Saturday, June 28, 2014

'Trust heights' - 11 மாடி கட்டிடம் சரிவு!




போரூர் சிக்னலிலிருந்து குன்றத்தூர் போகிற வழியில் 11 மாடி குடியிருப்பு கட்டிடம் இரண்டில் ஒன்று இன்று மாலை 5 மணியளவில் மண்ணுக்குள் இறங்கிவிட்டதாகவும், மீதி சரிந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

அருகில் போய்ப் பார்க்க முயற்சி செய்தேன். காவல்துறையை குவித்து வைத்து, பொதுமக்களை போகவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

தூரத்தில் இருந்து பார்த்ததில் 70% கட்டிட வேலை முடிந்துவிட்டது. 2014ல் அனைத்து வேலைகளும் முடிந்துவிடும் என விளம்பரத்தியிருக்கிறார்கள்.  மாலை 5 மணி என்பதால் தொழிலாளர்கள் நிறைய பேர் வேலை செய்ததாக சொல்கிறார்கள். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களும், திருவண்ணாமலையை சேர்ந்தவர்களும் அங்கு 100 பேர்வரை வேலை செய்து கொண்டிருந்ததாக அங்கிருந்த ஒன்றிரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தனர்.

டபுள் பெட்ரூம், டிரிபிள் பெட்ரூம் என வசதியானவர்களுக்கான கட்டப்பட்ட குடியிருப்பு கட்டிடம் இது! பல‌ தொழிலாளர்கள் வியர்வை சிந்தித்தான் கட்டிடங்களை எழுப்புகிறார்கள். பொறுப்பற்றவர்களால் இப்பொழுது உயிர்களையும் கொடுக்கவேண்டியதாகியிருக்கிறது!

கிளம்பும் பொழுது கட்டிடத்தின் வாசலில் அந்த போர்டு இருந்தது!

"Trust Heights"

இனி செய்யவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதலாளித்துவ ஊடகங்கள் வரிசையாக பட்டியலிடுவார்கள்! நாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டியது தான்!

வீடுகளை விற்பதற்கு Prime sristi நிறுவனம் யூ டியுப்பில் வெளியிட்ட காணொளி இது!

http://www.youtube.com/watch?v=fR3cmwdByuA

Tuesday, June 24, 2014

ஆயிரத்தில் ஒருவன் – சில குறிப்புகள்!




ஆயிரத்தில் ஒருவன் சத்யத்தில் வெளியிட்டு 100 நாட்களை கடந்து பயணிக்கிறது! என்னுடைய சிறுவயதில் இருந்தே அம்மா எம்.ஜி.ஆர் ரசிகர். அம்மா அவரை புகழ்ந்து புகழ்ந்து பேசி, பிள்ளைகள் எங்களுக்கும் எம்.ஜி.ஆரை பிடித்துப்போய்விட்டது!   அப்பாவிற்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது!  அவருக்கு சிவாஜிகணேசனைத் தான் பிடிக்கும்! சிவாஜியின் நடிப்பும், அப்பா காங்கிரசுகாரர். சிவாஜியும் காங்கிரசுகாரர் என்பதாலும் இருக்கலாம் என இப்பொழுது தோன்றுகிறது அம்மாவை ஊரிலிருந்து அழைத்து வந்து சத்தியத்தில் டிஜிட்டலில் ஆயிரத்தில் ஒருவனை காணவைக்கவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது!.

எம்.ஜி.ஆரின் விரல்விட்டு எண்ணக்கூடிய சில படங்கள் எத்தனைமுறைப் பார்த்தாலும், சலிக்காது! அதில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்று!

ஆயிரத்தில் ஒருவனைப் பற்றி அபிலாஷ் உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் படம் வெளிவந்த சமயத்தில் உள்ள அரசியல் நிலைமைகளோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். சுவாரசியமாக இருக்கிறது!

