Tuesday, December 27, 2011

மெளனகுரு - உண்மையை சத்தமாய் பேசிய படம்!


கடந்த வாரம் இந்த படத்தைப் பார்க்கப்போய்த்தான், இரவு காட்சி மட்டும் என்று சொல்லி, மிஷன் இம்பாசிபிள்-4ல் மாட்டிக்கொண்டேன். பெரிய நட்சத்திர படங்கள், பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் திரையரங்குகளை இயக்கும் செல்வாக்கில், பல சிறிய தயாரிப்பு படங்கள் சிக்கி கொள்கின்றன. அதில் இந்த படமும் ஒன்று. நல்ல படம் என மக்களை சென்றடைவதற்குள்ளேயே பல திரையரங்குகளில் எடுக்கப்பட்டுவிட்டன. ஒரு பேட்டியில் இயக்குனர் சேரன் சொல்வது போல, இப்பொழுது பல படங்களுக்கும் வாழ்வு ஒரு வாரம் தான்.

****

கதை எனப் பார்த்தால்....

நெடுஞ்சாலையில் கார் பாறையில் மோதி ஒரு சாலைவிபத்து. உயர் அதிகாரிகளுடன் ஒரு காவல்துறை குழு வந்து பார்வையிடும் பொழுது, காரில் உள்ள சூட்கேஸில் நிறைய பணம் இருக்கிறது. காவல்துறையின் குறுக்குப்புத்திகள் கூட்டாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. பணத்தை கமுக்கமாய் அமுக்க முடிவு செய்கிறார்கள்.

ஒரு குற்றம் பல குற்றங்களுக்கு அவர்களை இழுத்து செல்கிறது. இந்த களேபரத்தில் (நாயகனான) மாணவன் மாட்டிக்கொள்கிறான். உண்மை தெரிந்த இவனை போட்டுத்தள்ள முடிவு செய்கிறார்கள். கடைசி நேரத்தில் தப்பி, பிறகு மீண்டும் மாட்டி, மனநலம் பிசகியுள்ளதாக மனநல மருத்துவனைக்குள் சிறை வைக்கிறார்கள். அதிலிருந்து அவன் மீண்டானா? என்பது சொச்சகதை!

****

கதையை நம்பி, திரைக்கதையை வலுவாக அமைத்தால், திரைப்படம் அருமையாக வரும் என்பது ஒரு நல்ல உதாரணம் இந்த படம். எல்லா கதாபாத்திரங்களும் சரியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இயல்பாக நடித்திருக்கிறார்கள். பின்னணி இசை நன்றாக இருக்கிறது. கதை மெல்ல மெல்ல விரிந்து, கதைக்குள் நம்மையும் இழுத்துக்கொண்டு போய்விடுகிறது. இயக்குநருக்கு முதல் படம் என்கிறார்கள். ஆச்சர்யமாய் இருக்கிறது.

***

புரியாத புதிர், முரண் - என சில வருடங்களுக்கு ஒருமுறை தான் இப்படி நல்ல திரில்லர் படங்கள் வெளிவருகின்றன. அந்த படங்களைவிட இந்த படத்திற்கு உள்ள சிறப்பு என்னவென்றால், சமூகத்தில் உள்ள பல கோளாறுகளை இயல்பாக தொட்டு செல்கிறது.

அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யும் தவறு எந்த அளவுக்கு அப்பாவிகளை பாதிக்கிறது என்பதை அழுத்தந்திருத்தமாக படம் நமக்கு சொல்கிறது. நமது முதலமைச்சர் ஜெ. சொல்வது போல, காவல்துறைக்கு முழுச்சுதந்திரம் கொடுத்தால், என்ன ஆகும் என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணம்.

படத்தினூடாக ஆங்காங்கே குட்டி குட்டி சம்பவங்கள், கதைகளும் உண்டு.

சாலையோரத்தில் சாப்பிட்டு கொண்டிருக்கும் ஒரு பேராசிரியரை காவல்துறை அதிகாரி அடித்துவிடுகிறார். புகார் கொடுக்கும் பொழுது, காவலர் "நீங்க பேராசிரியர்னு தெரியாது சார்!" என சொல்லும் பொழுது, "கருப்பா இருந்து, கைலி கட்டியிருந்தா அடிப்பீங்களோ!" என்பார் கோபமாய்!

ஒரு கல்லூரி முதல்வர் தன் மகனை நன்றாக படிக்கும் பசங்களோடு ஒப்பீட்டு, தினமும் திட்டும் பொழுது, அந்த பையனின் ஆளுமை சிதைவதை நன்றாக உணர்த்தியிருக்கிறார்கள். அதே போல், அந்த முதல்வர் தன் கெளவரத்தை காப்பாற்றுவதற்காக செய்யும் நடவடிக்கைகள் எவ்வளவு பின்விளைவுகளை உருவாக்குகிறது என்பதையும் நன்றாக பதிவு செய்திருக்கிறார்கள்.

மனநல மருத்துவ இன்சார்ஜை, "நல்லா இருக்குற என்னை, ஏன் மருத்துவமனையில் சேர்த்துக்கொண்டாய்? என நாயகன் கோபமாய் கேட்கும் பொழுது, "மருத்துவமனையில் தவறான சிகிச்சையால், ஒருவர் இறந்துவிட, காவல்துறை உதவி செய்தது. அதற்கு கைமாறாக இந்த உதவி!" என்பார்.

எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், நேர்மையான அந்த கர்ப்பிணியான பெண் ஆய்வாளர் ஒரு கொலை கேஸை ஆய்வு செய்வது மிக அழகு.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

****

டெயில் பீஸ் : பேரனின் இந்த படப்பெயரை வைத்து, கருணாநிதியை கடந்த வாரம் கலாய்த்த மதியின் கார்ட்டூன் அருமை.

மேலே சொன்ன கருத்து, "காவல்துறைக்கு முழுச்சுதந்திரம் கொடுத்தால், என்ன ஆகும் என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல உதாரணம்" யாருக்காவது அதிகப்படியானது என நினைத்தீர்கள் என்றால், கீழ்க்கண்ட உண்மை நிகழ்வான சுட்டியை படிப்பது நல்லது.

காவல்துறையால் நான்கு இருளர் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டதும், பின் நிகழ்வுகளும்!

Friday, December 23, 2011

பெயரில் மட்டும் இராஜபாட்டை!


நேற்று ஊருக்கு கிளம்பிகொண்டிருந்தேன். நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது. "இராஜபாட்டை ஒரு டிக்கெட் இருக்கிறது. போகிறாயா?" என்றான். "இல்லப்பா! நான் ஊருக்கு போகிறேன். நல்லாயிருந்தா பிறகு பார்த்துக்கொள்கிறேன்" என்றேன்.

ஊருக்கு இரவு 9.30க்கு போய் சேர்ந்தேன். நண்பன் இராஜபாட்டைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான். கூப்பிட்டான். வரவில்லை என்றேன். "வாப்பா! பேச்சுத்துணைக்கு! என இழுத்துச்சென்றான். இராஜபாட்டை தன் வலைக்குள் இழுப்பதாக உணர்ந்தேன்!
****
கதை எனப்பார்த்தால்...

நில மோசடி தான்! சொர்ணஅக்கா போல் ஒரு பெண் அரசியல்வாதி தமிழ்நாடு முழுவதும் பல சொத்துக்களை தன் அரசியல், ஆள் பலத்தால் கைப்பற்றுகிறார். 25 ஏக்கரில் ஒர் அனாதை ஆசிரமம் சென்னையில் ஒரு முக்கிய இடத்தில் இருக்கிறது.அதையும் கைப்பற்ற நினைக்கிறார்.

அனாதை ஆசிரமத்தின் நலனிற்காக, அதன் சொந்தக்காரரை ஸ்டண்ட் நடிகராக இருக்கும் நாயகன் பாதுகாக்கிறார். இருந்தும், பல வேலைகள் செய்து வில்லன் கும்பல் இடத்தை எழுதி வாங்கிவிடுகிறது. அனாதை ஆசிரமம் காப்பாற்றப்பட்டதா? என்பது க்ளைமேக்ஸ்!
*****

எப்பொழுதும் முடிவை வெண்திரையில் காண்க! என முடிப்பார்கள். ஆனால், அப்படி எழுத மனம் வரவில்லை. ஏனென்றால், படம் அப்படி ஒரு சொதப்பல்.
****

இருக்ககூடிய எல்லா ஓட்டுக்கட்சி பிரமுகர்களும் செய்கிற காரியம் நிலமோசடி. அதிமுக தனது பழிவாங்கல் நடவடிக்கையாக கடந்த சில மாதங்களாக திமுகமீது பல வழக்குகளை போட்டு தாக்கிகொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு கதையை எடுத்து நன்றாக கையாண்டிருக்கலாம். படுமோசமான திரைக்கதையால், இரண்டு மணி நேர படம், மூன்று மணி நேரம் போல ஆயாசம் தருகிறது. எந்த காட்சியிலும் அழுத்தம் இல்லை. பல காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன. கதையில் கோர்வை இல்லை. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு ரெம்ப வீக். வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல எடுத்த சுசீந்திரன் படமா என ஆச்சர்யம் வருகிறது.
****

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளுக்கு ஒன்றாய் வெளியிட மெனக்கெடுகிறார்கள். அதனாலேயே எல்லா கோளாறுகளும் படத்திற்குள் வந்துவிடுகின்றன. அதிக சண்டைகள். பொருந்தாத இடத்தில் பாடல்கள்.
சண்டை படங்கள் கொஞ்சம் அடங்கி இருந்தது. கதையம்சம் கொண்ட படங்கள் கொஞ்சம் வர ஆரம்பித்தன. ஒஸ்தி, இராஜபாட்டையின் வரவுகள் கவலை கொள்ள வைக்கின்றன.

ஒஸ்திக்கு தலைப்பு "மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுல்ல!" என்றார் அதிஷா. இராஜபாட்டை ஒஸ்தியை விட மொக்கை!
****

Thursday, December 22, 2011

மிஷன் இம்பாசிபிள் 4 - திரைப்பார்வை


மூன்று திரயரங்குகள் கொண்ட வளாகம் அது. நான்கு காட்சிகள் என சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள். நம்பி போனோம். இரவு காட்சி மட்டும் தான் என்றார்கள். நெருக்கடியில் நண்பரின் விருப்பத்தின் பேரில் இந்த படம் பார்த்தேன்.

***

ஐ.எம்.ப் (The International Monetary Fund) ஐ சார்ந்த கதாநாயகன் இயங்கும் உளவுக்குழு ஒன்று, ஒரு பயங்கரவாதியை தேடுகிறது. அணுகுண்டால் அமெரிக்காவை தாக்க செய்ய திட்டமிடுகிறான். வெடிக்க வைப்பதற்கான கோடை (Code) ரசியாவிடமிருந்து திருடுகிறான். திருடியது தெரியாமல் இருப்பதற்காக, பிரமாண்ட கிரம்ளின் மாளிகையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கிறான்.

இந்த வெடிவிபத்துக்கான பழி உளவு குழு மீது விழுகிறது. அவர்களின் நிலை மிகவும் சிக்கலாகிறது. மேலிருந்து எந்த உதவியும் கிடைக்க வழியே இல்லை. இந்த பழியைப் போக்க, தங்கள் உயிரை பணயம் வைத்து, இறுதியில் பயங்கரவாதியை கொல்கிறார்கள். ஏவப்பட்ட அணுகுண்டை செயலிழக்க வைக்கிறார்கள். அமெரிக்காவை மிகப்பெரிய ஆபத்திலிருந்து காக்கிறார்கள். முடிவு சுபம். குழு அடுத்த மிஷனுக்கு தயாராகிறது.

***

சில விசேஷ விளம்பர படங்களைப் பார்த்தால், சில விசயங்கள் புரியாது. 10 முறை பார்த்தால் தான் விளங்கும். அது போல இந்த படமும்! துவக்கம் முதல் இறுதி வரை விறு விறுவென போகிறது. எங்கும், எப்பொழுதும் நிதானிக்காமல் ஒடிக்கொண்டெ இருக்கிறது. ஆகையால், கதை கூட குன்சா தான் புரிகிறது. ஆக்சன் படம் என்பதால், அதில் பார்வையாளனுக்கு புரிய வைப்பதற்கு அவர்கள் மெனக்கெடவே இல்லை. மேலும், இது நாலாவது பாகம் என்பதாலும் இருக்கலாம்.

***

படம் சொல்லும் கதையை பரிசீலித்தால், நடைமுறை உண்மையெனில், அமெரிக்காவும், ஐ.எம்.எப்.மும் ஏகாதிபத்திய அரசுகளின் சொல்பேச்சு கேட்காத, உலக தலைவர்களை போட்டுத்தள்ளுகிறது. தங்கள் கொள்ளைக்காக பயங்கரவாதிகளை உருவாக்குகிறது. பிறகு, சில காலங்களுக்கு பிறகு போட்டும் தள்ளுகிறது. இந்த இடைவெளியில் எண்ணெய் வளம் போன்ற பல விசயங்களில் பல பில்லியன் டாலர்களை கொள்ளையடிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறார்கள். ஜனநாயக ஆட்சி உருவாக்குகிறோம் என்ற பெயரில் நாட்டை ஆக்ரமித்து, தங்களது எடுபிடிகளை கொண்டு பொம்மை ஆட்சிகளை உருவாக்குகிறார்கள்.

உண்மை இதுவாக இருக்க, உலகத்தை பல இன்னல்களிலிருந்து இவர்கள் தான் மக்களை காப்பது போல, ஹாலிவுட் படங்கள் நமக்கு கதையளக்கின்றன. நாமும், சந்தோசமாய் பார்த்து மகிழ்கிறோம்.

***

இது மாதிரியான அதிரடியான படங்களை சில வருடங்களாக பார்ப்பதை தவிர்க்கிறேன். ஏனென்றால், அதிரடியான படங்கள் விறு விறு என நகருகின்றன. நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மெதுவாக நகர்பவை. அதனால், நல்ல படங்களை பார்ப்பதற்கான பொறுமையை காலி செய்துவிடுகிறது. இந்த படத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு, இது தான் முக்கிய காரணம்.

****

Wednesday, November 30, 2011

மனிதர்கள் 13 - சமீதாம்மா!


சமையலறையில் திடீரென நுழைந்ததும் குட்டி, குட்டி பூச்சிகள் அங்குமிங்கும் சிதறி ஓடின. நாங்கள் சமைத்து பல மாதங்களானதற்கு அந்த பூச்சிகள் சாட்சிகள். ஒரு காலத்தில், சமையலில் எத்தனை விதமான பரிசோதனை முயற்சிகள்; சிலவற்றில் பெரிய வெற்றி; பலவற்றில் தோல்வி என்றாலும், சாப்பிடமுடியாத முடியாத அளவிற்கு, எதுவும் தோற்று போனதில்லை.

அறையில் உள்ள அனைவரும் அலுவலக, சொந்த வேலை பளுவில், பிஸியாகிவிட சமைப்பதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. குறைந்தபட்சம் சுடுதண்ணீர் கூட வைப்பதில்லை!

****
மூன்று நேரங்களிலும் ஹோட்டலிலேயே சாப்பிட்டதால், இரண்டுவிதமான சிக்கலில் சிக்கினோம். உடல் நலம் கெட்டது; பணம் நிறைய செலவானது. வேறுவழியில்லை. பெருநகரத்தில் பல்சக்கரத்தில் சிக்கி, ஓடிக்கொண்டே இருந்தோம்.

****

ஒருநாள் திடீரென சமைக்க ஆள் கிடைக்குமா என தேடிப்பார்க்கலாமே என மண்டையில் பல்பு எரிந்தது. . எங்கள் அறையில் டைபாய்டு-ல் உடல் நலமில்லாமல், பஞ்சத்தில் அடிபட்டவனை போல இருந்தவனை (அப்பத்தான் பரிதாபப்பட்டு உடனே உதவுவார்கள்) அனுப்பி, பக்கத்து வீடுகளில், கடைகளில் "சமைக்க ஆள் இருந்தால் சொல்லுங்கள்" என கல்லெறிந்து வைத்தோம். மூன்று மாதங்களாகியும் எந்த நல்ல செய்தியும் காதுக்கு வரவில்லை.

****

திடீரென ஒருநாள் விடிகாலையில், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மா வந்தார். பக்கத்து கடைகாரர் சொல்லி அனுப்பியதாக கூறினார். காலை, மாலை இருவேளையும் வரமுடியுமா என கேட்டோம். குடும்ப சூழ்நிலையால், ஒரு நேரம் மட்டும் வருவதாக கூறினார். வேறுவழியேயில்லை. ஏற்றுக்கொண்டோம்.

****

மீண்டும் சமையலறைக்கு உயிர் வந்தது. ஒரு கொழம்பு. ஒரு பொரியல்; ஒரு கூட்டு என வைத்துவிடுவார். அதையே, இரவுவரை வைத்துக்கொண்டு சமாளித்தோம்.

சமீதாம்மா என்ன செய்தாலும் சுவையாக செய்தார். சைவம் அசத்தினார். அசைவம் அதைவிட அசத்தினார். ரசம் மட்டும் விதிவிலக்கு. வாரம் இருமுறை கறி, மீன் என எடுத்து தந்தோம். ஞாயிறு விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என சொன்னால் கூட, எனக்கு தேவையான பொழுது எடுத்துக்கொள்கிறேன் என ஏழுநாளும் வந்து சமைத்தார்.

