வரும்பொழுது, நான் கையோடு தருகிறேன் என்றார். நேரே வர வைப்பதில் அவருடைய முனைப்பு தெரிந்தது.

நண்பரிடம் சொல்லி வேண்டாமே என்றேன்.  அவர் கோபித்துக்கொண்டார்.  சரி! குழந்தை இல்லையென்றால் என்ன! பெண் பார்க்க திருச்சி கிளம்பினோம். நண்பர், நான், இன்னொரு நண்பரின் துணைவியார் அந்த சமயத்தில் திருச்சியில் ஒரு தேர்வு எழுத வந்திருந்தார். அவரை அங்கு போய் பிக்கப் பண்ணிகொண்டோம்.

இந்த மெயின் கதையில், சில கிளைக்கதைகளும் இருந்தன. 

பெண்ணின் அப்பா ஒரு அரசு அலுவலகத்தில் ஜீப் ஓட்டுநர்.  அவர் பணியில் இருந்த பொழுது, இதய வலியால் இறந்து போனார். பணியில் இருக்கும் பொழுது, இறந்து போனதால், அவருடைய துணைவியாருக்கு அந்த அலுவலகத்திலேயே வேலை தந்திருந்தார்கள்.

அதற்கு பிறகு, அங்கு வேலை செய்த இன்னொரு ஓட்டுநரோடு பழக்கம் ஏற்பட்டு அவரோடு வாழ்ந்துகொண்டிருந்தார்.  அவர் ஏற்கனவே திருமணமானவர். அதனால் சட்ட ரீதியாக இரண்டாவது திருமணம் செய்யமுடியாது.  அப்படியே திருமணம் ஆகாமல் அவர் இருந்திருந்து, திருமணம் முடித்தால், கணவனை இழந்தவர் என்ற அடிப்படையில் தான் இவருக்கு அரசு வேலை கிடைத்திருக்கிறது. அதனால் அந்த தகுதியை இழந்துவிடுவார்.  நான் தெளிவாக சொல்கிறேனா?!

அங்கு நாங்கள் போயிருந்த பொழுது, பெண்ணின் அம்மாவின் இரண்டாவது கணவர் அங்கு இருந்தார்.  உடன் அவருடைய முதல் மனைவியும் அங்கு இருந்தார்.

அந்த அம்மாவின் வாழ்க்கையின் சிக்கலை யதார்த்தமாய் புரிந்துகொள்ளமுடிந்தது. 

எந்தவித சிக்கலும் இல்லாத குடும்பங்கள் சாதி, மறுப்பு திருமணத்திற்கு முன்வருவது என்பது எண்ணிக்கையில் குறைவு தான். நம்முடைய சமூக நிலைமை அப்படி!

வாழ்க்கையில் முதன் முதலாக பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் சாப்பிட்டோம். பெண் தான் எடுத்து வந்தார். நான் முகத்தையே பார்க்கவில்லை. கூச்சமாய் இருந்தது. :)

நண்பரும், நண்பரின் மனைவியும் உள்ளே போய் பேச்சுக்கொடுத்தார்கள். அந்த பெண்ணால் சுத்தமாக பேசவே முடியவில்லை.  மருத்துவ அறிக்கையை வாங்கிகொண்டு கிளம்பினோம்.

"அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மதுரையில் தான் செய்தோம். அதனால் அந்த மருத்துவரையே போய் பாருங்கள்" என அழுத்தி அழுத்தி சொன்னார். அடுத்த நாள் நண்பரும், நானும் போனோம்.  அந்த பெண்ணுக்கு இன்னும் சில நாள்களில் பேச்சு வந்துவிடும்.  எல்லாமே பாசிட்டாவாக பேசினார். எங்களுக்கு என்ன்மோ, பெண்ணின் அம்மா சொல்லி வைத்து பேசியது போல தெரிந்தது. நன்றி கூறி விடைபெற்றோம்.

அந்த சமயத்தில், என்னிடம் யாராவது ஐஸ் வைத்து பேசினாலே ஜலதோசம் பிடித்தது அதனால், ஒரு பிரபல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன்.  அவரிடம் விவரம் சொல்லி, அறிக்கையை தந்தேன். அமைதியாக படித்துவிட்டு, வேறு வரன் பாருங்கள் என முடித்துக்கொண்டார்.  விவரம் ஏதும் சொல்லவில்லை.

நண்பர் ஒருவர் ஸ்கேன் சென்டரில் வேலை செய்கிறார். அவரிடம் கொடுத்து அங்கு இருக்கும் மருத்துவரிடம் விவரம் கேட்டதற்கு, "அந்த பெண்ணிற்கு புற்றுநோய். முதல் இடத்தை ( ) கண்டுபிடிக்க முடியாது. இரண்டாவது இடமான தொண்டையில் கண்டறியப்பட்டு அறுவைசிகிச்சை செய்திருக்கிறார்கள்.  இன்னும் எத்தனை மாதங்களுக்கு தாங்கும் என சொல்லமுடியாது" என்றார். கடைசில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் படத்தின் இறுதிக்காட்சி போல படு மோசமாக அமைந்துவிட்டதே என நொந்தே போனேன்.

அந்த பெண்ணின் நிலை புரிந்து நிறைய வருத்தமாகிவிட்டது. அந்த அம்மாவிற்கு தன் மகளுக்கு எப்படியாவது ஒரு திருமணத்தை முடித்து பார்த்துவிடவேண்டும் என்ற துடிப்பை புரிந்துகொள்ளமுடிந்தது.

அந்த மருத்துவ அறிக்கையோடு 'மன்னியுங்கள்' என சுருக்கமாய் கடிதம் எழுதி அனுப்பினோம். சித்ரா இப்பொழுது எப்படி இருக்கிறார் என தெரியவில்லை. :(

Monday, August 20, 2012

சாப்பாடு ‍ - சில குறிப்புகள்

உணவகத்தில் பணம் கொடுத்து டோக்கன் வாங்கி தான் சாப்பிட வேண்டும் என் ஏன் கொண்டுவந்தார்கள்.  சாப்பிட்டு விட்டு பணம் இல்லை என்று கைவிரித்துவிடக்கூடாது என்பதற்காகவா? :)

'பசியோடு அமர்ந்து பசியோடு எழு' என்கிறார்கள்.  சுவையான உணவு என்றால், இதை மறந்து போகிறோமே! ஏன்? :)

குழம்பு வகைகள் நன்றாக செய்ய செய்ய தெரிந்தவர்களுக்கு சுவையான‌ ரசம் வைக்க தெரியாது.  சுவையாக‌ ரசம் வைக்க தெரிந்தவர்களுக்கு குழம்பு வகைகள் செய்ய தெரியாது என்கிறார்கள்.  இரண்டுமே சரியாக வைக்க தெரியாதவர்கள் பற்றி பேச்சே இல்லை.  என் அனுபவத்தில் இதை சரியென்றே உணர்கிறேன்.  உங்கள் அனுபவம் என்ன?

வயிற்றுக்கு பற்கள் கிடையாது.  அதனால், எதை தின்றாலும் மென்று தான் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.  ஆனால், எங்க அண்ணன் அரிசி சோற்றை மென்று சாப்பிடக்கூடாது என்கிறார். எது சரி?

சாப்பிட உடனே தண்ணீர் அருந்த கூடாது.   அது செரிக்க தயாராய் இருக்கும் அமிலத்தை நீர்த்து போகவைத்துவிடும் என்கிறார்கள்.  அதனால், அரைமணிநேரம் கழித்து உடலே நீர் கேட்கும்.  அப்பொழுது குடியுங்கள் என்கிறார்கள். சரியா?

நாகர்கோவில், கன்னியாகுமரிகாரர்களுக்கு காரக்குழம்பு வைக்க தெரியாது. அதற்கு அங்கு அதிகம் விளையும் தேங்காயும் ஒரு காரணம் என்கிறார்கள். உண்மையா?  என் அனுபவத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி சாப்பாடு சவ சவ என்று தான் இருக்கும்!

சாப்பிடும் பொழுது வாய் திறந்து சாப்பிடக்கூடாது.  அப்படி சாப்பிட்டால் ஆக்சிஜனும் சேர்ந்து உள்ளே போகும். அதனால், சரியான செரிமானம் நடைபெறாது என்கிறார்கள். உண்மையா?

அப்புறம் முக்கியமான் குறிப்பு.  இதில் எது ஒன்றையும் சிக்கலாக்கி, எஸ்.எம்.எஸ். அனுப்பி சமூகத்தை கலவரப்படுத்திக்கொள்ளக்கூடாது.  நான் உள்ளே போவதற்கு விருப்பம் இல்லை. :)

Thursday, August 16, 2012

இன்சூரன்ஸும் தொல்லை தரும் போலீசும்!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

அன்றிரவு இரவு 12.30 மணி.  ஒரு சாவு வீட்டுக்கு நண்பர்களுடன் சுமோ காரில் வெளியூர் போய்விட்டு திரும்பும் பொழுது, கோயம்பேட்டில் இறக்கிவிட்டார்கள்.  எனது பைக்கை எடுத்து வீட்டுக்கு போகும் வழியில் போலீசு நிறுத்தியது.  குடித்திருக்கிறேனா என பக்கத்தில் வந்து மோந்து பார்த்தார்கள்.  இல்லை.  வண்டி ஆர்சி, ஓட்டுநர் உரிமம் சரியாக இருந்தது.  இன்சூரன்ஸ் தேதி முடிந்திருந்தது.  நான்கு நாட்களுக்கு முன்பு சரியான தேதியில் புதுப்பித்திருந்தேன். ஒரு பிரதி எடுத்து உள்ளே வைக்க மறந்துவிட்டேன்.

