Wednesday, July 23, 2014

முட்டைவிலை ரூ. 3 - ‍ நம்ப முடிகிறதா?

எங்கள் தெருவில் ஒருவர் அதிமுகவில் வட்ட பொறுப்பில் இருக்கிறார். வெள்ளையும் சொள்ளையுமா எந்த வேலையும் செய்யாமல் போயும், வந்தும் கொண்டிருப்பார். வட்டிக்கு பணம் கொடுக்கிறார் என நினைக்கிறேன். ஒருமுறை வாங்கிய பணத்தை கொடுக்கவில்லை என்பதற்காக, அவர்கள் வீட்டின் வாசலில் ஒரு ஆட்டோவை பிடித்துவைத்திருந்தார்கள்.

சமீப நாட்களில் அவருடைய வீட்டம்மா (சொர்ணக்காவே தான்) வீட்டில் ரூ. 3 என அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு முட்டைகள் விற்றுக்கொண்டிருக்கிறார். எப்படி என்றால், அரசின் மலிவு விலை கடைகளில் வாங்கி வந்து விற்பதாக சொல்கிறார்கள்.

வெளி மார்க்கெட் விலை ரு.4.50 வரை விற்றுக்கொண்டிருக்கும் பொழுது, எப்படி ரூ. 3க்கு விற்கமுடிகிறது? 

இப்படி ஆளுங்கட்சிகாரர்கள் வாங்கி வந்து விற்பதே அயோக்கியத்தனம் என்பது ஒருபக்கம் இருந்தாலும், எனக்கு என்ன சந்தேகம்னா? அங்கிருந்து மலிவு விலைக்கு வாங்கி வந்து விற்கிறார்களா? அல்லது திருடிட்டு வந்து விற்கிறார்களா என்று தான்!

அரசு விலை கடைகளில்  முட்டை என்னவிலை விற்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா? சொன்னீர்கள் என்றால், அவர்களை என்ன செய்வது என யோசித்து ஏதாவது செய்ய வசதியாக இருக்கும்!

Sunday, July 20, 2014

வேலை இல்லா பட்டதாரி - ‍சில குறிப்புகள்

முதல்நாள் படம் பார்த்து வருடக்கணக்கில் ஆகிவிட்டன. தனுஷ் ரசிகர்களின் ஆட்டம் அதிகம்.

நகைச்சுவைக்கென்று விவேக் இருந்தாலும், 2 லட்சம் சம்பாதிக்கும் இளவயது பல்டாக்டர், முதல் மாதமே 50000 சம்பளமாய் தரும் கால்சென்டர்,   ஆறு மாதமே அனுபவம் கொண்ட ஒரு கட்டிட இன்ஜினியருக்கு 300 கோடி திட்டம் தரும் தைரியம் ‍இப்படி நிறைய சீரியஸ் காமெடி இருக்கிறது!

ஊரெல்லாம் வீடு, காம்பளக்ஸ் என கட்டிக்கொண்டிருக்கும் பொழுது, தனுஷிற்கு வேலை கிடைக்கவில்லை என்பது நம்பமுடியவில்லை. அம்மாவின் ஆர்கன் மூலமாக தான் வேலை கிடைக்கவேண்டும் என இயக்குநர் முடிவெடுத்துவிட்டார்! என்ன செய்வது!

சட்டையை கழற்றி சண்டையிடுவதற்கு தனி தைரியம் வேண்டும். தனுஷிடம் நிறைய இருக்கிறது.

ஹீரோயிஸ படம் தான்! ஆனால் பக்கத்து வீட்டில் நடப்பது போல மெனக்கெட்டிருக்கிறார்கள்!

படத்தின் தனுஷின் அப்பாவே சொல்வது போல, "இவனோட அம்மா செண்டிமென்ட் என்னாலேயே தாங்க முடியலைம்மா!"

