Tuesday, April 29, 2014

குக்கூவின் மறுபக்கம்!

ஒரு பொதுப்பிரச்சனையை தீர்க்க சட்ட ஆலோசனை வாங்க மக்களுக்காக போராடும் ஒரு வழக்கறிஞரை சந்திக்க நண்பருடன் போயிருந்தேன்.  உள்ளே இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.  பிறகு கடந்து சென்ற பொழுது அவர்கள் பார்வையற்றவர்களாக இருந்தனர்.

கொஞ்சம் ஆர்வக்கோளாறில் விசாரித்த பொழுது, குக்கூ படத்தின் கதை உருவாக்கத்திலும், படம் எடுக்கும் பொழுதும் பார்வையற்றவர்கள் தாங்கள் செய்த தொழிலை கூட விட்டுவிட்டு நிறைய உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்தவர்கள் அதிலுள்ள பார்வையற்றவர்களைப் பற்றிய நுணுக்கங்களை வைத்தே புரிந்துகொள்ளலாம்.  இரண்டு மாதங்களில் முழுக்க முழுக்க கண் தெரியாதவர்களை வைத்து ஒரு டாகுமென்டரி எடுக்கப்போகிறேன் என  சொல்லி குறைந்தபட்ச தொகையை சம்பளமாக பேசியுள்ளனர். பிறகு முழு நீளப்படம் எடுப்பதாக சொல்லி எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். படம் எடுத்தவர்கள் முதலில் பேசிய தொகையை கூட முழுதாக கொடுக்கவில்லையாம்.  படம் வெற்றி பெற்றால், ஒரு நல்ல தொகையை உழைப்பை கொடுத்தவர்களுக்கு வாங்கித்தருவதாக இயக்குநர் இராஜு முருகன் வாக்கு தந்திருக்கிறார்.

படம் நன்றாக ஓடிவிட்டது.  இப்பொழுது ராஜூமுருகனையோ, அவரது ஆட்களை தொடர்பு கொண்டால், எல்லோரும் தொடர்பு எல்லைக்கு எப்பொழுதும் வெளியே இருக்கிறார்களாம்.  தாங்கள் அப்பட்டமாய் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இப்பொழுது நீதி கேட்டு வந்திருக்கிறார்கள்.

சமீபத்தில் படம் வெற்றி பெற்ற சந்தோசத்தில் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் படத்தின் இயக்குநர் இராஜூ முருகனுக்கு 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒரு காரை பரிசளித்திருப்பதாக காரோடு இயக்குநரையும் செய்திதாளில் துணுக்கு செய்தியாக படித்தேன்.

ஆனந்தவிகடனில் ’வட்டியும் முதலும்’ தொடரில் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றித்தான் ஓராண்டுக்கும் மேலாக பதிவு செய்தார்.  இராஜூமுருகன் ஒரே ஒரு படம் எடுத்ததும், தனது விழுமியங்களை விட்டுவிடுவாரா என்ன?


இராஜூமுருகனுக்கு இனி நிறைய வாய்ப்பு கிடைக்கும். பார்வையற்றவர்களுக்கு? பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் உரிய நீதி கிடைக்க ஆதரிப்போம்!

Monday, April 28, 2014

The others – நல்ல அமானுஷ்ய படம்!

Orphanage பார்த்த சில மாதங்களுக்கு பிறகு திடுக்..திடுக் என பார்த்த இன்னொரு ஒரு நல்ல அனானுஷ்ய படம் இது!

இரண்டாம் உலகப்போர் காலகட்டம்! ஒரு பெரிய பங்களா! தனியாக இருக்கிறது! ஒரு அம்மா (கிரேஸ்) தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்துவருகிறாள்.  புதிதாக வீட்டு வேலைக்கு அம்மா, அப்பா, மகள் என ஒரு குடும்பமாய் வருகிறார்கள். 