உடனே இன்சூரன்ஸ் வேண்டும் என அடம்பிடித்தனர்.  இரவிலோ, பகலிலோ சோதனை செய்யும் சட்ட ஒழுங்கு போலீசாருக்கு ஆர்.சியும், ஓட்டுநர் உரிமமும் போதுமே! இவர்கள் எதுக்கு இன்சூரன்ஸ் கேட்டு தொல்லை செய்கிறார்கள் என என் சிறுமூளைக்கு தோன்றியது.  லஞ்சம் எதிர்பார்த்தனர்.  உடனே என் ஹெல்மெட்டை பிடி என அவர்கள் கையில் திணித்து, வீட்டிற்கு போய் எடுத்து வருகிறேன் என சொல்லி, எடுத்து வந்து காட்டிவிட்டு ஹெல்மெட்டை வாங்கி சென்றேன்.

இரண்டு நாள்களுக்கு முன்பு, இந்த சந்தேகம் குறித்து நண்பர் ஒருவரிடம் பேசியபொழுது, அவர் ஒரு அனுபவத்தை சொன்னார்.

இரண்டு நாள்களுக்கு முன்பு காலை 11 மணியளவில், அம்பத்தூர் சிக்னல் அருகே, இதே போல சட்ட ஒழுங்கு போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தனர்.  ஒருவரிடம் என்னை போலவே இன்சூரன்ஸ் இல்லை.  'வண்டியை ஓரம்கட்டு' என ஒருமையில் சொன்னதும், அவருக்கு கோபம் வநதுவிட்டது.  "நீங்க ஏன் இன்சூரன்ஸ் எல்லாம் செக் பண்றீங்க! அது உங்க வேலை இல்லையே!  ஏன் மரியாதை இல்லாம பேசுறீங்க!  நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையாளர்!" என சொல்லி, "மரியாதை இல்லாம பேசியதற்கு மன்னிப்பு கேள்!' என சொல்லி, தன் பைக்கை சாலையை மறித்து நிறுத்திவிட்டார். அதற்கு பிறகு அந்த திமிர் போலீசார் காட்டிய பவ்யமும், கெஞ்சலும் இருக்கிறதே! அட!அட!  "வண்டியை எடுங்க சார்! பேசிக்கலாம்!" என்றனர்.  அவர் உறுதியாக நின்றுவிட்டார். 15 நிமிடம் இப்படியே போனது. பிறகு ஸ்டேசன் போய் பேசிக்கலாம் என சமாதானத்திற்கு வந்தனர்.

இப்பவும் எனக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை! இப்பொழுது முன்பை போல இல்லை! நாலு தெருவுக்கு இரண்டு போலீசார் சோதனையில் தொடர்ச்சியாய் சோதனை செய்துகொண்டு தான் இருக்கின்றனர்.  யாராவது தீர்த்து வையுங்களேன்!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

பின்குறிப்பு : இந்த பதிவில் இன்சூரன்ஸ் தேவையா இல்லையா என்ற விவாதத்தை எழுப்பவில்லை நான்! அது மிக அவசியம்.  ஒருவர் இந்த புரிதலோடு பின்னூட்டமிட்டிருந்தார். அதனால், இந்த விளக்கம்.

அதை போக்குவரத்து போலீசார் சோதனை செய்யட்டும். சட்ட ஒழுங்கு போலீசார் சோதனை செய்வது ஏன்? என்பது தான் எனது கேள்வி.

Saturday, August 11, 2012

ராட்டினம் - ஒரு திரைப்பார்வை!

20 ஆண்டுகளுக்கு முன்பு மோகன், பூர்ணிமா நடித்த 'கிளிஞ்சல்கள்' என ஒரு படம்.  நம் பக்கத்து வீட்டில் நடந்தது போல ஒரு காதல் கதையாக இருக்கும். சினிமாத்தனம் இல்லாத படம் அது! அப்படி ஒரு படம் ராட்டினம்! என்னடா படம் வந்து சில மாதங்கள் கழித்து எழுகிறானே என நீங்கள் நினைக்கலாம்.  படங்களை உடனுக்குடன் பார்க்கிற ஆள் இல்லை நான்.  அப்படி உடனுக்குடன் பார்த்த உத்தமபுத்திரன், ராஜப்பாட்டை, எப்படி சித்ரவதை செய்தன என்பது புலம்பித்தீர்த்த எனக்கு தான் தெரியும்! அப்படி எவ்வளவு மோசமான படங்களை கூட படம் முடியும் வரை பார்த்து, நொந்து, வெந்து எழுதும் பதிவர்களுக்கு பதிவர்களும், சினிமா வாசகரும் நிறைய நன்றிகடன் பட்டவர்கள்.

****

கதை எனப் பார்த்தால்...

நண்பனின் காதலுக்கு நாயகன் உதவ போய், ஒரு +2 படிக்கும் பெண்ணிடம் காதல் வயப்படுகிறார்.  பெண்ணின் அப்பா தூத்துக்குடி துறைமுகத்தில் அரசு உயரதிகாரி.  மாமா வழக்கறிஞர்.  பையனின் அண்ணன் ஒரு கட்சியில் வளர்ந்து வரும் ஒரு நபர். அண்ணி கவுன்சிலர். 

காதல் இரண்டு குடும்பத்திலும் மோதலை உருவாக்குகிறது.  காதலில் உருகுகிறார்கள் காதலர்கள். களேபரங்களுக்கிடையில் நாயகன் நண்பர்களின் உதவியுடன் கல்யாணம் முடிக்கிறார். கட்சியின் மாவட்ட செயலருக்கு தன் தொழிலுக்கு பெண்ணுடைய அப்பாவின் தயவு தேவைப்படுகிறது.  ஆகையால் தன் கட்சிகாரனான நாயகனின் அண்ணனையே போட்டுத்தள்ளுகிறார். இந்த சாவுக்கு பிறகு காதலர்கள் இருவரும் வேறு வேறு திருமணங்கள் முடிந்து செட்டிலாகிறார்கள்.  இவர்களின் காதலால், தனது மூத்தப்பையனை இழந்த (நாயகனின்) அப்பா மாவட்ட செயலாளரை ஆள் வைத்து கொல்கிறார்.  படத்தின் இறுதியில் இறந்த பையனை நினைத்து கண் கலங்குவதோடு படம் முடிவடைகிறது.

****
'நாடோடிகள்' படத்தில் இறுதியின் மேட்டுக்குடி காதலைப் பற்றி நாயகன் நீண்ட லெக்சர் போல அடிக்காவிட்டாலும், அழுத்தமாக சில செய்திகளை, உணர்வுகளை படம் சொல்லி செல்கிறது. அது என்னவென்றால், விடலைப் பருவத்து காதல்கள் தங்கள் காதலால் தங்கள் சொந்த, பந்தங்களுக்கு ஏற்படும் துன்ப, துயரங்களை, இழப்புகளை காண மறுக்கிறது என்பது படம் சொல்லும் செய்தி.

படம் சொல்வது போல, அப்படி கணக்கிட்டு காதலிக்க முடியுமா?  என்றால் என்ன நடக்கும்?

"நீயும் நானும் ஒரு சாதி!
எந்தன் தந்தையும்,
உந்தன் தந்தையும்
மாமன் மச்சான்கள்!
செம்புல பெயல் நீர்ப்போல
ஒன்று கலந்தனவே!'

என புகழ்பெற்ற கவிதை போல ஆகும்!

இந்த படம் காதலுக்கு மரியாதையில் காதலால் கட்டுண்டாலும் கொஞ்சம் சுதாரித்து (!) குடும்பத்தின் பாசம், மானம், மரியாதை, கெளரவம் மற்றும் இன்னபிற இத்யாதி வஸ்துகளுக்கு மதிப்பளித்து பிரிவது என முடிவெடுப்பது தான் சரி என்ற முடிவுக்கு தான் வரமுடியும்.  இது காதலுக்கு செய்யும் மரியாதை அல்ல! அவமரியாதை!

அப்படி 'காதலுக்கு மரியாதை' காதலர்கள் போல, பிரிந்து, பெற்றொர்களிடம் பிள்ளைகள் போனால், பிள்ளைகளின் பெருந்தன்மை பார்த்து சேர்த்து வைப்பார்களா?  அதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும். இயல்பில், உடனே சட்டென்று தங்களுடைய சுயசாதியில், உட்பிரிவில் ஒரு பையனை/பெண்ணைப் பார்த்து திருமணம் முடித்துவிடுவார்கள்.