****

இப்படியாக, பலவீனமாக இருந்தவர்கள் எல்லாம், நன்றாக தேறினார்கள். இருவருக்கு ஹிப் சைஸ் கூடி பேண்ட் டைட்டாக மாறியது.

கடந்த மூன்று மாதங்களில் சமீதாம்மாவிடம் இயல்பாக பேசும் வழக்கம் வந்திருந்தது.

"என்னம்மா உங்க பேரு ஸ்டைலா இருக்கே?! என்றால், "சமீதான்றது என்னுடைய பொண்ணு பேரு தம்பி. அம்மா என்பதால் சமீதாம்மா என கூப்பிடுகிறார்கள்" என்றார்.

****

"எங்களுக்கே இவ்வளவு அருமையா சமைக்கிறீர்களே! உங்க பிள்ளைகளுக்கு இன்னும் நல்லா சமைப்பீங்களே! என்றேன் சிரித்துக்கொண்டே!

"அதெல்லாம் இல்லை தம்பி!" என்றார் பொதுவாய்!

****

"உங்களுக்கு இரண்டு பசங்க! தள்ளு வண்டில பாத்திரம் விக்கிறதா சொல்லிறீங்க! ஒரு பொண்ணையும் பாதுகாப்பா தம்பிக்கே கட்டிக்கொடுத்திட்டிங்க! அப்புறம் என்ன பிரச்சனை? நீங்கள் வேலைக்கு வருகிறீர்கள்? " என்றேன்.

அந்த கேள்வி அவரை அசைத்தது.

"என் புருசன் பொறுப்பில்லாதவர் தம்பி. அவர் சம்பாதிப்பதை அவரே குடின்னு தொலைச்சுடுறார். சம்பாதிச்சதுல பேரப்பிள்ளைக்கு ஒரு ரூபாய்க்கு மிட்டாய் கொடுத்தா பெரிய விசயம் தம்பி. ஒரு சொந்த வீடு வேணும்ற கனவுல, வட்டிக்கு பணத்தை வாங்கி, ஒரு இடத்தை வாங்கினோம். வட்டியோட, அந்த கடனை இந்த மூணு வருசத்துல, வாயைக்கட்டி, வயித்தக்கட்டி முக்கால்வாசியை அடைச்சிருக்கோம்.

இப்ப அந்த இடத்துல ஒரு வீட்டைக் கட்டி, குடி போகலாம்ற எண்ணத்திலே பிள்ளைக கஷ்டபடுதுக தம்பி. மூணு வருசமா ரேசன் கடை அரிசியை வாங்கித்தான் சமைக்கிறோம். தினம் புளிக் (காரக்) குழம்பு தான். வேற குழம்பு வைச்சா, வாய்க்கு விளங்காது! நல்ல சோறு சாப்பிட்டு, மூணு வருசம் ஆச்சு! வைராக்கியத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும், நானும் சித்தாள் வேலைக்கு போயிட்டிருந்தேன். இப்ப உடம்பு தாங்கல! இப்படி சமைக்கிற வேலைக்கு போக வேண்டாம்னு என் பசங்க சொல்றாங்க! நாள் முழுவதும், வெயில், மழையில பிள்ளைக சுற்றி திரியும் பொழுது, வீட்டுல சும்மா உட்கார மனசு கேக்கல! என்றார் கண்ணீருடன்!

அவ்வபொழுது இன்னைக்கு உங்க வீட்டுல என்ன கொழம்பு என கேட்கிற பொழுது, எப்பொழுதுமே மாறாமல் 'காரக்குழம்பு' என சொன்னது நினைவுக்கு வந்தது.

இங்கு கறி, மீனு சமைச்சிட்டு, பிள்ளைகளுக்கு காரக்குழம்பு தினமும் வைக்கிற பொழுது, மனம் எவ்வளவு வருந்தியிருப்பார் என எண்ணமும் வந்தது.

****

அதற்கு பிறகு, இரண்டு மாதம் ஓடிவிட்டது. நேற்று சமைத்து முடித்துவிட்டு, "திரும்பவும் கடனை வாங்கி, இப்ப வீட்டை கட்டலாம்னு முடிவு செய்ஞ்சு, கடனுக்கு இவ்வளவு நாள் அலைஞ்சோம். இப்ப கடன் கிடைச்சிருச்சு. ஆளோட ஆளா நானும் ஒரு சித்தாளா வீட்டில் வேலை செய்யலாம்னு இருக்கேன். யார் யாருக்கே இளவயசுலே கல், மண் சுமந்தேன்.. இப்ப நம்ம வீட்டுக்கு சந்தோசமா சுமக்கப்போறேன் தம்பி! நீங்க தான் என்ன செய்யப்போறீங்கன்னு ஒரே கவலையா இருக்கு!" என்றார்.

"பரவாயில்லைங்கம்மா! நாங்க சிரமப்படுவோம் தான். சமாளிச்சுக்குவோம். நீங்க வீட்டை நல்லாபடியா கட்டுங்க! எங்க அம்மா போல உங்களை நினைக்கிறோம். வீட்டைக் கட்டினதும் எங்களுக்கு சொல்லுங்க! பொதுவா, புதுவீடு விசேசத்துக்கு நாங்க போறதில்ல! ஆனால், உங்க வீட்டு விசேஷத்துக்கு கண்டிப்பா வர்றோம்!" என்றேன்.

கண்களில் எங்களைப் பற்றிய கவலையிலேயே, விடைபெற்று போனார்.

****
இனி, எப்பொழுது காரக்குழம்பு சாப்பிட்டாலும், சமீதாம்மா நினைவுக்கு வருவார்.

நேற்று மீண்டும் சமையலறையில் நுழைந்தேன். சின்ன சின்ன பூச்சிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. எங்களுக்கு சமைத்து, நோயிலிருந்து காத்த‌ சமீதாம்மா போல இன்னொரு தேவதைக்காக காத்திருக்கிறோம்.

****

Thursday, November 17, 2011

குன்றுகள் கவனித்துக்கொண்டிருக்கின்றன! - திரைப்பார்வை


இரண்டு நாள்களுக்கு முன்பு, இரவு தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தேன். எதையும் படிப்பதற்கு பொறுமையில்லை. தொலைக்காட்சியில் ஒவ்வொரு சானலாக தேடிய பொழுது, மூவிஸ் நவ்‍‍-ல் சிக்கியது இந்தபடம் The Hills have eyes.

****

கதை எனப் பார்த்தால்...

அப்பா, அம்மா, இரண்டு மகள்கள், ஒரு டீனேஜ் பையன். மூத்த மகளின் கணவன், அவர்களுடைய கைக்குழந்தை. இவர்கள் அனைவரும் வீட்டிற்குரிய சகல வசதிகளும் அடங்கிய ஒரு ட்ரக்கில், தரைவழி பயணமாக கலிபோர்னியாவிற்கு பயணிக்கிறார்கள்.

இடையில் நியூ மெக்சிகோவில் உள்ள ஆள் அரவமற்ற ஒரு பள்ளத்தாக்கை கடக்கும் பொழுது, அவர்களுடைய ட்ரக்கின் அனைத்து சக்கரங்களும் பஞ்சராகிறது. தப்பு... தப்பு. பஞ்சராக்கப்படுகிறது.

அதற்கு காரணமானவர்கள் அந்த பள்ளத்தாக்கில் அணு சோதனையால் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். கண்கள் உள்ளே போய், தலை பெருத்து, பார்க்கும் பொழுதே, கோரமாய் இருப்பவர்கள். பெருங்கூட்டமாகவெல்லாம் இல்லை. சொற்பமான ஆட்கள் தான்.

அந்த பள்ளத்தாக்கு வழியே கடந்து செல்பவர்களை வழிமறித்து, பொருட்களை கொள்ளையடித்து, சிக்குபவர்களை கொலை செய்து, பச்சையாக சாப்பிடுகிற டெரான ஆட்கள்.

இவர்களிடம் இந்த குடும்பம் சிக்கிக்கொள்கிறது. ஒவ்வொருவராக அடுத்தடுத்து கோரமாய் கொல்லப்படுகிறார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு, இறுதியில், இளம்பெண்ணும், பையனும், மருமகனும், குழந்தையும் மிஞ்சுகிறார்கள். யாரோ ஒருவர் இவர்களை மீண்டும் கண்காணிப்பதாய் படம் முடிவடைகிறது.

****

ஒன்னே முக்கால் மணி நேரம் படம். படம் விறு, விறு வென போகிறது. நடித்தவர்களும் நன்றாகவே நடித்திருந்தார்கள்.

இதே தலைப்பில் 1977ல் வெளிவந்த படத்தை தான் மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள். அப்பொழுது படம் நன்றாக ஓடியிருக்கிறது! நம்ம பில்லா போல! அப்போதைய படத்தின் இயக்குநர் தான், இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.

அன்று நாகரிகம் அடையாத நரமாமிசம் சாப்பிடுகிறவர்கள் வில்லன்கள். இப்பொழுது உலகம் நாகரிகம் அடைந்தவிட்ட படியால் (!) அணு சோதனையால், பாதிக்கப்பட்டவர்களை வில்லனாக காட்டியிருக்கிறார்கள். ஹாலிவுட்காரர்கள் வெரைட்டிக்காக புதுப்புது வில்லன்களை உருவாக்கி கொண்டே இருக்கிறார்கள்.

படம் பார்க்கும் பொழுது, அவர்கள் சொல்லிய கதையை மீறி, ஏன் இந்த மனிதர்களுக்கு இப்படி ஆனது? இவர்களை அரசு ஏன் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது? என்றே மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

இந்த படமும் வெற்றியாகி, இரண்டாவது பாகமும் அதற்கு பிறகு வெளிவந்து, இப்பொழுது, மூன்றாவது பாகம் இந்த ஆண்டில் வெளியாக இருக்கிறது.

தேடியெல்லாம் பார்க்காதீர்கள். அப்படியெல்லாம் சிறப்பான படமில்லை. மூவிஸ் நவ்-ல் அந்த சிடியை தேய் தேய் என தேய்ந்து போகும் வரை காலை, மதியம், இரவு என மாறி மாறி போட்டுக்கொண்டேயிருப்பார்கள்.

இந்த படத்தில் தரை வழிப்பயணம் செய்வதை பார்த்ததும், சில நாள்களுக்கு முன்பு, எஸ். இராமகிருஷ்ணன் எழுதிய ஒரு பிரெஞ்சு படம் நினைவுக்கு வருகிறது. அருமையான படம். அப்பாவும், மகனும் பிரான்ஸ்லிருந்து, மெக்கா வரைக்கும் தரை வழிப்பயணம் மேற்கொள்கிறார்கள். பல்வேறு அனுபவங்கள். பல புரிதல்கள்.

கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு. பார்க்கவேண்டிய படம். இந்த பதிவு எழுதியது கூட இந்த படத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகதான்!

ஒரு மகத்தான பயணம் - எஸ். இராமகிருஷ்ணன்

***

Saturday, November 12, 2011

ஏ.டி.எம் அட்டை- சில குறிப்புகள்!


ரூ. 500 என எண்களை அழுத்தியதும், கட கடவென தாள்களை எண்ணி, லட்சக்கணக்கில் கொட்டப்போவது போல ஆசைக்காட்டி, ஒரே ஒரு தாளை வெளியே தள்ளுகிறது!

****

பர்சை திறக்கும் பொழுதெல்லாம், நாலு டெபிட் கார்டு, ஒரு கிரடிட் கார்டு கண்டு, வசதியுள்ளவனாக அவர்களாகவே நினைத்துக்கொண்டு, கடனும் கேட்டுவிடுகிறார்கள். எல்லாவற்றிலும் மினிமம் பேலன்ஸை விட குறைவாக இருப்பது எனக்கு தானே தெரியும்!

****

மாத இறுதியில் செலவுக்கு பிரச்சனையாகி, மினிமம் பேலன்ஸில் இருந்து ரூ. 200 எடுக்க வரிசையில் நிற்கும்பொழுது, "அதிகபட்சமாக நாப்பதாயிரம் மட்டும் தான் எடுக்க அனுமதிக்கிறார்கள்" என பக்கத்தில் நிற்பவர்கள் அலுத்துக்கொள்கிறார்கள்.

****

5வயது அண்ணன் பையனை ஏடிஎம்-ல் பணம் எடுக்க சிலமுறை அழைத்துப்போயிருக்கிறேன். எதையாவது பெரிதாய் வாங்கிதர கேட்கிறான். பணம் இல்லையென சொன்னால், "வா! அந்த மெஷினிடம் போய் பணம் கேட்கலாம்!" என்கிறான். பணம் நம் கணக்கில் இருந்தால் தான், எடுக்கமுடியும் என்பதை அவனுக்கு எப்படி புரியவைப்பது?

****

ஏடிஎம் முக்கியமான தருணங்களில் காலை வாரிவிட்டுவிடுகிறது. அன்றைக்கு அவசரத்திற்கு, தென்காசியில் பணம் வேண்டி நின்றால், பணம் டெபிட்டாகி, பணம் வரவில்லை. ஊருக்கு வந்து ஒரு வாரம் கழித்து, பணத்தை என் கணக்கில் வரவு வைத்தார்கள்.

இன்னொருமுறை, மருத்துவமனைக்கு பணம் கட்டவேண்டும் என பணம் எடுக்கப் போனால், பணம் வரும் சமயம் நெட் வொர்க் பெயிலாகி, கார்டு உள்ளேயே மாட்டிக்கொண்டுவிட்டது.

****

Sunday, October 30, 2011

சாம்பார் - சில குறிப்புகள்!


சகஜமாய் பழகுகிற யாரிடமும்
இயல்பாய் கேட்கும் கேள்வி
'சாம்பார்' எப்படி வைப்பீங்க?'

வெடி சாம்பார்,
திடீர் சாம்பார்,
மிளகு சாம்பார் - என
சாம்பாரில் பலவகை உண்டு.

பால்ய வயதில்
சாம்பார் என்றால் அவ்வளவு இஷ்டம்
கூடுதலாய் நாலுவாய் சோறு
உள்ளே இறங்கும் - அதனாலேயே
வாரத்திற்கு இரண்டு முறை சாம்பார்.

அக்கா, அத்தை, அம்மா
சமைக்கிற சாம்பார்களில்
அம்மா வைக்கும் 'சாம்பார்'
அலாதியானது.
கொஞ்சூண்டு காய்கறி போட்டாலும்
அம்மாவின் கைப்பக்குவத்தில்
மணக்க மணக்க சாம்பார் தயார்.

மூன்று ஷிப்டுகளிலும்
மாறி, மாறி
கேண்டினில் சாம்பார்.
அப்பாவுக்கு அதனாலேயே
'சாம்பார்' என்றாலே அலார்ஜி.

ஜெமினிகணேசனை
'சாம்பார்' என்பார்களே!
பிடித்ததினாலா!
பிடிக்காமல் போனதினாலா!

எத்தனை முறை நான்
சாம்பார் வைத்தாலும் - ஒவ்வொரு முறை
ஒவ்வொரு சுவை வருகிறது.

'சாம்பாரில் நீ எக்ஸ்பர்ட் ஆயிட்டடா?'
புகழ்கிறார்கள் நண்பர்கள்.

இப்பொழுதெல்லாம்
எங்கள் ஏரியாவில் கையேந்திபவன்களில்
'சாம்பார்' என்ற பெயரில்
ரசம் போல தரும் சாம்பார் கூட
தருவதில்லை.
இரண்டு வகை சட்னி மட்டும்தான்!
அல்லது சேர்வை மட்டும் தான்!
'சாம்பார்' பணக்காரர்களின்
உண்வாகிவிட்டது.

'பாழாய் போன
கருணாநிதியால் தான் இப்படி?
எம்ஜிஆர் இருந்தால்
இப்படி நடக்க விட்டிருப்பாரா?'
புலம்புகிறார் பக்கத்துவீட்டு
வயதான தாய்க்குலம்.

சாம்பாருக்காவது
விலைவாசியை எதிர்த்து...
தெருவில் இறங்கி போராடலாம்
என தயாராய் இருக்கிறேன்.

உங்களுக்கும் சாம்பார்
பிடிக்கும் தானே!

*****

பின்குறிப்பு : தமிழ்மணம் நட்சத்திர பதிவுகளில், நான் எழுதும் தொடர் பதிவுகளில் ஒன்றான 'பேச்சிலர் சமையல்' பகுதியில் ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைத்தேன். நெருக்கடியில் எழுத முடியாமல் போய்விட்டது. ஆகையால், எனக்கு பிடித்த சாம்பார் பதிவை மீள்பதிவு செய்தேன்.

நன்றி சொல்லவேண்டிய தருணமிது!


எங்கள் ஊரில் டூரிங் டாக்கிஸில் 'இன்றே இப்படம் கடைசி" என சுவரொட்டி ஒட்டுவது நினைவுக்கு வருகிறது. இந்திய நேரப்படி நாளைக் காலை 9.30 மணியோடு நட்சத்திர வாரம் முடிவடைகிறது. நன்றி சொல்ல வேண்டிய தருணமிது!

இந்த ஒரு வாரம் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. அந்த அனுபவத்தையும், நன்றிகளையும் நிச்சயமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். நிச்சயம் உங்களுக்கு பயன்படும்.