முகநூல் பிரபலம் தான்! ஏற்றுக்கொள்ளலாம். அதற்காக களத்தில் இறங்கி அடிவாங்குகிற அளவுக்கு காட்டுவது இன்னொரு சீரியஸ் காமெடி!

அனிருத்தின் இசையில் வரிகள் எதுவும் நினைவில்லை. தனுஷ் ஆட்டம் போடுவதற்கு வசதியாய் இருக்கின்றன!

அமலாவிற்கு கல்யாணம் என்பதால், டீசண்டாக விட்டார்களா என தெரியவில்லை! :)

ஏற்கனவே பாடி வீக். இதில் பல சமயங்களில் புகை வேறு! யாராவது தனுஷிற்கு புத்திமதி சொன்னால் தேவலை!



//எப்படியிருந்தாலும் இதுவரையிலான தனுஷின் நடிப்பு கேரியரில் இது தான் மிகச் சிறந்த படம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை// என்கிறார் பதிவர் உண்மைத்தமிழன்

இதை என்னால சத்தியமா தாங்க முடியல!
 

The karate kid (2010) – ஒரு பார்வை



நேற்று தூக்கம் வராமல் தவித்த பொழுது, மீண்டும் இந்தப் படத்தைப் பார்த்தேன்.  ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் விஜய் தொலைக்காட்சியில் போடுகிறார்கள்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக கேபிளை கட் பண்ணிவிட்டதால், பார்க்க முடியவில்லை.

பார்க்காதவர்களுக்காக சுருக்கமாய் கதை சொல்லிவிடலாம்.   

அமெரிக்காவின் தொழில்நகரமான டெட்ராய்டின் வீழ்ச்சிக்கு பிறகு, பிழைப்புக்காக அம்மாவும், 12 வயது பையனான டிரேயும் சீனாவிற்கு இடம் பெயர்கிறார்கள். அப்பா அவனின் சிறுவயதிலேயே இறந்துவிடுகிறார்.

சீனாவின் பெய்ஜிங் வந்த முதல் நாளே, மைதானத்தில் இருந்த பெண்ணிடம் அந்த பையன் பேச, உள்ளூர் பசங்களோடு மோதல் வருகிறது. செங்க் என்கிற பையன் செமத்தியாக டிரேயை அடித்துவிடுகிறான்.  எல்லோரும் ஒரே பள்ளியில் படிப்பதால், டிரேயை மீண்டும் மீண்டும் தொல்லை செய்கிறார்கள். ஒருநாள் கடுப்பில் அழுக்கு வாளித்தண்ணீரை எடுத்து டிரே அவர்கள் மீது ஊற்றிவிடுகிறான். கொலைவெறியோடு தாக்குகிறார்கள்.  டிரே அபார்ட்மெண்டின்  பராமரிப்பு செய்யும் (நம்ம) ஜாக்கி அவனை காப்பாற்றுகிறார்.

செங் ஒரு குங்குபூ பள்ளியில் மாணவனாக இருக்கிறான். சமாதானம் பேச ஜாக்கியுடன் போகும் பொழுது, அந்த பள்ளியின் மாஸ்டர் யாராவது ஒருவர் அவருடைய மாணவர்களுடன் சண்டையிடவேண்டும் என வம்புக்கு இழுக்கிறார். நெருக்கடியில் அடுத்து நடக்க இருக்கும் விளையாட்டு போட்டியில் டிரே கலந்துகொள்வான் என வாக்குறுதி தருகிறார். அவனுக்கு குங்குபூ கற்றுத்தருகிறார். இறுதியில் பல சோதனைகளுக்கு பிறகு செங்யை டிரே வீழ்த்தி வெற்றி பெறுகிறான்.
*****
ஜாக்கியின் இறுக்கத்திற்கு உள்ள பின்கதையும், டிரேயின் அந்த பெண்ணுடான நட்பும், படத்தை சண்டைப் படமாக கொண்டு செல்லாமல் ஒரு மெலோ டிராமாவாகத்தான் நகர்கிறது.

