Tuesday, April 30, 2013

கெளரவம் ‍- அழுத்தமில்லை!

'கெளரவக் கொலை' என்பது தவறான வார்த்தை பயன்பாடு.  'சாதி வெறிக்கொலை' என்பது தான் அர்த்தம் பொதிந்த சரியான வார்த்தை.

இந்தியா முழுவதும் நடக்கும் சாதிவெறிக்கொலைகளை பற்றிய படம் என்பது கெளரவமான விசயம் தான். ஆனால், அழுத்தமில்லாத படமாக வந்திருப்பது தான் பெரிய வருத்தம். :(

*****

கதை எனப்பார்த்தால்...

நாயகன் தன்னுடன் படித்த நண்பனை தேடி  எதைச்சையாய் கிராமத்திற்குள் வருகிறான்.  தலித்தான நண்பன், ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போனதாக சொல்கிறார்கள்.

நண்பனின் அப்பா மகனை தேடித்தர கோருகிறார்.  அதற்கான முயற்சிகளில் இறங்கும் பொழுது பல அதிர்ச்சியான தகவல்கள் வருகிறது!

****

இரட்டை குவளை தேநீர் கடை, சாதிக்கலவரம் நடந்த ஊர் என சாதி தீண்டாமையை கடைப்பிடிக்கிற ஊராக காட்டுகிறார்கள்.  படத்தில் ஓர் இடத்தில் நாய்கன் சொல்வார்.  'பாரதிராஜா கிராமம் போல இருக்கும்' என நினைச்சேன் என்பார். இந்த கிராமம் இராதாமோகனின் கிராமமாக இருக்கிறது. அவ்வளவு தான்.

ஆதிக்க சாதி வெறி ‍ தலித் அவலநிலை என்பதை காட்டும்பொழுது மனம் பதறவேண்டாம். காட்சியில் அழுத்தமே இல்லாதது தான் காரணம்.

ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ராதாமோகன் தலித்துகளின் நிலை பார்த்து 'அச்சச்சோ' என்பதாக பரிதாபப்பட்டு எடுத்த படமாக‌ இருக்கிறது.

வழக்கமான பாடல், ஆடல் என ஒரு வணிகப்படத்திற்கான எல்லா அம்சங்களும் இருக்கின்றன. ஆபாசம் இல்லை. அது ஒன்று தான் வித்தியாசம்.

பாடல்கள் சுமார். பாடல்களை எடுத்துவிட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது.  நாயகன் பாத்திரத்திற்கு பொருத்தமில்லாத நபராக இருக்கிறார். சிலர் நன்றாக செய்திருக்கிறார்கள்.

சென்னையில் சாதி பார்ப்பதில்லை என்பதாக படத்தில் ஒரு வசனம் வருகிறது. இதெல்லாம் நல்லெண்ண கருத்து. என் ஐந்து வருட சென்னை வாழ்வில் இரண்டு சம்பவங்கள் எனக்கே ஏற்பட்டிருக்கிறது.

ஒரு நேர்முக தேர்வுக்கு போனபொழுது, அந்த நிர்வாகி என் சாதியை கேட்டார்.  சாதியையும் நான் சொல்லவில்லை. வேலையும் கிடைக்கவில்லை.

என் பாஸின் நண்பர் ஒருவர் (அய்யர்) வீடு கட்டி குடிபுகுந்தார். அலுவலக ஊழியர்களை அழைக்கவில்லை.  பின்னாளில், எங்க பாஸே சொன்னார். அலுவலகத்தில் இரண்டு ஊழியர்கள் தலித்துகள். அதனால் தான் அழைக்கவில்லை என்றார்.

இப்படிப்பட்ட தீண்டாமை கடைப்பிடிக்கும் கிராமங்கள் தமிழகத்தில் 70களில் தான் இருந்ததாக தினமலர் எழுதியிருக்கிறது.  மிகப்பெரிய பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.

என் நினைவிலிருந்து...சாதி வெறியை இயல்பாய், காத்திரமாய் காட்டிய படம் பருத்திவீரன். உணர்வு தளத்தில் 'பாரதி கண்ணம்மா' பேசியிருக்கும்.

சமூகத்தில் மனிதர்களை இழிவுப்படுத்துகிற ஒரு கொடுமையான நிகழ்வை ஒரு அழுத்தமான பதிவாக தர முயலாமல், மேலோட்டமான, அழுத்தமில்லாத படமாக வெளிவந்திருக்கிறது கெளரவம்.