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் தமிழ்மணத்தின் பொறுப்பாளர் மின்னஞ்சலில் நீங்கள் "தமிழ்மணம் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என தெரிவித்த பொழுது, சந்தோசத்தை விட, பதட்டம் தான் அதிகம் வந்தது. காரணம் மாதத்திற்கு மூன்றோ அல்லது நான்கோ ஆற, அமர பதிவுகள் எழுதுகிற ஆள் நான். திடீரென ஒருவாரம் - 7 பதிவுகள் எழுதவேண்டும் என்று சொன்னால் பதட்டம் வருவது இயல்பு தானே!

இருப்பினும், அந்த பயத்தை வெளிக்காட்டாமல் "இன்னும் இரண்டு வாரம் இருப்பதால், எளிதாக எழுதிவிடலாம்" என தமிழ்மண பொறுப்பாளரிடம் கெத்தாக மின்னஞ்சல் அனுப்பினேன்.

அடுத்து ஒரு பிரச்சனை. தீபாவளி நேரத்தில் என்னை தேர்ந்தெடுத்து எழுத சொன்னது! தீபாவளிக்கு மூன்று நாள் ஊருக்கு செல்லவேண்டும் என மூன்று மாததிற்கு முன்பே திட்டம் இருந்ததால், அலுவலகத்திலும் வேலை நெருக்கடி இருந்தது. தமிழ்மணம் நிர்வாகியிடம், அதற்கு அடுத்த வாரம் எழுதுகிறேனே என கேட்கலாமா! என்று கூட யோசனை வந்தது. 'ஏதோ நெருக்கடியில் தான் 'உப்புமா' போல, உன்னை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள், இப்பொழுது நீ தேதி மாற்றிக்கேட்டால், கொடுத்த வாய்ப்பை மறுபரிசீலனை செய்யப்போகிறார்கள்' என ஒரு வானத்தில் அசரிரீ கேட்டது. ஏன் ரிஸ்க்? என முடிவெடுத்து, கேட்டுக்கொண்டபடியே எழுதிவிடலாம் என முடிவு செய்து, களத்தில் குதித்துவிட்டேன்.

அடுத்த பிரச்சனை. 7 கட்டுரைகள். நாள் நெருங்க, நெருங்க கட்டுரைகள் எழுதி முடித்தபாடில்லை. பதட்டம் தான் கூடிக்கொண்டே வந்தது. நட்சத்திர வாரம் துவங்கிய பொழுது, அறிமுக பதிவான "நான்" தவிர்த்து, "குழந்தைகள் - மறுபக்கம்" , "மனிதர்கள் - அன்பழகன்" என இரண்டு கட்டுரைகள் மட்டும் தான் கையில் இருந்தது. ஒரு வழியாக அலுவலகத்தில் தட்டச்சு செய்து, எனக்கு நானே மின்னஞ்சல் அனுப்பி இல்லாத கடவுள் மீது, பாரத்தை போட்டு, ரயிலேறிவிட்டேன்.

ஊரில் தீபாவளியன்று எல்லா இணைய மையங்களும் விடுமுறை என்பதால், எழுதிய பதிவை தட்டச்சு செய்து வலையேற்றம் செய்யமுடியவில்லை. அதனால், நண்பனிடம் சொல்லி, பழைய பதிவான "பொன்னியின் செல்வனின் இறுதிபாக (நொந்த) கிளைக் கதை" பதிவை மீள்பதிவிட செய்தேன்.

ஒவ்வொரு நாள் பதிவிற்கும், முதல் நாள் தேர்வுக்கு படிக்கும் மாணவன் போல, ஒவ்வொரு கட்டுரையாக எழுதி பதிவிட்டேன். ஒருவழியாக, தமிழ்மணத்திற்கு கொடுத்த ஒருவாரம் - 7 பதிவுகள் எழுதவேண்டும் என்ற வாக்கை காப்பாற்றிய நிம்மதியில், இன்றிரவு நிம்மதியாக உறங்க போகிறேன்.

மற்றபடி கட்டுரைகளின் தரம் என பார்த்தால், நீங்கள் தான் சொல்லவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் படிப்பில், செயல்பாடுகளில் நான் சராசரி மாணவன் நான். இந்த தேர்விலும் தேறிவிட்டேன் என்றே சொல்வேன்.

கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் 3000 ஹிட்ஸ்கள் அதிகமாயிருக்கிறது. பின் தொடர்கிறவர்களாக சில நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். என் எழுத்தை பொறுமையாக வாசித்தவர்களுக்கும், நட்சத்திர வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும், படித்து, பின்னூட்டத்தில் கருத்தும் தெரிவித்து சிறப்பாக உற்சாகப்படுத்தியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக, பெண் பதிவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள். அவர்களுக்கும் எனது நன்றிகள்.

மேலும், தமிழ்மணம் நட்சத்திரமாவதற்கு என சில தகுதிகளை சில நாட்களுக்கு முன்பாக தமிழ்மணம் எழுதியிருந்தார்கள். அந்த தகுதிகளில் சிலவற்றில் நிச்சயம் தேறவே மாட்டேன். இருப்பினும், இவன் தேறுவான் என என்னையும் நம்பி, தேர்ந்தெடுத்து, ரிஸ்க் எடுத்த தமிழ்மணம் நிர்வாக குழுவினருக்கும், அவ்வப்பொழுது சின்ன சின்ன சந்தேகங்கள் கேட்ட பொழுது, உடனுக்குடன் பதிலளித்த தள நிர்வாகிகளில் ஒருவரான திரு. சங்கரபாண்டியன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மற்றபடி, மொக்கை, கும்மி, ஜல்லி என இல்லாமல், சமூக அக்கறையுடன் எழுதுகிற பதிவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். நாளை நட்சத்திரமாக தோன்ற போகும் புதிய பதிவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

தோழமையுடன்,

நொந்தகுமாரன்.

தென்மேற்கு பருவக்காற்று! ஒரு திரைப்பார்வை!


வேலாயுதம், ஏழாம் அறிவு என வணிகத்திற்காக எடுக்ககூடிய படங்கள் ஒருபக்கம் வரட்டும்! கதையம்சம் கொண்ட படங்களும் வரட்டும்! என்கிறவர்களுக்கு ஒரு செய்தி : வணிக ரீதியான படங்கள் அனைத்து திரையரங்களையும், மக்களின் ரசனையையும் ஆக்ரமித்து, நல்ல படங்கள் வருவதற்கான வழியை அடைத்துவிடுகின்றன என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

1996ல் பாரதிராஜாவின் 'அந்திமந்தாரை' வந்த பொழுது, மதுரையின் முக்கிய வீதி ஒன்றில் படம் குறித்து பாரதிராஜா பேசும் பொழுது, "நான் 25 வருடங்களாக திரையுலகில் இருக்கிறேன். நான் சில தரமற்ற (குப்பை!) படங்களையும் தந்திருக்கிறேன். அதற்கு பிராயச்சித்தமாக இந்த படத்தை தருகிறேன். இதை மக்கள் வரவேற்று, வெற்றிபெற செய்யவேண்டும். இது மக்களின் கடமை" என்று பேசினார். படம் தோல்வியுற்றது. ஆனால் தேசியவிருது வென்றது.

ஒருமுறை என் மூத்த அண்ணன், பாரதிராஜாவின் பேச்சை சிலாகித்து குறிப்பிட்ட பொழுது, எனக்கோ அபத்தமாகப்பட்டது. வருடத்திற்கு 100 படங்கள் வரை வெளிவருகின்றன. 99 படங்கள் குப்பையாக மக்கள் மண்டையில் கொட்டிவிட்டு, ஒரே ஒரு நல்ல படம் தருவார்களாம். அதை ஜெயிக்கவைக்க வேண்டியது மக்களின் கடமையாம்!

கிட்டத்தட்ட 149 படங்கள் 2010ம் ஆண்டில் வெளிவந்தன. அதில் 85%க்கும் மேலாக வணிகத்தை மட்டும் குறி வைத்து எடுக்கப்பட்ட படங்கள். நல்ல படங்களில் தென்மேற்கு பருவக்காற்று படமும் ஒன்று! சிறந்தபடம், சிறந்த பாடலாசிரியர், சிறந்த துணை நடிகை என மூன்று தேசிய விருதுகளை பெற்றுத்தந்தது.

இந்த நல்ல படத்தை வெளியிடுவதற்காக பட்ட சிரமங்களை இயக்குநர் சீனு ராமசாமியிடம் கேட்டுப்பாருங்கள். வெடித்து பேசுவார். பண்டிகை காலத்தில் படம் வெளியிட வேண்டும் என வரிசை கட்டி பல படங்கள் காத்திருக்கும். அதனால், அதற்கு முந்தைய மூன்று வாரங்களுக்கு திரையரங்குகள் கிடைக்கும். இந்த இடைவெளியில் வந்த படம் தென்மேற்கு பருவக்காற்று படம். என்ன கொடுமை சரவணா இது?

டிசம்பர் இறுதி வாரத்தில், இந்த படம் வெளிவந்த பொழுது, அந்த படத்தின் விளம்பர சுவரொட்டியில் ஒரு செய்தி சொல்லியிருந்தார்கள். அந்த செய்தி மிக முக்கியமானது. இந்த வருடத்தில் ஆனந்தவிகடனின் விமர்சனத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றபடம் இது!'. ஆனந்தவிகடனில் முக்கியமான எல்லா படங்களுக்கும் விமர்சனம் எழுதிவிடுகிறார்கள். ஆக, 2010ல் வெளிவந்த தமிழ்படங்களின் லட்சணம் இப்பொழுது நன்றாக புரியும்!

*****
இனி படம் என்ன கதையை சொல்கிறது என்பதை கொஞ்சம் பார்க்கலாம்.

இந்த சுட்டியை சொடுக்கினால், முழு கதையும் இந்த பதிவில் கிடைக்கிறது. படித்துவிட்டு வாருங்கள். நாம் அதை தாண்டி பேசலாம்!

****

படத்தில் கணவனை இழந்த வீராயி, தன்னுடைய உறுதியால், உழைப்பில், வைராக்கியத்துடனும், சுயமரியாதையுடனும் தன் பையனை வளர்க்கிறார். எங்கள் மண்ணில் பல தாய்களை என் வாழ்வில் பார்த்து வளர்ந்திருக்கிறேன். சுயமரியாதையுடன் வாழவேண்டுமென்றால் அதற்கு கடும் உழைப்பு அவசியம் என்பதை இவர்களை பார்த்து கற்றிருக்கிறேன்.

****

படம் முழுவதும் வீராயி சிரிக்கவேமாட்டார். எங்கள் வீட்டிலும், பொறுப்பில்லாத அப்பா என்பதால், அம்மா தான் எல்லாமும்! எங்கள் அம்மாவும் சிரிக்கவே மாட்டார். எப்பொழுதாவது அபூர்வமாய் சிரித்தால், அம்மா நிறைய அழகாய் இருப்பார்.

****

படத்தின் இறுதிக்காட்சியில் மகனை கொல்ல தேடிவரும், மகனின் காதலியின் அண்ணணை துணிச்சலுடன் எதிர்கொள்வார் வீராயி. பல பெரிய கதாநாயகர்கள் கோபத்தில், கண் சிவந்து, 100 எதிரிகளை வீழ்த்தும் வீரம் எல்லாம் வீராயி அம்மாவின் துணிவுக்கு முன்னால் டம்மி பீசு!

****

அப்படி எதிர்கொண்டு கத்தியால் குத்திவிட்டு ஓடிவிடுவான். உடனிருக்கும் ஒரு ஊமைப்பையன் அலறி துடிப்பான். அவனை கண்களாலும், வார்த்தையாலும் அதட்டி, வயிற்றிலிருந்து வெளியே கொட்டிய குடலை அப்படியே அள்ளி, திரும்பவும் எடுத்து உள்ளே போட்டு, , துண்டைக் கட்டி, அவனை செய்தி சொல்ல அனுப்பி, நடந்துபோய், பேருந்தைப் பிடித்து மருத்துவமனையில் போய் சேர்வார்! என்ன ஒரு அசாத்தியம்! என்ன ஒரு உறுதி!

மதுரை என்றால் ரவுடிசம், குத்து, வெட்டு என ரணகளப்படுத்துகிறார்கள். வீராயி போன்ற மனுசிகளை தேடித்தேடி பதிவு செய்வது தான் மக்கள் இலக்கியம். நல்ல திரைப்படம்.

****

வேலாயுதம் ராஜாவும், ஏழாம் அறிவு முருகதாசும் இப்பொழுது அடுத்த படத்தில் பரபரப்பாக இருக்கிறார்கள். இப்படியொரு நல்ல படத்தை இயக்கிய சீனு ராமசாமி தன்னுடைய அடுத்தபடம் 'நீர்ப்பறவை' என அறிவித்தார். ஒரு வருடம் ஆகிவிட்டது. சத்தமே இல்லை. இதுதான் தமிழ் சினிமாவின் எதார்த்தம்.

****

இங்கு உள்ள சுட்டியில், படம் எழுத்து போடும் பொழுது, பல வீராயிகளை நிழற்படங்களாக காட்டியிருப்பார் இயக்குநர். அருமை! நிச்சயம் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=PgGDlB6N7Gw

****

Saturday, October 29, 2011

உடான் - இந்திப்படம் - ஒரு திரைப்பார்வை!



வலையுலகில் வேலாயுதமும், ஏழாம் அறிவும் எட்டுத்திசையிலும் சுழற்றி, சுழற்றி விஜய் வில்லனின் அடியாட்களை அடிப்பது போல வாசகர்களை அடித்து நொறுக்கி வதைத்து கொண்டிருக்கின்றன. வேலாயுதம் படத்தின் ஒன் லைனே சகிக்கமுடியாததாக இருக்கிறது. இந்த படத்தைப் பார்த்து, சூப்பர் என பலரும் விமர்சனம் வேறு எழுதுகிறார்கள் என்றால்! ம்ஹூம். நிறைய ரசிகர்கள் பதிவுலகில் இருப்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.

கடந்த வருடம் தமிழ்மணம் நடத்திய விருது போட்டியில், திரைப்பட விமர்சனத்தில் இரண்டாம் பரிசு பெற்ற 'உடான்' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு தகுதியான படம் என்பதால் இந்த பகிர்வு!

*****

'உடான்' என்றால் விமானம் என பொருள்படும் என்கிறார்கள். கனவு என்றும் பொருள்படுமாம்!

கதை எனப்பார்த்தால், இந்தியாவிலேயே பணக்காரப்பள்ளிகளில் ஒன்றான சிம்லாவில் இருக்கும் ஒரு பள்ளியில், ரோஹன் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கிறான். வழக்கமாக செய்யும் சேட்டைகளில் கொஞ்சம் எல்லை மீறிப்போக பள்ளியிலிருந்து அவனையும், அவனுடைய நண்பர்கள் மூவரையும் அனுப்புகிறார்கள்.

அப்பா பயங்கர கோபத்துடன் மகனை சொந்த ஊரான ஜம்ஜெட்பூருக்கு அழைத்துவருகிறார். கடந்த எட்டு ஆண்டுகளில் ஒருமுறை கூட பார்க்க வராத அப்பாவின் மீது மகனுக்கு பயங்கர கோபம்.

****

வீட்டில் நிலைமை ரோஹனுக்கு சிறை போலிருக்கிறது. அப்பா ராணுவக்கட்டுபாடுகள் விதிக்கிறார். "சார்" என்று தான் தன்னை அழைக்கவேண்டும் என மிரட்டுகிறார். எல்லாம் அதிர்ச்சியாக இருக்கிறது. அதைவிட அதிர்ச்சி, ஆறு வயதில் ஜிம்மி என சகோதரன் புதிதாக வீட்டில் இருக்கிறான். அது இன்னும் அதிர்ச்சியை தருகிறது. ரோஹனின் அம்மா ஏற்கனவே இல்லை. இந்த எட்டு ஆண்டுகளில், அப்பா வேறு ஒரு பெண்ணை மணந்து, குழந்தை பிறந்த பிறகு, ஜிம்மியின் அம்மா பிரிந்தும் போயிருக்கிறார்.

மேற்படிப்பில் ரோஹனுக்கு கதை, கவிதைகளில் ஆர்வம் அதிகம். இலக்கியம் படிக்க ஆசைப்படுகிறான். அப்பாவோ, தன் இரும்பு தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டே, இன்ஜினியரிங் படி என கட்டளையிடுகிறார். வேறு வழியில்லாமல், இன்ஜினியரிங் படிக்கிறான். எல்லா பாடங்களிலும் வேண்டுமென்றே தோல்வி அடைகிறான். இதற்கிடையில் ரோஹனுக்கும், ஜிம்மிக்கும் நெருக்கம் ஏற்படுகிறது.

அப்பாவிற்கும், மகனுக்குமான முரண்பாடுகள் நாளாக நாளாக வெடிக்கின்றன. மீண்டும் ஒரு கல்யாணம் செய்துகொள்ளப் போவதாக முடிவெடுக்கிறார். ஜிம்மியை ரோஹனைப்போலவே போர்டு பள்ளியில் சேர்த்துவிடபோவதாகவும் சொல்கிறார். வீட்டை விட்டு வெளியேறி, தன் நண்பர்கள் நடத்தும், உணவகத்தில் வேலை செய்து, தனக்கு பிடித்த வாழ்வை தொடரலாம் என ரோஹன் முடிவெடுக்கிறான். வெளியேறியும் விடுகிறான். இறுதி நேரத்தில், தன்னுடன் தன் தம்பியை விட்டுவிட்டால், தன்னைப் போலவே அவனும் பாதிக்கப்படுவான் என நினைத்து, அவனையும் அழைத்துக்கொண்டு கிளம்புகிறான். ரோஹன் எழுதிய கடிதத்தை அவனின் அப்பா படிப்பதோடு படம் முடிவடைகிறது!