டிரே - தனது பழக்க வழக்கத்தில் உள்ள அராஜகத் தன்மை இருக்கும் வரையில் ஜாக்கி அவனிடம் கடுமையாக நடந்துகொள்கிறார். அவன் மாறிய பிறகு அவனிடம் கனிவாக நடந்துகொள்கிறார்.  ஒரு அருமையான ஆசிரியராய் நடந்துகொள்கிறார். படத்தில் பிடித்த விசயம் இது!

நம் 50 வயது, 60 வயது நாயகர்கள் எல்லாம் சில சமயங்களில் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடிப்பது பாந்தமாக இருப்பது போல, ஜாக்கி இந்த பாத்திரத்தில் அருமையாக பொருந்தியிருக்கிறார்.

டிரேயின் அம்மா, டிரேயின் தோழியான சீனப்பெண், வம்பு சண்டையிடும் செங், கருணை கூடாது என பேசும் அந்த குங்பூ ஆசிரியர் எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

நம்மூர் வாரிசு நடிகர்கள் போலவே ஹாலிவுட்டிலும் தொடர்கிறது என்பதை Jaden smith ஐப் பார்க்கமுடிகிறது. 1990களில் இதே கதையை வைத்து ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். அதே கதையை தூசு தட்டி மீண்டும் எடுத்திருக்கிறார்கள்.  இதன் வெற்றியில் இப்பொழுது நான்கு வருடங்களுக்கு பிறகு இரண்டாம் பாகம் எடுக்க பேசிவருகிறார்கள்.

முன்பெல்லாம் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அமெரிக்காவிற்கு, பிரிட்டனுக்கு பிடிக்காத நாடுகளை எல்லாம் குறிப்பாக கம்யூனிச சார்பான நாடுகளை வில்லனாக காட்டுகிறார்கள். இந்தப் படத்தில் அமெரிக்க சிறுவன், வில்லனாக சீன சிறுவன், சீன ஆசிரியர் என காட்டுகிறார்கள். அவர்கள் எப்பொழுதும் அவர்களின் கப்பித்தனமான அரசியலில் கவனமாக தான் இருக்கிறார்கள்.

எல்லோரும் ஒருமுறைப் பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.
*****

Thursday, July 3, 2014

ஹாரிபார்ட்டர் படங்கள்! – சில குறிப்புகள்!



காமிக்ஸ் வழியாக கற்பனை உலகத்தில் மிதந்து வந்தவர்களுக்கு ஹாரிபார்ட்டரின் படங்கள் மிகவும் பிடிக்கும்!  எல்லா காமிக்ஸ் கதைகளில் வரும் மந்திரம், தந்திரம், சாகசம், பிரமிப்பு, சுவாரசியமான கதாபாத்திரங்கள் என எல்லாமும் கலந்து கலவை தான் ஹாரிபார்ட்டர் படங்கள்! ( Harry Potter Films )

கொஞ்சம் விட்டுவிட்டு ஹாரிபார்ட்டர் படங்களை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்து வந்திருக்கிறேன். சில படங்களை தமிழிலும்,  சில படங்களை ஆங்கிலத்திலும்! நானூறு, ஐநூறு பக்க நாவலை இரண்டரை மணி நேர படங்களாக சுருக்கி எடுத்திருப்பாதாலேயே படத்தை நான் – லீனியர் வகை சார்ந்த படங்கள் போல ஆக்கிவிடுகின்றன! இந்த படத்தை கிறிஸ்டோபர் நோலன் வகையான ஆட்கள் எடுத்திருந்தால் என்னைப் போல கொஞ்சம் டல் மாணவர்களை நினைத்துப்பார்க்கிறேன்! தலையை பிய்த்துக்கொண்டு திரிந்திருப்போம்!