சாதிய சமுகம் உடைய வேண்டுமென்றால்  சாதி மறுப்பு திருமணம் செய்வது ஒரு வழி.  சமூகத்தில் இதை புரிந்துகொண்ட முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் தனது சொந்தங்களுடன் போராடி சாதிமறுப்பு திருமணம் செய்கிறார்கள்.  அந்த போராட்டத்தில் பலர் தோற்றுப் போவதும் உண்டு.   சமூகத்தில் முற்போக்கு எத்தனை சதவிகிதமோ அதைவிட குறைவாக தான் சாதிமறுப்பு திருமணங்கள் நடைபெறுகின்றன.  ஆக காதல் தான் பலரையும் சாதியை மறந்து திருமணத்தில் முடித்துவைக்கிறது.
இப்பொழுதெல்லாம் சமூகத்தில் காரியவாதம் மிஞ்சி நிற்பதால், காதலிப்பது ஒரு நபரை! சுயசாதி, பெரும்வரதட்சணை பலன்களுக்காக திருமணம் செய்வது வேறு ஒருவரை என்பதாக இருக்கிறது.

ஆக படம் சொல்லும் சேதிக்கு பின்னால், இப்படி பல அபாயங்கள் இருக்கிறது. படம் பார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்!

மற்றபடி படத்தில் நடித்தவர்கள் பெரும்பாலும் புதுமுகங்களாக இருந்தாலும், இயல்பாக வலம்வருகிறார்கள்.  புதிய இயக்குநர் என தெரியாத அளவிற்கு படத்தின் தரம் இருக்கிறது. நாயகனின் அண்ணனாக வருகிறவர் தான் படத்தி இயக்குநர்.

இப்பொழுது தேடினாலும், திரையில் பார்க்க உங்களுக்கு வாய்ப்பில்லை. 30ரூக்கு நல்ல தெளிவான பிரிண்டில் டிவிடி கிடைக்கிறது. வாங்கிப்பாருங்கள்.  இல்லையென்றாலும் பிரச்சனை இல்லை.  இன்னும் சில நாள்களில் ஏதோ ஒரு சின்னத்திரையில் "உலக வரலாற்றில் முதன்முறையாக" என பில்டப் செய்து, வெளியிடுவார்கள்.  பார்த்து கொள்ளுங்கள்.

****

Monday, July 16, 2012

காதல் + கலாட்டா = ஊரடங்கு உத்தரவு! - ஒரு உண்மைக்கதை

எங்களது அலுவலகத்திற்கு அருகே ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளி அவர்.  கடையில் டீ சாப்பிடும் பொழுது, மதிய உணவு சாப்பிடும் பொழுதும் பழக்கமாகி, நெருங்கிவிட்டார்.

மாதத்தில் இரண்டு நாள் ஊருக்கு போகிறேன் என சென்றுவிடுவார்.  என்னங்க! என விசாரித்தால் ஒரு அடிதடி வழக்கு! வாய்தாவிற்கு போய்விட்டு வருகிறேன்! என்றார்.

இன்னொரு சமயத்தில், இதுப்பற்றி கேட்டதற்கு விளக்கினார். ஒரு சினிமாவிற்கான கதை இந்த உண்மைக்கதையில் இருந்தது.

****

எங்கள் ஊரில் ஒரு பெண்ணிடம் நான் பேசினேன்.  அதை அந்த பெண்ணின் சித்தப்பா பையன் பார்த்துட்டான்.  வேறொரு சமயத்தில் இதை மனசுல வைச்சுகிட்டு ஒரு அடி வேற என்னை அடிச்சுட்டான்! ஒரு பொடிப்பையன் உன்னை அடிச்சுட்டான்! அவனை வெளுக்கனும்!னு நண்பர்கள் எல்லோரும் கோபப்பட்டாங்க!

'விடுங்கடா! நான் பேசினது தப்பு! அவன் அடிச்சுட்டான்! இத்தோட விட்டுறலாம்!' என அனைவருக்கும் சமாதானம் சொன்னேன்.

சில நாட்கள் கழித்து, இதே காரணத்திற்காக மீண்டும் எங்க சித்தப்பாவை கைய உடைச்சிட்டாங்க! நம்மால சொந்தகாரங்க பாதிக்கப்படுகிறாங்க! இனிமேல் இதை வளரவிடக்கூடாதுன்னு..  நேர்ல போய், உட்கார்ந்து பேசி, சமாதானம் பேசலாம்னு முடிவு பண்ணினேன்.

சென்னையில் நண்பர்களை அழைச்சுகிட்டு, 5 பைக்குல 10 பேர் கிளம்பினோம்.  ஊர் போய் சேர்றதுக்கு இரவாயிடுச்சு!  சித்தப்பா, பெரியப்பா கிட்ட பேசினா, இரவுல பேசமுடியாது! விடிகாலையில பேசிக்கலாம்! படுங்கன்னு சொல்லிட்டாங்க!

நாங்க பேச்சுவார்த்தைக்கு கிளம்பினோம். எதிர்தரப்போ அடிக்க ஆள் திரட்டுறாங்கன்னு தப்பா புரிஞ்சுகிட்டு அவங்க ஆள்களை திரட்டா ஆரம்பிச்சிட்டாங்க!

காலையில் கிளம்பினோம். 'நாங்க (5 பைக்ல) 10 பேர் முன்னாடி போறோம்! மற்றவங்க பின்னாடி வாங்க! என சொல்லிவிட்டு கிளம்பினோம்.  போகிற வழியில் ஒரு தோப்புக்கு அருகே 30லிருந்து 40 பேர் கொண்ட ஒரு கூட்டம் எங்களை வழிமறித்து ஆயுதங்களால் தாக்க ஆரம்பித்தார்கள்.

பேச்சுவார்த்தைக்கு என நாங்கள் வந்து இருந்ததினால் எந்த ஆயுதமும் எங்களிடம் இல்லை.  பத்து பேரையும் வெளுத்துவிட்டார்கள்.  பைக்குகளை தீ வைத்து கொளுத்திவிட்டார்கள். கையில் கிடைச்சதை வைத்து இரண்டு பேரை மட்டும் நாங்க அடிச்சோம்!

தட்டுத்தடுமாறி தலை தெறிக்க தனித்தனியாய் ஓடிப்போய், எல்லோரையும் ஓரிடத்திற்கு வரச்சொன்னோம்.  எல்லோருக்கும் கடுமையான அடி. காயம். மருத்துவமனையில் சேர்த்தோம்.  25000க்கு மேல் செலவானது.  எங்களை அடிச்ச கையோடு நேரே எங்க வீட்டுக்கு போய், டிவி பெட்டி, கரண்ட் பெட்டி என நொறுக்கி தள்ளிவிட்டார்கள்.  எல்லாவற்றையும் சரி செய்ய ரூ. 30000 வரைக்கும் செலவாயிருச்சு!

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கலெக்டர் அந்த ஊரில் ஊரங்கு உத்தரவை அமுல்படுத்தினார்.  எதிர்தரப்புக்கு ஏற்கனவே பல அடிதடி, கேஸ் என பரிச்சயம் இருந்தது. அதனால் எங்க சொந்தகாரங்கள் எல்லோருடைய பெயரையும் போலீஸ் கம்பளைன்ட்ல் சேர்த்துவிட்டார்கள். எங்களுக்கு பரிச்சயம் இல்லாததால் பெயர் தெரிந்த 16 பேர் மீது மட்டும், வழக்கு தந்தோம்.  இந்த பிரச்சனையில் முக்கிய தலைகளை அவசரக்கதியில் நாங்கள் விட்டுவிட்டோம்.

இந்த மூன்று வருடமாக வாய்தா, வாய்தா என அலைந்து கொண்டிருக்கிறோம்.  ஏற்கனவே இரண்டு வழக்கறிஞர்களை வைத்து வழக்கு நடத்தினோம்.  இருவருமே எதிர்தரப்புக்கு அறிமுகமானவர்களாக இருந்தார்கள்.  அவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக தெரிந்ததால், இப்பொழுது மூன்றாவது வழக்கறிஞரை சந்தித்து, கேஸ் கட்டை கொடுத்திருக்கிறோம்.  வழக்கு நடத்த ஒரு லட்சம் கேட்டிருக்கிறார்.  பழைய வழக்கறிஞர்களுக்கு ரூ. 30000 வரை கொடுத்திருந்தோம்.

*****

'சரி! அந்த பெண்ணை காதலிச்சீங்களா!' என்றேன்.

'நான் 10ம் வகுப்பு படித்த பொழுது, அவங்க 12ம் வகுப்பு படிச்சாங்க!  இருவரும் விரும்பினோம்' என்றார். :)

'இவ்வளவு களேபரம் ஆயிருச்சே!  இரண்டு பேரும் வேறு வேறு சாதியா!" என்றேன்!

'ஒரே சாதி' என்றார். :(

'அந்த பொண்ணு இப்ப எப்படி இருக்கிறார்?

'வேறு ஒருத்தருக்கு கட்டி கொடுத்திட்டாங்க!' என்றார்.

'இதுல கொடுமை என்னன்னா! இவ்வளவு கலாட்டா ஆயிருச்சேன்னு! இனி சரிவராது நான் ஒதுங்கிட்டேன்! காதலிச்சு கழட்டி விட்டுட்டான்னு  வேறு என்னை திட்டி திரிந்தார்கள்' என்றார்.