****

சில படங்கள் வெகு நாள்களுக்கு மனதில் தங்கும். அப்படிப்பட்ட படங்களில் இந்த படமும் ஒன்று. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மிக குறைவு. ரோஹன், அவனின் தம்பியாக வரும் ஜிம்மி, அப்பா, சித்தப்பா என நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிறந்த கதை, திரைக்கதை, சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த துணை கதாப்பாத்திரம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலிப்பதிவு என ஏழு பிரிவுகளில் பிலிம்பேர் விருது பெற்றிருக்கிறது. பார்க்கவேண்டிய படம். நிச்சயம் பாருங்கள்.

****

திரைப்படங்கள் யதார்த்த வாழ்வியலை, அதன் எழும் சிக்கல்களை, தீர்வுகளை பேசுவதாக இருக்க வேண்டும். இந்த படம் அப்பா மகன் உறவு சிக்கலை யதார்த்தமாக பேசுகிறது. இந்திய சமூகத்தில், நம் குடும்பங்கள் தந்தை வழி சமூகமாக இருக்கிறது. தந்தை சொல்வது தான் வேதவாக்கு. அப்பா சொல்வதை எதிர்ப்பில்லாமல் மொத்த குடும்பமும் கேட்டு நடக்கவேண்டும். தந்தைக்கும் தாயுக்குமான உறவே சமத்துவம் இல்லாமல் தான் இருப்பதால், பிள்ளைகளின் நிலையும் அதுவே!

அம்மாவை, அப்பாவை தாங்குகிற மிகை உணர்ச்சி கொண்ட செண்டிமெண்ட படங்கள் தான் இங்கு அதிகம். அதிகமாய் வசூலையும் கடந்த காலத்தில் தந்திருக்கின்றன. தமிழில் தந்தை மகன் உறவு சிக்கல் குறித்த பேசிய படங்கள் மிக குறைவு. வெயில், துள்ளி திரிந்த காலம் என சொற்பமான சில படங்கள் தான்!

****

கீழே உள்ள சுட்டியில் உள்ள விமர்சனம் தான் இரண்டாம் பரிசு பெற்றது. விரிவாகவும், உணர்வுபூர்வமாகவும் எழுதியுள்ளார்.

உடான் - விமானம் - காத்தாடி - ஒரு கனவு! - அன்பே சிவம்!

Friday, October 28, 2011

பண்டிகை! - சில குறிப்புகள்


தீபாவளிக்கு வரும் வாழ்த்துக்கள்
குறைந்துவிட்டது!
குறுஞ்செய்திகளுக்கான விலையை
அதிகரித்துவிட்டார்களா?
கடவுள் மறுப்பாளன் என்பது பரவிவிட்டதா?

கறி வாங்க போன அக்கா பையன்
ஆறு அறுப்பதை பார்த்துவிட்டு
கறிசாப்பிடவில்லை.
சிறுவயது நினைவுகள்
மேலே வருகின்றன.

நான்காவது ஆண்டும்
குலோப்ஜாமுன் செய்யும் முயற்சியில்
அண்ணி தோற்றுவிட்டார்.
எங்களால் தப்பிக்க முடியவில்லை!

"உனக்கும் என்னை மாதிரியே
வெடியென்றால் பயமா? என்கிறான்
அண்ணனின் குட்டி பையன்!

சர்க்கரை படுத்தும் பாட்டில்
அம்மாவிற்கு எல்லா பற்களும் காலி!
கறியை கடிக்கமுடியவில்லை!
இனிப்புகளை ஏக்கமாய் தான்
பார்க்கமுடிகிறது!

ஐஆர்டிசின் அழுகுணி ஓட்ட பந்தயத்தில்
இந்தமுறை ஜெயித்துவிட்டேன்!
ஆம்னி கொள்ளையிலிருந்தும்
தப்பித்துவிட்டேன்!
பயணம் சிரமமில்லை!

காதல் காணாமல் போகும்!

சமீப காலமாக வசந்த் தொலைக்காட்சியில் இந்திய நேரப்படி இரவு 11 மணி முதல் 11.30 வரை வாரத்தில் எல்லா நாட்களிலும் பாலியல் மருத்துவர் (Sexologist) காமராஜ் மக்களின் பாலியல் குறித்தான சந்தேகங்களுக்கு பதிலும், இடையிடையே சில தலைப்புகளில் தொடர் உரையும் வழங்கி வருகிறார். (எவ்வளவு பெரிய வாக்கியம்!)

சில நாட்களில் நேரடி ஒளிபரப்பாகவும், சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட ஒளிபரப்பாகவும் வெளியிடுகிறார்கள்.

அதில் சில குறிப்புகள் சுவாரசியமானவை. அவசியமாக பகிர்ந்து கொள்ள தக்கவை!

****

தினமும் யாராவது ஒருத்தராவது "சுய இன்பம் செய்வது தவறா?" என்ற கேள்வி தொடர்ந்து கேட்கிறார்கள். மருத்துவரும் "இல்லை! இல்லை!" என பல காரணங்கள் சொல்லி, மறுத்து வருகிறார்.

இந்த கேள்வி பாலியல் அறிவில் துவக்கப்புள்ளியான கேள்வி. கல்லூரி மாணவர் யாராவது இந்த கேள்வியை எழுப்பினால் கூட பரவாயில்லை. பல்வேறு வயதினை சேர்ந்தவர்களும் இந்த கேள்வியை கேட்கிறார்கள். இப்படி பாலியலில் எல்.கே.ஜி. அளவிலேயே 40, 50 வயது வரை இருந்தால் என்ன செய்வது? நமது பாடத்திட்டத்திலேயே பாலியல் கல்வி அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் இந்த ஆரம்ப கால சந்தேகங்கள் வலியுறுத்துகின்றன.

மக்களின் அறியாமையால் சுய இன்பம் செய்தால், வரும் கோளாறுகள் என பயமுறுத்தி, பல போலி மருத்துவர்கள் தமிழ்நாட்டில் கல்லா கட்டுகிறார்கள். அவர்களுடைய அனைவரும் வாழ்விலும் மருத்துவர் மண்ணை அள்ளிப்போடுகிறார். :)

****

ஆரோக்கியமான பாலியல் குறித்த அக்கறையில், தொடர்ச்சியாக மருத்துவர் வீட்டில் ஆண்கள் தங்கள் துணைவியார்களை சமமாக நடத்துங்கள் என வலியுறுத்தி வருகிறார்.

தொடர்ச்சியாக ஆண்கள் பாலியல் உறவில் தன் உணர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, பெண்களில் உச்சநிலை அடைவது குறித்து கவலைப்படவில்லையென்றால், நாளடைவில் துணைவியாருக்கு உடலுறவிலேயே நாட்டம் இல்லாமல் போய்விடும் என்கிறார்.

இதையே வேறு வேறு விசயங்களில், வேறு வேறு வழிகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். ஆண்கள் பெண்களை பாலியல் உறவின் தேவைக்கு மட்டுமே சமமாக நடத்திவிடுவார்களா என்ன?

இங்கு நிலவுகிற பிற்போக்கு கலாச்சாரமான முதலாளியத்தின் நுகர்வு கலாச்சாரமும், பெண்ணை சமமாக நினைக்க விடாத, இந்து பார்ப்பனிய கலாச்சாரமும் இந்தியாவில் நிலவும் வரை பெண்ணை சமமாக நடத்துவது சாத்தியமே இல்லை. அதற்கு சமீபத்திய இரண்டு உதாரணங்கள்.

கடந்த வாரம் ஒருவர், மருத்துவரிடம் கேள்வி கேட்கும் பொழுது இப்படி ஆரம்பித்தார்.

"என் மனைவிக்கு குழந்தையில்லை" என!

"எங்களுக்கு குழந்தை இல்லை என சொல்லுங்கள்" என மருத்துவர் திருத்தினார்.

சமீபத்தில் நீயா நானாவில் மாமியார்கள் VS மருமகள்கள் விவாதம் நடந்தது. தன் மகன், மருமகளை அன்றாட வாழ்வில் சில விசயங்களில் துணைவியருக்கு உதவிய பொழுது, அதற்கு அந்த அம்மாக்கள் மனம் பெரிதும் கலங்கினார்கள். கண்ணீர் விட்டார்கள்.

****

சில சுவாரசிய கேள்விகளும் கேட்கப்படுகின்றன.

கடந்த வாரம் நெல்லையிலிருந்து நடுத்தர வயது பெண்மணி ஒரு கேள்வி கேட்டார்.

"திருமணத்திற்கு முன்பு காதலருடன் இருந்த உறவில் இனிமை இருந்தது. இப்பொழுது திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. அவருடன் இருந்த பாலியல் இனிமை, என் கணவரிடம் இல்லையே! ஏன் டாக்டர்?" என்றார்.

****
சில குறிப்பிட்ட தலைப்புகளிலும் உரையாற்றுகிறார் என சொன்னேன் அல்லவா!

கணவன், மனைவி உறவில் ஏன் பல சிக்கல்கள் வருகிறது? என விளக்கும் பொழுது, சிரித்துக்கொண்டே

"தெய்வீக காதலர்களுக்கு திருமணம் நடத்தி வையுங்கள். வெகு சீக்கிரத்தில் காதல் காணமல் போய்விடும்!" என சில ஆய்வுகளை மேற்கோள்காட்டி விரிவாக பேசினார்.

****

இந்த நிகழ்ச்சியின் வர்த்தக ரீதியான பலன்கள் தாண்டி, இந்நிகழ்ச்சிகளை பார்க்க பரிந்துரைப்பதற்கான காரணம் மருத்துவர் நிதானமானவராக, எளிமையாக புரியும்படி பேசுகிறவராக இருப்பது தான்!

மருத்துவத்துறை சேவைத்துறை என்பது மறைந்து போய், நன்றாக கல்லாக்கட்டும் துறையாக மாறி பல வருடங்களாயிற்று. கடந்த காலங்களில், மருத்துவருக்கும் நோயாளிக்குமான ஒரு நல்வுறவு இருந்தது. பல தமிழ்படங்களை பார்த்தால், அந்த உறவை புரிந்துகொள்ளலாம். இப்பொழுது நிலைமை மாறி, நோயாளிகளிடம் மருத்துவர்கள் பேசவே மாட்டேன் என்கிறார்கள். பேசினால், அடுத்து இரண்டு நோயாளிகளை பார்க்கமுடியாமல் போய்விடும் என பயப்படுகிறார்கள். இந்த நிலைமையில், மக்களின் சந்தேகங்களுக்கு மருத்துவர் பதிலளிப்பது வரலாற்று முக்கிய நிகழ்வு என்பதாக கொள்ளலாம்.

இந்த பதிவு குறித்தும், நிகழ்ச்சி குறித்தும் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

****

Thursday, October 27, 2011

தீபாவளி - சில குறிப்புகள்!


'இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்' - கடந்த ஒரு மாத காலத்திற்கும், மேலாக கல்லா கட்டிய எல்லா வர்த்தக நிறுவனங்களும், தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் வாயிலாகவும் மக்களுக்கு நேற்று வாழ்த்து தெரிவித்து கொண்டே இருந்தார்கள். பதிவிலும், பஸ்ஸரிலும், டிவிட்டரிலும் தீபாவளி வாழ்த்துக்கள் பகிர்ந்துகொண்டார்கள்.

பொதுவாக பண்டிகைகள் மக்கள் புதிய ஆடைகள், அணிகலன்கள், புதிய பொருட்கள் வாங்குவதும், சொந்த பந்தங்களோடு கூடி களிப்பதும் என்கிறார்கள்.

ஆனால், இங்கு பெரும்பான்மையான மக்களின் வாழிவில் பண்டிகைகளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என கொஞ்சம் கவனித்திருக்கிறீர்களா? அல்லது யாரிடாமாவது விசாரித்திருக்கிறீர்களா/

என் சிறுவயது முதல் எங்கள் வீட்டிலும், பல உறவினர்கள் வீடுகளை கவனித்தவரையிலும், பண்டிகள் எப்பொழுதுமே மனப்பதட்டங்களை ஏற்படுத்திவிடும்

வாரக்கூலியோ, மாதந்திர சம்பளமோ அடிப்படை தேவைகளுக்கு கூட பற்றாகுறையாகவே இருக்கும். பல வீடுகளில் ரேசன் அரிசி, பருப்பு வாங்கித்தான் பயன்படுத்துவார்கள். ஏதேனும், வீட்டில் விசேசமோ அல்லது திடீர் மருத்துவ செலவோ வந்துவிட்டால் வட்டிக்கு கடன் வாங்கி தான் செலவுகளை எதிர்கொள்வார்கள். அதன்பிறகு, வரும் மாதங்களில் பற்றாக்குறையாக எப்பொழுதும் போடப்படும் பட்ஜெட்டில் வட்டியும் ஏறிக்கொள்ளும்.

போனஸ் என்று வருடத்திற்கு ஒருமுறை வரும் பொழுது, அதற்கு பல மனக்கணக்குகள் போட்டு வைத்திருப்பார்கள். கடனை அடைக்கவேண்டும். அடகு வைத்திருக்கும் தோடு மூக்கத்தியை மீட்க வேண்டும்.

ஆனால், போனஸ் கைக்கு வருவதற்குள் தாவு தீர்ந்துவிடும். மூன்றாண்டுக்கு ஒருமுறை போனஸ் எத்தனை சதவிகிதம் என்ற பேச்சுவார்த்தையில், இழுபறி ஏற்பட்டு, ஸ்டிரைக் என ஒருவாரம், பத்துநாள் என உற்பத்தியை நிறுத்தினால் தான் முதலாளிகள் பேசுவதற்கு முன்வருவார்கள். அப்பைட் வரும் போனசும், யானை பசிக்கு சோளப்பொரி என்பதாக இருக்கும்.

அப்படி போராடி வருகின்ற போனசும் செலவுகளின் பாதிக்கு கூட போதாமல், சம்பளத்தில் கொஞ்சம் முன்பணம் வாங்கித்தான் பண்டிகைகளை எதிர்கொள்வார்கள்.

முன்கூட்டியே போனஸ் வராததால், தீபாவளிக்கு முதல் நாள் போய், குறைவான விலைக்கு துணி எடுத்துவருவார்கள். பட்டாசு வாங்கிய கணக்கு காட்டுவதற்காக கொஞ்சம் விலைகுறைவான பட்டாசுகளும் வாங்கிவருவார்கள்.

இப்படி ஒவ்வொன்றும் கொண்டாட்டமோ, சந்தோசமோ இல்லாமல், வெறுமனே கொண்டாட வேண்டுமே என்று தான் ஒவ்வொரு பண்டிகையும் நகர்த்துவார்கள். வசதியானவர்களுக்கு தான் பண்டிகைகள் கொண்டாட்டமும், கும்மாளமும்!

இப்படி பார்த்து பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ, கல்லூரி படிக்கும் காலத்திலேயே, தொடர்ச்சியான தேடலில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. அதன்பிறகான தேடலில், சமூக மாற்றத்திற்கான செயல்களில் ஈடுபடவும் தூண்டியது.

மற்றபடி, கருத்தியல் ரீதியாகவும், தீபாவளி தமிழர்களுக்கான பண்டிகை இல்லை என்பதை, பல பதிவுகள் இங்கே பகிர்ந்துகொள்ளப்பட்டுத்தான் வருகின்றன. கீழே சுட்டிகளாகவும் இணைத்திருக்கிறேன்.

ஆக, அனைத்து மக்களும் கொண்டாடும் வகையில் பண்டிகைகள் இருக்கவேண்டும் என நினைத்தால், இங்கே சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்ற நாம் செயலில் இறங்கவேண்டும்.

இல்லையென்றால், ஒரு சாரர் அதிக கொண்டாட்டத்திலும், பெரும்பான்மையினோர் தட்டு தடுமாறித்தான் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும்.

*****

இங்கே பட்டாசு கடை நடத்திவரும் உமா என்பவர் தனது அனுபவங்களை பகிர்கிறார்.

"தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வியாபாரம் தொடங்கிவிடும்.என் கணவிற்கு உதவியாக கடை நிர்வாகத்தை நானும் கவனிப்பதுண்டு. முதல் 5 நாள்கள் வசதியானவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் வந்து ஆற அமர பெரிய பெரிய பட்டாசு வகைகளைப் பேரம்பேசி வாங்கிப்போவார்கள்.

ஆனால் கூலித்தொழிலாளர்கள், தீபாவளி ஊக்கத்தொகையை எதிர்ப்பார்த்திருப்பவர்கள் எல்லாம் தீபாவளிக்கு முந்தைய இரவில் தான் பட்டாசு வாங்க வருவார்கள். அப்போது ஆசைக்கும் பணத்துக்கும் அங்கே ஒரு போராட்டமே நடக்கும். இரண்டு மூன்று பிள்ளைகளோடு, சட்டைப் பையின் மீதும் (இதயத் துடிப்பின் மீதும்) கையை வைத்துக்கொண்டு தயங்கித் தயங்கி கடைக்கு வருவார் தந்தை. பிள்ளைகளின் கண்களோ அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பளபள அட்டைப் பெட்டிகளில் இருக்கும் பட்டாசுகளின் மீது ஆவலோடு படௌம். ஏழைப் பெற்றோர்களோ தங்களின் இல்லாமையை நினைத்து ஏங்கி நிற்பார்கள். ஆனால், இறுதியில் குருவி வெடியும், சீனிப்பட்டாசும் ஏதோ கொஞ்சம் பூச்சட்டியும், சங்குச் சக்கரமும் தான் வாங்கப்படும்.