”தன் குழந்தைகளுக்கு வெளிச்சம் ஒத்துக்கொள்ளாது. அதனால் எப்பொழுதும் அறையில் அடர்த்தியான திரைச்சீலைகள் மூடியபடி இருக்கவேண்டும்!  பல்புகளுக்கு பதிலாக, கொஞ்சம் பெரிய வகை சிம்னியை பயன்படுத்த வேண்டும். ஒரு அறையை விட்டு இன்னொரு அறைக்கு நகர்ந்தால், அறையை பூட்டிவிட்டு தான் போகவேண்டும்” என சில நிபந்தனை விதிக்கிறாள். மறுப்பில்லாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த பெண்ணின் கணவர் போரில் கலந்து கொள்ள போனவரைப் பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருக்கிறது.

அடுத்தடுத்து வரும்நாட்களில், அந்த வீட்டில் சில அமானுஷ்யங்கள் நடக்கின்றன.  திடீரென பியானோ வாசிக்கும் சத்தம் கேட்கிறது. அந்த அறையை திறந்து பார்த்தால், யாரும் இல்லை.  அவளின் பெண் Anne “இந்த வீட்டில் விக்டர் என்ற பையன் இருப்பதாகவும், அவனின் அம்மா, அப்பா, பாட்டி என மூவரும் இந்த வீட்டில் இருப்பதாக சொல்கிறான்” எனவும்  சொல்கிறாள்.  அம்மா பதட்டமடைகிறாள்.

நகருக்கு சென்று சர்ச் பாதிரியாரை அழைத்து வந்து, புனித நீர் தெளிக்கவைக்க வேண்டும் என சொல்லி கிளம்புகிற வழியில், Graceயின் கணவன் வந்துகொண்டிருக்கிறான்.  அவன் துணைக்கு இருக்கிறான் என்ற நம்பிக்கையில் வீடு திரும்புகிறாள்.  ஆனால், அவனோ நிறைய நோய்வாய்ப்பட்டவனாக இருக்கிறான்.  மீண்டும் உடனே ஊருக்கு செல்ல வேண்டும் என சொல்லி, அடுத்தநாளே சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி போய்விடுகிறான்.

ஒரு நாள் தூங்கி எழும்பொழுது, வீட்டில் எல்லா திரைச்சீலைகளும் காணாமல் போயிருக்கின்றன. வெளிச்சத்தைப் பார்த்ததும், பிள்ளைகள் வீல் என அலறுகிறார்கள்.  வேலைக்காரர்களைக் கேட்டால், எங்களுக்கு தெரியாது என்கிறார்கள். கோபத்தில் வீட்டை விட்டு அனுப்பிவிடுகிறாள். எதைச்சையாக ஒரு ஆல்பத்தை பார்க்கும் பொழுது,  வேலைக்காரர்கள் மூவருமே 50 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துபோனவர்கள் என தெரிகிறது. அவள் இன்னும் பதட்டமடைகிறாள்.

இறுதியில் அந்த வீட்டில் உள்ள ‘அமானுஷ்ய  சக்திகளை’ துரத்தினார்களா? அவர்கள் நிம்மதியாக வாழ்ந்தார்களா? என்பது திகில் கலந்து மிச்சக்கதை!
*****

’பேய்’ படம் என்றாலும், பேய் ஒருமுறை கூட வந்து நம்மை பயமுறுத்தவில்லை.  இறுதிக்காட்சி பார்த்ததும், கைப்புள்ள வடிவேல் சொல்கிற படி “இவ்வளவு நேரம் திருடனோடா சகவாசம் வைத்திருந்தோம்” என்கிற வசனம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது! கதையின் சிறப்பு அதன் திரைக்கதை தான்!

படத்தின் பாத்திரங்கள் மிக குறைவு.  எல்லோரும் அருமையாக அவரவர் பாத்திரங்களை செய்திருக்கிறார்கள்.  படத்தின் பிரதான பாத்திரமான குழந்தைகளின் தாயாக வரும் Nicole Kidman ன் நடிப்பு அபாரம்.  மொத்த படத்தையும் தாங்குவது இவரின் நடிப்பு தான்.  இசை, ஒளிப்பதிவு எல்லாம் அருமையாக பொருந்தி நிற்கின்றன.