கட்டுரையில் சில இடங்கள்!
//ஜெயலலிதாவுக்கு இப்படம் வெளியாகும் போது 14 வயது. குழந்தைக்கும் பெண்ணுக்கும் இடையிலான அந்த முகத்தில் பாசாங்கில்லாத ஒரு அழகு ஜொலிக்கிறது//

//ஜெயலலிதா தோன்றும் முதல் காட்சியிலே செங்கப்பன் அவரிடம் சொல்கிறார், “நீ ஆயிரம் அடிமைகளுக்கு சொந்தக்காரி ஆகி ஆளப் போகிறாய் அம்மா.” அது வரலாற்றில் பலித்து விட்டது பாருங்கள்.//

//தீவில் வெட்டுகிற மரங்களை ஆற்றில் ஒழுக விட்டுப் பதுக்கி கட்டுமரம் கட்டி தப்பிக்க திட்டமிடுகிறார் எம்.ஜி.ஆர். ஆனால் எதிர்பாராமல் கடற்கொள்ளையர்கள் தாக்க, அவர்களை எதிர்த்து விரட்டினால் சுதந்திரம் தருவதாய் தீவின் தலைவர் செங்கப்பன் சொல்கிறான். விரட்டுகிறார்கள். ஆனால் சுதந்திரம் தராமல் ஏமாற்று கிறான். அடுத்து அவர்களே அங்கிருந்து தப்பித்து கொள்ளையர் கப்பலில் ஏறி கொள்ளையர்களைத் தோற்கடித்து கைப்பற்றி அதன் மூலம் தப்பிக்க பார்க்கிறார்கள். ஆனால் கொள்ளையர்களிடமே கைதிக ளாகப் பின்னர் சூழ்ச்சியால் மாட்டிக் கொள்கிறார்கள். இப்படிப் போகிறது கதை. கிட்டத்தட்ட இறுதிக் காட்சி வரை அடிமைகளை அவர் காப்பாற்றுகிறேன் என அழைத்துப் போய் மேலும் மேலும் பிரச்சினைகளில் தான் மாட்டி விடுகிறார். மேலும் அவராகத் திட்டமிட்டு வெற்றி பெறுவதை விட அதுவாக அமைகிற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு காயாக நகர்த்துகிறார்.//

//ஒரு அதிகாரப் போட்டியில் ஜெயிப்பதற்கான ஒரு கருணையற்ற மன உறுதி அற்றவராகவே எம்.ஜி.ஆர். பாத்திரம் இருக்கிறது. இவ்விதத்தில் நம்பியாரின் பாத்திரம் முக்கியமானது. அவர்தான் கொடுங்கோல மன்னனை இறுதிக் காட்சியில் கத்தி எறிந்து கிட்டத்தட்ட கொல்கிறார். ஆனால் நம்பியார் எவ்வளவோஅவன் சாகட்டும் விடுங்கள்எனக் கேட்டும் எம்.ஜி.ஆர். அவருக்கு வைத்தியம் பண்ணி காப்பாற்றுகிறார். ஆனால் உயிர்பிழைத்ததும் கொடுங்கோலன் அவர்களைக் கைது பண்ணி தன் நாட்டுக்குக் கொண்டு செல்கிறான். நல்லவேளை, அவன் மனம் திருந்தி விடுவதாய் காட்டுவதால் பிரச்சினை தீர்கிறது. ஆனால் ஒரு தலைவனாக எம்.ஜி.ஆர். பாத்திரமான காந்தியவாத தாக்கம் கொண்ட மணிமாறன் சொதப்பல் பேர்வழி. அவருக்குப் பதில் நம்பியார் இந்த அடிமைகளுக்குத் தலைமை ஏற்றிருந்தால் படம் ஆரம்பித்த முதல் அரைமணி நேரத்தில் ஒரே சண்டையில் கொடுங்கோலனைக் கொன்று வென்றிருப்பார் எனத் தோன்றுகிறது. ஒரு விதத்தில் இந்தப் படத்தின் நிஜமான ஹீரோ நம்பியார் தான். ஆனால் இந்த சொதப்பல்களும் கபடமின்மையும்தான்ஏழைகளின் நாயகனாக”, Òநல்லவனாகஎம்.ஜி.ஆரை ஒரு அணுக்கமான நாயகனாகக் கட்டமைக்கிறது//

