Friday, July 31, 2009

425 கோடியில் புதிய சட்டமன்றம்! - சில குறிப்புகள்!


* சட்டமன்றத்தால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் முக்கால்வாசி முடங்கி கிடக்கின்றன. மீதி ஆமை வேகத்தில் நகருகின்றன. சட்டமன்ற கட்டிட வேலைகள் மட்டும் ஏன் புயல் வேகத்தில்?

* தமிழ்நாட்டு பாடசாலைகள், அரசு அலுவலங்கள் எல்லாம் அரசின் பொதுப்பணித்துறைக் கட்ட... 425 கோடியில் சட்டமன்றம் கட்டுவது ஜெர்மன் நாட்டின் ஜி.எம்.பி. நிறுவனம். உள்ளே நடமாடுவது தாங்களே என்பதலா! இதுவும் பன்னாட்டு சேவையா?

* பெஞ்சுக்கு பதிலாக வசதியான குஷன் இருக்கைகளாம். இனி, சட்டமன்ற கூட்டத்தொடரின் பொழுது குறட்டைவிட்டு எம்.எல்.ஏ.க்கள் வசதியாக தூங்கலாம்.

* அதிமுக ஆட்சியில் வேட்டியை அடிக்கடி உருவிவிடுகிறார்கள். ஆகையால் புதிய சட்ட மன்றத்தில் வேட்டி சட்டைக்கு பதிலாக கோட்-சூட் போடலாம் என பரிதி இளம் வழுதி பரிந்துரைப்பார்.

* பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் நாம் சேவை செய்கிறோம். ஆகையால், புதிய
சட்டமன்றத்தத ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல பராமரிக்கலாம். எம்.எல்.ஏக்கள் கோட்-சூட் போடலாம் என தயாநிதி மாறன் தாத்தா கருணாநிதியிடம் சொல்லலாம்.

* மக்களுக்காக திட்டம் போடுவது போல பன்னாட்டு நிறுவனங்களுக்கு விசுவாசமாய் வேலை செய்யவேண்டும். மக்களைப் போல உடை அணிந்தால் தான் நம்மை சந்தேகப்பட மாட்டார்கள் என கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசித்தது போல கருணாநிதி தன் பேரனுக்கு உபதேசிப்பார்.

* மக்கள் பிச்சைக்காரர்களாக வாழ்கிறார்கள். 425 கோடியில் எழுந்து நிற்கிறது புதிய சட்ட மன்ற வளாகம். பாவம் மக்கள்!

Friday, July 17, 2009

வினவு - க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நாட்டில் மொள்ளமாரி, முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ரவுடி, மக்கள்ப் பணத்தை தின்று தீர்ப்பவன் என எல்லோரும் பிறந்தநாள் கொண்டாடும்பொழுது, மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் ஒளியில் உலக விசயங்களை சமரசமில்லாமல் எழுதும் வினவு-க்கு பிறந்த நாள் தாராளமாய் கொண்டாடலாம்.

பதிவுலகம் பற்றி ஒன்றுமறியாத காலத்தில், ஏதோ ஒன்றைப் பற்றி தேடும் பொழுது, பதிவுலகம் அறிமுகமானது. அதற்கு பிறகு பல பதிவர்கள் எழுதியதை படித்த பொழுது, பெரும்பாலும் மொக்கையாக இருந்தது. பொறுத்து, பொறுத்து ஒரு சமயத்தில் வெறுத்துப்போய் தான் "வலையுலகமும் நொந்தகுமாரனும்" என்ற பெயரில் வலைத்தளமே தொடங்கினேன். பல மொக்கைப் பதிவர்களை, பதிவுகளை கலாய்த்தும் பின்னூட்டங்கள் இட்டுக்கொண்டிருந்தேன். எழுதிப் பழக்கமில்லையென்றாலும், நானே சொந்தமாய் சமூக விசயங்கள் குறித்து எழுத துவங்கினேன்.

இந்த நாட்களில் தான் 'வினவு' அறிமுகமானது. துவக்க கட்டுரைகளைப் படித்த பொழுது, வலைத்தளம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். வேலை நிலைமைகள் என்னதான் வாட்டியெடுத்தாலும், வினவு தளத்தை தவறாமல் வாசித்து வருகிறேன். பின்னூட்டங்களும் இடுகிறேன். என்ன ஒரு வருத்தம்! நேரமின்மையால் விவாதங்களில் பங்கு கொள்ள முடியவில்லை.

என்வாழ்வில் சிந்தனையோட்டத்தையும், நடைமுறை வாழ்வையும் மாற்றியமைத்ததில் வினவின் பங்கு அதிகம். சமூக தளத்தில் வினவின் பங்கு, நீங்கள் நினைப்பதைக்காட்டிலும் அதிகம். தன் பாதையில் சற்றும் தளராமல் பயணிக்க வாழ்த்துக்கள்.