அந்த நேரத்தில் என்னால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளுக்கு கொஞ்சம் கூடுதலாக கொடுத்தனுப்புவேன். தீபாவளி தான் எங்களுக்கு வாழ்வாதாரம் என்றாலும், அந்த நொடி மனம் முழுவதும் வேதனையில் துடிக்கும். கண்களின் கண்ணீர் கல்லாவில் இருக்கும் காசை மறைக்கும்"

****
தொடர்புடைய சுட்டிகள் :

தீபாவளி பண்டிகையும், சில கேள்விகளும்!

தீபாவளி கொண்டாடாத பிரபலங்கள்! ஏன்?

வெடிக்காத பட்டாசு!

Tuesday, October 25, 2011

பொன்னியின் செல்வன் இறுதிபாக (நொந்த) கிளைக்கதை!

முன்குறிப்பு : புதையல் தேடி கெளபாய் வீரர்கள் புறப்படுவார்களே, அது போல பொன்னியின் செல்வன் இறுதிபாகத்திற்காக நான் அலைந்து திரிந்த அனுபவம் இது. சுவாரசியமான சம்பவங்களும், திடீர் திருப்பங்களும் கொண்டது.

முதல் அத்தியாயம் டிசம்பர் 2009ல் தொடங்கி, ஒவ்வொரு அத்தியாயமாக மொத்தம் 8 அத்தியாயங்களை மே 2010ல வரை எழுதிமுடித்தேன். ஏதாவது ஒரு அத்தியாயம் எப்பொழுதாவது உங்கள் கண்ணில்பட்டிருக்கலாம். இப்பொழுது புதியதாய் முடிவுரை எழுதி, மொத்தமாய் பதிவிட்டிருக்கிறேன்.

கொஞ்சம் நீளம் தான். எட்டு அத்தியாயமாயிற்றே! பொறுமையாய் படித்து, தங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் தன்யானாவேன்.

*****

அத்தியாயம் - 1

இடம்: பகுதியில் இயங்கும் பொது நூலகம்

"இத்தனை பாகம் படிச்சுட்டேன். இறுதி பாகத்துக்கு மட்டும் இப்படி ஒரு விதியை சொன்னீங்கன்னா! எப்படி சார்? புரியல!" என்றேன்

"நூறு ரூபாய்க்கு மேல உள்ள புத்தகத்தை இங்கேயே தான் படிக்கனும்னு இப்ப தான் விதி கொண்டு வந்திருக்காங்க! நாங்க என்ன செய்ய முடியும்?" என்றார் நூலகர்.

வந்தியத்தேவன், குந்தவை, அருண்மொழிவர்மன், வானதி-க்கெல்லாம் என்ன ஆயிற்றோ! என பதைபதைப்பாய் இருந்தது. எப்படி வாங்குவது? இப்படியே எடுத்துக்கொண்டு திடு திடுன்னு ஓடிப்போயிடாலாமா? என்று கூட யோசனை வந்தது.

"சார்! இந்த காலத்துல புத்தகம் படிக்கிற பழக்கமே மக்கள்கிட்டே குறைஞ்சுகிட்டே வருது! மக்களை படிக்க விடாம பண்ணுறதுக்கு தான் அரசு இப்படி ஒரு விதி போட்டிருக்கு!" என்றேன் குரல் உயர்த்தி கோபமாய்!

படித்துக் கொண்டிருந்த வாசகர்கள் எல்லோரும் ஒருமுறை திரும்பி பார்த்தார்கள்.

"அதெல்லாம் ஒன்னும் கிடையாது தம்பி. படிக்க எடுத்துட்டு போனா... பொறுப்பா கொண்டு வருவது கிடையாது. 10ரூ சந்தா கட்டிட்டு, 200 ரூபாய்க்கு புத்தகத்தை எடுத்து போயிடுறான். நாங்க மாற்றலாகி வேறு நூலகம் மாறி போகும் பொழுது, கணக்கு காட்டிட்டு போக சொல்லுது அரசு! அந்த சமயத்துல நாங்க வீடு வீடா தேடிப்போய் வாங்கி வர வேண்டியிருக்கு. அப்படியும் கிடைக்கலையா! புத்தகத்துக்குரிய பணத்தை எங்க தலையில கட்டிடுறாங்க!" என்றார் புலம்பியபடி.

"அது சரி சார்! இங்க உட்கார்ந்து புக் படிச்சிட்டிருந்தா... பொழப்பை எப்படி சார் பார்க்கிறது?" என்றேன்.

"உங்க நிலைமை புரியுது! நான் உதவி நூலகர். நூலகர் இரண்டு நாள் விடுப்பில் இருக்கிறார். அவர் வந்ததும் பேசி, வாங்கிக்கங்க! என்றார்.

எப்பொழுதும் பிசியாய் இருக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. புத்தகத்தை ஏக்கமாய் பார்த்தபடி, டேபிளில் வைத்துவிட்டு வெளியே வந்தேன். சூரியன் தலை சாய்த்து இருள் கவ்வியிருந்தது. (எல்லாம் நாவலோட பாதிப்பு தான்!)

****
அத்தியாயம் - 2

இரண்டு நாட்களை கடத்துவதற்கு, நிறைய சிரமப்பட்டேன். பல நாட்கள் ஆனது போல இருந்தது. இதனால் சாப்பாடு கூட சரியாக உள்ளே இறங்க வில்லை. (இலக்கியத்தின் மீது இப்படி ஒரு காதலா! என என நீங்கள் என்னை பாராட்டுவது எனக்கு கேட்கிறது!) இன்றைக்கு எப்பாடு பட்டாவது பொன்னியின் செல்வன் -ன் இறுதி பாகத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

இடம் : பொது நூலகம் நேரம் : காலை 10 மணி

நூலகர் சீட்டில் இருந்தார். அப்பாடா! இன்றைக்கு கிடைத்துவிடும் நம்பிக்கை வந்தது.

நூலகரிடம் 30 வயது மதிப்பு கொண்ட ஒருவர் ராஜேஷ்குமார் நாவலைப் பற்றி சிலாகித்து " என்னா ட்விஸ்ட்! என்னா சஸ்பென்ஸ்! சான்ஸே இல்லை சார்! ராஜேஷ்குமார்னா ராஜேஷ்குமார் தான் சார்"

டே! நாலு கழுதை வயசாச்சு! இன்னும் ராஜேஷ்குமார் நாவலிலேயே நங்கூரம் போட்டு உட்கார்ந்திருக்கான் என மனதில் திட்டினேன். நாம பரவாயில்லை. நாலாம் வகுப்பில் சிந்துபாத்தில் தொடங்கி, 7ம் வகுப்பில் அம்புலிமாமா படித்து, 16 வயதில் ராஜேஷ்குமார்-ன் விவேக் துப்பறியும் அறிவை கண்டு வியந்து, பிறகு பட்டுகோட்டை பிரபாகர்-ன் நொந்தகுமாரனில் விழுந்து விழுந்து சிரித்து, பிறகு பாலகுமாரனிடத்தில் தொபுக்கடீர்னு விழுந்து எழ முடியாமல் எழுந்து, சுஜாதாவிடம் 22 வயதில் சிக்கிகொண்டேன். இப்ப கல்கி. எனக்கு நானே முதுகில் தட்டிக்கொடுத்து கொண்டேன்.

ராஜேஷ்குமார் ரசிகரிடம் பேசி அனுப்பி விட்டு, என்னிடம் "என்ன தம்பி?" என்றார்.

பவ்யமாய் "சார்! என் நண்பன் காமராஜர் பல்கலைகழகத்தில் பி.எச்.டி பண்றார். தமிழ் இலக்கியங்களை பற்றி ஆய்வு செய்வதால், சில தமிழ் நாவல்களிலிருந்து சில குறிப்புகள் தேவைப்படுது. அதனால்...!"

"இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றீங்க!" என நக்கலாய் இடைமறித்தார்.

"அந்த ஆய்வுக்காக(!) பொன்னியின் செல்வனின் இறுதி பாகம் தேவைப்படுது. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து கேட்டேன். (பாழாய் போன அரசு விதியை எல்லாம் ஞாபகப்படுத்தாமல்... கவனமாய் தவிர்த்து) உங்க கிட்டே கேட்டு வாங்கிட்டு போகலாம்-னு உதவி நூலகர் சொன்னார்" என்றேன்.

'சரி தம்பி! எடுத்துங்க! லேட் பண்ணாம கொண்டு வந்திருங்க!" என்றார்.

அவருக்கு நன்றி சொல்லி, ஆர்வமாய்.. கனமான புத்தகங்கள் இருக்கும் வரிசையில்... வேகமாக போய் தேடினேன். அருகில் ஒரு பெண் புத்தகம் தேடிக்கொண்டிருந்தார். எதைச்சையாய் என்னை பார்த்தார். எனக்கு தூக்கிவாரி போட்டது. அப்படியே! பொன்னியின் செல்வனில் வருகிற நந்தினி! கொஞ்சம் தலையை சிலிப்பி கொண்டு பார்த்தால்.. நந்தினின் சாயலோடு இருந்தார். நான் அதிர்ச்சியாய் பார்த்ததில் அந்த பெண் ஒரு மாதிரியாய் பார்த்து, அவசரமாய் அடுத்த செல்புக்கு புத்தகம் தேட நகர்ந்தாள்.

கனமான புத்தகங்கள் உள்ள எல்லா இடங்களிலும் தேடினேன். புத்தகத்தை காணவில்லை. முகம் வாடிபோனது. நூலகர் புத்தகம் வெளியே போன விசயம் தெரிந்து தான், அனுமதிச்சுட்டாரோ! என சந்தேகம் வந்தது.

மீண்டும் நூலகரிடம் இல்லாததை வந்து சோகமாய் சொன்னேன். லெட்ஜரில் தேடி..

"ஆமா! வெளியே போயிருக்கு. ஒரு வாரம் கழிச்சு வாங்களேன்! என்றார் கூலாய். (என் அவஸ்தை புரியாமல்)

இதற்கிடையில் வெளியூரில் வேலை கிடைத்தது. இனி அடிக்கடி புத்தகம் வந்துவிட்டதா என பார்க்க முடியாதே என வருந்தினேன். இலக்கியத்தில் ஆர்வமாய் இருக்கும் நண்பன் ஒருவனிடம் என் அவஸ்தையை விளக்கி... எடுத்து வைக்க சொல்லி... டாட்டா காட்டி ஊருக்கு புறப்பட்டேன்.

அடுத்த வந்த இரவுகளில்... ஆழ்வார்க்கடியான் தன்னந்தனியனாக காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்தான். வானதி, குந்தவை பிராட்டியார் கனவில் வந்து போனார்கள்.
*****

அத்தியாயம் - 3

இடம் : நண்பன் வீடு நேரம் : காலை 11 மணி

இருபது நாட்கள் கழித்து, சொந்த ஊருக்கு வந்தேன். ஆவலாய் நண்பனைச் சந்தித்தேன். அவன் என் அவஸ்தையை புரிந்து கொண்டு, ஆய்வு கதையை கொஞ்சம் நூலகரிடம் நினைவுப்படுத்தி கொஞ்சம் அலைந்து.. பொறுப்பாய் எடுத்து வைத்திருந்தான்.

பொன்னியின் செல்வனின் இறுதி பாக கனத்த புத்தகத்தை தடவிப் பார்த்தேன். (பீலீங்!)

"ஊருக்கு எடுத்துட்டு போறேன். இரண்டு வாரத்திற்குள் முடித்துவிடுவேன். கொடுத்துவிடலாம்" என்றேன்.

"இல்லைடா! நீ ஊருக்கு போன 6வது நாளே எடுத்துட்டேன். வழக்கம் போல 14 நாட்கள் கெடு கொடுத்திருந்தார்கள். இப்பொழுது முடிந்துவிட்டது. போய் ரெனிவல் (புதுப்பித்துவிட்டு) பண்ணிட்டு தருகிறேன்" என்றான் மிக பொறுப்பாய்!

இதென்ன புது பிரச்சனை. எனக்கென்னவோ அவன் வார்த்தைகளில், புத்தகம் கை நழுவி போகிற மாதிரி இருந்தது. புத்தகத்தை இறுக்க அணைத்து கொண்டேன்.

"வேண்டாம்டா! போய் ரெனிவல் பண்ணி கேட்டு... தந்துவிட்டால் பிரச்சனையில்லை. தராவிட்டால் ரெம்ப டென்சனாயிடும்!" என்றேன்.

"இல்லையில்லை! நீ வா! ரெனிவல் பண்ணி தர வேண்டிய பொறுப்பு என்னுடையது! கவலைப்படாதே! நீ 4 மணிக்கு நேரா நூலகத்துக்கு வந்துரு! நானும் வந்துவிடுகிறேன்!" என சொன்னான். இறுதி பாகமான "தியாக சிகரத்தை" ஏக்கமாய் ஒருமுறை தடவி பார்த்துகொண்டேன். புத்தகத்தைப் பார்த்து... "நீ எனக்கு கிடைச்சுருவேயில்ல!" என்றேன் மனதுக்குள்!

இடம் : நூலகம் நேரம் : மாலை 5 மணி

நம்ம கெட்ட நேரத்திற்கு நூலகர் சீட்டில் இல்லை. உதவி நூலகர் தான் சீட்டில் இருந்தார். பகீரென ஆகிவிட்டது. திரும்பவும் நண்பனிடம் சொன்னேன். "வேண்டாம்டா! உள்ளுக்குள்ள ஒரு பட்சி சொல்லுது! இந்த ஆள் தரமாட்டான் என!" என்றேன். "நானாச்சு! வா" என இழுத்துப்போனான்.

நேரே போய், ரெனிவல் பண்ணி தர சொல்லி கேட்டான். அவரும், புத்தகம் திரும்பி வந்ததற்கான பதிவை எல்லாம் எழுதினார். நிமிர்ந்து.... நண்பனை பார்த்து...

":தம்பி! நீங்க வாங்கிட்டு போனதுக்கு பிறகு, நூலகர் லெட்ஜரைப் பார்த்துட்டு, எதுக்கு கொடுத்தீங்க? என எனக்கு டோஸ்விட்டார். அதனால், இப்ப கொடுக்க முடியாது!" என்றார்.

நண்பனின் முகம் வெளிறிப் போனது. அவனின் தர்ம சங்கட நிலைமையை பார்த்து, அந்த டென்சனிலும் எனக்கு சிரிப்பு வந்தது.

பிறகு, இருவரும் ஆய்வுக்கதை, வேலைக் கதை, நேர்மை கதை - என பல அஸ்திரங்களை தொடுத்தோம். "நூலகர் பூதத்தை"க் காட்டி, எல்லாவற்றையும் சளைக்காமல் முறித்து போட்டார்.

இனி, பேசுவது வீண் என பட்டது. தலை தொங்கி, இருவரும் வெளியேறினோம்.

என்னைப் பார்த்து..."ஸாரிடா!" என்றான். புத்தகம் கிடைக்கவில்லை என்றாலும்... நண்பனின் நேர்மை எனக்கு பிடிச்சிருந்தது.

பொன்னியின் செல்வனின் இறுதி பாகம் உலகத்திலேயே ஒரு புத்தகம் தான் இருக்கா என்ன! வேறு வகைகளில் தேடலாம் என, முயற்சியில் தளரா விக்கிரமாதித்தனை போல, வெளியே வந்தோம்.

*****
அத்தியாயம் - 4

நூலகத்தை விட்டு வெளியே வந்ததும்... "நூலகரைப் பார்த்து நானே வாங்கித் தர்றேன்டா" என்றான் குற்ற உணர்வுடன்!

"வேண்டாண்டா! புத்தகம் அடிக்கடி வெளியில போயிருது. நூலகரும் அடிக்கடி விடுப்புல போயிறாரு! இந்த புத்தகத்தை நம்புனா ரெம்ப காலம் இழுக்கும் போல தெரியுது! வேற வழியில முயற்சிக்கிறேன்" என்றேன்.

நான் சொன்னதை ஏற்றுக்கொள்வது போல, நண்பன் அமைதியாய் இருந்தான்.

என் வீட்டு எதிரில் இருக்கும் ஒரு குடும்பஸ்தர் சாண்டில்யனின் பரம ரசிகர். அவருடைய படைப்புகளை எல்லாம் ஒன்றுவிடாமல் விரட்டி விரட்டி படித்தவர். என்னிடம் ஒரு முறை சாண்டியல்யனைப் பற்றி புகழ்ந்து பேசினார்.

"கதையில் வரும் பெண் கதாபாத்திரங்களை அவ்வளவு அழகா.. அவரை மாதிரி யாரும் வர்ணிக்க முடியாது" என நினைவுகளில் ஆழ்ந்தார்.