Monday, June 23, 2014

கணவனை இழந்தப் பெண் – சில குறிப்புகள்



என் உறவுக்கார பெண்ணை அவளின் அத்தைப் பையனுக்கே திருமணம் முடித்தார்கள்.  திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளில் டி.பியும் மஞ்சள் காமாலையும் இணைந்து தாக்க பையன் இறந்துவிட்டார்.  டி.பி. ஏற்கனவே தாக்கியிருந்ததை மறைத்து பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கிவிட்டீர்களே என கடுமையாக சண்டையெல்லாம் போட்டார்கள். அப்பொழுது அந்த பெண்ணுக்கு வயது 23. குழந்தைக்கு வயது 6 மாதம்.

நான்கு, ஐந்து ஆண்டுகள் கடந்தது.  அந்த பையனின் வீட்டில் இருந்த அந்த பெண்ணிடம் இறந்துபோன கணவனின் அண்ணனே தவறாக நடந்துகொள்ள, பெண்ணை அவருடைய பெற்றோர் தங்களுடன் அழைத்து வந்துவிட்டனர்.

பிறகு, நாம் எவ்வளவு காலம் பாதுகாக்க முடியும் என பெற்றோர் நினைத்து, மறுதிருமணத்திற்கு முயலும் பொழுது, சொந்த சாதியில் யாரும் அந்த பெண்ணை திருமணம் செய்ய முன்வரவில்லை.  எனக்கு சில முற்போக்கான நண்பர்கள் இருப்பதால், அந்த பெண்ணின் அண்ணன் அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைத்தால் சொல்லுங்கள் என்றார்.

“உங்க சொந்தம்,  ஜாதிக்காரங்களுடன் எப்பொழுதும் கொஞ்சி, குலாவி வாழ்கிறீர்கள். அவர்களுக்கெல்லாம் ‘கற்புள்ள’ பெண் தான் வேண்டுமோ? இதற்கு மட்டும் முற்போக்காளர்கள் வேண்டுமா? என கோபமாய் கேட்டேன்.  அவரால் பதில் சொல்லமுடியவில்லை. அமைதியாய் இருந்தார்.

பிறகு, இரண்டு வருடங்கள் கழித்து, வேறு ஒரு சாதியைச் சேர்ந்த, இரண்டு குழந்தைகள் கொண்ட, மனைவியை இழந்தவருக்கு மணம் முடித்துக்கொடுத்தனர்.
***
சொந்த உறவுகள், ஜாதிக்காரர்கள் கணவனை இழந்த அந்த பெண்ணை திருமணம் முடிக்க முன்வர மறுக்கிறார்கள்.  ஆனால், கள்ளத்தனமாக உறவு வைத்துக்கொள்ள பலரும் முயல்கிறார்கள்.  இந்த சமூகம் பிற்போக்குத்தனமாகவும், இழிவாக நடந்துகொள்வதற்கும் இது ஒரு நல்ல உதாரணம்.
****

குடிசை வாழ் பகுதிகளில் கணவன்மார்கள் எப்படி இறக்கிறார்கள் என ஆய்வு செய்ததில், 90% இறப்பதற்கு காரணம் குடி தான் காரணம் என தெரிய வந்திருக்கிறது!

குடிமக்களின் மீது அக்கறை கொள்ளாமல்,  கல்லா கட்டுவதில் குறியாக உள்ள ஜெ. அரசு, தெருவுக்கு நாலு டாஸ்மார்க் கடைகள் திறந்து, பல குடும்பங்களின் தாலியை அறுக்கிறது!  அதனால், ஜெ.விற்கு “தாலி அறுத்த அம்மா” என பட்டம் வழங்கலாம்!

-    *** கணவனை இழந்த பெண்களின் சர்வதேச தினம் இன்று!