சில ஆலோசனைகள் :

வினவு-ல் துவக்க காலங்களில் பண்பாட்டுத் தளத்தில் நிறைய கட்டுரைகள் வெளிவந்து, நிறைய வரவேற்பு பெற்றது. தொடர வேண்டும்

மருத்துவர் ருத்ரன் துவங்கிய தொடரை வெற்றிகரமாக தொடர வேண்டும். மருத்துவர் ருத்ரன் போன்ற பல துறை சார்ந்த சமூக அக்கறை கொண்ட பதிவர்கள் தனித்தனியாக எழுதுகிறார்கள். அவர்களையும் எழுத வைக்க வினவு முயற்சிக்க வேண்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம். சமூக மாற்றம் நிச்சயம் வரும்.

வளர்ச்சிப் பணிகளுக்காக, நண்பர்களிடம் நன்கொடை கேட்டு வாங்கித்தர முயல்கிறேன்.

மீண்டும் வாழ்த்துக்களுடன்,

சந்தோச குமாரன். (இந்த பதிவுக்கு மட்டும்)

Tuesday, July 7, 2009

பாதாள உலக பயணம்! (The Journey to center of earth) சினிமா!

The Journery to center of earth
ஒரு நாள் ஹாசினியின் 'பேசும் படம்' திரைப்பட விமர்சனத்தில் இந்த 3D படத்தை குழந்தைகளை அழைத்துக்கொண்டு திரையரங்கில் பாருங்கள். நல்லபடம் என பரிந்துரைத்தார்.

ஒரு உற்சாகத்தில் என் அக்கா பையனிடம் இந்த படத்துக்கு அழைத்துப்போகிறேன் என வாக்கு கொடுத்தேன். அன்றிலிருந்து 'கப்' என பிடித்துக்கொண்டான். 'எப்ப கூட்டிட்டு போற?' என ஆரம்பித்துவிட்டான்.

வாக்கு கொடுத்த நாளிலிருந்து அலுவலகத்தில் வேலை அதிகமாகி, வீடு திரும்ப நிறைய தாமதமானது. நாளாக நாளாக, சத்யத்தில் நான்கு காட்சிகள், பிறகு இரண்டு, ஒன்று என குறைத்துக்கொண்டே வந்தார்கள். 'ஆஹா! எடுக்கப் போறாங்களே! பையன் சொல்லி சொல்லி அசிங்கப்படுத்துவானே!" என சுதாரித்து... ஒரு நாள் சத்யத்துக்காக சிறப்பு காஸ்ட்டூம், சிறப்பு மேக்கப் டச் எல்லாம் கொடுத்து... இருவரும் பந்தாவாக போய் நின்றால்... படத்தை முதல் நாளே தூக்கிவிட்டார்கள். பையன் முகத்தை நேர் கொண்டு பார்க்க முடியவில்லை. செஞ்ச பாவத்துக்கு... பிராயசித்தமா.. இப்படத்தின் டிவிடியை தேடிப்பிடித்து வாங்கி கொடுத்தேன்.

வாங்கி தந்த நாளிலிருந்து... அக்கா வீட்டுக்கு நான் போகும் பொழுதெல்லாம், வேறு நிகழ்ச்சிகளை பார்க்கவிடாமல்... அக்கா பையன் இந்த படத்தை பார்க்க தொடங்கிவிடுவான். என்னை வெறுப்பேற்றுகிறானாம். இப்படி பலமுறை பார்த்து எனக்கே வசனமே மனப்பாடாமாகிவிட்டது. நெஞ்சில் உள்ள பாரத்தை இந்த படத்தை விமர்சனம் எழுதி, கொஞ்சம் இறக்கி வைச்சுக்கிறேன்!

கதைன்னு பார்த்தால்... 1864 வாக்கில் வார்னே என்பவர் "பூமிக்கு கீழே ஒரு உலகம் இருக்கிறது. அங்கே விசித்திர தாவரங்கள்; டைனோசர் எல்லாம் இன்னும் வாழ்கின்றன. அங்கு போவதற்கு எரிமலை குழம்பு (Valcano tubes) வெளியேறும் பாதை வழியாக செல்ல முடியும்" என சில குறிப்புகளை கொண்டு நாவல் எழுதியுள்ளார். வார்னே யின் கருத்தை நம்புகிறவர்கள் (Vernians) இதைப் பற்றி தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்கிறார்கள்.

இப்படி ஆய்வு செய்ய போய்... 'மேக்ஸ்' என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு (1997ல்) காணாமல் போகிறார். மேக்ஸ்-ன் சகோதரர் நாயகன் (Brendan Fraser - மம்மி பட நாயகன்) தன் அண்ணனை தேடும் முயற்சியில் இருக்கிறார். அவரும் ஒரு வால்கனோ ஆராய்ச்சியாளர். பேராசிரியர். ஒரு "க்ளூ" கிடைத்ததும், விடுமுறைக்கு வந்த அண்ணன் பையனுடன் ஐஸ்லேந்து (Iceland) பயணிக்கிறார்.