அண்ணன் பையன் ஹாரிபார்ட்டரின் ரசிகன்.  மீண்டும் மீண்டும் டிவிடியில் படங்களை போட்டுப் பார்க்கும் பொழுது, அவன் கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லவே நான் படத்தை கவனமாக பார்க்கவேண்டியிருக்கிறது!  நாவல்களைப் படிக்கலாம் என தேடிப்படித்து படித்தால், ஜே.கே. ரவுலிங்கின் எழுத்து படிக்க சிரமமாயிருக்கிறது! என்ன செய்வது?

சாமான்ய உலகத்தோடு ஒட்டாத ஒரு தனி உலகம் அது! மந்திர தந்திரங்களை கற்றுத்தரும் பள்ளி. விளக்குமாறு கொண்டு பறப்பது, அசையும் புகைப்படங்கள், செய்தித் தாள்கள்; வானில் பந்து விளையாட்டு; பறக்கும் குதிரை, அவர்களுக்கென்று ஒரு அமைச்சரவை என நீள்கிறது அவர்களின் உலகம்!

தீயசக்திகளின் தலைவனான வால்ட்மோர்ட். தான் தனிப்பெரும் சக்தியாக உலகை ஆள நினைக்கிறான்.  உலகை காக்க நல்லவர்களின் கூட்டணி!  அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவனாக ஹாரிபார்ட்டர்!

கன்னித்தீவு கதையில் வரும் மூசா. தன் உயிரை ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு கிளியிடம் தன் உயிரை ஒளித்து வைத்திருப்பான்.  அதே போல, இதிலும்!  தீய சக்திகளின் தலைவன், தன் உயிரை ஏழாகப் பிரித்து, ஏழு பேரைக் கொன்று, (மோதிரம், டாலர், டைரி, கோப்பை, பாம்பு, இன்னும்…) என ஏழு வகைகளில் ஒளித்து வைத்திருக்கிறான். இதில் சுவாரசியமான ஒன்று. அவனின் ஒரு பாகம் ஹாரிப்பார்ட்டரின் உடலோடு இருக்கிறது! நல்லவர்களின் துணையோடு, ஹாரிப்பார்ட்டரும், அவனுடைய நண்பர்களும் ஒவ்வொன்றாக கண்டுப்பிடித்து அழிப்பது தான் எல்லா பாகங்களும்!

துவக்க பாகங்களை பார்க்காமல், மற்ற பாகங்களை பார்த்தால், கொஞ்சம் தலைச்சுற்றும்! எல்லா பாகங்களையும் பார்த்துவிட்டேன். இன்னமும் பல கேள்விகள் என்னைச் சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கின்றன!

1997ல் துவங்கி 2007 வரைக்கும் ஏழு பாகங்களை நாவலாக வெளியிட்டார்கள்.  ஆனால், படங்கள் ஏழாவது பாகத்தை மட்டும் இரண்டு படங்களாக எடுத்து 2011ல் கடைசி படத்தை வெளியிட்டார்கள்.  நாவல்கள் கோடிக்கணக்கில் விற்றுத்தீர்ந்துவிட்டன.  படங்களும் வசூலை அள்ளிவிட்டன. ஆனால், தேடும் பொழுது தமிழில் ஹாரிபார்ட்டர் படங்கள் பற்றி எழுதிய பதிவுகள் அரிதாக இருக்கின்றன.  ஒருவேளை ஆங்கில நாவல், ஆங்கில படம் என்பதால், ஆங்கிலத்தில் நிறைய பேர் எழுதியிருக்கலாம்!

கருந்தேள் ஹாரிபார்ட்டரின் இரண்டு பாகங்களைப் பற்றி இரண்டு பதிவுகள் எழுதியிருக்கிறார். நாவல்களைப் படித்தும், எளிமையாகவும் எழுதுவதால் அந்த பதிவுகள் நல்ல புரிதலை தருகின்றன! கீழே இணைத்துள்ளேன். படியுங்கள்.

மற்றப்படி, ஒவ்வொரு பாகத்தைப் பற்றி எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது! வருங்காலத்தில் பார்க்கலாம்!  :)




’அத்தோ’ உணவு தெரியுமா?