ஏ.வி.எம் தயாரித்த திகில் படமான ‘அதே கண்கள்’ படத்தின் முதல் காட்சியில் ‘இந்த படத்தின் இறுதிக் காட்சியை யாருக்கும் சொல்லாதீர்கள்” என வேண்டிக்கொள்வார்கள். அது இந்த படத்திற்கும் பொருந்தும்! J


Friday, April 25, 2014

(அ)சுத்தம் – சில குறிப்புகள்!

காலை 9 மணி. வாஷ்பேசனில் தனது அழுக்கான கையை கழுவ ஆரம்பித்தாள். மதியம் 12 மணி.  இன்னும் அங்கிருந்து நகரவில்லை. கையை கழுவிக்கொண்டிருந்தாள்.  இது எத்தனையாவது முறை. அவளுக்கு அது நினைவில் இல்லை. அழுக்கு போகவில்லை என நம்பினாள்.  மீண்டும் திருப்தி வராமல், அழுக்கை துரத்திவிட வேண்டும் என வெறிகொண்டு கைமுட்டி வரை மீண்டும் சோப்பு போட்டு கழுவ ஆரம்பித்தாள்.
******

வீட்டில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக பார்க்க பார்க்க எல்லாமே அழுக்காய் தெரிந்தது.  ஒவ்வொரு பொருளாக வெளியே எறிய ஆரம்பித்தாள்.  மதியத்திற்குள் அந்த வீட்டில் அவள் மட்டும் தனியாக இருந்தாள்.  வேர்த்தது. உடம்பில் கொஞ்சம் பிசுபிசுப்பாய் உணர்ந்தாள்.  குளிக்க ஆரம்பித்தாள்.  குளித்துக்கொண்டே இருந்தாள்.
******

ஒரு தவளை வீட்டிற்குள் வந்து நின்றது.  உற்றுப்பார்த்தாள்.  தவளை ரெம்பவும் அழுக்காய் இருந்தது.  சில நிமிடங்களில் அது ரத்த சகதியில் மிதந்தது.  தவளை எங்கிருந்து வந்தது? யோசிக்க ஆரம்பித்தாள்.  கிணற்றுக்குள்ளிருந்து வந்ததாக தம்பி சொன்னான்.  அந்த தண்ணீரையா நாம் தினமும் பயன்படுத்துகிறோம் என மிக சீரியசாக சிந்திக்க ஆரம்பித்தாள்.
*****

தன் பெண்ணுக்கு குறை இருப்பதாக மாப்பிள்ளை பொய் சொல்வதாக அப்பா நம்பினார்.  ஒரு மாதத்திற்கு தன்னுடன் இருக்கட்டும் என அழைத்து சென்றார்.

“அப்பா! அந்த பிச்சைக்காரன் கடந்து போனேனே!  என் துப்பட்டா பட்டுச்சாப்பா!”
“இல்லம்மா! அவன் ரெம்ப தள்ளிப்போனாம்மா!  அதெப்படிம்மா பட்டு இருக்கும்?”
“இல்லப்பா! துப்பட்டா காத்துல பறந்து, அவன் மேலே பட்டுருச்சுப்பா!  நீங்க கவனிக்கல!” என ஆணித்தரமாய் சொன்னாள்.  துப்பட்டாவை அங்கிருந்த குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு நகர்ந்ததும் கொஞ்சம் நிம்மதியடைந்தாள். 

“நீங்க சொன்னது உண்மை மாப்பிள்ள!  நானே டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்!” என சின்னப்பிளை போல அழ ஆரம்பித்தார்.
****

கணவனுக்கு போன் அடித்து “நம்ம வீட்டுல இருந்த நகைகளை காணோம்!” என்றாள்.  மதியத்திற்குள் 10வது முறை போன் அடித்து, “போலீசு ஸ்டேசனில் புகார் கொடுக்கனும். சீக்கிரம் வாங்க!” என்றாள் படபடப்பாய்!
நகையும் கொஞ்சம் அழுக்காக தானே இருக்கும்! 30 பவுன் நகைகள். எப்பொழுது தூக்கிப்போட்டாளோ என கணவனுக்கு கவலை அரிக்க ஆரம்பித்தது! L

****

Wednesday, April 16, 2014

RIO 2 - ஒரு பார்வை!


