Wednesday, June 24, 2009

அமெரிக்கன் பியூட்டி (American Beauty) - சினிமா


வழக்கம் போல சில திருட்டு டிவிடி படங்கள் வாங்கலாம் என கடைக்கு சென்றேன். இரண்டு படங்கள் வாங்கிய பிறகு... "XXX, XXL படங்கள் வேண்டுமா சார்?" கடைக்காரர். "XXX - படம் தெரியும். நேரடியாக மேட்டர். அதென்ன XXL?" என்றால்... கதையுடன் மேட்டராம்!

கொடுங்க பார்க்கலாம்... என வாங்கிப் பார்த்ததில்... அதில் ஒரு படம் "அமெரிக்கன் பியூட்டி" (American Beauty).

அடப்பாவிகளா! ஐந்து ஆஸ்கார்களை எளிதாக தட்டிச் சென்று... வசூலிலும் அள்ளி.. கதைக்காக பரவலாக பேசப்பட்ட படம் இது. இதைப் போய் இந்த லிஸ்டில் வைத்திருக்கிறார்களே!

அவரிடமே அதைச் சொல்லி... கடையை விட்டு வந்த பிறகு... படம் மனதில் ஓட ஆரம்பித்துவிட்டது. சத்யத்தில் பார்த்து பல ஆண்டுகள் ஆனாலும்... மறக்கமுடியாத படம். நீங்கள் பார்க்க வேண்டிய படம். உங்களுக்காக... ஒரு குட்டி டிரையிலர் என்னால் முடிந்த அளவுக்கு!

முதல் காட்சியே... நாயகன் சுடப்பட்டு... சரிகிறார். ரத்தம் கொட்டுகிறது. முகத்தில் ஒரு புன்னகை. அவரின் நினைவுகளிலிருந்து படம் விரிகிறது.

நாயகன் ( Kevin spacey) நிறைய பிரஷர் வேலையில்.. போங்கடா என வேலையை விட்டுவிட்டு... குறைந்த சம்பளத்தில் ஒரு வேலையில் சேருகிறார். ஜாலியான மனுஷன். மகளின் தோழியை ஜிம்மிக்ஸ் வேலை பார்த்து, கரெக்ட் பண்ணும் அளவுக்கு... ஜாலியான மனுஷன். நாயகனின் மனைவிக்கு... ரியல் எஸ்டேட் பிசனஸில் அள்ளித் தட்டி.. பெரியாளாக வேண்டும் என்பது ஆசை. முடியவில்லை. கணவனுக்கு மனைவிக்கும் அடிக்கடி பிரச்சனைகள் வெடிக்கின்றன. பள்ளியில் படிக்கும் மகள் இவர்களை பார்த்து நொந்துகொள்கிறாள். அவளுக்கு ஒரு மாபெரும் பிரச்சனை. தன் மார்பகம் சிறிசா இருக்கேன்னு! பெரிதாக்க ஆபரேசனுக்கு காசு சேர்க்கிறாள்.

இவர்கள் வீட்டிற்கு அருகே இன்னொரு குடும்பம்.

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். ஒழுக்கம், ஒழுக்கம் என கறாராக வாழ்கிறவர்.
இவருடைய மனைவி - எப்பொழுதும் சுவரையே வெறித்து பார்த்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு பள்ளிச் செல்கிற ஒரு பையன். கையில் எப்பொழுதும் ஒரு கேண்டி கேமிரா. படம் எடுத்து கொண்டே திரிகிறான். கைச்செலவுக்கு... அபின் போல ஒரு போதை பொருள் விற்கிறான்.

இந்த இரு குடும்ப கதாபாத்திரங்களை வைத்து.... படம் நகருகிறது.

டிரையிலர் அவ்வளவு தான்.

அமெரிக்க குடும்பங்கள் எப்படி வாழ்கிறார்கள்? என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்? எப்படி அதைத் தீர்த்தும் கொள்கிறார்கள்? என படம் பேசுகிறது. அமெரிக்க வாழ்க்கையின் அவலத்தை சொன்ன படம் இது. ஆனால்.. படத்தின் பெயர் "அமெரிக்கன் பியூட்டி".

நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம், சிறந்த படம் என 5 ஆஸ்கார்களை வென்றது. பார்க்க வேண்டிய படம். பாருங்கள்.

சிறு குறிப்பு : சென்னையில் பல குடும்பங்களை... அவர்களின் வாழ்க்கை முறையை பார்க்கிற பொழுது... தவிர்க்க முடியாமல் இந்த படம் அடிக்கடி நினைவுக்கு வருகிறது. கவலையும் வருகிறது.

Thursday, June 18, 2009

பூங்கா மனிதர்கள்


தேர்வுக்காக அறையில் படிக்க முயன்று தோற்றுப்போனேன். பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு கடந்த ஒரு வாரம் படிக்க போனேன்.

பூங்காவிற்கு போகும் வழியில்... அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் கடந்து போவதைப் பார்க்கையில்.. பலர் ஒல்லியாக, நோஞ்சனாக, கண்ணாடி போட்டு... பரிதாபமாக இருந்தார்கள்.

பூங்காவில் படிக்கும் பொழுது.... என்னை கடந்து சென்ற பலர் தின்று கொழுத்து, தொடைப்பெருத்தவர்கள், குண்டிப் பெருத்தவர்கள்... புஷ்.. புஷ்..வென மூச்சு வாங்க ஓடுவது போல நடந்தார்கள். நடப்பது போல ஊர்ந்து சென்றார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்கள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்து போனார்கள். எரிச்சல் மேலோங்கியது. இப்பொழுதெல்லாம் பூங்கா பக்கம் படிக்க போவதில்லை. கொஞ்சம் சிரமப்பட்டாலும் அறையிலேயே படிக்கிறேன்.