வேலை ரீதியாக செங்குன்றம் வழியாக போய்வருவதுண்டு. ஒரு நாள் மாலையில் ஒரு தள்ளுவண்டி அருகே மக்கள் நாலைந்து பேர் நின்று சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். கேட்டால், ‘அத்தோ – குழம்பு’ என்றார்கள். மக்கள் பிஸியாக அந்த கடையில் உட்கார்ந்து சாப்பிட்டும், பார்சல் வாங்கிக்கொண்டும் சென்றார்கள்.

காவிக்கலரில் வேகவைத்த நூடுல்ஸ், கோஸை பச்சையாக சீவல் சீவலாக வெட்டி ஒரு தட்டில்! வெங்காயத்தை எண்ணையில் போட்டு வதக்கி மொறு மொறு என தயார் நிலையில்! கடலைமாவு, நல்லெண்ணெய், கொத்தமல்லி, பேஜோ (தட்டு போல எண்ணெயில் போட்ட வடகம்)
-   
  இதை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போட்டு கையால் கிளறி ஒரு சின்னத்தட்டில் வைத்து தருகிறார்கள்.இதனோடு கூடவே வாழைத்தண்டு சூப் போல தண்ணியாக தருகிறார்கள்.  அதை குழம்பு என்கிறார்கள்.

முதன்முதலாய் வாங்கிச் சாப்பிடும் பொழுது புளிப்பு, காரம் என வித்தியாசமான சுவையில் இருந்தது! முழுவதையும் என்னால் சாப்பிடமுடியவில்லை.  இப்பொழுது வாரம் ஒருமுறை அந்தப்பக்கம் போகும் பொழுது சாப்பிட்டு சாப்பிட்டு பழக்கமாகிவிட்டது! ஒரு பிளேட் ரூ. 35 (குழம்புடன்) இதோடு அவித்த முட்டையைச் சேர்த்தால் அசைவ அத்தோ. இறைச்சியும் சேர்க்கலாம் என்கிறார்கள். அந்த கடையில் இல்லை!

இதை பர்மாவின் தேசிய உணவு என்கிறார்கள். பர்மாவிலிருந்து 60களில் இங்கு வந்தவர்கள் சென்னையின் கடற்கரை சாலையில் நிறைய பேர் தள்ளுவண்டியில் விற்றுவருகிறார்களாம்.  வட சென்னையில் நல்ல பரிச்சயம். தென் சென்னையில் எங்கும் நான் பார்த்ததில்லை. மதுரை முனியாண்டி விலாஸ், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி எல்லாம் நாடு முழுவதும் விற்கும் பொழுது, வடசென்னையில் பரிச்சயமான இந்த உணவு, தென் சென்னையில் பார்க்கமுடியாதது ஆச்சர்யம்!

இதற்கு முன்பு வழக்கறிஞர் நண்பர் ஒருவர் கடற்கரை சாலையில் ஒரு கடையில் பர்மா நூடுல்ஸ் சாப்பிட்டு, புட் பாயிசன் ஆகி வயிறு அப்செட் என்றார்.  இரண்டு நாட்கள் படுத்தபடுக்கையாக இருந்தார்.   ஆகையால், கொஞ்சம் கடையின் சுத்தம் பார்த்து தான் சாப்பிடவேண்டும்.

நான் சாப்பிடும் கடை, கணவன் மனைவி இருவரும் வைத்திருக்கிறார்கள்.  தள்ளுவண்டி என்றாலும், தயாரிப்பு முறையில் சுத்தமாக வைத்திருப்பார்கள். இதுவரை 6 முறை சாப்பிட்டு இருக்கிறேன். எந்த தொந்தரவும் இல்லை!

எங்க தாத்தா கூட பர்மாவில் தொழில் செய்தவர் என்பார்கள். பர்மா உணவு பிடித்ததற்கு அது கூட காரணமோ?