இப்படி படத்தை எடுத்துவிட்டு, "நல்ல படம் எடுத்தோம். மக்கள் ஆதரிக்கவில்லை" என்று வேறு சொல்வார்கள்.  அதைக் கேட்பது தான் கடுப்பாக இருக்கும்.

Friday, April 26, 2013

உதயம் NH4

இயக்குநர் வெற்றிமாறனை பிடிக்கும் என்பதால், உதயத்தை நம்பி பார்த்தேன்.  ஏற்கனவே கேடி பில்லா, கில்லாடி ரங்கா பார்த்துவிட்டு நொந்து போயிருந்தேன்.  இந்த படம் ஆறுதலாய் இருந்தது.  இப்பவெல்லாம் கேடி பில்லா, கில்லாடி ரங்கா போன்ற கதைகள் குறைந்த பட்ஜெட் நிறைய கல்லா கட்டுவதால், தயாரிப்பாளர்களால் நிறைய விரும்பப்படுகிறதாம். கஷ்டம். கஷ்டம். :(

****

கதை எனப் பார்த்தால்...

சென்னையை சேர்ந்த நாயகன் பெங்களூருவில் படிக்கிறார். காதல் வயப்படுகிறார். ஒரு இந்துத்துவா பிரமுகரின் பெண் என்பதால், காதலுக்கு தடை போடுகிறார். கல்லூரி இறுதி தேர்வின் பொழுது, நாயகியை சென்னைக்கு அழைத்துவந்துவிட்டால், பிரச்சனையில்லை! வக்கீல் மாமா காப்பாற்றுவார் என நண்பர்களின் உதவியுடன், பெண்ணுடன் பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி கிளம்புகிறார். அதற்குள் அத்தனை களேபரங்களும் நடக்கின்றன. இறுதியில் சுபம்.

****

வெற்றிமாறன் முதன்முதலில் இந்த படத்தை தனுசை வைத்து எடுக்க முயற்சித்து, பல தயாரிப்பாளர்கள் கைமாறி இரண்டு நாள்கள் ஷூட்டிங்கெல்லாம் நடத்தி நின்று போனபடம்.  இப்படி பலர் கைமாறிய கதையே மிக சுவாரசியமான கதையாய் இருக்கும் போலிருக்கிறது.  அந்த கதையை இப்பொழுது, தனது உதவி இயக்குநருக்காக தூசி தட்டியிருக்கிறார்.

படம் நான் லீனியர் முறையில் நகர்கிறது.  போலீஸ் அதிகாரி நாயகனின் நண்பர்களை விசாரிக்க அடிக்கும் பொழுது, அழுதுகொண்டே நாயகன் - நாயகியின் காதலை விவரிப்பது சுவாரஸ்யம்.  அவர்களுக்கு இடையிலான காதலை இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் சொல்லியிருக்கலாம். படம் பெரிய நீளமும் இல்லை. 2 மணி நேரம் 11 நிமிடங்கள் தான்.  ஒன்றிரண்டு பாடல்களை வெட்டி இருப்பார்கள் போலிருக்கிறது! காதலர்களை துரத்துகிற காவல்துறை அதிகாரி நன்றாக செய்துள்ளார். சித்தார்த்தை  இவ்வளவு இறுக்கமாக காட்டியிருக்க தேவையில்லை. பையா படத்திற்கு பிறகு நீண்ட நெடுஞ்சாலைகளில் தட தடவென பயணிக்கிற கதை!

இப்பொழுதெல்லாம் படம் தென்னிந்தியாவிற்கே சேர்த்து தான் பலரும் எடுப்பதால், படத்தில் எல்லா மொழிகளும் பேசுகிறார்கள்.  இப்பொழுதெல்லாம் குடி, பார் வராத படங்களே இல்லை. இந்த படமும் அப்படியே!

கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் பெண்ணுக்கு, 18 வயது முடிந்துவிட்டால் மேஜர் என படம் முழுவதும் பேசுவது பரதேசி படத்தில் 48 நாட்கள் நடத்தி கூட்டி போவது போல பெரிய ஓட்டை.

ஒருமுறை பார்க்கலாம். பாருங்கள்.

****

Thursday, April 4, 2013

கல்யாண பரிசு - சில சுவாரசிய குறிப்புகள்!