****

Friday, July 13, 2012

ஒரு அரியர்ஸ்-ம் தொடர் சோகமும்!

நண்பரின் அண்ணன் அவர்.  இரண்டு நாள்களுக்கு முன்பு பார்த்தேன். தன் கதையை நீண்ட நேரம் சொல்லிக்கொண்டிருந்தார். சுருக்கமாய் அவர் சோகத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

ஆசிரியர் பயிற்சிக்காக 2003ல் ஒரு தனியார் கல்லூரியில் படித்தார்.  தனிப்பட்ட சில பிரச்சனைகளால், இறுதி தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சியடையாமல் போனார். அங்கு தொடங்கியது அவருக்கான சோதனை.

அந்த ஆண்டு அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. அனுமதியில்லாமலும், முறையில்லாமலும் நடத்தப்பட்ட பல தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்தது.  அதில் அந்த ஆண்டு தேர்ச்சியடைந்தவர்கள் தப்பித்தார்கள்.  தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அரசு தனது பயிற்சி கல்லூரிகளில் பெருந்தன்மையாக இடம் கொடுத்து படிக்க அனுமதித்தது.  மீண்டும் ஒரு வருடம் முதலிருந்து படித்தார்.

இன்னும் சில ஆண்டுகளில் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கட்டிட சூப்பிரவைசராக பணிபுரிந்தார்.  அவருடன் 2003ல் படித்த நபர்களுக்கு 2010 வாக்கில் வேலை கிடைத்தது. இவர் ஒரு வருடம் தள்ளி தேர்வானதால், அடுத்த வரும் ஆண்டுகளில் வேலை கிடைத்துவிடும் நம்பிக்கையோடு இருந்தார். 

அடுத்து வேலை வாய்ப்பு மூப்பு என்பது இனி மாவட்ட அளவில் இல்லை. மாநில அளவில் என அரசு ஒரு அறிவிப்பு செய்தது.  நொந்தே போனார்.  வேறு வழியில்லை.  காத்திருக்கலாம் என ஆறுதல் செய்துகொண்டார். 

அரசே அடுத்த அதிர்ச்சியும் தந்தது  'தகுதி தேர்வு எழுத வேண்டும்'!  பார்க்கிற வேலையையும் விட்டுவிட்டு, ரூ. 10000 கட்டி ஒரு கோச்சிங் வகுப்பில் சேர்ந்து ஒரு மாணவனை போல, விழுந்து விழுந்து படித்தார். படிக்கும் பொழுது, வயது 40 ஐ நெருங்கிவிட்டதால், நினைவாற்றல் மங்கி கொண்டு வருகிறது! என புலம்பினார்.ஒரு அரியர் வைச்சது தப்பாயா?! என வடிவேல் பாணியில் புலம்பிகொண்டு இருக்கிறார்.

நேற்று தகுதி தேர்வு எழுதி முடித்து, பேட்டி தந்த பல ஆசிரியர்கள் 'கேள்விகள் கடினமாக இருந்தது.  நேரம் குறைவாக இருந்தது' என கண்ணீர்விட்டார்கள்.   நண்பரின் அண்ணனுக்கு ஆறுதல் சொல்ல போன் அடித்தால், ரிங் போய்க்கொண்டே இருக்கிறது!

Friday, June 29, 2012

ஒரு கல்லில் இரண்டு மாங்கா! - காவல்துறை

எங்கள் அலுவலகம் அருகே ஒரு சாலையில் நெரிசல் அதிகம் என அந்த பாதையை ஒருவழிப்பாதையாக மாற்றியது போக்குவரத்து காவல்துறை!

"இது ஒரு வழிப்பாதை மாற்றுப்பாதையில் போ!" என சொல்வதற்கு இரண்டு போலீஸ்காரர்களையும் நியமித்திருந்தார்கள். மக்களும் மீண்டும் மீண்டும் அந்த பாதையை பயன்படுத்த முனைந்தார்கள்.

இரண்டு காவல்துறைக்கு தண்டமா சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கே! மக்களும் திரும்ப, திரும்ப இந்த சாலைப்பக்கம் வருகிறார்களே என ரூம் போட்டு யோசித்த போலீஸ், ஒரு ஏற்பாடு செய்தது.

கூடுதலாக ஒரு சார்ஜன்டை நியமித்து, அந்த இடத்தை சோதனை செய்யும் இடமாக மாற்றிவிட்டது.  ஹெல்மெட் போடாதது, லைசன்ஸ் இல்லாதது, காரில் கருப்பு கண்ணாடி ஓட்டாதது என இப்பொழுது (லஞ்ச) வசூல் மழையில் நனைகிறார்கள். மக்களும் இந்த பாதையில் தலை வைக்காமல் தெறித்து வேறுவழியில் போகிறார்கள்.

ஸ்காட்லாண்ட்க்கு அடுத்து நம்ம போலீஸ் சூப்பர் என்பது இப்படி சிந்திப்பதில் தான் நிரூபிக்கிறார்கள்.

Sunday, June 17, 2012

மனம் கொத்திப் பறவை!

சாரு ஆனந்த விகடனில் தொடர் எழுதிய பொழுது வைத்த பெயர்.  தமிழ் இயக்குநர்களுக்கு, கதை விசயத்தில் கற்பனை வறட்சி போலவே, படத்திற்கு பெயர் வைப்பதிலும் கற்பனை வறட்சி தான்.  இலக்கியவாதிகளை கேட்டால் நல்ல தமிழ் பெயர்களை தருவார்கள் இந்த பெயர் உதாரணம்.

படத்தைப் பற்றி பல பதிவர்களும் எழுதியிருக்கிறார்கள். படமும் மிக லேசான படம் தான். அதனால் சுருக்கமாய் என் கருத்தை பகிர்கிறேன்.

****

கதை எனப் பார்த்தால்...

நாயகனும், நாயகனும் கிராமத்தில் எதிரெதிர் வீடுகளில் வசிப்பவர்கள். ஒரே வயது. இணைந்தும் படித்தவர்கள். நாயகன் காதலிக்கிறார். . நாயகியின் வீடு சாதிப்பெருமை பேசி, அடிதடிகளில் ஈடுபடும் முரட்டு குடும்பம். அதனால் நாயகியோ எந்தவித ரியாக்சனும் காட்டாமல் இருக்கிறார்.

ஆனால், அந்த பெண் தன்னை காதலிப்பது போல தன் நண்பர்களிடம் அதிகமாய் பீலா விடுகிறார்.  இதற்கிடையில் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.  நாயகன் கெஞ்சுகிறார். தன் குடும்ப மானம் பெரிது.  வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள் என நாயகி மறுத்துவிடுகிறார்.

பெண்ணின் நிலை அறியாமல், திருமணத்திற்கு முதல் நாள், காதலர்களை இணைத்து வைக்கிறேன் பேர்வழி என சோகத்தில் குடியில் மயங்கி கிடக்கும் (ஒருதலை!) காதலனை அள்ளி காரில் போட்டு, பெண்ணையும் மயக்கத்தில் ஆழ்த்தி கடத்துகிறார்கள்.  இடைவேளை. திருமணம் தடைபடுகிறது. பெண்ணின் குடும்பத்து ஆட்கள் வெறியோடு துரத்துகிறார்கள். இறுதியில் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதை திரையிலோ, திருட்டு டிவிடியிலோ அல்லது இன்னும் மூன்று மாதங்களில் சின்னத்திரைக்கு வரும் பொழுதோ பார்த்துக்கொள்ளுங்கள்.

****

இயக்குநர் எழிலை எனக்கு பிடிக்கும்.  அவருக்கு இது ஆறாவது படம்.  முதல் படம் துள்ளாத மனமும் துள்ளும். இதற்கு முந்தைய படம் 'தீபாவளி' . எழிலின் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம்.  இந்த படமும் அதற்கு விதிவிலக்கில்லை.  ஆனால், படத்தை பார்க்கும் பொழுது, திரைக்கதை, இயக்கம் எல்லாம் ஒரு புதிய இயக்குநர் எடுத்தது போல இருக்கிறது. அமெச்சூர்தனம் தெரிகிறது.  பட்ஜெட் படம். எழிலும் தயாரிப்பாளர்களில் ஒருவராம். 

காதல், காமெடி என படம் நகருகிறது.  நாயகன், நாயகியை விட, சிங்கம்புலி போன்ற துணை நடிகர்கள் கலகலப்பாய் நகர்த்துகிறார்கள். பாடல்களும் தேறுகிறது. இடைவேளைக்கு முன் இருந்த ஒரு கலகலப்பு, இடைவேளைக்கு பின் இல்லை. ஒரு கல் ஒரு கண்ணாடி, கலகலப்பை விட இந்த படம் ஓகே. ஓகே. திரையரங்குகளில் இப்போதைக்கு பார்ப்பதற்கு படமே இல்லை. அதனால், இன்னும் சில நாள்கள் திரையரங்கில் தாங்கும். 

****

Friday, June 15, 2012

சாப்பாடு - சில குறிப்புகள்!