அங்கு ஒரு மலையேற ஒரு அழகான பெண் (நாயகி - Anita Breiam) கைடுடன் போய், குகைக்குள் மாட்டிக்கொண்டு, வெளியேறும் முயற்சியில்... பல சாசகங்கள் செய்து... எதிர்பாராதவிதமாக வால்கனோ பாதை வழியாக பல நூறு மைல்கள் உள்ளே விழுந்து... பூமியின் மைய உலகத்திற்கே போய்விடுகிறார்கள்.

அங்கே 'மேக்ஸ்' இறந்ததை கண்டுபிடிக்கிறார்கள். 50 அடி காளான் செடி (!), மனிதர்களை கொல்லும் தாவரம், கடல், பெரிய டைனோசர், காந்த பாறைகள் என பல தடைகளை கடந்து... சின்ன கீறல் கூட விழாமல்... பூமிக்கு வந்து சேர்கிறார்கள்.
***
ஹாலிவுட்காரர்களுக்கு பூமியில் எடுக்கிற கதைகளால் கல்லா கட்ட முடியாமல் போகும் பொழுது... மேலுலகம், கீழுலகம் என பிலிம் எடுப்பார்கள்.

வார்னே எழுதிய பிரெஞ்சு நாவலை மையமாக வைத்து, வெவ்வேறு கால கட்டத்தில் இதே மாதிரி பல படங்களை ஏற்கனவே எடுத்திருக்கிறார்கள். சீரியலாய் கூட எடுத்திருக்கிறார்கள். மற்ற படங்களை விட இந்த படத்திற்கு சிறப்பு சமகால கிராபிக்ஸ் ஜிம்மிக்ஸ் வேலைகள் தான். மேலும் திரைக்கதையும் போராடிக்காமல், விறுவிறுப்பாக படத்தின் இறுதிவரை இழுத்து செல்கின்றன. குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும். குழந்தை மனசு கொண்ட (!) பெரியவர்களுக்கும் பிடிக்கும். பாருங்கள்! அல்லது பசங்களுக்கு வாங்கி கொடுங்கள்.

சில முக்கிய குறிப்புகள் : 1. வார்னேயின் கருத்து ஒரு டுபாக்கூர். நீருபிக்க படாதது. 2. பசங்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது, கவனமாய் இருங்கள்.

Wednesday, July 1, 2009

அழியும் ஈழத்தமினமும், அரட்டை சட்டமன்றமும்!


ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து... சட்டமன்றத்தில் நேற்று பேச்சுவார்த்தை தொடங்கியதும்... அதிமுககாரர்கள் "காப்பாற்று! காப்பாற்று! ஈழத்தமிழர்களை காப்பாற்று!" என முழக்கமிட்டுள்ளனர். அமைதியாக இருக்க வலியுறுத்தி... கேட்காமல் போனதால்... வெளியேற்றிவிட்டார்கள். உடன் மதிமுககாரர்களும்.

"காப்பாற்று! காப்பாற்று!" என்றால் யாரை காப்பாற்றுவது என காங்கிரசு எம்.எல்.ஏ. சுதர்சனம் கிண்டலடித்திருக்கிறார்.

சிபிஎம் காரர்கள் பேச எழுந்ததும்... கம்யூனிஸ்டுகள் பேசி பேசித்தான் வீணாக போய்விட்டனர் என திமுகவில் யாரோ கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

சிறிது நேரத்தில்... பாமகவும் வெளியேறிவிட்டதாம். பீட்டர் அல்போன்ஸ் அதிமுக ஆட்சிக் காலத்தில் நான் வேட்டியை கட்ட முடியவில்லை. பேன்ட் போட்டுத்தான் வந்தேன் என நீண்ட லெக்சர் அடித்திருக்கிறார்.

ஈழ விவகாரத்தில்.. ஏதாவது உருப்படியாக விவாதிப்பார்கள் என்று தினமலர் செய்தியை படித்துப் பார்த்தால்... ஒரு விசயமும் விவாதிக்கப்படவில்லை. ஈழத்தமிழர்களை காப்பாற்ற எந்த தீர்மானமுமில்லை. இந்த சட்டமன்றம் மீண்டும் அரட்டை மடம் என நிருபணமாகியிருக்கிறது.

பின்குறிப்பு : ஈழத்திலிருந்து கிளம்பிய ஒரு ஆவி.. தமிழக தலைவர்கள் மிஞ்சியிருக்கும் தனது ஈழ சொந்தங்களை காப்பாற்றுவார்கள் என நம்பி... நேற்று பார்வையாளர்கள் பகுதியில் ஆர்வத்துடன் கவனித்தது. நடந்த கூத்தைப் பார்த்து... மீண்டும் ஒருமுறை தற்கொலை செய்துகொண்டது.