புத்தகம் எல்லாம் எங்கு வாங்குகிறீர்கள் என கேட்டதற்கு, ஒரு தனியார் நூலக பெயரை சொல்லியிருந்தார். பொன்னியின் செல்வனின் இறுதி பாகத்தை அவர் மூலமாக படித்துவிடலாம் என முடிவெடுத்தேன்.

அவரை பார்த்து, நாலுபாகங்களை படித்தது. இறுதி பாகத்தை மட்டும் படிக்க முடியாமல் போனது என எல்லாவற்றையும் விளக்கமாக சொன்னேன். கவனமாக கேட்டவர் "உங்க நிலைமை எனக்கு புரியுது தம்பி. கல்யாணம் நடந்ததுக்கு பின்பு இந்த இரண்டு வருசமா நான் எதுவும் படிக்கிறதே இல்லை. குடும்பத்துல சின்ன சின்ன பிரச்சனைகள். வேலையிலும் சில பிரச்சனைகள். (என்னது கல்யாணம் ஆன இலக்கியமெல்லாம் படிக்க முடியாதா?!) உங்களைப் போலத்தான் டோக்கனை கொடு நான் வைச்சுகிறேன்னு சொல்லி வாங்கிட்டு போனான். நானும் அதுக்கு பிறகு கேட்கவே இல்லை" என்றார்.

நாசமா போச்சு! இந்த நாவல் நமக்கு கைக்கு கிடைக்கவே கிடைக்காதா! மனதுக்குள் புலம்பினேன்.

அவரே தொடர்ந்து சொன்னார். "மேகலா தியேட்டருக்கு எதிரே தான் அவன் கடை வைச்சிருக்கான். அவன்கிட்ட என் பெயரை சொல்லி கேட்டீங்கன்னா... தந்திருவான்" என்றார். சரி என சொல்லி விடைபெற்றேன்.

சில அவசிய வேலைகளுக்காக விடுப்பு எடுத்திருந்ததால்... இறுதி பாகத்தை அதற்குள் கைப்பற்றிவிடவேண்டும் என மனதிற்குள் சபதம் எடுத்தேன்.

நான் போகும் சமயத்திலெல்லாம்... டோக்கன்காரர் கடையை விட்டு வெளியே போயிருந்தார் அல்லது கடை மூடியிருந்தது. ஒருவழியாக ஒரே நாளில் பலமுறை படையெடுத்து, டோக்கனை கைப்பற்றினேன். பாதி புத்தகம் கைக்கு வந்த மாதிரி இருந்தது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் புத்தகம் நம் கையில் இருக்கும் என நினைத்தாலே சந்தோசமாய் இருந்தது. சந்தோசமாய் நூலகத்தை நோக்கி சைக்கிளை விரட்டினேன்.
****
அத்தியாயம் - 5

அந்த தனியார் நூலகம் பிரதான சாலையில் அமைந்திருந்தது. வெளியே அப்படி ஒரு
இரைச்சல். உள்ளே நுழைந்ததும் சத்தம் காணாமல் போயிருந்தது. உள்ளே நுழைந்ததும் ஒரு பெண் அமர்ந்திருந்தார். கையில் ஒரு ஆங்கில நாவல். (ரேஞ்ச் தான்!)

நூலகம் சிறியதாய் இருந்தாலும், அடக்கமாய் இருந்தது. ஷெல்புகளில் புத்தகங்கள் நேர்த்தியாய் அடுக்கியிருந்தார்கள். ராஜேஷ்குமார், பி.கே.பி., அனுராதா ரமணன், பாலகுமாரன், எண்டமூரி வீரேந்திரநாத், சுஜாதா, அசோகமித்தரன் என எழுத்தாளர்களின் படைப்புகள் வரிசையாய் இருந்தன.

சரி பாதி ஆங்கில நாவல்கள். ஆங்கில நாவலெல்லாம் எப்ப படிக்க போறோம்? இப்படி நூலகத்துல வேலை கிடைச்சா எப்படி இருக்கும்? ஒரு வருடம் வேலை பார்த்தாலும், எல்லா நாவலையும் படிச்சிராலாமே! மனம் கணக்கிட்டது.

டோக்கனை கொடுத்து, பொன்னியின் செல்வனின் இறுதி பாகம் வேண்டும் என்றேன். அவர் கை காட்டிய ஷெல்பில் வேகமாய் போய் தேடினேன். இரண்டு செட்கள் இருந்தன. சில பாகங்கள் வெளியே போயிருந்தன. அவ்வளவு பிஸி!

இறுதி பாகத்தை கையில் எடுத்தேன். பழைய பதிப்பாக இருந்தது. அதலானென்ன! நாவலே 50களில் வெளிவந்தது தானே!

நான் எடுத்து வருவதற்குள், டோக்கனுக்கான லெட்ஜர் பக்கத்தை புரட்டி வைத்திருந்தார்.

'எவ்வளவு" என்றேன்.

"ரூ.95" என்றார்.

"வாடகை புத்தக விலையில் 10% தானே!" என்றேன் பதட்டமாய். பையில் 25 ரூக்கு மேல் தேறாது.

"ஏற்கனவே இந்த டோக்கன் மூலம் எடுத்து போன கடைசி புத்தகத்தை பல மாதங்கள் கழித்து தான் கொடுத்திருக்கார். அதனால் அபராதம் போட்டிருக்கிறோம்!" என்றார் கூலாய்.

எனக்கு தலை கிர் என சுற்றியது. இந்த இறுதி பாகத்தை படிக்கவே முடியாது போலிருக்கே! என புலம்பினேன்.

"அவ்வளவு பணம் கொண்டு வரவில்லை. புத்தகத்தை கொடுக்கும் போது, தரலாமா?!" என்றேன்.

'அதற்கு எங்களுடைய நூலக விதி ஒத்துக்காதே!" என்றார்.

பாழாய் போன விதிகள். டோக்கனை கொடுக்கும் பொழுது, அந்தாள் ஒன்னும் சொல்லவில்லையே! அவனை கெட்ட வார்த்தைகளில் மனதுக்குள் திட்டித்தீர்தேன். வேறு ஏதும் பேச தோன்றவில்லை. புத்தகத்தை ஏக்கமாய் பார்த்துவிட்டு, டோக்கனை வாங்கி கொண்டு, வெளியே வந்தேன்.

எல்லோரும் விர், விர் என சாலையில் வேகமாக போய்கொண்டிருந்தார்கள். நான் சைக்கிளை ரெம்ப சோகமாய் வீட்டுக்கு மிதித்தேன்.

வீடு வந்து சேர்வதற்குள்... புத்தகத்தை அடைய அடுத்த திட்டம் தயாராகியிருந்தது.
****

அத்தியாயம் - 6

முன்பெல்லாம் விடிகாலை கனவில் வானதியும், நந்தினியும் வந்தார்கள் என்றால்... இப்பொழுதெல்லாம் ஆழ்வார்கடியனையும், வந்தியத்தேவனையும் கொலைவெறியோடு துரத்திக்கொண்டிருந்த பாண்டிய மன்னனின் ஆபத்துதவிகள் "இன்னுமா இறுதிபாகத்தை படிக்கலை?!" என என்னை காட்டுக்குள் துரத்திகொண்டிருந்தார்கள்.

நிற்க. சற்றும் சளைக்காத விக்ரமாதித்தன் போல அடுத்த முயற்சியை துவங்கினேன்.

நூலகங்களை அரசு ஏ, பி, சி என தரம் பிரித்து வைத்திருக்கிறது. வருடாவருடம் நூலகங்களின் தரத்திற்கேற்ப புத்தகங்களின் கொள்முதல் எண்ணிக்கையும் வேறுபடும் என பழைய நூலகர் சொல்லியிருந்தார். அதனால், முன்பு வேலை செய்த இடத்திற்கு அருகே உள்ள 'பி' தர நூலகத்தில் உறுப்பினராய் சேர்ந்திருந்தேன்.

முன்பொருமுறை வேறு புத்தகம் தேடும் பொழுது, பொன்னியின் செல்வனின் ஐந்தாம் பாகம் கையில் தட்டுப்பட்டதாய் ஆழ்மன நினைவு மேலெழும்பி சொன்னது. அந்த புத்தகத்தை கைப்பற்ற முயற்சிக்காலாமே என தோன்றியது.

நூலக டோக்கனை தேடினேன். நல்ல வேளை! வைத்த இடத்தில் பத்திரமாய் இருந்தது. நேரம் பார்த்தேன். நூலகம் திறந்திருக்கும். சைக்கிளை உற்சாகமாய் மிதித்து போய் சேர்ந்தேன்.

நூலகர் மாறியிருந்தார். உதவி நூலகர் எனக்கு பரிச்சயம். பார்த்ததும் புன்முறுவல் செய்தார். அவருடைய அறிமுகமும் வித்தியாசமானது தான். நான் புத்தகம் தேட ஆரம்பித்தால்... அரை மணி நேரமாவது ஆகும். அப்படியே நான் எடுத்து வருகிற புத்தகம் இதுவரை யாருமே கையில் தொட்டிராத புத்தகமாக இருக்கும். இதனாலேயே ஆச்சரியப்பட்டு என்னிடம் பேசினார்.

நேரே புத்தகம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரி பகுதிக்குள் சென்றேன். மங்கிய வெளிச்சம். முன்பு புத்தகம் தேடுகிற பொழுது, படிக்க கூடிய புத்தகங்கள் என சிலவற்றை... ஒரு இடத்தில் சேர்த்து வைப்பேன். அந்த இடத்திற்கு போய் முதலில் தேடினேன். சில புத்தகங்கள் இருந்தன. சில புத்தகங்களை காணவில்லை. அதில் ஒன்று பொன்னியின் செல்வனின் பாகமும் ஒன்று. என்னை மாதிரியே இலக்கிய தாகம் (!) கொண்ட ஒருவன் இடம் மாற்றி வைத்திருக்கிறான்.

வேறு வழியில்லை. பொன்னியின் செல்வனின் அளவு (தடிமன்) கொண்ட எல்லா புத்தகங்களையும் வரிசையாக தேட வேண்டியது தான். நூலக நேரம் வேறு குறைவாக இருந்தது. விரைவாக தேட ஆரம்பித்தேன்.

அலமாரி முழுக்க ஒரே தூசி. நூலாம்படை. தமிழகம் ஏன் இலக்கிய அறிவில் பின் தங்கி இருக்கிறது என புரிந்தது. இது பற்றி, பழைய நூலகரிடம் கோபமாய் முறையிட்டிருக்கிறென்.

"பக்கத்தில் நூலகத்திற்கென்று பெரிய இடம் ஒன்று வாங்கி கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. நானும் இப்ப முடியும். பிறகு முடியும் என நினைக்கிறேன். முடிந்த பாடு இல்லை. இந்த தூசியில் உட்கார்ந்தால் எனக்கு தான் உடல்நல பிரச்சனையாகிறது. அநேகமா திறப்பு விழா அன்றைக்கு நான் ரிடையர்டு ஆகியிருப்பேன்" என புலம்பினார்.

நேரம் நெருங்கி கொண்டிருந்தது. உடலில் பதட்டம் ஏறியது. இன்னும் ஒரு அலமாரி தான் பாக்கி. முன்னிலும் வேகப்படுத்தி தேடினேன். கைக்கு சிக்கியது. வேகமாய் பாகம் என்ன? என கண்கள் தேடியது. பாகம் 4. சோர்ந்து போனேன். ஆழ்மனது தப்பாக சொல்லியிருக்கிறது. தூ!

நூலகரிடம் வந்தேன். அழுக்கும் தூசியுமாய் வந்த என்னை விநோத ஜந்து போல பார்த்தார்.

போங்கய்யா! நீங்களும் உங்க நூலகமும்! இனிமேல் நூலகத்தை நம்பி பிரயோஜனமில்லை என முடிவுக்கு வந்தேன்.

பணத்தை திரட்டி... புத்தகத்தை புதிதாய் வாங்கி விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தேன்.

****
அத்தியாயம் - 7

நூலகங்கள் என்னை கைவிட்டுவிட்டன. புதிதாய் சேர்ந்த வெளியூர் வேலையில் இனி விடுப்பு எடுப்பதும் சிரமம். ஆகையால், அலைவதை விட்டுவிட்டு, சொந்தமாகவே இறுதி பாகத்தை வாங்கிவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன். அண்ணணிடம் பணம் கேட்டேன். (அப்பா இல்லாத பிள்ளை நான்)

'எதுக்குடா?' என்றார்.

'நாவலுக்கு என்றால்!' வாய்ப்பே இல்லை. 1ரூ கூட வாங்கமுடியாது. நான் மற்றவர்களை போல இயல்பாக (!) இல்லாததற்கு, இந்த இலக்கிய சகவாசம் தான் காரணம் என முடிவு கட்டியிருந்தார். (ஆமா எப்ப பார்த்தாலும், எதாவது ஒரு புத்தகத்தை கையில வச்சிகிட்டு சுத்திகிட்டே இருந்தா!) ஏதோ சப்பையான காரணம் சொல்லி, இரண்டு நாள் கழித்து பணத்தை வாங்கிவிட்டேன்.

உள்ளங்கையில் உள்ள பணத்தை பார்த்தேன். ஒருநொடி பொன்னியின் செல்வனின் இறுதிபாகமாய் மாறி தெரிந்தது. இன்றைக்கு வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை வந்தது.

எங்கள் ஊரில் புத்தக கடைகள் சொற்பம் தான். ஆனால், பொன்னியின் செல்வனுக்கு வாசகர்கள் பரந்துபட்டு இருப்பதால், எல்லா கடைகளிலும் எளிதாக கிடைக்கும். உற்சாகமாய் கிளம்பினேன்.

பரபரவென இருந்த காலை வேளையில்... அந்த புத்தக கடை மட்டும் மூடியிருந்தது. 'சீக்கிரமே வந்துவிட்டோமோ!' காலை 9.30 மணி. கடை திறக்கும் நேரம் என ஏதாவது போர்டு
மாட்டியிருக்கிறார்களா! என தேடிப்பார்த்தேன். காணவில்லை. சகுனமே(!) சரியில்லையே! இல்லாத மூட நம்பிக்கையெல்லாம், இந்த புத்தகத்தால் வந்துவிடும் போலிருக்கிறதே! என யோசித்தேன்.

நாலு தெருக்கள் தள்ளி... இரண்டாவது கடைக்கு போனேன். அப்பொழுது தான் கடையை கூட்டிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு முதல் வாடிக்கையாளர் நான் தான். இறுதி பாகத்தை விற்பனையாளனியிடம் கேட்டேன். 'கடந்த வாரம் தீர்ந்துவிட்டது. ஆர்டர் கொடுத்திருக்கிறோம். ஒரு வாரத்தில் வந்துவிடும்" என்றார். அடடா! இரண்டாவது வாய்ப்பும் போச்சே! உற்சாகம் 20% குறைந்தது. 'மனம் தளராதேடா!' என எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

வேறு பகுதியில் இருந்த அடுத்த கடைக்கு போனேன். உள்ளே நுழைந்ததுமே பொன்னியின் செல்வன் புத்தகங்கள் வரவேற்றன. ஆகா! இதுவல்லவோ கடை. இறுதிபாகத்தை கையில் எடுத்து ஒருமுறை முகர்ந்து பார்த்தேன். நல்ல வாசனை. எனக்கு பிடித்த வாசனைகளில் முதன்மையானது புத்தகவாசனை. (சே! என்ன ஒரு அறிவு தாகம்; இலக்கிய தாகம்! என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது)

பணத்தையும் புத்தகத்தையும் பில் போட கேசியரிடம் நீட்டினேன். அவர் வாங்கி முகத்தைப் பார்த்தவர்...

'ஐந்தாம் பாகம் மட்டும் எடுத்திருக்கிறீர்கள்?! மற்ற பாகமெல்லாம்?!" என்றார் கேள்விக்குறியுடன்.

'அதெல்லாம் இருக்கு சார்!' என்றேன்.

"நாங்க தனியாக ஒரு பாகம் மட்டும் தர மாட்டோமே!' என்றார். மண்டையில் இடி விழுந்தது போல இருந்தது.

'ஏன் சார் தனியா தர மாட்டீங்க!' என்றேன் சோகமாய்.

'நாங்க செட்டு செட்டா தான் வாங்கறோம்! உங்களுக்கு ஒரு பாகம் மட்டும் கொடுத்துட்டா... மற்ற பாகமெல்லாம் அப்படியே தனியா நின்னு போயிரும்! என்றார்.

அவர் சொன்ன காரணத்தை அறிவு ஏத்துகிடுச்சு. மனசு கேட்கலையே!
வேறு ஏதும் பேச தோணவில்லை. மெதுவாய் வாசலுக்கு நடையே கட்டினேன்.

***
அத்தியாயம் - 8

எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டது. 'இறுதிபாகம் இனி கிடைக்காது" என புரிந்தது. என்ன செய்யலாம் இனி?

சில நாள்கள் அமைதியாய் இருக்கலாம் என்ற முடிவுக்கு சிரமப்பட்டு வந்து சேர்ந்தேன். கனவில் அவ்வப்பொழுது பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்கள் வருவது... குறைந்து கொண்டே போனது.

சில நாள்கள் கடந்தன. ஒரு திரையரங்கில் வரிசையில் நிற்கும் பொழுது எனக்கு முன்னே ஒருவர் சின்சியராக கையடக்க புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். துப்பறியும் பாக்கெட் நாவலோ என நினைத்தேன். இல்லை. என்னடா! இது நம்மை போலவே இலக்கிய தாகம் உள்ளவராக இருக்கிறார் என ஆர்வமானேன். இரண்டு வரிகள் படித்த பொழுது... பொன்னியின் செல்வன் என தெரிந்தது.