கல்யாணப் பத்திரிக்கையை கையில் வாங்கிவிட்டால், பரிசு பொருள் என்ன கொடுப்பது என்பது பலருடைய மனமும் யோசிக்கும்.  நம்முடைய திருமணங்கள் சடங்கு, சம்பிரதாயங்கள் நிறைந்தவை. பகட்டானவை.   பரிசு பொருள்கள் பெரும்பாலும் நம் திருமணங்களில் பணம் தான் பிரதானம்.  இரண்டாவது பொருள்கள். வீட்டிற்கு பயன்படக்கூடிய பொருட்கள்; அலங்கார பொருட்கள்.

பணத்தைப் பொறுத்தவரை வட்டியில்லா கடன் தான்.  நீ 100 செய்தால் நான் 125 செய்வேன். அவ்வளவு தான்.  என்னைக் கேட்டால் நம் சமூகத்திற்கு புத்தகங்களை பரிசாக தருவது ஆக சிறந்த வழிமுறை. பணமாக கொடுக்க கூடாது.  புத்தகம் தான் கொடுக்க வேண்டும் என முடிவு எடுத்து, அமுல்படுத்திய பொழுது, அதில் சில அனுபவங்கள் கிடைத்தன. பகிர்ந்துகொள்ளலாமே என நினைத்து இந்த பதிவு!

****

நண்பனின் அலுவலக நண்பனுக்கு திருமணம். ஒருமுறை ஊரெல்லாம் சுற்றி விட்டு, மதியம் 2 மணியளவில் போய், கையை மட்டும் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து கிளம்பினோம்.  மொய் அல்லது பரிசு பொருளோ கொடுக்காததால், தன்னை அவமானப்படுத்திவிட்டதாக சிலநாட்கள் பேசவே இல்லை.  பிறகு, கொள்கையை சொல்லி, புத்தகம் தந்து சமாதானபடுத்தினோம்.

****

உடன் பணிபுரியும் நண்பருக்கு திருமணம். புத்தகம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். அன்றிரவு, நான் கொடுத்த புத்தகத்தை சீரியசாக தேடியிருக்கிறார்.  வீட்டில் உள்ள சொந்தங்கள் என்ன தேடுகிறாய்? எனக் கேட்டதற்கு, புத்தகம் என்றிருக்கிறார்.  நமுட்டு சிரிப்பு சிரித்திருக்கிறார்கள்.  அந்த புத்தகம் ஆனந்த விகடன் வெளியீடான "ரொமான்ஸ் ரகசியங்கள்"

****

நண்பர்கள் சிலர் "புத்தகங்கள் மட்டுமே பரிசாக வாங்கப்படும்" என பத்திரிக்கையிலேயே போட்டார்கள்.  சோதிட புத்தகம், ஆன்மீக புத்தகம் என வந்துவிடுமே என்ற கவலையில், முற்போக்கான நூல்கள், இலக்கியங்கள் என  புத்தக கடை விற்பவரை ஒன்றை மண்டப வாசலிலேயே ஏற்பாடு செய்து செய்தோம்.

*****

நண்பனுக்கு மணமகனின் தோழனாக மேடையில் நின்றுக்கொண்டிருந்தேன். வாசலில் இருந்து புத்தகம் வாங்கி வந்த பல பெருசுகள் தன் வாழ்க்கையிலேயே முதல்முறையாக புத்தகத்தை மொய்யாக தருகிறேன் என சந்தோசமாய் சொன்னார்கள்.

*****

கொஞ்சம் ஆர்வக்கோளாறில் சிலரிடம் உங்களுக்கு பிடித்த புத்தகம் சொல்லுங்கள். வாங்கித்தருகிறேன் என கேட்டு, அந்த புத்தகத்திற்கு நாயாய், பேயாய் அலைந்த கதையும் உண்டு. அதற்கு பிறகு யாரிடமும் அப்படி கேட்பதில்லை! :)

*****

புத்தகம் வாங்க நேரமில்லாமல் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, ஒரு வாரம் கழித்து உங்களுக்கு ஒரு சிறப்பு புத்தகம் தரலாம் என தேடினேன். கிடைக்கவில்லை.  அலைந்து திரிந்து வாங்க இவ்வளவு நாளாயிருச்சு என 'பில்டப்' பண்ணி தந்ததும் உண்டு. :)