RIO (2011) முதல் பாகம் பிடித்துப்போனதில், அண்ணன் பையன் இரண்டாவது பாகத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்தான்.  நேற்று இருவரும் பார்த்தோம்.

முதல் பாகத்தில் பல மோதல், கலாட்டாக்களுக்கு பிறகு இணைகின்ற நீல வண்ண கிளிகள் மூன்று குழந்தைகளோடும், லிண்டாவும், மருத்துவரும் இணைவதோடும் படம் முடியும்.

இந்த பாகத்தில், லிண்டாவும், மருத்துவரும் அரிய வகை இனமான நீல வண்ணக் கிளியின் இனத்தைத் தேடி அமேசான் காடுகளில் தேடுகிறார்கள்.  அங்கு ஒரு நீலவண்ண இறகை கண்டுபிடித்ததும் நம்பிக்கையுடன் சுற்றுகிறார்கள்.  

நகர வாழ்க்கையின் சகல வசதிகளோடும், Bluவும் அதன் குழந்தைகளும் பக்காவாக செட்டிலாகியிருக்கிறார்கள்.  ஆனால், இந்த நகர வாழ்க்கையை விட்டுவிட்டு, காட்டில் தன் சொந்தங்களோடு வாழவேண்டும் என Jewelக்கு நீண்டநாள் ஆசை.  லிண்டாவிற்கு உதவ Blu தன் குடும்பத்தோடும், நண்பர்களோடும் அமேசான் காடுகளுக்கு பயணிக்கிறார்கள்.

அமேசானில் தன் இனத்தை ஆயிரக்கணக்கில் கண்டுபிடிக்கிறார்கள்.  அங்கு Jewel தனது சொந்தங்களை பார்த்ததும், குதூகலிக்கிறது. தனது நீண்ட நாள் கனவு வாழ்க்கை கிடைத்ததும் மிகவும் சந்தோசப்படுகிறது. . நகரத்திற்கு செல்லாமல், அங்கேயே இருந்துவிட ஆசைப்படுகிறது.  பிள்ளைகளும் அங்கு இயல்பாய் செட்டிலாகிறார்கள் ஆனால், துவக்கத்திலிருந்தே வீட்டில் வளர்ந்த Blu விற்கு மட்டும் காட்டில் வாழ்வது சிரமமாக இருக்கிறது.  Blu வை அந்த குழுவில் ஒருவராக ஏற்றுக்கொள்ளவும் தயங்குகிறார்கள்.

இதற்கிடையில், சட்டத்திற்கு புறம்பாக மரங்களை வெட்டும் கும்பல் தங்களுக்கு தடையாக வரும் லிண்டாவையும், மருத்துவரையும் விரட்ட நினைக்கிறார்கள்.  கடந்தமுறை Blu விடம் தோற்று பலத்த அடி வாங்கி, பறக்க முடியாத ஆந்தையும் பழிவாங்க அங்கு வந்துசேர்கிறது.

காட்டை அந்த கும்பலிடமிருந்து காப்பாற்றினார்களா? Bluவை அவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டார்களா? என்பது கடைசியில் சில கலாட்டக்களுடன் சொல்லியிருப்பது மிச்ச சொச்ச கதை!

******

முதல் பாகம் காதல், மோதல், சேஸிங் என விறுவிறுப்பாய் இருந்தது.  திரைக்கதையும் நல்ல கிரிப்பாக இருந்தது.  இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தின் வேகத்தை பாதியை மட்டும் தான் கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தில் மூன்று பாடல்களை முதல் பாகம் போலவே சிறப்பாக கொண்டுவந்திருக்கிறார்கள். 