நான்கு ஆண்டுகள் இருக்கலாம்.  வேலை தொடர்பாக சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்து போகும் பொழுது, புரசைவாக்கம் சரவணபவனில் மதிய சாப்பாடு சாப்பிடுவேன். சாம்பார், துவையல், பொரியல், கூட்டு என எல்லாமும் சுவையாக இருக்கும்.  மதுரை 'டச்' இருக்கும்.  இரண்டுமுறையாவது பொரியலும், கூட்டும் வாங்கி சாப்பிடுவேன்.

நாவில் இருந்த சுவையின் ஆர்வத்தில் இன்று அண்ணாநகரில் உள்ள சரவணபவன் போயிருந்தேன்.  சாம்பார் துவங்கி எல்லாவற்றிலும் 50% சுவை குறைந்திருந்தது. எல்லாவற்றிலும் உப்பு 70% தான் இருந்தது.  பக்கத்தில் உப்பு புட்டியை வைத்திருந்தார்கள்.  பில்வரும் பொழுது தான் அர்த்தம் புரிந்தது.  அளவு சாப்பாடே ரூ. 75.  வசதியானவர்கள் வரக்கூடிய இடமாகி போனதால், உப்பின் அளவை குறைத்திருக்கிறார்கள் என அறிந்தேன்.  முன்பெல்லாம் எல்லா குழம்பு வகைகளையும், பொரியல், கூட்டு வகைகளை கையில் வைத்து, கூப்பிடாமலே பரிமாறுவார்கள்.  இன்றோ வாய்விட்டு கேட்டு, காக்க வைத்து தான் பரிமாறினார்கள்.

சென்னையில் மதுரை 'டச்'சில் சாப்பாடு கிடைப்பது அபூர்வம்.  கிடைத்த ஒரு கடையை இழந்ததில் வருத்தம் அதிகம். :(

***

நானும் பலமுறை கவனித்துவிட்டேன்.  ஒரு பகுதியில் குடியேறி, ஒவ்வொரு உணவகமாக சாப்பிட்டு, பகுதிக்கு ஒரு கடை தான் சாப்பிடும்படி தேறுகிறது.  நானாவது பரவாயில்லை.  வீட்டில் சமைப்பதற்கு ஒரு அம்மா வருகிறார்.  மூன்று வேளையும் சென்னையில் உணவகத்தில் சாப்பிடுபவர்கள் உண்மையிலே 'சாபம்' வாங்கியவர்கள்.  பர்சு காலியாகும். வயிறும் புண்ணாகும்.  நாக்கு செத்துப்போகும்!

***

சமையல் என்பது ஒரு வேதியியல் தொழிற்சாலை தான். நம் தமிழக சமையல்முறை என்பதோ பல பொருட்கள் சேர்க்கப்படும் சுவையான சமையல்.  நான் ஒவ்வொருமுறை சமைக்கும் பொழுதும் சாம்பார் ஒவ்வொரு சுவையுடன் வருகிறது.  அம்மாக்களின் கைப்பக்குவத்தில் எப்படி ஒரே மாதிரி அருமையான சுவையுடன் வருகிறது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்.  தண்ணீரை சுடவைத்தால், ஒரு நிலையில் ஆவியாகும் அல்லவா!  அது போல நம் அக்காக்கள் பல காலம் சமைத்து ஒரு "சிறப்பு தேர்ச்சி" பெற்றிருக்கிறார்கள் என்பதாக அறிகிறேன்.

நமது சமையல் முறை கொஞ்சம் அதிக பொருட்கள் அடங்கியிருப்பதாலே நிறைய நேரத்தை சாப்பிட்டுவிடுகிறது.  அதைவிட சலிப்பூட்டும் வேலை.  பாத்திரங்களை கழுவும் வேலை.  இதற்காகவே பலமுறை சமைக்காமல் விட்டதுண்டு!

சமையலறை இன்னொரு துயரம்.  சமைப்பதில் ஏற்படும் சோர்வு இருமடங்காகிறது.  காரணம் சமையலறை சிறியதாக, காற்று உள்ளே வராத அளவிற்கு, இருட்டாக இருக்கிறது.  ஆண்கள் சமையல் கட்டு பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது.  பெண்களும் ஏன் இவ்வளவு சகிப்புத்தன்மையுடன் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம்.

சமையலில் புழங்கும்பொழுது ஒரு விஷயம் மண்டையில் உறைக்கிறது.  நம் அம்மாக்களையும், அக்காக்களையும் பல காலம் அடுப்படியில் தள்ளி அவர்களை காலி செய்திருக்கிறோம்.  இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு தற்காலிகமாக ஆண்களும் சமையலில் ஈடுபடவேண்டும். கொஞ்சம் தூரப்பார்வையில் சமையல் அறை இல்லாத வீடுகள் உருவாக்கப்படவேண்டும்.  தெருவுக்கு ஒரு சமையல் கட்டு.  கூட்டு சமையல். கூட்டு சாப்பாடு என்பதாக வாழ்க்கை விரியவேண்டும்.

***

Wednesday, June 6, 2012

சிறகடித்து பறந்தன!

"குட்மார்னிங்"
"குட் நைட்"
"கடி ஜோக்ஸ்"
மொக்கை ஜோக்ஸ்"
- என எல்லா எஸ்.எம்.எஸ்-மும்
கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து
இப்பொழுது
சுத்தமாய் நின்றுபோய்விட்டன!
சீரியசாகிவிட்டேனே?!
வயசாயிருச்சா?!

****

பலருடைய படைப்புகளை வாசிக்கும் பொழுது படிமங்கள்; வரலாற்று அறிவு; வார்த்தை செறிவு என பல விசயங்கள் அசத்துகின்றன. நாம் எழுதுகிற வடிவம் ஒன்றுமே இல்லையென தோன்றுகிறது.

ஆனால், எளியவர்களை பற்றி நாம் பதிவு செய்கிறவை மிக முக்கியமானவை என்றும் தோன்றுகிறது.

****

நாவல் படிக்கும் பொழுது தான், கொஞ்சம் தள்ளி நின்று தன்னையும், சுற்றி வாழ்கிற மனிதர்களையும் கவனிக்கும் பார்வை கூடுதலாக கிடைப்பதாக உணர்கிறேன்.

****

எழுதுகிற விசயங்கள் மெல்ல மெல்ல ஒன்றோடு ஒன்றாக மனதில் சேர்ந்துகொண்டே வருகிறது. இதை எழுதி முடித்தால் தான், இன்று நிம்மதியாய் தூக்கம் வரும் எனும் பொழுது அது பதிவாகிவிடுகிறது.

****

- கடந்த வாரம் முகநூலில் பகிர்ந்தவை!

Saturday, May 19, 2012

முள்ளிவாய்க்காலுக்குப் பின்! - பெண்களின் நிலை!

நேற்று மாலையில் தி.நகரில் "முள்ளிவாய்க்கலுக்குப் பின்"என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.  நண்பருடன் போயிருந்தேன். பாண்டிமாதேவி என்பவர் தற்பொழுது ஈழத்துப்பெண்களின் அவலநிலையை சொன்னார்.  அதை உங்களுடன் பகிர்கிறேன்.

****

ஈழத்தில் இப்பொழுது 19 வயதிலிருந்து  35 வரை ஆண்களே இல்லை.  பலர் போரில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்டுவிட்டார்கள்.   பலர் காணாமல் (!) போய்விட்டார்கள்.  பலர் சிறையில் இருக்கிறார்கள். அதனால், அங்கு விதவை பெண்களும், கணவன், மகன் இல்லாத பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

அவர்களுக்கென்று பாதுகாப்பான வீடு இலை. தார்ப்பாலின் அமைத்து தங்கியிருக்கிறார்கள். அது திறந்தவெளி வீடு போலத்தான்.  ஆண்கள் துணையில்லாமல் இருப்பதால், இரவில் இலங்கை இராணுவத்தினர் பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்.

ஆங்காங்கே இராணுவத்தினர் சோதனை செய்வதாக தடுப்பரண்களை உருவாக்கியிருக்கிறார்கள்.  பெண்குழந்தைகள் இதைத்தாண்டி தான் பள்ளிகளுக்கு செல்லவேண்டும்.  பள்ளிக்கு போகலாம். அது ஒருவழிப்பாதை தான். வீடு திரும்பமுடியாது.  அவர்களுக்கு கடந்தகால கசப்பான அனுபவம் நிறைய உண்டு.

முன்பு  ஒரு பெண்குழந்தை பள்ளிக்கு போனவள் திரும்பவே இல்லை.  தேடிப்போன அம்மாவும் திரும்பவில்லை.  பக்கத்துவீட்டுக்காரர் தேடிப்போனார். அவரும் திரும்பவே இல்லை.  மொத்தமாக பகுதி மக்கள் தேடிப்போய் கேட்டால் யாரும் இங்கு வரவில்லை என்றார்கள்.  பக்கத்தில் ஈரமண்ணைப் பார்த்து தோண்டிப்பார்த்தால், பல பெண் குழந்தைகளும், பெண்களும் அதில் இருந்தார்கள். இதனால் பள்ளிக்கு யாரும் தங்கள் பெண் குழந்தைகளை அனுப்புவதில்லை.