*****

நண்பரில் திருமணத்தில் "புத்தகங்கள் மட்டுமே வாங்கப்படும். மற்ற பொருட்கள் வாங்கப்படாது" என சீரியசாக விளக்கி, புத்தகங்களை பெற்று வீட்டுக்கு மாலை வீடு வந்து சேர்ந்தோம்.  மூன்று 'நைட் லேம்ப்கள்' எங்களுக்காக காத்திருந்தன. வீட்டில் வந்து நண்பனின் அம்மாவிடம் கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். :)

*****

புத்தகம் தருகிறோம். படிக்கிறார்களா என சந்தேகம் வருவதுண்டு.  கல்யாணம் முடிந்து இரண்டு மாதம் கழித்து கேட்கும் பொழுது புத்தகத்திலிருந்து சில பகுதிகளை குறிப்பிட்டு நல்ல புத்தகம் என சொல்வார்கள்.  அப்பாடா! படிக்கிறார்கள் என நிம்மதி வந்தது.

*****

சமீப காலங்களில் சிறிது மாற்றம். படிப்பது என்பது குறைந்து போய் கேட்பது; பார்ப்பது அதிகமாகி வருவதால், நல்ல படங்களை; நல்ல உரைகளை புத்தகத்தோடு பரிசாக தருகிறேன். 

****

நண்பர் தன் அனுபவம் ஒன்றை பகிர்ந்தார்.  அவரின் நண்பர் ஒரு புகைப்படக்காரர்.  நல்லவர்.  அப்பாவியும் கூட!  கல்யாணப் பத்திரிக்கையில் "புத்தகங்கள் மட்டும் பரிசாக பெறப்படும்" என்பதை ஆ.விகடன், குமுதம், குங்குமம் என வாங்கி தந்தார்.

அப்பொழுதே அவரிடம் புரியவைத்திருக்கவேண்டும். புரிய வைக்காததின் விளைவு. இன்னொரு நண்பரின் திருமணத்திற்கு, "நூல்கள் மட்டுமே பரிசாக பெறப்படும்" என்பதை பார்த்துவிட்டு, சீரியசாக நூல்கண்டுகளை நிறைய வாங்கி பரிசாக தந்தார்.

விழுந்து விழுந்து சிரித்தேன்.

****
அடுத்த வாரம் இன்னும் இரண்டு திருமணங்கள். இன்னும் எழுதுவேன். :)

****

Wednesday, April 3, 2013

கேடியுமில்லை! கில்லாடியுமில்லை! ‍ மொக்கை!

ஒரு படம் பார்த்தால் உணர்வுநிலை மேம்பட, குறைந்த பட்சம் சிரிக்க, கோபப்பட, எரிச்சலூட்ட‌ இப்படி ஏதாவது ஒன்றையாவது செய்யவேண்டும்.  சில படங்கள் இதில் எதையுமே செய்வதில்லை.  இந்த படம் அந்த வரிசையில் ஒருபடம்! விமர்ச்சிக்கிற அளவுக்கு ஒர்த் இல்லாத படம்.

*****

கதை என எதையும் சொல்வதற்கில்லை.  ஊரை வெட்டியாய் சுற்றும் இருவர். சூரியோடு சேர்த்து மூவர்.  கவுன்சிலர் தேர்தலில் ஜெயித்தால் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற கனவோடு வலம் வரும் இளைஞர்களின் கதை.

விட்டேத்தியான இளைஞர்களை கதையின் நாயகர்களாக எடுத்து, இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என சொல்வார்கள் என எதிர்ப்பார்த்தால், 99% படம் முடியும் வரை ஜவ்வாக இழுத்துக்கொண்டே போய், இறுதியில் ஒரு அப்பாவை கொன்று, இன்னொரு அப்பாவை அழவைத்து ஒப்பேத்தியிருக்கிறார்கள். இந்த இறுதி செய்தியை பார்ப்பதற்கு பலர் இருக்கமாட்டார்கள். எழுந்து போயிருப்பார்கள்.

நகைச்சுவை தோரணங்கள்; அதில் பலவற்றுக்கு சிரிப்பு வரமாட்டேன் என்கிறது.  ஆனால் என்னைச் சுற்றி உட்கார்ந்திருத சிலர் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஒன்னும் புரியல!

இப்படிப்பட்ட மொன்னையாக படங்கள் வருவதும் வெற்றியடைவதும் ஆரோக்கியமானதல்ல!  பல இயக்குநர்கள் சரக்கு இல்லாமல் தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பிழைப்பு செம ஜாலியாகிவிடும்.