சொந்த ஊரை, சொந்த பந்தங்களை விட்டுவிட்டு வாழும் பலருக்கும் Jewel ஐ போலவே ஆசை இருக்கிறது. எனக்கு அந்த ஆசை நிறைய இருக்கிறது. தன்னுடைய இடத்தில் சகல வசதிகளோடும், சுதந்திரமாகவும் வாழ்ந்த ப்ளுவிற்கு இங்கு புதிய இடத்தில் நிரூபித்தாகவேண்டிய கட்டாயம்.  அதற்காக தன்னை வருத்திக்கொள்கிறது.   இங்கு ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் ஏற்படுகிற நெருக்கடி. :)

முதல் பாகத்தை இங்கிலீசில் தான் பார்த்தோம்.  ஆனால், இந்த பாகத்தை வெளியிடும் பொழுதே, தமிழிலும் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.  ஆனால், சென்னையில் கமலா திரையரங்கில் நாலு நாட்கள் மட்டும் அதுவும் ஒரே ஒரு ஷோ மட்டும் தமிழில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதன்பிறகு, கொளத்தூரில் கங்கா திரையரங்கில் இரண்டு காட்சிகள் மட்டும் தமிழில்! அந்தளவிற்கு பெருநகரத்தில் ஆங்கிலம் கோலோச்சுகிறது! கொடுமை!


இதற்காக கங்கா திரையரங்கைத்  தேடிப்போனால், திரையரங்கு புதிது போல தான் இருந்தது. டிக்கெட் பணம் ரூ. 100 இருந்தாலும், சவுண்ட் சிஸ்டம் சுத்தமாய் சரியில்லை. படம் போட்டு, 5 நிமிடம் கழித்து, நான் நேரே போய் சொல்லிவிட்டு வந்தேன். சரி செய்யவில்லை.  திரையரங்களில் எல்லோரும் கரச்சல் கொடுத்ததும் கொஞ்சம் சரிசெய்தார்கள். படத்தின் உற்சாகத்தை பாதியாக்கியதில், இவர்களின் பங்கு அதிகம். ஏசியை பெயரளவிற்கு போட்டிருந்தார்கள்.  திருட்டி டிவிடியில் பார்க்காமல், ஏன் திரையரங்கிற்கு வருகிறீர்கள்? என கேட்பது போல் இருக்கிறது! L

Friday, April 11, 2014

பிரியாணி - சில குறிப்புகள்

அன்று, சாப்பிட டிபன் பாக்ஸை திறக்கும் பொழுது, அருகே இருவர் “நேற்று ஹோட்டல்ல சாப்பிடலாம் முடிவு பண்ணி போனோம்.  ஆளாளுக்கு பிடித்த ஐட்டத்தை ஆர்டர் பண்ண, பிரியாணி, மட்டன் வருவல், மீன், நண்டு என ஹெவியாயிருச்சு! நைட்டு கூட வீட்டுல போயி சாப்பிடலன்னா பார்த்துக்கேயன்!” என நான் சைவ சாப்பாட்டை முடிக்கும் வரைக்கும் அவர்களின் அசைவ சுவையை அசைபோட்டபடி ரசித்து ரசித்து பேசினார்கள்.
*****

இன்னொரு நாள், லஞ்ச் பாக்ஸை திறந்ததும், அருகில் இருவர் “இந்த கீரை, காய்கறிகளை எல்லாம் ஆடு, மாடு, கோழி தான் சாப்பிடனும் சார்! ஆடு, மாடு, கோழியையெல்லாம் நாம சாப்பிடனும்!  எனக்கெல்லாம் குறைந்சபட்சம் ஒரு முட்டை பொரியலோ அல்லது கருவாடோ இருந்தா தான் சார் சோறே இறங்கும்” என நிறைய பேசிக்கொண்டே இருந்தார். சோகமாய் சாம்பாரையும் தண்டு கீரையையும் சாப்பிட்டுவிட்டு வந்தேன்.
*****