சின்ன சைஸில் எப்படி? எல்லாம் மெகா பைண்டிங் புத்தகமாயிற்றே! என யோசித்து கொண்டே... அவரிடமே கேட்டேன். மலிவு விலையில் பதிப்பித்திருக்கிறார்கள். வாங்கியதாக சொன்னார். அவரிடமே முகவரி வாங்கி... அடுத்த நாளே போய் அந்த கடையில் ஆஜரானேன்.

மாநிலம் முழுவதும், புத்தக கண்காட்சிக்காக, குறிப்பிட்ட பதிப்பகத்தார் மலிவு விலையில் பிரசுரித்ததாகவும், வாங்கிய புத்தகங்கள் எல்லாம் கடந்த வாரம் நடந்த புத்தக திருவிழாவில் விற்று தீர்ந்து விட்டதாகவும், மேலும் நிறைய புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் கடைக்காரர் உற்சாகமாக தெரிவித்தார்.

"ஒரு பிரதி இருக்கா?" என்றேன் பாவமாய்.

"புத்தக திருவிழாவிலேயே... ஸ்டாக் இல்லை.. ஸ்டாக் இல்லை சொல்லி சொல்லியே என் வாய் வலித்து விட்டது" என்றார்.

"போயா! நீங்களும் புத்தகமும்?"

திரும்பி பார்க்காமல் வீடு போய் சேர்ந்தேன்.

*****
முடிவுரை :

இதென்ன முடிவுரை? பொன்னியின் செல்வன் படித்தவர்கள் நன்றாக அறிவார்கள். இறுதிபாகத்தின் இறுதியில், கல்கி சில விளக்கங்கள், தந்திருப்பார். அது போல நானும் சில செய்திகள் சொல்ல வேண்டிய தேவையில் சொல்கிறேன்.

1. முதல் ஆறு அத்தியாயங்கள் என் சொந்த அனுபவங்கள். மீதி இரண்டு அத்தியாயங்கள் தகவல் சேகரித்ததின் அடிப்படையில் புனைவாக எழுதப்பட்டது. ஏழாம் அத்தியாயத்திற்கு அடிப்படை, "கடைக்காரர்கள் ஐந்து பாகங்களாக தான் விற்பனை செய்வார்கள். ஒரு பாகம் மட்டும் தனியாக விற்கப்பட்டார்கள்" எட்டாம் பாகத்திற்கு அடிப்படை "திரையரங்கில் கையடக்க புத்தகமாய் மலிவு புத்தகமாய் படித்தது" நான் கண்ட அனுபவம் தான்.

2. இன்னும் இரண்டு அத்தியாயங்களுக்கு கூட தகவல்கள் இருந்தது. சோம்பேறித்தனம் காரணமாக நிறுத்திக்கொண்டேன். அதில் ஒரு தகவல். எங்கள் பகுதியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. நண்பர்களுடன் போயிருந்த பொழுது, ஒரு இளைஞன் ஒரு புத்தகத்தை தூக்கி கொண்டு ஓடிவிட்டான்" என்று பரபரப்பாக இருந்தது. அந்த புத்தகம் 'பொன்னியின் செல்வனின் இறுதிபாகம்" என்று எழுதலாம் என நினைத்தேன்.

3. அத்தியாயங்களுக்கு இடையில், "பாலகுமாரன், சுஜாதா, இப்பொழுது கல்கி என தாண்டி வந்துவிட்டேன்" என குறிப்பிட்டு இருந்தேன். சுஜாதாவுக்கு பிறகு, ஜெயகாந்தன், செ.கணேசலிங்கன், கார்க்கி, டால்ஸ்டாய் என எப்பொழுதோ வேறு திசை போய்விட்டேன். தமிழக எழுத்தாளர்களின் அனைவரின் வாசித்துவிட வெண்டும் என்று ஆசை தான். ஆனால், வசதி, வாய்ப்பு, வாசிப்பதற்கென்று உழைப்பு இல்லையே! ஆகையால் குறைந்தபட்ச திட்டமாக, முக்கிய எழுத்தாளர்களின் "மாஸ்டர் பீஸ்" களை எல்லாம் வாசித்துவிடலாம் என முடிவுக்கு வந்தேன்.

தொ.மு.சி. ரகுநாதனின் "பஞ்சும் பசியும்"'
கி.ராஜநாராயணனின் "கோபாலபுரத்து மக்கள்"
தி.ஜானகிராமனின் "மோகமுள்"

அந்த வரிசையில் தான் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' படித்தேன்.

3. நாவலைப் பொறுத்தவரையில், கல்கியின் தமிழ் நடை அருமை. வரலாற்றை இப்படி நாவல்களாக படித்தால், எந்த காலத்திலும் மனதை விட்டு அகலாது. நாவலின் கண்ணோட்டம் மன்னர் மற்றும் மேட்டுக்குடி மக்களை விழி உயர்த்தி பார்த்து எழுதியதாக இருந்தது. 60 களில் எளிய மக்களை கதை மாந்தர்களாக எழுதும் சூழல் தமிழுக்கு வந்துவிட்டது.

4. ஒவ்வொரு அத்தியாயத்தை படிக்கும் பொழுது, எனக்காக இரக்கப்பட்டு, ஐந்தாம் பாகத்தின் "இணைய இணைப்பு" தந்தார்கள். ஒருவர் "புத்தகத்தை அனுப்பி வைக்கட்டுமா!" என்று கூட கேட்டார். இந்த தேடுதல் படலம் நடந்து, சில வருடங்களாகிவிட்டன. இப்பொழுது நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்திருந்தாலும், படிக்கத்தான் முடியவில்லை. நல்ல முரண். எனக்காக உதவ முன்வந்த அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.

5. பிறகு, ஒரு விசயம் சொன்ன கோவிச்சுக்க கூடாது. இவ்வளவு ஆர்வமா தேடிய இறுதி பாகத்தை எப்ப படிச்சேன்னு, எனக்கு மறந்துபோச்சு! நமக்கு ஞாபக சக்தி கொஞ்சம் கம்மி. ம்ஹூம். அதிகம் தான். அநேகமா நூலகத்தில் தான் எடுத்து படிச்சேன்னு நினைக்கிறேன்! :)

******

பின்குறிப்பு : தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருக்கிறேன். தமிழ்மணம் நட்சத்திர பதிவிற்காக கையில் இரண்டு கட்டுரைகள் தயாராக இருந்தும், பிரவுசிங் மையம் எல்லாம் விடுமுறை என்பதால், தட்டச்சு செய்து போடமுடியவில்லை. என் பதிவுகளில் இந்த கிளைக்கதை சுவாரசியமானது. ஆகையால், மன்னித்துக்கொள்ளுங்கள். நாளை இரண்டு கட்டுரைகள் போடுவதாக உத்தேசம்!

Monday, October 24, 2011

மனிதர்கள் 12 - அன்பழகன்!


எங்கு திரும்பினாலும் இந்த மாதத்தின் இரண்டு வாரங்களில் ஒலிபெருக்கியில் வாக்களிக்க சொல்லி வேட்பாளர்கள் நச்சரித்துக்கொண்டே இருந்தார்கள்.

தமிழகம் உள்ளாட்சி தேர்தலில் பரபரப்பாக இயங்கி, மோதிரம் கொடுத்து, சேலையில் நடு இரவில் ஓட்டைப்பிரித்து போட்டு, காந்தி தாத்தா சிரித்த நோட்டுகளை இறைத்து, அடிதடியில் குதித்து,, கத்திக்குத்தில் ரத்தம் பார்த்து, கள்ள வாக்கெல்லாம் போட்டு என பலவலைகளில் தீயாய் வேலை செய்து, ஜனநாயக விரிவுப்படுத்தலை, ஆழப்படுத்தலை செய்து, சோர்வாகி, இப்பொழுது ஓய்ந்து இருக்கிறது.

தேர்தல் என்றாலே அன்பழகனின் நினைவு தவிர்க்கமுடியாமல் மேலேழும்புகிறது.

*****

அன்பழகன். கூப்பிடுவது அன்பு. நாலரை அடி உயரம். வயது முப்பதை தொடும். ஆனால் வயது தெரியாத உருவம். குரலுக்கும், உருவத்திற்கும் சம்பந்தமே கிடையாது. குரலில் ஒரு தெளிவும், ஆளுமையும் உண்டு. குடும்பமே திமுகவை ஆராதரிக்கிற குடும்பம்.

மனிதனுக்கு லட்சியம் என என்னனென்னவோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அன்பழகனுக்கு லட்சியம் 'கட்டிங்'. அன்பின் எண்ணம், செயல் எல்லாமும் 'கட்டிங்' தான்!

சென்னையில் வேட்பாளர்களுக்காக ஒலிபெருக்கியில் வாக்கு சேகரித்த குரல்கள் வர்த்தக விளம்பரத்திற்காக பேசும் செயற்கை குரல்கள். தீபாவளிக்காக விளம்பரம் செய்கிறார்களா? வாக்கு கேட்கிறார்களா? என்றே புரியவில்லை.

தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு வாக்கு கேட்கும் முதன்மையான குரல் அன்பின் கணீர் குரல் தான். அடுக்கு மொழியில், இல்லாத பில்டப் எல்லாம் கொடுத்து, வாக்கு கேட்பதில் அன்பு கில்லாடி. அதனாலேயே பக்கத்து ஊரிலிருந்து எல்லாம் அன்பை பிரச்சாரத்திற்கு புக் செய்ய தேடிவருவார்கள்.

****

அப்பொழுது திண்டுக்கல்லில் நண்பனின் சித்தப்பா நடத்திய் மினிபஸ் நிறுவனத்தில் சில காலம் நிர்வாகியாக குப்பை கொட்டிக்கொண்டு இருந்தேன். அன்பு என்னிடம் 'கட்டிங்'க்காக நெருங்குவான். வேலை ஏதாவது செய்! இல்லையெனில் பக்கத்தில் வராதே! என கறாராய் சொல்லி அனுப்புவேன்!

மினிபஸ்ஸில் கண்டருக்கு உதவியாக, ஏழையின் சிரிப்பு பிரபு தேவா போல ஊர்களின் பெயரை ஓங்கி குரல் கொடுத்து உதவினால், அரை நாளில் நடத்துடரிடம் 'கட்டிங்'க்கு கறந்துவிடுவான்.

எங்கு பேசினாலும், என்ன செய்தாலும் அவனின் இலக்கு 'கட்டிங்' தான்!

****

பல்வேறு செயல்களில் அன்புவை கவனித்ததில், நல்ல புத்திசாலித்தனம் தெரிந்தது. அன்புவின் அண்ணனிடம் இதையே சொல்லி அன்புவை ஏன் படிக்க வைக்கவில்லை எனக் கேட்டேன்.

"நான்காம் வகுப்பு படிக்கிற பொழுது, உடல்நிலை சரியில்லாமல் போக‌, மருத்துவர்கள் இதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. சில வருடங்கள் உயிர் வாழ்வது கூட சிரமம் என கைவிரித்துவிட்டார்கள். நாங்களும் அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோம். இப்பொழுது, இன்னும் எத்தனை வருடங்கள் உயிர் வாழ்வான் என்பது தெரியாது!" என்றார்.

என்னடா இது! தமிழ்பட கதை போல, அன்புக்கு பின்னாலும் ஒரு சோக கதை இருக்கிறதே என நினைத்தேன்.

****

ஒரு நாள் நிறைய குடித்துவிட்டு, நடுரோட்டில் நிதானமிழந்து கிடந்ததாகவும், லாரியில் அடிபட்டு சாக வேண்டிய ஆள்! நாங்கள் தான் ஓரமாக படுக்கவைத்ததால், தப்பித்தான் என அன்புவின் அண்ணனிடம் ஊதிவிட்டு போய்விட்டார்கள்.

அடுத்தநாள் அன்புவை 'அன்பின்' பேரில் பெல்டால் அடிக்க துரத்த, ஒரு வாரம் அன்பு எஸ்கேப். பிறகு, மீண்டும் வழக்கமான பாணியில் தொடர்ந்தான்.

****

ஒருநாள் நண்பன் தந்தான் என்பதற்காக ஜெமோவின் 'பின் தொடரும் நிழலின் குரல்' தலையணை சைஸில் புத்தகத்தின் 60ம் பக்கத்தில் சிக்கி சின்னாப்பின்னா பட்டுக்கொண்டிருந்த பொழுது, அன்பு வந்தான். ஒரு கட்டிங் உள்ளே போயிருந்தது.

பக்கத்து கடைகளில் இருந்த ஆட்களும் ஒன்று சேர அங்கு களை கட்டியது. அன்பு மிமிக்ரி செய்ய ஆரம்பித்தான். பல நடிகர்களை அச்சு அசலாக பேசிக்காட்டினான். நடிகர்களின் கெக்கே பிக்கே அசைவுகளை அப்படியே காப்பி அடித்து, ஆடிக்காட்டினான். ஒருமணி நேரம். ஜெமோவிடமிருந்து தப்பிக்க வைத்ததற்காக அன்றைக்கு 'கட்டிங்'ஐ நானே பணம் கொடுத்தேன்.

****
அந்த சமயத்தில் சட்ட மன்ற தேர்தல் வந்தது. அன்பு விஜபியாகிவிட்டான். காலை முதல் இரவு வரை பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டான். 'சரக்கு' கன்னாபின்னாவென்று இலவசமென்று கிடைத்தது. 1 மாத காலம் அன்புவை பார்க்கவே முடியவில்லை. அவ்வளவு பிஸி.

*****

ஒரு நாள்காலையில் எழும் பொழுது, 'அன்பழகன் இறந்துட்டான்' என அன்புவின் அண்ணன் சொன்னார். திமுகவின் பொதுச்செயலாளரா? என்றேன். நம்ம அன்பு என்றார்.

நேற்றும் எக்கசக்கமாய் குடித்து, அரிசி மண்டியில் போய் தூங்கியிருக்கிறான். காலையில் எழுப்பிய பொழுது, உயிர் இல்லை.

****

இப்பொழுதும், அன்பு வாக்காளர்களே என்ற குரல் கேட்டால், அன்புவின் குரல் நினைவுக்கு வந்து போகிறது!

******

தொடர்புடைய சுட்டிகள் :

மனிதர்கள் 1 - பாண்டியம்மாள்!
மனிதர்கள் 2 - சந்தானம்
மனிதர்கள் 3 - சுப்பிரமணி!
மனிதர்கள் 4 - இராகவ்!
மனிதர்கள் 5 - பாலா!
மனிதர்கள் 6 -மதி!
மனிதர்கள் 7 - முகமறியா நண்பர்கள்!
மனிதர்கள் 8 - துரப்பாண்டி!
மனிதர்கள் 9 - இராதா!
மனிதர்கள் 10 - பாரதி!
மனிதர்கள் 11 - இராஜீ!

Sunday, October 23, 2011

குழந்தைகள் - மறுபக்கம்!





அவளது கன்னத்தையும் எனது கன்னத்தையும் வருடிவிட்டு "ஸ்மூத்தா இருக்கீங்கம்மா' என்பாள்.
பின், என்னையும், 'ரஃபா ஸ்மூத்தா பாரு' என்று பார்க்கச் சொல்லுவாள். நானும் வருடி விட்டு
'ஸ்மூத்தா இருக்கே' என்பேன்.
'நான் உங்களுக்கு மட்டும் தான் ஸ்மூத்தா இருப்பேன்மா, வர்ஷினிக்கு ஸ்மூத்தாவே இருக்க மாட்டேன்'
நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் பப்பு! :-)

- பதிவர் சந்தனமுல்லை!
http://sandanamullai.blogspot.com/2010/01/blog-post_29.html

மீ: லயூம்மா ங்கா சொல்லுங்க ங்கா
நிலா: அப்பா, பாலுக்கு இந்தில ங்காவா?
மீ: இல்லடா, தூத்
நிலா: அப்போ இங்க்லீஷ்ல?
மீ: மில்க்
நிலா: தமிழ்ல?
மீ: பால்
நிலா: அப்போ ங்கா எந்த லாங்வேஜ்?
மீ: அது குட்டிப்பாப்பா லாங்வேஜ்டா
#தேவதைகள் வாழும் வீடு

- பஸ்ஸர் கேவி.ஆர்.
https://plus.google.com/102444079894946534019/posts

****
குழந்தைகளைப் பற்றிய சக பதிவர்களின் பகிர்வுகள் இவை.

எனக்கும் குழந்தைகளை நிறைய பிடிக்கும். புழுதி பறக்க விளையாடி தூக்கம்
வெறுக்கும் குழந்தையின் சுறுசுறுப்பு பிடிக்கும். அது என்ன? இது எப்படி
வேலை செய்யும்? என ஆயிரம் கேள்விகளோடு அலையும் அறிவுத்தேடல் பிடிக்கும்.

இறந்த காலத்திற்கு தொபுக்குடீரென்று குதிக்காமல், எதிர்கால கவலைகளை
கண்ணில் சுமக்காமல், நிகழ்காலத்தில் வாழும் குழந்தையின் மனநிலை
பிடிக்கும்.