இப்படி இராணுவத்தினரால் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாவாதிலேயே இளம்வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு திருமணத்தை நடத்திவிடுகிறார்கள்.  முதல் பிரசவத்திலேயே பலரும் இறப்பார்கள் என்பது எதார்த்தம்.

அங்கு இப்பொழுது யாருக்கும் வாழ்வதாரமே இல்லை.  ஆனால் சாராயம் மட்டும் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இருக்கின்ற சில ஆண்களும் குடிகளில் மூழ்கிகிடக்கிறார்கள். பெண்கள் தங்கள் உடலை விற்றுத்தான், பிள்ளைகளை காப்பாற்றவேண்டிய அவலநிலை.  சிங்களவர்கள் வேலை செய்யும் அலுவலகங்களில் மாதத்தின் முதல் வாரத்தில் அங்கு போய் வாசலில் நிற்கிறார்கள்.

****

Friday, May 11, 2012

மனிதர்கள் 15 - ரேவதி

அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் குறித்து சமூக அக்கறை கொண்ட அரசு பள்ளி ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.   அவர் சில செய்திகளை பகிர்ந்துகொண்டார்.

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள் குறைவு என்ற குறைகள் உண்டு.    தனியார் பள்ளிகளில் நிறைய குறைகள் உண்டு.

வசதி இல்லாததினாலேயே பள்ளிகளில் இடைநிற்றல்கள் அதிகமாக இருக்கிறது.  என் வாழ்வில் நிறைய நல்ல மாணவ/மாணவிகள் பள்ளி படிப்பை பாதியிலேயே நிற்கும் பொழுது வருத்தமாக இருக்கும். 

அப்படி ஒரு மாணவி தான் ரேவதி.  1ம் வகுப்பிலிருந்து கவனித்து வருகிறேன்.  நல்ல சுறுசுறுப்பான, அறிவான பெண்.  தமிழில் கூட 100க்கு 100 வாங்குகிற பெண் அவள்.  ஒரு எழுத்துப்பிழை, சந்திப்பிழை கூட இருக்காது.  இரண்டு முறைக்கு, மூன்றுமுறை கூட சோதித்துவிடுவேன். பிழையே இருக்காது.

அந்த பெண்ணின் குடும்ப சூழ்நிலை. அப்பா போஸ்டர் ஒட்டுகிற தொழிலாளி.  அம்மா மனநிலை சரியில்லாதவர்.  யாரையாவது திட்டிக்கொண்டே இருப்பார்.  அந்த பெண்ணின் படிப்பு செலவுகளை அப்பா தவறாமல் நிறைவேற்றிவிடுவார்.  அவரும் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது நோயில் இறந்தார்.  அம்மாவிற்கும் நோய் முற்றியது.  பத்தாம் வகுப்பு முடிந்ததும், படிப்பை தொடரமுடியவில்லை.

என்னைப் போல ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து உதவி செய்து, 12ம் வகுப்பு வரை படிக்க வைத்தோம். நல்ல மதிப்பெண்கள் வாங்கினாள்.  ஆனால், அதற்கு மேல் படிப்பைத் தொடரமுடியவில்லை.  எங்களாலும் அதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியவில்லை.

படிப்பில் ஆர்வம் இருந்தும், வாழ்க்கை நெருக்கடி திசை திருப்பிவிட்டது.  ஒரு பையன் அந்த பையனை காதலித்தான்.  வேறு வழி தெரியாமல், அந்த பையனை திருமணம் செய்துகொண்டாள்.

இப்பொழுதும் ரேவதி போல பல மாணவ/மாணவிகளை பார்த்துத்தான் வருகிறோம்.  நன்றாக படிக்க கூடிய மாணவர்கள் இடையில் நிற்பதும், வசதி, வாய்ப்பு இருப்பதினால், சுமாராக படிக்ககூடிய மாணவ, மாணவிகள் மாஸ்டர் டிகிரி வரைக்கும் படிப்பதையும் பார்த்து வருகிறோம். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் மக்கள் அரசு வரவேண்டும்.  கல்வியில் தனியார்மயம் ஒழிக்கப்பட்டு, இலவச கல்வி வழங்கப்பட்டால், இங்கு அனைத்து மாணவர்களும் நன்றாக மேலே வருவார்கள்.

*****

Friday, May 4, 2012

வழக்கு எண் : 18/9

படம் வந்த அன்றைக்கே படத்திற்கு போய், பல மாதங்களாகிவிட்டது.  கடைசியாய் இராஜபாட்டையில் சிக்கி சின்னபின்னாமாகி வெளியே வந்தேன்.  இப்பொழுதெல்லாம், விமர்சனம் படிக்காமல் எந்த படமும் பார்ப்பதில்லை.  பதிவர்கள் தான் உடனுக்குடன் படம் பார்த்து, விமர்சனம் எழுதி,  பல மோசமான படங்களிலிருந்து காப்பாற்றுகிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.  நேற்று இந்த படத்திற்கு நண்பனுடன் போனேன்.

****

இயக்குநர் பாலாஜி சக்திவேலை எனக்கு பிடிக்கும்.  அதிமுக கருங்காலிகள், தர்மபுரி அருகே பஸ் எரித்து மூன்று மாணவிகளை உயிரோடு கொளுத்திய கொடுமையான நிகழ்வை 'கல்லூரி' என படம் எடுத்தார்.  சரியாக போகவில்லை.  தமிழகத்தின் மிக முக்கியமான நிகழ்வை தான் சரியாக கையாளவில்லை.  வேறு யாராவது எடுத்திருந்தால் சரியாக கையாண்டிருப்பார்கள் என உண்மையிலேயே நேர்காணலில் வருந்தினார்.  தமிழ்ப்பட நச்சு சூழலில் அந்த கதையை யாரும் தொட்டிருக்கவே மாட்டார்கள் என்பது தனிக்கதை.  இருப்பினும் ஒரு படைப்பாளிக்குரிய நேர்மை அவருடைய பேச்சில் இருந்தது.

இடைக்காலங்களில் வேறு படங்கள் எடுக்காமல், ஷங்கர் எடுத்த படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக வேலை பார்த்துகொண்டிருந்தார்.  இங்கு பல புகழ்பெற்ற இயக்குநர்கள் எல்லாம் தயாரிப்பு நிர்வாகியாக இருக்கவேண்டியவர்கள் தான்.  இந்த மனுஷன் கை சுத்தமாக நேர்மையாக இருந்த காரணத்தினாலேயே, தயாரிப்பு நிர்வாகியாக முடங்கிபோயிருந்தார்.

****

இந்த படம் பல சமூக அவலங்களை, நிகழ்வுகளை தொட்டுச் செல்கிறது.

வட்டிக்கு வாங்கி விவசாயத்தில் போட்டு, விளையாமல் நொடித்துப்போய் தனது கிட்னியை விற்று தற்காலிகமாக நெருக்கடியை தீர்ப்பதா? அல்லது தற்கொலை செய்து செத்துப்போவதா? என்கிற இந்திய விவசாயின் அவலநிலை.

தொழில்கள் எல்லாம் நொடித்து கிடக்க, பெற்றோர்கள் வேலையின்றி அலைந்து திரியும் பொழுது, படிக்கிற வயதில் வேலைக்கு செல்லும் சிறுவர்களின் அவலநிலை.

சுதந்திரம் அடைந்து (!) 60 ஆண்டுகளுக்கும் மேலாகி இந்த நாட்டில் கொத்தடிமை முறை ஒழிக்கப்படாத அவலநிலை!

கூத்துக்கலைகள்  அழிந்து,  கலைஞர்கள் எல்லாம் கூலிகளாக மாறிக்கொண்டிருக்கும் நிலை!

அதிகாரவர்க்கமும், பணம் படைத்த வர்க்கமும் எப்படி எளியவர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்துகொள்கிறார்கள்? என்பதை படம் அழுத்தமாக சொல்லியிருக்கிறது.  நமது முதலமைச்சர் நித்தமும் புகழ்கிற கண் துஞ்சாமல் மக்களுக்கு 'சேவை' செய்யும் காவல்துறையை பற்றி நன்றாகவே பேசியிருக்கிறது.

படத்தில் இன்னும் பிடித்த விசயங்கள்.  தனியாக பாடல்கள் இல்லை.  சண்டைகள் இல்லை. இரண்டு மணி நேரம்தான் படமே!

நம் பகுதியில் நடக்கும் யதார்த்த கதையாய் விரிகிறது.  படத்தில் வருகின்ற யாரும் பார்த்த முகங்களே இல்லை; எல்லோருமே புதியவர்கள்.  இயல்பாக வலம் வருகிறார்கள்.

எளியவர்கள் வாழ்க்கையில் சிறு வயதிலிருந்தே பல்வேறு துன்ப துயரங்களை பார்த்து பக்குவப்பட்டு வளர்ந்தவர்கள். அநீதிகளுக்கு எதிராக சகித்துக்கொண்டு வாழமாட்டார்கள்.  எதிர்த்துப் போராடுவார்கள் என்பதை சொல்லும் இறுதிக்காட்சி  அருமை!