தொடர்ச்சியாய் இப்படி தொல்லை செய்ய, இரண்டு நாளைக்கு முன்பு,  எல்லோரும் சாப்பிட்டு முடிந்து கிளம்பிய பிறகு, சாப்பிடலாம் என நினைத்து லஞ்ச் ஹாலில் நுழைந்தேன். கதவை திறந்ததும், பிரியாணி வாசனை மூக்கை துளைத்தது.  ஏ.சி ஹால் என்பதால், சாப்பிட்ட பிறகு, மணத்தை மட்டும் சேமித்து வைத்திருக்கிறது. மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, நான் கொண்டு போன பூண்டு குழம்பையும், கோஸ் பொரியலையும் சாப்பிட்டுட்டு வந்து வந்தேன்.
*****
இன்றைக்கு கொஞ்சம் சுதாரித்து, முதல் ஆளாய் போய் அமர்ந்து, நிம்மதியாய் சாப்பிட்டு முடித்தேன்.  சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் ஒரு பயலையும் காணோம்.  ஆச்சர்யமாய் இருந்தது.  கையை கழுவும் பொழுது, அலுவலக உதவியாளர் வந்து கேட்டார்

”என்ன சார்! இன்னைக்கு பசி அதிகமோ! சீக்கிரம் சாப்பிட்டுட்டிங்க!” என்றார்.  புன்னகைத்தேன்.

“இன்னைக்கு எம்.டியின் மகனுக்கு பிறந்தநாள். எல்லோருக்கும் சூடான பிரியாணி ஆர்டர் பண்ணி வந்துக்கிட்டிருக்கு சார்!” என்றார். 

”யாரும் சொல்லலையே!” என்றேன். ( சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் யாரும் வராததற்கான காரணம் புரிந்தது.)

“நேத்தே சொல்லிட்டாங்க!  நீங்க தான் நேத்து லீவாச்சே!” என்றார்.


”பிரியாணி” போச்சே! :(

மான் கராத்தே – விமர்சனமல்ல!



புருஷ்லீ, ஜாக்கிசான் படங்கள் பார்த்து வளர்ந்த ஆட்களில் நானும் ஒருவன்.  இன்றைக்கும் ஏதாவது ஒரு சானலில் தற்செயலாய் இருவரது படங்களையும் பார்த்துவிட்டால், முடியும்வரை பார்த்துவிட்டு தான் தூங்கப்போவேன்.  சண்டையும், நகைச்சுவையும், சாகசமும் நிறைந்த ஜாக்கிசான் படங்கள் மிக விருப்பமானவை.


மற்ற மார்ஷியல் ஆர்ட்ஸை விட கராத்தே பிடித்ததற்க்கு காரணம். அதில் தான் எக்ஸ்ட்ரா பிட்டிங்காக எதுவும் இல்லை.  கை,காலை வைத்தே சண்டையிட்டு விடலாம்.


எப்பொழுதாவது தோணும் பொழுது, ரேஸ்கோர்ஸ் பக்கம் போவதுண்டு.   காலை 6 மணிக்கே நூற்றுக்கணக்கான மனிதர்கள் ஓடுவதும், குதிப்பதும், எசகுபிசகான  வார்ம் அப்களை செய்துகொண்டும் இருப்பார்கள்.  பார்க்க ஜாலியாக இருக்கும்.  அப்படி கராத்தேவும் சிலர் கற்றுக்கொண்டிருந்தனர்.  ஒருமுறை நண்பன் ஒருவன் கராத்தே குழுவில் இருந்ததைப் பார்த்து, நானும் சேர்ந்து, இரண்டொரு நாள் போய், ஆ, ஊ என என சில வார்ம் அப்களை செய்தேன்.  அதற்குப் பிறகு சில காரணங்களால் தொடரமுடியவில்லை. கராத்தே ஏக்கமாகவே இருந்தது.