நண்பர்களுக்குள்ளான சண்டைகளை சட்டென்று மறந்து, 'பழம்' விட்டு சகஜமாய் விளையாடும் பிள்ளையின் வெள்ளந்தித்தனம் பிடிக்கும்.

தள்ளிநின்று என்னைப்பார்த்தால், நான் இயல்பாக இருப்பது குழந்தைகளிடம் மட்டும்தான்.

குழந்தைகளுக்கு நாம் நிறைய கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறோம். நாம் தாம் குழந்தைகளிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நிற்க.

இப்படி என்னைப் போலவே குழந்தைகளின் இயல்பை, அழகை, மழலையை பலரும் பேசுகிறார்கள்.



இப்பொழுது நான் பேச விரும்புவது குழந்தைகளின் மறுபக்கத்தை! குழந்தைகளின் மறுபக்கத்தை பலரும் ஏனோ தவிர்க்கிறார்கள். குழந்தை வளர்ப்பில் உள்ள சிரமங்களை யாரேனும் தமிழில் எழுதியிருக்கிறார்களா என தேடிப்பார்த்தால், ஏதும் கிடைக்கவில்லை.

அக்காவை, அண்ணியை, தோழிகளை கொஞ்சம் கவனித்து வந்தவன் என்ற அளவிலும், எங்கள் வீட்டில் நாலு குழந்தைகள் வளர்ந்திருக்கிறார்கள் என்ற அனுபவத்தின் வாயிலாகவும், சில விஷயங்களை விவாதத்திற்கு அல்லது கவனத்திற்கு கொண்டுவரலாம் என எண்ணி இதைப் பகிர்கிறேன்.

****
குழந்தை கருவுறும் பொழுதே, சிரமங்கள் துவங்கிவிடுகின்றன. சிலருக்கு
மசக்கையினால் துவங்கும் வாந்தி, குழந்தை பெறும் காலம் வரைக்கும் வாந்தி
எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். பயங்கரமாய் பசிக்கும். சாப்பிட்டால்
வாந்திவந்துவிடும் என்ற பயத்தில், சாப்பிட பயம் வரும். வயிற்றில் வளரும்
குழந்தையோ கருணையே இல்லாமல் (!) அம்மாவின் சத்துக்களை எடுத்துக்கொண்டு, வளர்ந்து கொண்டே வரும்.

****

குழந்தை பிறந்த பிறகு, அதுவும் முதல் குழந்தை என ஆகிவிட்டால்,
அறியாமையால் அந்த இளம் அம்மாவின் நிலை எப்பொழுதும் பதட்டம் தான்.
அரைமணி நேரத்திற்கு ஒருமுறை குழந்தை பசியில் அழும். பால்
தரவேண்டியிருக்கும். திரவ உணவு மட்டுமே என்பதால், அடிக்கடி மூச்சா
போகும். குழந்தையை விட்டு நகரவே முடியாது.

முதல் மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்கள் பகலில் தூங்கும். இரவில் விழித்து இருக்கும். அம்மாவிற்கு தூக்கம் குறைந்து போகும். தூக்கத்தை கண்ணில் வைத்துக்கொண்டே பகல் முழுவதும் அலைமோதுவார்கள்.

தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் அம்மாவின் விருப்பம் போல் எதையும்
சாப்பிட்டுவிடமுடியாது. அம்மாவின் வினை, குழந்தையிடம் பிரதிபலிக்கும்.

எத்தனை கவனமாய் இருந்தாலும், குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படும்.
சுகமில்லையென்றால், அம்மாவின் பதட்டம் இரண்டுமடங்காகிவிடும்.

****
கொஞ்சம் வளர்ந்ததும், தவக்கும். தத்தி தத்தி நடக்கும். கையில் படுகிற
எதையும் வாயில் வைத்து சுவை பார்க்கும். வளரும் குட்டி பல்லினால்,
கடித்துப்பார்க்கும். கொஞ்சம் கவனம் பிசகினால், எதையாவது
சாப்பிட்டுவிடும். நிலைமை விபரீதமாகிவிடும்.

*****
இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு, இங்கும் மங்கும் ஓரிடத்தில் நில்லாமல்
சேட்டைகள் பல செய்யும். பல கேள்விகள் கேட்கும். நமக்கு அவசியப்பட்ட
வேலைகள் செய்யவோ, பிடித்தமான வேலைகள் செய்யவோ நேரமும் இருக்காது.

அம்மாவின் கவனம் வேறு பக்கம் திரும்பினால், தன் பக்கம் கவனம் இழுக்க
எதையாவது தப்பு, தப்பாய் செய்யும்.

இந்த சிரமங்கள் எல்லாம் பெரும்பான்மையான இயல்பான குழந்தைகளுக்கானவை. கொஞ்சம் ஹைபர் ஆக்டிவான குழந்தை என்றால், அம்மாக்கள் தொலைந்தார்கள்.

இத்தனை சிரமங்கள் கடந்து, கொஞ்சம் முன்னேறினால், அடுத்த குழந்தைக்கான இடைவெளி வந்துவிடும். அடுத்த குழந்தை வந்துவிட்டால், சிரமங்கள் இரட்டிப்பாகிவிடும். எங்கள் வீட்டு எதிரில் இரட்டை குழந்தைகளை பெற்று, சிரமப்படும் இளம் தாயாரை தினமும் பார்க்கிறேன்.

****
உணவு விஷயத்தில், குழந்தைகள் இன்னும் கொஞ்சம் கவனம் கொடுக்க வேண்டும். குடும்பத்தினருக்கு ஓர் உணவு என்றால், பிள்ளைக்கு பிடித்ததை தனியாக செய்து தரவேண்டும். இல்லையெனில், சாப்பிடாமல் அல்லது கொஞ்சூண்டு சாப்பிட்டு, சவலை பிள்ளையாகிவிடும் அபாயம் இருக்கிறது. சுவையாக சமைக்க தெரியாத, சமைக்க நேரமில்லாத அம்மாவின் பிள்ளைகள் எல்லாம் பலவீனமாக இருப்பதை பார்த்திருக்கிறேன்.

இந்த இளம் அம்மாக்களுக்கு மிக ஆறுதலான விசயம். அவர்களுடைய அம்மாக்கள் தான். அதுவும் நியூக்ளியர் குடும்பம் எனில், அக்கம் பக்கத்து வீட்டில் இருக்கும் வயதான, வேலைக்கு செல்லாத பெண்கள் தான உதவுகிறார்கள்.

குழந்தை கருவுறும் காலம் தொட்டு, குழந்தை பள்ளி செல்லும் காலம் வரை,
பெரும்பாலும் அம்மா வீட்டுச்சிறையில் தான் வதைப்பட வேண்டும். இந்த
குழந்தை வளர்ப்பு காலம் முழுவதும் ஒருவித மன அழுத்தத்துடனே அம்மாக்கள் வாழ்கிறார்கள்.

கருவுற்ற ஆறாவது மாதத்தில் அம்மா வீட்டிற்கு போகிறவர்கள், ஒரு
வருடத்திற்கும் மேலாக கழித்து வரும் அம்மாக்களை பார்த்திருக்கிறேன்.
குழந்தை வளர்ப்பில் அப்பாக்களின் பங்கு, நமது சமூக அமைப்பில் மிகவும்
குறைவு. பெருநகரம் போன்ற குறிப்பான சூழலில், சில பொறுப்பான தந்தைகள்,
கவனித்து கொள்ள வேறு வழியே இல்லாத பொழுது, தந்தைகள் குழந்தைகள்
வளர்ப்பில் கொஞ்சம் ஈடுபடுகிறார்கள்.

மற்றபடி, குழந்தைகள் வளர்ப்பில் மிகவும் அழுத்தப்படுவது பெண்கள் தான்.
எங்கள் சித்தப்பா ஒருவர், அவருடைய வீட்டுக்கு அருகில் மகனும், மகளும்
வேலைக்கு செல்கிறவர்களாம். மகனின் குழந்தையை பெரியவர் தான் பகலில்
பார்த்துகொள்கிறாராம். எங்கள் சித்தப்பாவிடம் ஒரு நாள், அந்த குழந்தையை
கவனித்து கொள்ளும் சிரமங்களை சொல்லி, கண்ணீர்விட்டு அழுதாராம்.

இந்த சிரமங்களை ஏன் பதிகிறேன் என்றால், நமது குடும்ப சூழலில் குழந்தை
வளர்ப்பில் பெண்கள் தான் எல்லா சிரமங்களையும் எதிர்கொள்கிறார்கள். இதை மற்றவர்கள் குறிப்பாக ஆண்கள் புரிந்து வைத்திருக்கிறார்களா என்பது சந்தேகம் தான்.

நான் சொல்வது அதீதம் என்பவர்கள் உங்கள் சகோதர்களிடம், தோழிகளிடம் அவருடைய குழந்தை வளர்ப்பு சிரமங்களை கேட்டுவிட்டு கருத்து சொல்லுங்கள்.

குழந்தை வளர்ப்பு என்பது இது ஒட்டு மொத்த சமூகப்பிரச்சனை. அதை ஏன்
பெண்கள் தலையில் மொத்தமாய் சுமத்த வேண்டும்? இவ்வளவு சிரமங்கள்
இருப்பதால், தான் வளர்ந்த நாடுகளில், பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை
தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறார்கள் அல்லது பெறாமலே வாழ்கிறார்கள்.

திருமணத்திற்கு முன்பு, பல்வேறு தளங்களில், துறைகளில் நன்றாக
இயங்கியவர்கள் எல்லாம், திருமணத்திற்கு பிறகு, மொத்தமாய் வீட்டில்
முடங்கியிருக்கிறார்கள். அது அவர்களுக்கு மட்டும் சொந்த இழப்பா?
சமூகத்திற்கு மாபெரும் இழப்பு இல்லையா?

நான் சொல்ல வந்ததை குறைந்தபட்சம் விவாத புள்ளிகளாக சில விஷயங்களை விட்டு வைத்திருக்கிறேன் என நினைக்கிறேன். இனி, நீங்கள் தான் தொடர்ந்து எடுத்து செல்லவேண்டும்.
****

காக்கை கூட கவனிக்காது....!


நீயும் (சிலந்தி) வலையும்!

உன் பிம்பம் விழுந்தே
கணிப்பொறி
திணறும்

ஏதோ கிறுக்குவாய்
புரியாமல் போனாலும்
'ஆகா!
கவிஞர் ஜனித்துவிட்டார்'
புகழ்வார்கள்

பலர் கிறுக்குவார்கள்
'புரியவில்லை' என்பாய்
உனக்கு
அறிவு பற்றாது என்பார்கள்

பூமியை புரட்டிவிடுவதாய்
எழுத்தில் மிரட்டுவார்கள்
வழியில் கிடக்கும்
கல்லைக்கூட
நகர்த்தமாட்டார்கள்

நாளடைவில் - நீயும்
பழகிப்போவாய்

காக்கைக்கூட
கவனிக்காது

உலகமே
உன்னை
கவனிப்பதாய்
பிரமை கொள்வாய்

மாறி மாறி
சொறிந்து கொள்வதில்
நகங்களில்
ரத்தம் வடியும்

காலங்கள் கரையும்
பறக்க மறந்து போவாய்
உன் சிறகுகள்
துருப்பிடித்திருக்கும்

இறுதியில்

கைத்தட்டல்கள்
உன் மனதில்
எதிரொலித்துக்கொண்டேயிருக்கும்

தனியறையில்
நீ மட்டும்
சிரித்துக்கொண்டே
இருப்பாய்!

****

குறிப்பு : இந்த பதிவின் வழியாக தான் பதிவுலத்தில் என் எழுத்தை பதிய
துவங்கினேன். ஆகையால், நீங்கள் படித்தே ஆக வேண்டும் என்பதால் தவிர்க்க முடியாமல் மீள்பதிவு செய்கிறேன்.

//காலங்கள் கரையும்
பறக்க மறந்து போவாய்
உன் சிறகுகள்
துருப்பிடித்திருக்கும்//

எனக்கு பிடித்த வரிகள் இவை!

'காதல் செய்! சொர்க்கமோ, நரகமோ இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்!' என்ற வைரமுத்து கவிதை நடையில், தழுவி எழுதப்பட்டது.

நான்!


இயற்பெயர் குமரன். வயது 27, முதுநிலை பட்டம், ஒரு மிடில் நிறுவனத்தில், நிர்வாகப்பணி. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவன். பிழைப்புக்காக 5 ஆண்டுகளாக பெருநகர‌ சென்னை வாசம். புகைப்படத்தை தவிர்த்தத‌ற்கு காரணம், இயல்பில் கூச்ச சுபாவம் கொண்டவன். என் வாசிப்பு பழக்கமும், எழுத்தும் இந்த இயல்பில் பிறந்ததாகவே கருதுகிறேன்.

'வலையுலகமும்,நொந்தகுமாரனும்' (http://nondhakumar.blogspot.com/) என்ற பெயரில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிவருகிறேன்.

நொந்தகுமாரனுக்கான காரணம் வலையுலகில் துவக்க காலத்தில் வாசகனாக மட்டும் இருந்தேன். மொக்கை, ஜல்லி, கும்மியின் மிகையால், நொந்துபோய், நொந்தகுமாரன் ஆனேன். நன்றாக எழுதக்கூடியவர்கள் எல்லாம் சமூக பொறுப்பற்று எழுதுகிறார்களே என நொந்து, நல்ல படைப்புகளை எழுதும் முயற்சியில் தொடர்ந்து போராடி வருகிறேன்.

மாதத்திற்கு 3 அல்லது 4 பதிவுகள் எழுதி வருகிறேன்.என்னுடைய பெரும்பான்மையான பதிவுகள் சுயசரிதை தன்மை கொண்டவை. பார்த்த, பாதித்த விஷயங்களை எழுத்தில் தோழமையோடு பகிர்கிறேன்.

எளிமையாகவும், சுவாரசியமாகவும் எழுதுவதாய் உங்களைப் போல வாசித்தவர்கள் பின்னூட்டங்களில் சொல்கிறார்கள்.

மற்றபடி, எழுதுவதற்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும் என உறுதியாய் நம்புகிறவன். இலக்குகள் இல்லாத பொழுது தான் மொக்கை, ஜல்லி, கும்மி என எல்லாவித கோளாறுகளும் வந்துவிடுகின்றன. அனைவரின் நேரத்தையும் வீணடிக்கின்றன.

சாதி, மதமற்ற, ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைய, ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் வாழ்வின் இறுதிவரை நிற்க விரும்புகிறவன்.

வினவு தளத்தின் தொடர் வாசகன். மக்கள கலை இலக்கிய கழகத்தின் ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறவன்.

மற்றபடி, என் எழுத்தை வாசிக்கின்றவர்களுக்கும், அபூர்வமாய் பின்னூட்டமிடுகின்றவர்களுக்கும் நன்றிகள்.

சமூக அக்கறையோடு எழுதுபவர்களுக்கும், தமிழ் வலைப்பதிவுகளை எல்லாம் ஒன்று திரட்டி, பொறுமையுடன் தமிழ்மணத்தை இயக்கி வருகின்ற குழுவினருக்கும் என் நன்றிகள்.

தோழமையுடன்,

நொந்தகுமாரன்

Wednesday, October 19, 2011

இரவுலகம் - இரண்டாம் உலகம்! - சில குறிப்புகள்!


உலகம்
சத்தமான இரைச்சலிருந்து
மெல்ல மெல்ல விடுபடும்.

பகல் பொழுதுகள்
பிழைப்புக்கானவை.
இரவு பொழுதுகள்
நமக்கானவை.

எத்தனை விவாதங்கள்
எத்தனை உரையாடல்கள்
எத்தனை நகைச்சுவைகள்
இரவு பொழுதுகளில்!

பட்டிமன்றங்கள்
கலைநிகழ்ச்சிகள்
திரைப்படங்கள்
கோவில் நிகழ்ச்சிகள்
எங்கு எப்பொழுதென்றாலும்
நாங்கள் அங்கிருப்போம்!

ஊர் அடங்கும் பொழுது
ஒரு தேநீர்.
மக்கள் படம் விட்டு வரும்பொழுது
ஒரு தேநீர்.
சப்தநாடியும் அடங்கி
ஊர் அமைதியாய் தூங்கும் பொழுது
ஒரு தேநீர்.
விழிக்கும் பொழுது
அவர்களுடனும் ஒரு தேநீர் என
எங்கள் இரவு அடங்கும்!

ஒரு முழு நீள நாவலை
முழு நீள இரவில்
ஆர்வம் பொங்க படித்த
நினைவுகள் மேலெழும்புகின்றன.
அம்மாவின் குரல்
மணிக்கொருமுறை
அதட்டிக்கொண்டே இருக்கும்.
'இன்னும் தூங்கலையா?'

இளையராஜாவின் இசை
துரைப்பாண்டியின் கவிதை உளறல்கள்
இரவுகளின் சிறப்பு!

வானம் பார்த்து படுத்து
என் நண்பன் ஒருவன்
வானவியலில் ஆர்வம் கொண்டுவிட்டான்.
வானம் பற்றி இரவு முழுக்க
பேச சொன்னாலும் பேசுவான்!

தூங்காநகரத்தின்
செல்லப்பிள்ளைகள் நாங்கள்!

சென்னையில்
பதினொருமணிக்குள்
கூட்டுக்கள் அடங்கிவிடுகிறார்கள்.

இரவு பொழுதுகள்
ருசியானவை!
சென்னையில்
இழப்பது மிகப்பெரிய சோகம்!