படத்தின் இறுதி பிரேமாக சிதைந்த ஓவியமாக அந்த பெண்ணை காட்டும் பொழுது, குரூரமான சமூகத்தை நினைத்தால் மனதில் பகீரென்று இருக்கிறது. நாம் தொடர்ந்து போராட வேண்டியது நிறைய உள்ளது என்பதை உணரமுடிகிறது.

***

படத்தில் நான் உணர்ந்த குறைகள் :

அந்த மத்திய தரவர்க்கத்துப் மாணவி காவல் நிலையத்தில் தானாக முன்வந்து நிகழ்வை சொல்வது! காவல் நிலையங்கள் எல்லாம் கேவலமாக இருக்கும் பொழுது, இப்படி நிகழ்வது சாத்தியமில்லாதது!  நிகழ்வு நடந்த பொழுது, அந்த பெண்ணும் உடனிருப்பதால்,  அந்த பெண்ணை விசாரணை செய்யும் பொழுது, சொல்வதாக வைத்திருக்கலாம்.

இறுதியில் அப்பாவி இளைஞன் வெளியே வந்து, உண்மைக் குற்றவாளி தண்டிக்கப்படுவது போல போகிற போக்கில் சொல்லப்படுகிறது.  காசுக்கு விலைபோகும் காவல்துறை, நீதித்துறை உள்ள பொழுது, உண்மை குற்றவாளி தண்டிக்கப்படுவது அவ்வளவு எளிதா என்ன!  பல்வேறு அமைப்புகள், மக்கள் போராட்டகளுக்கு பிறகு கொஞ்சம் சாத்தியம்.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

Wednesday, May 2, 2012

மருந்தும் வாழ்வும்!

உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள், சொந்தபந்தங்கள் என பலரையும் நெருங்கி பார்த்தால், ஏதேனும் ஒரு நோய்க்காக தினசரி மருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.  சிலர் சர்க்கரை நோய்க்காக; ஒருவர் ஒவ்வாமை பிரச்சனைக்கு; இன்னொருவர் தைராய்டு பிரச்சனைக்கு! இன்னொருவர் மனபதட்டத்தை தணிப்பதற்கு!  நோய் வதைக்கிறது என்றால், மருந்து எடுத்துக்கொள்வது கூடுதலாக வாட்டுகிறது.

இவர்களில் பெரும்பாலும் அலோபதி மருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.  நானும் சில காலம் வயிறு தொந்தரவுக்காக மருத்துவம் பார்த்தேன்.  பெருநகரங்களில் இருக்கும் பெரும்பான்மையான அலோபதி மருத்துவர்கள் நோயாளிகளிடம் பேசுவதேயில்லை. நோயை கண்டறிகிறார்கள்.  உடனே மருந்து சீட்டு எழுதி தந்துவிடுகிறார்கள். என்ன உணவு சாப்பிடுகிறாய்? இதை தவிர்! இதை எடுத்துக்கொள் என நோயாளியின் மீதான் அக்கறை கொண்டு எதையும் சொல்வதில்லை.  எதை வேண்டுமென்றாலும் உன் விருப்பம் போல தின்றுகொள்! இந்த மருந்து, மாத்திரைகளையும் அத்துடன் உள்ளே தள்ளிவிடு! என்பதாக தான் இருக்கிறது.  "யாரிடம் வேண்டுமென்றாலும் போ! காண்டம் பயன்படுத்து" என்கிற விளம்பரம் தான் நினைவுக்கு வருகிறது!

அலோபதி மருத்துவத்தில், மாத்திரை, மருந்துகளின் விற்பனையில், புதிய கண்டுபிடிப்புகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தான் செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஏதாவது ஒரு நோய் ஒரு மனிதனை தாக்கிவிட்டால், அவன் வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதாகவே, மருந்து கண்டுபிடிக்கிறார்களோ என சந்தேகமே வருகிறது. ஒவ்வாமையை கட்டுப்படுத்தும் சிட்ஜின் என்ற மாத்திரை சரியாக 24 மணி நேரம் வேலை செய்யும் என நண்பர் சொன்னார்.

இந்த சூழ்நிலையில் சமீப காலங்களில் சில நம்பிக்கைகள் தென்பட்டன.  பல ஆண்டுகளாக சர்க்கரை நோயினால் அவதிப்பட்ட நண்பரின் சித்தப்பா மாற்று மருத்துவத்தில் மருத்துவம் பார்த்திருக்கிறார்.  சில நாள்களுக்கு ஒரு மருந்து. மற்றபடி முழுவதும் உணவு கட்டுப்பாடு தான்!  இப்பொழுது அலோபதி மருந்தோ, மற்ற மருந்துகளோ இல்லாமலே உணவுக்கட்டுப்பாட்டிலேயே 6 மாதம் சர்க்கரையின் சரியான அளவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

இன்னொரு நண்பருக்கு ஆஸ்துமா தொந்தரவு இருந்தது.  இன்ஹேலர் தினசரி பயன்படுத்தி கொண்டிருந்தார்.  தினசரி மாத்திரையும் எடுத்தார்.  ஹோமியோபதி மருத்துவத்திற்கு மாறினார்.  மூச்சுப்பயிற்சிக்காக யோகா போனார். ஒவ்வாமை தரும் பொருட்களை கண்டறிந்து தவித்துக்கொண்டார்.  இப்பொழுது ஆஸ்துமாவிலிருந்து மீண்டுவிட்டார்.

மருத்துவர் காமராஜ் சொல்வது போல, மனிதர்கள் வெகுகாலம் உடல் உழைப்பில் தான் வாழ்ந்துவந்தோம்.  கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக தான், நவீன வசதிகள் மனிதனின் வாழ்வை உடல் உழைப்பிலிருந்து விடுதலை செய்திருக்கின்றன.

பெருநகர வாழ்க்கை பதட்டங்களும், தாறுமாறான உணவு பழக்கமும், உடற்பயிற்சியின்மையும் பல்வேறு நோய்களை நமக்கு தந்துவிடுகின்றன.  கவனமாய் இருந்து, ஆரோக்கியத்தையும், பர்சையும் பாதுகாத்துகொள்ள வேண்டும்!

Sunday, April 29, 2012

பயணம்

தம்பி ஊரிலிருந்து ஒரு தேர்விற்காக வந்திருந்தான்.   எழுதினான்.  போலியாவினால் சிறு வயதில் பாதிக்கப்பட்டதினால், கால் சாய்த்து நடப்பான்.  மாற்றுத்திறனாளி என்பதால், ரயில்வே கட்டணத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் குறைத்து சலுகை அளித்திருந்தது.  உதவிக்காக ஒரு ஆளை உடன் அழைத்து செல்லலாம்."நீ வர்றியா!" என்றான்.  எனக்கும் கூட ஊரில் செய்யவேண்டிய வேலை ஒன்றிருந்தது.  இருவரும் கிளம்பினோம்.

ரிசர்வ் டிக்கெட் என்பதால், சரியான நேரத்திற்கு போய்க்கொண்டிருந்தோம். அங்கு எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  நிலையத்தை அடைந்தோம்.  5 நிமிடம் தான் இருந்தது.  மாற்றுத்திறனாளிக்கான அந்த கோச்சை அடைந்தால், அருகில் உள்ள "பொது காம்பார்ட்மென்டை விட அதிகம் நிரம்பி வழிந்தது.   ஏறமுடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது.

இந்த பாண்டியன் விரைவு வண்டி தான், அன்றைக்கு கடைசி வண்டி.  இனி பேருந்தை பிடித்து, போவது என்பது சிரமம். முதலில் தம்பியையும், நானும் உள்ளே சிரமப்பட்டு உள்ளே ஏறினோம்.  நிலைமையை புரிந்துகொண்டு, கொஞ்சம் நிதானப்படுத்திக்கொண்டு, தம்பியை அங்கே நிறுத்தி, கூட்டத்திற்குள் உள்ளே புகுந்தேன்.

இரண்டு மாற்றுத்திறனாளிகள். அவர்களுக்கு இரண்டு உதவியாளர்கள் என நான்கு பேருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த சிறிய கோச் அது. அதற்குள் நெருக்கமாய் 60 பேருக்கும் மேல் இருந்தனர்.  கூட்டத்திற்குள் புகுந்து பெர்த் அருகே போய், நாங்கள் ரிசர்வ் செய்திருக்கிறோம்.  ஆகையால் இடத்தை விட்டு கீழே இறங்குங்கள் என சொன்னேன்.  அவர்களை பொறுத்தவரையில் அது இன்னொரு "பொது" காம்பார்ட்மென்ட்.  இதில் இவன் என்ன சம்பந்தமில்லாமல் உரிமை கோருகிறான் என்பது போல, ஒரு ஜந்துவை பார்ப்பது போல பார்த்தார்கள்.

15 நிமிடம் காரசாரமாய் பேசி, ரிசர்வ் செய்யப்பட்ட டிக்கெட்டை எல்லாம் 'ஆதாரமாய்' காட்டி, என்னுடைய 'வாய்த் திறமையால்' உட்கார மட்டும் தான் இடம் பிடிக்கமுடிந்தது.  வாயிலுக்கு அருகே நின்றிருந்த தம்பியை அழைத்து வந்து உட்கார வைத்தேன்.  தம்பியை முறைத்தேன்.  "ஏண்டா! இப்படி ஒரு நிலைமை இருக்கும்!' என சொல்லவே இல்லை" என்றேன். "இல்லைண்ணே! மதுரையில் ரயில்வே போலீஸ் வேறு யாரையும் ஏறவிடாமல் பார்த்துகொள்ளுவார்கள். சென்னையிலும் அப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்" என்றான்.