இரண்டு வருடங்கள் கழித்து, வெளியூரில் சில காலம் வேலைக்காக ஒரு பள்ளியில் தங்கியிருந்தேன். காலை 5 மணிக்கே ஆ! ஊ! என சத்தம் வரும்.  எழுந்துப் பார்த்தால் கராத்தே தான்! 5ம் வகுப்பிலிருந்து 12 ம் வகுப்பு வரை மாணவர்கள் கலந்து இருப்பார்கள்.  வெட்கப்படாமல் நானும் சேர்ந்துவிட்டேன்.  முதல் மூன்று, நான்கு நாட்கள் கொடுத்த பயிற்சியில் என்னால் நடக்கவே முடியவில்லை. ஊர்ந்து போனேன் என்று தான் சொல்லமுடியும். மூன்று மாதம் முடியும் பொழுது, அடிப்படையை கொஞ்சம் தாண்டியிருந்தேன்.  இன்னும் 10 நாட்கள் இருந்தால், மஞ்சள் பெல்ட் வாங்கியிருந்திருப்பேன். (அதுதான் முதல் பெல்ட் என நினைக்கிறேன்.) அந்த ஊரிலிருந்து கிளம்ப வேண்டிய நெருக்கடியில் கிளம்பிவிட்டேன். கிளம்புகிற அன்று மாஸ்டர் சொன்னார்.  “நீங்கள் கற்றுக்கொண்டதை வைத்து, ஒரு ஆளை உயிரிழக்க செய்யலாம். ஜாக்கிரதை” என்றார். கராத்தே மீது முதல் முறையாய் கொஞ்சூண்டு பயம் வந்தது.


அதற்கு பிறகு கராத்தே கனவில் மட்டும் தான். பலரும் சூழ்ந்துவிட ஜாக்கிசானை விட வேகமாக சண்டை போட்ட காலங்கள் உண்டு. 


ஒருநாள் பொது விசயத்திற்காக நண்பர் ஒருவர் சிறை செல்ல, அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல சிறை வாசலில் காத்துகொண்டிருந்தோம்.  அப்பொழுது பேசிய பல விசயங்களில் கராத்தேவும் வந்தது.  கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கியவர் என ஒரு இளைஞரை அறிமுகப்படுத்தினார்கள்.  அவருக்கு தலையில் காயம்பட்டிருந்தது.  என்ன ஆச்சு? என்றதற்கு,  ஏரியாவில் ஒரு பொதுப்பிரச்சனை.   நாலைந்து பேர் ரவுண்டு கட்டிவிட்டார்கள் என்றார். 


”அப்ப கராத்தே?” என்றேன் வியப்பாய்!


பக்கத்தில் இருந்த நண்பர் “மான் கராத்தே தான் எப்பவும் பெஸ்ட்” என்றார்.


’அது என்ன ஸ்கூல் ஆப் ஸ்டைல்?’ என்றேன் அப்பாவியாய்!’


"தலை தெறிக்க ஓடுறதப்பா!" என்றார்கள். வெட்கமாக போய்விட்டது.

நேற்று ஒரு கனவு வந்தது. நிறுத்தி வைத்திருந்த வண்டியை ஒரு பையன் தள்ளிவிட்டுவிட, வண்டியிலிருந்து பார்ட்ஸ் கழன்றுவிட்டது.  அதை அந்த பையனின் அப்பாவிடம் வாங்கித்தர கேட்கும் பொழுது சண்டையாகி, செமத்தியாய் அடித்துவிட்டேன். (விடிகாலையில் யோசித்துப்பார்த்தால், அது என் வண்டியே கிடையாது!)


இது நடந்து கொஞ்ச நேரத்தில், ஒரு மஸாஜ் செண்டரில் ஏற்கனவே அடிவாங்கிய பையன் ஒருவன், வளர்ந்து பெரியவனாகி “ஏற்கனவே புரட்டி எடுத்தியே! உன்னை விட மாட்டேன்! என சொல்ல கெஞ்சி கூத்தாடி அங்கிருந்து வெளியே நைசாக நழுவி, ஓடியே போய்விட்டேன்.