Saturday, June 21, 2014

திரிஷியம் (Visuals can be deceiving)

20 ஆண்டுகளுக்கு முன்பு, மம்முட்டி சிபிஐ அதிகாரியாக ஒரு கொலையை துப்பறியும் “சிபிஐயின் டைரிக் குறிப்பு” என்ற படம் தமிழ்நாட்டில் கூட 100 நாட்களுக்கு மேல் ஓடியது!  அது போல ஒரு நல்ல திரில்லர் படம்!
***
கதை எனப் பார்த்தால்

அவர் கேபிள் டிவி ஆபரேட்டர். அவருக்கு ஒரு குடும்பம். இரண்டு மகள்கள்.  சந்தோசமாக நகர்கிறது அவர்களது வாழ்க்கை.  மூத்த மகள்  மாணவர்களுக்கான ஒரு முகாம் செல்ல, அங்கு வரும் ஐ.ஜி. பையன் தனது செல்பேசியில் அந்த பெண் குளிப்பதை படம் எடுத்துவிடுகிறான். பிறகு, அந்த பெண்ணின் சொந்த ஊருக்கே வந்து, இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி தன் ஆசைக்கு  இணங்க மிரட்டுகிறான்.  மகள் அம்மாவிடம் சொல்ல, இருவரும் அவனுடன் நடத்தும் போராட்டத்தில் அவன் இறந்துவிடுகிறான்.  அந்த ’கொலையை’ அந்த குடும்பம் மறைக்கிறது.  இடைவேளை.  காவல்துறையின் விசாரணையில் குடும்பம் மாட்டிக்கொண்டதா? தப்பித்ததா? என்பது மீதிக்கதை!

****

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, வட சென்னையில், ஒரு பெண்மணி குளிக்கும் பொழுது, எதைச்சையாக கவனிக்கும் பொழுது, ஒரு மூலையில் செல்போன் இருந்திருக்கிறது.  அதை கணவரிடம் சொல்ல, அவர் காவல்துறையிடம் புகார் செய்திருக்கிறார்.  அந்த செல்போன் இரண்டாவது மாடியில் வசிக்கும் ஒருவருடையது என்பது விசாரணையில் தெரிந்திருக்கிறது! இந்த மாதிரி அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்கிறோம். இப்படி ஒரு நிகழ்விலிருந்து ஒரு  கதையை எழுதியிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு நபருடன் பேசும் பொழுது, இப்பொழுது வரும் ஆபாச படங்கள் கூட பெரும்பாலும் செல்பேசியில் எடுக்ககூடிய படங்கள் தான் பிரபலமாக இருக்கின்றன என்ற தகவலை சொன்னார். செயற்கை அலுத்துவிட்டது! ’ரியாலிட்டியை’ விரும்புகிறார்கள் போல!

கடந்த 20 வருடங்களில் புதிய தாராளவாத கொள்கைகளினால், சமூகத்தில் ஒழுக்கம், கற்பு, நேர்மை என இன்னபிற விழுமியங்கள் எல்லாம் தேய்ந்து கொண்டே வருகின்றன.  வாழ்க்கையை ‘ரசனையுடன்’ வாழ வேண்டுமென்றால், நிறைய பணம் வேண்டும். அதற்கு எதையும் விலையாக கொடுக்கலாம் என்றும், பணம் நிறைய சம்பாதித்தவர்கள் புதிது புதிதாக ‘அனுபவிக்க’ நினைக்கிறார்கள். 

படத்தில் கூட ஐ.ஜி. பையன் கார், கிரெடிட் கார்டு என சகல வசதிகளுடன் இருக்கிறவன், தனக்கு விருப்பம் அதனால் எப்படியாவது அடைய வேண்டுமென்று நினைக்கிறான்.  அவள் ஒரு பெண். அவளை சீரழிப்பதால், அந்த குடும்பமே சீரழியும் என்பதெல்லாம் அவனுக்கு கவலையே இல்லை!  இதுதான் கவலைக்குரிய விசயம்!

திரைக்கதையை சுவாரசியமாக கொண்டு செல்ல முயன்றவர்கள், படத்தின் ஆதாரமான காட்சியான, ஏன் அந்த பையன் அப்படி நடந்துகொண்டான் என்பதை எங்கும் விரிவாக பேசவில்லை.  இறுதிக்காட்சியில், அப்படி தறுதலையாக நடந்துகொண்டதற்கு நாங்களும் ஒரு காரணம் என பெற்றோர்கள் பேசுகிற மாதிரி ஒரு வசனம் வரும். அவ்வளவு தான்! 