ஒரு மாற்றுத்திறனாளிக்கான ஒரு கோச்சை "பொது" காம்பார்ட்மென்ட்க்கு அருகே வைத்த, ரயில்வேயின் அறிவை நினைத்து, கெட்ட வார்த்தைகளால் திட்டினேன்.  சுற்றிபார்த்தேன்.  கண் தெரியாத ஒருவர் குடும்பத்துடன் உட்கார்ந்திருந்தார். அவர் அருகே கால் ஊனமான இன்னொருவர் தன் குடும்பத்துடன் அமர்ந்திருந்தார்.  இவ்வளவு கூட்டத்திற்கு காரணம் கடைசி வண்டி என்பது ஒரு காரணம். நாளை முகூர்த்தநாள் என்பது மற்றுமொரு காரணம். முக்கிய காரணம் பேருந்துகட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு.

இந்த நாட்டில் முதலாளிகளும், மேல்தட்டு வர்க்கமும் வசதியாய் விமானத்தையும் ரயிலில் முதல் வகுப்பையும் பயன்படுத்துகிறார்கள். நடுத்தரவர்க்கம் தனது பயணத்தை மூன்று மாதத்திற்கு முன்போ, இரண்டு மாதத்திற்கு முன்போ திட்டமிட்டு டிக்கெட் புக் செய்துகொள்கிறார்கள்.  இவர்களுக்கெல்லாம் கிட்டத்தட்ட ஒரு வண்டியில் 15 கோச்சுகளுக்கும் மேலாக விடுகிறவர்கள்,  பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு ஏன் இரண்டே இரண்டு ரிசர்வ் செய்யப்படாத கோச்சுகள் விடுகிறார்கள். ஏழைகளை பற்றியெல்லாம் இங்கே யார் கவலைப்பட போகிறார்கள்.

விடிய விடிய உட்கார்ந்து மோட்டுவளையத்தை பார்த்தபடியே, சிந்தித்துகொண்டே ஊர் போய் சேர்ந்தேன்.

Friday, April 27, 2012

மிதிவண்டி


பெட்ரோல் விற்கும் விலைக்கு காய்கறி வாங்க, ஜிம்முக்கு போக என எல்லாவற்றிக்கும் பைக் எடுத்து போவது கட்டுப்படியாகாமல் போய்கொண்டிருந்தது. 

ஒரு மிதிவண்டி வாங்கிவிட்டால் உடலும், பர்சும் ஆரோக்கியமாக இருக்கும் என தோன்றியது.  வண்டி வாங்கலாம் என யோசித்து, விலை கேட்டால், மூவாயிரம் என்றார்கள்.  பெட்ரோல் விலை கூட்டிக்கொண்டே போனால், இன்னும் அதிகமாக்கிவிடுவார்கள் போல!  நம் பட்ஜெட்டில் மூவாயிரம் என்பது பெரிய தொகை. வாங்கலாம் என யோசித்தே சில மாதங்கள் ஓடிப்போயின!

இதற்கிடையில் நண்பன் ஒருவன் வேலை நிமித்தமாக ஒரு வருடத்திற்கு வெளிநாடு போக, வண்டியை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி என்னிடம் தந்துவிட்டு போனான். 6 மாதங்கள் ஓடிவிட்டன.  நான் நினைத்தப்படி வண்டியை தினமும் ஓட்டமுடியவில்லை.  காரணம் எல்லா தேவைக்கான இடங்களும் தூரம் தூரமாய் இருப்பதால், வண்டியில் போய்வருவதற்கான நேரம் பிரச்சனையாயிருந்தது.

****

சிலநாட்கள் ஓட்டாமல் விட்டதால், வண்டியில் கொஞ்சம் தூசி சேர்ந்திருந்தது.  துடைக்க, துடைக்க வண்டி குறித்தான நினைவுகள் மெலெழும்பி வந்தன.

****
சிடி, டிவிடி வருவதற்கு முன்பு, வீடியோ கேசட்தான் பிரபலம்.  ஊரின் கடைசியில் இருக்கும் திரையரங்கில் வாரம் ஒருமுறை 'அஜல் குஜல்' படம் பார்த்து பரபரப்பாய் திரிந்த காலம். இரண்டு மணி நேரம் படம் பார்த்தால், 3 நிமிடம், 4 நிமிடம் பிட்டு ஓட்டுவார்கள். நாம் நிறைய பாவம் (!) செய்திருந்தால், ஒரு சின்ன பிட்டு கூட கிடைக்காது.  நொந்து போய் வரவேண்டியது தான்.

இதிலெல்லாம் மனம் திருப்தி அடையவில்லை.  நண்பர்களிடையே வசூலைப் போட்டு,  பிளேயரை வாடகைக்கு எடுத்து படம் போட்டு பார்க்கலாம் என முடிவுசெய்தோம்.  எடுத்தோமா பார்த்தோமோ என்றெல்லாம் உடனே பார்க்கமுடியாது.  இரண்டு சாத்வீகமான படங்களை குட்டிப்பசங்களுக்கு, பக்கத்துவீட்டு அம்மாக்களுக்கு படம் காண்பித்துவிட்டு, அவர்கள் அனைவரும் 2 மணிக்கு மேலே அசந்து தூங்க போன சமயத்தில், நாம் விசேஷமான படம் பார்க்கமுடியும்.  அப்படி பார்த்துவிட்டு, நண்பர்கள் எல்லாம் தூங்கி போக, 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தால், என் குதிரையை காணோம். அதுதாங்க என் மிதிவண்டி!  தொலைந்து போனதில் எனக்கு கூட பெரிய வருத்தம் இல்லை.எங்கம்மா தான் 1000 ரூ. வண்டி போச்சே!ன்னு 3 நாள் சோகமா இருந்தார்.

****

அன்று ஞாயிறு காலை.  டீனேஜ் வயது. எங்கள் தெருவில் குடியிருந்த ஈஸ்வரி, பக்கத்து தெருவில் வண்டி பழகி கொண்டிருந்தாள்.  நானும் நண்பனும் கட்டிமுடிக்கப்படாத ஒரு கட்டிடத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்தோம்.  திடீரென எங்கள் இருவர் பக்கம் திரும்பி இங்கே வாருங்கள்! என அழைத்தாள்.  வேறு யாரையும் அழைக்கிறதா! என இருவரும் வேகமாய் திரும்பி பார்த்தோம்.  யாரும் இல்லை.  நண்பன் வீட்டிற்கு பயந்து கொண்டு போகவில்லை.  நான் தைரியமாய் போனேன்.  தம்பியாலும், தங்கையாலும் வண்டி ஓட்டும்பொழுது, வண்டியை பிடிக்கமுடியவில்லை.  அதற்குத்தான் அழைத்திருக்கிறாள்.  ஈஸ்வரி வண்டியை ஓட்ட, நான் பிடித்துக்கொண்டேன். ஒரு மணி நேரம்.  கூச்சமாகவும், பதட்டமாகவும் இருந்தது.

அடுத்த நாள், என் அக்காவிடம் ஈஸ்வரிக்கு வண்டி ஓட்டக்கற்றுக்கொடுத்ததைப் பார்த்து வயித்தெரிச்சல் பட்டு, போட்டுக்கொடுத்துவிட்டார்கள். "அந்த பொண்ணு யாருடா! நம்ம அத்தைப் பொண்ணா!  மாமன் பொண்ணா! நீ சைக்கிள் சொல்லித்தர!" என ஒருமணி நேரம் திட்டு வாங்கியது தனிக்கதை!

****

சென்னையில் வாடகைக்கு வண்டி தருவதை பார்க்கமுடியவில்லை.  எங்கள் ஊரில் வண்டியை வாடகைக்கு தருவார்கள். 1 மணி நேரத்திற்கு 2 ரூ.  15 வயதில் காசு தட்டுப்பாடு அதிகம்.  அதனால் ஒரு வண்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, எல்லோரும் ஒல்லி. அதனால், ஒரே வண்டியில் 5 பேர் 4 கிமீ தள்ளி இருக்கிற ஒரு பச்சைக் கிணற்றில் குளிக்க போவோம்.  20 அடி உயரத்தில்  இருந்து தொபக்கடீர் என குளிர்ந்த நீருக்குள் குதித்து,  15 அடி ஆழம் வரை போய், வெளியே வருவது ஆனந்தம்.  இப்படி 3 மணி நேரமாவது ஊறிக்கிடப்போம்! இப்படி அந்த ஆண்டு தண்ணீர் வற்றிய காலம்வரை, கிணற்றை பாடாய்படுத்தினோம்.

****

மிதிவண்டி வாழ்க்கையின் பிரிக்கமுடியாத அங்கமாக இருந்தது! இப்படி மிதிவண்டி பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்!  பிறிதொரு சமயம், இன்னும் சொல்கிறேன்!

***