அதனால் எப்பொழுதும் ‘மான் கராத்தே’ தான் பெஸ்ட்! :)

Tuesday, April 8, 2014

தட்கல் - சில குறிப்புகள்


ஒவ்வொருமுறை பதிவு செய்ய துவங்கும் பொழுதும், தேர்வு எழுத செல்லும் மாணவனின் மனப்பதட்டம் வந்துவிடுகிறது!

மனப்பதட்டம் வந்தாலும், அதை செயலில் காட்டிவிடாத ஒரு ஜென் ஞானியின் பக்குவம் தேவைப்படுகிறது!

நான் ஆவரேஜ் மாணவன் தான். 50%.  தட்கல்லிலும் எனக்கு வெற்றி பெறும் வாய்ப்பும் அவ்வளவு தான்.  இரண்டு முயற்சிகளுக்கு ஒரு வெற்றி! J கடைசி வரைக்கும் ஆவரேஜ் தானா?

பதிவு தளம் ஒரு தவறு செய்தால் ஒரு கறாரான ஆசிரியரைப் போல உடனே தண்டித்துவிடுகிறது!

ஒவ்வொருமுறையும் ஏதாவது ஒரு படிப்பினையை கற்றுத் தந்துவிடுகிறது!

உங்களுக்கு மட்டும் எப்படி சார் தட்கல் கிடைக்கிறது? என யாராவது சொல்லும் பொழுது, மண்டையில் இரண்டு கொம்பு முளைத்துவிடுகிறது! அதற்காக படும்பாடு நமக்கு மட்டும் தான் தெரியும்! :)

தட்கல் முன்பதிவை வைத்து, ‘அதிர்ஷ்டத்தின்’ மேல் நம்பிக்கையே வந்துவிடும் போலிருக்கிறது!  J

தட்கலில் வரும் பதட்டத்தை ரயில் பயணம் மனதை லேசாக்கிவிடுகிறது!


Thursday, April 3, 2014

கடவுளைப் பார்த்தேன்!



அது ஒரு பெந்தேகொஸ்தே சபை.  கல்லூரி படிக்கும் பொழுது ஒரு தோழியை சந்திக்க போயிருந்தேன்.  இறைவனின் அருள் வேண்டி, பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.

கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி கொண்டிருந்தவர்  திடீரென "கடவுளை காண நினைக்கிறீர்களா?" கையை உயர்த்துங்கள் என்றார். விளையாட்டாய்,  அருகில் அமர்ந்திருந்த தோழி என் கையை தூக்கினாள்.

கூட்டத்திலிருந்து  7 பேர் போனதோடு, என்னையையும் அழைத்ததால்,  வேறு வழியில்லாமல் போனேன்.

8 பேரையும் மண்டியிட சொன்னார்கள்.  பிரார்த்தனையை மீண்டும் தொடர்ந்தார்கள்.  துதித்தார்கள்.  பாடினார்கள். அழுதார்கள்.  முக்கால் மணி நேரம்.  இப்பொழுது நானே கையை உயர்த்தினேன்.

கடவுளைக் கண்டீர்களாஎனக் கேட்டார்.

ஆம்! பார்த்தேன்என்றேன்.

அப்ப நீங்கள் போகலாம்என்றார்.

கூட்டத்திற்கு பின்னால் வந்து அமர்ந்தேன்.  அதற்கு பிறகு, அரை மணி நேரம் கழித்து எல்லோரும் கிளம்பினார்கள்.  நாங்களும் கிளம்பினோம்.

இவ்வளவு பிரார்த்தனை செய்தும், நம் கண்களுக்கு தெரியாத கடவுள்,  இவனுக்கு தரிசனம் தந்துவிட்டாரே என தோழிக்கு என்மீது ஒரே பொறாமை.

“நிஜமாவே பார்த்தியா!என்றாள்.

“பார்க்கலைன்னு  சொன்னா விடவா போறீங்க! அது தான் கால் வலி பொறுக்காம, பார்த்தேன்னு சொன்னேன்!என்றேன்.

வெறுப்பாய் பார்த்தாள்.