நாலாம் வகுப்பு படித்திருக்கும் நாயகன் நிறைய திரைப்படங்களைப் பார்த்து, கொலையை மறைக்கும் முயற்சிகளை சுவாரசியமாக சொல்கிறார்கள். அதை அந்த பையனின் அம்மாவான ஐ.ஜி.  மெல்ல மெல்ல அவிழ்ப்பது இன்னுமொரு சுவாரசியம்.

படத்தில் நடித்தவர்கள் எல்லோரும் இயல்பாக வலம் வருகிறார்கள். இரண்டு பாடல்கள் கூட மான்டேஜ்களாக வருகிறது. படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி இப்பொழுது பல மொழிகளிலும் மீண்டும் எடுக்கிறார்கள். தமிழில் கமலும், தெலுங்கில் வெங்கடேசும், கன்னடத்தில் ரவிச்சந்திரனும் நடிக்கிறார்களாம்.

கன்னடத்தில் பி.வாசு இயக்குகிறாராம். மணிச்சித்திரதாழ் என்ற ஒரு அருமையான படத்தை, சந்திரமுகியாக அதன் சாரமிழக்க செய்ததைப் போல செய்துவிடுவார் என்ற பயம் எனக்கு இருக்கிறது!

மலையாளத்தில் நாயகனின் கிறிஸ்தவ பாத்திரத்தை, தமிழில் சைவ வெள்ளாளராக காட்ட இருக்கிறார்களாம்.  எப்படி வருகிறது என காத்திருப்போம்!

Wednesday, June 18, 2014

மொட்டை மாடியின் மரணம்



மாலையிலும், விடுமுறை நாட்களிலும் எங்கள் மொட்டைமாடி பரபரவென்றிருக்கும். தெருவில் உள்ள பசங்க எல்லாம் இங்கு தான் இருப்பார்கள்.

கேரம், செஸ், பல்லாங்குழி, பந்து விளையாட்டு, கிரிக்கெட் என எல்லா விளையாட்டுகளும் விளையாடுவார்கள்.  கூட்டம் அதிகமாகிவிட்டது என்றால் அவர்களே ஷிப்ட் பிரித்து விளையாடுவார்கள். அன்றைக்கு ஒரு பையன் புதிதாய் இருந்தான். விசாரித்தால், அடுத்த தெருவிற்கு அடுத்த தெரு என்றான்.

அவர்களே நிறைய பொருட்களை கொண்டு வந்து விளையாடுவார்கள். குப்பையாகிவிடும். பின்பு, அவர்களே குப்பைகளை அள்ளியும்விடுவார்கள். மீறி இருந்தால், வாரம் ஒருமுறை நான் அள்ளிவிடுவேன்.

சில குறும்புக்கார பயல்கள் விளையாட விடாமல் தொல்லை செய்வார்கள். நானே அம்பயராகி, அவர்களுக்கு ரெட் கார்டு காட்டி, மாடியிலிருந்து இறக்கிவிட்டுவிடுவேன்.

எதிர்த்த வீடு, பக்கத்துவீடு ஆட்கள் எல்லாம் நீங்கள் இல்லாத பொழுது, மாடியை பாடாய்படுத்துகிறார்கள் என போட்டுக்கொடுப்பார்கள். தெரு சின்னதா இருக்கு! பசங்க எங்க போய் விளையாடுவாங்க! பசங்கன்னா அப்படித்தான் என தட்டிவிட்டுவிடுவேன்!

சிறுவயதில் எத்தனை விளையாட்டுக்கள், எவ்வளவு சேட்டைகள் செய்தோம் என்பதை எண்ணிப் பார்த்துக்கொள்வேன்.

தெருவில் மற்ற வீடுகளில் உள்ள தங்கள் மொட்டை மாடிகளை யாரையும் விளையாட விடாமல், பாதுகாப்பாக வைத்திருப்பதாக சந்தோசப்படுகிறார்கள்.  அவர்களின் மாடிகள் செத்துப்போய் பல வருடங்கள் ஆகிவிட்டன என்பதை மட்டும் அவர்கள் உணர்வதேயில்லை!